எப்போது புத்தி வரும்?

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 6,087 
 
 

நிலக்கிழார் நல்லுச்சாமி பிள்ளை என்றால் கீரனூரில் அனைவருக்கும் தெரியும். அவருக்கு இரு மனைவிகள் இருந்தும் குழந்தைகள் இல்லை. அவர் இறந்த பதினாறாம் நாள் சடங்கு முடிந்த அன்று, அவரது விழக்கறிஞர் அவரது இல்லத்திற்கு வந்து, அவருக்குள்ள 24 ஏக்கர் நஞ்சை நிலத்தையும் ஆளுக்கு 12 ஏக்கர் வீதம் எழுதி வைத்திருக்கிறார் என்றும், அவற்றிற் குரிய ஆதரவுகளை இரு மனைவிகளிடமும் பிரித்துக் கொடுத்தார். அவரது பெரிய வீட்டைமட்டும் இளம் மனைவிக்கு எழுதி வைத்து இருக்கிறார் என்று கூறி, அந்த ஆதரவை மட்டும் இளம்மனைவியிடம் கொடுத்து விட்டுப் போய்விட்டார் வழக்கறிஞர். அவ்வளவுதான்,

அடுத்த நாள் பெரிய மனைவி காமாட்சியம்மாளைச் சேரிந்தவர்கள் தான்தான் முதல் மனைவி; இந்த வீடு எனக்குத்தான் கிடைக்க வேண்டும் என்றும், தனக்குப் பின்தான் இளம்மனைவிக்குப் போய்ச் சேரவேண்டும் என்றும் கூறி வழக்குத் தொடரச் செய்தார்கள். இளம் மனைவி மீனாட்சியம்மாளைச் சேர்ந்தவர்கள் எதிர் வழக்காடினார்கள். நான்கு ஆண்டுகள் முடிந்தும் வழக்கு முடியவில்லை. காமாட்சியம்மாளுக்கு நான்கு ஏக்கர் நிலமும், மீனாட்சியம்மாளுக்கு மூன்று ஏக்கர் நிலமும் செலவானது. ஐந்தாம் ஆண்டில், “இறந்துபோன கணவன் உயில் எழுதி வைத்திருப்பதால் இளம்மனைவி மீனாட்சி யம்மாளுக்கே வீடு சொந்தம்” எனத் தீர்ப்பாகி விட்டது.

சும்மா விடுவார்களா காமாட்சியம்மாளைச் சேர்ந்தவர்கள், “அவ்வீடு பரம்பரையாக வந்த வீடாதலால் நீலமேகம் பிள்ளைக்கு உயில் எழுதிவைக்க உரிமை யில்லை” என்று கூறி மேல் முறையீடு செய்தார்கள். வழக்கு மூன்று ஆண்டுகள் நடைபெற்றன. மேலும் இரண்டிரண்டு நஞ்சை நிலங்கள், கோர்ட்டு செலவிற்கும், வீட்டு செலவிற்கும், கூட்டாளிகளின் செலவிற்கும், இருவர்க்கும் செலவாயின.

இளம் மனைவி மீனாட்சியம்மாள் தன் சிறிய தாயாரை அனுப்பி, மூத்த மனைவி காமாட்சியம்மாளைப் பார்க்க விரும்புவதாக சொல்வி அனுப்பினாள். காமாட்சி யம்மாள் ஒடோடி வந்து தன் சக்களத்தியிடம் “என்னடி செய்தி” எனக் கேட்டாள். இளையவள் தன் கையிலிருந்த ஒரு நாளிதழைக் கொடுத்து, “அக்காள்! இதைப் படித்துப் சார்!” என்றாள்.

அந்த இதழில் வெளிவந்திருந்த செய்தி இதுதான்.

“இலண்டனில் ஒருவன் வீதியில் நடந்து கொண்டிருந்தான். அவன் கைக்குட்டைதவறிப் போப் கீழே விழந்து விட்டது. பின்னால் வந்தவன் அதை எடுத்து வைத்துக் கொண்டான். முன்னால் வந்த ஒருவன், “அது தன் கைக்குட்டை கொடு” எனக் கேட்டான். பின்னால் வந்தவனோ “கீழே கிடந்த கைக் குட்டையை நான்தான் கண்டெடுத்தேன். எனக்குத்தான் சொந்தம்” எனக் கூறினான். இருவரும் நீதிமன்றம் சென்று வழக்காடினார்கள். வழக்கிற்கு இருவருடைய சட்டைகளும், கால்சிராய்களும் விற்று செலவாகி விட்டன. ஆனால் கைக்குட்டை யாருக்குச் சொந்தம் என்று இன்னும் முடிவாகவில்லை” என்று இருந்தது.
காமாட்சியம்மாள், மீனாட்சியம்மாளிடம் கேட்டான், “என்னடி செய்வது” என்று,

மீனாட்சி : அக்கா! உனக்கு 6 ஏக்கர் நிலம் போச்சு; எனக்கு 5 ஏக்கர் நிலம் போச்சு இன்னும் வீடு யாருக்குச் சொந்தம் என்று முடிவாகவில்லை. நாம் மீதம் இருக்கும் நிலத்தையாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டாமா?

காமாட்சி : அதற்கு என்னடி செய்வது?

மீனாட்சி : எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. வீட்டின் நடுவில் ஒரு சுவர் எழுப்பி, நீ மேல் பாகத்தில் இரு நான் கீழ்பாகத்தில் இருக்கிறேன். அவரவர் நிலத்தை வைத்து அவரவர் சுகமாக வாழலாம்.

காமாட்சி : உன் யோசனை எனக்குப் பிடிக்கவில்லை; நான் ஒப்ப மாட்டேன்.

மீனாட்சி : அக்கா பிடிவாதம் பிடிக்காதே இன்னும் வழக்காடிக் கொண்டிருந்தால் இருக்கின்ற நிலமும் போய்விடுமே!

காமாட்சி : என் யோசனைப்படி நடப்பதானால் மட்டுமே இதற்கு சம்மதிப்பேன்.

மீனாட்சி : உன் யோசனை என்ன? காமாட்சி : வீட்டைப் பங்குபோடுவது கூடாது; நடுவில் சுவர் எழுப்புவதும் கூடாது. நம் இருவர்க்கும் மிஞ்சியிருக்கிற “ஏக்கர் நஞ்சை நிலத்தை ஒன்றாக வைத்துக் கொண்டு, நாம் இருவரும் ஒன்றாக சமைத்து உண்டு, ஒன்றாகவே இந்த வீட்டில் சேர்ந்திருந்து வாழவேண்டும் என்பதுதான் என் யோசனை.

மீனாட்சி : அக்கா! நீ ஏன் இதை முன்னதாகவே சொல்லவில்லை?

அதற்கு காமாட்சி, “எனக்கு இப்போதுதானே புத்தி வந்தது” என்றாள்.

கதை முடிந்தது. இவர்களுக்கு இப்பொழுதாவது புத்தி வந்து இருக்கிறது. நீதிமன்றங்களில் அலைந்து திரிந்து கொண்டிருக்கும் நம்மவரில் சிலருக்கு எப்போது புத்திவரும்.

– அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *