என்ன ஆச்சு?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: April 14, 2022
பார்வையிட்டோர்: 7,179 
 

ஒரு சாஃப்ட்வேர் கம்பெனி். பிற்பகல் மூன்று மணி. திடீரென்று ஆபிசில் பரபரப்பு. அன்று ஆபிசில் சுமார்எண்பது பேர் வேலைக்கு வந்திருப்பார்கள்.

சட்டென்று தட்டச்சு சத்தம் அத்தனையும் அடங்கியது. என்ன ஆச்சு?

நான் கம்ப்யூட்டர் திரையிலிருந்து பார்வையை திருப்பினேன். அவரவர் தங்கள் இடத்திலிருந்து எழுந்துநின்றனர். ஆண்களில் சிலர் தலையை சொரிந்து கொண்டும், சிலர் நகத்தை கடித்துக்கொண்டும், மற்றும் சிலர்முகத்தைத் தடவிக்கொண்டும் நின்றனர். சில பெண்கள் தமது துப்பட்டா நுனியை விரலில் சுற்றுவதும்விடுவதுமாக இருந்தனர். மற்றும் சில பெண்கள் மேக்கப் சரியாக இருக்கிறதா என கவனித்தனர். சிலபையன்கள் பரபரப்பு எதனால் என்று புரிந்து விட்டது போல அசட்டு சிரிப்புடன் பக்கத்திலிருக்கும் பெண்களைபார்க்கின்றனர். இனிமேல் அந்த பெண்கள் அந்த அசட்டு பையன்களை ஏறெடுத்தும் பார்ப்பது சந்தேகம்தான். உள்ளதும் போச்சு!

என்னதான் நடக்கிறது? ஆறு மாடி கட்டடத்தில் எந்த தளத்தில் என்ன ஆச்சு? பயங்கர தீ விபத்தா? யாருக்காவது மாரடைப்பா? அடிதடியா? கத்திக்குத்தா? துப்பாக்கி சுடுதலா? சமூக விரோதிகள் சூழ்ந்துவிட்டார்களா? குருதிப்புனலா? தமிழ் படங்கள் பாரத்து பார்த்து கற்பனை எங்கோ பறக்கிறதே… கதாநாயகன்முதலில் நாலு குத்து வாங்கியபின், முப்பது பேர் கொண்ட எதிர் கும்பலை, கத்தியின்றி, கருவியின்றி, துப்பாக்கியும் இல்லாமால் ஒவ்வொருவரையும் ஏழு தடவையாவது அடித்து மண்ணை கவ்வ செய்வது கண் முன்தோன்றி மறைந்தது. சண்டை அடங்கியபின் கதாநாயகன் காலரை தூக்கிவிட்டபடி குளோசப்பில் கண்சிமிட்டுவான்…. அரங்கமே அதிரும் கை தட்டல்… சீட்டி அடிக்கணும் என்று எழுந்த ஆர்வத்தை அடக்கிக்கொண்டேன். ஏற்கனவே ஆபிசில் எனக்கு ‘சினிமா பைத்தியம்’ என்ற பட்டம் கன்பர்ம் ஆகியிருந்ததுநினைவுக்கு வந்தது.

இங்கே நம்ம நிலைமை வேறே. ஒலிபெருக்கியில் எந்த அறிவிப்புமே இல்லையே… நிமிடங்கள்வேகமாகவே ஓடுவதுபோல இருந்தது. என்னதான் ஆச்சு?

மேனேஜர் அறையைவிட்டு வெளியே வந்தார். ஆபிசில் அவரைவிட உயரமானவர் நிறைய பேர். அவர்தரையில் நின்று ஏதாவது பேசும்போது அல்லது ஏசும்போது மற்றவர்கள் தமது இருக்கையில் இருக்க வேண்டும். இன்று, என்ன ஆச்சு என்ற குழப்ப நிலையில், எல்லோருமே திடுதிப்பென்று எழுந்து நின்றபோது, மேனேஜர்தானும் நின்றவாறு பேசுவது உசிதமில்லை என நினைத்தார். சக்கரம் பொருத்திய ஒரு ‘எர்கனாமிக்’ சேர் ரில்ஏறி நிற்க எத்தனித்தார்… சக்கரம் நகர்ந்தது… சேர் ஆடியது… பக்கத்தில் நின்றிருந்த சிலர் மேனேஜரைதாங்கிக் கொண்டனர். மேனேஜர் தனியாக, சேர் தனியாக பிரிந்தனர். பீதியும் கோணல் சிரிப்பும் சரிவிகிதத்தில்கலந்து அவர்முகத்துக்கு மெருகூட்டியது. அவர் சமாளித்துக்கொண்டு மற்றவர் உதவியுடன் ஒரு சின்னமேசைமீது ஏறி நின்றார். இப்போது அவரால் எல்லோரையும் பார்க்க முடிந்தது. தன் குரலை கனைத்துக்கொண்டார்.

“செகண்ட் ப்ளோரில் ஒருத்தருக்கு பாசிடிவ் ரிசல்ட் வந்திருக்காம்.” மேனேஜர் சொன்னதுஇவ்வளவேதான். எந்த விஷயத்திலுமே இதுமாதிரி ஒரேயொரு வாக்கியத்தை மட்டுமே சொல்லி கடுப்புஏத்துவதில் கெட்டிக்கார மனுஷன். புது பிராஜக்ட் ஆரம்பிக்குமுன் இதேபோல் ஆரம்பித்து, சாதாரணமாகமூன்று மாத த்தில் முடிய வேண்டிய பிராஜக்ட் எட்டு மாதமானாலும் இழுத்துப்பறிக்க செய்துவிடுவார். இது, பிராஜக்ட் பட்ஜட்டை அதிகமாக்கி , கம்பனி வருமானத்தை கூட்டுவதற்காக இவர் கடைபிடிக்கும தந்திரம்என்பது பரவலான வதந்தி. இந்த முறை அவருடைய ஒத்தை வாக்கியம் ஓர் அலறலாக வெளிவந்ததை யாரும்கவனிக்கத் தவறவில்லை.

யாருக்கு என்ன பாசிடிவ் ரிசல்டு? பாசிடிவ் ரிசல்டு வந்தால் யாருமே சந்தோஷப்படுவாங்களே? மானேஜருக்கு மட்டும் ஏன் இந்த அலறல்? அறையில் நிசப்தம் குலைந்தது. குழப்பம் உச்ச நிலயை எட்டியது.

“ஹலோ… ஹலோ…”. பொது ஒலிபெருக்கியில் குரல். ஆபீசில் மீண்டும் அமைதி்.

“புதுசா வந்திருக்க கொரோனா வைரஸ் நம்ம பில்டிங் வரை வந்துவிட்டது. ரொம்ப சீக்கிரமே நம்மளதொத்திக்கறது நிச்சயம். இதனால, இன்னும் ஒரு மணி நேரத்துல நம எல்லாருமே கட்டடத்தை காலிபண்ணணும். தயவு செய்து அமைதியா காலி செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம். மீண்டும் நீங்கள் அலுவலகம்எப்போ திரும்பலாம் என்பதை மின்னஞ்சல் மூலமாக அறவிப்போம்”. ‘அலுவலகம், மின்னஞ்சல்’ என தமிழ்புலவர் முடிக்க, மேனேஜர் இன்னும் மேசை மேலே நிற்பதை கவனிக்காமல் அவரவர் புறப்பட தயாரானார்கள். நான் ஓடிப்போய் அவருக்கு கை கொடுத்து இறங்க வைத்தேன். எனக்கு சீக்கிரமே புரோமோஷன் நிச்சயம்…

இது 2022. இன்னும் புரோமோஷன் பற்றின செய்தி வரவில்லை.

நான் மேலே எழுதிய நிகழ்ச்சி நடந்தது – ஏப்ரல் 2020. கொரோனாவின் உலக ஆக்கிரமிப்பின் ஆரம்ப கட்டம். கொரோனாவின் உக்கிரத்தைத் தாண்டிவிட்டோமா?
நம்பிக்கைதான் வாழ்க்கை!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *