எட்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் செளந்தரா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: July 13, 2021
பார்வையிட்டோர்: 2,117 
 
 

எட்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் செளந்தரா சொன்ன கார்மோகினியின் கதை

“கேளாய் போஜனே! ஒரு நாள் காலை கடற்கரைச் சாலை வழியாக எங்கள் விக்கிரமாதித்தர் தம்முடைய காரில் தன்னந் தனியாக வந்துகொண்டிருந்தகாலை, கன்னி ஒருத்தி ஓடோடியும் வந்து காரை நிறுத்தச் சொல்ல, அவர் நிறுத்தி, ‘என்ன வேணும், உங்களுக்கு?’ என்று விசாரிக்க, ‘ஒன்றுமில்லை; இன்று காலை பத்து மணிக்குப் பாரி அண்டு கம்பெனியில் எனக்கு ஓர் இன்டர்வியூ, மணி இப்போதே ஒன்பதே முக்கால் ஆகிவிட்டது. பஸ் இந்த ஜென்மத்தில் கிடைக்குமென்று தோன்றவில்லை; தயவுசெய்து உங்கள் காரில் என்னைக் கொஞ்சம் ஏற்றிக்கொண்டு போய் அங்கே விட்டுவிடுகிறீர்களா?’ என்று அவள் வினயத்துடன் வேண்டிக்கொள்ள, ‘அதற்கென்ன, ஏறிக்கொள்ளுங்கள்!’ என்று அவர் அவளை ஏற்றிக்கொண்டு பாரி கம்பெனியை நோக்கி விரைவாராயினர்.

காரில் ஏறி அமர்ந்ததும் விக்கிரமாதித்தரை ஏற இறங்கப் பார்த்த அந்தப் பெண்மணி, ‘நான் நினைக்கிறேன், நீங்கள்தான் அந்தப் புகழ் பெற்ற விக்கிரமாதித்தராக இருக்க வேண்டுமென்று? என்னுடைய ஊகம் சரிதானா?’ என்று தன் ‘மியாவ், மியாவ்’ குரலில் அவரை ஆங்கிலத்தில் கேட்க, ‘சரிதான்!’ என்று அவரும் ஆங்கிலத்திலேயே பதில் சொல்லி வைப்பாராயினர்.

அதைக் கேட்ட அந்தக் கவர்ச்சிக் கன்னி சற்றே வெட்கத்துடன் அவரைச் சற்றே நெருங்கி, ‘உங்களுக்குத் தெரியாது; உங்களை அறியாமலே உங்களைக் காதலிக்கும் ஆயிரமாயிரம் பெண்களிலே நானும் ஒருத்தி!’ என்று ‘களுக்’ கென்று சிரிக்க, ‘இருக்கலாம்!’ என்று அவர் கொஞ்சம் பீதியுடனே அவளிடமிருந்து விலகிக்கொள்வாராயினர்.

அதைக் கவனிக்காதவள்போல் அவள் அவரை மேலும் கொஞ்சம் நெருங்கி, ‘என்ன இருக்கலாம்?’ என்று கேட்க, ‘என்னை அறியாமலே என்னைக் காதலிக்கும் ஆயிரமாயிரம் பெண்களிலே நீங்களும் ஒருவராக இருக்கலாம்!’ என்று அவர் அவள் சொன்னதையே திருப்பிச் சொல்ல, ‘ஒருவர் என்ன ஒருவர்! ‘ஒருத்தி’ என்று சொன்னால் மரியாதைக் குறைவாகப் போய்விடுமா, என்ன? அந்த மரியாதையை நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கவும் இல்லை; ஏற்கத் தயாராகவும் இல்லை’ என்று அவள் அடித்துக் சொல்லிக் கொண்டே அவருடையத் தோளின்மேல் கையைப் போடுவாளாயினள்!

விஷயம் நிமிஷத்துக்கு நிமிஷம் விபரீதமாகப் போய்க் கொண்டிருப்பதைக் கண்ட விக்கிரமாதித்தர், ‘அம்மா! நான் சாட்சாத் விக்கிரமாதித்தன் அல்ல; சாதாரண விக்கிரமாதித்தன். அவன் ஐம்பத்தாறு தேசங்களுக்கு அதிபதியாயிருந்தான்! நானோ ஒரு தேசத்துக்குக்கூட அதிபதியாயில்லை. கேட்டதையெல்லாம் கொடுக்க காளி மாதாவும், நினைத்ததையெல்லாம் செய்து முடிக்க வேதாளமும் அவனுக்குத் துணையாக இருந்தார்கள்; எனக்கோ அப்படியாரும் இல்லை. தேவலோகம் அவனுக்குப் பக்கத்து வீடுபோல் இருந்தது. விரும்பும் போதெல்லாம் அவன் அங்கே உயிருடனேயே போனான்; வேண்டும் வரத்தை வாங்கிக்கொண்டு உயிருடனேயே திரும்பி வந்தான். எனக்கோ அது எட்டாத தூரம்; இறந்தபிறகாவது நான் அங்கே போய்ச் சேருவேனா என்பதும் சந்தேகம். அவன் கூடு விட்டுக் கூடு பாய்ந்தான்; நானோ இன்னும் வீடு விட்டு வீடுகூடப் பாயவில்லை. ஒன்றல்ல, இரண்டல்ல; நூற்றெட்டு மனைவிமாரை வைத்துக்கொண்டு அவன் எப்படியோ சமாளித்தான். என்னாலோ எனக்குள்ள ஒரே ஒரு மனைவியை வைத்துக்கொண்டுகூடச் சமாளிக்க முடியவில்லை. இந்த நிலையில் நீங்கள் என்னைக் காதலித்து என்ன பிரயோசனம்? ஆளை விடுங்கள் அம்மா, ஆளை விடுங்கள்!’ என்று அவள் தம் தோளின்மேல் வைத்த கையை அவர் எடுத்து அவளுடைய மடியின்மேல் விட, ‘நூற்றெட்டு மனைவிமார் அரண்மனையில் இருந்தும் தம்மை விரும்பும் பெண்களையெல்லாம் அந்த விக்கிரமாதித்தர் காதலித்தாரே, அதே மாதிரி நீங்களும் ஏன் காதலிக்கக் கூடாது?’ என்று அவள் சிரித்துக்கொண்டே கேட்க, ‘காதலிக்கலாம் அம்மா, காதலிக்கலாம். அந்த விக்கிரமாதித்தன் காதலித்த பெண்களைத் தானமாகப் பெற்றுக்கொள்ள அந்தக் காலத்தில் எத்தனையோ பேர் காத்துக்கொண்டிருந்தார்கள். இந்தக் காலத்தில் நான் காதலித்த பெண்களை யாருக்காவது தானமாகக் கொடுக்கப் போனால் அவர்கள் என்னை உதைக்கவல்லவா வருவார்கள்? அதை என் உடம்பு தாங்காதே!’ என்று விக்கிரமாதித்தர் பரிதாபமாகச் சொல்ல, ‘கவலைப்படாதீர்கள்; என்னால் உங்களை யாரும் உதைக்க வந்துவிட மாட்டார்கள்!’ என்று அவள் பின்னும் சிரித்துக் கொண்டே அவருடைய கழுத்தைத் தன் இரு கைகளாலும் கட்டிப் பிடித்து வளைக்க, ஐயோ, விபத்து! பயங்கர விபத்து!’ என்பதாகத்தானே விக்கிரமாதித்தர் அலறுவாராயினர்.

அவள் திடுக்கிட்டு, ‘என்ன விபத்து! எங்கே விபத்து? யாராவது காருக்குக் குறுக்கே வந்து விழுந்துவிட்டார்களா, என்ன?’ என்று காருக்கு முன்னால் பார்த்துக்கொண்டே கேட்க, ‘அதெல்லாம் ஒன்றுமில்லை; உன்னால் எனக்கு நேர்ந்த காதல் விபத்தைத்தான் சொன்னேன்!’ என்று அவர் சொல்ல, ‘நல்ல ஆண்பிள்ளை ஐயா, நீங்கள்? ஒரு பெண் உங்களைத் தொட்டால் உங்களுக்கு ‘ஷாக்’ அடிப்பதுபோல் இல்லையா?’ என்று அவள் கேட்க, ‘இல்லை’ என்று அவர் சொல்ல, ‘சரி தொலையட்டும்; பூமி உங்களை விட்டுக் கீழே கீழே நழுவுவது போலாவது இருக்கிறதா?’ என்று அவள் பின்னும் கேட்க, ‘இல்லை’ என்று அவர் பின்னும் சொல்ல, ‘சரி தொலையட்டும்; ஆகாயத்தை நோக்கி மேலே மேலே போவது போலாவது இருக்கிறதா?’ என்று அவள் பின்னும் கேட்க, ‘இல்லை’ என்று அவர் பின்னும் சொல்ல, ஆத்திரம் கொண்ட அவள் அவரை நறுக்கென்று கிள்ளிவிட்டு, ‘இப்போது உங்களுக்கு வலிக்கவாவது வலிக்கிறதா? அதையாவது சொல்லித் தொலையுங்கள்!’ என்று கேட்க, அதற்கும் அவர், ‘இல்லை, இல்லவே இல்லை!’ என்று அழுத்தந் திருத்தமாகச் சொல்லவே, பொறுமை இழந்த அவள், ‘போயும் போயும் உங்களை நான் காதலிக்க வந்தேனே? நிறுத்துங்கள் காரை, இறங்கிக் கொள்கிறேன்!’ என்று சொல்லிக் காரை நிறுத்தி, அக்கணமே இறங்கிக் கொள்வாளாயினள்.

கவர்ச்சிக் கன்னி காரை விட்டு இறங்கியதும் காளையொருவன் துள்ளி ஓடி வந்து, ‘என்ன, வெற்றிதானே?’ என்று அவள் தோளை உரிமையுடன் தட்டிக் கேட்க, ‘வெற்றிதான்! ஆனாலும் நான் கார் மோகினி என்பது அந்த விக்கிரமாதித்தருக்கு எப்படியோ தெரிந்துவிட்டிருக்கிறது; ரொம்ப உஷாராயிருந்தார். நானா விடுவேன்? அவர் கழுத்தைக் கட்டி வளைத்து, அவருடைய கோட்டுப் பையிலிருந்த பர்ஸை அப்படியே ‘அபேஸ்’ செய்து விட்டேன்!’ என்று சொல்லிக் கொண்டே வெற்றிப் பெருமிதத்துடன் அவள் விக்கிரமாதித்தரிடமிருந்து பறித்த பர்ஸை எடுத்து அந்தக் காளையிடம் கொடுக்க, அதை வாங்கி ஆவலுடன் திறந்து பார்த்துவிட்டு, ‘பலே கெட்டிக்காரர் என்று அவரைச் சும்மாவா சொல்கிறார்கள்? அவர் இதில் என்ன எழுதி வைத்திருக்கிறார், பார்த்தாயா?’ என்று சொல்லிக்கொண்டே அவன் அதற்குள்ளே இருந்த சீட்டு ஒன்றை எடுத்து அவளிடம் கொடுக்க, ‘ஏமாந்தீர்களா? இப்போது எப்படி இருக்கிறது உங்களுக்கு? அப்படித்தானே இருக்கும் உங்களிடம் ஏமாந்தவர்களுக்கும்?’ என்று எழுதியிருந்ததை அவள் படித்துவிட்டு, அதைச் சுக்கு நூறாகக் கிழித்து எறிவாளாயினள்.

‘கவலைப்படாதே! வெற்றி என்னவோ வெற்றிதான்; பர்ஸில்தால் ஒரு பைசாகூட இல்லை!’ என்று காளை சிரிக்க, ‘இன்னொரு முறை அந்த விக்கிரமாதித்தர் இந்தப் பக்கமாக வரட்டும்; அவரை நான் சும்மா விடுகிறேனோ, பார்!’ என்று கன்னி சூள் கொட்ட, ‘விடாமல் என்ன செய்யப் போகிறாய்? ஒருவரை ஒருமுறைதானே ஏமாற்ற முடியும் நம்மால்?’ என்று அவன் சொல்ல, ‘ஒரு முறை என்ன, எத்தனை முறை வேண்டுமானாலும் ஏமாற்றலாம். அதற்கு இந்தப் பட்டணத்தில் எத்தனையோ வழிகள் இருக்கின்றன!’ என்று அவள் சொல்ல, ‘சரி, ஏமாற்றம்மா, ஏமாற்று!’ என்று சொல்லிக்கொண்டே அவன் அவளுக்கு ஏற்கெனவே செய்துவிட்டிருந்த ‘மேக்-அப்’ பைச் சற்றே ‘ரீ டச்’ செய்வானாயினன்.

அங்ஙனம் ‘ரீ டச்’ செய்யுங்காலை, அவள் கழுத்திலிருந்த ‘டாலர் செயி’னைக் காணாத காளை, ‘எங்கே உன் செயின்?’ என்று திடுக்கிட்டுக் கேட்க, கன்னியும் திடுக்கிட்டுத் தன் கழுத்தைத் தொட்டுப் பார்த்துவிட்டு, ‘ஐயோ, மோசம் போனேனே!’ என்று அலறுவாளாயினள்.

அதுகாலை, ‘என்ன அம்மா, இன்டர்வியூ எல்லாம் முடிந்து போச்சா?’ என்று அவளுக்குப் பின்னாலிருந்து ஒரு குரல் கேட்க, அவள் திரும்பிப் பார்க்க, கையில் அவளுடைய டாலர் செயினுடன் காரில் உட்கார்ந்திருந்த விக்கிரமாதித்தர், ‘இந்தாம்மா, உன் செயின்!’ என்று அவள் செயினை அவளிடம் கொடுக்க, ‘ஆனானப்பட்ட விக்கிரமாதித்தர் கூட இப்படிச் செய்யலாமா?’ என்று அவள் ஆச்சரியத்துடன் கேட்க, ‘வேறு வழி? அப்படிச் செய்யாவிட்டால் இவ்வளவு நேரம் நீ இங்கேயே இருந்திருக்கமாட்டாயே, அம்மா!’ என்று அவர் சிரித்துக்கொண்டே சொல்ல, அதே சமயத்தில் அவருக்குப் பின்னால் மாற்றுடையில் அமர்ந்திருந்த போலீசார் இருவர் காரை விட்டுக் கீழே இறங்கிக் கன்னியையும் காளையையும் சேர்ந்தாற்போல் கைது செய்வாராயினர்.”

எட்டாவது மாடி ரிஸ்ப்ஷனிஸ்ட்டான செளந்தரா இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, “நாளைக்கு வாருங்கள்; ஒன்பதாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் நவரத்னா சொல்லும் கதையைக் கேளுங்கள்!’ என்று சொல்ல, “கேட்கிறோம், கேட்கிறோம், கேட்காமல் எங்கே போகப் போகிறோம்?” என்று போஜனும் நீதிதேவனும் வழக்கம் போல் கொட்டாவி விட்டுக்கொண்டே கீழே இறங்குவாராயினர் என்றவாறு… என்றவாறு… என்றவாறு….

– மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, அருந்ததி நிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email
விந்தன் என்று அறியப்படும் கோவிந்தன் (செப்டம்பர் 22, 1916 - ஜூன் 30, 1975) புதின எழுத்தாளரும், இதழாசிரியரும் ஆவார். கோவிந்தன் காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரில் வேதாசலம், ஜானகி ஆகியோருக்குப் பிறந்தார். சென்னை சூளைப் பகுதியில் கோவிந்தன் ஆரம்பக் கல்வி கற்றார். சிறு வயதிலேயே தந்தையோடு கருமான் (ஆசாரி) வேலை செய்து வந்தார். இரவுப் பள்ளியில் சேர்ந்து மீண்டும் கல்வியைத் தொடர்ந்தார். தொடர்ந்து படிக்க இயலவில்லை. ஓவியக் கல்லூரியில் சேர்ந்து…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *