உலகம் எப்படி இருக்கும் ?

1
கதைத்தொகுப்பு: நகைச்சுவை  
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 10,834 
 

சுமார் 50 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் அது. சிவாஜி நடிச்ச பாகப்பிரிவினை படம் வந்து ஓடிக்கிட்டிருந்த காலம்னு வச்சுக்கங்களேன்.

எங்க கிராமத்தில ஒரு ஆரம்பப் பள்ளிக்கூடம் இருந்திச்சு.

பள்ளிக்கூடமின்னா இப்ப இருக்கிறமாதிரி இங்கிலீஷ் மீடியத்தில பாடம் நடத்துற பள்ளிக்கூடமில்லை அது.

சாதாரண கிராமப் பள்ளிக்கூடம்.

பள்ளிக்கூடத்தில மொத்த மாணவர்களோட எண்ணிக்கையே நூறு பேர்தான். ஒன்னாம் வகுப்பில இருந்து அஞ்சாம் வகுப்பு வரைக்கும்தான் அங்கின படிக்க முடியும்.அதுக்கு மேல படிக்கிறதுன்னா பக்கத்தில இருக்கிற டவுனுக்குப் போயித்தான் படிக்கணும்.

வகுப்பு அஞ்சுன்னு இருந்தாலும் ஒவ்வொரு வகுப்புக்கும் தனித்தனியா வாத்தியார்கள் கிடையாது. பள்ளிக்கூடத்தில தலைமை ஆசிரியரையும் சேர்த்து மொத்தம் அஞ்சு வாத்தியார்தான். அதனால எல்லோருமே பாட (Subject Teachers) வாத்தியார்தான்.

ஒருத்தர் தமிழ் வாத்தியார். ஒருத்தர் கணக்கு வாத்தியார். ஒருத்தர் சயின்ஸ் வாத்தியார்.ஒருத்தர் பூகோள வாத்தியார். சமூகப் பயிற்சிப் பாடம், உடற்பயிற்சி பாடத்தையெல்லாம் தலைமை ஆசிரியரே நடத்துவார்.

ஒரு நாள் – அன்னைக்குத் திங்கள் கிழமை – தலைமை ஆசிரியர் மத்த நாலு வாத்தியாரையும் கூப்பிட்டு, அய்யா சாமிங்களா, இந்த வாரக் கடைசியில – அதாவது சனிக்கிழமையன்னைக்கு நம்ம பள்ளிக்கூடத்துக்கு மாவட்டக் கல்வி அதிகாரி வர்ராறு. அதனால் பசங்களையெல்லாம் கேள்வி கேட்டா பதில் சொல்ற மாதிரிக் கொஞ்சம் தயார் பண்ணி வைங்கன்னார். நாலுபேரும் சரின்னு சொல்லிட்டுப் பொயிட்டாங்க

நாலுபேரும் சரின்னு சொன்னாலும், பூகோள வாத்தியாருக்குதான் கொஞ்சம் கவலையாகிவிட்டது. அவருக்கே சரியாகப் பூகோளம் தெரியாது. வேற வேலை கிடைக்காததினால இந்த வேலைக்கு வந்தவரு அவரு.

அவரு என்னடா பண்ணலாம்னு யோசிச்சாரு. மத்த வகுப்புப் பசங்கள்லாம் பரவாயில்லை. இந்த முனாம் வகுப்பு பசங்கதான் கொஞ்சம் மக்குப் பசங்க – அவங்களை மட்டும் கொஞ்சம் ரெடி பண்ணி வச்சாப் போதும் நாம தப்பிசிக்கிடலாம்னு நெனைச்சு, மூனாம் வகுப்பு பசங்ககிட்டபோயி விவரத்தைச் சொல்லி, பூகோளப் பாடத்தில பத்து கேள்விகளையும், அதுகளுக்குள்ள
பதில்களையும் தயார் பண்ணிச் சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சாரு

முதல் கேள்வி, உலகம் எப்படி இருக்கும் – பதில் உலகம் உருண்டையாக இருக்கும்.இரண்டாவது கேள்வி தமிழ் நாட்டில் ஓடும் முக்கியமான ஆறுகள் என்னென்ன? பதில் – காவிரி, வைகை, தாமிரபரணி, பாலாறு. இப்படிபத்துக்கேள்விகளும் பதில்களும்.

வாத்தியார் உரக்கக் குரல் கொடுத்துச் சொல்லுவார். வகுப்புப் பையன்கள் பதினெட்டுப் பேர்களும் அதை உடனே கோரஸாகத் திருப்பிச் சொல்லுவார்கள். அப்போதானே அது மனதில் பதியும். அதுமட்டுமல்ல அவர் பாடம் நடத்தும் முறையும் அதுதான்!

வாத்தியார் தன் பயிற்சிமுறையில் பாடத்தைத் துவக்கினார்.

“உலகம் எப்படி இருக்கும்?” என்று இவர் சத்தமாகக் குரல் கொடுக்க

பதினெட்டுப் பேர்களும் அதை உடனே சத்தமாகத் திருப்பி சொன்னார்கள். அடுத்து “உலகம் உருண்டையாக இருக்கும்” என்று இவர் சொல்ல, தொடர்ந்து அத்தனை பேர்களும் அதைத் குரல் கொடுத்துச் சொன்னார்கள்.

அô§À¡Ðதான் ஒரு சிக்கல் எழுந்தது. ஒரே ஒரு பையன் எழுந்து, “சார் உருண்டைன்னா எப்பிடி இருக்கும்னு? ” கேட்டான். அவனுக்கு வட்டம், சதுரம், செவ்வகம்னா தெரியும். உருண்டைன்னோன அவனுக்குப் பிடிபடலை.

வாத்தியாரு பாத்தாரு – அவன் கேக்கிறது நியாயம்தான் முதல்ல அவனுக்கு உருண்டைன்னா என்னன்னு விளங்க வைக்கணும்னு முடிவு பண்ணினாரு.

எப்படி வெளங்க வைக்கிறது? யோசிச்சாரு. உடனே அவருக்குத் தன்னோட மூக்குப் பொடி டப்பா ஞாபகத்துக்கு வந்திச்சு. அது ஒரு எழுமிச்சம்பழ ஸைசுக்கு உருண்டையா, மேல பகுதில மட்டும் அழுத்தித் திறக்கும் படியா மூடியோட இருக்கும். உடனே தன் ஜிப்பவுக்குள்ள இருந்து அந்த பொடி டப்பியை எடுத்துக் காட்டி இதுதான்டா உருண்டைன்னாரு.

மனுசன் அதோட நிறுத்தியிருக்கப்படாது? அதுதான் போதாத நேரம்ங்கிறது. அதை வச்சே அந்தக் கேள்வியைச் சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சாரு.

இவரு முதல்ல “உலகம் எப்படி இருக்கும்?” என்று இவர் சத்தமாகக் கேட்க, பதினெட்டுப் பேர்களும் அதை உடனே சத்தமாகத் திருப்பி சொல்ல அடுத்து இவரு பதிலாக அந்த மூக்குப் பொடி டப்பாவை உயர்த்திக் காட்ட, எல்லோரும் “உலகம் உருண்டையாக இருக்கும்” என்று பதிலைச் சொல்வார்கள். பிறகு அடுத்தடுத்த கேள்விகளையும் பதிலையும் சொல்லிக் கொடுக்க – இப்படி ஐந்து நாட்கள் அதாவது திங்கட் கிழமை முதல், வெள்ளிக்கிழமைவரை கரடியாகக் கத்தி சொல்லிக் கொடுக்க பையன்களும் முழுப் பயிற்சி பெற்றார்கள். சனிக்கிழமையும் வந்தது. ஆனால் வெடியோடு வந்தது!

ooOoo

சனிக்கிழமை காலை பள்ளிக்கு வந்த மாவட்டக் கல்வி அதிகாரி, பத்து நிமிடம் தலைமை ஆசிரியரோடு பேசிவிட்டு – நீங்கள் உங்கள் வகுப்பிற்குப்போய் பாடம் எடுங்கள், மற்ற நான்கு வகுப்புக்களையும் நான் பார்த்துவிட்டு வருகிறேன்னு, முதல்ல நுழைஞ்சது நம்ம பூகோள வாத்தியாரின் மூனாம் வகுப்புக்குள்தான்.

வந்தவரு, வாத்தியாரோட ரெண்டு நிமிசம் பேசிவிட்டு, ஆசனத்தில் அமர்ந்து, மேசை மேலிருந்த ஆசிரியரின் கையேட்டைப் புரட்டிப் பார்த்தார்.

பார்த்தவர் எதற்குப் புதிதாகவெல்லாம் கேள்வி கேட்கவேண்டும் – ஆசிரியர் நடத்திய பாடத்திலேயே கேட்போம் என்று பையன்களைப் பார்த்துக்கேட்டார். “டேய் தம்பிங்களா, நல்லா படிக்கிறீங்களா? கேள்வியெல்லாம் கேட்டா, பதில் சொல்லுவீங்களா?” என்றார்.

எல்லாப் பசங்களும் ஒருமித்த குரலில் ” சொல்லுவோம் அய்யா” என்றார்கள். அதிகாரியும் மகிழ்ந்துபோய் முதல் கேள்வியைக் கேட்டார்.

“உலகம் எப்படி இருக்கும்?”

ஒருத்தன் கூடப் பதில் சொல்லவில்லை.

கல்வி அதிகாரிக்குப் பின்புறம் நின்று கொண்டிருந்த ஆசிரியர் திகைத்துப் போய் விட்டார். அடடா ஐந்து நாட்களாக என்னமாய்க் கத்திப் பாடம் சொல்லிக் கொடுத்தோம் ஒருத்தன் கூட எழுந்து பதில் சொல்லவில்லையே – என்னடா கஷ்ட காலம் என்று எண்ணியவருக்கு மின்னல் வெட்டியதுபோன்று அப்போதுதான் நினைவிற்கு வந்தது. ஆகா நாம் மூக்குப் பொடி டப்பாவைக் காட்டியல்லவா பாடம் நடத்தினோம். அதனால் மூக்குப் பொடி டப்பாவைக் காடினால் பதில் சொல்லிவிடுவார்கள் என்ற ஞானோதயம் உண்டாயிற்று.

கல்வியதிகாரிக்குப் பின்புறம் நின்று கோண்டிருப்பதானால் காட்டினால் அவருக்குத் தெரியப்போவதில்லை என்ற முடிவிற்கு வந்தவர், அவசரம் அவசரமாகத்தன் ஜிப்பாவிற்குள் கையைவிட்டு, மூக்குப்பொடி டாப்பாவை எடுத்து தன் தலைக்குமேலே உயர்த்திக் காட்டினார்.

ஆகா, அங்கேதான் இமாலயத்தவறு நடந்து விட்டது. உருண்டை டாப்பாவில் பொடி தீர்ந்து போய் விட்டதால் அன்று அவர் வீட்டிலிருந்து வேறு ஒரு பொடி டப்பாவை எடுத்து வந்திருந்தார். அது சதுர டப்பா!

சுரீரென்று அதுவும் அவருடைய நினைவிற்கு வந்தது. ஆனால் அதற்குள் எல்லாம் நடந்து முடிந்து விட்டது.

பொடி டப்பியை கையில் வைத்து, ரயிலுக்கு கொடி காட்டுவதைப்போல தன்னுடைய பூகோள வாத்தியார் ஆட்டுவதைக் கண்டவுடன், ஒரு பையன் சரேலென எழுந்து,” சார், நான் சொல்கிறேன்” என்று மகிழ்ச்சி பொங்கச் சொல்ல, கல்வி அதிகாரியும், இரண்டு நிமிட மாயான அமைதிக்குப் பிறகு ஒரு பையனாவது நான் சொல்கிறேன் சார் என்று சொல்கிறானே – பரவாயில்லை என்று உற்சாகமாகி சொல்லுடா கண்ணா என்று சொல்ல, அந்தப் பையன் கணீரென்று குரல் கொடுத்து இப்படிச் சொன்னான்.

“திங்கள் முதல் ¦Åûளி வரை உலகம் உருண்டையாகவும், சனிக்கிழமை சதுரமாகவும் இருக்கும்!”

– SP.VR. சுப்பையா

Print Friendly, PDF & Email

1 thought on “உலகம் எப்படி இருக்கும் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *