(1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
வாசகர்களுக்கு
இருபத்தைந்து ஆண்டுகளுக்குமுன் நான் எழுத்துலகில் ஈடுபட்ட காலத்தில் எழுதிய கதைகள் சில மெளனப் பிள்ளையார் என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டது. இப்போது அதையே திரு.கோபுலுவின் அற்புதமான சித்திரங்களுடன் இரண்டாம் பதிப்பாக மங்கள நூலகத்தார் கொண்டு வந்துள்ளார்கள். திரு. கோபுலுவுக்கும் மங்கள நூலகத்தாருக்கும் என் நன்றி. இந்தப் புத்தகத்தில் அடங்கியுள்ள கதைகளைச் சமீபத்தில் ஒரு முறை படித்துப் பார்த்தேன். சில இடங்களில் இவ்வளவு நன்றாக எழுதியிருக்கிறோமே? என்றும், சில இடங்களில் இந்தக் கதையை இப்போது எழுதியிருந்தால் இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம் என்றும் தோன்றியது. இப்புத்தகம் முதன் முறை வெளியானபோது இதைப் படித்த ரசிகமணி டி. கே. சி. அவர்கள் என் எழுத்துத் திறமையைப் பாராட்டி மிக அருமையான கடிதம் ஒன்று எழுதியிருந்தார்கள். எதிர் காலத்தில் நான் ஒரு சிறந்த நகைச்சுவை ஆசிரியராக விளங்குவேன் என்றும் அந்தக் கடிதத்தில் அவர்கள் என்னே வாழ்த்தியிருந்தார்கள். இச்சமயம் அவரை நினைவு கூர்ந்து அஞ்சவி செலுத்துகிறேன்.
சாவி,
மயிலாப்பூர்,
14-4-1964.
இலவசப் பிரயாணம்
அன்று நான் பங்களூருக்குப் போவதற்காக ஸ்டேஷனுக்குப் போய் ரயில் ஏறப் போனேன். கூட்டம் சொல்ல முடியாமலிருந்தது. எள்ளுப்போட்டால் அது கீழே விழாது. யார் தோளிலாவது தொத்திக்கொண்டுதான் நிற்கும். அப்படித் தொத்திக்கொண்டு நிற்கிறதா என்று பார்க்க நான் அன்று கையோடு எள் எடுத்துக்கொண்டு போகவில்லை. எனவே அதற்குப் பதிலாக நானே ஒருவருடைய தோளில் தொத்திக்கொண்டு நின்றேன்.
பங்களூர் பாஸஞ்சர் ஸெண்ட்ரல் ஸ்டேஷனைவிட்டுச் சாவதானமாகக் கிளம்பியது. ரயில் சிறிது நேரத்துக்கெல் லாம் அதிவேகமாகப் போக ஆரம்பித்தது.
நான் நின்றுகொண்டிருந்த வண்டியில் ஒரு முரட்டு ஆசாமி காலை நீட்டிக்கொண்டு ஒரு பெரிய படுக்கையைப் பக்கத்தில் பரப்பிவிட்டு உட்கார்ந்திருந்தான். கொஞ்சம் கூட மட்டு மரியாதையில்லாத மனுஷன் ! படுக்கையோடு விட்டானா? அதற்குப் பக்கத்தில் ஒரு பெரிய பெட்டி, அதன் பக்கத்தில் கூஜா, விசிறி இவைகளையெல்லாம் வைத்திருந் தான். கிட்டத்தட்ட நாலு பேர் உட்காரக்கூடிய இடத்தில் இதெல்லாம் போட்டு அடைத்து வைத்திருந்தான் என்றால் வண்டியில் இருப்பவர்களுக்குக் கோபம் வருமா வராதா?
பெட்டியிலிருந்தவர்களுக்குக் கோபம் மூக்குக்குமேல் வந்தது. ஆனால் வெளிக்குக் காட்டிக்கொள்ளவில்லை. பயங் காளிகள் ! அந்த முரட்டு ஆசாமி மீசையை வைத்துக் கொண்டு பார்வைக்கு மிகவும் பயங்கரமா யிருந்தது தான் அவர்களெல்லாம் பயந்ததற்குக் காரணம். இவர்கள் ஆண் பிள்ளைகளாம் !
– மௌனப் பிள்ளையார், இரண்டாம் பதிப்பு: ஏப்ரல், 1964, மங்கள நூலகம், சென்னை.