இருபத்தொன்பதாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் நர்மதா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: July 13, 2021
பார்வையிட்டோர்: 4,281 
 
 

இருபத்தொன்பதாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் நர்மதா சொன்ன போலீஸ்காரனைத் திருடன் பிடித்த கதை

“கேளாய், போஜனே! ‘இட்லி நகர், சட்னி நகர்’ என்று ஏதாவது ஒரு நகர் நிமிஷத்துக்கு நிமிஷம் உருவாகி வரும் இச் சென்னை மாநகரிலே ‘இளிச்சவாயன் நகர், இளிச்ச வாயன் நகர்’ என்று ஒரு நகர் உண்டு. அந்த நகரிலே ‘பொன்னி, பொன்னி’ என்று ஒரு கன்னி உண்டு. அழகென்றால் அழகு, கொள்ளை அழகாயிருந்த அந்தக் கன்னியை மணம் புரிய எத்தனையோ காளைகள் ‘நான், நீ’ என்று போட்டி போட்டுக் கொண்டு முன் வர, அத்தனை காளைகளையும் அவள் ‘வேண்டாம், வேண்டாம்’ என்று மறுத்து வர, ‘யாரைத்தான் அம்மா, நீ கலியாணம் செய்து கொள்ளப் போகிறாய்?’ என்று ஒரு நாள் அவளைக் கேட்டார் அவள் தகப்பனார். ‘போங்கப்பா, நான் சொல்ல மாட்டேன்!’ என்று அவள் தன் முகத்தை இரு கைகளாலும் பொத்திக் கொள்ள, அவர் அவளுடைய கைகளைச் சிரித்துக் கொண்டே விலக்கி, ‘சும்மா சொல்லம்மா?’ என்று ஒரு தடவைக்கு நாலு தடவையாக வற்புறுத்த, ‘நான் ஒரு போலீஸ்காரரைக் கலியாணம் செய்துகொள்ளப் போகிறேன், அப்பா!’ என்று சொல்லிவிட்டு அவள் வெட்கம் தாங்காமல் புழக்கடைக்கு ஓடுவாளாயினள்.

‘இதென்ன வம்பு! எல்லாப் பெண்களும் போலீஸ்காரனைக் கண்டால் பயப்பட அல்லவா செய்வார்கள்? இந்தப் பெண் அவனைக் கலியாணமே செய்துகொள்கிறேன் என்கிறாளே? என்ன துணிச்சல்!’ என்று வியந்த தகப்பனார், ‘எங்கே தேடுவேன், போலீஸ்காரனை நான் எங்கே தேடுவேன்?’ என்று தவிப்பாராயினர்.

இங்ஙனம் தவித்துக் கொண்டிருந்தகாலை ஒரு நாள் இந்த விஷயம் தெரிந்த அந்த ஊர்த் தடியன் ஒருவன் போலீஸ்காரர் வேடத்தில் திடீரென்று அவருடைய வீட்டுக்குள் நுழைந்து, ‘இப்படி ஒரு திருடன் வந்தானே, பார்த்தீர்களா?’ என்று அவரைக் கேட்க, ‘நான் யாரைப் பார்த்தேன்? உங்களைத்தான் பார்க்கிறேன்!’ என்று அவர் சொல்ல, ‘என்னைத்தான் பார்க்கிறேன் என்றால் என்னையே நீங்கள் திருடன் என்கிறீர்களா, என்ன?’ என்று அந்தப் போலீஸ்காரர் அவரைத் திருப்பிக் கேட்க, ‘ஏன் இருக்கக் கூடாது? இந்தக் காலத்தில்தான் போலீஸ்காரனே திருடன் வேடத்தில் வந்து திருடுகிறானே!’ என்று அவர் சொல்ல, ‘யாரைப் பார்த்து அப்படிச் சொல்கிறீர்? நான் அசல் போலீஸ்காரனாக்கும்! இப்போது நினைத்தால்கூட உம்மைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்துகொண்டு போய் என்னால் லாக்-அப்பில் அடைத்துவிட முடியும், ஜாக்கிரதை!’ என்று போலீஸ்காரராக வந்த அந்தக் கீலீஸ்காரர் ஒரு துள்ளுத் துள்ள, அடுக்களையில் இருந்தபடி அதைக் கேட்டுக் கொண்டிருந்த பொன்னி அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்து, ‘ஐயோ, அப்படியெல்லாம் செய்துவிடாதீர்கள்!’ என்று துடியாய்த் துடிக்க, அவளைக் கண்ட மாத்திரத்தில் ‘ஆ!’ என்று வாயைப் பிளந்த கீலீஸ்காரர் அப்படியே மூர்ச்சை போட்டுக் கீழே விழுவாராயினர்.

‘என்ன வந்துவிட்டது இந்தப் போலீஸ்காரருக்கு? இப்படி விழுந்து விட்டாரே!’ என்று பொன்னியின் தகப்பனார் அவரைக் குனிந்து பார்க்க, ‘ஒருவேளை காக்கா வலிப்பா யிருக்குமோ? எதற்கும் சாவிக் கொத்தை அவருடைய கையிலே திணித்துப் பாருங்கள், அப்பா!’ என்று பொன்னி சொல்ல, ‘காக்கா வலிப்பாயிருந்தால் இப்படி ஆடாமல் அசையாமல் இருக்க மாட்டாரே? இழுத்துப் பறித்துக் கொண்டிருப்பாரே!’ என்று அவர் சொல்ல, அதற்குள் கீழே விழுந்த கீலீஸ்காரர், ‘அதெல்லாம் ஒன்றுமில்லை; அந்தப் பெண்ணின் அழகு…அந்தப் பெண்ணின் அழகு…’ என்று திக்கிக்கொண்டே தட்டுத் தடுமாறி எழுந்து உட்கார எந்தப் பெண்ணின் அழகு?’ என்று ஒன்றும் புரியாமல் பொன்னியின் தகப்பனார் கேட்க, ‘உங்கள் பெண்ணின் அழகுதான்!’ என்று கீலீஸ்காரர் சொல்ல, ‘ஆமாம், என் பெண்ணின் அழகுக்கு என்ன?’ என்று அவர் மேலும் குழம்பிக் கேட்க, ‘அதுதான் என்னை அப்படியே மூர்ச்சையடையச் செய்துவிட்டது!’ என்று ஒரு கண்ணால் பொன்னியையும், இன்னொரு கண்ணால் அவளுடைய தகப்பனாரையும் பார்த்துக் கொண்டே சொன்னபடி கீலீஸ்காரர் எழுந்து நிற்க, ‘ஆளைப் பார், ஆளை!’ என்று அந்தக் கீலீஸ்காரரைத் தன் கண்ணால் ஒரு வெட்டு வெட்டிக்கொண்டே பொன்னி அடுப்பங்கரைக்குள் ஓடி ஒளிவாளாயினள்.

அவள் ஓட்டத்தைக் கண்ட தகப்பனார், ‘ஹஹ் ஹஹ்ஹா!’ என்று சிரிக்க, கீலீஸ்காரர், ‘ஹிஹ்ஹிஹ்ஹி!’ என்று சிரிக்க, ‘இவன் அவளுடைய அழகைப் பார், அழகை’ என்கிறான்; அவள் இவனை ‘ஆளைப் பார், ஆளை!’ என்கிறாள். ‘இதற்கு என்ன அர்த்தம்?’ என்று ஒரு கணம் யோசித்த தகப்பனார், மறுகணம், ‘காதல், கீதல் என்று சொல்கிறார்களே, அதற்கு ஒரு வேளை இது ஆரம்பமாயிருக்குமோ?’ என்று நினைக்க, அதற்குள், ‘உங்கள் பெண்ணை நீங்கள் வெளியே அனுப்புவதுண்டா?’ என்று கீலீஸ்காரர் அவரை மெல்ல விசாரிக்க, ‘ஏன்?’ என்று அவர் ஒன்றும் புரியாமல் கேட்க, ‘இதுவரை அனுப்பியிருந்தாலும் இனிமேல் அனுப்பாதீர்கள்! அனுப்பினால் என்னைப்போல் பலர் மூர்ச்சையாகிக் கீழே விழலாம்; அதனால் பல விபத்துக்கள் நேரலாம். அந்த விபத்துக்களின் காரணமாக நானே உங்கள் பெண்ணைக் கைது செய்தாலும் செய்யலாம்!’ என்று கீலீஸ்காரர் அளக்க, ‘இதென்ன வம்பு, அதற்குள் இவள் விரும்புவதுபோல் இவளை எந்தப் போலீஸ்காரன் தலையிலாவது கட்டி வைத்து விடுவதுதான் நமக்கு நிம்மதிபோலிருக்கிறதே!’ என்று நினைத்த தகப்பனார், ‘அதெல்லாம் இருக்கட்டும்; உங்கள் பெயர் என்ன?’ என்று கீலீஸ்காரரைக் கேட்க, ‘செவன், நாட், திரீ!’ என்று கீலீஸ்காரர் ஏக மிடுக்குடன் சொல்ல, ‘அட, நான் அதைக் கேட்கவில்லை ஐயா! உங்களுக்கு உங்கள் அப்பாவும் அம்மாவும் வைத்த பெயர் என்ன என்று கேட்கிறேன்!’ என்று அவர் அலுப்புடன் சொல்ல, ‘ஓ, அதுவா? பொன்னுச்சாமி!’ என்று கீலிஸ்காரர் தன் பெயருக்கு நடுவே வரும் ‘ச்’சன்னாவுக்கு ஒரு தனி அழுத்தம் கொடுத்துச் சொல்ல, ‘பொன்னுச்சாமியா, உங்களுக்கு எந்த ஊர்?’ என்று அவர் கேட்க, ‘இதே ஊர்தான்!’ என்று பொன்னுச்சாமியும் சொல்ல, அதற்கு மேல் அவருடைய குலம், கோத்திரம் எல்லாவற்றையும் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொண்ட பொன்னியின் தகப்பனார், ‘இனிமேல் நீங்கள் போய்த் திருடனைப் பிடிக்கலாம்!’ என்று சொல்ல, ‘ஆமாம்! ஆமாம்! அதை நான் மறந்தே போய்விட்டேன்!’ என்று கீலீஸ்காரர் அப்படியும் இப்படியுமாகப் பாய்ந்து பாய்ந்து சென்று பார்த்தபடி, ‘ஓடு, ஓடு’ என்று ஓடுவாராயினர்.

பொன்னுச்சாமியின் தலை மறைந்ததும் பொன்னியின் தகப்பனார் தம் மகளைக் கூப்பிட்டு, ‘போலீஸ்காரரைத்தான் கலியாணம் செய்துகொள்வேன் என்று சொல்லிக் கொண்டிருந்தாயே, அம்மா! இப்போது இங்கே வந்து போனவரை உனக்குப் பிடித்திருக்கிறதா?’ என்று கேட்க, ‘போங்கப்பா!’ என்று அவள் முகம் சிவக்கச் சொல்ல, ‘அப்போ சரிதான்!’ என்று அவர் அக்கணமே துண்டை உதறித் தோளின்மேல் போட்டுக்கொண்டு பொன்னுச்சாமியின் வீட்டைத் தேடிச் செல்வாராயினர்.

அவர் சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம், ‘ஐயோ, போலீஸ்காரனைத் திருடன் பிடித்துக்கொண்டு போகிறானே!’ என்று அந்தத் தெருவில் இருந்தவர்கள் அது ஒரு சினிமாக் கதையில் வரும் ‘வெளிப்புறக் காட்சி’ என்பது தெரியாமல் கூச்சலிட, அதைக் கேட்ட பொன்னி, ‘இது என்ன கூத்து!’ என்று எண்ணியவளாய் வெளியே வந்து பார்க்க, சற்றுத் தூரத்தில் உண்மையிலேயே அங்கு வந்த போலீஸ்காரரை ஒரு திருடன் பிடித்துக்கொண்டு போவதை அவள் கண்டு, ‘திகை, திகை’ என்று திகைப்பாளாயினள்.

‘இப்படியும் ஒரு போலீஸ்காரர் உண்டா?’ என்று அவள் மூக்கின்மேல் விரலை வைக்க, அதுகாலை அங்கு வந்த அவள் தகப்பனார், ‘எல்லாம் பேசி முடித்தாச்சு அம்மா, அடுத்த வெள்ளிக்கிழமை கலியாணம்!’ என்று சொல்ல, ‘அதற்குள்ளாகவா?’ என்று அவள் ஆச்சச்சச்சரியத்துடன் கேட்க, ‘எனக்கே அது ஆச்சச்சரியமாய்த்தான் இருந்தது, அம்மா! அந்தப் பொன்னுச்சாமிக்குத் தாயும் இல்லை, தகப்பனும் இல்லை; சித்தப்பாவும் சித்தியும்தான் இருக்கிறார்கள். அவர்களைக் கேட்டால், ‘அவனுக்கு நீங்கள் கலியாணம் செய்வீர்களோ, காஷாயம் வாங்கிக் கொடுத்துக் காசிக்கு அனுப்புவீர்களோ-அதைப்பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது!’ என்று சொல்லிவிட்டார்கள். ‘இது என்ன, எடுக்கும்போதே அபசகுனமாயிருக்கிறதே!’ என்று எண்ணிக் கொண்டே வெளியே வந்தேன். திண்ணையில் உட்கார்ந்திருந்த பொன்னுச்சாமியின் தாத்தா என்னைக் கூப்பிட்டு எல்லாவற்றையும் விசாரித்துத் தெரிந்துகொண்டு, ‘பாகப் பிரிவினையின்போது பையன் கொஞ்சம் கண்டிப்பாக நடந்து கொண்டு விட்டான்; அதனால் சித்தப்பாவுக்கும் சித்திக்கும் அவனைப் பிடிக்காமல் போய்விட்டது. அதற்காக நீங்கள் கவலைப்படாதீர்கள்! பையனுக்கும் பெண்ணுக்கும் மனப்பொருத்தம் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்ட பிறகு, மற்ற பொருத்தங்களை நாம் பார்க்க வேண்டாம். அடுத்த வெள்ளிக்கிழமை ஒரு முகூர்த்தம் இருக்கிறது; அந்த முகூர்த்தத்திலேயே இருவருக்கும் ஒரு முடிச்சைப் போட்டு விட்டுவிடலாம். எல்லாவற்றையும் நான் முன்னால் நின்று நடத்தி வைக்கிறேன்; நீங்கள் போய் மேலே நடக்க வேண்டியதைக் கவனியுங்கள்!’ என்றார். ‘சரி’ என்று வந்து விட்டேன். உனக்குச் சந்தோஷந்தானே?’ என்று அவர் கேட்க, ‘சந்தோஷந்தான்!’ என்று அவள் கொஞ்சம் இழுத்தாற்போல் சொல்லிவிட்டு உள்ளே செல்வாளாயினள்.

வெள்ளிக்கிழமை வந்தது; கலியாணமும் நடந்தது. முதல் நாள் இரவு பொன்னுச்சாமியைச் சந்தித்த பொன்னி, ‘திருடனைப் போலீஸ்காரர் பிடித்துக்கொண்டு போவது தானே உலக வழக்கம்? உங்களை ஏன் திருடன் பிடித்துக் கொண்டு போனான்? அவ்வளவு கோழையா நீங்கள்?’ என்று அது ஒரு புரட்சிகரமான, புதுமையான சினிமாக் கதையில் வரும் சம்பவம் என்பது தெரியாமல் கேட்க, ‘யார் சொன்னது? வேறு எந்தப் போலீஸ்காரனாவாவது இருந்திருந்தால் அந்தத் திருடன் அவனைக் கொன்றே போட்டிருப்பானே!’ என்று அவன் அப்போதும் குட்டை உடைக்காமல் ஒரு பக்கத்து மீசையை ‘முறுக்கு, முறுக்கு’ என்று முறுக்க, ‘அட, என் வீர ராசா!’ என்று அவள் இன்னொரு பக்கத்து மீசையை ‘முறுக்கு, முறுக்கு’ என்று முறுக்கி அழகு பார்ப்பாளாயினள்.

இங்ஙனம் ரதியும் மதனும்போல, ராசாவும் ராணியும் போல, அது போல, இது போலப் பொன்னியும் பொன்னுச்சாமியும் வாழ்ந்து வந்தகாலையில், ஒரு நாள் பொன்னியின் தகப்பனாருக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கும் சண்டை வர, அந்தச் சண்டையில் பக்கத்து வீட்டுக்காரர் பொன்னியின் தகப்பனாரை ஓர் அறை அறைந்துவிட, அவரைத் திருப்பி அறைய முடியாத பொன்னியின் தகப்பனார், ‘என்னை யார் என்று நினைத்துக் கொண்டாய்? போலீஸ்காரரின் மாமனாராக்கும்! அவரிடம் சொல்லி உன்னை நான் என்ன செய்கிறேன், பார்!’ என்று சூள் கொட்டிவிட்டு வந்து மருமகப் பிள்ளையிடம் நடந்ததைச் சொல்ல, ‘இதற்குப் போய் அவரைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்ல வேண்டுமா, என்ன? என்னுடன் வந்து ஆளைக் காட்டுங்கள்; நானே அவரைப் பதிலுக்குப் பதில் அறைந்துவிடுகிறேன்!’ என்று மருமகப்பிள்ளையாகப்பட்ட கீலீஸ்காரர் மீசையை முறுக்கி விட்டுக்கொண்டே கிளம்ப, ‘அது போதாது அவனுக்கு! அன்றொரு நாள் ‘நான் நினைத்தால் உம்மைக் கூடச் சந்தேகத்தின் பேரில் கைது செய்துகொண்டு போய் லாக்-அப்பில் அடைத்துவிடுவேன், ஜாக்கிரதை!’ என்று என்னை மிரட்டினீர்களே, அந்த மாதிரி அவனைக் கொண்டு போய் ஒரே ஒரு நாளாவது லாக்-அப்பில் அடைக்க வேண்டும்; அதை இந்தக் கண்கள் பார்த்துக் களிக்க வேண்டும்!’ என்று மாமனாராகப்பட்டவர் தம் கண்களைக் காட்டிச் சொல்ல, ‘இதென்ன தொல்லை! இந்தச் சோதனையிலிருந்து எப்படித் தப்புவது என்று தெரியவில்லையே?’ என்று மருமகப்பிள்ளை விழிக்க, ‘நீங்கள் எதற்கும் யோசிக்காதீர்கள்; அதற்காக மற்றவர்களைப் போல நானும் ஏதாவது ‘சம்திங்’ கொடுக்க வேண்டுமென்றாலும் கொடுத்து விடுகிறேன்!’ என்று மாமனார் ‘டக்’ கென்று மணிபர்ஸை எடுத்துத் திறக்க, ‘வேண்டாம், வேண்டாம். கொஞ்சம் பொறுங்கள்; இதோ வந்துவிட்டேன்!’ என்று கீலீஸ்காரர் வெளியே வந்து, ‘ஏ. விக்கிரமாதித்தா, இனி நீயே கதி!’ என்று வாய் விட்டுக் கதறிக் கொண்டே மிஸ்டர் விக்கிரமாதித் தரைத் தேடி ‘ஓடு, ஓடு’ என்று ஓடுவாராயினர்.

அவர் கதை கேட்டார் விக்கிரமாதித்தர்; அவர் தன் மாமனாரிடம் சொல்லிவிட்டு வந்தது போலவே ‘கொஞ்சம் பொறுங்கள், இதோ வந்து விட்டேன்!’ என்று சொல்லிக் கொண்டே எழுந்து வெளியே சென்றார். அடுத்த நிமிஷம் மிஸ்டர் விக்கிரமாதித்தருடன் வந்த அசல் போலீஸ்காரர்கள் இருவர் போலி போலீஸ்காரரைக் கைது செய்ய, ‘ஐயோ, இதற்குத்தானா உம்மைத் தேடி வந்தேன்?’ என்று கீலீஸ்காரர் அலற, ‘இன்னொரு முறை நீங்கள் ஆள் மாறாட்டம் செய்து யாரையும் ஏமாற்றக் கூடாது பாருங்கள்; அதற்குத்தான் இந்தத் தண்டனை!’ என்று விக்கிரமாதித்தர் சொல்ல, அதற்குள் ‘மருமகப்பிள்ளை அத்தனை அவசரமாக எங்கே போகிறார்?’ என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆவலுடன் அவரைத் தொடர்ந்து அங்கே வந்த அவருடைய மாமனாரும், மாமனாரைத் தொடர்ந்து வந்த அவருடைய மனைவியும், ‘ஐயோ, இது என்ன அநியாயம்? போலீஸ்காரரைப் போலீஸ்காரரே கைது செய்வதா?’ என்று பதற, ‘அவர் அசல் போலீஸ்காரர் இல்லை அம்மா, சினிமா போலீஸ்காரர்!’ என்று விக்கிரமாதித்தர் விளக்க, ‘அப்படியா சமாசாரம்? இருந்தாலும் அதற்காக இனி அவரைப் பிரிந்து வாடும் தண்டனையை எனக்கு நீங்கள் அளிக்கலாமா?’ என்று அதற்குள் தன்னை ஒருவாறு சமாளித்துக்கொண்டு விட்ட பொன்னி புலம்ப, ‘ஏமாற்றுபவர்கள் மட்டும் தண்டனை அடைந்தால் போதாது; ஏமாறுபவர்களும் தண்டனை அடைய வேண்டும் என்பதற்காகவே அதை நான் பொருட்படுத்தவில்லை, அம்மா!’ என்று சொல்லி விக்கிரமாதித்தர் அவளைச் சமாதானம் செய்து அனுப்பியதோடு, ‘கவலைப் படாதீர், பெரியவரே! உம்மை அறைந்த உம் பக்கத்து வீட்டுக்காரரும் அடுத்தாற்போல் கைது செய்யப்படுவார்!’ என்று சொல்லி அவள் அப்பாவையும் சமாதானம் செய்து அனுப்பி வைப்பாராயினர்.”
இருபத்தொன்பதாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்டான நர்மதா இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, “நாளைக்கு வாருங்கள்; முப்பதாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் முல்லை சொல்லும் கதையைக் கேளுங்கள்!’ என்று சொல்ல, “கேட்கிறோம், கேட்கிறோம், கேட்காமல் எங்கே போகப் போகிறோம்?” என்று போஜனும் நீதிதேவனும் வழக்கம் போல் கொட்டாவி விட்டுக்கொண்டே கீழே இறங்கிவருவாராயினர் என்றவாறு… என்றவாறு… என்றவாறு…….

– மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, அருந்ததி நிலையம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *