இருபத்தேழாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் மாலா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: July 13, 2021
பார்வையிட்டோர்: 3,568 
 
 

இருபத்தேழாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் மாலா சொன்ன கல்லால் அடித்த கதை

“கேளாய், போஜனே! ‘வம்பனூர், வம்பனூர்’ என்று ஓர் ஊர் உண்டு. அந்த ஊரிலே ‘மாரி, மாரி’ என்று ஒரு வள்ளல் உண்டு. அந்த வள்ளல் தம்மிடம் உதவி கோரி வருபவர்களுக்கெல்லாம் தம்மால் முடிந்த உதவியைத் தட்டாமல் செய்வதுண்டு. அங்ஙனம் செய்துவந்த அவரை அந்த ஊர் வம்பர்கள் போற்றாவிட்டாலும் தூற்றாமலாவது இருந்திருக்கலாம்; அதுதான் இல்லை. ‘சும்மாவா செய்கிறான்? சுயநலத்துக்காகச் செய்கிறான்!’ என்றனர் சிலர்; ‘ஒரு பக்கம் செய்கிற பாவத்துக்கு இன்னொரு பக்கம் புண்ணியத்தைத் தேடவேண்டுமோ இல்லையோ, அதற்காகச் செய்கிறான்!’ என்றனர் இன்னும் சிலர்; ‘புகழாசை யாரை விட்டது? வேறு வகையில் அடைய முடியாத அதை அவன் விலை கொடுத்து வாங்குகிறான்!’ என்றனர் மற்றும் சிலர். இவற்றையெல்லாம் கேட்கக் கேட்க வள்ளலுக்கு ‘அழுவதா, சிரிப்பதா?’ என்று தெரியவில்லை. ‘கொடுத்தால் நல்லவன்; கொடுக்காவிட்டால் கெட்டவன் என்பதல்லவா இந்த உலக நீதி? அந்த நீதிக்கு விரோதமாக அல்லவா இருக்கிறது இது!’ என்று அவர் வருந்தினார். அந்த வருத்தத்திலும் அவர் தம்மால் இயன்ற உதவியைப் பிறருக்குச் செய்யாமல் இருந்தார் இல்லை. யார் என்ன சொன்னபோதிலும், ‘என் கடன் பணி செய்து கிடப்பதே!’ என்று மேலும் மேலும் செய்தே வருவாராயினர்.

இங்ஙனம் செய்துவந்தகாலை அந்த ஊரிலிருந்த குடிசைகளில் சில திடீர், திடீரென்று தீப்பற்றி எரிய, அங்ஙனம் எரிந்த குடிசைகளுக்குப் பதிலாக வள்ளல் மாரி புதிய குடிசைகள் கட்டிக் கொடுக்க, அதையும அங்கிருந்த வம்பர்களில் சிலர் திரித்து, ‘இதெல்லாம் யாருடைய சூழ்ச்சி என்கிறீர்கள்? எல்லாம் அந்த வள்ளல் மாரியின் சூழ்ச்சிதான்! தருமம் செய்யத் தனக்கு அடிக்கடி சந்தர்ப்பம் வாய்க்க வேண்டும் என்பதற்காக அவன் தன் ஆளை விட்டுக் குடிசைகளுக்குத் தீ வைக்கச் சொல்லியிருக்கிறான்!’ என்று வாய் கூசாமல் சொல்ல, ‘அட, கடவுளே! இந்த அபவாதத்துக்கு ஒரு முடிவே இல்லையா?’ என்று வாய்விட்டு அலறிய வள்ளல், ‘தாங்காது அப்பனே, இனி தாங்காது!’ என்று உடனே ஓடிப் போய் ஓர் ஆறுதலுக்காக மிஸ்டர் விக்கிரமாதித்தரைப் பார்ப்பாராயினர்.

அவர் குறை கேட்டார் விக்கிரமாதித்தர்; சிரித்தார். ‘என்ன சிரிக்கிறீர்கள்?’ என்றார் வள்ளல் மாரி, ‘ஒன்றுமில்லை; சும்மாத்தான்!’ என்றார் விக்கிரமாதித்தர். ‘காரணமில்லாமல் நீங்கள் சிரிக்கமாட்டீர்களே?’ என்றார் அவர்; ‘காரணத்தோடுதான் சிரித்தேன்!’ என்றார் இவர். ‘என்ன காரணம்?’ என்றார் மாரி, ‘சொல்கிறேன்!’ என்று விக்கிரமாதித்தர் சொன்னதாவது:

‘கொடுத்தால் நல்லவன்; கொடுக்காவிட்டால் கெட்டவன் என்பது மட்டும் இந்த உலக நீதி அன்று; இன்னொரு நீதியும் உண்டு!’

விக்கிரமாதித்தர் இங்ஙனம் சொல்லி நிறுத்தியதும், ‘அது என்ன நீதி?’ என்று மாரி ஆவலோடு கேட்க, ‘அதோ பாருங்கள்!’ என்று அவர் தமக்கு எதிர்த்தாற்போலிருந்த மாந்தோப்பைச் சுட்டிக் காட்ட, ‘அந்த மாந்தோப்புக்கும் நீங்கள் சொல்ல வந்த நீதிக்கும் என்ன சம்பந்தம்?’ என்று இவர் கேட்க, ‘இருக்கிறது’ என்று விக்கிரமாதித்தர் அவரைப் பின்னும் தொடர்ந்து கேட்டதாவது:

‘அந்தத் தோப்புக்கு வெளியே நிற்கிறார்களே சில சிறுவர்கள், அவர்கள் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்?’

‘கல்லால் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்!’

‘எதைக் கல்லால் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்?’

‘காய்த்த மரத்தைக் கல்லால் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்!’

‘காய்க்காத மரத்தை ஏன் அடிக்கவில்லை?’

‘காய்க்கவில்லை; அதனால் அடிக்கவில்லை!’

‘அதுதான் நான் சொல்ல வந்த இன்னும் ஓர் உலக நீதி ஐயா, இன்னும் ஓர் உலக நீதி! இப்போதாவது அந்த நீதி என்னவென்பது புரிந்ததா உங்களுக்கு?’ என்று விக்கிரமாதித்தர் வினவ, ‘புரிந்தது, புரிந்தது’ என்று வள்ளல் மாரி தம் தலையை ‘ஆட்டு, ஆட்டு’ என்று ஆட்ட, ‘அங்கே காய்த்த மரத்துக்குக் கல்லடி; இங்கே கொடுக்கிற மனிதனுக்குச் சொல்லடி! அதுதான் வித்தியாசம்; மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு போய்வாருங்கள்!’ என்று விக்கிரமாதித்தர் அவருக்கு விடை கொடுத்து அனுப்புவாராயினர்.”
இருபத்தேழாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்டான மாலா இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, “நாளைக்கு வாருங்கள்; இருபத்தெட்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் ஷீலா சொல்லும் கதையைக் கேளுங்கள்!’ என்று சொல்ல, “கேட்கிறோம், கேட்கிறோம், கேட்காமல் எங்கே போகப் போகிறோம்?” என்று போஜனும் நீதிதேவனும் வழக்கம் போல் கொட்டாவி விட்டுக்கொண்டே கீழே இறங்கிவருவாராயினர் என்றவாறு… என்றவாறு… என்றவாறு…….

– மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, அருந்ததி நிலையம், சென்னை.

விந்தன் என்று அறியப்படும் கோவிந்தன் (செப்டம்பர் 22, 1916 - ஜூன் 30, 1975) புதின எழுத்தாளரும், இதழாசிரியரும் ஆவார். கோவிந்தன் காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரில் வேதாசலம், ஜானகி ஆகியோருக்குப் பிறந்தார். சென்னை சூளைப் பகுதியில் கோவிந்தன் ஆரம்பக் கல்வி கற்றார். சிறு வயதிலேயே தந்தையோடு கருமான் (ஆசாரி) வேலை செய்து வந்தார். இரவுப் பள்ளியில் சேர்ந்து மீண்டும் கல்வியைத் தொடர்ந்தார். தொடர்ந்து படிக்க இயலவில்லை. ஓவியக் கல்லூரியில் சேர்ந்து…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *