இருபத்தெட்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் ஷீலா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: July 13, 2021
பார்வையிட்டோர்: 3,754 
 
 

இருபத்தெட்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் ஷீலா சொன்ன கால் கடுக்க நின்ற கதை

“கேளாய், போஜனே! எங்கள் விக்கிரமாதித்தருக்குப் பத்து வயதுப் பாலகன் ஒருவன் உண்டு. ஆபீசுக்குச் செல்லுங்காலை அவனைத் தினந்தோறும் தம்முடைய காரிலே ஏற்றிக்கொண்டு போய் அவர் பள்ளியிலே விட்டுவிட்டுப் போவதுண்டு. அங்ஙனம் விட்டுக் கொண்டிருந்தகாலை அவன் ஒரு நாள், ‘எனக்கு நேரமாச்சு, நேரமாச்சு!’ என்று குதியாய் குதிக்க, ‘என்னடா நேரமாச்சு, மணி ஒன்பதே முக்கால்தானே ஆச்சு?’ என்று அவர் அவசர அவசரமாக ‘டிரஸ்’ செய்து கொண்டே சொல்ல, ‘உங்களுக்கு என்ன அப்பா, சொல்லாமல்? நேற்று அரை மணி நேரம் வெயிலில் நின்ற வேதனை எனக்கல்லவா தெரியும்?’ என்று பையன் சிணுங்க, ‘ஏன் நின்றாய், வீட்டுக் கணக்குப் போட்டுக்கொண்டு போகவில்லையா?’ என்று அப்பா கேட்க, ‘அதெல்லாம் ஒன்றுமில்லை, அப்பா! ஐந்து நிமிஷம் ‘லேட்’டாகப் போனேன்; அதற்காக நின்றேன்!’ என்று அவன் அழாக்குறையாகச் சொல்ல, ‘அதற்கா உன்னை அரை மணி நேரம் வெயிலில் நிற்க வைத்தார்கள்? ‘நான் சாட்சாத் விக்கிரமாதித்தரின் பிள்ளை’ என்று சொல்லிப் பார்த்திருக்கக் கூடாதோ?’ என்று அவர் சிரித்துக்கொண்டே சொல்ல, ‘எல்லாம் சொன்னேன்; ‘அப்படியானால் ஒரு மணி நேரம் நில்’ என்று சொல்லிவிட்டார் வாத்தியார்!’ என்று பையன் அப்பா எதிர்பார்க்காத ஒரு ‘வெடி குண்’டைத் தூக்கிப் போட, அவர் திடுக்கிட்டு, ‘ஏனாம்?’ என்று கேட்க, ‘எதிலும் ஓர் ஒழுங்கைக் கடைப்பிடிக்கும் உன் அப்பாவைப் போன்றவர்களின் பிள்ளைகளே இப்படி வந்தால் மற்றவர்கள் எப்படி வருவார்கள்? அதற்காகத்தான் உனக்கு அதிகப்படியான தண்டனை என்று சொல்லி விட்டார் வாத்தியார்!’ என்று அவன் விளக்க, அதற்குள் தயாராகிவிட்ட அவர், ‘சரி சரி, வாவா!’ என்று அவனை அழைத்துக்கொண்டு பள்ளிக்குச் செல்வாராயினர்.

வழியில் ஒரு ரேஷன் கடையையும், அந்தக் கடையை ஒட்டி வெயிலில் வியர்க்க விறுவிறுவிக்க நின்று கொண்டிருந்த ‘கியூ’வையும் கண்ட பையன், ‘நான்தான் பள்ளிக்கூடத்துக்கு லேட்டாகப் போன குற்றத்துக்காக நேற்று வெயிலில் நிற்கும் தண்டனையை அனுபவித்தேன்; இவர்கள் அந்தத் தண்டனையை அனுபவிக்க என்ன குற்றம் அப்பா, செய்தார்கள்?’ என்றான்; ‘இவர்கள் இன்னும் குற்றம் செய்யவில்லை; இனிமேல்தான் செய்யப்போகிறார்கள்!’ என்றார் தகப்பனார். ‘என்ன குற்றம் செய்யப் போகிறார்கள்?’ என்றான் அவன்; ‘அரிசி வாங்கப் போகும் குற்றத்தை!’ என்றார் அவர்.

அடுத்தாற்போல் ‘இந்தியா காப்பி ஹெள’ஸை ஒட்டி ஒரு நீண்ட ‘கியூ’ நின்றுகொண்டிருந்தது. அந்தக் ‘கியூ’வைக் கண்ட பையன், ‘இவர்கள் என்ன குற்றம் அப்பா, செய்யப்போகிறார்கள்?’ என்றான்; ‘காப்பிக் கொட்டை வாங்கப் போகும் குற்றத்தை!’ என்றார் தகப்பனார்.

அதற்கும் அடுத்தாற்போல் பஸ் ஸ்டாண்டை ஒட்டி ஒரு ‘கியூ’ நின்றுகொண்டிருந்தது. அந்தக் ‘கியூ’வைக் கண்ட பையன், ‘இவர்கள் என்ன குற்றம் அப்பா, செய்யப் போகிறார்கள்?’ என்றான்; ‘பஸ்ஸில் ஏறப்போகும் குற்றத்தை!’ என்றார் தகப்பனார்.

‘அரிசி வாங்குவது குற்றம், காப்பிக்கொட்டை வாங்குவது குற்றம், பஸ்ஸில் ஏறுவது குற்றம்!’ என்று தனக்குத் தானே முணுமுணுத்துக் கொண்ட பையன், ‘அப்படியே குற்றமாயிருந்தாலும் அதைச் செய்த பிறகல்லவா தண்டனை அனுபவிக்க வேண்டும்? இவர்கள் அதைச் செய்வதற்கு முன்னாலேயே தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்களே?’ என்று வியக்க, ‘அந்த அதிசயத்தைத்தான் என்னாலும் புரிந்துகொள்ள முடியவில்லையடா மகனே, என்னாலும் புரிந்து கொள்ள முடியவில்லை!’ என்று கையை அகல விரித்துக் கொண்டே மிஸ்டர் விக்கிரமாதித்தர் தம் மகனைக் கொண்டு போய்ப் பள்ளியில் இறக்கி விட்டுவிட்டு மேலே செல்வாராயினர்.”

இருபத்தெட்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்டான ஷீலா இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, “நாளைக்கு வாருங்கள்; இருபத்தொன்பதாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் நர்மதா சொல்லும் கதையைக் கேளுங்கள்!’ என்று சொல்ல, “கேட்கிறோம், கேட்கிறோம், கேட்காமல் எங்கே போகப் போகிறோம்?” என்று போஜனும் நீதிதேவனும் வழக்கம் போல் கொட்டாவி விட்டுக்கொண்டே கீழே இறங்கி வருவது காண்க… காண்க… காண்க……

– மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, அருந்ததி நிலையம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *