இருபத்து மூன்றாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் அபரஞ்சி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: July 13, 2021
பார்வையிட்டோர்: 3,658 
 
 

இருபத்து மூன்றாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் அபரஞ்சி சொன்ன பேயாண்டிச்சாமியார் கதை

“கேளாய், போஜனே! ‘மாயாண்டிபுரம், மாயாண்டிபுரம்’ என்று ஓர் ஊர் உண்டு. அந்த ஊரிலே ‘பேயாண்டிச் சாமி, பேயாண்டிச்சாமி’ என்று ஒரு சாமியார் உண்டு. அந்தச் சாமியார் மக்களோடு மக்களாக வசிக்காமல் ஒரு மலையடிவாரத்திலே தம் சீடகோடிகளுடன் ‘பீடாரோகணம்’ செய்திருந்தார். பக்தர்கள் பலர் ஆணும் பெண்ணுமாக அவரைத்தேடிச் செல்வார்கள். பலவிதமான காணிக்கைகளைக் கொண்டுபோய் அவருடைய காலடியிலே வைத்து அவரைச் சிரம் தாழ்த்தி, கரம் கூப்பி வணங்குவார்கள். அவர்கள்மேல் கொஞ்சம் விபூதியை எடுத்துப் போட்டு அவர் அவர்களை ஆசீர்வதிப்பார். அந்த விபூதி பட்ட மாத்திரத்தில் அவர்களில் சில பெண்கள் ‘நான் போறேன், நான் போறேன்!’ என்று தங்கள் தலைமுடியை விரித்துப் போட்டுக்கொண்டு ஆடுவார்கள். அங்ஙனம் ஆடும் பெண்களைப் பேய் பிடித்த பெண்கள் என்று சொல்லிச் சீட கோடிகள் தங்கள் கைகளில் உள்ள பிரம்புகளால் அந்தப் பெண்களின்மேல் இருக்கும் பேய்களை அடிப்பதுபோல் அவர்களையே அடித்து விரட்டிக்கொண்டு போய் ஊரின் எல்லைக்கு அப்பால் விட்டுவிட்டு வருவார்கள். இத்தனைக்கும் சாமியார் தம் வாயைத் திறந்து ஒரு வார்த்தை கூடச் சொல்ல மாட்டார். ‘ஏன் அவர் வாயைத் திறக்கவே மாட்டேன் என்கிறார்?’ என்று கேட்டால், ‘மெளன விரதம் அனுஷ்டிக்கிறார்!’ என்று சீடகோடிகள் சொல்வார்கள்.

இப்படியாகத்தானே சாப்பிடுவதற்கு மட்டுமே வாயைத் திறந்துகொண்டிருந்த அந்தப் பேயாண்டிச் சாமியாரின் பெருமை மாயாண்டிபுரமெல்லாம் பரவ, அந்தப் பெருமையைக் கேட்டு மிஸ்டர் விக்கிரமாதித்தர் ஒரு நாள் போய் அவரைப் பார்க்க, அவர் இவரைக் கண்டதும், ‘நான் போறேன், நான் போறேன்!’ என்று தம் சடா முடியை விரித்துப்போட்டு ஆடிக்கொண்டே ஓட, ‘இது என்ன ஆச்சரியம்! இத்தனை நாளும் பேசாத சாமி இவரைக் கண்டதும் பேசுது; இத்தனை நாளும் ஆடாத சாமி இவரைக் கண்டதும் ஆடுது, ஓடுது!’ என்று பக்தகோடிகள் மூக்கின் மேல் விரலை வைக்க, அதைக் கண்டு விக்கிரமாதித்தர் விழுந்து விழுந்து சிரிக்க, ‘என்ன சங்கதி? உங்களைக் கண்டதும் அவர் ஏன் ஓடுகிறார்? நீங்கள் ஏன் சிரிக்கிறீர்கள்?’ என்று அவர்களில் ஒருவர் இவரைக் கேட்க, இவர் சொன்னதாவது:

‘இந்தப் பேயாண்டிச் சாமியார் பூர்வாசிரமத்தில் ‘பெருமாள்’ என்னும் பெயர் பூண்டு என்னிடம் டிரைவராக வேலை பார்த்து வந்தான். மாதம் பிறந்து சம்பளம் வாங்கினால் போதும்-இவன் வீட்டுக்கும் போகமாட்டான்; ஆபீசுக்கும் வரமாட்டான். மறுநாள் மனைவி என்று சொல்லிக் கொண்டு இவனைத் தேடி ஒருத்தி வருவாள். ‘ஏன், நேற்று வீட்டுக்கு வரவில்லையா?’ என்று கேட்டால், ‘வந்து நாலு நாள் ஆச்சுங்க!’ என்பாள். ‘சரி, நீ போ! அவன் வந்ததும் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன்!’ என்பேன் நான். அவள் போனதும் இன்னொருத்தி வருவாள். ‘நீ யாரம்மா? என்று கேட்டால், ‘பெண்சாதிங்க!’ என்று நெளிவாள். இங்ஙனம் ‘மனைவி’ என்ற பட்டத்துடனும், ‘பெண்சாதி’ என்ற பட்டத்துடனும் நாலு பெண்கள் இவனை மாதா மாதம் தேடிக்கொண்டு வருவார்கள். வாங்கிய சம்பளத்தைத் தீர்த்துக் கட்டும் வரை இவன் அவர்களிடம் சிக்க மாட்டான். பாவம், அவர்களில் ஒருத்தி வீட்டுவேலை செய்து பிழைப்பாள்; இன்னொருத்தி சோற்றுக்கூடை தூக்கிப் பிழைப்பாள்; மற்றொருத்தி இட்லி – மசால் வடை சுட்டு விற்றுப் பிழைப்பாள்; மற்றும் ஒருத்தி மாட்டின் துணை கொண்டு பிழைப்பாள். அவர்களில் யாருக்கும் இவனுக்கு ஒரு மனைவியும் மூன்று துணைகளும் உண்டு என்ற விஷயம் தெரியாது; ஒவ்வொருத்தியும் தான் மட்டுமே இவனுக்கு மனைவி, தான் மட்டுமே இவனுக்குத் துணைவி என்று நினைத்துக் கொண்டிருந்தாள். இந்தக் குட்டை உடைத்துப் பார்க்க வேண்டும் என்று நினைத்த நான், ஒரு முதல் தேதி அன்று அவர்கள் நால்வரையும் சேர்ந்தாற்போல் வரச் சொல்லி ஒளித்து வைத்துவிட்டு, இவன் சம்பளம் வாங்கியதும் அவர்களைக் கொண்டுபோய் இவனுக்கு முன்னால் நிறுத்தினேன். அவ்வளவுதான்-அவர்களில் ஒருத்தி இவனுடைய வலது கையைப் பிடித்துக் கொண்டாள்; இன்னொருத்தி இடது கையைப் பிடித்துக் கொண்டாள்; மற்றொருத்தி சட்டையைப் பிடித்துக் கொண்டாள்; மற்றும் ஒருத்தி வேட்டியைப் பிடித்துக் கொண்டாள். இரண்டு பெண்டாட்டிக்காரன் பாடே திண்டாட்டம் என்று அந்தக் காலத்திலேயே சொல்வார்கள்; இந்தக் காலத்தில் நாலு பெண்டாட்டிக்காரன் பாடு எப்படி இருந்திருக்கும் என்பதை நான் சொல்லியா நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்? பயல் ‘விழி, விழி’ என்று விழித்தான். ‘இதெல்லாம் உங்கள் வேலைதானா?’ என்பதுபோல் என்னை வேறு பரிதாபமாகப் பார்த்தான். நான் சிரித்தேன். அதற்குள், ‘இவருக்கென்று நான் ஒருத்தி இருக்கும்போது நீ எப்படி வரலாம்?’ என்று ஒருத்தி இன்னொருத்தியைக் கேட்க, ‘நான் ஒன்றும் வரவில்லை; இவராகத்தான் வந்தார்!’ என்று அவள் சொல்ல, ‘இவருடைய சம்பாத்தியத்துக்கு நாங்கள் இரண்டு பேர் போதாதா? நீ ஏன் வரவேண்டும்?’ என்று முன்னவள் மூன்றாமவளைக் கேட்க, ‘நான்தான் கதியில்லாமல் வந்தேனென்றால் இவள் ஏன் வந்தாள் என்று கேள்!’ என்று அவள் நாலாமவளைச் சுட்டிக் காட்ட, ‘இந்த மன்மதனுக்கு ஏற்கெனவே மூன்று ரதிகள் இருக்கிறார்கள் என்பதை நான் கண்டேனா?’ என்று அவள் சொல்ல, ‘யாரையடி ரதி என்கிறாய்?’ என்று முன்னவள் அவள் மேல் பாய, அவர்கள் இருவரையும் மற்ற இருவர் விலக்கிவிட முயல, அதுதான் சமயமென்று இவன் அவர்களிடமிருந்து தப்பி எடுத்தான் ஓட்டம்! அதற்குப் பின் இவனும் வேலைக்கு வரவில்லை; இவனைத் தேடிக்கொண்டு அவர்களும் கம்பெனிக்கு வரவில்லை!’

விக்கிரமாதித்தர் இந்தக் கதையைச் சொல்லி முடித்ததும், ‘அவர்கள் நால்வரும் வேறு எங்கேயும் போய்விடவில்லை; இங்கேயேதான் இருக்கிறார்கள்!’ என்று பாதாளம் சொல்ல, ‘எங்கே இருக்கிறார்கள்?’ என்று அவர் கேட்க, ‘இங்கேதான் இருந்தார்கள்; இப்போது அவனுடன் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்!’ என்று இவன் சொல்ல, ‘ஏன்?’ என்று விக்கிரமாதித்தர் கேட்க, ‘அவன் போடும் விபூதிக்கு அவர்கள்தானே மாறி மாறி வந்து பேயாடித் தொலைக்க வேண்டியிருக்கிறது!’ என்று பாதாளம் குட்டை உடைக்க, ‘அடப் பாவி! இப்படி ஒரு பிழைப்பா உனக்கு?’ என்று அங்கே கூடியிருந்த பக்த கோடிகள் அனைவரும் கல்லடி பட்ட தேனீக்கள்போல் கலைந்து செல்வாராயினர்.”
இருபத்து மூன்றாவது மாடி ரிஸ்ப்ஷனிஸ்ட்டான அபரஞ்சி இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, ‘’நாளைக்கு வாருங்கள்; இருபத்து நான்காவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் மனோரஞ்சிதம் சொல்லும் கதையைக் கேளுங்கள்!’ என்று சொல்ல, “கேட்கிறோம், கேட்கிறோம், கேட்காமல் எங்கே போகப் போகிறோம்?” என்று போஜனும் நீதிதேவனும் வழக்கம்போல் கொட்டாவி விட்டுக் கொண்டே கீழே இறங்கி வருவாராயினர் என்றவாறு… என்றவாறு… என்றவாறு…

– மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, அருந்ததி நிலையம், சென்னை.

விந்தன் என்று அறியப்படும் கோவிந்தன் (செப்டம்பர் 22, 1916 - ஜூன் 30, 1975) புதின எழுத்தாளரும், இதழாசிரியரும் ஆவார். கோவிந்தன் காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரில் வேதாசலம், ஜானகி ஆகியோருக்குப் பிறந்தார். சென்னை சூளைப் பகுதியில் கோவிந்தன் ஆரம்பக் கல்வி கற்றார். சிறு வயதிலேயே தந்தையோடு கருமான் (ஆசாரி) வேலை செய்து வந்தார். இரவுப் பள்ளியில் சேர்ந்து மீண்டும் கல்வியைத் தொடர்ந்தார். தொடர்ந்து படிக்க இயலவில்லை. ஓவியக் கல்லூரியில் சேர்ந்து…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *