இருபத்தாறாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் கலா சொன்ன அவமரியாதைக் கதை
“கேளாய், போஜனே! அழகு மிகு சென்னையிலே ‘ஆபட்ஸ்பரி, ஆபட்ஸ்பரி’ என்று ஒர் அழகு மாளிகை உண்டு. அந்த மாளிகையிலே நடைபெறவிருந்த விழா ஒன்றுக்கு எங்கள் விக்கிரமாதித்தர் வந்து கொண்டிருந்தகாலை அவருடைய கார் வழியிலே கொஞ்சம் ‘மக்கர்’ செய்ய, எதற்கும் குறித்த நேரத்தில் செல்ல வேண்டும் என்பதைத் தம்முடைய குறிக்கோளாகக் கொண்டிருந்த விக்கிரமாதித்தர் சட்டென்று காரை விட்டுக் கீழே இறங்கித் தம் கைக் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, ‘விழா ஆரம்பமாக இன்னும் ஐந்தே நிமிஷங்கள்தான் இருக்கின்றன. காரைச் சரி செய்துகொண்டு போவதாயிருந்தால் குறித்த நேரத்தில் நாம் அங்கே போய்ச் சேர முடியாது. நான் முன்னால் நடந்தே போய் விடுகிறேன். நீ பின்னால் காரைச் சரி செய்துகொண்டு வா!’ என்று பாதாளசாமியிடம் சொல்லிவிட்டு நடக்க, ஆபட்ஸ்பரி மாளிகை வாசலில் நின்று கொண்டிருந்த ஆடம்பரதாரிகள் சிலர் அவரை உள்ளே விடாமல் தடுக்க, ‘அப்படியா சமாசாரம்?’ என்று அவர் தம் காரை நோக்கி ‘விறுவிறு’ வென்று திரும்பி வருவாராயினர்.
அதற்குள் காரைச் சரி செய்துவிட்ட பாதாளசாமி மிஸ்டர் விக்கிரமாதித்தரை எதிர்கொண்டு வந்து அழைக்க, அவர் தம் காரில் ஏறிக்கொண்டு மறுபடியும் ஆபட்ஸ்பரி மாளிகைக்கு அவசர அவசரமாகச் செல்வாராயினர். சிறிது நேரத்திற்கு முன்னால் கால் நடையாக வந்த விக்கிரமாதித்தரை உள்ளே விட மறுத்த ஆடம்பரதாரிகள், இப்போது அவரை ‘வருக, வருக!’ என்று வாயெல்லாம் பல்லாக வரவேற்று மாலையிட, அந்த மாலையைக் கழட்டி அவர் தம் காருக்குப் போட்டுவிட்டு, ‘மரியாதை எனக்கல்ல, இந்தக் காருக்குத்தான் என்பதை எனக்கு உணர்த்தாமல் உணர்த்திய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி; நான் வருகிறேன்!’ என்று திரும்ப, அந்த ஆடம்பரதாரிகள் அனைவரும் வெட்கித் தலை குனிவாராயினர்.”
இருபத்தாறாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்டான கலா இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, “நாளைக்கு வாருங்கள்; இருபத்தேழாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் மாலா சொல்லும் கதையைக் கேளுங்கள்!’ என்று சொல்ல, “கேட்கிறோம், கேட்கிறோம், கேட்காமல் எங்கே போகப் போகிறோம்?” என்று போஜனும் நீதிதேவனும் வழக்கம் போல் கொட்டாவி விட்டுக்கொண்டே கீழே இறங்கி வருவது காண்க… காண்க… காண்க…..
– மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, அருந்ததி நிலையம், சென்னை.