(1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
நான் அடிக்கடி பஸ்ஸில் யாழ்ப்பாணம் போய் வருபவன். யாழ்ப்பாணத்திலிருந்து எனது பஸ் தரிப்பு நிலையமான மானிப்பாய்க்கு உரிய பஸ் கட்டணம் இருபது சதம். ஆனால் எந்த நேரத்திலும் சில்லறையாக இருபது சதம் கிடைக்குமர் என்ன? சில சமயங்களில் இருபத்தைந்து சத ஒற்றை நாணயத்துடன் பஸ் ஏறி, எனக்கு வரவேண்டிய மிகுதி ஐந்து சதத்தைக் கொண்டக்டரிடம் கோட்டை விட்டிருக்கிறேன். அத்தகைய சில சம்பவங்களை விவரிப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
ஒரு நாள் –
யாழ்ப்பாணத்திலிருந்து மானிப்பாய் ஊடாகச்செல்லும் பஸ் ஒன்றில் நான் பிரயாணம் செய்து கொண்டிருந்தேன் யாழ்ப்பாணத்தில் இருபத்தைந்து சத நாணயம் ஒன்றைக் கொடுத்து டிக்கட் எடுத்தபோது சில்லறை ஐந்து சதம் இல்லை; ‘பிறகு வாங்கிக் கொள்ளும்’ என்று கொண்டக்டர் சொல்லியிருந்தார்.
பஸ் சிறிது தூரம் சென்றதும், ஐந்து சதங்கள் கொண்டக்டரிடம் சேர்ந்துவிட்டதை அறிந்து கொண்ட நான் மிகுதி ஐந்து சதம்பற்றி நினைவூட்டினேன்.
அதற்கு அவர் சொன்ன பதிலால் நான் வெட்கித் தலை குனியவேண்டி வந்து விட்டது. ‘உம்முடைய ஐந்து சதத்தைக் கொண்டு ஓடிவிடமாட்டேன்; பொறும் தரலாம். அதை கொண்டு போய் நான் என்ன வீடா கட்டப் போகிறேன்’ என்றவாறு ஏதோ அவசர அலுவல் பார்ப்பது போல் பஸ்ஸுக்குள்ளே அங்குமிங்குமாக ஒடித் திரிந்தார்.
பஸ் மானிப்பாயைச் சமீபித்துக்கொண்டிருந்தபோது கூட நான் அந்த ஐந்து சதம்பற்றிக் கேட்சவில்லை. சேட்டால் ஒருவேளை ‘உம்முடைய ஐந்து சதத்தில் நான் வீடு கட்ட போவதில்லை; இந்தாரும் பிடியும்’ என்று சொல்லிக்கொண்டு அவர் அக்காசை தந்தால் கூட அது எனக்கு மிகவும் அவமானமாகத்தானே இருக்கும்.
‘நானாகத் கேட்பதில்லை. அவர் தரும் போது வாங்கிக் கொள்வோம்’ என்ற முடிவுடன் இருந்த எனக்கு அன்று அந்த ஐந்து சதம் கிடைக்கவேயில்லை. பஸ் நின்று நான் இறங்கும்வரை கொண்டக்டர் என்னைக் கவனியாதவர் போல் இருந்துவிட்டார்.
இன்னொரு நாள்-
அன்றும் இருபத்தைந்து சதம் கொடுத்து மானிப்பாய்க்கு டிக்கட் எடுத்திருந்தேன். மிகுதி ஐந்து சதத்தைப் பின்பு தருவதாசக் கொண்டக்டர் கூறியிருந்தார்.
பிரயாணத்தின் போது இடையில் ஐந்து சதத்தைக் கேட்கக்கூடாதென்று தீர்மானித்திருந்தேன். அப்படிக் கேட்டால் கொண்டக்டர் ‘உம்முடைய ஐந்து சதத்தை நான் கொண்டு ஓடி விடமாட்டேன்’ என்றோ, ‘உம்முடைய ஐந்து சதத்தில் நான் வீடு கட்டப்போவதில்லை’ என்றோ சொல்லலாம் அல்லவா? அப்படி அவர் சொன்னால் நான் பலர் மத்தியில் அவமானப்பட வேண்டும் அல்லவா?
இருந்தாலும் – ‘ஐந்து சதத்தை இழக்கவும் கூடாது’ என்று எண்ணிய நான் இன்னொரு முடிவுக்கும் வந்திருந்தேன்.
அதன்படி ‘நானாகக் கேட்பதில்லை, அவர் தரும் போது வாங்கிக்கொள்வோம்’ என்றில்லாமல் இறங்கும்போது கட்டாயம் கேட்டு வாங்கவேண்டும் என்றிருந்தேன்.
நான் இறங்கவேண்டிய இடமும் வந்தது. இறங்கும் போது மிகுதி ஐந்து சதம் தரவேண்டும் என்ற சங்கதியை கொண்டக்டருக்கு நிளை வூட்டினேன். அவர் ‘கடைசி நேரமான இப்பொழுதா கேட்கவேண்டும்’, என்ற பாவனையில் நாக்கினால் ‘இச்’ கொட்டியவாறு தனது சட்டைப் பையில் கைவிட்டு சில்லறைகளைக் கோலி எடுத்து சையைச் சுள காக்கிப் புடைத்துப் புடைத்து அதற்குள் ஐந்து சதம் இருக்கிறதா எனத் தேடிக்கொண்டிருந்தார்…
இப்படியே நேரம் போய்க்கொண்டிருந்தால், அந்தப் பஸ்ஸில் ஏறுவதற்காக மீதிபலகைக்கு முன் மொய்த்துக் கொண்டிருந்த பிரயாணிகளின் சீற்றத்திற்குத்தான் ஆளாக வேண்டும். எனவே நானாகவே சொண்டச்டரிடம் ‘பரவாயில்லை இருக்கட்டும்’ என்று சொல்லிவிட்டு இறங்கி நடையைக் கட்டினேன்.
வேறொரு நாள்-
அது ‘எக்ஸ்பிரஸ்’ என்று சொல்லட்டடும் ஒரு கடுகதி பஸ். இதில் பிரயாணிகள் ஏறுவதற்கான வாசல் பின் பகுதியிலும், இறக்குவற்கான வாசல் முன் பகுதியிலும் இருக்கும். பிரயாணிகள் இதில் முறை தவறி நடந்தால் கொண்டக்டரின் பலத்த கண்டனத்துக்கு ஆளாகவேண்டும். இப்பிரச்சினையில் சில சமயங்களில் சொண்டக்டருடன் சேர்ந்து டிரைவரும் அத்து மீறிப் பிரவேசிப்பதுண்டு.
அத்தகைய ஒரு கடுகதி டள்ஸில் நான் அன்று பிரயாணம் செய்து கொண்டிருந்தேன். பிரயாண விவரங்களும் சில்லறைப் பிரச்சினைகளும் முன்போலவே! நான் இறங்கும் வரை பஸ்ஸில் எக்கச்சக்கமான கூட்டம்.
ஒருவழியாக இறங்கவேண்டிய இடமும் நெருங்கிக் கொண்டிருந்தது. கொண்டக்டரிடம் மிகுதி ஐந்து சதத்தைக் கேட்க முடியாமலிருந்தது. பஸ்ஸின் ஏறுவதற்கான பின்வாசலில் நிற்கும் அவரை சன நெரிசலில் பார்க்கவே முடியவில்லை. தவிர சனத்தை விலக்கிக்கொண்டு அவரண்டைபோய் ஐந்து சதத்தை வாங்கிக்கொண்டு அந்த வாசலாலேயே இறங்கலாமென்றால் அது முறை தவறி நடப்பதாக முடியும். அத்துடன் அப்படி நடந்தமைக்காக நான் கண்டிக்கப்படவும் கூடுமல்லவா?
அப்பொழுது எனக்குத் தோன்றிய ஒரேவழி, இறங்குவதற்கான முன்வாசலால் இறங்கி நிலத்தில் சிறிது நடந்து கொண்டக்டர் நிற்கும் பின் வாசலை அணுகி அவரிடம் ஐந்து சதத்தைக் கேட்கவேண்டும் என்பதேயாகும்.
அதன்படியே நான் மானிப்பாயில் இறங்கிக் கொண்டக்டரை அணுகுவதற்கு முன் அந்தோ, அந்த கடுகதி புறப்பட்டு விட்டது. கேவலம் ஐந்து சதத்துக்காக கையைத் தட்டியவாறு பஸ்ஸைத் துரத்திக்கொண்டு ஓடுவதா?
மற்றொரு நாள்-
ஆரம்பக் கதையெல்லாம் முன்போலவேதான். இடையில் கொண்டக்டரிடம் மிகுதி ஐந்து சதத்தைக் கேட்ட போது அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா?
“அது தான் முன்பே தந்து விட்டேனே!”
எப்படியிருக்கும் எனக்கு? முதன் முதலாக என்னைப் பொய்யனாகவும் ஏமாற்றுக்காரனாகவும் ஆக்கிய முதல் மனிதனே அந்தக் கொண்டக்டர்தான். எனக்கு அப்பொழுது ஏற்பட்ட அவமானத்தில் அந்த ஐந்து சதத்தை கேட்காமல் விட்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று தான் தோன்றியது.
அந்தச் சந்தர்ப்பத்தில் நான் கொண்டக்டரிடம் எதைச் சொல்லி எனது கட்சியை நிலை நாட்டினாலும் பிரயாணிகள் மத்தியில் அதனால் எனக்கு அவமானத்துக்கு மேல் அவமானமே ஏற்படும்.
‘இல்லை தரவில்லை’ என்று சொல்லி வாதாடிக்கொண்டிருந்தால் ‘கஞ்சப்பயல் போயும் போயும் ஐந்து சதத்திற்சாகச் சண்டைபோட்டுக் கொண்டிருக்கிறான்’ என்று பிரயாணிகள் என்னைப்பற்றி எண்ணுவர்.
வாதாடிக்கொண்டு இருப்பானேன் என்று ‘சரி, தந்திருப்பீர்கள்; நான் தான் மறந்திருப்பேன்’ என்று சொன்னாலோ ‘ஏமாற்றுக்காரன்’ பட்டம் கிடைக்கும்.
இருதலைக்கொள்ளி எறும்பு நிலையில் கொண்டக்டர் தரவில்லையென்பதற்கு யாரைச் சாட்சிக்கு அழைக்கலாம் என்று ஒருபுறமும், ‘போனால் போகட்டும், ஆனால் எப்படி அதைச் சொல்வது’ என்று மறு புறமுமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.
கொண்டக்டர் தொடர்ந்து சொன்னார். “ஒருவேளை சீற்றுக்குக் கீழே எங்கேயாவது விழுந்திருக்கும், வடிவாப் பாரும்.”
ஐந்து சதம் போனாலும் அப்பொழுது நான் இருந்த நிலையில் கொண்டக்டரின் அந்த வார்த்தை என் நெஞ்சில் பால்வார்த்தது போல் இருந்தது. அது தான் சமயமென்று நானும் சமாளித்துக்கொண்டு சொன்னேன். “ஐந்து சதம் தானே, பறவாயில்லை.”
‘கேவலம் ஐந்து சதத்தை அதுவும் ஏமாளித்தனமாகப் பறிகொடுத்து விட்டு அந்த வெட்கம் கெட்ட கதையை வேறு சொல்லிக்கொண்டிருக்கிறானே கஞ்சப்பயல்’ என்கிறீர்களா?
ஆனால் உங்களுக்கு எங்கே தெரியப்போகிறது, இப்படி எத்தனை நாட்களில் எத்தனை ஐந்து சதங்களை இழந்திருக்கிறேன் என்ற சங்கதி.
‘சிறு துரும்பும் பல்லுக்குத்த உதவும்’ ‘சிறுதுளி பெரு வெள்ளம்’ என்ற பழமொழிகளெல்லாம் நீங்களும் அறிந்தது தானே!
– பெண்ணே! நீ பெரியவள்தான்! (நகைச்சுவைக் கட்டுரைகள்), முதற் பதிப்பு: ஆனி 1971, தமயந்தி பதிப்பகம், அச்சுவேலி.