(1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஈழத்திலே நல்ல தரமான தமிழ்ப் பத்திரிகைகள் மிக மிகக் குறைவே! இதனால் தான் ஈழத்து இலக்கிய வளர்ச்சியும் மிகவும் பின் தங்கி இருக்கிறது. இக்குறையைத் தீர்க்கும் பொருட்டு – ஈழத்து இலக்கியத்தை வாழவைக்க இதோ ‘ஈழமுரசு’ வெளியாகியிருக்கிறது.
இப்பத்திரிகை பதினொரு அங்குல நீளமும் எட்டரை அங்குல அகலமும் கொண்டது; எட்டுப் பக்கங்கள். விலை உள் நாடு இருபது சதம், வெளிநாடு(!) இருபத்தைந்து சதம். ‘ஈழமுரசு’ பற்றி இதோ மேலும் விரிவாக விளம்புகின்றேன்.
முதலாம் பக்கம்
மேல் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் ‘ஈழமுரசு’ என்ற தலைப்பு எழுதப்பட்டிருக்கிறது. அத்துடன் ஆசிரியர் துணை ஆசிரியர் பெயர்கள், பத்திரிகையின் விலை, பத்திரிகையின் முகவரி, ஆங்கில தமிழ்த் திகதிகள், மலர் ஒன்று, இதழ் ஒன்று என்பனவும் காணப்படுகின்றன. அடிப்பசுத்தில் ‘அரசியல், கலை, இலக்கியத் திங்கள் ஏடு’ என எழுதப்பட்டிருக்கிறது. இடைப்பக்கத்தில் ஒரு தமிழ் அமைச்சரின் ஆசிச் செய்தி அன்னாரது புகைப்படத்துடன் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் பக்கம்
முழுவதிலும் பத்திரிகை தோன்றப் போகிறது என்பதை அறிந்ததும் பத்திரிகை ஆசிரியருக்கு மக்களிடமிருந்து வந்த ஏராளமான கடிதங்களிலிருந்து இடநெருக்கடியை உத்தேசித்துச் சிலவற்றை மட்டும் தந்துள்ளார்கள்.
மூன்றாம் பக்கம்
ஒரு விளம்பரம் கால் பக்கத்தை விழுங்கி விடுகிறது. மற்றைய முக்கால் பக்கத்திலும் (ஒரு சிறு இடம் நீங்கலாக) ஒவ்வொரு ஊர்களிலும் நியமிக்கப்பெற்ற விற்பனையாளர்களின் முகவரிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. இடையே (நீங்கலாகவுள்ள அந்த இடத்தில்) கட்டமிடப்பட்ட ஓர் அறிவித்தல் காணப்படுகிறது. அதில் ‘பத்திரிகையில் வெளியாகியுள்ள(?) கதை, கட்டுரை, கவிதைகளிலுள்ள பெயர்கள் யாவும் கற்பனையே’ எனச் சொல்லப் பட்டிருக்கிறது.
நான்காம் பக்கம்
அரைப் பக்கத்தில் இரண்டு விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளன. மிகுதி அரைப்பக்கத்தில் ஆசிரியர் தலையங்கமாக பத்திரிகை பின் தோற்றத்துக்கான காரணமும் அதன் வருங்கால இலட்சியங்களும் கூறப்பட்டுள்ளன.
ஐந்தாம் பக்கம்
ஐந்தாம் பக்கத்திலும் இரண்டு விளம்பரங்கள் அரைப் பக்கத்தை அலங்கரித்துள்ளன. ஏனைய அரைப்பக்கத்தில் ‘ஈழமுரசு’ சந்தா விவரம், அடுத்த இதழில் இடம்பெறவிருக்கும் புதிய அம்சங்கள், அவைகளை எழுதுபவர்களின் விவரங்கள், கதை கட்டுரை கவிதைகளை அனுப்புபவர்கள் அவைகளை அனுப்பவேண்டிய முறைகள் என்பன யாவும் தரப்பட்டிருக்கிறது .
ஆறாம் பக்கம்
ஆறாம் பக்கத்தில் ஒரு விளம்பரம் கால் பக்க அளவில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. மிகுதிப் பக்கத்தில் அடுத்த இதழில் ‘சேள்வி – பதில்’ பகுதி ஆரம்பமாகுமென்ற விவரத்துடன் கேள்வி கேட்பவர்கள் அஞ்சலட்டையில் வெட்டி ஒட்டுவதற்கான கூப்பனும் இடம்பெற்றிருக்கிறது. இதே போன்றதொரு கூப்பன் ‘சிறுவர் பகுதிக்கு’ அங்கத்தவர்களாகச் சேர்பவர்களுக்காகவும் தரப்பட்டிருக்கிறது .
ஏழாம் பக்கம்
மூன்று விளம்பரங்கள் ஏழாம் பக்கத்தின் முக்கால் பகுதியை மூடிவிடுகின்றன. கால் பக்கத்தில் பத்திரிகை தொடங்கப் போகிறது என்பதை அறிந்ததும் ஆர்வ மேலீட்டால் பத்திரிகை வளர நிதி உதவ செய்தவர்களின் பட்டியல் ஒன்று தரப்பட்டிருக்கிறது. இது போல் மேலும் பலரது உதவியையும் தாம் எதிர்பார்ப்பதாக ஆசிரியர் அடிக்குறிப்பும் எழுதியிருக்கிறார்.
எட்டாம் பக்கம்
எட்டாம் பக்கத்திலும் இரண்டு விளம்பரங்கள் போட்டிருக்கிறார்கள், மேல் பக்கத்தில் (கோட்டுக்கு மேல்) தலைமைத் தபால் நிலையத்தில் செய்திப் பத்திரிகையாகப் பதிவு செய்யட்பட்ட அதிசயமும், அடிப்பக்கத்தில் (கோட்டுக்குக் கீழ்) ‘ஈழமுரசு’ எந்த முகவரியிலிருந்து எப்போது யாரால் வெளியிடப்பட்டது என்ற விவரமும், ஆசிரியரது பெயரும் காணட்படுகின்றன. மிகுதி இடைவெளியில் பாரதியாரது கவிதை என்று மறுபிரசுரம் செய்யப்பட்டிருக்கிறது.
சரி! எப்படியும் ‘ஈழமுரசு’ பிரதி ஒன்று வாங்கவேண்டும் எனத் தீர்மானித்து விட்டீர்களா? ஆனால் ஒன்று, நீங்கள் வாங்கினாலும் சரி வாங்காவிட்டாலும் சரி பத்திரிகையின் முதல் இதழைப் பொறுத்தவரை அதற்கு இலாபமே! ஏன் என்றால் பத்திரிகை வெளியிட ஏற்பட்ட செலவைவிட விளம்பரங்களாலும் நன்கொடைகளாலும் அவர்கள் பெற்ற பணம் மிகவும் அதிகம்! ஈழமுரசுக்குச் சந்தா அனுப்ப எண்ணிவிட்டவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை இப்பொழுதே இக்கணமே செலுத்திவிடுகிறேன்.
– பெண்ணே! நீ பெரியவள்தான்! (நகைச்சுவைக் கட்டுரைகள்), முதற் பதிப்பு: ஆனி 1971, தமயந்தி பதிப்பகம், அச்சுவேலி.