இதெல்லாம் கலப்படமில்லீங்க….

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: October 30, 2014
பார்வையிட்டோர்: 31,961 
 
 

சீதாராமனுக்கு ஒரு ராசி. பொதுவாக அவன் நினைப்பது நடக்கும், மற்றவர்கள் மாதிரி கஷ்டப்பட வேண்டியதே இல்லை. மற்றவர்கள் நூறு மடங்கு கஷ்டப்பட்டால் அதை சுலபமாக அவன் செய்து விடுவான். அந்த மாதிரி ஜாதகம்.

ஆனால், அவன் மூன்று விஷயங்களுக்காக மட்டும் நினைப்பதுமில்லை. முயற்சி செய்வதுமில்லை என்று முடிவு செய்திருந்தான்.

முதலாவது அவன் அமெரிக்க ஜனாதிபதியாக வேண்டும் என்று விரும்பவில்லை. அதற்கு காரணம் இருந்தது. அமெரிக்காவில் நிமிடத்திற்கு மூன்று கற்பழிப்பு சம்பவங்கள் நடப்பதாக பத்திரிக்கை வாயிலாகப் படித்திருந்தான். இதில் ஒரு விஷேச அம்சம் கற்பழிக்கபடுவது ஆணா. பெண்ணா என்று கூட பல நேரத்தில் யாரும் பார்ப்பதில்லை என்பதைப் படித்து அவன் திகிலெடுத்துப் போயிருந்தான்.

அமெரிக்க ஜனாதிபதி யானால் அமெரிக்காவில் குடியிருக்க வேண்டும். எவனாவது அல்லது எவளாவது தன்னை அடையாளம் தெரியாமல் கற்பழித்து அதை இருக்கிற நிருபர்கள் பேப்பரில் போட்டு புரட்டி எடுத்து.. ஓ.. நோ… அவன் எது கெட்டாலும் ஒத்துக்கொள்ள தயார். தன் கற்பைக் கெடுத்து கொள்ள விரும்பவில்லை.

இரண்டாவது ரஷியப்பிரதமர் பதவி அதைப் பற்றி சிந்தித்தும் நினைக்க அவன் தயாரில்லை. அதற்கும் காரணம் இருந்தது. அவன் ஒரு தடைவ ரஷ்யா போய் வந்தான். அதுவும் பெரிய வம்புதான். எதற்கெடுத்தாலும் ரஷ்யாவைப் பார் சீனாவையைப் பார் என்று கம்ய+னிஸ்ட் மேடையில் ஒருத்தன் ரெண்டு பேர் என்று பலபேர் முழங்கப்போய் இவர்களெல்லாம் இவ்வளவு வற்புறுத்துகிறபோது ரஷ்யாவுக்கு போகாமல் எப்படி என்று ஒரு தடைவ போனாள். ரஷ்யாவில் ஒரு ஜெயிலுக்குப்போய் மூன்று கைதிகளை சந்திக்கிற அனுபவம் கிடைத்தது.

“…..ம்… நீங்க எதுக்கு ஜெயிலுக்கு வந்தீங்க காமரேட்…..”

“ஒரு அரசாங்க அதிகாரி ஒரு பழத்தைக் கொடுத்து இது எப்படி யிருக்குன்னு கேட்டார். நான் சாப்பிட்டு இனிப்பா இருக்கும்னேன்…ஜெயில்லே போட்டாங்க….”

“ஆச்சரியமா இருக்கே… என்று இரண்டாவது தோழனைப் பார்த்தான்.. நீங்க என்ன தப்பு செஞ்சீங்க…. தோழரே….”

“அந்தப் பழத்தை சாப்பிட்டுப் புளிக்குதுன்னு சொன்னேன்…”

ஒரே பழம் இரண்டு பேருக்கு எப்படி ருசி மாறித் தெரிகிறது என்று சீதாராமன் சிந்தனை வசப்பட்டான். மூன்றாவது நபரைப் பார்த்தான்.

“அப்புறம் உங்க விஷயம் எப்படி…”

“அதே பழத்தைப் பாருங்க சப்புன்னு இருக்கிறதா சொன்னேன். நீங்க உள்ளே இருங்கன்னு சொல்லிட்டாங்க….”

“மூன்று பேரும் தப்புன்னு எப்படித் தெரிஞ்சிட்டாங்களாம்..”

“சொன்ன பின்னாடிதான் தெரிந்தது.. அது காராபூந்தியாம்…”

“காராபூந்தியை பழம்னு எப்படி அந்த அதிகாரி சொன்னான்.. அதை நீங்க எப்படி ஒத்துக்கிட்டீங்க…’

“அரசு அதிகாரி தப்பாச் சொல்வாரா என்ன….”

“சரி காராபூந்தி காரமாக இல்லே இருக்கும்… அதைப் போய் இனிப்பு புளிப்புன்னு எப்படி சொன்னீங்க….”

“பழம் சொன்னாங்க… ஏதோ சொன்னோம்.. நீங்க இந்தியாவில் இருந்து வர்றதா சொன்னாங்க… நீங்க காராபூந்தியைப் பார்த்து இல்லையா…”

இந்தியர்கள் அணுகுண்டைவிட காராபூந்தித் தயாரிப்பில் ஏன் அக்கறை காட்டுகிறார்கள் என்று ஒருமாதிரியாகப் புரிந்தது சீதாராமனுக்கு…

இப்படிப்பட்ட இந்தியாவை விட்டுவிட்டு இந்த ஊருக்கு ஏன் பிரதமராக வேண்டும் என்று மனதில் எழுந்தது….”

“நான் ரஷ்யா பிரதமர் ஆவதில்லை என்று முணகினான். அது அவர்களுக்கு கேட்டுவிட்டது…..”

“ரஷ்யாவின் பிரதமராமே… அது என்ன பதவி…” என்று முதல் ஆள் கேட்க…

“நீ ஜெயிலில் கிடக்கித்தான் லாயக்கு… இதுகூட உனக்குத் தெரியல்லையே….” என்று முதலாவது ஆளைச் சலித்துக் கொண்டான்.

ஆனால், உண்மையில் அவனுக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை என்று தெரிந்தது..

மூன்றாவது ஆள் – அது பத்திரிக்கை மேனேஜர் பதவி…” என்றான்.

“இந்த நாட்டுக்கு பிரதமர் ஆகவே மாட்டேன் என்று சூளுரைத்து அடுத்த ரயிலேறி பதுடெல்லிக்கு ஓடிவந்து விட்டான் சீதாராமன்…

அடுத்து இங்கிலாந்து பிரதமர் ஆனால் பரவாயில்லை என்று மனதில் ஒரு எண்ணம் எழுந்தது. அன்றைக்கு ராத்திரி ஒரு கனவு வந்தது.

“என்னடா சுருட்டு நாத்தம் அடிக்கிறதே….” என்று எழுந்தான் சீதாராமன்.

எதிரில் சர்ச்சில் நின்றிருந்தார்.

“இது என்ன உறைய++ர் சுருட்டா…”

“நான்ஸென்ஸ்… இது மான்செஸ்டர் ஷையரில் பண்ணியது. நான் இந்தியச்சுருட்டு பிடிக்கிறதில்லை தெரியுமா உனக்கு… ஏது இங்கிலீஷ் பேசுகிறாய்.. இந்தியாவில் இருக்கிறவங்களுக்கு இங்கிலீஷ் தெரிகிறதா என்ன.. என்ன படிச்சிருக்கே.. ஸ்கூல் எல்லாம் இருக்கா இப்போ.. உன் பேரு என்ன…”

“சீத்தாரமன்…”

“சோத்துராமனா….”

“ஐயய்யோ அப்படின்னா அர்த்தம் வேறே.. நான் சீத்தாராமன்..சீதாங்கறது…..”

“தெரியும்மேன்.. சோத்துராமனைவிட சீத்தாராமன் மோசம்.. ஒரு பொம்பளை பேரை முன்னாடி சேர்த்துக்கிட்டியே வாட் ஏ சேம்… ஆமா…இண்டியன்ஸ் கோவணத்தை விட்டுட்டாங்களா இல்லையா..’

“அதெப்படிக் கோவணத்தை விடறது..மொத்தமா எங்கிட்ட இருக்கறது. அது ஒன்றுதான் அதையும் விட்டுட்டா… ஒன்றுமில்லாம இருந்தா அசிங்கமா இருக்காது.. அதோட அது எங்க சுதேசி உடை..”

“ஏன் மேன்… கட்டறதே கோவணம்.. அதிலே என்ன சுதேசி, பரதேசி.. நாப்பத்தியிரண்டுல அந்த கிழவர் – யார் மிஸ்டர் காந்தி ஆரம்பித்தது இன்னும் விடலே போலிருக்கே.. பேண்ட் போடக்கத்துக்கமேன்….”

“இப்போ நாங்க மாத்திரமல்லே.. இந்தியாவில் இருக்கிற நரிக்குறவன் கூட பேண்ட்தான் போடறான்னு தெரியுமா உங்களுக்கு…”

“ஓ.. கரெக்ட் மேன்.. நான் நெறையப்பேரைப் பேண்டோட பார்த்தேன்…. நெறைய முடி வச்சிக்கொண்டை ஸ்டைலா பேண்ட் போட்டுகிட்டு.. கஞ்சா குடிக்கறான்.. சாராயம் குடிக்கிறான்.. ரொம்ப முன்னேறிட்டான் இந்த நரிக்குறவன்….”

“ஓ…. அவனெல்லாம் நரிக்குறவனில்லை.. எங்க ஊரு காலேஜ் பையன்…”

“அவன் யாரா இருந்தா எனக்கென்ன.. நம்ம தூரத்து சொந்தக்காரன் ஒருத்தன் ஈஸ்ட் பிரிட்டன் கம்பெனின்னு இந்தியாவிலே ஆரம்பிக்க போறான்.. ஒரு பத்தாயிரம் பேருக்கு வேலை தரப்போறோம்…”

மறுபடியும் நாடு பிடிக்கிகற பிளானா என்று ஆத்திரம் எழுந்தது…

“அதெல்லாம் நடக்காது ஓய்… உம்ம நாட்டுக்கு நான் பிரதமரா வர நெனைச்சேன்.. எனக்கு குள்ளநரிகளை ஆளப்பிரியமில்லை.. சீ… நீரும்….உமது நாடும்… துடைப்பக்கட்டை…” என்று கனவை உதறினான்.

“ஏண்டா அப்படி ஊளையிட்டே…” என்று எழுந்த அம்மா விபூதியை நெற்றியில் அப்பினாள்… “புள்ளைக்கு நாளைக்கு மசூதியிலே போய் மந்திரிக்கணும்….”

பல தடைவ யோசித்த பிறகு இந்தியப் பிரதமராக ஆகிவிடுவது என்று சீதாராமன் முடிவு செய்தான். ஆனால், அதற்கு முன்பு தன் பெயர் பத்திரிக்கைகளில் பிரபலமாக வர வேண்டும் என்று மனதில் எழுந்தது..

என்ன செய்வது என்று யோசித்தான். அப்போது ராத்திரி நேரம். இவன் யொசனைக்கு இடைய+றாக காச்சு மூச்சு என்று களேபரமாக சத்தம் வரவே எரிச்சலுடன் எழுந்து தெருவுக்கு வந்தான்.. முக்கால்வாசி லுங்கியை முழங்காலுக்கு ஏற்றிக்கட்டிய ஒருத்தன் கத்திக் கொண்டிருந்தான்.

“என்ன ஆச்சுப்பா அவனுக்கு…”

“குடிச்சிருக்காண்டா அவன்”

“குடிச்சிட்டா அவன் சத்தம் போடற வழக்கமில்லையே…”

“நெஜந்தான் – இன்னிக்கு ஏதோ மட்டமான சரக்கு போட்டுருக்கான்… எது சுத்தமாக கெடக்குது. கண்டதைப் போட்டுக் காச்சி ஒரிஜினல் எது டூப்ளிகேட் எதுன்னு வித்தியாசம் தெரியல….”

அதற்குள் கைலி இவனை அடையாளம் கண்டு கொண்டு…

“பாரு தொரை… இந்த பக்கிரி ஆட்டுக்கறியையும், நாய்க்கறியையும் கலக்கறான்.. எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.. நீயெல்லாம் ஒரு பேச்சு கேக்காட்டா ஒழுங்குக்கு வரமாட்டான்…..”

மூன்று நாளாக யோசித்தும் வழி புலப்படாத நிலையில் இந்தக் குடிகாரன் மூன்று வினாடியில் ஒரு ஐடியா கொடுத்தானே என்று சந்தோஷம் ஏற்பட்டது.. குடித்தால் ஞானம் வந்து முட்டாள் தேவனாகி விடுவது நிஜம்தான் என்று தீர்மானித்தான். அப்புறம் இந்தியாவில் கலப்படத்தை எதிர்த்து அமெரிக்காவில் ரால்ப் நாடார்… மாதிரி செய்து பிரதமராகி விடுவது என்று முடிவு செய்தான் சீதாராமன்….

“அப்பா ஒரு போராட்டம் நடத்தப்போறேன்” என்றான் சீதாராமன்…

“போராட்டமா.. எதுக்கு. நமக்குத்தான் சுதந்திரம் கெடைச்சிடுச்சே…. அப்புறம் என்னத்துக்குப் போராட்டம்…”

“என்னப்பா பொழுது விடிஞ்சி பொழுது போனா போராட்டம் நடத்தறான்.. எல்லாம் சுதந்திரம் வாங்கறதுக்கா…. இப்படி கர்நாடகமா இருக்கீங்களே….”

“எதுக்கு போராட்டம் நடத்துறான்… அதான் புரியறதில்லே…. அதோட இன்னொரு சந்தேகம்.. கிடுகிடு போராட்டம். குடுகுடு போராட்டம்… தட தட போராட்டம்… பட பட போராட்டம்.. இப்படி எல்லாம் சொல்றாங்களே..ஒன்னுக்கொன்னு என்ன வித்தியாசம்…”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது.. நான் கலப்படத்தை எதிர்த்து ஒரு போராட்டம் நடத்தறேன்..”

“ரொம்ப சரி… இப்பெல்லாம் முட்டையிலே கூட கலக்கறானாம்..அநியாயமா இல்லே….”

இந்தியாவில் கலப்படமில்லாத ஒன்று முட்டை ஒன்றுதான் என்று யாரோ பேசிய ஞாபகம் வந்தது சீத்தாராமனுக்கு.. அதிலும் கலப்படமா…எப்படி…

“எப்படிப்பா முட்டையிலே கலப்படம் நடக்கும்…”

“பாரேன்… போந்தாகோழி முட்டையை நாட்டு கோழி முட்டைன்னு சொல்லி விக்கறான்… ரெண்டையும் கலந்துடறான்.. வித்தியாசமே தெரியலே.. இது கலப்படமில்லேயா….” என்றார் குப்புலிங்கம்.

களுக்கென்று அக்கா சிரிக்கிற சத்தம் கேட்டது… குப்புலிங்கம் சாதுவாய் உட்கார்ந்திருந்தார்… அவர் கேலி செய்கிறாரோ என்று சந்தேகமாக இருந்தது… “உம்’ என்று உறுமிவிட்டு தன் போராட்டத்துக்கான ஆயத்தங்களை கவனிக்க ஆரம்பித்தான் சீத்தாராமன்.

தன் கடை முன்பு வந்த இளைஞர் கூட்டத்தைப் பார்த்து கொஞ்சம் திகிலும் நிறைய ஆச்சரியமும் ஏற்பட்டது கறிக்கடை பக்கிரிக்கு….

“என்ன தம்பி. இங்கே உட்கார்ந்திருக்கீங்க… நம்ம குடும்பம் கறிக்கடை பக்கமே வராத குடும்பம்…”

“அதெல்லாம் விடு பக்கிரி… நீ ஆட்டுக்கறியையும், நாய்க்கறியையும் கலந்து விக்கறதா நமக்கு புகார் வந்திருக்கு.. நாங்க கலப்பட எதிர்ப்புக்கு ஒரு சங்கம் ஆரம்பிச்சிருக்கோம்… முதல்லே இங்கேதான் நம்ம போராட்டம் ஆரம்பிக்க உத்தேசம்….” சங்கம் என்றதும் திக்கென்றது பக்கிரிக்கு..

“ஐயோ.. நான் நீங்க சொல்ற மாதிரியெல்லாம் கலப்பட வேலை எதுவும் செய்யறதில்லே.. நம்ம கடையில விக்கறது தனிக்கறி. எம் புள்ள மேலே சத்தியம்…’

“கறியை எப்படி சோதிப்பது என்று புரியவில்லை சீதாராமனுக்கு…நமக்கு ரிப்போர்ட் வந்ததுப்பா… நீ ஆட்டுக்கறியோட நாய்க்கறியைக் கலக்கறியாமே….”

“ஐயோ தப்புங்க.. நான் ஆட்டுக்கறிப் பக்கமே போறதில்லைங்க…. நான் விக்கறது தனிக்கறி…”

என்னவோ சங்கடம் மனதில் நெளிந்தது. “ஏம்பா ஆட்டுக்கறிப்பக்கம் போறதில்லேன்னா நீ விக்கிறது என்ன கறி… தனிக்கறின்னு வேற சொல்றே….’

“நாய்க்கறிங்க…”

“என்னது… நாய்க்கறியா… கடவுளே… ஏம்பா இப்படி மக்களை ஏமாத்தலாமா… போர்டு வேற போட்டிருக்கே.. கறி விலை கிலோ நூத்தி நாற்பத்தெட்டுன்னு…’

“ஆமாங்க… கறி விலை ந}த்தி நாற்பத்தெட்டுன்னுதானே போட்டிருக்கேன்.. ஆட்டுக்கறின்னா போட்டிருக்கேன்…”

“போர்டிலே ஒரு ஆட்டைப் போட்டிருக்கே….”

“அது அழகக்குங்க….”

சீத்தாராமன் பின்னால் திரும்பினான்…. கூட்டம் வழிந்துக் கொண்டு நின்றிருந்தது… ஆக பக்கிரி கலப்படம் செய்வதில்லை என்று புரிந்தது…

மேற்கொண்டு என்ன பேசுவது என்றுதான் புரியவில்லை;….

“ஆமாம்…. அன்னிக்கு ஆறுமுகம் குடிச்சிட்டு நீ கலப்படம் செய்யறதா சொன்னானே…”

“நெஜந்தானுங்க.. தப்புதான்… அன்னிக்கு தெரியாத்தனமாக ஒரு ஆட்டை வெட்டிக் கலந்துட்டேன்.. அவனுக்கு கோவம்… தனிக்கறியாய்த் தின்னு பழக்கப்பட்டவன் அதோட விட்டேன்… இன்னிக்கு வரை தனிக்கறிதான்… நமக்கெதுக்குங்க வம்பு… சனங்களுக்கு பிடிச்சதைவித்துட்டுப் போறேன்… ஆனா வந்துங்க சொறிநாயைப் போட்டாலும் வெறி நாயைப்போட மாட்டேன்.. தெரு நாயைப் போட்டாலும் மர நாயைப்போட மாட்டேன்…’

சீத்தாராமன் பட்டாளம் நாய் விரட்டுகிற நினைப்புடன் ஓடியது…

“செட்டியார் நாங்க ஒரு சங்கம் ஆரம்பிச்சிருக்கோம்…

“கேள்விப்பட்டேன்.. இந்தாங்க…. ஏதோ நம்மாளே ஆனது…. இதுக்கு மேலே தாளாது….”

“இதென்ன பணம்…. நாங்க நிதி வசூலுக்கு வரலை…”

“அப்புறம் சங்கம் எதுக்கு…. பைத்தியக்காரத்தனமா இருக்கே.. இதில் ஒன்னும் தப்பில்லே தம்பி…. பழக்கம்தானே… வச்சக்குங்க….’

“சீச்சீ… பணத்தை நான் தொடமாட்டேன்… நமக்கு ஒரு ரிப்போர்ட் வந்தது. நீங்க மொளகாத்தூளோட குதிரைச் சாணத்தை கலந்து விக்கறீங்களாமே…”

“அதெப்படி முடியும்…..’

‘ஏன் முடியாது.. நமக்கு ரிப்போர்ட் வந்திருக்கு…”

“எவனாவது மடையன்தான் போட்டிருப்பான்….”

சுருக்கென்று உரைத்தது பட்டாளத்திற்கு… காச்சு மூச்சென்று

கத்தினார்கள்.. ஆக்தோஷமாக விவாதம் நடந்தது..

“கேளுங்க தம்பிகளா.. மொளகாய்த்தூளைவிட குதிரைச்சாணம்

விலை அதிகமாப் போச்சு… நான் ஏன் கலக்கனும்…..”

“குதிரைச் சாணத்திற்கு விலையா…அது எப்படி

அது தெரியாதா உங்களுக்கு… சித்தர்மன்மத கம்பீர காண்டாமிருக

லேகியம்னு ஒரு குளிகை பன்றான்… அதுக்கே குதிரைச்சாணி

கெடக்கறதில்லையாம்… கெடைச்சாத்தானே கலக்க முடியும்…’

“அது எதுக்கு ஆகுது…”

“அது தாது புஸ்டிக்கு சாப்பிட்டா வீரியம் வருமாம்… இதோ.. சாப்பிடுங்க…’

“கேக்கவே அசிங்கமா இருக்கு… சாப்பிட்டா வீரியம் வருமா…’

‘வீரியம் வருதோ இல்லையோ.. காலையிலே பேதி வருது….”

கூட்டம் குதிபோட்டு சிரித்தது…

“ஆமா தம்பி. நம்ப புள்ளைங்களுக்கு கூட பேதிக்கு வர இதைத்தான்

தர்றேன்…’

“கர்மம்… போயும், போயும் குதிரைச்சாணத்தையா….’

“அதிலே ஒன்னும் தப்பு இல்லே…. எதுக்கு எது உதவுதோ அதுக்கு

அதை தர்றதில்லே என்ன தப்பு… நம்ம அய்யா கூட அந்தக் காலத்திலே

எதுக்கோ நாயோட மலத்தைக் கரைச்சு…’

செட்டியார் நாயைப்பற்றி பேச ஆரம்பித்தவுடன் சீத்தாராமனின் குழு

பிடிடா ஓட்டம் என்று ஓடியது… செட்டியார் மலங்க மலங்க பத்து ரூபாய்

நோட்டுடன் விழிக்க ஆரம்பித்தார்.. உருப்படாத பசங்கள்… நிதியை

வாங்காம போறான்களே….

“சிவசத்தி காபி ஒர்க்ஸ்” என்று போர்டு போட்டிருந்த கடைக்கு

சீத்தாராமனின் கம்பெனி வந்து சேர்ந்தது.

“வா… தம்பி.. வா.. அப்பா உனக்கு ஒரு எடத்திலே வேலைக்கு

சொல்லியிருந்தாராமே… கெடச்சதா….”

“நாங்க ஒரு சங்கம் ஆரம்பிச்சிருக்கோம்….”

“என்ன சங்கம்”

“கலப்பட ஒழிப்பு சங்கம்…”

“அப்போ வேலை கெடக்கலை….”

நீங்க கூட கலப்படம் செய்யறதா கேள்விப்பட்டேன்.. காப்பித்தூள்லே

வேற என்னமோ கலக்கறீங்களாமே….”

“ஏன் கலக்கமாம கூட தர்றோம்….. கலந்தும் தர்றோம்….

அவங்கவங்களுக்கு ஏத்த மாதிரி….”

“என்ன கலக்கறீங்க…”

“சிக்கிரி…”

“இப்படி கலக்கறது தப்பில்லே…” விலாவில் ஒருத்தன் குத்த

சீத்தாராமன் துக்கத்தில் இருந்து விழித்தான்…. அதில்லே… நீங்க

புளியங்கொட்டையை வறுத்து கலக்கறீங்களாமே..”

“பச்சையாய் கலந்த நல்லாயிருக்காதே…..”

“நீங்க செய்யறது தப்பு….”

“எது வறுத்துக் கலக்கறதா….”

“இல்லே இப்படி புளியங்கொட்டையை கலக்கறது….”

“புளியங்கொட்டையை நான் அப்படியே கலக்கறது இல்லை தம்பி…..

அரைச்சுத்தான் கலக்கறேன்…..”

“அதுவும் தப்புதான்….”

“இது என்னடா வம்பாய் போச்சு…. நீ என்ன சொல்வர்றே… எதச்

சொன்னாலும் தப்புன்னா எப்படி… எதுதான் சரி….”

“புளியங்கொட்டை உடம்புக்கு கெடுதல் அதைக் காப்பியிலே கலக்கக்

கூடாது….”

“அப்போ காப்பி உடம்புக்கு நல்லதா…”

“அதுவும் கெடுதல்தான்….”

“சிக்கிரி நல்லதா…”

“அதுவும் கெடுதல்தான்….”

“எல்லாமே கெடுதல்கறப்போ எதுலே எதைக் கலந்தால் என்ன….”

சீத்தாராமன் பின்னால் திரும்பினான்.. கூட்டம் பரிதாபமாக நின்றிருந்தது….

“சிகரெட் குடிக்கறது நல்லதா….”

“கெடுதல்”

“குடிக்கறது நல்லதா….”

“கெடுதல்…”

“நீ போட்டிருக்கிற சட்டை உடம்புக்கு நல்லதா….”

“கெடுதல்…”

“பாத்தியா தம்பி எதுலேதான் கெடுதல் இல்லே…. கெடுதலைப்பத்தி யோசிச்சா நாம பொழைக்க முடியாது… கலப்படம் இன்றியமையாத ஒன்று பாத்தியா அர்த்தநாரீஸ்வரரை…. ஏன் பொம்பளை பாதி ஆம்பிளை பாதின்னு இருக்கார்… இது உலக தத்துவம்… ஸ்திரியும் புருஷனும்; கலந்தா கொழந்தை கெடைக்கும்…. ஒன்னோட ஒன்னைக் கலந்தாத்தான் ருசி…பாலோடு தேன் கலந்துன்னு பெரியவர் பாடியதைக் கேட்டிருக்கியா….”

“ம்..”

“அதுக்கு என்ன அர்த்தம்…. பால் வேற தேன் வேற… கலந்தா ருசி….சோத்தையும் சாம்பாரையும் கலந்தாத்தான் ருசி…. அதோடு நெய் கலந்து பாரு இன்னும் ருசி…. ஒட்டுச்செடின்னு கேள்விப்பட்டதில்லே…. கலப்பு அதிகமாக அதிகமாக ருசி ஜாஸ்தி…. உனக்கு கல்யாணம் ஆச்சா…..”

“இல்லே….”

“அதான் உனக்கு எதும் புரியல்லே….”

“இனிமேல் நான் என்ன பண்ணட்டும்… இந்த சங்கம்….”

“அது பாட்டுக்கு இருக்கட்டும்…. நம்ம நாட்டிலே எவ்வளவு

சங்கங்கள்….. பேருக்கு இருக்கறதுதான்… அதாலே தப்பில்லே….”

“இந்தப் புளியங்கொட்டை சமாச்சாரம்….”

“திரும்பியும் அங்கேயே வந்தா எப்படி… மொத மொதல்லே புளியங்கொட்டையை வறுத்து காப்பி போடற முறை வந்திருந்தா என்ன செஞ்சிருப்பே…. புளிப்பின்னு பேர் கொடுத்து குடிச்சிருப்போம்…. அதோட ஒரு நாள் நிஜமான காப்பிக் கொட்டையை வறுத்து கலந்தா கலப்படம் செய்யறேன்னு சொல்லுவே… நீயே யோசிச்சிப்பாரு…. உலகத்திலேலே நம்பகிட்டதான் புளியங்கொட்டை ஜாஸ்தி… அதை உபயோகப்படுத்தினா எவ்வளவு அந்நியச் செலாவணி மிச்சம்…. நீ எகனாமிக்ஸ் படிச்சிருக்கிறயா…. அதிலே இதெல்லாம் வரலை…..”

“புளியங்கொட்டைப் பத்தி வந்திருக்கா…..”

“முந்திரிக்கொட்டையைப் பத்தி வந்திருக்கா…”

“நாங்க முந்திரிக் கொட்டைங்கறீங்களா…..”

அவரை ஒரு தடைவ முறைத்துப் பார்த்துவிட்டு திரும்பிப் பார்த்தான்.

பட்டாளத்தைக் காணவில்லை. பயத்துடன் திரும்பி நடந்தான்.

இப்போதும் கூட பிரதமராகிற தன் விரதத்தை சீத்தாராமன் விட்டுவிடவில்லை…. ஆனால், பிரபலமாகி பிரதமராவதா….. அல்லது பிரதமராகி பிரபலமாவதா என்றுதான் குழம்பிக் கொண்டிருப்பதாகக் கேள்வி…. எதற்கும் தன் ஞான குருவான குடிகார ஆறுமுகம் வருகிறானா என்று தெருவில் வந்து காத்துக் கொண்டிருக்கிறான்….

1 thought on “இதெல்லாம் கலப்படமில்லீங்க….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *