இடம் வாங்கலையோ இடம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: May 5, 2023
பார்வையிட்டோர்: 3,176 
 
 

ராசப்ப கவுண்டரின் பிள்ளை “மருதமுத்து“ அந்த காலத்தில் கோயமுத்தூர் டவுனிலிருந்து  இருபது கிலோ மீட்டர் தள்ளி இருந்த குப்பண்ண கவுண்டர் புதூர் கிராமத்தில் அவரின் பெற்றோர்கள் வசித்து வந்த இருபது செண்ட் இடத்தை “ அப்பனும் ஆத்தாளும் “ போன சூட்டோடு ஆத்தாளின் உறவுக்கு வந்த விலைக்கு (இனாமாகத்தான்) விற்று விட்டு, எவன் இருப்பான் இந்த ஊரில்? என்று தன்னைத்தானே கேள்வி கேட்டுக்கொண்டு விட்டு சென்னைக்கு பிழைக்க வந்து, அங்கு ஒரு கம்பெனியில் வேலையாளாக சேர்ந்து அப்படியே ஒரு பெண்ணையும் பார்த்து குடித்தனம் நடத்தி சுமார் முப்பது வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. இன்னும் ஒரு வருடததில் ஓய்வு பெற. போகிறார். ஓய்வு பெற்று விட்டு நம்ம ஊர் பக்கம் ஏதாவது ஒரு இடத்தில் “செட்டில்” ஆகி விடலாம் என்று முடிவு செய்து விட்டார்.

சம்பாதித்ததில் பையன், பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிக்கொடுத்து, அவர்கள் வாழ்வதற்கு ஏற்பாடுகளும் செய்து முடித்து நிமிர்வதற்குள் சேமிப்பு என்று ஒன்றுமில்லாமல் கரைந்து விட்டது.

குறைந்த பட்ஜெட்டில் ஏதேனும் ஒரு வீடு அமைந்தால் சந்தோசமாக இருக்கும். அதற்காக அவர் பார்க்காத விளம்பரங்கள் இல்லை. ஒரு நாள் குறைந்த பட்ஜெட்டில் “ ஒண்ணரை” சென்ட்டில் வீடு கட்டித்தர இருபத்தைந்து இலட்சம் விளம்பரம் கண்ணில் பட வரும் ஓய்வு பணம், அப்புறம் வீட்டில் உள்ள மிச்ச சொச்ச நகைகள், எல்லாம் விற்றால் வாங்கி விடலாம் என்ற எண்ணத்தில் உடனே அந்த நிறுவனத்து போன் போடுகிறார்.

ஹலோ..மணிப்புறா புரோமோட்டர்ஸ் !….

யெஸ் திஸ் இஸ் மணிப்புறா புரோமோட்டர்ஸ், வாட் யூ வாண்ட் ?.

சார் உங்க விளம்பரம் பார்த்தேன்..

சாரி இவ் யூ ஸ்பீக் இங்கிலீஸ் ஆர் இந்தி ……..

சார் தமிழ்ல பேசுனா நல்லாயிருக்கும்…

யூ கேன் கால் ஆப்டர் சம் டைம்ஸ்..வி வில் மேக் அரேஜ்மெண்ட்ஸ் பார் டாக்கிங் தமிழ்…

அவருக்கு என்ன சொன்னார்கள் என்று புரியவில்லை, ஆனால் போன் வைத்த சத்தத்தை வைத்து துண்டித்து விட்டார்கள் என்பது மட்டும் புரிந்தது.

அரை மணி நேரம் கழித்து ஒரு நப்பாசையில் மீண்டும் போன் செய்தார். போன் எடுத்தவர்கள் ஹலோ..குரல் கேட்டவுடன் இவர் அவசரமாக சார் நான் சென்னையிலயிருந்து பேசறேன், உங்க விளம்பரத்தை பார்த்தேன், கோயமுத்தூருல நான் செட்டிலாகனுமுன்னு நினைக்கிறேன்..மூச்சு விடாமல் பேச…

சாரி ஐ டோண்ட் நோ தமிழ். ப்ளீஸ் வெயிட் பார் மினிட்ஸ்…கொர்..சத்தம் ஐந்து நிமிடம்….அமைதி இவருக்கு பரபரப்பு, உடன் சோகம், மீண்டும் போன் எடுக்கும் ஆளிடம் இதே கதையை சொல்ல வேண்டுமா?

ஹலோ சொல்லுங்க ? பெண்ணின் குரல் அப்பாடி தமிழில் குரல் கேட்டதும், இவர் அமெரிக்காவில் இருந்து கொண்டு தமிழ் மொழியை கேட்பது போல் சந்தோசப்பட்டுக்கொண்டார்,

அம்மாடி உங்க விளம்பரம் ஒண்ணு பார்த்தேன் அதான் விசாரிச்சுட்டு போலாமுன்னு,

இப்ப எங்க இருந்து பேசறீங்க ?

சென்னையில இருக்கறம்மா,, கோயமுத்தூர்ல நீங்க “பருந்து நகர்” அப்படீன்னு போட்டிருக்கறீங்கில்ல கோயமுத்தூருல இருந்து அஞ்சு நிமிச தூரம்தான்னு. அங்க ஒரு சைட் வேணும், வீடு கட்டி கொடுத்துட்டா இன்னும் செளகர்யம்.

சார் அந்த பிளான்ல இன்னும் ஒரு சைட் மட்டும்தான் பாக்கியிருக்கு. உடனே அதை, இரண்டு லட்சம் கொடுத்து புக் பண்ணிட்டிங்கன்னா நல்லாயிருக்கும். 

அம்மாடி அவ்வளவு பணத்துக்கு இப்ப எங்க போவேன், கொஞ்சம் டைம் கொடுங்க, இல்லை அமவுண்டையாவது குறைச்சுக்குங்க.

சார் இது “பாரின் கம்பெனி,” நாங்க எல்லா விசயத்துலயும் கரெக்டா இருப்போம், கூட்டறது கழிக்கறது எல்லாம் இங்க கிடையாது.

“பாரின் கம்பெனியா”? நம்மூருதானம்மா, நம்மளுக்குதாம்மா விக்கறாங்க?

சாரி சார் நோ ஆர்க்கியூமெண்ட்ஸ், உடனே பணத்தை புக் பண்ணுங்க, நீங்க தமிழ் பேசறீங்களேன்னு உங்க கிட்டே சொல்றேன் அவ்வளவுதான்.

தமிழ் பேசினால் இப்படி கூட ஒரு சலூகை உண்டா? இதிலொரு அற்ப சந்தோசம் கூட மருதமுத்துவுக்கு ஏற்பட்டது.

ஒரு மணி நேரத்தில் வீட்டுக்காரியின் கதறலையும், கண்டு கொள்ளாமல் கை, கழுத்தில் இருந்த பொன்னகைகள், அந்தம்மாளின் புன்னகையை தொலைத்து விட்டு இரண்டு லட்சமாய் மணிப்புறா புரோமோட்டர்சின் கணக்குக்குள் வலைத்தளம் வழியாக போய் சேர்ந்து விட்டது.

ஒரு மாதம் ஓடியிருந்தது. உங்களுக்கு பருந்து நகரில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. நீங்கள் விரும்பினால், வந்து பார்வையிட்டு,  “அக்ரிமெண்டில்” கையெழுத்திடலாம், இல்லயென்றாலும் அந்த அக்ரிமெண்ட் உங்களுக்கு வலைத்தளம் மூலம் அனுப்ப்படும். அதில் உங்கள் கையெழுத்து போட்டாலும் போதும். அது உங்களுக்கு ஒதுக்கப்பட்டதுதான், மேற்கொண்டு கட்டிடம் கட்டுவதற்கான பாதித் அளவு தொகையை இன்னும் இரு வாரத்தில் செலுத்தி விட்டால் வேலையை ஆரம்பித்து விட்லாம்.

அப்பாடி , மருதமுத்துவுக்கு பெருமூச்சு வந்தது. எப்படியோ கோயமுத்தூரில் ஒரு இடம் வாங்கியாகிவிட்டது. ஓய்வு பெற்ற உடன் போய் அக்கடாவென உட்கார்ந்து கொள்ளலாம். அதற்கு முன் பணத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். சம்சாரம் பையன்கிட்ட சொல்லி பாக்க சொல்ல்லாமா? கேட்டதற்கு வேண்டாம், அவ்வளவு பனம் இருந்தா,”பிசினசுக்கு” கொடுன்னு, சொல்லிடுவான், அப்புறம் இனிமேல் நீ அங்க போய் என்ன பண்ன போறேன்னு கேட்பான்.

ஒரு விதத்தில் கணவன் சொல்வதும் சரிதான் என்று பட்டது மருதமுத்துவின் மனைவிக்கு.

எப்படியோ ஒரு வழியாக அவர்களின் சட்டை, துணிமணிகளை தவிர அனைத்தையும் விற்று, காசாக்கி, கட்டிடத்துக்கான முக்கால் பங்கு தொகையையும் கட்டி விட்டார்கள். போய் பார்க்க மட்டும் அவர்களால் தோதுப்படாவிட்டாலும், அலுவலக நண்பர்களிடம் சொல்லி கட்டிடத்தின் வளர்ச்சியை பார்த்து தெரிந்து கொண்டார்கள். கணவன் மனைவி இருவரின் கனவும் வீட்டை சுற்றியே இருந்தது.

அவர் ஓய்வு பெறவும், கணவனும் மனைவியும் கோவை வந்து ஓய்வு பலன் தொகைகள் அனைத்தையும் “மணிப்புறா புரோமோட்டர்சில்” கொடுத்து அந்த கட்டிடத்துக்கான தொகைகளை “செட்டில்” செய்து விட்டு பத்திர அலுவலகம் சென்ரனர்.

அங்கு அவர்களுக்கு வழங்கப்பட்ட மூலப்பத்திரம், வழிமுறைப்பத்திரம் அனைத்தையும் கையில் கொடுத்தனர். வாங்கியவர் மூல பத்திரத்தை படிக்க ஆரம்பித்தார்.

கோயமுத்தூர் வடக்கு ….குப்பண்ன கவுண்டர் புதூர் கிராம்ம்…….ராசப்ப கவுண்டருக்கு பாத்தியப்பட்ட இருபது செண்ட் இடம் அவர்களின் மகனாகிய மருதமுத்து அவர்களால் இன்னாருக்கு விற்கப்பட்டு அவர்களிடமிருந்து எங்களால் வாங்கப்பட்டு “பருந்து நகர்” என்று பிரிக்கப்பட்டு…

கணவன் படிக்க படிக்க ஏன் மயங்கி விழுகிறார் என்று புரியாமல் பார்த்தாள் மருதமுத்துவின் மனைவி!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *