ஆப்பிள் போனும்…நாரதரும்…

3
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: March 7, 2018
பார்வையிட்டோர்: 22,632 
 
 

திரிலோக சஞ்சாரியான நாரதர் ஆப்பிள் போனை கையில் வைத்து பார்த்து கொண்டே…. தம்பூராவை மீட்டாமலும், நாராயணா பெயரை மறந்தும்… சிவலோகத்தில் நுழைகிறார்.

பூதகணங்கள் உடனே ஓடிப்போய் சிவனிடம்..வத்தி வைத்து விடுகிறார்கள்.

சிவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வருகிறது.. வரட்டும்..வரட்டும் பார்த்து கொள்ளலாம் என்று உர்ரென்று உறும..பார்வதியோ சற்றே மிரள்கிறார்.

சிவனின் அருகிலே வந்தும்..ஆப்பிள் போனை பார்த்து கொண்டு சற்று நிலைதடுமாறுகிறார்.

”என்ன நாரதரே, பூலோகத்தில்தான் மக்கள் ஸ்மார்ட் போனும் கையுமாய் அலைகிறார்கள். நீரும் மாறி விட்டாயா என்ன ?

”ஏன் நீ வழக்கமாய் என் மைத்துனர் புகழைப் பாடாமல் இருக்கிறாய் மறந்து விட்டாயா? கோபிக்கிறார்.

”சிவ..சிவ… நாராயணா..நாராயணா. அப்படியெல்லாம் இல்லை.

நான் அமெசான் ஷாப்பில் ஒரு புத்தம்புதிய தம்பூரா வாங்கினேன். அதற்கு பரிசாக ஆப்பிள் போன் ஆபர் இலவசமாக வழங்கினார்கள்.

எனக்கு தம்பூராவைத் தவிர வேறு எதையும் கையாளத் தெரியாதே! ஆதலால்…. இந்த ஆப்பிள் போனை…. ஒங்களுக்கு தரலாம் என்று கொண்டு வந்திருக்கிறேன்.

”நாரதா ! மறுபடியும் ஒரு திருவிளையாடலா? ஏற்கனவே ஒரு மாம்பழத்தைக் கொடுத்து குடும்பத்தை இரண்டாக்கி விட்டாய். இப்போது ஆப்பிள் போன் வடிவில் கலகத்தை ஆரம்பித்து விட்டாய்..நடத்து…நடத்து… எல்லாம் அவன் செயல் என்று ஈசனே ஆகாயத்தை பார்க்கிறார்.

”தேவி, எங்கே நம் பிள்ளைகள். அவர்களுக்கு கொடுத்து விடலாம்.

”அதெப்படி ? ஒரு ஆப்பிள் போனை இருவருக்குமா? சண்டை வருமல்லவா?

அப்படியென்றால் போட்டி வைத்து விடலாம்”

மறுபடியும் உங்கள் திருவிளையாடலை ஆரம்பித்து விட்டீர்களா?

கணேசனும், முருகனும் வந்து சேர்ந்தார்கள்.

”கணேசா !, முருகா, உங்களில் இந்த ஆப்பிள் போன பெறுவதற்கு போட்டி. வெற்றி பெறுபவர்கள் பெற்றுக் கொள்ளலாம்

”போட்டி என்னவென்றால் அருமையான இயற்கையான எழில் கொஞ்சும் காட்சிகளை வண்ணப்படமாக கண்முன்னால் நிறுத்த வேண்டும்.

”இதோ ! ஒரு நொடியில்…. விர்ரென்று முருகன் மயிலில் பறக்க… கணேசனோ… ஆப்பிள் போனை வாங்கி உட்கார்ந்த இடத்திலேயே.. கூகுள் பிளே ஸ்டோரில் பிக்ஸர்ஸ் அப்ளிகேஷனை டவுன்லோடு செய்து விட்டு ..”தந்தையே இதோ நீங்கள் கேட்ட இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் என்று காண்பிக்கிறார்.

”பலே..! பலே !” இந்தா ஆப்பிள் போன் உனக்குத்தான்” என்று வழங்குகிறார்.

மயில்மீது பறந்து திரிந்து இயற்கை எழில் காட்சிகளை தானே வரைந்து எடுத்துக் கொண்டு வந்து… ”தந்தையே, இதோ எழில்மிகு காட்சிகள்” என்று காண்பிக்கிறார்.

”முருகா, இந்த முறையும் கோட்டை விட்டு விட்டாயே!, ஏற்கனவே கணேசன் ஆப்பிள் போனை பரிசாக பெற்றுக் கொண்டான்.

”தந்தையே ! ஏற்கனவே மாம்பழம் பெறும் போட்டியிலும் என்னை ஏமாற்றி விட்டீர்கள் இப்போது ஆப்பிள் போனிலும் அதே ஏமாற்றம் அளித்து விட்டீர்கள்.

எனக்கென்று ஒரு டிஜிட்டல் உலகம் ! என நிர்மாணித்து கொள்கிறேன். வேண்டுமானால் நீங்கள் வந்து என்னைப் பாருங்கள்”சுருக்கென்று மயில் மீது பறந்து விடுகிறார்.

”ஐயனே, மறுபடியும் என் பிள்ளையை பிரித்து விட்டீர்கள்”

நானா பிரித்தேன். அவன் அவசரக்காரனாக இருக்கிறான்.

கணேசன் நின்று நிதானமாக ஒரு பிரச்சினையை எப்படி கையாள்வது என யோசித்து செயல்படுகிறான். உன் இளைய பிள்ளையோ யோசிக்காமல் சட்டென்று முடிவெடுத்து …. கோபத்தில் வெளியேறுகிறான். இதில் என் தவறு என்ன இருக்கிறது.

இருந்தாலும் நீங்கள் செய்வது பாரபட்சமான செயலாக உள்ளது. வாருங்கள் அவனின் இருப்பிடத்திற்கு சென்று ஆறுதல் படுத்துவோம். என்றார் பார்வதி .

”வேண்டாம் தேவி, இப்போதே போனால்… அவனின் கோபம் மட்டுப்படுத்த முடியாது. முதலில் யாராவது தமிழ் புலமை வாய்ந்தவர்களை அனுப்பி பேசி பார்ப்போம்.

ஔவைப் பாட்டியும் இல்லை… வேறு யாரை அனுப்பி வைக்கலாம் என்று யோசிக்கையில்… நாரதரே… தென்னாடு சிவனே போற்றி… பூலோகத்தில் இப்போதெல்லாம் கவிஞர்களும்..புலவர்களும் குறைந்து விட்டார்கள். கவிதை எழுதுவதற்கும் கணினியில் மென்பொருள் தயாரித்து விட்டார்களாம். அப்படி ஒருவர் இருக்கிறார். அவர் அகிலன். அவரை அனுப்பி வைக்கலாம்.

அகிலனை தேடிக்கண்டுபிடித்து முருகனின் இருப்பிடம் நோக்கி அனுப்புகின்றனர்.

முருகன், ஒரு மலைமீது அமர்ந்து கொண்டிருக்கிறார்.

”முருகா ! தமிழே நீதான், உன்னை எப்படி நான் புகழ்வேன் என்று தெரியவில்லை !

எனக்கு கணினி மொழி தெரியும் உனக்கு தெரியுமா ?

“உறா..உறா.உறா! தமிழ்க்கடவுளாகிய எனக்கே சோதனையா?

இல்லை முருகா ! இப்போதெல்லாம், கணினிதான் பாடல் எழுதுவதற்கும் பயன்படுகிறது.

சரி எங்கே பாடிக் காட்டு என்கிறார் முருகன்.

அகிலன் பாடுகிறார்.

பைட்டிலே மொழி பிறந்த து. பைட்டிலே வளர்ந்த து.

மெகா பைட்டாக வளர்ந்து நிற்குது. என்றார்.

என்ன அகிலா ! ஒரே பைட்டாக இருக்கிறதே!

முருகா அது சினிமா பைட் இல்லை. கணினி பைட் என்று விளக்கமளிக்கிறார்.

முருகா ! நான் கற்றுத் தருகிறேன். என்று கணினியின் நுணுக்கங்களைக் கற்றுக் கொடுக்கிறார் அகிலன்.

ஒரு வருடத்திற்கு பிறகு…. முருகனின் ராஜ்யத்திற்குள்…. தந்தை சிவனும், பார்வதியும் உள்ளே நுழைய …. நுழைவாயிலில்…. கணினி பொருத்தப்பட்டு, இருவரின் கைரேகைகள் பதியப்படுகின்றன.

அவர்களின் விழிகளின் ரேகைகளும் காமிராக் கண்களால் அளவெடுக்கப்படுகின்றன.

சிவனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. நெற்றிக்கண்ணை திறக்குமளவிற்கு வேகம். ஒரு நிமிடம் யோசித்து…. சுதாரித்து கொள்கிறார்.

உள்ளே எங்கு பார்த்தாலும், கணினியின் ஆதிக்கமாய் இருக்கிறது.

காலை முதல் இரவு வரை கணினி கட்டளைக்கேற்ப நடைமுறைகள் செயலாக்கப்படுகின்றன.

”என்ன இது முருகா ! என்று சிவன் கேட்க” எல்லாம் நீங்கள் செய்த தால் வந்த து. ஒரு ஆப்பிள் போனைக் கொடுத்திருந்தால், என் சகோதரன் போலவே உங்களுடனே இருந்திருப்பேன். ஆனால், இப்போது தனி ராஜ்யம் அமைத்து விட்டேன்.

ராஜ்யங்களைப் பரவலாக்கி அங்காங்கே குன்றுகள் தோறும் கணினிகள் நிறுவி பக்தர்களின் வேண்டுகோளையும் நிறைவேற்றி வருகிறேன்.

அதே போல என்னை வழிபடும் சித்தர் பெருமகனார்களுக்கும், கணினி மொழியினை கற்பிக்க ஏற்பாடு செய்து வருகிறேன்.

விரைவில்… அது உலகப் புகழ்பெற்று விளங்கும் என்கிறார் முருகன்.

ஒரு பிள்ளை அப்படி ஒரு பிள்ளை இப்படி அலுத்து கொண்டு தன் இருப்பிடமான கைலாயத்திற்கு செல்ல புறப்படும் போது… இந்தாருங்கள் தந்தையே, இந்த சிறிய பொறி தங்களுக்கு வழிகாட்டும் என்று கொடுக்கிறார்.

அதைப் பார்த்து கொண்டே நடக்கையில்…”நாராயணா.. குரல் கேட்கிறது.

”என்ன ஐயனே ! தங்களுக்கும் ஸ்மார்ட் போன் மோகம் பிடித்து விட்டதா? அதிகம் பார்க்காதீர்கள் கண் கெட்டு விடும். அதிலும் நெற்றிக் கண் கெட்டு விட்டால் அதர்மத்தை அழிக்க என் செய்வீர்! என்கிறார்.

”அப்படியா ! இந்தா இதைப் பிடி” என்று நாரதரிடம் தருகிறார்.

நாரதர் அதை எடுத்து கொண்டு விஷ்ணுவின் இருப்பிடம் நோக்கி செல்கிறார்.

”’ஞானக்கண்களால் அறிந்த விஷ்ணு, மாய வித்தை மூலம் மறைந்து கொள்கிறார்.

”நாரதருக்கு… அந்த பொறியை வைத்துக்கொண்டு ”பொறியில் சிக்கிய எலியாக தவித்துக் கொண்டிருக்கிறார்”

Print Friendly, PDF & Email
இயற் பெயர்: கே.அசோகன் (அசோகன் குப்புசாமி)தந்தை பெயர்: த.குப்புசாமிபிறந்த நாள்: 13 Decemberதொழில்: தமிழக அரசு பணி (2013 பணி நிறைவு)நிரந்தர இருப்பிடம்: மனை எண்-சி-374 என்.ஜி.ஜி.ஓ நகர், சேலை, திருவள்ளுர் 631 203தற்காலிக முகவரி: சி-20 சம்பக், ஐ.டி.சி குடியிருப்பு, சாரபாக்கா கிராமம், கம்மம் மாவட்டம், தெலுங்கானா மாநிலம் பின் -507 208தொடர்பு எண்: 9047896065மனைவி பெயர்: அ. சகுந்தலை –குடும்ப தலைவிமகன் பெயர்: அ.ராஜ்மோகன் இலக்கிய பணி:தாய்மண்…மேலும் படிக்க...

3 thoughts on “ஆப்பிள் போனும்…நாரதரும்…

  1. சிறுகதைகளை தொடர்ந்து பதிவிட்டு ஊக்கப்படுத்தி வரும் தளத்திற்கும், ஆசிரியருக்கும் மனமார்ந்த நன்றிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *