(1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“சீ! கய்தே, இன்னாடா அப்படிப் பாக்கறே, எரிச்சுடற மாதிரி. இந்த அம்மாக்கண்ணுகிட்டே வெச்சுக்காதே உன் வேலையெல்லாம். ஆப்பக்கரண்டியாலேயே ரெண்டு போட்டு டுவேன்,ஆமாம். நெதம் நெதம் வந்து நாஷ்டா பண்ணிட் டுப் போனியே, அதைப்போல பாக்கியைக் குடுக்க புத்தி வாணாம்? அறிவு கெட்டவனே! பெரிய ஆம்பிளையாட்டமா மீசையை வச்சுக்கினு வந்துட்டான். வெக்கமில்லேடா உனக்கு?”
“மோவ், தாஸ்தி பேசாத மோவ்! பாக்கி வேணும்னா மரியாதையாக் கேட்டு வாங்கிக்கோ. நான் யார் தெரியுமா?”
“நீ யாராயிருந்தா எனக்கு இன்னாடா! பெரிய கவுணரா நீ! கயிதெ கெட்ட கேட்டுக்கு மருவாதையாம் மருவாதை! எத்தினி நாளாச்சு! மூஞ்சியைப் பாரு! துட்டை வச்சுட்டு ரிஸ்காவை இசுடா! கண் மறைவாவா சுத்திக்கினுக் கீறே?”
யாருக்கோ சவாரி போய்க்கொண்டிருந்தபோது அம்மாக்கண்ணுவின் திருஷ்டியில் எக்கச்சக்கமாக அகப் பட்டுக்கொண்டான் அந்த ரிக்ஷாக்காரன்! அம்மாக்கண்ணு குறுக்கே வந்து ரிக்ஷாவை மறித்து மடக்கிவிட்டாள். நாலு பேருக்கு முன்னால் அவள் தன்னை அவமானப்படுத்தியதும் அவன் கோபம் தாங்காமல் தன் இடுப்பில் செருகியிருந்த கத்தியை எடுத்துக் காண்பித்தான்.
“டேய், உன் கத்திக்குப் பயந்தவ இல்லேடா இந்த அம்மாக்கண்ணு. கயிதே! கஸ்மாலம்! காசைக் கீயே வெச் சுட்டுப் போவப் போறயா, இல்லாட்டி உன் தலையிலே நெருப்பை அள்ளிப் போடட்டுமா, அடத் தூ!” என்று வெற்றிலைச் சாற்றை அவன் மீது துப்பினாள்.
இதற்குள் அந்த ரிக்ஷாவைச் சுற்றிலும் பெரிய கூட்டம் கூடிவிடவே, வண்டிப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற் பட்டது. உடனே, போலீசார் வந்து அம்மாக்கண்ணுவைச் சமாதானப்படுத்தி ரிக்ஷாக்காரனிடமிருந்த பணத்தை வாங்கி அவளிடம் கொடுத்தனர். அப்புறம்தான் ரிக்ஷாவைப் போகவிட்டாள் அவள்.
கூவம் நதி வாராவதிக்கருகில் ஒரு கட்டைத்தொட்டி, அந்தக் கட்டைத் தொட்டிக்குப் பக்கத்திலுள்ள மரத்தின் கீழேதான் அவள் ஆப்பக்கடை போட்டிருந்தாள். எதிரில் ஒரு மலையாளத்தார் டீக்கடை. அதற்குப் பக்கத்தில் ‘வாடகை ரிக்ஷாக்கள் நிற்குமிடம்’ என்று ஒரு போர்டு. அந்தப் போர்டின் கீழ் நாலைந்து எருமை மாடுகள் படுத்துக் கொண்டிருக்கும்.
பொழுது விடிந்தால், அந்தப் பேட்டையிலுள்ள போலீஸ்காரர்கள், கைவண்டிக்காரர்கள், ஏழைகள், பிச்சைக் காரர்கள் எல்லோரும் ‘நாஷ்டா’வுக்கு அம்மாக்கண்ணுவின் கடையைத்தான் நாடி வருவார்கள்.
புகையப் புகைய அவள் சுட்டுப் போடும் ஆப்பங்களைச் சாப்பிட்டுவிட்டுச் சிலபேர் காசு கொடுப்பார்கள். சில பேர் கடன் சொல்லிவிட்டுப் போவார்கள். ஆனால், அம்மாக் கண்ணுவை ஒருவரும் ஏமாற்ற முடியாது. நாஷ்டா பண் ணுகிற வேளையில் ஊர் அக்கப்போரெல்லாம் அங்கே பேசப் படும். அம்மாக்கண்ணுவும் அவ்வப்போது வெற்றிலைச் சாற்றைத் துப்பிவிட்டு அவர்கள் பேச்சில் கலந்து கொள்வாள்.
போலீஸ்காரர்கள், கார்ப்பரேஷன் சுகாதார இலாகா சிப்பந்திகள் யாருமே அவளிடம் கொஞ்சம். மரியாதையாகத் தான் பேசுவார்கள். டாணாக்காரர்கள் யாராவது வந்தால், “இன்னா பல்லைக் காட்டறே? ஓசி நாஷ்டாவா?” என்பாள்.
கார்ப்பரேஷன் ஆள் வந்தால், “இங்கே ஓசிலே துண் ணுட்டுப் போயிடு. அங்கே போய் ஆப்பத்திலே ஈ மொய்க் குதுன்னு கேசு எழுதிடு. ஏன்யா! ஈ மொய்க்கிற ஆப்பத்தை நீ மட்டும் துண்ணலாமாய்யா?” என்று கேட்பாள்.
அம்மாக்கண்ணு தன் கடைக்கு வரும் வாடிக்கைக்காரர் களையெல்லாம் சொந்தக் குடும்பத்தாரைப் போலவே நடத்துவாள்.
வெளிப்பார்வைக்கு அவள் சற்றுக் கடுமையாத் தோன்றினாலும் இளகிய மனசு படைத்தவள். கஷ்டப்படுகிறவர்களுக்குத் தன்னை மீறியும் உபகாரம் செய்யும் குணம் அவளிடம் உண்டு.
“பாக்கி கொடுக்க முடியல்லேன்னா அதுக்காக ஏண்டா தலை தப்பிச்சுக்கினு திரியறே? பணம் கெடைக்கறப்போ கொடுக்கறது. நான் மாட்டேன்னா சொல்றேன்? இதுக்காவ ‘நாஷ்டா’பண்ண வரதையே நிறுத்திடறதா? ஒழுங்கா வந்து சாப்பிட்டுக்கினு இரு ” என்று சிலரிடம் அன்பொழுகப் பேசி அனுப்புவாள். அவளுக்கும் அடிக்கடி பணமுடை ஏற்படுவ துண்டு. அம்மாதிரி சமயங்களில் டீக்கடை மலையாளத் தாரிடமோ அல்லது கட்டைத்தொட்டி நாடாரிடமோ முப்பது நாற்பது கைமாற்றாக வாங்கிக் கொள்வாள். சொல்கிற ‘கெடு வில் அவர்களுக்குப் பணத்தைத் திருப்பியும் பணத்தைத் திருப்பியும் கொடுத்து விடுவாள். அப்படி முடியாத சமயங்களில் அவள் தன் காதி லுள்ள கம்மலைக் கழற்றிக்கொண்டுபோய் மார்வாடிக்கடை யில் ‘குதுவு’ வைத்தாவது பணத்தைத் திருப்பிக் கொடுக்கத் தயங்கமாட்டாள்.
“இன்னா நாடாரே, கொஞ்சம் கடையைப் பார்த்துக்க. கஞ்சித்தொட்டி ஆசுபத்திரி வரைக்கும் போயிட்டு வந்துடறேன்” என்பாள் அம்மாக்கண்ணு.
“ஆசுபத்திரியிலே இன்னாம்மா வேலை உனக்கு” என்பார் நாடார்.
“பிச்சைக்கார முருவன் இல்லே, முருவன் அதாம்பா இங்கே நெதைக்கும் வந்து ஆப்பம் சாப்பிடுவானே, அவன்.”
“ஆமாம், அவனுக்கு இன்னா?” என்பார் நாடார்.
“அவன் மேலே கார் மோதிடுச்சாம் பாவம்! ஆசுபத்திரி யிலே படுத்திருக்கானாம். அவனைப் போய்ப் பாத்துட்டு ரெண்டு ஆப்பத்தையும் குடுத்துட்டு வந்துடறேன்” என்பாள் அம்மாக் கண்ணு.
“சரி, கொஞ்சம் பொயலை இருந்தா குடுத்துட்டுப் போ என்பார் நாடார்.
“உக்கும், ஈர வெறவெல்லாம் வித்து துட்டை முடி போட்டு வச்சுக்கோ” என்று சொல்லிக்கொண்டே தன் இடுப் பிலுள்ள சுருக்குப் பையைத் திறந்து புகையிலையை எடுத்துக் கொடுத்துவிட்டுப் போவாள்.
அம்மாக்கண்ணுவுக்குக் கொஞ்சம் சினிமாப் பயித்தியமும் உண்டு. மலையாளத்தார் கடை மீது வாரா வாரம் சினிமா விளம்பர போர்டுகள் கொண்டு வந்து வைப்பதைப் பார்த்துக் கொண்டே இருப்பாள். அதற்காக மலையாளத்தாருக்கு ‘போர்டு பாஸ்’ வரும் என்பதும் அவளுக்குத் தெரியும்.
“இன்னா மலையாளம்! சிவாஜி படம் வந்துருக்குதாமே? சினிமாவுக்கு ஒரு பாஸ் குடேன். பாத்துட்டு வரேன்” என்று மலையாளத்தாரிடம் பாஸ் கேட்டு வாங்கிக்கொண்டு அவ்வப் போது சினிமாவுக்குப் போய் வந்துவிடுவாள்!
– கேரக்டர், 9வது பதிப்பு: 1997, சாவி பப்ளிகேஷன்ஸ், சென்னை.