ஒரு ஊரில் ஆனைக்கால் வியாதி கொண்ட ஒருவன் பழக்கடை வைத்திருந்தான். அந்தத் தெருவின் வழியாகச் சில பிள்ளைகள் அடிக்கடி போவதுண்டு போகும் போதெல்லாம் அவர்களுக்கு அந்தப் பழங்களில் சிலவற்றை எடுத்துக் கொண்டுபோக வேண்டுமென்ற விருப்பம் உண்டாயிற்று. கிட்டப் போனால் ஆனைக்கால்காரன் தனது பிரமாண்டமான காலைக் காட்டிப் ”பயல்களே, கூடையிலே கை வைத்தால் உதைப்பேன். ஜாக்கிரதை!” என்பான்.
”சாதாரணக் காலால் அடித்தால் கூட எவ்வளவோ நோகிறதே, இந்த ஆனைக்காலால் அடி பட்டால் நாம் செத்தே போவோம்” என்று பயந்து பிள்ளைகள் ஓடி விடுவார்கள்.
இப்படியிருக்கையில் ஒரு நாள் கடைக்காரன் பராக்காக இருக்கும் சமயம் பார்த்து, ஒரு பையன் மெல்லப் போய்க் கூடையிலிருந்து ஒரு பழத்தைக் கையிலெடுத்தான். இதற்குள் கடைக்காரன் திரும்பிப் பார்த்து, தனது பெரிய காலை சிரமத்துடன் தூக்கிப் பையனை ஒரு அடி அடித்தான். பஞ்சுத் தலையணையால் அடித்ததுபோலே அடி மெத்தென்று விழுந்தது. பையன் கலகலவென்று சிரித்துத் தெரு முனையிலே இருந்த தனது நண்பர்களைக் கூவி, ”அடே, எல்லோரும் வாருங்களடா! வெறும் சதை; எலும்பில்லை” என்றான் மனிதர்களெல்லாரும் பல விஷயங்களில் குழந்தைகளைப் போலவே காணப்படுகிறார்கள். ”வெறுஞ் சதை”யாக இருக்கும் கஷ்டங்களைத் தூரத்திலிருந்து ”எலும்புள்ள” கஷ்டங்களாக நினைத்துப் பிறர் அவதிப் படுவதை நாம் பார்த்ததில்லையா? நாம் அங்ஙனம் அவதிப்பட்டதில்லையா?
– கதைக் கொத்து (சிறுகதை தொகுப்பு), முதற் பதிப்பு:1967, பாரதி பிரசுராலயம், சென்னை.
நன்றி: https://www.projectmadurai.org