(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
தையற்காரன் கடையில் சும்மா இருக்க முடியாது என்பது என் தீர்மானம், தையற்கடை ஊசியும், நூலும் கத்திரியும், கஜக்கோலும் இதற்கு வடிக்கட்டின சாட்சி சர்க்கஸ்காரன் போடும் பல்டியும், வளையமும் இவைகளிடம் பேர் வாங்குமா? ஆனால், அநேக முடிவுகளைப் போலவே இதுவும் முடிந்திருக்கிறது – பொய்யாக, அதனால் என்ன முடிவா பெரிது? ‘பாலத்திலே மோத, பஸ்ஸுக்கு வெள்ளெழுத்தா’ என்பார்களே, அது மாதிரி நானே தையற் கடையில் சும்மா இருந்திருக்கிறேன் என்றால் அப்புறம் சொல் வானேன்! தையல் மிஷினை ஓட்டும் பையன், ‘சா’ குடிக்கப் போனான். நான் பெஞ்சில் சாய்ந்து கொண்டிருந்தேன் மெஷின்காரன் பெடலை அழுத்துவதுபோல், மெஷின் இல்லாத போதும் ஆகாசத் தையல் போடுகிறதே நம்முடைய கால்கள், அந்தக் கால்கள் கூட அப்பொழுது சும்மாதான் இருந்தன. ‘சா’ குடித்து விட்டு வந்த ஆள், “தூங்கிட்டியா?” என்று கேட்டுக்கொண்டே கடைக்குள் நுழைந்தான்.
இதற்குப் பெயரா தூக்கம்-சும்மா படுத்துக்கொண்டிருப் பதற்கு? காதில் மனது லயித்திருந்ததால் கண்ணைப் பற்றித் தெளிவாகச் சொல்ல முடியாது. திறந்துதானிருக்கும். மனது ஓர் இந்திரியத்தில் லயித்தால், பாக்கி இந்திரியங்களுடன் எந்தவிதமான உறவு-உறவு-தொந்தரவு…
…அதை அப்புறம் பார்ப்போம். ஒரு பாட்டுக் கேட்டது:
‘பம்பாயி சேட்டு ஒத்தன்,
பட்ணக்கரை வந்தடைஞ்சான்,
ஆத்தி மரம் போலுயரம்;
இடையன் பூச்சி போலே கனம்.
பல் இல்லாத தலையைத் தூக்கிப்
பத்துப் பாரம் பாகை வெச்சான்.
‘பேபாரம்’ செய்ய ஜோக்கா,
பாகல்புரம் வந்தடைஞ்சான்.
கையிலே விரல் கொணாந்து,
லேவா தேவி ஷாப்புப் போட்டான்.
அஞ்சு வருசம் ஆயிப் போச்சு;
ஆறு லச்சம் சேட்டுக்காச்சு, ,
கிராப்புத் தலை நெருக்கு வெட்டு;
வாய் முழுதும் தங்கப் பல்லு.
ஆத்திக் கழி சேட்டு, இப்போ,
அடியோடே மாறிப் போனான்.
சேட் இருக்கார் மெத்தையிலே,
குடுத்தாப் போட்டக் குதிரை போல்,
ராமுழுதும் தூக்கமில்லெ.
பேபாரத் தொல்லை ரொம்ப,
குடுத்த இடம் வர்ரதில்லே;
வர்ரபேரு உடறதில்லே.
நவுகிரீங்க எட்டிருந்தும்,
தம்பிடித் தூக்கம் வர்ரானில்லே.
தொந்தரவு ஆ! ஹும்! ரொம்பத் தொந்தரவு
(நவுகிரீங்கவேலைக் காரர்கள்)
‘அடடா!’ என்ன பாட்டு, என்ன பாட்டு’ என்று நான் அகமகிழ்ந்து கொண்டிருக்கும் பொழுதே, சிவப்பாய் வெல்வெட் சட்டை போட்ட உருண்டையான ஒரு பிராணி யும், முழங்கால் மட்டும் வேஷ்டி கட்டிய ஒருவனும் திடீரென்று எதிர்ப்பட்டு நமஸ்காரம் செய்தார்கள். சிவப்புப் பிராணியைக் கண்டு எனக்கு வெறுப்பு உண்டான போதிலும், பொறுமையுடன் “நமஸ்காரத்துக்கு என்ன அவசியம் வந்தது?” என்று ஆளைக் கேட்டேன்.
“ஒன்றுமில்லை. ஒரு நியாயம் சொல்லொணுமுங்க”
“அதுக்கென்ன, சொன்னால் போச்சு. ஆனால், அந்த சிவப்புப் பிராணி யார்-மனுஷனாகத் தெரியவில்லையே?”
”ஓ! அதுவா? தெரியாதா உங்களுக்கு?”
“தெரியாதே. அவர் இருப்பிடம்?’’
“சுவர் இடுக்கு, தலையணைச் சந்து கட்டில் கால் எங்கே வேணாலும் இருப்பார். இவர் பெயர் திருமூடையார்.”
“சரிதான், சரிதான். வழக்கு ரொம்ப விசித்திரமாய் இருக்கும்போல் தோன்றுகிறதே.”
“அப்படியேதானுங்க.’
“சொல்லுங்கோ’-
“நம்ப சேட் இருக்காரே – இப்பொ பாடினாங்கலே அவரு.”
“அவரா பாடினது?”
“இல்லிங்க, அவரைச் சுத்தி,”
“சுத்தியா?”
“சுத்தி, உளி இல்லிங்க. எனக்குப் படிப்புச் சரி இல்லே வார்த்தை கோணுது. அவரைப் பத்திங்க.”
“சரிதான். சரிதான்.”
“அவர் அவ்வளவு கஷ்டப்பட்டு, பெரிய மனிசராய் மெத்தை ஊட்டுலே கலசம் வெச்சு, கட்டில் மெத்தை கொசுவலை போட்டுப் படுத்து, தூங்கப் பாக்குறாரு. நாங்க தூக்கற ஆளுங்க.”
“அட சட்! யாரைடா?”
”கோவிச்சுக்காதீங்க. தூங்கற ஆளுங்க.”
‘‘அட போடா! எல்லாரும்தான் தூங்குகிறார்கள்.’
“அதுதானே இல்லீங்க, சாமி, சேட்டுக்குத் தூக்கம் வந்தா, எங்க நாலுபேருக்கும் வேலை போயிடும், சாமி. அவரைத் தூங்க வைக்கிற ஆளுங்க நாங்க. ஒத்தரு ஒடம்பு பிடிக்கிற ஆளு, ஒத்தரு, பங்கா போடறவரு. ஒத்தரு ஹக்கா ஜோடிக்கிறவரு. ஒத்தரு எல்லாத்துக்கும் மேல் பார்வை. அப்படியும் அந்தச் சேட்டுக்கு ஒரு தம்பிடித் தூக்கம் கூட வர்றதில்லை. பீப்பாய் மாதிரி சேட்டு உருள்றாரு. ஒரு கண் தூங்கிச்சானாலும், ஒரு ரூபாய் சம்பளம் ஒசரும். ஆனால், இந்தப் படுபாவி, அநியாயக்காரன்-திருமூடன்-” “நிறுத்து, நியாயமாய்ப் பேசு” என்று குறுக்கிட்டது அந்தப் பிராணி. அவன் கிடக்கட்டும். நீதான் சொல்லேன்.”
“கேளுங்க. அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க, சேட்டுக்கு வவுத்தப் பசிச்சா ஹல்வா, பூரி, சப்பாத்தி திங்கிறாரு அல்ல?; அதேமாதிரி பணத்துக்குப் பசிச்சா, வட்டி, தவணை, முன்வட்டி, அபராத இரட்டைப் பிள்ளை வட்டி, மகிமை இதேல்லாம் வாங்கிப் போட்றார் அல்ல? எங்க வவுத்துப் பகிக்கு, அவர் கொடுப்பாரா? இல்லே நீங்கதான் குடுப்பீங் களா?”
“அதெப்படி முடியும்? எனக்குக் கண்டு மிஞ்சினால் தானே!”
“அது போகட்டும். இது எங்க தலை எழுத்து! எங்களைப் படைச்ச ஆண்டவன் ‘பாயின் கீழ் படுத்துப் பசியாறுன்னு மந்திரம் படிச்சாரு. எங்க சாதியிலே எது கெட்டாலும், இதை விடலிங்க. இதுக்காக இந்த ஆளுங்க கும்பல் போட்டு, கட்டிலைப் பிரிச்சு, மண்எண்ணெய் கொட்டி, சேட் மாடியை ரணகளமாக்கிட்டானுங்க. அப்பொ எங்க பெரியவரு ஒத்தர் இருக்கறாங்க, அவரு சொன்னாரு; சேட்டு ரத்தம் குறையறதூன்னு கூப்பாடு போடுறீங்களே! அவரும் எங்க சாதிதான். முதல்நாள் அவங்களைச் சாமி படைச்சாரு.
பாயின் கீழே ‘பாண்டு லேபில்’ பதுக்கி வெச்சுக்கோ; முதலெ வச்சு வட்டியைத் தின்னு உசுரு புை சுக்கோ. இன்னு மந்திரம் படைச்சாரு.
“நாங்க சொட்டு ரத்தம் கறக்கறோம்; இவங்க உயிரையே கறந்தூடறாங்க. ராவணனே கலங்கினானாமே- கடக் வாங்கிட்டு. கொழுத்தபேர், கொஞ்சம் ரத்தம் தானம் செய்தால் என்ன பாவம்? அவங்களைக் கொழுக்க வைச்சா இவங்களுக்கு என்ன புண்ணியம்? ஒரு அம்மன் இவங்களுக்குக் கூட உண்டா? நியாயந்தானே?”
“ஆமாம். நியாயந்தான்.”
“அப்புறம் நாளாச்சு. நாலு மஞ்சள் கடுதா சிவந்திச் சேட் ரொம்பச் சிரிச்சாரு. ஏதோ ஊட்டுலே நிறைய கலியாணமுன்னு நெனைச்சுக்கிட்டோம். ஆனால் அ அழுகையாம். பணத்திலே கொஞ்சம் கொஞ்சம் பாம் தின்னுடுச்சாம். அப்புறம் பாருங்களேன். அப்புறம் தொந்தி தண்ணிபட்ட சக்கரை மாதிரி கரைஞ்சு போச்சு படுக்கை இல்லே; கொசுவலை இல்லே ; ஒண்ணுமில் ே தூக்கம் என்னாத்துக்கின்னுட்டு, கடுதாசுங் கையுமா உக்காந்தே போயிருட்டாரு. உக்கார்ரத்துக்கு சாக்கியாக எலெக்டிரிக் வெளிச்சம் ராமுழுக்க போட்டுகிட்டாரு இருட்டுப் பெண்ணைக் கட்டிக்கிட்டவங்க வெளிச்சத்திலே வருவாங்களா? எங்க கட்டிலும் போச்சு; எங்க இருட்டும் போச்சு; சேட் படுக்கையிலே உருள்ரதும் போச்சு; மஞ்சள் கடுதாசு சேட் வர்யிலே மண்ணைப் போட்டிடுச்சு. சேட் எங்க வாயிலே மண்னைப் போட்டுட்டாரு. அதுக்காக நாங்க செத்துப் போறதா? வேலைக்காரங்க மீசையிலே வெள்ளைக் குதிரை மேயறப்போ, அல்லாட்டி பொன்னு சதிர்க் கச்சேரியிலே அவங்க சொக்கி விழுந்திருக்கிறப்போ அங்கே இங்கே வேலைக்காரங்க தூங்கி விழுறப்போ அவங்ககிட்டெ போறோம். ஒரு வாய் ரத்தம்; அவ்வளவுதான். அதுக் குள்ளே இந்த ஆளுங்க ‘கூ, கொள்ளை, கொலை! இங்கறாங்க. சேட்டைக்கடிச்சா நியாயமாம்; சேட் ஊட்டு ஆளைக்கடிச்சா அநியாயமாம். சேட்டைக் கேளுங்கோ; வேலைக்கார சோப் பேறிங்களைக் கடிச்சா நியாயம் பாரு; சேட்டைப் கடிச்சாப் பரவம் பாரு. அதானே உலகம்! இதைத்தான் இந்த ஆளு அநியாயம் என்கிறாரு?”
வழக்கின் விசித்திரத்திலே தீர்ப்புச் சொல்ல எனக்கு வாய் எழவில்லை.
“கூகூ! கொலை கொலை!” என்ற கூச்சல் திடீரெனக் கிளம்பிற்று. திரும்பிப் பார்த்தேன்.
“அயிஞ்சு போச்சுக் கிழவனாரே” என்று கூவிக் கொண்டே சிவப்பு சிப்பாய்களில் சிலர் ஓடிவந்து, வழக்குச் சொன்ன பிராணியிடம் முறையிட்டனர்.
“அநியாயம், அநியாயம்” என்றார் கிழவனார்.
“இதற்கும் சேர்த்து தீர்ப்புச் சொல்லவா?” என்றேன். கிழவனார் வாய் திறக்கவில்லை. சிப்பாய்கள் மட்டும் “சொல்லுங்களேன்” என்றனர்.
“நாம் ஒன்றை எடுத்துக் கொண்டால், மற்றொன்று நம்மை எடுத்துக் கொள்ளும். படுகிறவனுக்குக் கஷ்டம் தெரியும்; படுத்துகிறவன் நியாயம் கேட்பான். தெரிந்ததா? இதில் தொந்தரவு என்னவென்றால், ஒன்றில் படுகிறவன் மற்றொன்றில் படுத்துகிறவன்தான். சேட்டை நீங்கள் கடித்தால், நவுக்கிரிங்க உங்களை அடிக்கிறானுக. ஆகை யினாலேதான், நியாயம், அநியாயம், உறவு-தொந்தரவு, உறவு-தொந்தரவு…33
மனோதத்வ நுட்பங்களை முடிப்பதற்குள், ‘ஙொய்’ என்ற இசையோடு காற்றொன்று அடித்தது. என்னவென்று பார்த்தால் சில நுண்ணிய சிறகுகளும் ஊசிக் கால்களும் அறைக்குள் ஆவேசத்தோடு நுழைந்தன.
”எங்கே அந்தப் பயல்கள்?'”
“யார்?” என்றேன்.
“சிவப்புச் சிப்பாய்கள்?”
“இதோதான் இருக்கிறார்களே, தெரியவில்லை. ஆனால் கோபம் கண்ணை மறைக்கும் என்பது ஓர் உண் அது உங்கள் விஷயத்திலும்.”
”பொருந்தும் என்பதை ஆட்சேபிக்கவில்லை. ஆழு இவர்கள் செய்வது படுமோசம், தாங்கவில்லை.33
“ஓஹோ! வேறொரு வழக்கா? எங்கே, சொல்லுங்கள் “போட்டி போடலாமா? கூடாதா?”
“எதில்?”
“எதுவாயிருந்தாலென்ன; போட்டி பற்றித்தான் பேச்சு.”
“போடலாம்…ஊஹூம்… வந்து..கூடாது”
“அப்படிச் சொல்லுங்கோ. ஒருத்தன் முள் வா வியாபாரம் செய்தால், இன்னொருத்தனும் அதே வியாபாரம் செய்யணுமா?”
“எங்களைக் கடவுள் படைச்சபொழுது சொன்ன மந்தி போகல்லே.
கொசுவென்று உங்க பேரு;
கோணமூக்கு உங்க கத்தி.
‘ஙொய்’யென்று பாடிக் கிட்டு
பார்த்துக்குங்க வயித்துப் பாடு
இப்பொ எங்க தொழிலிலே இவங்க புதுசா நுழைஞ்சுடாங்க.
“அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லீங்களே.இவங் பொய் சொல்றாங்க. நாங்க பூமியிலே குகையிலே இருக்கோம்; இவங்க ஆகாசத்திலே இருக்காங்க. வியாபாரம் வேறே; இவங்களுது வேறே. இவுங்களுக்கு இருக்காப்போலே எங்களுக்கும் வவுறு இல்லியா? காணி யாச்சி கொண்டாடலாமா?”
“அப்படி இல்லீங்க. இவங்க போய் வெடுக்கினு கடிச்சப்புறம் ஆள் உசாராகி விடரானுங்க. குத்தவாளி யார் இன்னுகூடத் தெரியாமல் கொசுவலை இன்னு ஒரு பொறியை வைக்கிறாங்க. அப்புறம் எங்கள் பாடு என்ன ஆறது? அதனாலேதான், போட்டி கூடாது என்றேன்.’33
“விஷயம் அதில்லே. நமக்கு எதிரி நம்மிடமே இருக் கிறான். நாம் அழிவது நம்மாலேதான். வேட்டையிலே குறிவச்சு அடிக்கிறபொழுது தம்பட்டம் அடித்தால் என்ன ஆகும்? கொசுவின் பாட்டே கொசுக்களுக்கு எதிரி, அது மாத்திரமல்ல; எங்களுக்கும் இடைஞ்சலாகி விடுகிறது. இந்தத் தொல்லையை எல்லாம் உத்தேசித்துத்தான் நானும் போட்டியே கூடாது என்றேன்.”
“ஒரு விதத்திலே போட்டிகூட நிபாயம்தான். ஆனால், அதில் ஒரு நியாயம், கட்டுப்பாடு வேணும். நாங்கள் பாட்டுப்பாடி மனிதர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து விட்டே போகிறோம். இவர்களோ ரகசியமாய், திருட்டுத்தனமாய், மனிதர்களை அண்டு கிறார்கள். வியாபாரத்தில் திருட்டுத் தனம் உதவுமா?”
“ராத்திரியில் நடப்பதற்குத் திருட்டு என்று பெயர்; பகலில் நடப்பதற்கு வியாபாரம் என்று பெயர்.” என்று சமாதானம் கூறுனேன்.
“அப்படி என்றால் எல்லாமே நிபாயமாகிறது ”
“ஒவ்வொருவர் வயிற்றுப்பாட்டையும் நினைத்துக் கொண்டால், அவர் அவர்கள் செய்வதெல்லாம் நியாயமா யிருக்கும். ஆனால், உண்மைபான நிபாயம் எதுவென்றால், வயிற்றை மறந்து விவகாரம் செய்வதுதான்.”
“அது முடியுமா?”
“நான் பதில் சொல்வதற்குள், ‘ணக்’கென்று என் தலையில் ஒரு குட்டு விழுந்தது.
“நியாயமா?” என்றேன் வாய்விட்டு.
“’சா’ சாப்பிட்டு வருகிற நேரத்துக்குள்ளே நீ என்ன ஐயா, தையற்கடையிலே தூக்கம் போட்டுக்கிட்டு! இது நியாயமா?” என்றான் கடைக்காரன். நானா தூங்கினேன் இது என்ன அநியாயம்?
– மனநிழல் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: மார்ச் 1977, எழுத்து பிரசுரம், சென்னை.