அலமேலு கோலம் போடுகிறாள்

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: June 7, 2016
பார்வையிட்டோர்: 31,108 
 
 

காட்சி: 1

(பாத்திரங்கள்: கோபாலன், அவர் மனைவி அலமேலு . நேரம்: சனிக்கிழமை காலை)

அலமேலு (கையில் ஒரு பத்திரிகையைப் பிரித்தபடி):- ஏங்கறேன்! இங்க சித்த வாங்கன்றேன்.

கோபாலன் (தலையில் எண்ணை வைத்துத் தேய்த்தபடி):- ஏண்டி, இன்னிக்குக் காலங்கார்த்த்லே, பேப்பர்காரன் அந்தண்டை போறத்துக்குள்ளாற, தெருவிலேர்ந்து ஏங்க ஆரம்பிச்சுட்டே?

அலமேலு:- நான் ஒண்ணும் ஏங்கலை. உங்களைத்தான் கூப்பிட்டேன். இங்க பாரத்தீங்களா? இந்த பத்திரிகையிலே ஒரு கோலப் போட்டி போட்டிருக்கு. நீங்க சட்டு புட்டுன்னு ஸ்நானத்தைப் பண்ணிட்டு, கடைக்குப் போய் கலர்ப் பொடியெல்லாம் வாங்கிட்டு வந்துடுங்கன்றேன்.

(பத்திரிகையை அவரிடம் காட்டுகிறாள்.)

கோபாலன்:- உனக்கெதுக்குடி, போட்டியும் கீட்டியும். இந்தக் குளிர் காலத்திலேயே ஒரு நாளைக்காவது நீ பனியிலே எழுந்து கோலம் போட்டிருக்கியா? காலையிலே 6 மணிலேர்ந்து 7 மணிக்குள்ள கோலத்தைப் பார்க்க வர்றாங்கன்னு இதிலே போட்டிருக்கே. உனக்கெதுக்கு வீண் சிரமம்? உன்னால் பாவம் குனிஞ்சா நிமிர முடியாது; நிமிர்ந்தால் குனிய முடியாது. இந்த போட்டி எல்லாம் தினம் கோலம் போடறவங்களுக்குத் தானிருக்கும்.

அலமேலு:- எல்லாம் எனக்குத் தெரியும். நீங்க பாட்டுக்கு மசமசன்னு பேசிக் கொண்டு எண்ணையில் ஊறாமல் சீக்கிரமா சீயக்காயைப் போட்டுத் தேய்ச்சுக் குளிச்சுட்டுக் கடைக்குப் போங்க.

கோபாலன்: அதுக்குள்ள ஏண்டி விரட்டறே? சாயங்காலம் ஆபீசிலேர்ந்து வரும் போது கலர்ப் பொடி வாங்கிட்டு வரேனே, போறாதா?

அலமேலு:- சாயங்காலமா! உங்களுக்கு ஒண்ணுமே தெரியலை. எதிர்த்த வீட்டுப் பங்கஜம், அடுத்த வீட்டு தமிழரசி எல்லோரும் போய் வேணுங்கற கலரை வாங்கிட்டு வந்துடுவாங்க. அப்புறம் கடையில் நமக்கு ஒண்ணும் கிடைக்காமல் போய்டும். சீக்கிரம் போங்களேன்.

(கோபாலன் குளியறைக்குப் போகிறார். அலமேலு சாமான் அறைப் பரணிலிருந்து, ஸ்டூலைப் போட்டுக் கொண்டு எம்பி ஏதோ குப்பையை கிளறி, சுட்ட அப்பளம் போலுள்ள ஒரு புத்தகத்தோடு கீழே குதிக்கிறாள்.)

கோபாலன் (தலையைத் துவட்டிக் கொண்டே):- என்னடீ இது! வீடு பூரா ஒரே தூசி! பழைய கள்ளிப் பெட்டியைக் குடைஞ்சியா என்ன? அது என்ன கையில்?

(அலமேலு சாவகாசமாக உட்கார்ந்து புத்தகத்தை ஜாக்கிரதையாகப் பிரிக்கிறாள்.)

அலமேலு:- கோலப் புத்தகம் கிடைச்சிட்டது. (அவரிடம் காட்டி) ஏங்கறேன், இந்தக் கோலத்தைப் போடட்டுமா? இல்லை, இதைப் போடட்டுமா?

(ஒவ்வொரு பக்கமாகப் பிரித்து, அவர் முகத்தருகே கொண்டு போய்க் காட்டுகிராள். கோபாலன், ‘நச்…நச்…’ என்று தும்மியபடி முகத்தைத் துண்டால் மூடிக் கொள்கிறார்.)

கோபாலன்:- ஏண்டி அலமு! இன்னிக்குச் சமையல் எதாவது உண்டா? இல்லாவிட்டால் தலைக்குத் துவட்டிட்ட துண்டையே வயிற்றிலே கட்டிட்டுப் போயிடவா?

அலமேலு:- இருங்களேன். எல்லாம் சமைச்சுக்கலாம். நீங்க மொதல்லே கடைக்குப் போயிட்டு வந்துடுங்க.

கோபாலன்: – அப்ப கலர்ப் பொடி வாங்கிட்டு வராட்டா சாப்ப்பாடு கிடையாதுங்கறே? அப்படித்தானே? இப்பவே போய்த் தொலைக்கிறேன்.

(அலமேலு அவர் சொல்வதைக் கவனிக்காமல், கோலப் புத்தகத்திலேயே லயித்தவளாக, ஒரு மாக்கல்லை எடுத்து வந்து தரையில் கோலம் போட்டுப் பார்க்கிறாள். கோபாலன் கடைக்குப் போய்த் திரும்புகிறார். ஹால் முழுவதும் கோடும், புள்ளியுமாக ஒரே கிறுக்கல் மயம்.)

கோபாலன்:- இந்தா, கலர்ப் பொடி.எடுத்துப் பார். இப்பவே மணி எட்டரையாயிட்டுது. இனிமேல் நீ என்னிக்குச் சமைச்சு, நான் என்னிக்குச் சாப்பிடறது? உன்னைச் சொல்லிக் குத்தமில்லைடி. இந்த மாதிரிப் போட்டி வைச்சு, எங்களை கஷ்டப்படுத்தறாங்களே, அந்தப் பத்திரகைகாரங்களைச் சொல்லணும்.

அலமேலு:- கொஞ்சம் இருங்க.
.
கோபாலன்:- சரி. சரி, சோறுதான் கிடையாது. இன்னொரு டம்ளர் காப்பியாவது கொடு. டப்பாவாவது கட்டினியா, இல்லை டிபனும் கிடையாதா?

அலமேலு:- (காப்பி கலந்தபடி) இன்னிக்கு ஒரு நாளைக்கு உங்க ஆபீஸ் கான்டீன்ல ஜனதா சாப்பாடு சாப்பிட்டுக்குங்க. எனக்கு ஒரே டென்ஷனாயிருக்கு.

காட்சி: 2

நேரம்: மாலை

(கோபாலன் ஆபீசிலிருந்து வீடு திரும்புகிறார். ஹால் பூராவும் காலையில் இருந்த கிறுக்கல்களோடு, கூடுதலாகக் கலரும் தூவப் பட்டிருக்கிறது.)

கோபாலன்:- இதென்னடி கூத்து? நான் காசைக் கொட்டி வாங்கின கலர்ப் பொடியை எல்லாம், இங்கே ஹால்லே கொட்டி வச்சிருக்கே?

அலமேலு:- ஏங்கறேன் கத்தறீங்க? கோலம் போட்டுப் பார்த்தேன். வேண்டாமா பின்னே? நாளைக்குக் காலங்கார்த்தாலே இருட்டிலே எந்தக் கலர் போடறோம், எது மாட்ச் ஆகும்னு பார்க்க முடியுமா? நீங்க உடனே போய் இன்னும் கொஞ்சம் கலர்ப் பொடி இதே கலர்களிலே வாங்கிட்டு வந்துடுங்க. போட்டுப் பார்த்ததிலேயே பாதி தீர்ந்து போச்சு.

கோபாலன்:- அடிப் போடி வேலையத்தவளே! என்னாலே முடியாது. இதையே அள்ளி எடுத்துப் போடு, போ!

அலமேலு:- கலரை எப்படிங்கறேன் அள்றது? நீங்க வேணா அள்ளி எடுத்துப் பாருங்க.

(கோபாலன் குனிந்து, கலர்ப் பொடியை அள்ளிப் போட முயற்சிக்கிறார். தோல்வியடைந்தவராக எழுகையில் ஆபீஸ் போய் வந்த பாண்ட், ஷர்ட்டெல்லாம் திட்டுத் திட்டாக ரங்கோலி போட்டாற் போலாகி விட்டதைக் கவனிக்கிறார்.)

கோபாலன்:- அட கஷ்ட காலமே! பத்து ரூபாய் போச்சேன்னு பரிதாபப்பட்டால், நல்ல பாண்ட், ஷர்ட்டும்னா வீணாகிப் போயிட்டுது! கர்மம்! கர்மம்!

(தலையில் அடித்தவராக, வாஷ் பேசினில் கை கழுவும்போது , கண்ணாடியில் பார்க்கிறார், தலையில் கூடக் கலர்.)

கோபாலன்:- ஹூம்! இன்னிக்கு ரெண்டு ஸ்நானம்னு என் தலையிலே எழுதியிருக்கு போலிருக்கு!

(மீண்டும் தலைக்குக் குளித்து விட்டுக் கடைக்குப் போகத் தயாராகிறார்.)

கோபாலன்:- ராத்திரிக்காவது ஏதாவது வயத்துக்குப் போடுவியா, இல்ல உபவாசமா?

அலமேலு:- நன்றாய்ப் போடுவேன், போடாவிட்டால் எப்படி? காலையில் மூணு மணிக்கே நீங்க எழுந்திருக்க வேண்டாமா?

கோபாலன்:- இதென்னடி இன்னொரு குண்டைத் தூக்கிப் போடறே! நான் எதுக்கு மூணு மணிக்கே குளிர்லே எழுந்திருக்கணும்?

அலமேலு:- ஒண்ணும் தெரியாதவராட்டம் கேட்டா எப்படி? என்னாலே ஒண்டியா வாசல்ல போய்க் கோலம் போடறத்துக்கு பயமாயிருக்காதா, என்ன? நீங்க கொஞ்சம் துணைக்கு வந்து அரிக்கேன் லைட்டைத் தூக்கிப் பிடிச்சுக் காட்டிட்டிருந்தால் போதும். சொல்ல மறந்துட்டேனே! சீக்கிரமா கடைக்குப் போயிட்டு வாங்க. வாசல்லே கொஞ்சம் புல்லையெல்லாம் செதுக்கனும், இருபத்தொரு புள்ளியில் கோலம் போடறபோது அதெல்லாம் இடைஞ்சல்.

கோபாலன்:- நித்தியப்படி சுத்தமாகப் பெருக்கி, சாணி தெளிச்சு, பெரிய கோலமாப் போட்டிருந்தியானா இப்போ இப்படிக் குதிக்க வேண்டாம். தினம் ஏழு மணிக்கு மேலே போய் ஒரு நாலு மூலையோ, இல்லே…ஒரு நட்சத்திரமோ தானே போடறே?

அலமேலு (அவர் பேசி முடிப்பதற்குள் குறுக்கிட்டு):- நல்ல வேளை, ஞாபகப்படுத்தினீங்க, பால்கார முனுசாமி வந்தால் சாணிக்குச் சொல்லணும். ஒரு ரூபாய்க்கு வாங்கினால் போதுமாங்கறேன்?

கோபாலன்:- ஆமாண்டி! என்னைப் போய்க் கேளு. (கோபமாக வெளியேறுகிறார்.)

காட்சி: 3

மறுநாள் காலை. வாசலில்-

அலமேலு:- தூங்கி வழியாமல், விளக்கைச் சரியாய்ப் புடிச்சுக்குங்க. புள்ளி மேல நிழல் விழறது பாருங்க.

கோபாலன்: தூங்காமல் என்ன செய்யறது பின்னே! எப்ப அலாரம் அடிக்குமோன்னு பயந்து கொண்டே இருந்தது ராப் பூரா தூக்கமே இல்லை.

அலமேலு:- அப்படியானால் சரி. வெளக்கை அங்கே ஓரமா வச்சிட்டு, உள்ளே போய்…

கோபாலன் (ஆர்வத்துடன்):- தூங்கட்டுமா?

அலமேலு:- நல்லாயிருக்கே! நீங்க பாட்டுக்குத் தூங்கிட்டீங்கனா யார் கலர் தூவறது? நீங்களும் ஒத்தாசை பண்ணாட்டால் இந்தக் கோலம் இன்னிப் பொழுதுக்கு ஆகாது. உள்ளே போய், ராத்த்ரி பால் வெச்சிருக்கேன். ரெண்டு காப்பி கலந்து நீங்களும் குடிச்சிட்டு, எனக்கும் கொண்டு வாங்க!

(‘கிருஷ்ணா…கிருஷ்ணா…’ என்று சொல்லியபடி எழுந்து செல்கிறார்.)

காட்சி: 4

(ஒரு வழியாகக் கோலம் முடிவடைகிறது. காலை 6 மணி.)

அலமேலு:- ஏங்கறேன்! நம்ப தெருவுக்கு நீதிபதியெல்லாம் வந்துட்டாங்களான்னு பார்த்துட்டு வந்துடுங்களேன். நான் அதுக்குள்ளே புடவை மாத்திட்டு வந்துடறேன். போட்டோ எல்லாம் பிடிப்பாங்க இல்லையா?

கோபாலன்:- அதெல்லாம் எல்லோரையும் வரிசையாப் புடிச்சிட்டே போக மாட்டாங்க. முதல் பரிசுக் கோலத்தைத்தான் போட்டோ எடுப்பாங்க. நீ போய்க் குளி. குளிகாமாமல் அலங்காரம் பண்ணிக்க ஆரம்பிக்க வேண்டாம்.

அலமேலு:- அதெப்படி, இந்தச் சமயத்திலே போய் நான் குளிச்சிட்டு இருக்க முடியும்? அதுக்குள்ளே அவங்க வந்துட்டாங்கன்னா?

கோபாலன்:- வந்தா என்ன? அவுங்க பாட்டுக்குப் பார்ததுட்டுப் போயிட்டே இருக்கப் போறாங்க.

(அதற்குள் தெருவில் பேச்சுக் குரல்கள் கேட்கவே இருவரும் வாசலுக்கு விரைகிறார்கள்.)

அலமேலு:- ஏங்கறேன்! நீதிபதிகள் தான் வர்றாங்க. அவர்களையெல்லாம் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணச் சொல்லுங்க. காப்பி கலந்து கொண்டு வரேன்.

(உள்ளே விரைகிறாள். அவள் காப்பியோடு திரும்புவதற்குள் நீதிபதிகள் போய் விட்டிருக்கிறார்கள்.)

அலமேலு (ஏமாற்றத்துடன்):- இதென்னங்கறேன்? போயிட்டாங்களே? கைல காமெரா எல்லாம் எடுத்துக் கொண்டு வந்தாங்களே? அதுக்குள்ளே கோலத்தைப் போட்டோ புடிச்சிட்டுப் போயிட்டாங்களா, என்ன? நான் நிற்க வேண்டாமோ?

கோபாலன்:- அதெல்லாம் ஒண்ணுமில்லை. உன் கோலத்தைப் பார்த்தாங்க. பேசாமல் போய்ட்டாங்க.

அலமேலு:- அப்படியா?

(எட்டு மணி ஆகிவிட்டது. அலமேலுவுக்கு வீட்டில் இருப்புக் கொள்ளவில்லை. தன் வீட்டுக்கு வந்து முதல் பரிசு என அறிவிப்பர்களோ என்று உள்ளுக்கும் வாசலுக்குமாக அலைந்ததில் கால் வலி கண்டதுதான் மிச்சம்.)

அலமேலு (காலைப் பிடித்துக் கொண்டு, உட்கார்ந்து):- எல்லாம் உங்களால்தான். எல்லாம் அழுமூஞ்சிக் கலராகவே வாங்கிட்டு வந்துட்டீங்க. அதனால் தான் நான் ஜெயிக்காமல் போயிட்டேன். (மூக்கை உறிஞ்சுகிறாள்.)

கோபாலன்:- போனால் போறது போ! நாளைக்கு வேறே எதாவது பத்திரிகையிலே யார் வீட்டுப் பொங்கல் நன்றாக இருக்குன்னு போட்டி வைச்சு, டேஸ்ட் பார்த்துப் பிரைஸ் தரப் போறோம்னு சொன்னாலும் சொல்லுவாங்க. இப்போதிலிருந்தே பொங்கல் செய்யப் பிராக்டீஸ் பண்ணிக்கோ! (சிரிக்கிறார்.)

(அலமேலு மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொள்கிறாள்.)

– 12-3-1987ல் பிரசுரமானது.

குறிப்பு: இந்த கதை என் முதல் கதை. முதல் கதையே குமுதத்தில் வெளி வந்தது. இதனை நான் ஒரு நாடக வடிவில் எழுதியிருந்தேன்.

Print Friendly, PDF & Email

1 thought on “அலமேலு கோலம் போடுகிறாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *