அலப்பறை ஆறுமுகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: April 4, 2023
பார்வையிட்டோர்: 4,238 
 
 

இந்த உடம்பிருக்கிறது, ஒரு பிரச்சனையே இல்லை. நாம் ஆறுமாசத்தில் பிரச்சனை சோல்வ் செய்யலாம். நானெல்லாம்  ஜிம்முக்குப்போயொன்றும் பெரிசாய் செலவழிக்கேல்ல, எங்கடை சாப்பாட்டுமுறையாலேயே நாம் எல்லாத்தையும் மாற்றியமைக்கலாம். டெய்லி மூன்று நேரமும், மரக்கறிச்சூப்தான் சாப்பிவன் பின்னேரங்களில பசி எடுத்தால் மாத்திரம் ஏதோவொரு பழயூஸ் குடிப்பன், அல்லது ட்றைட்  நட்ஸோ கொறிப்பன் அவ்வளவுதான். ஓசியில் கிடைத்தால் ஒரு சீப்பு வாழைப்பழம் சாப்பிடும் பெம்மான் பேசுவதைப்பார்த்தால் அவர் பதார்த்தகுண சிந்தாமணி பூராவும்  தன் மூளையின் நிரலிகள் முழுவதும் அடுக்கிவைத்திருப்பதாக  எண்ணத்தோன்றும்.

எம் அயலவர் என்கிற உரிமையை எடுத்துக்கொண்டு நேரங்காலமில்லாமல் வீட்டுக்கு வந்து அழைப்புமணியை அழுத்துவார்.

ஒருவேளை நாமிருக்கும் சமயத்தில் கழிப்பறைக்குப்போக நேர்ந்தால் திரும்பிவந்து என்னகுணத்தோடுபோனது, தண்ணியாய் அடிச்சதோ. இறுக்கமாய்ப்போனதோ, விழுதாய்ப்போனதோவென்றும் விபரிப்பார். பெம்மானின் குணமப்படி.. அவர் சொல்லுவதை யாரும் கேட்கிறார்களோ, குறிப்பெடுக்கிறார்களோ அவருக்குக் கவலையில்லை.

எப்போதும் ஒரு (குவெஸ்டியன், ஒபினியன், சஜஸன்.), அவரிடம் ஒரு வினா, ஒரு கருத்து, ஒரு பரிவுரை ஏதோவொன்று   பீறிக்கொண்டே இருக்கும்.

அவருக்குத் தான் அறிந்து வைத்திருப்பது   அனைத்தையும் எவருக்காவது கொட்டிவிடவேண்டுமென்று ஒரு மன அரிப்பு.

என்னிடம் அவர் தன்கடையை விரித்து அரியமுயன்ற போதெல்லாம்

“ஜோவ்……… உமக்கு மோஷன் எப்படிப்போச்சென்று யாருக்கையா கவலை, கொஞ்சம் மூடிக்கொண்டிருப்பீரா” என்று  அவரைத்தடுத்து நிறுத்த வெம்மையான வார்த்தைகளையெல்லாம்  பிரயோகித்து ஆவிவிட்டிருக்கிறேன், எம்மான் திருந்துவதாகவே இல்லை.

ஒரு முறை எங்கள் மருமகள் நர்த்தனா லண்டனிலிருந்து விடுமுறைக்காக  வீட்டில் வந்திருந்தாள். வளர் இளம்பருவத்திலிருந்தே அவளுக்குத்தொடர்ந்த  Hormonal imbalance  இருந்தது. அதனால்ச் சற்றே பூசினாற்போலிருப்பாள். அவளுக்குப் பார்க்காத வைத்தியமில்லை.

நர்த்தனா கொடுத்த கோப்பியைக் குடித்துவிட்டு வைத்தகோப்பையின் ஆட்டம் அதிர்வு  நிற்கமுன்னே அவளைப்பார்த்த அ.ஆறுமுகம்  தொடங்கினார்:

 “டயட்டிங் செய்கிறேன் என்று நம்மவர் பலர் காலையில சாப்பிடுறேல்லை……. ஒரு பிழையான விஷயமது,  உடம்பு எனேர்ஜெடிக்காய் நாள்பூரா இயங்குறதுக்குக் குளுக்கோஸ் தேவை, அதைப்பழங்களில இருந்து  எடுக்கிறதில ஒரு தவறுமில்லை, காலையில தாராளமாய் வத்தகைப்பழம்,  அன்னாசி,  திராட்சை,  செறி,  காக்கிப்பழமோ,  இரண்டு வாழைப்பழமோ சாப்பிடலாம். சாப்பிடவேணும்.

மதியம் கொஞ்சம் ஹெவியாக எடுத்துக்கலாம், ஆனால் பன்றி, ஆடு, கறிகளையும் கணவாய் நண்டு, இறால், முட்டைபோன்ற மாமிசங்களைத் தவிர்த்து, நிறைய காய்பிஞ்சுகளும் கீரைவகைகளும் சேர்க்க வேண்டும்.

மாலையில் தினமும் இரண்டு கி.மீட்டராவது நடக்கிறது நல்லது. பிறகு  இரவில  கொழுப்புள்ள வெண்ணெய், நெய், தயிர், பாற்கட்டி கீரை வகையறாக்களை  தவிர்த்துச் சாப்பாட்டை  ஒன்பது மணிக்குள்ள முடித்துவிடவேண்டும்  இப்பிடிச்செய்து வந்தீங்கன்னா  மூணே மாசத்தில 50 கிலோ தாஜ்மஹாலாய்மாறிச் சும்மா  காற்றில பறக்கத்தொடங்கிடுவீங்க” என்றவர் நிறுத்தி  மையமாக   “தங்கச்சி லண்டனில என்ன செய்கிறார்” என்றார்.

 “அவள் The Royal London Hospital  இல Chief Diatician ஆக இருக்கிறாள்” என்றோம். பிறகு அ.ஆ நர்த்தனா லண்டன் கிளம்பு மட்டும் வீட்டுப்பக்கமே வரவில்லை!

– ஞானம் சஞ்சிகை,  பெப்ரவரி 2023.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *