அவசரமாக அலுவலக வேலை நிமித்தம் நியூ யார்க் செல்ல வேண்டும் என அம்மாவிடம் சொன்ன போது ஆரம்பித்தது வினை.
“டே கண்ணா, அம்மா அமெரிக்கா போனதே இல்லடா, கூட்டிண்டு போடா,” என்றாள்.
“என்னமா, நியூ யார்க் என்ன பாம்பே, டெல்லியா, நெனச்ச போது போறதுக்கு, ஏகப்பட்ட செலவு ஆகும்மா, “என்றேன்.
அம்மா நொடித்துக் கொண்டாள். “நீ நெனச்சா முடியும், போறது போ,” என்றாள்.
தனக்கென எதுவுமே வேண்டுமென அம்மாஅதுவரை கேட்டதில்லை. எனவே அம்மாவின் அந்த குழந்தைத்தனமான வேண்டுகோளைத் தட்டுவதற்கு என் மனம் கேட்காமல் அம்மாவையும் கூட்டிக்கொண்டு யு.எஸ் செல்ல ஆயத்தமானேன்.
சென்னை யு.எஸ் கான்ஸலேட்டில் அதிகம் படுத்தாமல் விஸா கொடுத்துவிட, அம்மா அவளுடைய உறவினர்கள் ஒருவர் விடாமல் தொலைபேசி தன்னுடைய யு.எஸ் பிரயாணத்தைப் பற்றி சொல்லி, சொல்லி மாய்ந்துபோனாள்.
ஒரு அதிகாலைப் பொழுதில் விமானத்தில் ஏறிவிட்டோம். இமிக்ரேஷன் சமயத்தில் அம்மா அங்கு இருந்த அனைவரிடமும் தான் யு.எஸ்ஸுக்கு முதன்முதலாக போவதை பற்றி சொல்லி பெருமைப் பட்டுக்கொள்ள, நான் அலுத்துக்கொண்டேன்.
விமானத்தின் உள்ளே நுழைந்து இருக்கைகளில் அமர்ந்து, அம்மாவுக்கு ஸீட் – பெல்ட் முதல் மற்ற உபகரணங்கள் எல்லாவற்றையும் விளக்கிவிட்டு, விமானம் மேலேறியபின் வந்த பணிப்பெண் ஒருவரிடம் அம்மாவுக்கு சுத்தமான போர்வை கேட்டு வாங்கிக் கொடுத்தேன். தூக்கக் கலக்கத்திலும் விமானத்தின் ஒவ்வொரு பகுதியையும் பார்த்து வியந்து கொண்டிருந்த அம்மாவைத் தூங்க வைப்பதற்குள் படாதபாடு பட்டுவிட்டேன். பிறகு நானும் கண் அயர்ந்தேன். எவ்வளவு நேரம் என்று தெரியாது,
திடீரென அம்மா என்னை எழுப்பி, “விடிஞ்சாச்சுடா, டாய்லட் போய்ட்டு, பல் தேச்சுண்டு வா, காஃபி தரேன்,” என்ற அம்மாவை என்ன சொல்லுவது என்று புரியவில்லை.
“அம்மா, அதெல்லாம், எறங்கினதுக்கு அப்புறம் பாத்துக்கலாம், அப்புறம் இவா தர்ற காஃபி மூத்திரம் மாதிரி இருக்கும், அதையெல்லாம் ட்ரை பண்ணவேண்டாம்” என்று சொல்லிவிட்டு மறுபடியும் கண்ணயர்ந்தேன்.
மறுபடியும் அம்மா என்னை எழுப்பி, “கண்ணா, என்கிட்டே நல்ல கோதாஸ் காஃபி பௌடர் இருக்கு, அதுல வேணும்னா கொஞ்சம் அந்த ஹோஸ்டஸ் பொம்னாட்டிகிட்ட குடுத்து, அதுல, நல்ல ஸ்ட்ராங் காஃபி போட்டுக் கொடுன்னு சொல்லலாமா,” என்றாள்.
“அம்மா, அதெல்லாம் பண்ண இது என்ன கல்யாண வீடா? பிளேன் ! இரண்டாவது, அதெல்லாம் செக்-இன் பாக்கேஜ்ல போயிடுத்து, ஹாண்ட் பாக்ல, நம்ம பாஸ்போர்ட்ஸ், பணம், உன்னோட மருந்து, ஒண்ணு -ரெண்டு புஸ்தகம் இதெல்லாம் மட்டும்தான் இருக்கு,” என்றேன்.
அம்மா அலுத்துக்கொண்டாள். ” ஆனாலும், ஒனக்கு பொறுப்பு பத்தாதுடா, கல்யாணம் ஆகி, நல்ல, ஆம்டையாளா வரணும், அப்போதான் சரிப்படும்,” என்றாள்.
24 வயதாகிறது எனக்கு, அம்மா அதற்குள் ஒரே பையன் என்பதால் ஜாதகப் பரிவர்த்தனையை ஆரம்பித்து விட்டாள். இது வேறு அடிஷனல் தலைவலி எனக்கு.
விமானத்தினுள் பிரேக்ஃபாஸ்ட் அறிவிப்பு வந்து, வண்டியைத் தள்ளிக்கொண்டு வர ஆரம்பித்துவிட்டார்கள். “இது என்ன கிரகச்சாரம்டா, பல்லே தேக்கல, அதுக்குள்ள டிஃபன் !” என்று அலுத்துக்கொண்டாள் அம்மா.
“அம்மா, உனக்கு நெக்ஸியம் மாத்திரை கொண்டுவந்தாயா??” என நான் கேட்டேன், அம்மா இல்லை எனத் தலையை ஆட்டினாள். சட், என்ன ஒரு முட்டாள்த்தனம் ! அம்மாவுக்கு வயிற்றில் அஸிடிட்டி பிரச்னை இருக்கிறது. நேரத்திற்கு சாப்பிட்டால் கூட சிலசமயம் படுத்தி எடுத்துவிடும்.
அருகிலிருந்த பணிப்பெண்ணை அழைத்து, “பிரேக்ஃபாஸ்ட் அப்புறம் முதலில் எனக்கு ஒரு நெக்ஸியம் கொண்டு வருகிறீர்களா?” என்று கேட்டேன்.
நெக்ஸியம் புகழ்வாய்ந்த மருந்து. மற்ற கன்றாவி மருந்துகளோடு ஒப்பிட்டால், பக்கவிளைவுகளும் குறைச்சல் எனபதால்தான் என்னுடைய டாக்டர் ராமன் அம்மாவுக்கு அதைப் பரிந்துரைத்திருந்தார். அம்மாவின் வயதுக்கும் ஏற்ற மருந்து என்பதும் ஒரு காரணம்.
பணிப்பெண் , “லெட் மி செக்” என்று சொல்லிவிட்டு உள்ளே மறைந்தாள். சிறிது நேரம் கழித்துத் திரும்பி, “ஸாரி சார், நோ ஸச் மெடிசின் வித் அஸ்” என்றாள், குரலில் வருத்தமே இல்லாமல். நொந்து கொண்டேன்.
என்ன ஒரு முட்டாள் நான், விமானம் தரையிறங்கும் வரை எதுவும் ப்ராப்ளம் வராத வரை சரி. டாய்லட் சென்று திரும்பிய அம்மா, “அது என்னடா கண்ணா, எலிவளை மாதிரி இத்துணூண்டுக்கு ஒரு டாய்லட்,” என்றாள். நான் மெதுவாக, “அம்மா, காலை ஏதாவது சாப்பிடு. பழம் கிடைக்கும் வாங்கித் தருகிறேன்,” என்றேன். நெக்ஸியம் இல்லாத குறையை மறைக்க முயன்றேன். ஆனால், தினசரி காலை உணவுக்கு முன் எடுக்கொள்வது பழக்கம் என்பதால் அம்மா மறக்காமல், ” அந்த நெக்ஸியம் ?…” என்று இழுத்தாள்.
இல்லை எனத் தலையை ஆட்டினேன். “உனக்கு ஞாபகப் படுத்த மறந்து போனது என் தப்புமா,” என்றேன்.
“போறது போ, ஒரு நாள் இல்லைனா ஒண்ணும் ஆகாது,” என்றாள் அம்மா.
காலை உணவாக, வெண்ணெய் தடவிய ரொட்டி, பழம், காஃபி என எல்லாம் முடிந்தது. அம்மா தன்னிடமிருந்த லலிதா ஸஹஸ்ரநாம புத்தகத்தில் ஆழ்ந்தாள். நான் ஃபோர்ப்ஸ் இதழைப் புரட்டினேன். டெஸ்லாவின் மஹாத்மியங்களுக்கு நடுவே வேறு சில செய்திகளையும் பார்க்க முடிந்தது.
சிலமணிநேரம் கடந்து, ஃபிராங்ஃபர்ட் நெருங்கும் செய்தியை பைலட் வெளியிட்டு, விமானம் மூன்று மணிநேரம் அங்கிருக்கும் என்ற செய்தியைச் சொல்லி வயிற்றில் பால் வார்த்தார். ஃபிராங்ஃபர்ட் விமனநிலையம் பெரிய, நவீன நிறுத்தம் என்பதால் நெக்ஸியம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை இருந்தது.
ஃபிராங்ஃபர்ட்டில் விமானம் தரையிறங்கிய போது வெளியே நல்ல மழை. அம்மாவை விஐபி லௌஞ்சில் உட்காரவைத்துவிட்டு ஃபார்மஸியைத் தேடினேன். அதோ, 24 HOURS என்ற பெயரில் ஒரு பச்சை போர்டு ஒளிர்ந்தது. கௌண்டரில் இருந்த பெண் ஆங்கிலம் நன்றாகவே பேசினாள், “எஸ் ஸார் ஹவ் மே ஐ ஹெல்ப் யூ ?” என்றாள். அவளிடம் நெக்ஸியம் வேண்டுமென்றேன். அவள் டாக்டர் ப்ரிஸ்க்ரிப்ஷன் எங்கே என எதிர்க் கேள்வி கேட்டாள். ப்ரிஸ்க்ரிப்ஷன் ஹாண்ட் பேகில் இல்லை, உள்ளே செக்-இன் பாக்கேஜ்ஜில் இருக்கிறது, தற்போது எடுக்கும் நிலையில் இல்லை என்ற என் விளக்கத்தையெல்லாம் கேட்கப் பொறுமை இல்லாமல், “ஸாரி, அதைப் போன்ற மருந்துகள் ப்ரிஸ்க்ரிப்ஷன் இல்லாமல் தரமுடியாது,” என்றாள் மிகத் தீர்மானமாக.
இந்தியாவில் ஒரு சௌகரியம், மருந்துக் கடை கௌண்ட்டரில் கருக்கலைப்பு மாத்திரை வரை சொல்லியே வாங்கிவிடலாம். ப்ரிஸ்க்ரிப்ஷன் எல்லாம் கேட்க மாட்டார்கள். இங்கே அது வேலைக்காகாது.
“அதற்குப் பதில் ஓடிஸி மருந்து வேறு ஏதாவது தரலாமா?” என்றாள். ஓவர் தி கௌண்ட்டர் (ஓடிஸி) மருந்துகள் மேல் நம்பிக்கை இல்லாமல், என் அம்மாவின் வயதையும் மனதில் கொண்டு மறுத்தேன்.
“மே பி ட்ரை சம் சோடா” என்றாள் புரியாமல்.
நொந்துபோய் அம்மா அமர்ந்திருக்கும் இடம் திரும்பினேன். அம்மா டிவியில் பொம்மை பார்த்துக்கொண்டிருந்தாள்.
“இரண்டு, மூன்று கடைகளில் செக் செஞ்சாச்சு அம்மா, நெக்ஸியம் கெடைக்கல.” என்று அபத்தமாகப் புளுகினேன். உள்ளுக்குள் நியூ யார்க் சென்றடையும் வரை எந்த விதமான பிரச்னையும் வரக்கூடாதே என்று ஒரு ஐஸ் கத்தி என் நெஞ்சில் சொருகிக் கொண்டிருந்தது.
விமானம் ஃபிராங்ஃபர்ட் நகரின் மேலே சென்று கொண்டிருந்த போது, மிக மெதுவான குரலில் அம்மா தன் நெஞ்சில் ஒரு குத்து வலி இருக்கிறது என்று சொன்னாள். உடனே, பணிப்பெண்ணை அழைத்து பயணிகளில் யாராவது டாக்டர்கள் இருப்பார்களா எனப் பார்க்கச் சொல்லி கெஞ்சினேன்.
விமானத்தின் உள்ளே அறிவிப்பு வந்தது. பின்னால் உள்ள இருக்கையில் இருந்த ஒரு பெண்மணி எழுந்து தான் ஒரு நர்ஸ் என்றும், ஜான் ஹாப்கின்ஸ் ஹாஸ்பிடலில் 7 வருடங்களாகப் பணி புரிபவர் என்று சொல்லிவிட்டு, தன்னால் உதவ முடியும் என்று சொன்னார். விமானப் பணிப்பெண் அந்த நர்ஸை எற இறங்கப் பார்த்துவிட்டு, “சாட்டிலைட் ஃபோனில் எங்கள் டாக்டரிடம் உதவி கேட்டுள்ளேன், அவர் என்ன சொல்கிறார் என்று பார்த்துவிட்டு பிறகு உங்களை அழைக்கிறோம்,” என்றார். அந்த நர்ஸ் பெண்மணி தோள்களைக் குலுக்கிக்கொண்டு, “இது போன்ற விஷயங்களை உடனே கவனிப்பது நல்லது” என்று சொல்லிவிட்டு அமர்ந்து விட்டார்.
“டாக்டர் லைனில் இருக்கிறார், உங்கள் அம்மாவுக்கு என்ன செய்கிறது என்று கேட்கிறார்,” என்றாள் அந்த பணிப்பெண் என்னருகே வந்து.
“நெஞ்செரிச்சல், வாந்தி வருவது போன்ற உணர்வு, ஒரு மாதிரியான அசதி,….” வரிசையாக அம்மாவின் உபாதைகளை ஒன்றொண்டாகச் சொல்ல ஆரம்பித்த என்னை இடைமறித்து, ” உங்கள் அம்மாவின் வயது என்ன என்று டாக்டர் கேட்கிறார்,” என்றாள்.
“ஐம்பத்தியொன்று” என்றேன்.
“டாக்டர் உங்கள் அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் இருக்கலாம்,” என்கிறார்” என்றாள் அந்தப் பணிப்பெண், குரலில் எந்தவித உணர்வும் இல்லாமல்.
“அம்மாவுக்கு இருதய சம்பந்தமான பிரச்சனைகள் எதுவும் இல்லை, நான் அந்த டாக்டரிடம் பேச முடியுமா?” என்றேன்.
“இல்லை, நான் எல்லாவற்றையும் விளக்கிவிட்டேன்,” என்றாள் அவள்.
அவளுடைய வேலை, விமான நிறுவனத்தின் நற்பெயர் ஆகியவற்றை மட்டுமே காப்பாற்றிக்கொள்ளும் எண்ணம் அந்தப் பணிப்பெண்ணிடம் இருந்ததை மிகத் தெளிவாக உணர்ந்தேன்.
“அந்த நர்ஸை வரச் சொல்லி பார்க்கலாமே,” என்றேன் கெஞ்சும் குரலில்.
“கொஞ்சம் தள்ளுங்கள்,” என்றார் அந்த நர்ஸ், கையில் அவர்கள் உபயோகிக்கும் கிட் இருந்தது. அவர் வந்ததையே கவனிக்காத நான், “ஸாரி என்று வழிவிட்டேன்.
“BP நார்மல், பல்ஸ் நார்மல்” என்றார் அந்த நர்ஸ். பணிப்பெண்ணைப் பார்த்துவிட்டு, “இது நிச்சயம் ஹார்ட் அட்டாக் அல்ல.” என்றார் தீர்மானமான குரலில்.
“அது எனக்குத் தெரியாது, எங்களுக்கென சில சட்ட திட்ட வழிமுறைகள் இருக்கின்றன. விமானம் இன்னும் சிறிது நேரத்தில் ஃபிராங்ஃபர்ட்டில் இறங்கிவிடும், அருகிலிருக்கும் மருத்துவ மனைக்கு உங்கள் அம்மாவை அழைத்துச் செல்வார்கள்.” என்றாள் அவள்.
நான் அதிர்ந்தேன். மறுபடியும் ஃபிராங்ஃபர்ட்டா ?
பின்னால் இருந்து ஒரு குரல் “என்னிடம் நெக்ஸியம் இருக்கிறது,” என்று என் காதில் தேன்மாரிப் பொழிந்தது.
“மிக்க நன்றி” என்றேன்.
“மன்னிக்கவும், நெக்ஸியம் சாப்பிட்டு ஹார்ட் அட்டாக் தீவிரமானால் நானோ, என் விமான நிர்வாகமோ பொறுப்பேற்காது, எனவே நான் அதை அனுமதிக்க முடியாது,” என்றாள் அந்த ராட்சஸி. அவளை அப்படியே கழுத்தை நெறிக்கும் ஆசையை ஒத்திப்போட்டுவிட்டு, நெக்ஸியம் இருக்கிறது என்றவரைப் பார்த்து, “தயவுசெய்து அதை என் அம்மாவுக்குத் தர முடியுமா?” என்று கெஞ்சினேன்.
அவர் தயங்கினார். “இதை என்னவென்று தெரியாமல் / புரிந்துகொள்ளாமல் நீங்கள் தரும் நெக்ஸியம் மாத்திரையால் இந்த அம்மாவின் பிரச்னை அதிகமானால் நீங்கள் மட்டுமே பொறுப்பு” என்றாள் அந்த பணிப்பெண்.
அவர் என்னைப் பரிதாபமாகப் பார்த்து, “ஐ’ம் ரியலி சாரி.” என்றார்.
நான் குப்பையாக உணர்ந்தேன். வேலை, வேலை என்று பணத்தின் பின் அலைந்து கொண்டு, அம்மாவின் இந்த சின்னத் தேவையை பூர்த்தி செய்யமுடியாமல் போய்விட்டதே என்று நொந்து கொண்டேன்.
அந்த நர்ஸ் பெண்மணி மறுபடியும் அம்மாவின் BP யை சரிபார்த்துவிட்டு, “BP இறங்குகிறது, ஹார்ட் அட்டாக் ஆக இருந்தால் நிச்சயம் இப்படி ஆகாது” என்றார்.
விமானம் ஃபிராங்ஃபர்ட்டில் அவசர நிமித்தம் இறங்குவதாக பைலட் அறிவித்தார். பதினைந்து நிமிடங்களில் நின்றிருந்த விமானத்தினுள் இருவர் ஸ்ட்ரெச்சருடன் நுழைந்து, என் அம்மாவைக் கவர்ந்து சென்றார்கள். நான் பின்னால் ஓடினேன்.
அருகிலிருந்த ER (எமெர்ஜென்சி ரூம்) உள்ளே நுழைந்து அம்மாவை உடனடியாக கவனிக்க ஆரம்பித்தார்கள்.
அரைமணி நேரம் ஆகி இருக்கும் , பியர்ஸ் ப்ராஸ்னன் போல அழகான ஒரு இளம் வயது டாக்டர் என்னை நெருங்கினார். “ஐ’ம் டாக்டர் ஹான்ஸ், கவலைப்படாதீர்கள், உங்கள் அம்மாவுக்கு ஹார்ட்டில் ஒரு பிரச்னையும் இல்லை, வயிற்றில்தான். ஒரு மருந்து கொடுத்துள்ளேன். எதற்கும் இதை கையில் வைத்துக் கொள்ளுங்கள்” என்று ஒரு பட்டை மாத்திரைகளை என் கையில் திணித்தார்.
நெக்ஸியம் …….