“ங்கோவ், அம்மண மலை சாமியாரப் பாக்கறதுக்கு நானும் பாப்பாளும் போயிட்டு வருட்டுங்ளா நாளைக்கு?”
சுப்பாத்தா கேட்டதும் கிருட்டிணராசு அய்யாவுக்குத் தூக்கிவாரிப் போட்டது.
“அடியேய்,… அது அமணமலைடீ” என்று அவசரமாகத் திருத்தினார்.
“ம்க் – கும்! நீங்கதான் அப்புடிச் சொல்றீங்கொ. ஆனாட்டி அம்மணமலை, அம்மணமலைன்னுதான் சொல்றவீக சொல்றாங்கொ” என்றாள் அவளும் அழுத்தத்தோடு, தன் தரப்பை நிலைநாட்டும் விதமாக. அந்த வார்த்தையைச் சொல்ல தானே கூசும்போது அவள் ஒற்றைக்கு ரெட்டையாக, அவ்வளவு அழுத்தத்தோடு உச்சரிப்பது அவருக்குக் கடுப்பேற்றியது.
ஒரு பொம்பளை – அதுவும் பொண்டாட்டி – சாமியாரைப் பார்க்கப் போகிறேன் என்றாலே ஒரு மனுசனுக்கு அடிவயிறு கலங்கும். நாளிதழ்களில் தினமொரு சாமியார் லீலைகள், நிர்வாண பூஜை, நீலப் படமெடுப்பு, இன்ட்டர்நெட் சப்ளை, வி.ஐ.பி.களுக்கு விநியோகம் என்று வரிசை பிடித்து வந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு சாமியாரும் முந்தைய சாமியாரின் எண்ணிக்கையை முறியடிக்கும் விதமாக, 48 கற்பழிப்பு, 108 நீலப் படமெடுப்பு என்று சாதனை புரிந்துவிட்டு, ஜெயிலுக்குள்ளும் கைதிகள், ஜெயிலர் மற்றும் காவலர்களை சிஷ்யகோடிகளாக்கி, வாயிலிருந்து லிங்க வாந்தி, காதுக்குள்ளிருந்து சாளிக்ராமக் குரும்பை, மூக்கிலிருந்து சந்தனச் சளி, காற்றிலிருந்து டால்க்கம் பௌடர் என்று மேஜிக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இவள் அம்மணமலை சாமியாரைப் பார்க்கப் போகிறேன் என்றால் என்னவெல்லாம் நினைக்கத் தோன்றாது?
விபரீதக் கற்பனைகளை வலுக்கட்டாயமாகக் கலைத்துவிட்டு, அதன் அசல் பெயர் சமணமலை என்பது பற்றி அவர் சிறு சமவெளிப் பிரசங்கம் ஒன்றை மனைவியிடம் நிகழ்த்தினார்.
‘தென்தமிழ் மலைவாழ் ஆன்மீக – பக்தி நெறிகளும், வட புராண இதிகாசச் சுவடுகளும்’ என்ற தலைப்பில் பேராசிரியர் இரா. செகப்பிரியர் அடிமை (முன்னாள் ஷேக்ஸ்பியர்தாசன்) ஓர் ஆய்வு நூலை இயற்றியுள்ளார். அதில் இந்த அமணமலை பற்றி தனி அத்தியாயமே உண்டு. சங்க இலக்கியச் சான்றுகள், சமணப் புராணத் தரவுகள், கொங்கு நாட்டார் கதை, மொழியியல் கூறுகள் ஆகிய சாட்சி ஆதாரங்கள், தடயங்களுடன் வாதிடப்படும் அதன் சுருக்கம் பின்வருமாறு:
சமண மதம் தென்னிந்தியாவில் பரவிய காலத்தில் சமண முனிவர்கள் இந்த மலைக் குகைகளில் தங்கவும் வசிக்கவும் செய்தனர். ஆதலால் சமண
மலை என்ற பேர் ஏற்பட்டு, அது அமணமலை என மருவி, பின்னாளில் ஒற்றளபெடை கூடி, அம்மணமலை எனத் திரிபுற்றுவிட்டது.
“தே…! பள்ளிக்கோடத்துல பசங்க – புள்ளீகள அறுக்கறாப்புடி ஊட்டுலீமு ரம்பம் போடாதீங்களாமா. சாமியாரப் பாக்கப் போகோணும். அதுக்கென்னுங்கறீங்கொ?” என்று அதட்டினாள் திருமதி தமிழய்யா. கொஞ்சம் அசந்தால் மேசை மேல் ஏறி முட்டிபோடச் சொல்லிவிடுவாள் போலிருந்தது.
“போறது இருக்குட்டும். நீயென்னத்துக்கு இப்ப சாமியாரப் பாக்கப் போகோணுங்கற? என்ன சாமியாரு, ஏது விகரம்,… ஒண்ணுந் தெரியாம எப்புடி…? பேப்பரப் படிச்சுப் பாத்தால்லொ தெரியும் பூளவாக்கு? நீயெங்க படிக்கறது? கோளி கால்ல பேனாக் கட்டியுட்டாப்புடி, சுப்பாத்தாள்னு கையெளுத்துப் போடறக்கே உனக்கு ஒன்றை ஏக்கரா வேணும். எளுத்துக் கூட்டித் தலைப்பைப் படிக்கறக்காள வெடிஞ்சு மறுநாப் பேப்பரு வந்துரும்…”
“தே….! எப்பப் பாத்தாலும் படிக்காதவ, படிக்காதவன்னே குத்திக் காட்டீட்டிருக்காதீங்ளாமா. தெரிஞ்சுதான கட்டுனீங்கொ? அப்பறம் நானதையப் பேசுனன்னா செரியாகாது,… சொல்லீட்டேன்.”
சொத்துக்கு ஆசைப்பட்டு தன்னையும் தன் தமிழ் பாண்டித்யத்தையும் அந்த மூணாம்ப்பிடம் அடகு வைத்த, மீட்க முடியாத அறிவீனம் அது. அதை அவள் எடுத்துவிட்டால் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாலறுந்து நிமிர்ந்து நின்ற மூதாதைகளுக்கே அவமானம். அதனால் அன்புடை நெஞ்சமாகி அவளோடு செம்புலம் கலந்தார்.
“அட,… வெளையாட்டுக்குச் சொன்னா அதுக்குப் போயி கோவிச்சுக்கறயே சுப்பு. சாமியாருகங்கற பேருல போலிச் சாமியாருகதான் சாஸ்த்தி. அதுக்குத்தாங் கேட்டேன், ஆரு – எவுரு, எப்புடீன்னு…”
“அவுரொண்ணும் டூப்பிளிக்கேட்டல்லங்கோவ். ஒருசனல் சாமியாரேதான். கல்லெறி சாமியாருன்னு பேராமா.”
“கல்லெறி சாமியாரா?” வியந்தார் அய்யா.
சனங்களுக்கு வெறைட்டி தேவை. அப்போதுதான் மவுசு என்பதால் சாமியார்களும் வெறைட்டியாக இருப்பது, வெறைட்டி வெறைட்டியான தியானங்களையும் ஞானங்களையும் விற்பது அவருக்குத் தெரியும். அவ் வகையில் அழுக்குச் சாமியார், காத்தாடி சாமியார், கால்கட்டு சாமியார், வீரமண்டி சாமியார், சிரசாசன சாமியார், குப்பை பொறுக்கி சாமியார், மௌன சாமியார், குழந்தை சாமியார், நிர்வாண சாமியார், பெர்முடாஸ் சாமியார் என்று பல தர காரணப் பெயர், இடுகுறிப் பெயர் கொண்ட சாமியார்களைக் கேள்விப்பட்டிருக்கிறார். இதென்ன கல்லடி சாமியார்?
“அதென்னுமோ, பாக்கப் போறவீகளக் கல்லெடுத்து அடிச்சு முடுக்கியுடுவாருங்ளாமா. அதனாலதான் அந்தப் பேரு.”
இப்போது திகைப்பு. “கல்லெடுத்து அடிச்சு முடுக்குவாரா? அப்பறம்மு எதுக்கு பாக்கப் போறாங்கொ?”
“ங்கோவ், அவுரு சாமியாருங்கொ. சாமியாருகல்லாம் அப்புடித்தான் ஏதாவது வித்துவேசமாப் பண்ணுவாங்கொ. அதுல ஏதாச்சும் அருத்தமிருக்கும். உங்குளுக்கென்ன தெரியும் அதையப் பத்தி? நீங்க இதையெல்லாம் நம்ப மாண்டீங்கொ. விண்ணாடம் பேசுவீங்கொ. போயிட்டு வந்தவீக சொல்றாங்கல்லொ. அவுரு கல்லுல அடிச்சு முடுக்குனாலே அதுஷ்டமாமா. ஆனாட்டி அல்லாரைமே அப்புடிப் பண்ண மாண்டாருங்ளாமா. ஒவ்வொருக்காலைக்கு கிட்டப் போயி கால்ல உளுந்தாலும் ஒண்ணும் சொல்ல மாண்டாரு; பாலு, பளம், பிசுக்கோத்து, சாப்படறதுக்கு எது குடத்தாலும் வாங்கிக்குவாருங்கறாங்கொ. ஒவ்வொருக்காலைக்கு அண்ட உடாம கல்லெடுத்து அடிப்பாராமா. அவிகளுக்குத்தான் அதுஷ்டம். ஒவ்வொருத்தர வாத்தா வம்மான்னு வாய்க்கு வந்தபடி திட்டவுஞ் செய்வாராமா. அவிகளுக்கு நெம்ப அதுஷ்டம்னு சொல்றவீக சொல்றாங்கொ.”
கல்லடி போதாதென்று சொல்லடிகளுமா என்று எதுகை மோனையாக ரசித்த தமிழய்யா, லேட் பிக்கப்பில்தான் அவை கெட்டவார்த்தைகளாயிற்றே என்ற உணர்வுற்று பதற்றம் கொண்டார். “கல்லடி வாங்கறக்கும் கெட்ட வார்த்தையக் கேக்கறக்குமா வயிசுப் புள்ளையக் கூட்டீட்டு அங்க போகோணுங்கற?”
அப்படி கல்லடியும் கெட்ட வார்த்தைகளும் பெற்று வந்தவர்களுக்கு நிகழ்ந்த அதிர்ஷ்டங்கள், சுப காரியங்கள், தொழில் அபிவிருத்திகள், புத்திர பாக்கியங்கள், கல்யாணப் பேச்சுகள் குறித்த விபரங்கள் அவளால் தெரிவிக்கப்பட்டன. மகளுக்கு இன்னும் கல்யாணமாகாத கவலையில், அவளும் போகாத கோவில் இல்லை; செய்யாத பரிகாரங்கள் இல்லை. இங்கே ஒரு நடை, மகளையும் கூட்டிக்கொண்டு போய் வந்தால், நிச்சயமாக மூன்றே மாதத்தில் நிச்சயதார்த்தமோ கல்யாணமோ உறுதி என்று, முந்தையவைகளைப் போலவே இதையும் மற்றவர்கள் சொல்ல நம்பினாள்.
அய்யா அவர்கள் ஐந்தரை அறிவு கொண்ட முக்கால் பகுத்தறிவுவாதி. தனது கொள்கைகளை மனைவியிடம் திணிக்கக் கூடாது என்ற கோட்பாடு கொண்டவர். திணிக்க முற்பட்டால் குருவி மூளை கொண்ட அவளது தலையில் பனம்பழம் விழுந்தாற் போல ஆகிவிடும் என்று வெளியே பெருமையடிப்பார். உள் நடப்பு என்னவென்றால், அவரது பேச்சு எடுபடாது என்பதுதான். கோவில் – குளம், பூஜை – புனஸ்காரங்கள், சாஸ்த்திர – சம்பிரதாயங்கள், சடங்கு – சாங்கியங்கள் என்றிவற்றில் தீவிரவாத நம்பிக்கை கொண்ட சுப்பாத்தா, இவரிடம் அனுமதி கோருவது ஒப்புக்கு. மற்றபடி அவர் மறுத்தாலும் அவள் மீறவே செய்வாள். அதனால் அனுமதி கேட்டு அவள் மதிப்பளிக்கும்போது, சம்மதித்துவிட்டால்தான் நமக்கும் மரியாதை என்கிற புரிந்துணர்வு ஒப்பந்தம் அவர்களிடையே நெடுங்காலமாக நிலவி வருகிறது.
இருப்பினும் இந்த சாமியார் விவகாரம் அவருக்கு உடன்பாடாக இல்லை. “கல்லெறியறப்ப படக்குடாத எடத்துல பட்டுச்சுன்னா என்னாகறது? அது கூடத் தேவுல,… படாம வெலகித் தப்பிச்சுக்கலாம்னு வேண்ணாலும் வெச்சுக்கலாம். வாத்தா வம்மான்னு பேசுவாருங்கறயே,… புள்ளையக் கூட்டீட்டுப் போறது எப்புடி? நீயின்னாலும் தேவுல. வயிசுப் புள்ளை அதக் கேட்டுட்டு நிக்கறது நல்லாவா இருக்கும்? நீயே ஓசனை பண்ணிப் பாரு. என்னுதான்
சாமியாருன்னாலும் கெட்ட வார்த்தை கெட்ட வார்த்தைதானொ? அவளுக்கும் சங்கட்டமாகும்…”
சுப்பாத்தாவும் கவலையோடு, “அ – ஆமுங்கொ. நீங்க சொல்றதும் வாஸ்த்தவந்தேன். மறிச்சு என்னுதாம் பண்றது? போயிம்மாகோணும். நானே ஒத்தைக்குப் போயிட்டு வந்துருட்டுங்ளா?” என்றாள்.
அப்படியாப்பட்ட இடத்திற்கு அவளை ஒத்தைக்கு அனுப்பவும் அவருக்கு விருப்பமில்லை; பயமாகவும் இருந்தது. அந்தக் கண்காங்காத இடத்தில் அடிபட்டால் முதலுதவிக்குக் கூட வகைச்சல் கிடையாது. ஆள் துணையுமின்றி ஆபத்தில் எங்கே போய் முடியுமோ? பிறகு என்னதான் வழி என்று யோசித்து, “நான் வேணா கூட வாறன், உனக்கு எஸ்காட்டா” என்றார்.
*******
அமணமலை, போக்குவரத்தற்ற அத்துவானப் பிரதேசம். தூரத்து பஸ் ரோட்டிலிருந்து மூன்றரை கிலோ மீட்டர் நடந்துதான் போக வேண்டும். வாகன வசதியுள்ளவர்கள் அதில் போகலாம். எனினும் கரடு முரடான குறுகல் பாதை.
மலை, குன்று என்று எங்கு கண்டாலும் ஏறிப் போய் கோவணத்தாண்டியாக நின்றுவிடும் தமிழ்க் கடவுள் அங்கேயும் உச்சியில் குடிகொண்டிருக்கிறார். இங்கே அந்தத் துண்டுத் துணி கூட இல்லாமல் இருந்தார் என்றும், அதனாலேயே அம்மணமலை என்று பெயர் வந்ததாகவும் வட்டாரக் கதை, ஸ்தல புராணம் முதலியன உள்ளன. அந்தத் திருக்கோலனுக்கு கிருத்திகை, உவாதி, சூரசம்ஹாரம் ஆகிய பூஜை பண்டிகைகளின்போது மட்டும் பக்தர் வரவு இருக்கும். மற்ற நாட்களில் மனித ஊசாட்டமே காணாது.
இப்போது பார்த்தால் நடந்தும், இரு சக்கர, நாற்சக்கர, அறுசக்கர வாகனங்களிலுமாக ஆட்கள் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருந்தனர். கல்லெறி சாமியாரை தரிசிப்பதற்குத்தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. திருமதி தமிழய்யா தன் பூசணிச் சரீரத்தை தூக்கிச் சுமப்பவள் போல கெஸ்ஸு வாங்கி, வேர்த்து வழிந்துகொண்டு நடந்தாள். வழித் துணையாக வந்துகொண்டிருந்த பக்த சிகாமணிகளும் சாமியாரின் மகிமைகள் பற்றி கதை கதையாகச் சொல்லியபடி வந்தனர்.
அடிவாரத்தில் சைக்கிள்கள், மொஃபட்டுகள், பைக்குகள், கார்கள், வேன்கள் என வாகனங்கள் மரத்தடி நிழல்களில் நிறுத்தப்பட்டு டோக்கன் கொடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது. பழக்கடை, தேனீர்க் கடை, சோடா – சர்பத் கடை, சிற்றுண்டியகம் ஆகியன புதிதாக முளைத்திருந்தன. முருகனுக்குக் கூட வராத மவுசு கல்லெறிச் சாமியாருக்கு வந்துவிட்டது. மம்மானியமான கூட்டம்.
மலையில் ஏறுவதற்கு சிற்சில இடங்களில் மட்டுமே படிக்கட்டுகள் உள்ளன. சில இடங்களில் பாறையிலேயே காலடி அகலத்துக்கு படியாக செதுக்கப்பட்டிருக்கும். சில இடங்களில் அதுவும் இராது. அடி சறுக்கினால்
உருண்டு, மண்டை சிதறு தேங்காயாகிவிடக் கூடிய அபாயம். அதனால் வேர்த்து வெலவெலத்து ஏறும் சுப்பாத்தாளைக் கைபிடித்து கவனமாக அழைத்துச் சென்றார் கிருட்டிணராசு அய்யா.
பாதி உயரத்திலேயே அந்த சமணர் குகை. அதன் முன்பு சமதளமாக உள்ள பாறைப் பரப்பிலிருந்து பக்தர்கள். விசுவாசிகள் கூட்டம் கீழே படிக்கட்டுகளிலும் வரிசை பிடித்திருந்தது. குகை வாயிலில் வாயிற்காப்போர்களாக மஞ்சள் ஆடைச் சீடர்கள். அவர்களில் ஒருவன் சில்வர் குடத்தில் மஞ்சள் துணி கட்டிய உண்டியலை ஏந்தியிருந்தான். மற்றவர்கள் கூட்டத்தை அமைதிப்படுத்தி, ஒவ்வொருவராகவோ ஒவ்வொரு குடும்பம் அல்லது குழுவாகவோ உள்ளே அனுமதித்துக்கொண்டிருந்தனர். நுழையும்போதே காணிக்கை செலுத்தப்பட்டது. பழங்கள், தின்பண்டங்கள், உணவு வகைகளை பக்தர்கள் ப்ரசாதமாக உள்ளே கொண்டு சென்றனர்.
“சாமீ,… எங்குளுக்கு ஆசீர்வாதம் பண்ணுங் சாமீ…”, “சாமீ,… எங்களைக் கல்லெடுத்து அடீங்க சாமீ…”, “சாமீ,… எங்களையக் கெட்ட வார்த்தீல திட்டுங் சாமீ…” என்று பக்தர்கள் மருகும் ஓசைகள், ஆண் – பெண் குரல்களில் குகைக்குள் எதிரொலித்தன. மறுமொழியற்ற நிசப்தத்துக்குப் பிறகு வெறுங்கையோடு வெளிவந்தவர்களின் முகங்களில் அதிருப்தி. “அதுக்கெல்லாம் போன சென்மத்துலயே புண்ணியஞ் செஸ்ஸிருக்கோணும். நம்முளுக்குக் குடுப்பினை இல்லியாட்டிருக்குது. சாமி கல்லுலீமடிக்குல,… கெட்ட வார்த்தீலீந் திட்டுல” என்று வருத்தத்தோடு கீழிறங்கினார்கள்.
மேலுள்ள படியில் இரண்டு செல்போன்களில் மாற்றி மாற்றிப் பேசிக்கொண்டிருந்தவர், “இங்க பாருங் டவரு பட்டையக் கௌப்புது. போன வாட்டி இங்க வந்துட்டுப் போனதுலருந்தே நம்முளுக்கு நல்ல லாவமுங் மச்சா. மறுச்சநாளே 25 எல்.லுல ஒரு தோப்பப் பேசி, கை மாத்தியுட்டனுங். ஏளு எல் நம்முளுக்கு நிக்குமுங். அ – ஆமுங், அ – ஆமுங். சேரிச் சேரீங். கண்டுசனா வாரனுங் மச்சா. சாமியார ஒரு போட்டாப் புடிச்சு ப்ரேம் பண்ணி மாட்டோணும்ங்கொ. செல்லுலயே எடுத்துட்டு வந்தர்றனுங்” என்று சொல்லிக்கொண்டிருந்தார்.
இவர்களும் சமதளத்தை அடைந்தனர். நுழைவுப் பகுதியிலிருந்து வளைந்து சென்றுவிடுகிற குகையானதால் உள்ளே இருக்கும் சாமியாரைத் தெரியவில்லை. ஆர்வம் மிகுதியால் ஓரிருவர் வரிசையிலிருந்து விலகி நுழைவுப் பகுதியோரம் நின்று தலை நீட்டிப் பார்க்கவே, தமிழய்யாவும் சுப்பாத்தாவிடம் சொல்லிவிட்டுப் போய் எட்டிப் பார்த்தார். மங்கலான வெளிச்சம் கொண்டிருந்த குகைக்குள் பயபக்தியோடு ஒரு குடும்பம் நின்றுகொண்டிருந்தது. அவர்களுக்கு முதுகு காட்டியபடி சமணத் துறவிகளின் கற்படுக்கைகள் ஒன்றில் சம்மணமிட்டிருந்த உருவம், கந்தலான அழுக்கு வேட்டியும், சட்டைக்கு மேல் பனியனும் அணிந்து, சடைப்பிடித்த தலையும், பரட்டை தாடியுமாக மேலே அண்ணாந்து எதையோ முணுமுணுத்துக்கொண்டிருந்தது. “மந்தரம் ஓதறாரு” என்று முணுமுணுத்தான் பக்கத்தில் எட்டிப் பார்த்தவன். பக்தர்கள் அளித்த ப்ரசாதங்கள் அவரைச் சூழ்ந்திருந்தன. ஓர் ஓரத்தில் கூடை நிறைய கல் குவிக்கப்பட்டிருந்தது. அது
சீடர்களின் திருப்பணியாக இருக்கலாம். அல்லது யாரேனும் பக்தர்களே கொண்டு வந்ததாகவும் இருக்கலாம்.
“இங்கல்லாம் கூட்டம் போடக்குடாது. வரிசைல நில்லுங்க.” வாயிற்காவல் சீடர்கள் விரட்டவே இவர்கள் பின்வாங்கினர்.
திடீரென்று குகைக்குள் கணீரென்ற குரலில் கெட்ட வார்த்தைகள் எதிரொலிகளோடு முழங்கலாயின. வெளியிலிருந்த பக்தர் வரிசை பரவசித்தது. குகைக்குள்ளிருந்த பக்தர்களும், வாயிலிலிருந்த சீடர்களும் வெளியே ஓடி வர, அவர்களின் பின்னே கற்கள் வந்து விழலாயின. தொடர்ந்து சாமியாரும் நுழைவாயிலில் ப்ரசன்னமாகி, கூட்டத்தை நோக்கி கையடக்கக் கற்களால் அடிக்கலானார். அய்யோ அம்மா என்று அலறியடித்தபடி களேபரச் சூழல் உருவாகியது. தாக்குதலை ஏற்க வேண்டுமென்று சிலர் எதிர்கொண்டு நின்றனர். முதுகிலும், நெஞ்சிலும், காலிலும், மண்டையிலும், நெற்றியிலுமாக கல்லடி பட்டவர்களில் சிலருக்கு மொக்கையடி; சிலருக்கு ரத்தம் வழிந்தது. எனினும் வலியை உணராதவர்களாகவோ, காட்டிக்கொள்ளாதவர்களாகவோ, ‘சாமி ஆசீர்வதிச்சுட்டாரு’, ‘சாமி ஆசீர்வதிச்சுட்டாரு’ என்று கூத்தாடினார்கள்.
தான் அடிபட்ட கல், சாமியார் எறிந்த கல் என்று பக்தர் கூட்டம் கற்களைப் பொறுக்கி கண்களில் ஒற்றிக்கொண்டு பத்திரப்படுத்தியது. அதற்கும் பலத்த முண்டியடிப்பு.
கைகளிலும் மடியிலும் கனத்திருந்த கல்லிருப்பு தீர்ந்ததும் சாமியார் வசைமாரி பொழியலானார். சராங்கமாக கெட்ட வார்த்தைகள் தெறித்து விழுந்தன. ஆண்கள்தான் கொஞ்சம் கூச்சப்பட்டார்களே தவிர, பெண்கள் அது பற்றி அலட்டிக்கொள்ளவேயில்லை. புழுத்த நாய் கேட்டால் புளியமரத்தில் தூக்குப் போட்டுக்கொண்டு சாகிற அளவுக்கு குழாயடிச் சண்டையிலும், அண்டை வீட்டுத் தகராறிலும் பேசக்கூடியவர்களாயிற்றே பெண்கள்! அப்படிப்பட்ட அசகாயசூரிகளுக்கு சாமியாரின் பேச்சு ஏசவா செய்யும்? போகப் போக அவரது வசவுகள், நீலப் படங்களில் காணும் சித்தரிப்புகளாக, அருவருக்கத்தக்க வகையில் அடர்ந்தன. அப்போது சில பெண்மணிகள் கண்களை மூடிக் கொண்டதை தமிழய்யா கவனித்தார். காதைப் பொத்த வேண்டிய நேரத்தில கண்களை மூடிக்கொள்கிறார்களே என்று அசட்டுத்தனமாக யோசித்தவருக்கு, பிறகுதான் தெரிந்தது, அவர்கள் பக்திப் பரவசத்தில் லயித்திருக்கிறார்கள் என்று.
சாதாரணமாக ஆண்களின் பேச்சு வழக்கில் புழங்குகிற அளவுக்குத்தான் கெட்ட வார்த்தை பேசுவாராக இருக்கும் என்று நினைத்திருந்த தமிழய்யாவுக்கு, சாமியார் ‘செந்தமிழில்’ எடுத்து விட்ட வசைப் புயல், காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது. காதுகளைப் பொத்தியபடி சுப்பாத்தாளை முறைத்தார். அவளும் கண்ணை மூடுவதா, காதைப் பொத்துவதா என்று குழம்பி, இரண்டையும் செய்தாள்.
புயல் ஓய்ந்து, மறுபடியும் கற்படுக்கையில் மையம் கொண்டது. கூட்டம் அந்தரத்தில் மிதப்பது போல குகைக்கு வெளியே திளைத்திருந்தது.
கிட்டத்தட்ட மனைவியை இழுத்துக்கொண்டு மலையிறங்கினார் கிருட்டிணராசு அய்யா. அவரது ஆத்திரம் மனைவி மீது பாய்ந்து, பூமராங்காகி அவரையும் தாக்கியது. இருந்தும், மகளோடு மனைவியை இங்கே அனுப்பாதது எவ்வளவு நல்லதாகப் போயிற்று என்று தன்னை நிலைநாட்டிக்கொண்டார். இது பற்றிய வாத விவாதங்கள் முடிந்ததும், “அதெல்லாம் இருக்குட்டுமுங்கொ! அந்த சாமியார எங்கியோ பாத்த மாற இருக்குது. சட்டுனு கேவகத்துக்கு வர மாண்டீங்குது” என்றாள் திருமதி.
“இந்த மாற சாமியாருக ஒண்ணைக் கண்டாப்புடித்தான் இருப்பாங்கொ” என்றார் அவர்.
“இல்லீங்கொ,… இது வேற.” புருவம் சுழிய யோசித்தவள் ஞானப்பிரகாசியானாள். “ங்கோவ், கேவகத்துக்கு வந்துருச்சுங்கோவ். மூணாம் வருசம் ஒருக்கா, தெங்கிருந்தோ ஒரு கிறுக்கன் நம்மூருக்கு வந்து சுத்தீட்டுத் திரிஞ்சானே நாவகமிருக்குதுங்ளா? பொம்பள புள்ளைககட்ட ரவுசு பண்ணுனான்னு, கடசீல ஊருக்கார்ரெல்லாஞ் சேந்து கல்லுல அடிச்சு முடுக்கியுட்டாங்கல்லொ…! அவன்தானுங்கொ அவுரு!”
– வாரமலர், ஜூலை 12, 2009.
– இச் சிறுகதை, கேரளா, கோழிக்கோடு பல்கலைக் கழகப் பாடத் திட்டத்தில், GENERAL FOUNDATION COURSES IN TAMIL-ல் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
(புனைப் பெயர்: செந்தமிழ் செல்வன்)
கதாசிரியர் குறிப்பு:
வாரமலர் இதழில், ஆங்காங்கே வணிக இதழ் தரப்பின் சிற்சிறு எடிட்டிங்குகளோடு பிரசுரமான இக் கதை, ‘வேலந்தாவளம் உங்களை வரவேற்கிறது’ என்ற தலைப்பிலான எனது சிறுகதைத் தொகுப்பில் (2016, பழனியப்பா ப்ரதர்ஸ் வெளியீடு) எனது மூலப் பிரதிப்படியே முழுமையாக இடம்பெற்றுள்ளது. இங்கு இடம்பெற்றிருப்பது, அந்த மூலப் பிரதியின் செப்பனிடப்பட்ட (2022 ஜனவரி) வடிவம். வாசகர்கள் இதையே இறுதிப் பாடமாகக் கொள்ளவும்.
வாரமலரில் சிறுகதைகள் எழுத நான் பயன்படுத்திய பல்வேறு புனைப்பெயர்கள் மேற்படி தொகுப்பு முன்னுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும்.