(1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“என்னப்பா, சிட்டிபாபு! எங்கப்பா, கிளம்பிட்டே? உன்னைப் பார்க்கத்தாம்பா வரேன். போன காரியம் ஸக்ஸெஸ் அதாவது வெற்றி!
நாடக ஆசிரியர் நாகபூஷணம் இல்லே, அதாம்பா “காதலா அல்லது சாதலா?’ன்னு ஒரு நாடகம் எழுதினாரே, அவரைப் புடிச்சு ஒரு கதை கேட்டிருக்கேன். கையிலே ஒரு சரித்திர நாடகம் ரெடியாயிருக்காம். க்ளைமாக்ஸ் ஸீன்தான் எழுதணுமாம், அதையும் அடுத்த சனிக்கிழமைக்குள்ளே முடிச்சுத் தந்துடறேன்னுட்டாரு. நல்ல லக்கி சான்ஸுப்பா நமக்கு!
கதையைக்கூடச் சொல்லிட்டாரு. மொத்தம் முப்பத்தாறு ஸீன்தானாம். லவ்வு, திரில்லு, சண்டை, சஸ்பென்ஸ் எல்லாம் வெச்சிருக்காரு! கதையை டிராஜிடியாவும் முடிக்கலாம், இல்லேன்னா காமெடியாவும் மாத்திக்கலாம்.
நாடகத்துக்கு டைடிலே அட்ராக்டிவா இருக்குது. அதாவது பேரே ரொம்ப கவர்ச்சி! என்ன பேர் தெரியுமா? ‘திப்பு செய்த தப்பு!’
என்னப்பா சிரிக்கிறே? தலைப்பே தமாஷாயிருக்கேன்னு தானே? அதுமட்டுமில்லை. திப்பு என்ன தப்பு செய்தாங்கறது தான் கதைக்கே சஸ்பென்ஸ்!
‘திப்பு செய்த தப்பு’ன்னு பேரு ஒன்பதே எழுத்திலே அமைஞ்சு போச்சு! இல்லாதபோனா ‘ச்”சன்னா ஒண்ணு சேர்த்து, ‘திப்புச் செய்த தப்பு’ன்னு பெயரை மாத்தவேண்டி, யிருந்திருக்கும்.
மூலக் கதை ஆசிரியர் நாகபூஷணம்னு போட்டுவிட்டு, டயலாக்கெல்லாம் நம்ம கோபால்சாமியை விட்டு எழுதிக்க லாம்பா. நம்ம சிநேகிதர்களுக்கெல்லாம் சொல்லிடு. அடுத்த ஞாயிற்றுக்கிழமையே நாடக மன்றத்தை ஆரம்பிச்சுடலாம்.
நம்ம அமெச்சூர் நாடக மன்றத்துக்குப் பேர்கூடத் தீர் மானச்சுட்டேம்பா. சதர்ன் ரெயில்வேஸ் கூட்ஸ் ஷெட் ஆபீஸர்ஸ் அமெச்சூர் டிரமாடிக் அஸோஸியேஷன்! தன்னடா பேரு கூட்ஸ் வண்டி மாதிரி நீளமா இருக்குதேன்னு பாக்கறயா? அது பரவாயில்லை; எஸ்.ஆர்.ஜி.ஓ.ஏ.டி.ஏ. அளிக்கும் முதல் சரித்திர நாடகம்- திப்பு செய்த தப்புன்னு தான் – போஸ்டர்!
பாரு, இன்னும் இரண்டே மாசத்திலே இந்த நாடகத்தை அரங்கேத்தாட்டா என் பேரு ஆராவமுது இல்லே. ஆமாம்; எல்லா சபா செக்ரிடரிங்களையும் முதல் நாடகத்துக்கே ‘இன்வைட்’ பண்ணப் போறேன். ரிஹர்ஸலுக்குக் கூட ஓர் இடம் யோசிச்சு வெச்சிருக்கேம்பா. ஏ. பி.எலிமெண்டரி ஸ்கூல் இல்லே? அது கோடை லீவுக்கு ரெண்டு மாசம் பூட்டித் தான் இருக்கப் போவுது. அந்த ஸ்கூல் ஹெட்மாஸ்டரை எனக்கு நல்லாத் தெரியும். அவரைப் புடிச்சா அந்த இடம் கிடைச்சுடும். ஹெட்மாஸ்டருக்கு ஒரு பேமிலி பாஸ் குடுத்துட்டாப் போச்சு.
இன்னைக்கு ஒன் அண்டு டூவிலே சந்திக்கலாம். ராமாநுஜம், சுந்தரம், பார்த்தசாரதி, கோபால்சாமி, கமால் பாஷா, எஸ்.கே. அய்யங்கார் எல்லாரையும் மீட் பண்ணி விஷயத்தைச் சொல்லிடுவோம். எஸ். கே.யைத்தாம்பா ஹீரோயினாப் போடலாம்னு உத்தேசம். கமால் பாஷாவைத் திப்புவாப் போட்டுடலாம்.”
“அட! நீ இன்னாப்பா, கமால் பாஷாவைத் திப்புவாப் போடறேங்கறே? அவன் ஒரேயடியாத் திக்குவானேப்பா!”
“தாடி நேச்சுரலாயிருக்குமேன்னு பார்த்தேன். சரி, உட்டுடு; வாணாம். நம்ம ஹெட்கிளார்க் லோகநாதனைப் போட்டுடலாமா? அவனுக்கு ஸ்டேஜ் எக்ஸ்பீரியன்ஸ் இருக் குது; என்ன சொல்றே?”
“அது ஐடியா! சரி, தபலா, ஆர்மோனியம் இதுக்கெல் லாம்..?”
“அதுக்கெல்லாம் ஆளுங்க இருக்காங்கப்பா. ஆராவமுது மனசு வெச்சா ஆகாத காரியம் உண்டா? டைரக்ஷனுக்குக்கூட ஆசாமி யாருன்னு தீர்மானிச்சு வெச்சிருக்கேன். யார் சொல்லட்டுமா? ‘யானை பிடிச்சவன் தைரியசாலி’ன்னு ஒரு படம் வரல்லே, அதன் டைரக்டர்!”
“ஜமாய் ஆராவமுது, நான் வறேன். இண்டர்வல்லே மீட் பண்ணுவோம்…”
நண்பர்களைக் கூட்டி, இரண்டு மாதம் இராப் பகல் தூக்க மில்லாமல் கஷ்டப்பட்டு, கைப் பணத்தைச் செலவழித்து, ஒரு விதமாக ஒத்திகை நடத்தி நாடகத்துக்குத் தேதியும் வைத்து விட்டான் ஆராவமுதன். அலைந்து திரிந்து தெரிந்தவர்கள் தலையிலெல்லாம் டிக்கட்டைக் கட்டினான். பத்திரிகைக் காரர்களையெல்லாம் நேரில் போய்ப் பார்த்து, “கட்டாயம் நாடகத்துக்கு வந்து உங்க பேப்பாலே விமர்சனம் எழுதனும், ஸார்” என்று கேட்டுக்கொண்டான். நாடகத்துக்கு ஒருசினிமா நட்சத்திரத்தைத் தலைமை தாங்க ஏற்பாடு செய்தான். எஸ்.ஆர்.ஜி.ஓ.ஏ.டி.ஏ. நாடக அரங்கேற்ற மலர் ஒன்று தயாரித்து அதில் நடிகர்களின் போட்டோக்கள், கதைச் சுருக்கம் இவற்றை வெளியிட்டான். அட்டையின் கடைசிப் பக்கத்தில்,
எமது அடுத்த சமூக நாடகம்
?
எதிர்பாருங்கள்.
என்று விளம்பரமும் செய்தான்!
கடைசியில் நாடகம் ஒருவிதமாக நடந்து முடிந்தது. அவ்வளவுதான்.
நாடகம் முடிந்ததும் நண்பர்கள் எல்லோரும் நழுவி விட்டார்கள். கடைசியாகத் தியேட்டரில் மிஞ்சியது ஆராவ முதுதான். அவனுக்கு இதில் ஏக நஷ்டம். ஏகக் கஷ்டம்.
ஓட்டல்காரர், அச்சாபீஸ்காரர் எல்லோருக்கும் ஈடு கொடுத்துவிட்டு இராத்திரி ஒரு மணிக்குமேல் வீடு போய்ச் சேர்ந்தான்.
ஆனால், ஆராவமுது இதைப்பற்றியெல்லாம் கவலைப்பட வில்லை. நாடகம் வெற்றி ஆகவில்லையே என்கிற ஒரே குறை தான். மறுநாள் கூட்ஸ் ஷெட்டில் நண்பர்களிடமெல்லாம் இதே பேச்சுத்தான்.
“போப்பா! ஏ.எஸ். டயலாக் சரியாவே பேசல்லேப்பா! திப்பு நீ செய்தது தப்பு’ன்னு சொல்றதுக்குப் பதிலா தப்பு நீ செய்தது ரொம்பத் திப்புன்’னுட்டாம்பா. இதுக்கு பொங்கல் மிளகுவடை, டீ ஒரு கேடு. ஸ்திரீ பார்ட்டும் சரி இல்லே. அய்யங்காருக்கு இடுப்பு ரொம்பப் பெரிசுப்பா! இடும்பியா ஆக்ட் பண்றவனைக் கொண்டுவந்து ஹீரோயினா போட்டா எப்படியிருக்கும்? ப்ராம்ப்டர் வேறே உரக்க உரக்கப் பேசிட்டாரு. அவர் பேசறது ஆடியன்ஸ் காதுலேயே விழுது. நாடகம் முடிஞ்சதும் ஜனங்க என்ன பேசிக்கிட்டுப் போனாங்க தெரியுமா? நாடகத்திலே டெம்போவே இல்லையாம். ‘கூட்ஸ் ஷெட் ஆசாமிங்கதானே? டெம்போவும் அப்படித்தானே இருக்கும்’னு சொல்லிக்கிட்டு போனாங்க.”
– கேரக்டர், 9வது பதிப்பு: 1997, சாவி பப்ளிகேஷன்ஸ், சென்னை.