அப்புசாமி பரீட்சை எழுதுகிறார்

0
கதையாசிரியர்: , ,
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: August 27, 2024
பார்வையிட்டோர்: 2,791 
 
 

(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சீதாப்பாட்டியின் விரல்கள் கைக்குட்டையால் மூக்குக்  கண்ணாடிக்கு மெருகேற்றுவது போல் துடைத்துக் கொண்டிருந்தன. சற்று முன் டெலிபோனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்ததன் விளைவுதான் அவளை அப்படிச் சிந்திக்க வைத்திருந்தது. 

‘புரொஃபசர் வெங்கண்ணா! சே! ரியலி எ ஹார்ட் நட் டு க்ரேக். இப்போ பேசமாட்டாராமே…’ என்று அவள் உதடுகள் முணுமுணுத்துக் கொண்டன. 

விரல்கள் இன்னமும் சிந்தனையோடு மூக்குக் கண்ணாடியைத் துடைத்தவாறிருந்தன. கண்கள் புத்தக அலமாரியில் ‘ஹௌ டு இன்ஃபுளூயன்ஸ் பீபிள்’ என்ற புத்தகத்தில் நிலைத்தன. மெதுவே எடுத்துப் புரட்டத் தொடங்கியவள் அடுத்த நிமிடம் ‘தொபீல்’ என்று அதைப் போட்டுவிட்டு, “ஓ! மை காட்!” என்று அலறிவிட்டாள். 

ஒரு கரப்பான்! 

டெலிபோன் உரையாடல் ஏற்படுத்தியிருந்த எரிச்சலோடு, அலமாரிக் கரப்பான் செய்த பரபரப்பும் சேர்ந்தது. 

”சே சே! வீடு வரவர ஒரே நேஸ்ட்டியாகப் போய்விட்டது. வேர் த ஹெல் இவர் தொலைந்துவிட்டார்!” என்று அப்புசாமியின் நினைவு சட்டென்று அவளுக்கு ஏற்பட்டது. அப்புசாமியின் அறையிலிருந்து வந்த சில வாக்கியங்கள் அவர் என்ன செய்கிறார் என்பதற்கு விடையளித்தன. 

“யாதும் ஊரே.. திணை-பொதுவியல்; துறை-பொருள் மொழிக் காஞ்சி…” 

“யாதும் ஊரே.. திணை-பொதுவியல்; துறை-பொருள் மொழிக் காஞ்சி… 

கெடுக சிந்தை. திணை-வாகை, துறை மூதின் முல்லை. 

கெடுக சிந்தை. திணை-வாகை, துறை மூதின் முல்லை…” 

சீதாப்பாட்டி கைகளால் காதைப் பொத்திக் கொண்டாள். 

அருகிலிருந்த டேபிள் வெயிட்டை எடுத்து டொக் டொக்கென்று சொல்லத்தான் நினைக்கிறேன் பாணியில் கதவில் தட்டினாள். “உங்களைத்தானே? காதிலே விழலை. உங்க கரெஸ்பாண்டென்ஸ் கோர்ஸும்… நீங்களும்? நீங்க இப்போ படிக்கவில்லையென்று யார் அழுதது?” 

அப்புசாமியின் காதில் இப்போதுதான் விழுந்தது. தபால் பாடங்களைக் கையில் கற்றையாக வைத்துக் கொண்டு, “கூப்பிட்டியா சீதே. இண்ணைக்குள்ளே தமிழைத் தீர்த்துடறதுண்ணு இருக்கேன். அப்புறம் நாளை பூரா அட்வான்ஸ் தமிழ்… அப்புறம் தான் பயங்கரம் இங்கிலிபீசு.. நீதான் கொஞ்சம் ஹெல்ப் பண்ணணும்… அதற்கப்புறம்…” 

சீதாப்பாட்டி பல்லை நற் நறத்தாள். “முந்தா நாள் புரொஃபசர் வெங்கண்ணா வீட்டுக்கு வெஜிடபிள்ஸ் கொண்டுபோய்க் கொடுக்கச் சொன்னேனே… செய்தீர்களோ?” 

“அஆ! மறந்தே போச்சுடி சீதே.. மூர்மார்க்கெட்டிலே கோனாருக்காக அலையப்போய் விட்டேனா. இன்னும் ஹிஸ்டரி ஒண்ணு.. ஹரிஹரன் பரவாயில்லையா. ராமலிங்கம் பரவாயில்லையா? ஐயோ… எப்படித் தான் நான் பாஸாகப் போறேனோ.. சீதே… திக் திக்குன்னு இருக்குடி…” 

“சரி, சரி, காப்பிக்கொட்டையை அரைத்துவிட்டு இன்றைக்காவது புரொஃபசர் வீட்டுக்கு நான் சொன்ன கடையிலே ஊட்டி வெஜிடபிள்ஸ் வாங்கிட்டுப் போங்க..” 

சீதாப்பாட்டி டென்னிஸ் மட்டையைச் சரேலென்று அது மாட்டியிருந்த இடத்திலிருந்து எடுத்துக் கொண்டு வேகமாகப் படியிறங்கிச் சென்று, காரைக் கோபமாக ஸ்டார்ப் செய்தாள். 

மூன்றாவது நிமிஷம் டமால் என்று ஒரு சத்தம், அப்புசாமியின் காதில் இன்பத்தேன் வந்து பாய்வது போல் விழுந்தது. பால்கனியில் சென்று ஆவலோடு எட்டிப் பார்த்தார். 

வழக்கமான ஆக்ஸிடெண்ட்.

“வேணும் குட்டிக்கு… வேணும்! இந்தா மே! என்கிட்டே கோபித்துக்கொண்டு சுவர்மேலே போய் ஏன் டாஷ் அடிக்கிறே?” என்று உரக்கக் கூவினார்.

பாட்டி அவரைச் சுட்டெரிப்பதுபோலக் காருக்குள்ளிருந்து பார்த்துவிட்டுப் பல்லை நறநறத்தாள். எத்தனை தடவைதான் கார் இப்படி இடிபடுமோ… புரொஃபசர் வெங்கண்ணா மனசு வைக்கமாட்டேன் என்கிறாரே.. 


அப்புசாமிக்குப் பரீட்சை நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. விழுந்து விழுந்து படித்தாலும் அவருடைய மூளையில் பாடங்கள் ஏறுவதாக இல்லை. கொஞ்சம் ஏறின பாடங்களும் சீதாப்பாட்டியோடு ஒரு சண்டை அடித்தால் மறந்து போய்க் கொணடிருந்தன. 

பரீட்சைக்குப் போகாமல் இருந்துவிடலாமா? 

‘சே!’ என்று அப்புசாமியின் ரோஷ மனம் சீறி எழுந்தது. 

‘அப்புசாமி! அடேய் அறிஞா! நீ படிடா. நல்லாப் படிடா… நீ எங்கே படிச்சுப் பட்டம் பெற்று நல்லா வந்துடுவியோன்னு கெழவிக்கு உன்மேலே பொறாமை. உன் படிப்பு யாகத்திலே அவள் பொறாமை என்கிற திருவான்மியூர் தண்ணியைக் கொட்டி அணைக்கப் பார்க்கிறாள். வுடாதே நைனா! சவாலை எடுத்துகினியா… சமாளி. 

‘நினைச்சுப் பாருடா. சீதேக் கிழவி என்ன சொல்லி இடிச்சாள்? புரொபசர் வெங்கண்ணாகிட்டே போய் நாலு வார்த்தை பேச உங்களுக்கு யோக்கியதை இருந்தால் நான் ஏன் இப்படி இந்தச் சின்ன விஷயத்துக்கு அலையணும்?’ னு சொன்னாளே. உன் மனசுக்கு அப்போ ரொம்பக் கஷ்டமாயிருந்ததில்லையா? ‘அடியே. நானும் கிராஜுவேட் ஆகிக் காட்ட றெண்டி’ன்னு நீ சவால் எடுத்துக் கொண்ட ஜோரென்ன, பழைய பீரோவைக் குடை குடைன்னு குடைந்து உன் பழைய எஸ் எஸ். எல். ஸி. புத்தகத்தைத் தேடியெடுத்து, தபால் பாடக் கல்லூரிக்கு அனுப்பினதென்ன, பல்லைக் காட்டிக் கெஞ்சிக் கிழவி கிட்டே பணம் வாங்கிக் கட்டின தென்ன, பரீட்சைக்குக் கட்டக் கடைசிப் பணத்துக்குச் சீதே கழுத்தறுத்தப்போ, கையிலே இருந்த அரேபியா வாட்சை அம்போன்னு விற்றுப் பணத்தைக் கட்டிப் பெருமையுடனிருந்த தென்ன…’ 


பரீட்சை தினம். 

‘ஆகா, இந்தக் கிழவருக்குத் தான் இத்தனை வயசு காலத்திலும் படிப்பின் மீது எவ்வளவு ஆர்வம்! கொஞ்சம் கூட லஜ்ஜைப்படாமல் எல்லோருக்கும் சமமாக வந்து பரீட்சை எழுத அமர்ந்து விட்டாரே.’ என்று பரீட்சை ஹாலிலிருந்த பல வாலிப மாணவர்கள் அப்புசாமியைப் பார்த்து வியந்தனர். 

குறுக்கு வழியோ நெடுக்கு வழியோ அப்புசாமி பரீட்சை எழுதத் தீர்மானித்துவிட்டார். 

கணகணவென்று முதல் மணி அடித்துவிட்டது. 

ஹால் ஒரே கப்சிப்.

அப்புசாமி தனது ஜிப்பாவின் இடது கையின் அடிப் பக்கத்தைத் தொட்டுப் பார்த்துக் கொண்டார். முறுவலொன்று படர்ந்தது முகத்தில். ஜிப்பாக் கையோடு ஒட்டினாற்போல் வைக்கப்பட்டிருந்த மர்மப் பைக்குள் அவர் தயாரித்து வந்த விடைத் தாள்கள் வெளியே வருவதற்கு தகுந்த தருணம் பார்த்துக் காத்திருந்தன. 

அப்புசாமியின் வலது கை அதைத் தடவித் தர உள்ளம், ‘அடியே சீதேய்! என்னைப் பார்த்தா கோழி முட்டை வாங்கப் போகிறவன்னு சொன்னே? உன் கண்ணெதிரில் நான் பரீட்சை எழுதிப் பாஸாகிப் பட்டதாரியாகி, உன் மூக்கு மேலே என் விரலை ஓங்கி வைக்கப் போகிறேனா இல்லையா பார்!’ என்று கறுவியது. 

கேள்வித் தாள் கொடுப்பதற்கான மணி ‘ஙண ஙண’ என்று ஒலித்தது. கையில் கேள்வித் தாள்களுடனும், ஆன்ஸர் புக்குகளுடனும் அந்த ஹாலுக்குள் பிரவேசித்த சூபர்வைசரைப் பார்த்ததும் அப்புசாமிக்குப் பகீரென்றது! 

சீதேக் கிழவி! 

புதுமனை புகுவிழாவுக்குப் போட்ட பந்தல், முகூர்த்த நேரத்தில் பற்றிக் கொண்டாற்போல், நுரையுடன் லஸ்ஸி திரளுவதற்கு முன் கரெண்ட் ஆஃப் ஆன மாதிரி, இவள் எங்கே வந்து இங்கு சேர்ந்தாள்? 

பரீட்சை நடந்த இடம் பெண்கள் ஹைஸ்கூல். பரீட்சையைக் கண்காணிக்கும் பொறுப்பும் பள்ளி ஹெட்மாஸ்டருக்கே விடப்பட்டிருந்தது. பா. மு. கழகத்தில் சீதாப்பாட்டியைத் தற்செயலாகச் சந்தித்த ஹெட்மிஸ்ட்ரஸ், பரீட்சையை சூபர்வைஸ் செய்ய ஆட்களில்லையென்று குறைப்பட்டபோது சீதாப்பாட்டி தான் உதவுவதாக முன்வந்த விஷயம் அப்புசாமிக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. 

பரீட்சை அதிகாரிக்கென்று போடப்பட்டிருந்த மேஜை அருகே சென்று நின்று. எல்லா மாணவர்களையும் – முக்கியமாக அப்புசாமியை – ஒரு பார்வை பார்த்தாள் சீதாப்பாட்டி கம்பீரமாக. “குட்மார்னிங் ஜென்டில்மென், ஐயம் ஹியர் டு சூபர்வைஸ் யு ஆல். சில முக்கியமான இன்ஸ்ட்ரக்ஷன்களை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். எவரி ஹாஃப் அனெவருக்கு ஒருதரம் பெல் வில் ரிங். பிஃபோர் கோயிங் டு ஆன்ஸர், உங்கள் ரிஜிஸ்தர் நம்பரை கேர்ஃபுல்லாக ஃபில் அப் செய்யுங்கள். ப்ளீஸ் யூஸ் ஷீட்ஸ் ஸ்பேரிங்லி, அட்லீஸ்ட் ட்வெண்டி லைன்ஸாவது ஒரு ஷீட்டில் இருக்கணும். அனதர் திங், இஃப் எனிபடி வாண்ட்ஸ் வாட்டர் ஆர் அடிஷனல் ஷீட்ஸ்.. எழுந்து நின்றால் போதும். அயம் ஹியர் டு அட்டெண்ட் டு இட். ‘இஸ்ஸ்.. உஸ்ஸ்…’ என்று குரல் கொடுக்க வேண்டியதில்லை..” 

திடீரென்று அணில் குஞ்சு ஒன்று  ‘கிக்கீக்கீ’ என்று கத்தியது – சீதாப் பாட்டியைப் பழிப்பது போல.

அப்புசாமிதான் டெஸ்க்கின் கீழே குனிந்து அந்த மாதிரி ஒலி எழுப்பினார். 

எல்லா மாணவர்களும் அந்த எதிர்பாராத ஒலியைக் கேட்டுப் பெரிதாகச் சிரித்தனர். 

சிதாப்பாட்டி பதட்டமடையாமல், புன்முறுவலுடன், “நான் கொஞ்சம ஸ்ட்ரிக்ட்டானவள். பரீட்சை ஹாலில் அணில் பூனை இவைகளை அலௌ செய்யமாட்டேன். அந்த அணில் ஜெண்டில்மான் இதை அன்டர்ஸ்டாண்ட் செய்து கொள்வது நல்லது.” என்றாள். 

இரண்டாவது மணி அடித்தது – கேள்வித் தாள்கள் தரப்பட்டன. எல்லா மாணவர்களும் தலையைக் குனிந்துகொண்டு கிடுகிடுவென எழுதத் தொடங்கிவிட்டனர். 

அப்புசாமி மட்டும் தூக்கம் வராத கொக்கு மாதிரி தலையை அண்ணாந்து பார்ப்பதும், மோவாயைச் சொறிந்து கொள்வதுமாக, ஒரே ஒரு வார்த்தை கூட எழுதாமலிருந்தார். சீதாப்பாட்டி அவரருகிலேயே வட்டமிட்டுக் கொண்டிருந்தாள். 

முதல் அரைமணி யாகிவிட்டது.  

ஜிப்பாக் கையிலிருந்து நைஸாகத் தான் எழுதி வந்த பேப்பர்களை உருவி, அடிஷனல் ஷீட்டுகளுக்குப் பதில் வைத்துவிட வேண்டியது. அவ்வளவுதான். 

அதற்கு ஒரு ஐந்து நிமிஷம் அவகாசம் கொடுக்க இந்தக் கழுகுக் கிழவி அந்தப் பக்கம் பறக்காது போலிருக்கிறதே. 

அப்புசாமிக்குச் சட்டென்று ஐடியா. பேனாவின் கழுத்தைக் கழற்றினார். இடத்திலிருந்து எழுந்து நின்று, “மேடம்!” என்று வெகு வினயமாகக் குரல் கொடுத்தார். 

சீதாப்பாட்டி. ‘அட, இவருக்குக் கூட இந்த அளவு பண்பாடு தெரிகிறதே!’ என்றெண்ணியவளாக அருகில் சென்றாள். 

அப்புசாமி கழுத்தைக் கழற்றிய பேனாவைத் தற்செயலாகக் கீழே போடுவதுபோலத் தள்ளிவிட்டார். 

“அச்சச்சோ! ஸாரிடி சூபர்வைசி! புடவையெல்லாம் ஒரே இங்க் ஆகிவிட்டதே… உடனே பாத்ரூம் போய் புட் சோப்பு.. பட் ஸாரி காஞ்சிபுரம் பட் ஸாரி…” என்றார் அப்புசாமி. 

சீதாப்பாட்டி புன்சிரிப்புடன் “தட்ஸ் ஆல்ரைட்! சூபர்வைஸ் செய்து கொண்டிருக்கும்போது நான் போகிறது நல்லதல்ல. ட்ரை வாஷுக்குப் போட்டால் சரியாகிவிடுகிறது… நீங்க பரீட்சையை எழுதுங்க. டைம் ஆகிறது.” என்றாள் இளக்காரமாக. 

கிழவி நகரமாட்டே னென்கிறாளே? 

“மேடம்!” என்று எழுந்து கொண்டார். 

“எஸ்.” சீதாப்பாட்டி அருகே வந்தாள்.  

“கொஞ்சம் தண்ணீர்.” 

“இதோ கொண்டுவரச் சொல்லுகிறேன்.” சீதாப்பாட்டி காலடி எடுத்து வைத்தவள், அடுத்த நிமிஷம் “மை காட்!” என்று கீழே விழுந்து விட்டாள் – அமெரிக்கப் பிரசிடெண்ட் ஃபோர்டைப் போல. 

“அடடே! கைத்தடியைத் தலைகீழாக வைத்துவிட்டேன் போலிருக்கிறது,” என்ற அப்புசாமி டெஸ்கிலிருந்து விரைந்து வந்து சீதாப்பாட்டியைத் தூக்கிவிட்டார். “அடடே! முழங்காலில் ரொம்ப அடி போலிருக்கிறதே. சே! என்ன தடி… மேடம் நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக் கொள்ளணும்…” 

சீதாப்பாட்டி அலட்சியமாக அவரைப் பார்த்தாள். “ஐ யம் கொய்ட் ஆல்ரைட்! இன்னும் ஒன் அவரில் எக்ஸாம் முடிந்ததும் ஐ ஷல் லுக் இன் டு இட் யு கோ ஆன் வித் யுவர் வொர்க்.” 

இன்னும் ஒரே ஒரு மணிதான். 
 
கைக்கெட்டினதை வாய்க் கெட்டாதது மாதிரி கிழவி செய்துவிடுவாள் போலிருக்கிறதே. 

அவுட் கேள்விப் பேப்பர் கிடைப்பதற்கு அவர் பட்டபாடென்ன, அவைகளுக்கு மண்டையை உடைத்துக் கொண்டு புத்தகங்களைப் பார்த்துப் பதில் எழுதி வைத்ததென்ன, தையல் காரக் கிட்டானிடம் ஒரு ரூபாய் முழுசாகக் கொடுத்து ஜிப்பாக் கையில் மர்மப் பை வைத்ததென்ன? அத்தனையு மல்லவா வீணாகிவிடும் போலிருக்கிறது. பளிச்சென்று இன்னும் ஒரு யோசனை. 

திடீரென்று எழுந்து நின் றார்…”மாடம்.” என்று கூவினார். 

சீதாப்பாட்டி அலட்சியமாகத் தன் இடத்திலிருந்தவாறு, “எஸ்! வாட்டுயூ வாண்ட் அடிஷனல் ஷீட்ஸ்?” என்றாள். 

“மேடம்,” என்று அப்புசாமி இந்தத் தடவை உரக்கக் கூவினார். அதே சமயம் நெஞ்சைப் பிடித் துக் கொண்டு தடாலென்று டெஸ்க்கில் பின்னுக்குச் சரிந்து இருதய வலி வந்தவர்போல் துடிக்கத் தொடங்கி விட்டார். 

பேனா ஒரு பக்கம். பேப்பர் கள் ஒரு பக்கம். பரீட்சை ஹாலில் ஒரே பரபரப்பு. “மாடம். மாடம்”. என்று பல குரல்கள் பதறின. 

அப்புசாமி துடித்தார். “ஐயோ.. வலி. நெஞ்சுவலி இருதயத்தை ஏதோ அடைக்கிறதே சீதே… சீதே… சீக்கிரம் போய் டாக்டரை… நம்ம டாக்டரைக் கூட்டிவா. நீயே போனால்தான் டாக்டர்” வருவார். 

சீதாப்பாட்டி நிதானமாக “ப்ளீஸ்..கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக் கொள்ளுங்கள்… ஜிப்பாவை இவ்வளவு டைட்டாகப் போட்டுக் கொண்டு..” என்று பட்டனை அவிழ்த்து நெஞ்சை லேசாக நீவி விட்டாள். “இந்த ஜிப்பாவே வேண்டாம்!” டர்ரென்று கிழித்து ஜிப்பாவைப் பந்து போல் சுருட்டி எடுத்துக் கொண்டு விட்டாள். 

“சீதே! சீதே! ஏ சீதே!” அப்புசாமி அலறினார். “பனியனோடு மனுஷன் பரீட்சை எழுதுவானா? பாவி! மூளை இருக்கா உனக்கு?” 

“ப்ளீஸ்.. பரீட்சை எழுதாவிட்டாலும் பரவாயில்லை. உங்க ஹெல்த்தான் முக்கியம்..” 

“கிடையாது. எனக்கு ப் பரீட்சை தான் முக்கியம். குடு ஜிப்பாவை.” 

“ஐயோ காற்று தாராளமாக உங்க மேல் படணும். புன்னகைத்துக்கொண்டாள் சீதாப்பாட்டி. சென்ற வாரம் தற்செயலாக அப்புசாமியின் அழுக்கு ஜிப்பாவை வாஷுக்குப் போடக் கையில் எடுத்தபோது கையருகே பெரிதாக ஒரு பாக்கெட் இருந்ததை அவள் கவனிக்க நேர்ந்தது. இங்கே கொண்டுபோய் மர்மமாக ஒரு பாக்கெட் வைத்துக்கொண்டிருக்கிறாரே கிராக்குத்தனமாக என்று எண்ணிக் கொண்டாள். 

இதற்குள் யாரோ ஒருத்தர் போய் ஒரு டாக்டரைக் கூட்டி வந்துட்டார். அப்புசாமியின் நெஞ்சில் ஸ்டெதஸ்கோப் வைத்துப் பரிசோதித்தார் டாக்டர். “ஹி இஸ் கொய்ட் ஆல்ரைட். ரொம்ப நார்மலாக இருக்கிறார். ஏதாவது சுளுக்கு அல்லது வாயுப் பிடிப்பாக இருக்கும். லெட் ஹிம் டேக் ரெஸ்ட்.” 

சீதாப்பாட்டி குறுஞ் சிரிப்புடன் “அவருக்கு ரெஸ்ட் பரீட்சை எழுதுவதுதான். அதை எழுதாவிட்டால் தான் அவர் கவலைப்படுவார். லெட் ஹிம் ரைட் த எக்ஸாம்..” என்றாள். 

அப்புசாமி பல்லை நறநறத் தவாறு பேனா மூடியைக் கழற்றினார்.

விடைத்தாள் பாலைவனம் போல வெறுமையாகக் காட்சி தந்தது. விடைத்தார். அடிப்பாவி! ஜிப்பாவைக் கழற்றி விட்டாயேடி கடைசியிலே. 

ஆத்திரமாக வந்தது. தாளில் என்னத்தை எழுதுவது? ஒரு கேள்விக்கும் விடை தெரியவில்லை. ராம ஜெபம்தான் எழுதித் தொலைக்கணும். 

ராம் ராம் ராம் ராம். ராம் ராம்.. என்று வெறி பிடித்தவர் போல் மடமடவென்று ஐந்தாறு பக்கமும் எழுதித் தள்ளினார். 


ஒரு மாதம் கழித்து ஒருநாள்.

சீதாப்பாட்டி ஒரே உற்சாகமாக அவரிடம் வந்தாள். “யு நோ புரொஃபசர் வெங்கண்ணா இஸ் கமிங் டுடே! நீங்க அவர் வருகிறபோது அபத்தமாக ஏதாவது பேசிக் காரியத்தைக் கெடுத்துத் தொலைப்பீர்கள். யூ பெட்டர் கோ சம்வேர். ஒரு டு ரூபீஸ் தருகிறேன்.”

அப்புசாமி பல்லைக் கடித்தார். “உன் பித்ஸா ரூபாவை நீயே வைத்துக்கொள். நான் ஒண்ணும் நாய் மாதிரி வெளியே போகத் தயாராயில்லை. புரொபசர் வந்தாலும் சரி, புடலங்காய் வந்தாலும் சரி.”

கார் ஹார்ன் சத்தம் கேட்டுவிட்டது வாசலில். 

“ஐயோ.. அவர் வந்து விட்டார்”. விழுந்தடித்துக் கொண்டு முகமெல்லாம் மலரச் சீதாப்பாட்டி படிகளில் இறங்கி அவரை எதிர் கொண்டு அழைத்துச் சென்றாள். 

புரொபசர் வெங்கண்ணா ஒரு மாதிரியான பேர்வழி என்பது அவரது நடை, உடை, நெற்றிச் சின்னம் இவைகளைப் பார்த்ததுமே யாருக்கும் பளிச்சென்று தெரிந்து விடும். 

நெற்றியில் கண்ணை மறைக்கிற அளவுக்குப் பெரிய திருமண். ஆனால் கோட் சூட். வாக்கிங் ஸ்டிக். கையில் சின்ன பாம்ரேனியன் நாய். ரொம்ப முன்கோபக் காரராதலால் சீதாப்பாட்டி அவரை வரவேற்பதில் ஜாக்கிரதையாயிருந்தாள். 

“வாருங்கள். நீங்கள் வரப்போவதாக ரிங் பண்ணினதும் நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன்.” 

புரொஃபஸர் மெதுவாக நடந்து வந்தார் கையிலிருந்த நாய்க் குட்டியைத் தடவியவாறு, 

“ப்ளீஸ்.. என்ன கொண்டு வரட்டும்.. காப்பியா டீயா கூல்ட்ரிங்கா?'” 

“உங்க கணவரைக் கொண்டு வாருங்கள். நான் அவரைத் தரிசிக்கத்தான் வந்தேன். நாட் யூ..” என்றார். 

சீதாப்பாட்டிக்கு இடி விழுந்தது போலாகி விட்டது. 

விரைந்து மாடிக்குப் போய் அப்புசாமியிடம் விஷயத்தைச் சொல்லி அவரைக் கூப்பிட்டாள். 

அப்புசாமியைக் கண்டதும் வெங்கண்ணா. “மிஸ்ட்டர் ஃபைவ் ஸீரோ எயிட் நைன் நைன்! உங்களைக் கன்கிராஜுலேட் செய்யத்தான் வந்தேன்,” என்றார். 

அப்புசாமி “ஹிஹி…அதுதான் என் நம்பர். னால் பெயிலாப் போச்சே.. நோ பாஸ்… வாட் டூ? என்று உளறினார். 

சீதாப்பாட்டி “கர்மமே!” என்று தலையிலடித்துக் கொண்டாள். 

வெங்கண்ணா அப்புசாமியின் கையைப் பற்றிக் குலுக்கினார். “மிஸ்டர் அப்புசாமி.. என் வாழ்க்கையில் ஏறக்குறைய முப்பது வருடங்கள் பரீட்சைப் பேப்பர்கள் திருத்தியிருக்கிறேன். இந்த வருடத்துடன் நான்  திருத்துவது கடைசி. அந்தக் கடைசி வருடம் கடைசிப் பேப்பரைத் திருத்தக் கையிலெடுத்தேன்.. மனசுக்குள் ஒரே இடிந்துபோன பிரமை. இனி கல்வி உலகம் என்னை ஏன் மதிக்கப் போகிறது என்ற வெறுமை என்னை வாட்டியது. பெருமூச்சுடன் பேப்பரைப் பிரித்தேன். 

‘ராம் ராம் ராம் ராம்…’ என்று பேப்பர் முழுவதும் எழுதியிருந்தது. என் மனக் குறைக்கு ஆண்டவனே ஆறுதல் கூறுகிற மாதிரி இருந்தது, தாங்கள் எழுதியிருந்தது. ‘உழைத்தது போதும்டா வெங்கண்ணா. இனி நீ என்னைத் துதிப்பதில் உன் காலத்தை மகிழ்ச்சியாகக் கழி.’ என்று உங்கள் விடைத்தாள் கூறியது. இந்த ஞானத்தை எனக்குத் தந்த அந்த விடைத்தாளை எழுதியவர் யாரென்று விசாரித்தேன். எனக்கு இன்னும் தூக்கி வாரிப் போடும் செய்தி கிடைத்தது. இவ்வளவு வயசானவர் பரீட்சை எழுதினாரே என்று பரீட்சை ஹாலில் உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்து விட்டதாம். அந்தக் கடைசி கட்டத்திலும் நீங்கள் மனத்தை ஒருமைப்படுத்தி ‘ராம் ராம் ராம்’ என்று இவ்வளவு தாள்களில் எழுதியது என்பது நிச்சயம் தெய்வச்செயல்தான். வெங்கண்ணாவுக்காகவே தெய்வம் எழுதியது போலிருக்கிறது. உங்களுக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்?” 

புரொபஸர் வெங்கண்ணா கண்களைத் துடைத்துக் கொண்டார்.

அப்புசாமி வாயைப் பிளந்த வாறிருந்தார். ஒரு குட்டி குட்டிச் சுற்றுப் பயணம் செய்து விட்டு வெளியேறியது. 

சீதாப்பாட்டி, “ஒரு நிமிஷம் இப்படி வருகிறீர்களா?” என்று அப்புசாமியை உள்ளே கூட்டிச் சென்றாள். “ப்ளீஸ்..புரொபசர்கிட்டே நம்ம வேண்டுகோளைக் கேளுங்கள்.. அவருக்குச் சொந்தமான பக்கத்துக் காம்பவுண்டில் ஒரு பத்தடி இடத்தை எப்படியாவது விலை பேசி முடியுங்கள்.. திஸ் இஸ் கோல்டன் ஆப்பர்சூனிடி. அவரே வந்திருக்கிறார்.”

அப்புசாமி சீதாப்பாட்டியை அலட்சியமாகப் பார்த்தார். “நான் ஏண்டி கேட்கணும்? நானா காரில் போகிறேன்? உன் கார் தினமும் போகிற போதும் வருகிற போதும் குறுகலான கேட்டிலே இடிக்கிறது என்பதற்காக நான் அவர்கிட்டே பேரம் பேசணுமா?”

“ப்ளீஸ்.. நீங்க உங்க கரெஸ்பாண்டென்ஸ் கோர்ஸுக்காகக் கட்டின பணத்தையெல்லாம் டௌன் காஷா இப்போவே கொடுத்திடறேன்.. ஒரு ஃபைவ் ஹண்ட்ரட் இருக்குமா?”

“ஊஹூம் ஒரு ஏழு ஹண்ட்ரடாவது தந்தாகணும்”, என்றார் அப்புசாமி. 

“ஓ கே.” என்றாள் சீதாப்பாட்டி.  

“அது மட்டுமில்லே. செப்டம்பரிலே நான் பரீட்சை எழுத நீ உதவி பண்ணணும்.” 

“அக்ஸெப்டட்…” என்றாள் சீதாப்பாட்டி.

– 24-7-1975

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *