அப்புசாமி சீதாப்பாட்டி குட்டிக் கதைகள்

1
கதையாசிரியர்: , ,
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: October 29, 2013
பார்வையிட்டோர்: 50,023 
 

பால்பாயிண்ட்டில் ஒரு பாயிண்ட்

அப்புசாமியின் மேஜை டிராயரில் பத்துப் பன்னிரண்டு பழைய பால் பாயிண்ட் பேனாக்கள் இருந்ததைப் பார்த்து சீதாப்பாட்டி, “எதுக்கு இந்த கலெக்ஷன்?’ என்றாள்.

“எனக்கு எந்த பேனா வாங்கினாலும் சரியாக எழுதுவதில்லை. ஆனால் கூரியர் சர்வீஸ்காரர்கள் கையெழுத்துப் போடக் கொடுக்கும் பேனா மட்டும் நன்றாக எழுதுகிறது. வருகிற கூரியர்காரன்கிட்டே எல்லாம், அவன் பேனா தரவேயில்லை என்று சாதித்துக் கஷ்டப்பட்டுச் சேர்த்ததாக்கும் இதெல்லாம்’ என்றார்.

சுதந்திரம் என் பிறப்புரிமை…!

வாழ்க்கை வரலாறு எழுதுவதில் புகழ்பெற்ற ஒரு எழுத்தாளரிடம் அப்புசாமி, “என் வாழ்க்கை வரலாற்றை எழுதுங்களேன்’ என்றார்.

“மனைவிக்குப் பயந்து சுதந்திரமில்லாமல் இருக்கிறீர். அதை எழுதினால் உங்களுக்குக் கேவலம்தானே?’ என்றார் எழுத்தாள நண்பர்.

அப்புசாமி கோபித்தார், “எவன் சொன்னான், மனைவிக்கு பயந்தவன் நான் என்று? அவளது கொடுமைகளை அப்படியே புட்டு புட்டு வைக்கிறேன்’ என்றவர், “ஆமாம்… அச்சுக்குப் போறதுக்கு முன்னே புரூஃபை அவளிடம் காட்டி அவள் அனுமதி கிடைத்த பிறகு போடுங்கள். சரித்திரம் எனக்குத் தரித்திரம் ஆகிவிடக்கூடாது இல்லையா?’ என்றார்.

ஆயிரம் அழுதையை நிறுத்திய அபூர்வ சிந்தாமணி

வேலைக்காரி கைக்குழந்தையை ஒரு பக்கம் உட்கார வைத்துவிட்டு வேலை செய்து கொண்டிருந்தாள். குழந்தை, கையில் இரண்டு பிஸ்கெட்டை வைத்துக் கொண்டு ஙை ஙை என்று அழுதவாறு இருந்தது.

அப்புசாமி சமாதானம் செய்தார்: “நல்லபுள்ளே, அழாதே கண்ணு.’
குழந்தை அழுவதை நிறுத்தவில்லை.

இரண்டு நிமிஷம் கழித்துச் சட்டென்று நிறுத்திவிட்டது.
சீதாப்பாட்டி உள்ளிருந்த வந்து, “குழந்தை எப்படி அழுகையை நிறுத்தியது?’ என்றாள்.

“வேறொன்றும் இல்லை. அதற்கு நீ தந்திருந்த இரண்டு பிஸ்கெட்டுகளையும் வாங்கித் தின்று விட்டேன்’ என்றார் அப்புசாமி.

பிரபல எழுத்தாளர் யார்?

தனது எழுத்தில் கர்வம் உள்ள கதாசிரியர் ஒருத்தரை அப்புசாமி சந்திக்க நேர்ந்தது.

எழுத்தாளர் சொன்னார், “என் எழுத்தின் மதிப்பு உங்களுக்கு புரியாது.’
அப்புசாமி கேட்டார். “என்ன ஒரு எழுத்துக்கு ஒரு ரூபா சம்பாதிப்பீங்களா?’

“ஒரு எழுத்துக்கு ஒரு ரூபாயா? அவ்வளவு யார் தருவாங்க?’

“ஏன்? பாத்திரத்துக்கு எழுத்துப் போடுகிறவன் சம்பாதிக்கிறானே?’ என்றார் அப்புசாமி.

புனிதமான ஒரு புகை ஆராய்ச்சி

அப்புசாமியிடம் வயசான நண்பர் ஒருத்தர் கவலைப்பட்டார். “செத்துப் போகணும்னா ரொம்பக் கவலையாயிருக். இத்தனை சுகங்களையும் சந்தோஷத்தையும் வசதிகளையும் விட்டுவிட்டு எப்படிப் போறதுன்னு விசாரமாயிருக்கு’

அப்புசாமி அவருக்குப் பதிலளிக்காமல் ஒரு ஊதிப்தியை ஏற்றிவைத்தார்.

“இப்போ என்னத்துக்கு ஊதுபத்தி?’ என்றார் நண்பர்.

“இதிலேயிருந்து போன புகையை ஊதுபத்தி நினைத்துக் கவலைப்பட்டிருக்குமா என்பது ஆராய்கிறேன்’ என்றார் அப்புசாமி.

பெயர் செதுக்குவது ஏன்?

எவர்சில்வர் பாத்திரங்களுக்கு சீதாப்பாட்டி ஓர் ஆளை வைத்து பெயர் செதுக்கிக் கொண்டிருந்தாள். “ஏதாவது ஒரு பாத்திரத்துக்காவது என் பெயரைப் போடச் சொல்லு’ என்றார் அப்புசாமி.

“நீங்கள் என்ன தனிக்குடித்தனமா இருக்கீங்க?’ என்றாள் மனைவி.

“அதற்கு இல்லை. உன் மனசில்தான் என் பெயரை செதுக்க முடியவில்லை. ஒரு பாத்திரத்திலாவது இருக்கட்டுமே என்று பார்த்தேன்’ என்றார் அப்புசாமி.

எப்போதும் வென்றான்

அப்புசாமி தன் சினேகித கோஷ்டியுடன் டி.வி.யில் கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்தார்.

சீதாப்பாட்டியும் சோஃபாவில் சாய்ந்து கொண்டு சுவாரசியமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். இந்தியா பிரமாதமாக ரன் குவித்துக் கொண்டிருந்தது. “வி ஷûட் வின்! நாம இந்த மேட்சில் கட்டாயம் ஜெயித்தாகணும். எனக்கேகூட ஆசையாயிருக்கு.’

அப்புசாமி சொன்னார்: “அடியே கியவி, நான் மேட்ச் பார்க்கிறபோது நாமதான் ஜெயிக்கணும், எதிரி தோக்கணும்னெல்லாம் நினைச்சுக்கிட்டுப் பார்க்கமாட்டேன்.’

“யார் ஜெயிச்சா என்னான்னு இன்ட்டரெஸ்ட் இல்லாம பார்ப்பீங்களாக்கும்?’

“அப்படியில்லே… தோல்வி என்னைப் பாதிக்காது. நாம் ஜெயிச்சா ரசகுண்டு டிபன் வாங்கித் தரணும்னு ஒப்பந்தம் பேசிப்பேன். அதனாலே யார் ஜெயிச்சாலும் அந்த ஜெயிப்பு நான் ஜெயித்த மாதிரி’ என்றார் அப்புசாமி.

ராகமு தெலிஸா

சங்கீத சீஸன்போது ஒரு பகல் கச்சேரிக்கு அப்புசாமி போயிருந்தார். கச்சேரி முடிந்ததும் மேடையிலிருந்து இறங்கி வந்த பாடகரை அப்புசாமி பாராட்டினார்.

“ரொம்ப நன்றாக பாடினீர்கள்.’

“அப்படியா ரொம்ப சந்தோஷம்’ என்று மகிழ்ந்தார் பாடகர்.

அப்புசாமி சொன்னார். “ஒரு சின்ன வேண்டுகோள். நீங்கள் பாடுவதற்கு முன் இன்னராகம் பாடப் போகிறேன் என்று சொன்னால் நன்றாயிருக்கும்.’

“பேஷா இனிமேல் சொல்லிடறேன்’ என்றார் பாடகர்.

“அதோடு இன்னொரு விஷயமும் சொல்ல வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார் அப்புசாமி. “அந்த ராகம் மாதிரி இல்லையென்றால் மன்னித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிடுங்கள். ரொம்பப் பேர் சந்தோஷமாக மன்னிப்பார்கள்’ என்றார்.

உஷார்! உஷார்! புண்ணியம்

அப்புசாமி சந்தோஷப்பட்டார். “ஒரு பெரிய கடனிலிருந்து தப்பினேன்.’

நண்பர் கேட்டான், “யாருக்க எவ்வளவு பாக்கி வைத்திருந்தீர்கள்?’

“போன வருஷம் எக்ஸிபிஷனில் ஒரு துளசி மணி மாலை வாங்கினேன். 108 மணி, ஜபம் செய்யலாம் என்று சொன்னார்கள். கழுத்தில் போட்டுக் கொண்டிருந்தேனே தவிர நல்லவேளை நான் ஜபம் செய்யவில்லை. இன்றைக்குத்தான் மணிகளை எண்ணிப்பார்த்தேன். இரண்டு மணி குறைவாக 106தான் இருந்தது. அவர்கள் சொன்னதை நம்பி நான் ஜபம் செய்திருந்தான் தினமும் இரண்டு நாமம் குறைவாக ஜபித்திருப்பேன். ஒரு வருஷத்துக்கு 730 நாமம் குறைந்திருக்கும்’ என்றார்.

போகும்போது என்னத்தை…

அப்புசாமி ஊரிலிருந்து வந்த உறவினருடன் கடற்கரையில் உட்கார்ந்து கொண்டிருந்தார்.

“ரெண்டு பொட்டலம் சுண்டல் வாங்கேன்’ என்றார் உறவினரிடம்.
அவர் ரொம்ப விரக்தியுடன், “இந்த வயசிலே சுண்டலெல்லாம் நமக்கு எதற்கு?’ என்று வாங்கவில்லை.

அடுத்தாற்போல் முறுக்கு வந்தது.

உறவுக்காரர் “முறுக்கு கிறுக்கெல்லாம் எதுக்கு, ஏதாவது சத்தான விஷயமாகப் பேசலாம்’ என்றார்.

“போகிறபோது என்னத்தைக் கட்டிக் கொண்டு போகப் போகிறேன்’ என்று அங்கலாய்த்தார் உறவுக்காரர்.

“ஏன் பாடை கட்டிக் கொண்டு போவீர்களே?’ என்றார் அப்புசாமி எரிச்சலுடன்.

– ஜனவரி 2013

Print Friendly, PDF & Email

1 thought on “அப்புசாமி சீதாப்பாட்டி குட்டிக் கதைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *