அப்புசாமிக்குள் குப்புசாமி

0
கதையாசிரியர்: , ,
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 23, 2012
பார்வையிட்டோர்: 12,149 
 
 

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது’ என்பது பழமொழி. அப்புசாமி ஒரு புலியல்லவாதலால் அவர் புல்லைக் கிள்ளிக் கிள்ளித் தின்று கொண்டிருந்தார். ‘சீதாவுடன் ஒரொரு வேளைக்கும் டிபன் போராட்டம் நடத்துவதைவிட (வரும்போது கூட ஒரு கடினமான மெது பக்கோடா போராட்டம்) இப்படி அக்கடாவென்று பார்க்கில் வந்து உட்கார்ந்து புல்லைத் தின்பது எவ்வளவோ மேல்’ என்று எண்ணியவாறு புல்லைக் கிள்ளி அதன் பசுமையான பால் ருசியை அனுபவித்தவாறிருந்தார்.

சிந்தனை வசப்பட்டு இருக்கிறேன் என்ற சாக்கில் ஓர் இரண்டு கால் பிராணி புல்லை இப்படி மேய்வதைப் பார்த்துக்கொண்டு பார்க் வாட்ச்மேன் சும்மா இருப்பானா?

“என்ன பெரியவரே, உங்க தலை மாதிரி பார்க்கைப் பண்ணிட்டீங்களே கொஞ்ச நேரத்தில்? கையை வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியலையா?” என்று அவருக்குக் கண்டனம் தெரிவித்தான் அருகில் வந்து.

அப்புசாமி, “ஹி ஹி! இது… இது… ஏற்கனவே சொட்டையாகத்தானப்பா இருந்தது…” என்றவாறு எழுந்தார்.

“நல்ல ஆளு சார் நீங்க. இதுக்குத்தான் கதைப் புஸ்தகமும் கையுமாக வர்றவங்களைப் பார்க்குக்குள்ளே நான் விடறதில்லை. அதுவும் துப்பறியும் கதைப் புஸ்தகத்தை எடுத்திட்டு யாராச்சும் வந்தாங்கன்னா விடவே மாட்டேன். அவங்க பாட்டுக்குத் தலையைக் குனிஞ்சு கதையைப் படிச்சுகிட்டே புல் பூராவையும் பிடுங்கித் தள்ளிடுவாங்க… சரி… சரி… இந்தாங்க உங்க புஸ்தகம். எடுத்திட்டுப் புறப்படுங்க…”

“புஸ்தகமா?” என்று ஆச்சரியப்பட்ட அப்புசாமியின் கையில் பளபளவென்று அட்டை மின்னும் ஒரு புத்தகத்தை பார்க் வாட்ச்மேன் திணித்தான்.

“என்னடா இது எதிர்பாராத அதிர்ஷ்டமாக இருக்கிறதே. எந்தப் பயலோ மறந்து வைத்துவிட்டுப் போனதை வாட்ச்மேன் என்னுடையது என்று எண்ணிவிட்டான் போலிருக்கிறது” என்று நினைத்து மறுப்புச் சொல்லுமுன் புத்தகத்தை அவர் கையில் கொடுத்துவிட்டுக் காவல்காரன் போய்விட்டான். அந்தக் கதைப் புத்தகத்தை ஒருமுறை கண்ணால் பார்த்தார் அப்புசாமி.

வழவழவென்று அட்டை இருந்தாலும் பயங்கரமான மண்டையோட்டுப் படமாக இருந்தது. படத்தைவிடக் கதையின் தலைப்பு இன்னும் பயங்கரமாயிருந்தது ‘அந்தப் பிசாசின் பெயர் கழுகுமலை.’

அப்புசாமிக்குத் துப்பறியும் கதைகள் படிப்பது என்றால் சின்ன வயசில் அவ்வளவு பிரியம். ஆரணி குப்புசாமி முதலியார் ஒரு ரூமுக்குள் போய்க் கதவைச் சாத்திக் கொண்டாரானால் வெளியே வரும்போது இரண்டு தலையணைகளுடன் வருவாராம். ஒன்று அவர் கையில் எடுக்கப்போன அசல் தலையணை. இன்னொன்று அவர் ஒரே மூச்சில் எழுதிய துப்பறியும் நாவல்.

‘அந்தக் காலத்துத் துப்பறியும் புத்தகங்களை இப்படிப் பாக்கெட்டில் போட்டுக்கொள்ள முடியுமா? ஆள் வைத்துத் தூக்க வேண்டும். அட அட… வடுவூர் என்ன ஆரணி என்ன? என்று தன் வாலிபப் பிராயத்தை நினைத்துக் கொண்டவருக்கு மெய் சிலிர்த்தது.

காரணம், திடுமென்று அவருக்குத் தன் அண்ணா குப்புசாமியின் நினைவு வந்துவிட்டது. அப்புசாமிக்குக் குப்புசாமி என்று ஓர் அண்ணா இருந்தார். மகா பொல்லாதவர். அப்புசாமிக்கு நேர் எதிரிடையான சுபாவம் அவருக்கு. முரடர் என்றால் அப்படி முரடர். அப்புசாமிக்கு அரும்பு மீசை முளைத்திருந்த போது, குப்புசாமிக்கு இரும்பு மீசையாக இருந்தது.

ஒரு தினம், “டேய்! என் வேட்டியைத் துவைத்துக் கொண்டு வந்தாயாடா கழுதை!” என்று ஆற்றிலிருந்து அப்போதுதான் வந்த அப்புசாமியைப் பார்த்து அண்ணா குப்புசாமி மிரட்டினார்.

அப்புசாமி எரிச்சலுடன், “போடா… நான்… ஒண்ணும் உனக்கு வேலைக்காரனில்லை…” என்று சொல்லிவிட்டு முன்தினம் தான் படித்துக் கொண்டிருந்த துப்பறியும் புத்தகத்தைக் கையிலெடுத்தார்.

அடுத்த நிமிடம் அவ்வளவு பெரிய தடிப் புத்தகமும் டர்ரென்று இரண்டாய்க் கிழித்தெறியப்பட்டது குப்புசாமியால்.

“வரட்டும்டா! அப்பா வந்தால் சொல்கிறேன்” என்று அரும்புமீசை அப்புசாமி அழ, இரும்புமீசை குப்புசாமி இடிக்குரலில் சிரிக்க, அப்பா வர, அவரே குப்புசாமியைக் கண்டு பயந்தவராக, ‘அட அட! நம்ம குப்புவுக்கு என்ன பலம், என்ன பலம்… ஆயிரம் பக்கமுள்ள இந்தப் புத்தகத்தை வாழை நாராகக் கிழிக்கிற மாதிரி அவ்வளவு சுலபமாகக் கிழித்து விட்டானே?” என்று புகழுரைகள் கூறிவிட்டு நழுவிவிட்டார்.புத்தகத்தைக் கிழித்ததுடன் குப்புசாமிக்கு அப்புசாமி மேலிருந்த கோபம் போகவில்லை. அப்புசாமி, தான் போட்டுக் கொள்வதற்காகத் துவைத்து மடித்துத் தலையணை இஸ்திரி போட்டு வைத்திருந்த வேட்டி சட்டையைப் பலாத்காரமாகத் தானே எடுத்துப் போட்டுக் கொண்டுவிட்டார்.

அப்புசாமிக்குக் கோபம் தாளவில்லை. “மடையா, இன்னிக்கு என்னைப் பெண் பார்க்க வரப்போகிறாங்க… இல்லை… நான் பெண் பார்க்கப் போகணும். நீ இப்படி என் வேட்டி சட்டையை எடுத்துக்கொண்டு…!” என்று கத்தினார்.

“உன் முகரைக் கட்டைக்குக் கல்யாணம் ஒண்ணுதான் குறைச்சல்… நிக்கர் பனியன் போட்டுக் கொண்டுதான் பெண்ணைப் போய்ப் பாரேன்… எனக்கே கல்யாணம் ஆகலையாம், உனக்கென்னடா அதற்குள்” என்று கறுவினார் குப்புசாமி.

“உன் திருட்டு முழியையும், பரட்டைத் தலையையும் பார்த்தா எந்தப் பெண் சம்மதிப்பாள்? அப்படியே உனக்குக் கல்யாணம் நடந்தாலும், எந்த ஊர் ஜெயிலிலாவதுதான் நடக்கும். ரெளடி, கேடி” ஆத்திரத்தில் நன்றாகத் திட்டிவிட்டார் அப்புசாமி.

“என்னடா சொன்னே? என்னைப் பார்த்தா ரெளடி, கேடின்னு சொன்னே?”

அப்புசாமி சற்றே வளைந்த தன் மூக்கை இப்போது தொட்டுப் பார்த்துக் கொண்டார்.படுபாவிப் பயல் என்னமாகக் குத்தி உடைத்துவிட்டான்!

அப்புசாமிக்கு மூக்கு என்று ஒன்று உருப்படியாகத் தேறுமா, அவர் பிற்காலத்தில் மூக்கால் அழ முடியுமா என்று அவருடைய அப்பா படாத கவலையும் பட்டு ஒரு வழியாக அவருடைய மூக்கு, தண்டிலே கொஞ்சம் நெளி இருந்ததாலும் குணமாகிவிட்டது.

அந்தக் குப்புசாமி கடைசியில் கொள்ளிடம் வெள்ளத்தில் நீந்துகிறேன் என்று ஊரில் யார் யாரிடமோ பந்தயம் கட்டிவிட்டு முரட்டுத்தனமாக நீந்தி, கடைசியில் கரை ஏறி வராமல், எந்தத் தகவலும் இல்லாமல் போய்விட்டார்.

‘கிழவி எப்போது கழகத்திலிருந்து வந்து சோறு போடப் போகிறாளோ தெரியவில்லையே?’ என்று முணுமுணுத்தவாறு மேஜை விளக்கைப் போட்டுக்கொண்டு, தனக்குக் கிடைத்த ஓசிக் கதைப் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினார்.

“அந்தப் பிசாசின் பெயர் கழுகுமலை” தலைப்பை மட்டும் கவர்ச்சியாக வைத்து விட்டான். அந்த நாளைய துப்பறியும் கதை மாதிரி இருக்குமா?

பக்கங்கள் மெதுவாகப் புரண்டன. ஏதோ பரவாயில்லை மாதிரிதானே இருக்கிறது? இன்னும் கொஞ்சம் படித்தார்.

கழுகுமலைப் பிசாசு கதைக்கும் அவர் வாழ்க்கைக்கும் மிகவும் நெருக்கமான உறவு இருக்கும் போலிருக்கிறதே…

…கழுகுமலையும் ஏழுமலையும் இரு சகோதரர்கள். கழுகுமலை பொல்லாத ரெளடி. போக்கிரி. கொலைகாரன். ஏழுமலை ரொம்பப் பயந்த சுபாவமுள்ள நல்லவன். கழுகுமலை திடுமென்று ஒருநாள் யாராலோ கத்தியால் குத்தப்பட்டு இறந்து போனான்.

ஏழுமலைக்கு அண்ணன் செத்தது நிம்மதியாக இருந்தது. கொஞ்ச நாளைக்குத்தான். ஏன்?

கழுகுமலை செத்துப் போய்விட்டாலும், அவனுடைய ஆவி ஓயாமல் ஏழுமலையிடம் வந்து தொந்தரவு செய்து மிரட்டிக் கொண்டேயிருந்தது.

‘என்னைக் கொன்றவனை நான் பழி வாங்கணும். எனக்கு உன் உடம்பிலே இடம் கொடு, எனக்கு இடம் கொடு” என்று அந்த ஆவி கேட்டது.

அப்புசாமி கதைப் புத்தகத்தை மூடினார். மேற்கொண்டு படிக்க அவருக்குத் துணிவில்லை.

உள்ளே தனியே உட்கார்ந்து படிக்கப் பயமாயிருந்தது. வாசலுக்குப் போய்விட்டார்.

“ஐயோ சீதே, வேண்டாமே, வேண்டாமே…” என்று அப்புசாமி அலறினார் ராத்திரி பதினோரு மணிக்கு.

சீதாப்பாட்டி கடும் கோபத்துடன், “ஏன் இப்படி இந்த மிட் நைட்டில் அலறுகிறீர்கள்? அக்கம் பக்கத்துப் பங்களாக்காரர்கள் நான் ஏதோ உங்களுக்குச் சூடு போடுவதாக நினைத்துக் கொண்டுவிடப் போகிறார்கள்?” என்றாள்.

“தாயே சீதே…” என்றார் அப்புசாமி கையைக் கூப்பி, “எனக்குச் சூடு வேணுமானாலும் போடு. தயவு செய்து விளக்கை மட்டும் அணைக்காதே…”

சீதாப்பாட்டி கண்களை உருட்டிப் பார்த்து, “சுத்த அட்ராஷஸாக இருக்கிறது. விடிய விடிய உங்கள் ரூமிலே விளக்கு எரிய வேண்டுமா? நான் இதை அலெள செய்வதா? நெவர். நெவர்! ‘எலக்ட்ரிஸிடி பில்லை எங்க ·பாதர் இன் லாவா வந்து கட்டுகிறார்கள்?’ என்று சொல்லி விளக்கைப் பட்டென்று அணைத்த மறுவிநாடி அப்புசாமி, “ஐயோ, குப்புசாமி! குப்புசாமி! குப்புசாமி!” என்று அலறியவாறு பாட்டிமீது பாய்ந்து பாட்டியை ஒரே கட்டாய்க் கட்டிக்கொண்டு விட்டார்.

சீதாப்பாட்டி அரண்டு மிரண்டு போய் மறுபடி விளக்கைப் போட்டாள்.

அப்புசாமியின் கையும் காலும் உடம்பும் மணல் சலிக்கிற மிஷின் மாதிரி உதறிக்கொண்டிருந்தன.

“வாட் ஹாப்பண்ட் டு யூ…. ஏன் இப்படி உங்களுக்கு உடம்பு நடுங்குகிறது…?” என்று கேட்ட சீதாப்பாட்டி நிஜமாகவே கொஞ்சம் பயந்துதான் போய்விட்டாள். ‘பெராலிடிக் அட்டாக்’ ஆனவர் மாதிரி கை இப்படித் தொள தொளவென்று நடுங்குகிறதே..?

“எங்கே… எங்கே…என்னைப் பாருங்கள்…ஸ £ மீ ஸ்ட்ரெய்ட்… ஷாக் அடிச்ச மாதிரி அப்படி ஏன் கத்தினீர்கள்? உங்களுக்கென்ன கேடுகாலம்! ஏதாவது கெட்ட கனா கினா கண்டீர்களா என்ன? ப்ளீஸ்… ட்ரிங்க் திஸ் ·பர்ஸ்ட்…” என்று அருகிலிருந்த மண் கூஜாவின் குழாயைத் திருப்பி, குளுமையான தண்ணீர் ஒரு டம்ளர் அவரிடம் நீட்டினாள்.

அப்புசாமி கை நடுங்க அதை வாங்கியதால் டம்ளர் லொட லொடவென ஆடி, கொஞ்சம் குளிர்ந்த நீர் அவருடைய ஜிப்பாவுக்குள் சிந்தி அவரைக் கிச்சு கிச்சு மூட்டியது. ஆனாலும் அவரது மிரட்சி நீங்கவில்லை.

“சீதே… தயவு செய்து விளக்கை அணைத்து விடாதே… ராத்திரி பூரா எரியட்டும்… அப்போதுதான் குப்புசாமி என்கிட்டே வரமாட்டான்… ஆமாம். சீதே… குப்புசாமி பொல்லாதவன்…”

சீதாப்பாட்டி திகைத்துப் போனவளாக, “குப்புசாமியா? ஹ¥ இஸ் தட் சேப்?” என்றாள்.

“ஐயோ, அந்த ஜன்னலை கொஞ்சம் சாத்தேன்… குப்புசாமி பொல்லாதவன்…”

சீதாப்பாட்டி ஒன்றும் புரியாமல், “ஒய் டு யூ ஷிவர்? ஹ¥ இஸ் தட் குப்புசாமி?” என்றாள் சற்றுக் கோபத்துடன்.

“ஐயோ… என்னை ஒண்ணும் கேட்காதேயேன்…” என்றவர், “குப்புசாமி… அடே குப்புசாமி… என்னை மன்னித்துவிடுடா…விளக்கை அணைச்சப்புறம் வந்து என்னை மிரட்டாதே…” என்று அலறினார்.

சீதாப்பாட்டிக்கு ஒன்றும் விளங்கவில்லை.

“ஹ¥ இஸ் தட் குப்புசாமி?” என்று அதட்டுவது போலக் கேட்டாள். “யு ஆர் க்ரியேடிங் என் அன்னெஸஸரி ஸீன்!”

“குப்புசாமியைத் தெரியாதா சீதே… என் சொந்த அண்ணன் குப்புசாமியைத்தான் சொல்கிறேன். அந்தப் படுபாவிதான் என்னை வந்து மிரட்டுகிறான்.”

“ஓ மை காட்!” என்று சீதாப்பாட்டி வியந்தாள். “யுவர் ப்ரதர் குப்புசாமியா? அந்த ட்ராம்ப் மண்டையைப் போட்டு ஹா·ப் செஞ்சுரி ஆகப் போகிறதே?”

“ஆமாம் சீதே… ஆமாம்… அந்த முரட்டுப் பயலேதான். அவன் ஆவி வந்து என்கிட்டே ‘ரூம்’ கேட்கிறது. டேய் இடமில்லைடா என்றேன். நீ கொடுக்காட்டா பல்லைத் தட்டி விடுவேன் என்று மிரட்டுகிறான். சீதே, இப்போ குப்புசாமி என்ன குண்டாக ஆகிவிட்டான் தெரியுமா?”

சீதாப்பாட்டி அலட்சியமாகச் சிரித்தாள். “ஐயோ பாவம். ரியலி நீங்கள் உங்கள் ப்ரதரைப் பற்றி ஏதோ கனவுதான் கண்டிருக்கிறீர்கள்!”  

அப்புசாமி, “கனவா? கனவில்லை சீதே. நிஜமாகத்தான் குப்புசாமி வந்திருந்தான். என் மார்மேலே ஏறி உட்கார்ந்து கொண்டு, இறங்கவே மாட்டேன் என்றான்.”

“ஐ பிடி யூ… ஓல்ட் ஏஜ் இல்லையா? காஸ் ட்ரபிள்” என்று சீதாப்பாட்டி அனுதாபமாகக் கூறிவிட்டு, படுத்துக் கொள்ளுங்கள். நான் பக்கத்திலேயே இருக்கிறேன்… எந்தக் குப்புசாமியும் வரமாட்டார். நிம்மதியாகத் தூங்குங்கள்” என்று அவருக்குத் துப்பட்டியை இழுத்துப் போர்த்துவிட்டு அவரருகேயே உட்கார்ந்திருந்தாள்.

சீதாப்பாட்டிக்குத் தூக்கம் கலைந்தால் மறுபடியும் பிடிப்பதற்குக் குறைந்தபட்சம் மூன்று மணி நேரமாவது ஆகும்.

அப்புசாமி அருகே தூங்கிக் கொண்டிருக்க, சீதாப்பாட்டி மேஜை விளக்கின் வெளிச்சத்தில் சிறிது படிக்கலாமென்று தீர்மானித்தாள்.

அப்புசாமியின் தலையணை அடியிலிருந்த சிவப்பு நிறத்தில் பளபளவென்று ஒரு சிறிய புத்தகம் சீதாப்பாட்டியின் கவனத்தைக் கவர்ந்தது.

‘வாட் இஸ் திஸ் ட்ரேஷ்’ என்றவாறு எடுத்துப் பார்த்தாள். மர்மக் கதைப் புத்தகம். பெயர் : ‘அந்தப் பிசாசின் பெயர் கழுகுமலை.’

சீதாப்பாட்டி சிரித்துக் கொண்டாள். ‘சரிதான். இந்த மாதிரி சீப் த்ரில்லரெல்லாம் இப்போ படிக்கத் தொடங்கிவிட்டார் போலிருக்கிறது. அதனால்தான் அனாவசியமான நைட்மேர்ஸெல்லாம் அவருக்கு வருகிறது போலும்’ என்று உண்ணிக்கொண்டவள், என்னதான் இந்த மாதிரி புக்ஸ்களில் கதை இருக்கும் பார்க்கலாமே என்று படிக்கத் தொடங்கினாள்.

தமிழில் படிக்கக் கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் பொருட்படுத்தாது படித்துப் பார்த்தாள்.

படிக்கப் படிக்கச் சுவாரசியமாக மட்டுமல்லாமல் பாட்டிக்கே கொஞ்சம் திகில் கொடுக்க ஆரம்பித்துவிட்டது.

சீதாப்பாட்டி அந்தப் புத்தகத்தைப் பட்டென்று மூடி வைத்தாள்.

எத்தனையோ ஹிட்ச்சாக் மிஸ்டரிகளையெல்லாம் படித்தவளானாலும் கூட ராத்திரியில் தனியாக இந்தக் கதையைப் படிக்கும்போது என்னவோ மாதிரி இருந்தது.

தன் கட்டிலைக் கணவரின் கட்டிலுக்கு அருகே கொஞ்சம் இழுத்துப் போட்டுக்கொண்டு, ஜன்னலையெல்லாம் திரும்பத் திரும்பப் பார்த்தபடியே சாத்திவிட்டு வந்து படுத்தாள். துப்பட்டியைப் போர்த்துக் கொண்டாள். மேஜை விளக்கைக்கூட அணைக்கவில்லை.

“சீதே!” என்றார் அப்புசாமி.

தூக்கிவாரிப் போடத் திரும்பினாள் சீதாப்பாட்டி. “யூ ஹாவ் நாட் எட் ஸ்லெப்ட்?”

அப்புசாமி சீதாப்பாட்டியையே உற்றுப் பார்த்தார். அவருடைய கண்கள் மெதுவாக விரிந்தன. அகலமாயின. உதடுகளில் ஒரு விகாரமான புன்னகை தோன்றியது.

பாட்டியின் குரல் நடுங்கியது. “ஒய் டு யூ ஸ்டேர் மி? ஏன் என்னவோ மாதிரிப் பார்க்கிறீர்கள்?” என்று சீதாப்பாட்டியின் குரல் நடுங்கியது.

அப்புசாமி படுக்கையில் எழுந்து உட்கார்ந்தவர், துப்பட்டியை வீசி எறிந்தார். “ஹ ஹ ஹ! என்னைத் தெரிகிறதா உனக்கு?” கடகடவென்று சிரித்தார் அப்புசாமி.

சீதாப்பாட்டி வெலவெலத்துப் போய் விட்டாள்.

சற்று முன் பயந்து நடுங்கின அப்புசாமியா இவர்?

தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, சீதாப்பாட்டி, “என்ன பேத்துகிறீர்கள்? இப்போ கொயட்டாகப் படுக்கமாட்டீர்களா?” என்று அதட்டினாள்.

“என்னடீ… பெரிதாக கொயட் கியட்டுன்னு இங்கிலீஷ் பேசுகிறே? பல்லைக் கழட்டிப் போடுவேன். வராத பெரிய மைத்துனன் வந்திருக்கிறேன்… அடக்கமில்லாமல் கழுதை, எதிரில் நின்றா பேசுகிறே?”

சீதாப்பாட்டி திடுக்கிட்டாள். “வாட் நான்ஸென்ஸ் ஆர் யூ டாக்கிங்?”

அப்புசாமி கட்டில் மேலிருந்து ஜிங்கென்று கீழே குதித்து ஒரு கையை மட்டும் இடுப்பில் வைத்துக்கொண்டு, “எச்சரிக்கை பண்றேன். என்கிட்டே இங்கிலீஷ் பேசாதே. வாயைக் கிழிச்சுடுவேன். இந்தக் குப்புசாமியை உன் புருஷன் மக்கு அப்புசாமி மாதிரின்னு நினைக்காதே.”

சீதாப்பாட்டிக்குப் பொடிப் பொடியாக வியர்த்தது. “வந்து… வந்து… ஆர் யூ… ஆல்ரைட்?” என்றாள்.

“ஆள் ரைட்டு தான்… தப்பு இல்லை… நான் தான் குப்புசாமி. உன் பெரிய மைத்துனன் குப்புசாமி. என்னை நீ எங்கே சரியாகப் பார்த்திருக்கப் போகிறே? ஆமாம், என் தம்பி மடையன் இப்போ எப்படி இருக்கிறான்.”

மீசை இல்லாவிட்டாலும் ஒரு கை முறுக்கிக் கொண்டிருந்தது. ஒற்றைக்கால் மட்டும் தையல்காரனுடையதைப் போல ஆடிக்கொண்டிருந்தது.

சீதாப்பாட்டி பிரமித்து நின்றாள். ‘வாட் இஸ் ஆல் திஸ்? ஆல் அ·ப் எ சடன். இவர் இப்படித் திடுமென்று மாறிவிட்டாரே. ஒருகால் அவர் பயந்து மிரண்டது போல குப்புசாமியின் கோஸ்ட்தான் அவருக்குள்ளே புகுந்து கொண்டு… சீதாப்பாட்டியின் தொண்டையைப் பயம் அடைத்தது. அப்புசாமியின் விழி இப்போது குடிகாரன் விழி மாதிரி இருந்தது. ஜாடியிலிருந்த தண்ணீரைக் கண்ணாடி டம்ளரில் பாதி அளவு ஊற்றி, மது அருந்துவது போலக் கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சிக் குடித்தவர், “நல்லாயில்லே… மோசம்…” என்று திடீரென்று கண்ணாடி டம்ளரைத் தரையில் வீசி அடித்தார். “என்ன சரக்கு வாங்கி வச்சிருக்கே, பச்சைத் தண்ணி மாதிரி?” என்று.

“ஓ! மை காட்!” என்று சீதாப்பாட்டி அலறியவாறு காலைப் பிடித்துக்கொண்டாள். கண்ணாடித் தூள் ஒன்று அவள் காலைத் தாக்கிப் பதம் பார்த்துவிட்டது.

“இன்னுமா நிக்கிறே? ஹ ஹ ஹ! கண்ணாடி பொத்துட்டுதா? போய் உன் தொடை நடுங்கிப் புருஷனை என்கிட்டே சண்டைக்கு வரச்சொல். அவனை நான் நார் நாராகக் கிழிச்சுப் போடறேன், உன் கண் எதிரே…”

விருட்டென்று அருகிலிருந்த பழம் நறுக்கும் கத்தியை எடுத்து, பீரோ மேல் வீசி அடித்தார். ‘சதக்’ என்று அது மரக் கதவில் தைத்துக்கொண்டது. “ஹ ஹ ஹ! என்கிட்டே எந்தப் பயலாவது வாலை ஆட்டினால் இந்தக் கதிதான். இப்போ நான் தூங்கப் போகிறேன். யாராவது தொந்தரவு பண்ணினீர்களானால் தொலைத்து விடுவேன் தொலைத்து. எழுந்திருக்கிறதுக்குள் சூடா தோசை இட்லி, காப்பி தயாராக இருக்கணும்… தெரியுதா?”

அப்புசாமி இப்படிச் சொல்லிவிட்டுத் தொப்பென்று படுக்கையில் விழுந்தார்.

சீதாப்¡ட்டி பயந்து நடுங்கியவளாக அறையின் ஒரு மூலையில் ஒட்டறைபோல ஒட்டிக்கொண்டிருந்தவள் கட்டிலில் துவண்டு படுத்திருந்த அப்புசாமியைப் பார்த்தவாறு பல கணங்கள் நின்றாள்.

நெருப்பு வைத்த பட்டாஸை நெருங்குவது போல் ஜாக்கிரதையாக அடிமேலடி வைத்து அப்புசாமியை நெருங்கினாள் சீதாப்பாட்டி.

துவண்டு கந்தல் போலக் கிடக்கும் இவரா சற்றுமுன் ‘சதக்’ என்று கத்தியை வீசிப் போட்டு ஆர்ப்பாட்டம் பண்ணினவர்?

தான் கண்டது எதுவும் கனவா என்று கண்களை ஐஸ் வாட்டரினால் துடைத்துக்கொண்டு மறுபடியும் பார்த்தாள். கனவல்ல என்பதற்குச் சாட்சியாக பீரோவில் பதிந்த கத்தி அப்படியே இன்னும் இருந்தது.

அருமையான ரோஸ் உட் பீரோ. அந்தப் பீரோ மேல் ஞாபகமறதியாகக் கையைத் துடைத்துவிட்டார் அப்புசாமி என்பதற்காக ஒரு நாள் அவ்வளவு சண்டை போட்டிருக்கிறாள்.

இப்போது குரூரமாக ஒரு கத்தி அதில் பாய்ந்திருந்தது. தன் கண்ணிலே அந்தக் கத்தி பாய்ந்த மாதிரி இருந்தது சீதாப்பாட்டிக்கு.

அதை மெதுவாக உருவி எடுத்துப் பீரோவைத் தடவிக் கொடுத்தாள். கட்டிலில் படுத்திருந்த அப்புசாமியைப் பார்த்தாள்.

அவர் துவண்டு போய்ப் படுத்திருந்தார். ஓசைப்படாமல் அருகில் சென்று அவரை உற்றுப் பார்த்தாள். மெதுவாக அவர் உடம்பைத் தொட்டுப் பார்த்தாள்.

விலுக்கென்று பயந்து கொண்டவர் மாதிரி அப்புசாமி கண் விழித்துக் கொண்டார்.

மிரள மிரள அவர் விழிகள் சீதாப்பாட்டியைப் பார்த்தன.

“சீதே.. குப்புசாமி… குப்புசாமி போய் விட்டானா?” அப்புசாமி கேட்டார்.

சீதாப்பாட்டி ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்¡ள். சற்று முன் முரட்டுத்தனமாக ஆர்ப்பாட்டம் செய்த அப்புசாமியா இவர்?

“சீதே” அப்புசாமியின் குரல் நடுங்கியது. “உடம்பெல்லாம் என்னவோ பண்ணுகிறதே சீதே… சொஞ்சம் தண்ணீ… தண்ணீ கொஞ்சம் உன் கையாலே…”

சீதாப்பாட்டி குழப்பமுற்றவளாக, “எஸ்… இதோ தரேன்” என்று மண் கூஜாவிலிருந்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றித் தந்தாள்.

மடக் மடக்கென்று அப்புசாமி குடித்துவிட்டு, ரகசியக் குரலில், “அவன்… அவன்… அவன் போய்விட்டானா?” என்றார் மூச்சுத் திணற.

சீதாப்பாட்டி அப்புசாமியின் ஜிப்பாப் பித்தான்களை லூஸ் செய்துவிட்டு, “கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். உங்கள் அண்ணன் போய்விட்டார்” என்றாள்.

அவரை மீண்டும் தூங்கச் செய்துவிட்டுத் தானும் தூங்க நெடுநேரமாகி விட்டது சீதாப்பாட்டிக்கு.

காலையில் எழுந்து படுக்கையில் பார்த்தால் அப்புசாமியைக் காணோம். ‘எங்கே போனார் சொல்லாமல் கொள்ளாமல்’ என்று ஆத்திரப்பட்டுக் கொண்டே சமைத்தாள்.

காலை பத்துமணி சுமாருக்குக் கதவை உடைக்கிற மாதிரி யாரோ தட்டினார்கள்.

“கமிங்… கமிங்… டோன்ட் ப்ரேக் த டோர்…” என்று குரல் கொடுத்தவாறே கதவைத் திறந்த சீதாப்பாட்டிக்குத் தூக்கிவாரிப் போட்டது.

அப்புசாமி அவ்வளவு உரக்கத் தட்டியது. கழுத்தில் ஒரு கைக்குட்டை கட்டிக்கொண்டிருந்தார். கையில் ஒரு சுருட்டுப் புகைந்தது.

அப்புசாமி சுருட்டைச் சட்டென்று காலில் போட்டு ஒரு மிதி மிதித்துவிட்டுப் புகையை ‘உ·ப்’ என்று பாட்டியின் முகத்தில் ஊதினார்.

“நான்ஸென்ஸ்!” என்று சீதாப்பாட்டி ஆத்திரத்துடன் கத்திவிட்டாள்.

அடுத்தகணம் பாட்டியின் கன்னத்தில் பளார் என்று ஓர் அறை விழுந்தது.

சீதாப்பாட்டிக்குப் பொறி கலங்கி விட்டது.

அப்புசாமி ஆக்ரோஷத்துடன், “பொம்பளையாட்டமா பேசறே நீ? தம்பி சம்சாரம், கை நீட்டப்படாதுன்னு நான் பார்த்தால், இந்தக் குப்புசாமியைப் பார்த்து ‘நான்ஸென்ஸ்’ என்கிறே? எங்கே இட்லியும் தோசையும்? நேற்றே சொன்னேனே?” என்றார்,

சீதாப்பாட்டிக்குக் கன்னம் விண்விண்ணென்று வலித்தது.

“வந்து… வந்து.. எக்ஸ்க்யூஸ்மி. ஸாரி. தரலி ·பர்காட்டன்…மாவு ரெடியாக இருக்கிறது…இதோ…” என்று சொல்லி வாய் மூடி இருக்கமாட்டாள். பளார் என்று இன்னோர் அறை.

சீதாப்பாட்டியின் வாய் உப்புக் கரித்தது. வாய்க்குள் சிறிய சீடை மாதிரி ஏதோ தட்டுப்பட்டது. துப்பிப் பார்த்த பிறகுதான் பல்லென்று தெரிந்தது.

சீதாப்பாட்டி கையும் காலும் உடம்பும் நடுங்க, அவசர அவசரமாக ஸ்டவ்வைப் பற்றவைத்து. தோசைக் கல்லைப்போட்டு விழுது நெய்யாக ஊற்றி பதின்மூன்று பதினாலு தோ¨சைகள் வார்த்து அப்புசாமியின் எதிரில் கொண்டு போய் வைத்தாள்.

கால் மணியில் தட்டு காலி.

“நிச்சயம் இது குப்புசாமியின் கோஸ்ட்தான். ஒரு டஜனுக்கும் அதிகமான தோசையை இவ்வளவு சீக்கிரம் சாப்பிட முடியுமா?” என்று எண்ணிக்கொண்டவளுக்குத் தேகம் நடுங்கியது.

டிபன் சாப்பிட்டு முடித்தபின் கையைக் கழுவி கொண்டு சீதாப்பாட்டியின் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட கெட்டித் தலையணை நாலைந்தை எடுத்துத் தலைக்கும் காலுக்கும் வைத்துக்கொண்டு அப்புசாமி படுத்துவிட்டார்.

பெரிய மைத்துனரான குப்புசாமியை அவள் ஒரு நாளில் பார்த்ததில்லை. ‘சுத்த ரெளடி’ என்று தைரியமாகச் சொல்லியிருக்கிறாள் பலதரம். அதற்கெல்லாம்தான் அந்தப் பிசாசு இப்போது பழி வாங்குகிறதா?

மதியம் மூன்று மணி. காப்பி நேரம். அப்புசாமி படுத்திருந்தார்.

சீதாப்பாட்டியைக் கவலையும் பயமும் பிடித்தாட்டின.

அவரை எழுப்புவதா வேண்டாமா? எழுப்பினால் ஏன் எழுப்பினாய் என்று பாய்வாரோ? எழுப்பா விட்டால் ஏன் எழுப்பவில்லை என்று தாக்குவாரோ!

எழுப்பினால் எழுந்திருப்பவர் அப்புசாமியாக இருக்குமா, குப்புசாமியாக இருக்குமா? தவித்தாள் சீதாப்பாட்டி.

கணவனைத் திடீரென்று பிடித்துவிட்ட இந்தப் பிசாசை எப்படி விரட்டி அடிப்பது என்று சீதாப்பாட்டி உருகித் தவித்துப் போனாள்.

பிசாசு… பேய் என்பதெல்லாம் சுத்தக் கர்னாடகமானவை…அவற்றையெல்லாம் பிலீவ் செய்வது சுத்த அநாகரிகம்’ என்று எண்ணுகிறவள் சீதாப்பாட்டி. பூனை குறுக்கே போவது போன்று சாதாரண சூபர்ஸ்டிஷன்களையே அவள் நம்பமாட்டாள்.

கணவனைக் குப்புசாமிப் பிசாசு பிடித்திருப்பதை அவள் யாரிடம் போய்ச் சொல்லுவாள்? பா.மு. கழகத்துக்குத் தெரிந்தால் கை கொட்டிச் சிரிப்பார்கள் எல்லாரும்.

யாராவது ‘சைக்யாட்ரிஸ்ட்’டின் உதவியைத்தான் நாடவேண்டும் என்று எண்ணிக்கொண்டு மாலை நேர டிபனைச் செய்து முடித்துவிட்டு ஹாலுக்கு வந்து பார்த்தவளுக்குத் திக்கென்றது. 

இரும்பு பீரோவைத் திறந்து குப்புசாமி ஒரு கற்றை ரூபாய் நோட்டுகளைத் தன் ஜிப்பா பாக்கெட்டில் போட்டுக் கொண்டிருந்தார்.

சீதாப்பாட்டி தாள முடியாக கோபத்துடன், “அட்ரோஷியஸ்! எதற்குப்பணம் எடுக்கிறீர்கள்? எப்படிக் கிடைத்தது சாவி?” என்று கத்தினாள்.

“சீ கழுதை? ஏதாவது சத்தம் போட்டால் மென்னியை முறித்து விடுவேன். கபர்தார்! இந்தக் குப்புசாமியின் ஓரோர் விரலும் ஒரு சாவி என்கிறது ஞாபகமிருக்கட்டும். ஹ ஹ ஹ!”

குப்புசாமி போகிற போக்கில் சாவிக் கொத்தை வீசி எறிந்தது சீதாப்பாட்டியின் முகத்தில் வந்து விழுடித்தது.

இடிந்த பொடிந்து உட்கார்ந்துவிட்டாள் சீதாப்பாட்டி. ‘பச்சையான பர்க்ளரியாக இருக்கிறதே! ஐ கான்ட் டாலரேட்… என்று கொதித்தது அவன் உள்ளம். ஆனால், அவர் அப்புசாமியாக இருந்தால் அல்லவா அவள் மிரட்டல் பலிக்கும்?

குப்புசாமியாகவல்லவா இருக்கிறார்?

கதவைப் படீரென்று ஓர் உதை விட்டவாறு வெளியேறின குப்புசாமி நிலைப்படியில் நின்று, “சினிமாவுக்குப் போகிறேன். ராத்திரிக்கு வெஜிடபிள் பிரியாணி செய்து வெங்காய சாம்பார் – அரைத்து விட்டது – வைத்து கத்திரிக்காய் பொரியலும் மிளகு ரசமும் அப்பளமும் பண்ணி வை. தெரிகிறதா? ஏதாவது ஓர் அயிட்டம் குறைந்தாலும் பெல்ட் தோல் பிய்ந்து போய்விடும். அந்த மக்குப் பயல் அப்புசாமி வந்தால் அண்ணன் உன்னை வீட்டிலேயே இருக்கச் சொன்னார்னு சொல்லி வை. தெரிகிறதா?” கட்டளையிட்டுவிட்டுப் போய்விட்டார். சீதாப்பாட்டி அசந்து போய்விட்டாள்.

தன் கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டாள். கழகத்தில்அவளுக்கு முக்கியமான தலைபோகிற வேலை இருந்தது. ஸ்மால் ஸேவிங்ஸ் திட்டத்தைப் பற்றி அவர்கள் கழகத்தில் அன்றையதினம் அமைச்சர் வந்து பேசுவதாக ஏற்பாடாகி இருந்தது.

பிரசிடெண்ட் என்கிற முறையில் சீதாப்பாட்டி பர்சனலாக, தானே சென்று அமைச்சரைக் கூட்டி வருவதுதான் கெளரவம் என்று கருதினாள்.

அக்கிரமக் குப்புசாமியோ வெஜிடபிள் பிரியாணியும் வெங்காய சாம்பாரும் வைக்க வேண்டுமென்று மிரட்டிவிட்டுப் போய்விட்டார். பிசாசு பிடித்த கணவனக்குப் பயந்து வெஜிடபிள் பிரியாணி செய்வதா – கழக வேலையைக் கவனிப்பதா?

பாட்டி தவித்தாள்.

கடைசியில் டிரஸ் சேஞ்ச் செய்துகொண்டு சீக்கிரம் மீட்டிங்குக்குப் போய்விட்டு உடனே திரும்பி சமையலையும் செய்து முடிப்பது என்று தீர்மானித்து கழகத்துக்குப் புறப்பட்டுவிட்டாள்.

சிறு சேமிப்புத் திட்டத்தின் துணைத் தலைவர் என்கிற முறையில் அமைச்சர் பேசிக்கொண்டிருந்தார் சுவாரசியமாக. பா.மு.கழக அங்கத்தினர்கள் மிகவும் அரிஸ்டோக்ரட் ஆனவர்களாதலால் அடிக்கடி கைதட்டாமல் எப்போதாவது ஓரிரு தடவை லேசாகக் கைதட்டி அவர் கருத்துகளை வரவேற்றனர். கழகத்தின் எல்லாப் பாட்டிகளும் தங்கள் பிரசிடெண்ட் காலத்துக்கேற்பப் பொருத்தமான பிரசங்கியைத் தேர்ந்தெடுத்துக் கூட்டி வந்ததைப் பற்றி வெகுவாகத் திருப்திப்பட்டனர். அமைச்சரிடமிருந்து ஏதாவது டொனேஷன்கூட வரக்கூடுமென்று விழயமறிந்த வட்டாரங்கள் பேசிக்கொண்டன.

வெற்றிகரமான நிகழ்ச்சியாக அது அமைந்தாலும் அமைச்சருக்கு அருகில் உட்கார்ந்திருந்த சீதாப்பாட்டியின் முகத்தில் ஏன் உற்சாகமில்லை என்று அங்கத்தினர்கள் கிசுகிசுத்துக் கொண்டார்கள்.

அமைச்சர் சிறு சேமிப்புப் பற்றிப் பேசி முடிந்ததும், சீதாப்பாட்டி பேசுவதற்கு எழுந்தாள். கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்ட அவளுக்குக் கை நடுங்கியது. மணி எட்டாகப் போகிறது. இன்னும் ஹார்ட்லி ஒன் அவர்தான் இருக்கிறது. அதற்குள் இங்கே பேசிமுடித்து வீடு திரும்பி வெஜிடபிள் பிரியாணியும் வெங்காய சாம்பாரும் செய்ய முடியுமா? இம்பாஸிபள்…ஓ…யூ…வாக்கிங் கோஸ்ட்…’

பாட்டி தொண்டையைக் கனைத்துக்கொண்டாள். அவள் கை நடுங்குவது அங்கத்தினர்களுக்குக் கூடத் தெரிந்தது.

அமைச்சருக்கும் தெரிந்தது. பாட்டி ஒரு நல்ல பிரசங்கி என்பது அமைச்சருக்குத் தெரியாததால் பாட்டியின் கை நடுக்கத்தைப் பார்த்து, ‘சும்மா பேசுங்க பெரியம்மா… பயப்படாதீங்க…’ என்று தைரியப்படுத்தலாமா என்றுகூட நினைத்தார். ஆனால், ஒன்றும் சொல்லவில்லை.

சீதாப்பாட்டிக்கு வார்த்தைகளே வரவில்லை. தட்டுத் தடுமாறி ஆரம்பித்தாள்.

“ரெஸ்பெக்டட் மிஸ்னிட்டர்…அண்ட் மைடியர்… வெஜிடபிள் பிரியாணி!”

பா.மு. கழகம் அப்படியே ஸ்தம்பித்துவிட்டது! அமைச்சர் திகைத்துவிட்டார். மை டியர் வெஜிடபிள் பிரியாணியாமே!

மூச்சு வாங்கியது சீதாப்பாட்டிக்கு! குழப்பம் காரணமாகத் தான் ‘வெஜிடபிள் பிரியாணி, என்று உளறித் தொலைத்து விட்டோமே என்பதை நினைக்க அவளுக்கு வியர்த்தது. மூச்சுத் திணறியது. கழகத்தில் ஏற்பட்ட கலகலப்பையும் சலசலப்பையும் பார்த்து மேலும் கதிகலங்கிப்போய் முற்றிலும் நிதானம் இழந்துவிட்டாள்.

கடையில் எப்படியோ தன்னைச் சமாளித்துக் கொண்டு… “ஸாரி.. மை டியர் மெம்பர்ஸ் அ·ப் த பா.மு.க!… நான் உங்களை வெஜிடபிள் பிரியாணி என்று சொன்னது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம்… ஆனால், பா.மு.க.என்பது என்னைப் பொறுத்தவரையில்… இன் பை ஹம்பிள் ஒபினியன்… அது வெஜிடபிள் பிரியாணி தான்…லெட் மீ எக்ஸ்பிளெய்ன்… நாம் இப்போது கொண்டாடுவது சிறு சேமிப்பு வாரம். இதற்கும் வெஜிடபின் பிரியாணிக்கும் க்ளோஸ் ரிலேஷன்ஷிப் உண்டு வெஜிடபிள் பிரியாணியில் சின்ன சின்ன அளவில்தான் நாம் காய் போடுகிறோம். ஆனால், கடைசியில்…வி கெட் வாட் எ நைஸ்… டெலீஷியஸ்…ப்ராடக்ட்… நம் பா.மு. கழகமும் ஒரு வெஜிடபின் பிரியாணிதான். நாம் எல்லாரும் அவரவர் கெபாஸிடிக்கு தகுந்த மாதிரி சொஸைடிக்குச் சின்ன சின்ன சிறு சிறு சர்வீஸ்கள் செய்கிறோம். பட்… எல்லாமாகச் சேர்ந்து வெஜிடபிள் பிரியாணி மாதிரி பிரமாதமாக நம் சேவை எல்லா இடமும் மணக்கிறதல்லவா…!”

பாட்டி இப்படிப் பேசியதும் ஒரே உற்சாகமான ஆரவாரம், கைத்தட்டல்கள்.

‘பிரசிடெண்ட்ஜி என்ன ப்ளஸண்ட் சர்ப்ரைஸ் கொடுத்துவிட்டார்கள்!’ என்று சீதாப்பாட்டியை அங்கத்தினர்கள் மனத்துக்குள் பாராட்டினர்.

மேலும், சிறிது பேசிவிட்டு சீதாப்பாட்டி கைக்குட்டையால் தன் நெற்றியில் பொடித்திருந்த வியர்வையைத் துடைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டார்.

கூட்டம் முடிய எட்டேகாலாகி விட்டது.

சீதாப்பாட்டிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இனிமேல் போய் எப்போது சமைப்பது?

‘பெல்ட் பிய்ந்துவிடும்’ என்று குப்புசாமியின் கரகரத்த குரல் எச்சரித்தது அவள் மேனியை நடுங்கவைத்தது.

இனிமேல் சமைக்க முடியும் என்ற நம்பிக்கை துளியும் அவளுக்கு இல்லை.

‘எந்த ஓட்டலிலிருந்தாவது வாங்கிப்போய் சமாளிக்க வேண்டியதுதான்’ என்று தீர்மானித்தாள்.

பல ஓட்டல்களுக்குச் சீதாப்பாட்டியின் கார் பறந்தது. வெஜிடபிள் பிரியாணிதான் ரொம்பச் சோதித்துவிட்டது. ஏழெட்டுப் பெரிய ஓட்டல்களில் விசாரித்தும் சோதனையாக வெஜிடபிள் பிரியாணி மட்டும் கிடைக்கவில்லை. கடைசியில் மவுண்ட்ரோடிலிருந்த சிறிய சாதாரணமாக ஓட்டல் ஒன்றில் நம்பிக்கை இழந்து சீதாப்பாட்டி கேட்டாள். என்ன ஆச்சரியம். அந்த ஓட்டலில் கிடைத்தேவிட்டது.

வீடு திரும்பும்போது மணி ஒன்பதரை.

குப்புசாமி எந்த நிமிடத்தில் வந்து என்ன என்ன ஆர்ப்பாட்டம் பண்ணுவாரோ என்று எண்ணியவாறு அவர் வந்ததும் சாப்பிட டேபிள் மேல் தயாராக உணவைப் பரிமாறி வைத்திருந்தாள்.

‘ஏன் நான் வருவதற்குள் பரிமாறினாய்?’ என்று கூச்சல் போடுவாரோ என்றும் உதைப்பாக இருந்தது. ‘எங்கே இன்னும் காணோம்?’ என்று எட்டிப்பார்த்தாள்.

வாசலில் கை ரிக்ஷா ஒன்று வந்து நின்றது. அதில் இருந்து குப்புசாமி இறங்கினார்.

ரிக்ஷாக்காரன் அவரிடம், “இன்னா சார்…போட்டுக் குடு சார் …’ என்று வாதாடினான்.

குப்புசாமி பலவீனமான குரலில், “சீதே…இங்கே பார், இவன் என்னவோ வம்பு பண்றான்?” என்று சிணுங்கினார்.

சீதாப்பாட்டிக்கு ஒரேஅதிர்ச்சியாக இருந்தது. ஆனந்தமாகவும் இருந்தது. அட! இவரைப் பிடித்திருந்த குப்புசாமி போய்விட்டான் போலிருக்கிறதே..

அப்புசாமி பழைய அப்புசாமி மாதிரி உள்ளே சாதுவாக வந்தார்.

வந்தவர் மேஜைமீது தயாராக இருந்த உணவு வகைகளைப் பார்த்தும், “அட, இன்னிக்கு என்ன விசேஷம்?” என்றார் பாட்டியைப் பார்த்து.

“விசேஷமா?” பாட்டி அவர் அருகில் வந்து உற்றுப் பார்த்தாள். மெதுவாக அவரைத் தொட்டுப்பார்த்தாள். “நீங்க மிஸ்டர் அப்புசாமிதானே… ஐ மீன் குப்புசாமி இல்லையே.”

“குப்புசாமியா?… சீதே.. எங்கே குப்புசாமி?” என்று அடுத்தகணம் அப்புசாமிக்குக் கையும் காலும் உதற மிரள மிரள விழ்த்தார். ‘ஏண்டாப்பா குப்புசாமி பெயரைச் சொன்னோம்’ என்றாகிவிட்டது. சீதாப்பாபட்டிக்கு. “பயப்படதீர்கள். குப்புசாமி என்று யாரும் கிடையாது. ப்ளீஸ்… தைரியமாயிருங்கள்… குப்புசாமி இன்·ப்ளூயன்ஸ் உங்களிடமிருந்து போக வேண்டுமானால் நீங்கள் தைரியமாயிருக்கணும். ·பர் காட்ஸ் ஸேக் தைரியமாயிருங்கள். எனக்காகத் தைரியமாயிருங்கள்… இதோ… உங்களுக்குப் பிடித்த வெங்காய சாம்பார்…சாப்பிட உட்காருங்கள்..”

சீதாப்பாட்டியின் கண்கள் அப்புசாமியின் ஜிப்பாப் பையைப் பாத்தன. அதில் ஒரு கற்றை ரூபாய் நோட்டுக்கள் நீட்டிக்கொண்டிருந்தன.

அவற்றை எடுத்து வெளியில் போட்டாள் சீதாப்பாட்டி. “திஸ் மச் மணி உங்களுக்கு எதற்கு? உள்ளே பீரோவில் வைத்து விடட்டுமா?”

“ஆமாம். எனக்கேது இவ்வளவு பணம்? எப்படி வந்தது என் சட்டைப் பைக்குள்?”

சீதாப்பாட்டி ரூபாயைக் கொண்டுபோய்ப் பிரோவில் வைத்துப் பூட்டினாள். ஒரு ஜோடிக் கண்கள் அவளையே உற்றுப் பார்ப்பதைப் போலிருந்தது.

திடுக்கிட்டவளாகத் திரும்பினாள்.

அப்புசாமியின் கண்கள் அகலமாகிக் கொண்டிருந்தன.

புருவங்கள் நெரித்துக் கொண்டிருந்தன.

தளர்ந்திருந்த அவர் உடல் முறுகேறியது.

அதிர்ச்சியுற்¡ள் சீதாப்பாட்டி.

அங்கே அப்பு¡மி மறைந்து குப்புசாமி நின்று கொண்டிருந்தார்.

“வெங்காய சாம்பாரும் வெஜிடபிள் பிரியாணியும் எங்கே? ரெடி பண்ணினாயா?” கையில் பெல்ட்டுடன் குப்புசாமி நின்றிருந்தார்.

“மைகாட்! இப்போதுதானே சாட்பிட்டீங்க” என்று சொல்லி வாயை மூடியிருக்க மாட்டாள். பளீலென்று பெல்ட் ஒரு முறை விளாசியது சீதாப்¡ட்டியை.

“அம்மா!” என்று துடித்து விட்டாள்.

எந்த சைக்யாட்ரிஸ்ட்டிம் போகாவிட்டாலும் உடனடியாக மந்திரக்காரன் யாரிடமாவது போயே தீரவேண்டும் என்று தீர்மானித்தவள், தன் உயிருக்கே ஆபத்து இங்கிருந்தால் என்று எண்ணிச் சரேலெனத் தன் அறைக்கு ஓடிக் கதவைத் தாளிட்டுக் கொண்டுவிட்டாள்.

மறுநாள் விடியற்காலை ஓசைப்படாமல் கதவைத்திறந்து கொண்டு அடிமேலடி வைத்து சீதாப்பாட்டி வீட்டைவிட்டு வெளியேறினாள்.

அவளுக்குப் பீமாராவின் ஞாபகம்தான் வந்தது.

முன்பு கூட சுடுகாட்டுக்கெல்லாம் தைரியமாகப் போய் இருக்கிறான். மந்திரங்கள்கூட அவனுக்குக் கொஞ்சம் கொஞ்சம் தெரியும். காரியமும் சீக்ராட்டாக நடந்த மாதிரி இருக்கும் என்று எண்ணியவாறு பீமாராவின்வீட்டுக்குப் போனாள்.

சீதாப்பாட்டியைப் பார்த்ததும் பீமாராவ் கையில் சுழற்றிக்கொண்டிருந்த கர்லாக் கட்டையைப் போட்டுவிட்டு அளவில்லா¡த ஆனந்தத்துடன் வரவேற்றான்.

சீதாப்பாட்டி தொங்கிய முகத்துடன் பயப்பிராந்தியாக விஷயத்தை விளக்கினதும் நெடுநேரம் யோசனையில் இருந்தான்.

“பாட்டீ… கொஞ்சகூடக் கவலை பேடா… தாதாவ்னே ஹளய தாதாவாக மாடுது நன்னே கலச, ஈகலே பந்துநோடுதானே.”

“வீமாராவ்…” என்றாள் சீதாப்பாட்டி. “யு ஷ¥ட் நாட்பி ஓவர் கான்·பிடன்ட்… நீ மோதப்போவது உன் பழைய ·பிரண்ட் மிஸ்ட்டர் அப்புசாமி அல்ல. யு ஆர் மீட்டிங் விக்கட் குப்புசாமி… அன்டர்ஸ்டாண்ட்…ப்ரிகாஷனரி ஸ்டெப்ஸெல்லாம் தயவுசெய்து எடுத்துக்கொள்.”

அப்புசாமி படுக்கையிலிருந்து எழுந்தார். எழுந்திருக்கும் போதே குப்புசாமியாகத்தான் எழுந்தார்.

“எங்கே காப்பி? அடேய் சோனகிரி அப்புசாமி… உன் பெண்சாதிக்கு என்ன கொழுப்பு? இன்னுமா காப்பி போடுகிறாள்? நீயாவது போட்டுக் கொண்டாடா மடப்பயலே” என்று கூவினார்.

சமையல்ரூம் கதவு ‘பந்த் ஆகியிருந்தது.

ஆத்திரத்துடன் எழுந்தவர் கதவைக் காலால் ஓங்கி உதைத்தார். படீரென்று கதவு திறந்துகொண்டது.

உள்ளே அட்டகாசமாக நுழைந்த அப்புசாமி மீது காண்டாமிருகம் ஒன்று திடீரென்று ஒரு மோது மோதியது.

“அம்மாடி!” என்று அப்புசாமி கீழே விழுந்ததவர் அடுத்தகணம் ஸ்பிரிங் போல் எழுந்து கொண்டார். தோளைத் தட்டிக்கொண்டு, ‘ஆகா’ என்று கர்ஜித்தார்.

எதிரே பீமாராவ்! வரிந்து கட்டிக்கொண்டு தன் வஸ்தார் உடம்புடன் கையில் போலீஸ் லாடி மாதிரி தடியுடன் பீமாராவ் காட்சி அளித்தான்.

“அரே…குப்புசாமி… ஓடிபிடு… முந்தத ஹேளிபிடுதனே…அரே குப்புசாமி, ஓடிபிடு… ஈ வஸ்தாத் பீமாராவ் சமாசார உனக்குக் கொத்தில்ல.. தெக்கோள்றீ ஈ குத்தை! ஸாம்பிள் நோடு…”

சீதாப்பாட்டி மாடி அறையிலிருந்து கொண்டு ஜன்னல் வழியே கீழே நடக்கும் கொலையைப் பார்த்துக் கண்ணைப் பொத்திக்கொண்டு, “ஹாரிபிள்! மை காட்! ஹாரிபிள்!” என்று அரற்றிக் கொண்டிருந்தவள் “பீமா…ப்ளீஸ்…ப்ளீஸ்…பீமா…ப்ளீஸ் ஸ்பேர் ஹிம். ஐயோ… அவர் மண்டையை உடைத்துவிடாதே…” என்று அவறினாள்.

கீழே பீமாராவ் அப்புசாமியை ஒரேயடியாகச் சாய்த்து அவர்மேல் உட்கார்ந்து அவரது மண்டையை மடேல் மடேலென்று தரையில் மோதிக்கொண்டிருந்தான்.

“பாட்டி! பாட்டி! பயப்படி பேடா… நான் குப்புசாமியைத்தான் ஒதைதனே. நம்ம தாத்தகு ஒந்து ஹடியும் படாது.”

மடேல் மடேலென்று பீமாராவ் நெத்தின நெத்தலில் மூக்கு, தலையெல்லாம் ஒரேயடியாக ரத்தவிளாறு, மயக்கம்.

மயக்கமான பின்னும் பீமாராவுக்கு அவரைவிட்டு வைக்க இஷ்டமில்லை. காலைப்பிடித்துத் தட்டாமாலை சுற்றுவது போலச் சுற்றி ஒரு வீசு வீசின வேகத்தில் அப்புசாமி எது தலை எது கால் என்று புரியாமல் சோபாவில் போய் மாடர்ன் ஆர்ட் மாதிரி விழுந்து கிடந்தார்.

ஆஸ்பத்திரியில் அப்புசாமிக்குப் பிராணவாயு செலுத்தப்பட்டுக் கொண்டிருந்தது

கவலையும் கண்ணீருமாகச் சீதாப்பாட்டி நின்று கொண்டிருந்தாள்.

டாக்டர்கள் அப்புசாமியின் நாடி பிடித்துப் பார்த்துவிட்டு சீதாப்பாட்டியிடம், “நத்திங் டு வொர்ரி…அவர் பிழைத்து விடுவார்…” என்று சொன்னார்கள். உடம்பெல்லாம் கட்டுடன் அப்புசாமி கண் விழித்தார்.

“சீதே…” என்றார் பலவீனமாக.

காதில் இன்பத் தேன் பாய்ந்த மாதிரி சீதாப்பாட்டிக்கு இருந்தாலும் சற்றுப் பயத்துடன் அவரை நெருங்கி, “நீங்கள்தானே என்பிலவ்டஹஸ்பெண்ட் அப்புசாமி?… ஐமீன்… குப்புசாமி இல்லையே?” என்றாள்.

“சீதே…” அப்புசாமியின் ஈனஸ்வரம் முனகியது. “சீதே… குப்புசாமி… குப்புசாமி செத்துப் போய்விட்டான்… இனிமல் அவன் வரமாட்டேன்னுட்டுப் போய்விட்டான். என்னதான் குப்புசாமி வந்தானென்றாலும் இப்படியா… காட்டுத்தனமாக…பீமாராவைக் கூட்டிவந்து என்னை அடிக்கிறது?”

“நோ…நோ குப்புசாமியுடைய ஈவின் இன்·ப்ளூயன்ஸ¤டன்தான் பீமாராவ் மோதினான். யூ ஆர் ஆல்ரைட்… இனி மேல் கவலையேபடாதீர்கள். உடம்பு தேறிடும்…”

‘ஐயோ… எந்தவேளையில் அந்தப்புத்தகத்தைப் படித்தேனோ?’ என்று அப்புசாமி புலம்பிக் கொண்டிருந்தார் அந்த ரகசியம் அவருக்கு மட்டும்தான் தெரியும்.

அந்தக் கதையைப் படித்துவிட்டு, அதிலுள்ளதைப் போல அண்ணன் ஆவி தன்னுள் புகுந்துகொண்ட மாதிரி அவர் நடந்து ஏமாற்றி, சீதாப்பாட்டியை மிரட்டி மீன் பிடிக்கச் சிரமப்பட்டு அப்படியெல்லாம் நாடகமாடியிருக்கா விட்டால் நாடகத்தின் கடைசிக் காட்சியில் பீமாராவ் வந்திருக்கமாட்டானே? அது ஆஸ்ஸபத்திரி ஸீனாக முடிந்திருக்காதே? அப்புசாமி பெருமூச்சுவிட்டார். அதே சமயம் மனத்துக்குள், ‘இரண்டு நாளைக்காவது சீதாப்பாட்டியை ஆட்டிவைக்க முடிந்ததே’ என்றதிருப்தி நிலவிற்று.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *