அன்புள்ள முதலமைச்சருக்கு…

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: June 15, 2022
பார்வையிட்டோர்: 15,991 
 

அன்புள்ள மாண்புமிகு முதலமைச்சருக்கு … அன்றாட வாழ்க்கையில் அல்லல்படும், அவதிப்படும்….ஏன், சுத்தமாகச் சொல்லப்போனால் லோல்படும் ஆயிரக்கணக்கான மத்யவர்க்க மக்கள் (ஆலோசகர்கள் வைத்துக்கொண்டு வரி ஏய்ப்பதற்கு வசதி இல்லாத ஓரளவு வருமானம் வாங்குபவர்கள் ….) சார்பாக அடியேனின் தெண்டம் சமர்ப்பித்த விஞ்ஞாபனம்.

நலம். நலமறிய அவா – என்று வழக்கம் போல பொய்யாக ஆரம்பித்துக் கடிதத்தை ஆரம்பிக்க ஆசையாகத்தான் இருக்கிறது. மன்னிக்கவும். பொய் சொன்ன வாய்க்கு போஜனம் (சத்துணவு இல்லை…. சாதா உணவு) கிடையாது என்று பெரியவர்கள் கூறுவார்கள். ஹூம்! பெரியவர்களுக்கு என்ன ….. அவர்கள் பாட்டுக்கு கண்டதை , காலம் நேரம் பார்க்காமல் கூறிவிடுவார்கள்.

அரிசியை அட்சதையாகக் கை நிறைய எடுத்து மணமக்கள் தலை மீது அஸால்ட்டாக’ அள்ளி எறிந்து சந்தோஷமாகத் தலை வாழை இலையில் புரண்டு எழுந்த அது பெரியவர்களின் பொற்காலம்.

இப்போது நிலவும் வறட்சியில் அரிசிக்குப் பதிலாக அட்சதையாக உப்பைப் போடுவதற்குக்கூட ஓராயிரம் முறை யோசிக்கவேண்டி இருக்கிறது.

அட, அப்படியே ஒருவேளை கள்ள மார்க்கெட்டில் அரிசி வாங்கி அட்சதையாகப் போடலாமென்றால் அதில் கலந்திருக்கும் கற்கள் மணமக்கள் தலையில் பலத்த காயத்தை உண்டாக்கிவிடுமோ என்கிற பயமும் கூடவே எழுகிறது. ஆகமொத்தம், பொய் சொன்னாலும் சரி, போஜனம் என்பது சாத்தியமாகக் கிடையாது என்கிற நிலை ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பட்சத்தில் பேசாமல் நிலவுகிற உண்மையை உங்களிடம் உரைத்துவிடுவதே உசிதம்.

இந்தக் கடிதத்தின் (கஷ்டம் விடு தூது) முக்கிய காரணமே தீர்க்க முடியாத கஷ்டங்களை உங்களிடம் அழுது தீர்த்து விடுவதுதான்!

ஆனால், இப்பொழுதெல்லாம் அழுவதற்குக்கூட பயமாக இருக்கிறது சார்!

சிந்தும் கண்ணீரை, கரித்தாலும் பரவாயில்லை, குளிப்பதற்காவது பயன்படும்’ என்று குடத்தில் பிடித்துக் கொண்டு போய்விடுகிறார்கள்.

சொன்னால் நம்பமாட்டீர்கள் … பாலச்சந்தரின் தண்ணீர் தண்ணீர்’ சினிமா போஸ்டரைப் பார்த்துக்கொண்டே சிலர் தாகத்தைத் தீர்த்துக் கொள்கிறார்கள்.

திருமணங்களில் வரவேற்க பன்னீர் தெளித்தால், வந்திருப்பவர்கள் டக்கென்று தலையைத் தூக்கி ஏக்கத்தோடு வாயைப் பிளக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! கண்ணீரோ, பன்னீரோ தாகம் தணிய ஏதோ ஒரு திரவம் கிடைத்தால் சரி என்று காய்ந்து கிடக்கிற நிலை…. தென்மேற்குப் பருவக்காற்று, வடகிழக்குப் பருவக்காற்று என்கிறார்கள். இந்த விதவிதமான காற்று வரிசையில் கோடைகால கார்ப்பரேஷன் குழாய் காற்றையும் நான் சேர்த்துக் கொள்ளலாம்.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் கார்ப்பரேஷன் குழாயில் காற்று வரும் என்பதற்குப் பதிலாக, தவறாக தினசரிகள் தண்ணீ ர் வரும் என்று அறிவித்துவிட்டன போலும். ஆனால், ஒரு விதத்தில் இதுவும் நல்லதே! பவர்கட்டில் மின்விசிறி சுழல மறுக்கும் நேரங்களில் கார்ப்பரேஷன் குழாய் அடியில் குடத்தோடு குடமாக நாங்களும் தஞ்சம் புகுந்து அதில் வரும் …ஸாரி… வீசும் குளுகுளு காற்றில் குஷிப்படுகிறோம்.

கொல்லைப்புறக் கிணறுகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்…. எட்டிப் பார்த்தால் வேதாள உலகம் பாதாளத்தில் தெரிகிறது. உள்ளே இறக்கிய குடம் தண்ணீரைத் தொடுவதற்குள் குளிக்கும் ஆசையே போய்விடுகிறது.

எனது அடுத்த வீட்டு நண்பர் தனது கொல்லைப்புறக் கிணற்றில் “இவ்விடம் குடியிருக்க வாடகைக்கு விடப்படும்” என்ற பலகையைத் தொங்கவிட்டுவிட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! ‘தண்ணீரைக் கண்டால் தூரவிலகு’ என்னும் ‘ஹிப்பிகள் கூட அங்கலாய்க்கும் அளவுக்குத் தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் தாண்டவமாடுகிறது. மகாகவி பாரதியார் இன்று நம்மிடையே இருந்திருந்தால், ‘செந்தமிழ் நாடென்னும் போதினிலே சொட்டு நீர்கூடப் பாயாது வாயினிலே’ என்று நிச்சயமாகப் பாடியிருப்பார்.

யாரைச் சொல்லியும் குற்றமில்லை. குன்னக்குடியின் வயலினுக்கே மசியாமல் ஒன்று சேர மறுக்கும் மேகங்களே தற்போது நமக்கு எதிர்க்கட்சி! என்றுதான் இந்த மேகக் கட்சி மெம்பர்கள் வான அசெம்பிளியில் ஒன்றுகூடி மழை தீர்மான மசோதாவை நிறைவேற்றப் போகிறதோ…?

அட, தண்ணீர்தான் இல்லை; இந்தத் தமிழகம் காஷ்மீர், சிம்லா இப்படி ஒரு குளிர்ப் பிரதேசமாக ஜிலுஜிலுவென்று இருந்து தொலையக்கூடாது? திங்கள் பல் தேய்த்து, தேய்த்த வாயை செவ்வாய் அன்று கொப்பளித்து, புதன் முகம் கழுவி, வியாழன் குளித்து – இப்படித் தண்ணீரைக் கிழமை வாரியாகச் சிக்கனமாகச் செலவழிக்கலாம் என்றால் இப்போதே இப்படியா ஒரு வெயில் வேறு அடிக்கும்?

நல்லவேளை, மாநகராட்சி தேர்தல் பல வருடங்களாக நடக்காததால் நாங்கள் பிழைத்தோம். அது வேறு நடந்து வைத்தால் வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் சும்மா இல்லாமல் தங்கள் தொகுதி மக்களுக்கு நல்லது செய்கிறேன் பேர்வழி என்று வீதிகளுக்குத் தார் பூசிச் செப்பனிட்டு விடுவார்கள்.

வெப்பத்தில் தார் உருகி எங்கள் பாதங்களைக் கொப்பளமாக்கும். வேண்டாம் சார், கார்ப்பரேஷன் தேர்தல். இந்தப் பூலோக வாழ்க்கையைவிட மோசமான மேடு பள்ளங்களை உடைய வீதிகளை கவுன்சிலர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு சரி செய்துவிட்டால் எங்கள் பாடு திண்டாட்டமாகிவிடும். ஒரு வேளை மழை பெய்தால் தண்ணீர் தேங்குவதற்கு வசதியாக உள்ள வீதியின் மேடு பள்ள அணைக்கட்டுக்களை’ தயவு செய்து சரி செய்துவிடாதீர்கள். வீதியில் தண்ணீர் தேங்கினால் அதில் கொசுக்கள் குடும்பம் நடத்தி மலேரியாவைப் பரப்பும் என்று பயப்படுகிறீர்களா? சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். இப்பொழுதெல்லாம் நாங்கள் சந்தனத்துக்குப் பதிலாக ஓடோமாஸ்’ க்ரீமை உடம்பில் பூசிக்கொண்டு ஊதுவத்திக்குப் பதிலாக ‘டார்டாய்ஸ்’ கொசுவர்த்தியின் பரிமள சுகந்தத்தைச் சுகமாகச் சுவாசித்து, கொசுக்களின் அன்பு முத்த அரவணைப்பில் மெய்மறந்து அமைதியாகத் தூங்கக் கற்றுக்கொண்டுவிட்டோம். இது தவிர இன்னும் ஒரு முக்கியமான விஷயம். பெண் கொசு கடித்தால் தான் மலேரியா வரும் என்று புத்தகத்தில் படித்ததாக நினைவு. அதனால் கடிக்க வரும் கொசு புடவை கட்டியிருந்தால் அது பெண் கொசு என்று புரிந்து கொண்டு போர்வைக்குள் புகுந்து கொண்டு தப்பிவிடுவோம். மேலும், எங்களில் சிலர் சமயோசிதமாகப் படுக்கை அறையின் வாயிலில் – பல்லவனில் மகளிர் மட்டும் என்று போடுவது போல – ஆடவர் கொசு மட்டும்’ என்று போர்டு எழுதித் தொங்கவிட்டுவிட்டோம். பெண் கொசுக்கள் அதைப் படித்துவிட்டு பாவம், ஏன் இவனது பிரம்மச்சரியத்தை நாம் பாழாக்கவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் பறந்துவிடும் அல்லவா!

இத்தனைக்கும் நடுவில் பர்மனெண்டாக விலைவாசிப் பிரச்னை! நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும், குடி உயர கோன் (தமிழ் கோன்’ – ஆங்கில ஐஸ் க்ரீம் கோன்’ அல்ல) உயரும் என்பது சங்ககாலப் பழமொழி. எப்படித்தான் எது உயர்ந்தாலும் உயராவிட்டாலும் விலைவாசி மட்டும் திரிவிக்கிரம அவதாரமாய் உயர்ந்து கொண்டே போகிறதோ?

அட்லீஸ்ட் ஒன்றும் செய்யமுடியாமல் கெரஸினை’ மேலே ஊற்றிக்கொண்டு பற்ற வைத்துத் தற்கொலை செய்து கொண்டாவது தப்பிக்கலாம் என்று பார்த்தால் கெரஸின்’ கிடைக்கமாட்டேன் என்கிறது. கெரஸின் தான் கிடைக்கவில்லை; அட, மூட்டைப்பூச்சி மருந்தைச் சாப்பிட்டாவது சாகலாம் என்றால் கலப்படத்தால் மூட்டைப்பூச்சி மருந்துக்கு மூட்டைப்பூச்சியே சாக மறுக்கிறது.

முன்பெல்லாம் சந்தைக்குச் சென்று கறிகாய் வாங்கிவந்த கணவனிடம் மனைவி பின்வருமாறு கோபிப்பாள் : “கத்தரிக்காய் வாங்கிவரச் சொன்னால் கொத்தவரங்காய் வாங்கி வந்திருக்கிறீர்கள். பூசணி வாங்கச் சொன்னால் பரங்கி வாங்கிவிடுகிறீர்கள். நீங்க கறிகாய் வாங்கற லட்சணம் சகிக்கலை…”

இப்பொழுது புருஷன்மார்களுக்கு, தவறாக வாங்கிவிட்டால் பெண்சாதி திட்டுவாளே என்ற அச்சமே கிடையாது. அகத்துக்கீரையைத் தவிர வேறு எந்தக் கறிகாய் வாங்கினாலும் அடுத்த நிமிடமே மணிபர்ஸ் அம்மணமாகிவிடும். நமக்கே அகத்துக்கீரை என்றால் ஆடுமாடுகளின் கதியை யோசித்துப் பாருங்கள். காந்தி ஆட்டுப் பாலை அருந்திய காலம் போக இப்பொழுது ஆடுகள் ஆட்டன்பரோவின் காந்தியை (போஸ்டர்) சாப்பிடும் கலிகாலம்!

முன்பெல்லாம் மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் நாம் சிறிது மார்தட்டிக் கொள்வதற்கு ஏதுவாகத் தமிழகம் சாந்த சொரூபியாக இருந்தது.

டீக் கடை, குழாய் அடி போன்ற களங்களில் நடக்கும் சிறுசிறு விளையாட்டு யுத்தங்களைத் தவிர மற்றபடி பெரிதுபடுத்தக்கூடிய கலவரங்களோ, கொள்ளை, திருட்டுக்களோ தமிழகத்தில் இருந்தது கிடையாது. அப்பொழுதெல்லாம் திருடர்களும் பேராசை பிடித்தவர்களாக இல்லாமல் தொழில் தர்மத்தைக் காக்கவேண்டுமே என்ற எண்ணத்தில் வாளி, பக்கெட், வெந்நீர் போடும் அண்டா, கல்யாண வீடுகளில் செருப்பு, (இது திருட்டு அல்ல…. ஒரு வகை வியாதி) காயப்போட்ட கிழிந்த பனியன், அண்டர்வேர் போன்ற அல்ப விஷயங்களைத்தான் அபகரிப்பார்கள்.

ஆனால், இப்பொழுது பத்திரிகைகளைப் பார்க்கும் போது பகீரென்கிறது. பெங்களூர் செல்லும் திருவள்ளுவர் பஸ்ஸின் ஓட்டுநர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். பலான இடத்தில் பயங்கர கொலை – கம் கொள்ளை… மேலான முக்கிய புள்ளியின் வீட்டில் புகுந்து விரோதிகள் தாக்குதல். அம்பு குறியிட்ட இடத்தில் எறிந்துபோன குப்பம் முன்பு இருந்தது தெரிந்ததே.

சாராயம் சாப்பிட்டதால் வெறியில் தந்தை, மகனை வெட்டிக் கொன்றார். பஸ் ஏறியதால் பத்து பேர் ஸ்தலத்திலேயே மாண்டார்கள். இப்படிப் பல சாவுகள், கொள்ளைகள், குருஷேத்திர யுத்தங்கள். பத்திரிகைகளை ஒரு வேளை சுடுகாட்டில் அச்சடிக்கிறார்களோ என்று எண்ணும் அளவுக்குப் பக்கத்துக்குப் பக்கம் துக்கமான செய்திகள்.

எங்கள் மதிப்புக்கும் வணக்கத்துக்கும் உரிய முதல்வரே! நீங்கள் ஆணையிட்டால் நிச்சயம் எதுவும் நடந்துவிடும். இன்னும் சிறிது காலத்துக்கு நீங்கள் உங்களைத் தமிழக முதல்வராக எண்ணாமல் ஒரு மனுநீதிச் சோழனாக நினைத்துக்கொள்ளுங்கள். மாறுவேடத்தில் முடிந்தால் வந்து கலப்படங்களைக் கண்டு கொள்ளுங்கள்… கட்சிப் பணியைப்பற்றிக் கொஞ்சகாலம் கவலைப்படாமல் எங்கள் மீது கருணை காட்டுங்கள்.

கடைசியாக மிகமிகக் கடைசியாக தமிழகத்தின் சராசரி மக்கள் சார்பாகக் கேட்டுக்கொள்வது இதுதான்:

ரேஷன் கடையில் க்யூவில் முதல்வர் மாறுவேடத்தில் வந்து கலப்பட வியாபாரிகளைத் தானே பர்சனலாக’ கைது செய்தார்.

மவுண்ட் ரோடில் நடந்த விபத்தைப் பார்வையிட்ட முதல்வர், போலீஸ் கமிஷனரோடு சாலை விபத்துகளைத் தடுக்க என்ன செய்யலாம் என்று ஆலோசித்தார். தண்ணீர் கொண்டு செல்லும் லாரிகளிலிருந்து தண்ணீர் வழிந்து வீணாவதைப் பார்த்து முதல்வர் வருத்தம்…. கல்லூரி மாணவர்கள் விழாவில் கலந்து கொள்ளச் சென்றதால் முதல்வர் கட்சி மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை….

நாளையிலிருந்து பத்திரிகைகளைப் பிரித்தால் மேற்கூறிய செய்திகள் அதில் இருந்தால்… மாண்புமிகு முதலமைச்சரே! மக்கள் சார்பாகத் துண்டைத் தாண்டி சத்தியம் செய்கிறேன். இன்னும் நாலு ஐந்து மாமாங்கத்துக்கு நீங்கள்தான் எங்கள் முதலமைச்சர்.

இப்படிக்கு, உங்கள் விசுவாச குடிஜனங்கள்.

– ஃபைவ் ஸ்டார் பலகாரக்கடை!, விகடன் பிரசுரம்

Print Friendly, PDF & Email

1 thought on “அன்புள்ள முதலமைச்சருக்கு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *