அது உண்மையாக இருக்க முடியாது!

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 13,391 
 
 

ஒரு மன்னருக்கு ஆடல், பாடல்களை விட, கதை கேட்பதில்தான் ரொம்ப விருப்பம். ஆனால், யார் கதை சொன்னாலும், “ஊஹ¨ம்! அது உண்மையாக இருக்க முடியாது!” என்று அதிருப்தியுடன் உதட்டைப் பிதுக்குவார்.

அன்றைக்கு ஒரு கதைசொல்லி வந்தான். “மன்னா! நான் ஒரு சுவாரஸ்யமான கதை சொல்கிறேன். ஆனால், ‘அது உண்மையாக இருக்க முடியாது’ என்று நீங்கள் சொல்லக் கூடாது! அப்படிச் சொல்லிவிட்டால், எனக்கு ஆயிரம் பொற்காசுகள் தரவேண்டும். சம்மதமா?” என்றான்.

மன்னர் “சம்மதம்!” என்றதும், அவன் கதை சொல்லத் தொடங்கினான்…

“ஒரு மன்னர் பல்லக்கில் போய்க்கொண்டு இருந்தபோது, மேலே பறந்த ஒரு காகம் எச்சமிட்டது. அது மன்னரின் மேலங்கியில் விழுந்தது. உடனே மன்னர், தன் உடை வாளால் மேலங்கியின் அந்தப் பகுதியை கிழித்துப் போட்டுவிட்டு, வேறு மேலங்கியை வரவழைத்துப் போட்டுக்கொண்டார். பயணம் தொடர்ந்தது. மீண்டும் அதே காகம் அவரது உடைவாளில் எச்சமிட்டது. உடனே மன்னர், பணியாளனிடம் வேறு ஒரு உடைவாள் கொண்டுவரச் சொல்லி உத்தரவிட்டுவிட்டு, காக்கை எச்சம்பட்ட உடைவாளை உடைத்துப் போட்டார். பயணம் தொடர்ந்தது. காகம் இந்த முறை மன்னரின் தலைமீதே எச்சமிட்டது. கோபம் கொண்ட மன்னர், பணியாளனிடம் வேறு ஒரு தலைகொண்டு வரும்படி உத்தரவிட்டுவிட்டு, வாளால் தன் தலையைத் தானே…”

கதை கேட்டுக்கொண்டு இருந்த மன்னர் சட்டெனக் குறுக்கிட்டு, “ஊஹ¨ம்! அது உண்மையாக இருக்க முடியாது!” என்றார்.

கதைசொல்லி கண்கள் பிரகாசிக்க, “மன்னா! அப்படிச் சொன்னால், எனக்கு ஆயிரம் பொற்காசுகள் தருவதாகச் சொல்லியிருக்கிறீர்கள். தாருங்கள் ஆயிரம் பொற்காசுகளை!” என்றான்.

“ஊஹ¨ம்! அது உண்மையாக இருக்க முடியாது!” என்றார் மன்னர்.

– 03rd அக்டோபர் 2007

1 thought on “அது உண்மையாக இருக்க முடியாது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *