அதிரடி ஆட்டக்காரி அபிலாஷா

 

கதையின் தலைப்பு குறித்த விஷயத்திற்கு முதலில் நீங்கள் சீனுவைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

சீனு என்னும் சீனிவாசன், கோயம்புத்தூர் பக்கத்தில் உள்ள சூலூரில் ஒரு நான்கு மாதம் எங்களுடன் பணி புரிந்தவர். எங்கள் என்பதில் நானும் குமாரும் சேர்த்தி.

பல்லடம் பக்கத்தில் ஒரு கிராமத்தில் மின் காற்றாலைகள் நிறுவும் ப்ராஜக்ட். காற்றாலைகள் நிறுவ முடிவு செய்த சென்னையைச் சேர்ந்த ஒரு கம்பெனிக்கு முழு பொறுப்பும் ப்ராஜக்ட் கன்சல்டன்ட் ஆக எங்களுக்கு கிடைக்க, முதலில் சூலூருக்கு வந்து சேர்ந்தது சீனுவும் குமாரும்தான்.

அந்தப் ப்ராஜக்ட் வேலைகள் ஆரம்பித்து மும்முரமாய்ப் போய்க்கொண்டிருந்தது. இன்னும் ஒரு ப்ராஜக்ட், அதற்கு பக்கத்துக் கிராமத்தில் காற்றாலைகள் அமைக்க, எங்கள் கம்பெனிக்கு ஆர்டர் கிடைக்க, அதன் பொருட்டு நான் என் பொற்பாதங்களை சூலூரில் வைக்க நேர்ந்தது.

இந்தப் ப்ராஜக்ட்டுக்காக, சூலூர் வருவதற்கு முன், மிகக் குறைந்த நாட்களே சென்னை அலுவலகத்தில் இருந்ததால், சீனுவோடு அவ்வளவு பரிச்சயம் இல்லை.

சீனுவோடனான என் முதல் பரிச்சயமே சூலூரில் தான். முதல் சந்திப்பிலேயே சீனு சற்று வித்யாசமானவர் என்று தெரிய வந்தது.

சீனுவுக்கு வயது நாற்பது இருக்கும். எப்போதும் எதையோ சீரியஸ்ஸாக யோசித்துக் கொண்டிருப்பதைப் போன்ற முகம். உங்கள் கற்பனைக்கு ஆர் கே லக்ஷ்மன் கார்ட்டூனில் வரும் மூக்கு சற்றே நீண்ட ஒரு முகத்தைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். கக்கத்தில் ஒரு பழுப்பு நிற தோல் பையோடுதான் எங்கும் வெளியில் கிளம்புவார். அந்தப் பையில் இருந்து அவ்வப்போது சீப்பை எடுத்து தலை வாருவார். தானாகவே கொஞ்சம் முடி முன் நெற்றியில் வந்து விழும். மற்றபடி அந்தப் பையில் இருந்து வேறெதையும் எடுத்து நான் பார்த்ததில்லை.

ஒரு ஞாயிற்றுக்கிழமை, சூலூர் வந்து அறைக்குள் நுழைந்தபோது சீனு இல்லை. ஞாயிறு காலையில் அதுவும் எட்டு மணிக்கு எங்கே போயிருப்பார் என்று குமாரை பார்த்தேன்.

“எங்காவது போயிருப்பார், வருவார்” என்ற குமாரின் பதிலில் ஒரு எள்ளல் இருந்தது.

“இவ்ளோ காலையிலயா? வாக்கிங்கோ?”

“இப்போதானே வந்திருக்கீங்க. போகப் போக தெரியும்” என்ற குமாரின் பதிலில் முன்பை விட ஒரு எள்ளல் கலந்த சிரிப்பு.

பிரயாணக் களைப்பு தீர ஒரு குளியல் போட்டுவிட்டு, வெளியில் போய், டிபன் சாப்பிட்டு விட்டு வந்து, படுத்தவன்தான். எழுந்தபோது மணி பன்னிரண்டு. சீனு இன்னமும் வந்திருக்கவில்லை. குமார் பக்கத்துக்கு கட்டிலில் உட்கார்ந்து ப்ராஜக்ட் சம்பந்தப்பட்ட ட்ராயிங்க்ஸ் எதையோ பார்த்துக் கொண்டிருந்தார்.

“நீங்கதான் புதுசா வந்திருக்க அண்ணனா?” என்ற குரல் கேட்டு திரும்பினேன். பத்து வயது இருக்கும். ஒரு பெண் கட்டிலை ஒட்டி நின்று கொண்டிருந்தாள்.

நான் குமாரைப் பார்த்தேன்.

“வீட்டு ஓனரோட பொண்ணு” என்ற குமார், “அப்பா இல்லையா வீட்ல” என்றார் அந்தப் பெண்ணைப் பார்த்து.

“இல்லீங்கணா, மார்கெட்டுக்கு போயிருக்காரு. இருந்தாதான் எப்பப்பாரு படி படிம்பாறு”

“நல்லாப் படிக்கணும்ல, அப்பதானே பெரியாளா வரலாம்” என்றேன் நான் இடையில் புகுந்து.

“நல்லாத்தான் படிப்பேன்னா, என்ன எப்பனாச்சும் வாரமலரை எடுத்து புரட்டுவேன், அதுக்கு கோச்சுக்குவாங்க அப்படி” என்றாள் அவள்.

“ஏன்?”

“அதெல்லாம் சின்னப்பசங்க படிச்சா கேட்டுப் போவாங்களாம், அப்படீங்களா?”

அப்போது உள்ளே நுழைந்த சீனு, நேராக அலமாரிக்குப் போய், தன் தோல்பையை வைத்தவர், எங்களைக் கடந்து போய், அவர் கட்டிலில் சாய்ந்தபடி உட்கார்ந்தார்.

“சரீங்கனா, அப்பா வந்துருவார், வரட்டுங்களா?” என்று சொல்லிவிட்டு வீட்டை நோக்கி ஓடினாள்.

நான் திரும்பி குமாரைப் பார்த்தேன். குமாருக்கு இதெல்லாம் பழகிப் போயிருந்தது. ஒரு புது ஆள் வந்து கட்டிலில் உட்கார்ந்திருக்கிறேன், வரப் போகிறேன் என்றும் தெரியும். எப்படி இப்படி ஒரு மனுசனால் ஒரு ஹலோ கூட சொல்லாமல் இருக்க முடிகிறது?

குமார் சீனுவைப் பார்த்து “சீனு, இவர்தான் சுந்தரம். அந்த இன்னொரு ப்ராஜக்ட்டுக்காக வந்திருக்கிறார். இவரும் உங்களை மாதிரி எலக்ட்ரிகல் எஞ்சினீர்தான்” என்றார்.

அப்போதுதான் என்னைப் பார்த்ததுபோல் நானிருந்த பக்கம் திரும்பிய சீனு, “ஹலோ, எப்படி பிரயாணம் எல்லாம் சௌரியமா இருந்ததா?” என்று கேட்டுவிட்டு, கட்டிலை விட்டு எழுந்து, “நான் போய் சாப்பிட்டு வரேன்” என்றபடி கிளம்பினார்.

சீனுவின் இந்த மோன நிலை போகப் போக எனக்கும் பழகிப் போனது. பெரும்பாலும் ஒரு மோன நிலையிலேயே இருக்கும் சீனுவின் கலகலப்பான நேரங்கள் சுவாரசியமானவை. அவைகளில் சிலவற்றைப் பார்ப்போம்.

நாங்கள் தங்கியிருந்த சூலூரிலிருந்து ப்ராஜக்ட் சைட்டுக்கு ஸ்கூட்டரில் தான் போவோம். நானும் குமாரும் ஆளுக்கொரு கேனடிக் ஹோண்டா வாடகைக்கு எடுத்து வைத்திருந்தோம். சீனு ஏதாவது ஒரு வண்டியில் தொத்திக் கொள்வார்.

பெரும்பாலும் என் வண்டியில் ஏறிக்கொள்வார். “குமார் டிரைவிங் அப்பா ஹாரிபிள்” என்னும் சீனு நான் வருவதற்கு முன் குமாருடன்தான் போய் வந்தார். கேட்டதற்கு “ஐயோ, ஹாரிபிள், உயிரைக் கையில பிடிச்சிக்கினுதான் போய் வந்தேன்” என்றார்.

ஆனால், சீனு என்னோடு வர ஆரம்பித்ததில் இருந்து உயிரை கையில் பிடித்தபடி இருந்தது நான்தான்.

தூரத்தில் ஒரு புள்ளி போல ஏதாவது ஒரு சைக்கிள் வருவது போலத் தெரிந்தாலும், உடனே, சீனு “ஸ்லோ ஸ்லோ ஏதோ வண்டி வருது வண்டி வருது” என்பார். நாங்கள் போய்க்கொண்டிருக்கும் வேகமே 30 கி மீ தான் இருக்கும். வெறுமே இப்படி சத்தம் போடுவதோடு இருந்தால் பரவாயில்லை. கூடவே, என் தோள்களைப் பிடித்து ஒரு ஆட்டு ஆட்டி நிறுத்துவதும் நடக்கும். ஒன்றிரண்டு முறை வண்டி குடை சாய இருந்ததை எப்படியோ சமாளித்து நிறுத்தினேன்.

அந்த முக்கால் மணி நேர ஸ்கூட்டர் பயணம் முழுதும் இப்படிப் பேசிக்(!) கொண்டே வரும் சீனுதானா மற்ற நேரங்களில் தென்படும் மோன நிலை சீனு என்று யாருமே நம்ப மாட்டார்கள்.

சீனுவின் அடுத்த அட்டகாசம் ஒரு சினிமாத் தியேட்டரில் வைத்து நடந்தது. உண்மையில் அதை அட்டகாசம் என்றுதான் சொல்ல வேண்டும். எனக்கும் குமாருக்கும் செம அடி வாங்கித் தரக்கூடிய அளவுக்கு ஒரு அட்டகாசம்.

அப்போது ரஜினியின் பாட்சா படம் ரிலீஸ் ஆகி ஒரு வாரம்தான் இருக்கும். நானும் குமாரும் கோயம்புத்தூரில் இருக்கும் ஒரு தியேட்டரில் நைட் ஷோ போகலாம் என்று முடிவு செய்தோம். அப்படியே போய் விட்டு வந்திருக்கலாம். சீனுவைக் கூப்பிடலாமென்று நான்தான் சொன்னேன். “வருவாரானு தெரியலையே” என்ற குமாரிடம் “கூப்பிட்டுப் பார்ப்போம்” என்றேன்.

சீனுவிடம் நான் கேட்டபோது, இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்தபடி கொஞ்ச நேரம் மேலே பார்த்தார். பேண்டை சற்று இழுத்து மேல விட்டபடி, “போலான்றிங்க.. சரி போவோம்” என்றார்.

மறுநாள் நைட் ஷோ போனோம். ரசிகர்களின் விசில் சத்தங்கள் காதைப் பிளக்க கூச்சலும் கும்மாளமுமாக போய்க் கொண்டிருந்தது. பாடல் காட்சி “ஸ்டைலு ஸ்டைலுதான்” ஆரம்பித்தது.

திடீரென்று ஒரு சிரிப்பு சத்தம். சீனுதான் சிரித்துக் கொண்டிருந்தார். சிரிப்பென்றால் “ஹாஹாஹா” வென்ற பெருஞ்சிரிப்பு.

“என்னாச்சு சீனு” என்றேன் நான்.

“ஹையோ…டான்சப் பாரேன்.. எக்ஸ்சர்சைஸ் பண்றாரு.” என்று சொல்லிக்கொண்டு இன்னமும் அதிகமாக சிரிக்க ஆரம்பித்தார் சீனு, கண்களில் நீர் பணிக்க. எங்களுக்கு வயிற்றைப் பிசைய ஆரம்பித்தது. முன் வரிசையில் இருந்து மூன்று நான்கு பேர் “ஏய்.. இன்னா… நக்கலா..தலைவரைக் கிண்டல் பண்றதுக்கினே வந்துக்கினியா” என்று சீனுவை நோக்கி கையை ஓங்கியபடி எழுந்தனர்.

நைசாக சீனுவைத் தள்ளிக்கொண்டு அரங்கை விட்டு வெளியே வந்தோம். “என்னாச்சு சீனு, ஏன் அப்படிச் சிரிச்சீங்க” என்ற குமாருக்கு “அதென்ன டான்சா..ஐயோ ஐயோ” என்ற சீனு மறுபடி சிரித்தார். இந்த முறை கொஞ்சம் குறைந்த சத்தத்தோடு.

அந்தப் பாடல் முடிந்த பிறகே உள்ளே போய் மீதிப் படத்தைப் பார்த்தோம். நல்ல வேலை சீனு வேறெந்த பாடலுக்கும் சிரிக்கவில்லை.

அந்தச் சிரிப்பாவது ஒரு நடிகனின் நடன அசைவுகள் பற்றி இருந்தது. ஒரு சின்ன பேப்பர் செய்தியும் அதே அளவு சீனுவை சிரிக்க வைத்து.

ஒரு குளிர்காலக் காலையில் டீ குடிக்க மெயின் ரோட்டிலிருந்த டீக்கடைக்கு போயிருந்தோம். சீனு அங்கிருந்த தினத்தந்தி பேப்பரைப் புரட்டிக் கொண்டிருந்தார். திடீரென்று அந்த அவரது சிரிப்பு பீறிட்டது. சுற்றி இருந்தவர்கள் சீனுவை விநோதமாகப் பார்க்க ஆரம்பித்தார்கள். நான் சீனுவை நெருங்கி “அப்படியென்ன ஜோக் போட்டிருக்கு சீனு” என்றேன்.

“இதோ இங்க பாருங்க” என்று சீனு காட்டிய பகுதியில் ஒரு மலையாளப் படத்தின் விளம்பரம் இருந்தது.

“எங்கே ஜோக்” என்றேன் நான்.

“இங்கே பாருங்க” என்று விரல் சுட்டிய இடத்தில் “அதிரடி ஆட்டக்காரி அபிலாஷா நடிக்கும்” என்று ஒரு படத்தின் விளம்பரம் இருந்தது.

நான் சீனுவைப் பார்த்தேன்.

சீனு கண்கள் பனிக்க “அதிரடி ஆட்டக்கரியாம்..சூப்பர் டைட்டில் இல்ல” என்றார்.

அந்தப் ப்ராஜக்டுக்குப் பிறகு சீனு வேலையை ராஜினாமா பண்ணிவிட்டு போய் விட்டார். இப்போது எங்கிருக்கிறார் என்ற எந்தத் தகவலும் இல்லை.

கண்டிப்பாக எங்காவது இந்த மாதிரி ஏதாவது ஒரு விஷயத்திற்காக, யாருக்குமே சிரிக்கத் தோன்றாத விஷயத்திற்காக சிரித்துக் கொண்டுதான் இருப்பார்.

- நவம்பர் 2014 

தொடர்புடைய சிறுகதைகள்
கியான் செத்துப் போனாளாம். விழாக் காலங்களில் மைக் செட் போடும் மதியழகன், பார்க்கும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தான். யாருமே அதை அவ்வளவு பொருட்படுத்தியதாய் தெரியவில்லை. அழகப்பர் தன் பெட்டிக்கடையில் உட்கார்ந்தபடி வருவோர் போவோரிடமெல்லாம் தன் பிள்ளைபற்றிய இழிபுராணத்தைப் பாடிக்கொண்டிருந்தார். டீக்கடை கோவிந்தன் சூடான ...
மேலும் கதையை படிக்க...
உள்ளும் புறமும்
“ஹலோ சார்...” “சூரஜ்?” “எஸ் சார்...” “உட்காருங்க...” “‘இங்க’ல்லாம் வேண்டாம் சார்…” “சரி… டேக் யுவர் சீட்… யூ லைக் திஸ் ஆபீஸ்?’’ “ரொம்ப சார்…” “எஞ்சினீரிங் முடிச்சது இந்தியாலதானே?” “ஆமா சார்...” “வேலைலாம் எப்படிப் போகுது?’’ “டைட்டா போகுது சார்...” “அது ஓகே… பிடிச்சிருக்கா..?” “ரொம்ப…” “படிச்சது மெக்கானிக்கல் இல்ல?” “ஆமா சார்...” “செய்யற வேலைக்கும் படிச்ச படிப்புக்கும் சம்பந்தம் இருக்கற ...
மேலும் கதையை படிக்க...
தியாகு மாதிரி இருந்தது. தியாகராஜன். எட்டாவது வரை உடன் படித்தவன். இத்தனை வருடங்கள் கழித்து இப்படி இங்கு ஒரு ஓட்டலில் வைத்து பார்ப்பேன் என்று நிச்சயமாய் நினைக்கவில்லை. ஒரு அலுவலக நண்பனோடு, ஆழ்வார்பேட்டையில் மாதந்தோறும் கடைசி சனிக்கிழமைகளில் நடைபெறும் இலக்கிய கூட்டமொன்றுக்கு போய் ...
மேலும் கதையை படிக்க...
மேடையின் வலது மூலையில் அமர்ந்திருந்த அமலா, மேடைக்கு இடது மூலையில் நண்பன் ஒருவனோடு உட்கார்ந்து இருந்த ரகுவை அவ்வப்போது ஒரு கண் பார்ப்பதும் அவன் பார்வை தன்னிலேயே நிலைத்திருப்பதைக் கண்டதும் உடனே வேறு பக்கம் திரும்பி யாரையோ பார்த்து பொதுவாக ஒரு ...
மேலும் கதையை படிக்க...
அப்பாவிடம் எப்படி இதைக் கேட்பது என்று புவனாவுக்குத் தெரியவில்லை. இன்றைக்குள் கேட்டு முடிவு சொல் என்று கொஞ்ச நேரத்திற்கு முன்புதான் ரமேஷ் போனில் சொல்லியிருந்தான். ரமேஷ் புவனாவின் கணவன். திருமணம் நடந்து ஒன்றரை வருடங்கள் ஆகிறது. இருவருமே மெத்தப் படித்த என்ஜினீயர்கள். ரமேஷ் ...
மேலும் கதையை படிக்க...
கையில் இருந்த பீடியைக் கடைசி இழுப்பு இழுத்துவிட்டு, தூர எறிந்தான் பாலு. பஞ்சாலையில் இருந்து சங்கு ஊதும் சத்தம் கேட்டது. நைட் ஷிப்டுக்கான அழைப்பொலி. முன்பென்றால், இந்நேரம் கிளம்பி வேக வேகமாக வேலைக்கு போயிருப்பான். இப்போது எந்த வித அவசரமும் இல்லாமல் நடந்து கொண்டிருந்தான். வேலை ...
மேலும் கதையை படிக்க...
முடிவு
சம தளத்திலும் சற்றே இறக்கமான பகுதிகளிலும் அவ்வளவாகத் தெரியவில்லை. சற்று மேடான சாலைப் பகுதிகளில் மட்டும் மிதிப்பதற்கு நிறைய சிரமமாக இருந்தது. ""வேண்டாண்டா உன்னால முடியாது''ன்னு சொன்ன பாபு கிட்ட, ""முடியும்டா''ன்னு சொல்லி சைக்கிளை வாங்கினது நான்தான். இப்ப முடியலைன்னு குடுத்தா ப்ரெண்ட்ஸ் ...
மேலும் கதையை படிக்க...
வரவர இந்த அப்பாவைப் பார்க்கவே பிடிக்கவில்லை. ஏன் அப்பா இப்படியெல்லாம் செய்கிறார்? என்ன செய்தாலும் என்னால் அதை தடுக்கவா முடியும்? பன்னிரண்டு வயது பையனால் என்ன செய்ய முடியும்? இவர் இப்படியெல்லாம் செய்வாரென்று தெரிந்துதான் அம்மா முன்னாடியே போய்விட்டாளா? அம்மாவை நினைத்ததும் கண்களில் நீர் ...
மேலும் கதையை படிக்க...
கையில இருக்கிற கல்யாண அழைப்பிதழ பாக்கறச்ச, கண்ல ஜலம் முட்டிண்டு வர்றது. இப்பதான் ஜானு மாமி, தன் பொண்ணுக்கு கல்யாணம் கட்டாயம் வந்துடுன்னு சொல்லிக் குடுத்துட்டுப் போறா. அதைப் பார்த்ததும் ஏனோ எனக்கு அழுகை வந்துடுத்து. பசங்கல்லாம் ஒரு மாதிரிப் பார்க்கறதப் ...
மேலும் கதையை படிக்க...
அதற்குள் அப்படியொன்று இருக்குமென்று சத்தியமாக எதிர்பார்க்கவே இல்லை. அதன் விளைவாக நடந்த அத்தனை நிகழ்வுகளையும் நினைவுக்கு கொண்டு வந்து போட்டது, மைக்கேல் சாரை, அவரின் மனைவியோடு எதிர்கொள்ள நேர்ந்த இந்த மாலைப் பொழுது. தம்பதி சமேதராய் எதிரில் கடந்து போனவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. ...
மேலும் கதையை படிக்க...
கியான்
உள்ளும் புறமும்
கடன்
கண்ணெதிரே தோன்றினாள்
வரன்(ம்)
பஞ்சு மனசுகள்
முடிவு
அம்மா மாதிரி
குழந்தையின் தாய்
காக்கைச் சிறகினிலே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)