என்னப்பனே முருகா ! எல்லாரையும் காப்பாத்தப்பா” வேண்டிக்கொண்டே விடியற்காலையில் தன்னுடைய அம்பாசிடரை வெளியே எடுத்தான் அண்ணாமலை.வீட்டுக்குள்ளிருந்து பையன் வெளியே ஓடி வந்தான், அப்பா அப்பா அம்மா ஒரு நிமிசம் வந்துட்டு போக சொல்லுச்சு.
காலையில வண்டி எடுக்கும்போதே இடைஞ்சலா ! மனதுக்குள் முணுமுணுத்து கொண்டே வண்டியை விட்டு இறங்கி வீட்டுக்குள் வந்தான். அவன் மனைவி கையில் காப்பி டம்ளருடன் நின்று கொண்டிருந்தாள். காலையில வெறும் வயித்துல போகாதீங்க. இவனுக்கு கோபம் பற்றிக்கொண்டு வந்தது. நினைத்து பார்த்தான்.பாவம் எனக்காக காப்பியை வைத்துக்கொண்டு நிற்கிறாள். இவளை நோக வைத்துவிட்டு சென்றால் அங்கும் நமக்கு நிம்மதி இருக்காது. சரி என்று காப்பியை குடிக்க ஆரம்பித்தான்.
காலை ஏழு மணிக்கெல்லாம் வண்டியை கொண்டு வந்து ஸ்டாண்டில் நிறுத்தி விடுவான். எப்படியும் வாடகை கேட்டு ஆட்கள் வருவர். அதனால் நேரத்தில் கொண்டு வந்து நிறுத்திவிட்டு மீண்டும் ஒன்பது மணிக்கு வீட்டுக்கு சாப்பிட போவான். ஓரளவுக்கு சவாரி கிடைப்பதால் குடும்பம் ஓடிக்கொண்டிருக்கிறது.
இரவு பத்து மணிக்கு மேல் ஆகியிருந்தது. இதற்கு மேல் சவாரி வருவது சிரமம், வீட்டுக்கு கிளம்பலாம் என்று முடிவு செய்து வண்டியை கிளப்பினான். அப்பொழுது மூவர் சவாரி வருமா என்று கேட்டனர். இவன் வாட்சில் மணி பார்த்தான்,மணி பத்தரை காட்டியது,
எங்கே சார் போகணும்?
ஊட்டி வரைக்கும் போகணும்.
திடுக்கிட்டான், ஊட்டிக்கா, மெல்ல இழுத்தவன் இந்நேரம் ஆயிடுச்சே சார்?
நீங்க கேக்கறத விட கொஞ்சம் அதிகமாகவே தர்றோம்பா.
அதிக பணம் என்றதும் மனம் சலனப்பட ஆரம்பித்த்து.யோசிக்க ஆரம்பித்தான்.
அப்பா யோசிக்காதீங்க, எங்களுக்கு அவசரம், சென்னையில இருந்து வர்றோம், அதனாலதான் இவ்வளவு நேரம் ஆயிடுச்சு.
சரிங்க சார் உட்காருங்க, ஆனா சார்ஜ் ஜாஸ்தியாகும், இவன் சொன்னதை காதில் வாங்காதவர்கள் போல் காருக்குள் இருவர் பின் புறமும், மற்றொருவர் முன்புறமும் ஏறி விட்டனர்.
கார் சிறிது தூரம் போன பின்தான் நினைத்தான் அடடா வீட்டுல சொல்லாம வந்திட்டமே, சரி “செல்லுல” சொல்லிடலாம் என்று ஸ்டேரிங்கை வளைத்துக்கொண்டே “செல்லை” பாண்ட் பாக்கெட்டில் தேடினான், கிடைக்கவில்லை. எங்கு வைத்தோம்?
மதியம் சாப்பாட்டுக்கு போகும்போது வீட்டுக்கு கொண்டு போனது ஞாபகம் இருக்கிறது. அப்படியானால் வீட்டுக்குள்தான் வைத்திருக்க வேண்டும்.இப்பொழுது மனதுக்குள் கவலை வந்து ஒட்டிக்கொண்டது. பாவம் என்னை இன்னும் காணவில்லை என்று பதறிக்கொண்டிருப்பாள்.நான் ஒரு மடையன், தன்னையே நொந்து கொண்டான்.
மேட்டுப்பாளையம் தாண்டி சிறிது தொலைவில் ஒரு கடையில் நிறுத்த சொன்னார்கள். நிறுத்தியவுடன் இவர்கள் மூவரும் இறங்கினர், வாப்பா நீயும் ஏதாவது சாப்பிடு என்று சொல்ல இவன் வேண்டாங்க, நான் காத்திருக்கேன்,மறுத்து விட்டான்.
அவர்கள்: சாப்பிட்டு வரும் வரை நமக்கு என்ன வேலை? மெல்ல கீழே இறங்கி அங்கிருந்த புதரோரமாய் போனான். அப்பாடி… ஜிப்பை இழுத்து விட்டு.மெல்ல வெளியே வந்தவன் சற்று தள்ளி இருவர் பேசிக்கொள்வது இவன் காதுகளில் மெல்ல விழுந்தது. வழியிலயே முடிச்சிடலாம்,ஹூம் இன்னும் கொஞ்ச தூரம் போகட்டும், இறங்க சொல்லி பாத்துக்கலாம்.
குரல் தன்னுடைய வண்டியில் ஏறியவர்களில் முதலில் சவாரி கிடைக்குமா என்று கேட்டவனின் குரல் போல் இருந்தது. இவனுக்கு மனதில் திகில் வந்து ஒட்டிக்கொண்டது.
இவர்கள் கொள்ளையர்களா? வழியில் தன்னுடைய காரை திருடுவதற்காக திட்டம் போட்டிருக்கிறார்களா? இப்பொழுது என்ன செய்வது? மனதில் பயம் ஊற மெல்ல தன் வண்டியருகே செல்லும்போது வண்டியில் வந்த மூவரும் காருக்குள் ஏறி உட்கார்ந்திருந்தனர்.
என்னப்பா இன்னும் காணோமேன்னு பார்த்தோம். ஒருத்தர் சொன்னபோது அவனுக்கு அந்த புதரில் பேசியவரின் குரல் போலவே இருந்தது.
சந்தேகமே இல்லை. இது திருட்டு கும்பல்தான், என்னுடைய காரை திருடத்தான் வந்திருக்கிறார்கள். இப்பொழுது என்ன செய்வது? வண்டி வராது என்று சொல்லி விடுவோமா?
அப்புறம் தகராறு செய்தால் இவன் நிலைமை என்ன? அவர்கள் மூவர். இங்கு அவனுக்கு தெரிந்தவர்கள் யாரும் இல்லை. வண்டி ரிப்பேர் என்று சொல்லிவிடலாமா? யோசித்தவன்
அதுதான் சரி கொஞ்ச தூரம் சென்று வண்டி ரிப்பேர் என்று சொல்லி விடலாம். மனதுக்குள் தெம்பை வரவழைத்துக்கொண்டான்.
கொஞ்ச தூரம் சென்ற பின்தான் யோசித்தான், வண்டி ரிப்பேர் என்று சொல்லிவிட்டு நானும் அவர்களுடன் தனியாகத்தான் இருக்க வேண்டும். வண்டி நன்றாக இருப்பதாக கண்டுபிடித்து விட்டால் என்னை அங்கேயே ஏதாவது செய்து விட்டு வண்டியை எடுத்துக்கொண்டு போய் விட்டால் என்ன செய்வது? இவனுக்கு இருதலை கொள்ளி எறும்பு போல மனது அலை பாய ஆரம்பித்தது.
நல்ல இருட்டு. வண்டி அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது. அண்ணாமலை மனது மட்டும் படக்..படக்,,கென துடித்துக்கொண்டிருந்தது. என்ன செய்யலாம்? இவர்களிடமிருந்து எப்படி தப்பிக்கலாம்? யோசனை செய்து செய்து இவன் மனம் சோர்ந்து விட்டது. எல்லா கடவுளையும் வேண்டிக்கொண்டான். அப்பா முருகா என் பொண்டாட்டியோட தாலி பாக்கியத்தை பறிச்சுக்காத ஆண்டவனே !
கொஞ்ச தூரம் சென்றதும் நல்ல இருட்டு, திடீரென்று பின்புறமிருந்து ஒரு குரல் வண்டிய கொஞ்சம் நிறுத்துப்பா, இந்த குரல் கேட்டவுடன் அண்ணாமலையின் அடிவயிற்றில் கிளம்பிய பயம் கால் வழியே கீழே வந்து கால்கள் நடுங்க ஆரம்பித்து விட்டன. என்ன செய்வது? மனது சீக்கிரம் சீக்கிரம், தன்னுடைய உயிர் முக்கியமா? வண்டி முக்கியமா?
முடிவு செய்? கட்டளையிட அடுத்த நிமிடம்…..
வண்டியை நிறுத்தியவன் தன்னுடைய கதவை திறந்து தலை தெறிக்க ஓட ஆரம்பித்தான். அந்த இருளில் தன் கண்களுக்கு தெரிந்த பாதையின் ஒளியைக்கொண்டு ஓட ஆரம்பித்தான். மனது துடிக்கும் சத்தம் கேட்டால் இருதயமே வெளியே வந்து விடுமோ என்ற அளவில் இருந்தது.
தட்..தட்..என்ற காலடி ஓசை அந்த இருளில் தனித்து கேட்டது. இலக்கு தெரியாமல் ஒடியவன் அடுத்த வளைவில் ஒரு வண்டி நின்று கொண்டிருப்பதை கணடவுடன் அதனை நோக்கி தன்னுடைய வேகத்தை அதிகப்படுத்தினான்.
நிறுத்தப்பட்டிருந்த வண்டியில் இருந்த ஓட்டுநரின் கையை கட்டி அவர் வாயில் தூணியை திணித்துக்கொண்டிருந்த இருவர் திடீரென தட் தட் என சத்தம் கேட்டு மிரண்டு திரும்பி பார்க்க ஒரு உருவம் வேகமாக இவர்களை நோக்கி வருவதை பார்த்தவர்கள் டேய்..யாரோ வர்றாங்க.. ஓடு .. சொன்னவர்கள் ஓட யத்தனிக்க அதில் ஒருவன் கொஞ்சம் நில்லு, ஒருத்தன் மட்டும்தான் ஓடியாரான், அவனை புடிச்சுடலாம் சொல்லிவிட்டு ஓடி வருபவனை தாக்க தயாரானார்கள்.
ஓடி வந்தவன் கையை கட்டி ஒருவன் படுத்துக்கிடப்பதையும் இருவர் இரு கட்டைகளை எடுத்து தன்னை அடிக்க பாய்ந்து வருவதையும் பார்த்து அதிர்ச்சியில் என்ன செய்வது என்று நினைக்கத்தான் முடிந்ததே தவிர இவனின் ஓட்டத்தை இவனாலே நிறுத்த முடியவில்லை.
அப்பொழுது அவனின் பின்னால் ஒரு வண்டியின் வெளிச்சம் அவன் மீது விழுந்து அதன் பின் அவனை தாக்க தயாராக இருப்பவர்கள் மீதும், கையில் கட்டுடன் வாயில் துணி அடைக்கப்பட்டு, கீழே கிடப்பவன் மீதும் விழுந்தது.
இவனை தாக்க தயாராக இருந்தவர்கள் திடீரென்று வந்த வண்டியின் வெளிச்சத்தை கண்டு மிரண்டு கையில் இருந்த கட்டையை கீழே போட்டு விட்டு ஓட முயற்சிக்க அதற்குள் வண்டிக்குள் இருந்த இருவர் ஓடி வந்து அவர்களை தாக்க ஆரம்பித்தனர். அவர்கள் இருவரும் விட்டால் போதும் என்று அந்த இடத்தை விட்டு ஓடி விட்டனர்.
இதற்குள் ஓடி வந்த அண்ணாமலை கீழே கிடந்தவனின் கட்டுக்களை பிரித்திருந்தான் அவனின் வாயில் இருந்த துணியையும் எடுத்து விட்டான்.
காரில் இருந்து இறங்கி அவர்களை விரட்டி விட்டு வந்த இருவர் “ஏம்ப்பா” இவரை காப்பத்தறதுக்குத்தான் அவ்வளவு வேகமா எங்களை விட்டுட்டு ஓடி வந்தயா? சொல்லியிருந்தா நாங்களும் உன்னோட இந்த காரிலேயே வேகமாக வந்திருப்போமில்லை. நல்ல வேளை சாவியை வண்டியிலே விட்டுட்டு வந்த, நாங்க எடுத்துட்டு உன் பின்னால் வர முடிஞ்சுது.
அதிலிருந்த ஒருவன் ஆமா நீ வயிறு புடுங்குதுன்னு வண்டியை நிறுத்த சொல்லிட்டே. டிரைவர் பார்த்திருப்பாரு. நமக்கு காத்திருந்தா இந்த டிரைவரை ஏதாவது பண்ணிடுவாங்கன்னு ஓடி வந்திருக்காரு. என்ன டிரைவர் நான் சொன்னது சரிதானே.
அண்ணாமலைக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இவர்களுக்கு பயந்து ஓடி வந்தோம் என்று அவனால் சொல்ல முடியவில்லை.
நாமாக இருந்தோமென்றாலும் அவன் செய்ததைத்தானே செய்திருப்போம்.
எது எப்படியோ மறு நாள் பத்திரிக்கையில் வந்த செய்தியில் “அண்ணாமலையும் ஒரு ஹீரோ வாக” வெளியாகி இருந்தான்.