அடைத்துக்கொண்ட காதும் அடங்காத நானும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: May 3, 2014
பார்வையிட்டோர்: 16,813 
 
 

எஸ்கூஸ்மீ… உங்ககிட்ட கோட்டன்பாட் இருக்கா? மன்னிக்கனும் காதுபஞ்சு இருக்கா?

காது கொடையுனும்!

என்னங்க அப்படி பாக்குறீங்க! இருக்கா இல்லையா?

இல்லனா சொல்ல வேண்டியதுதானே…எதுக்கு இந்த மொறப்பு?

காது கொடையுற சுகம் தெரியாத ஆளா இருப்பீங்க போல! அதான் கண்ணுல கடுப்பு கொழுந்துட்டு எரியுது! காது கொடையுறது எவ்வளவு சுகமுன்னு தெரியுமா உங்களுக்கு? கொடைய கொடைய சும்மா கொடைஞ்சிகிட்ட இருக்கனும்னு தோனும் போங்க… என்னையே எடுத்துகோங்க, பொழுது போகலனா உடனே காதக் கொடைய ஆரம்பிச்சுடுவேன். காது கொடையும் போது காத்துல ஏதோ நீலாம்பரி இராகத்த தேடுற மாதிரி கண்ணு ரெண்டும் சொக்கிப் போக அப்படியே காலு ரெண்டும் இறெக்க அடிச்சிகிட்டு மேல போகுற மாதிரி கிறங்கி போய் நிப்பேன். அப்பப்பா நினைக்கும்போதே சொக்குதே!

காது கொடையுறதுக்கு ஏத்த நேரமே குளிச்சிட்டுத் துண்டோட அறைக்கு வரோமே, அதுதாங்க. ஈரம் விரவி கெடக்குற உடம்புல இதமான ஜூவாலை கால் பாதத்துல இருந்து உச்சந்தலைக்குப் போகும்போது சும்மா ரெண்டு காதுலேயும் பஞ்சி மாறி மாறி சொழட்டனும். அந்த சுகத்துல உடம்பு லேசா இலகி இடுப்புல நிக்குற துண்டு டபார்னு சுதந்திரம் வாங்கிட்டாலும், நான் பின்வாங்கமாட்டேன்.

என் அறையில எப்பவுமே காதுபஞ்சு இருந்துகிட்டேதான் இருக்கும். சில சமயம் இல்லாம போயிடும். அப்படி இல்லாத நேரத்துல சத்தமே இல்லாம தம்பியோட அறையில இருந்து நைசா அடிச்சிட்டு வந்துடுவேன். அங்கேயும் இல்லனா அண்ணனோட அறையில சுட்டுட்டு வந்துடுவேன். என் அண்ணன் இருக்கானே அவனுக்கு யாரும் தன்னோட அறைக்குள்ள அத்துமீறிப் போகக்கூடாது. அப்படியே தெரியாம போனாலும் அவனுக்கு மட்டும் எப்படியோ தெரிஞ்சி போயிடும். அதோட என்கிட்ட சண்டைக்கு நிப்பான். அதுலேயும் நான் அவன் அறையில இருந்து எதாச்சும் எடுத்தேனு தெரிஞ்சது உண்டுல்லேனு பண்ணிடுவான். அழ்ப்பம் காதுபஞ்சுக்கும் அப்படிதான். ம்ம்ம்… என்ன பன்றது? சின்ன வயசுல இந்த பிரிவுலாம் கிடையாது. அவன் அவன் ஆம்பலையா ஆனதும் பிரிச்சுப்பாக்கற குணமும் கூடவே வந்துடுது.

அது ஒரு பொறம் இருக்க என் பாட்டி இன்னொரு பொறம்.

நான் காது கொடையும்போதெல்லாம் பல்லில்லாத கெழவி எதாச்சும் பல்லவி பாடும்.

“ஏண்டா போக்கத்தவன… எப்ப பாத்தாலும் உன் தாத்தன போல காதையே நோண்டிக்கிட்டு இரு. அந்த மனுஷன்தான் கோழிய பாத்தாலே உடனே வாலு மசுர பிடுங்கி காதுல விட்டு நோண்ட ஆரம்பிச்சுடுவாரு. நீயும் அவருக்குத் தப்பாம இருக்க?” (பல்லவியில ஒன்னு)

“ஆமாவா பாட்டி… அதானாலதான் பட்டியில கோழிங்களெல்லாம் வாலு இல்லாம
அலையுதுங்களாக்கும்”. (பல்லவிக்கு என் சரணம்)

என் பாட்டினா எனக்கு எப்பவுமே கொஞ்சம் எகத்தாளம்தான். எனக்கு மட்டுமில்ல, பொதுவாதான். நம்ம வீட்டுல கிடக்குற பழசுபட்டதுல கெழட்டுகட்டைகளும் ஒன்னா போச்சு… இப்பெல்லாம் எத்தன பேருங்க இவங்களயெல்லாம் ஒரு பொருட்டா கருதுறாங்க? வீட்டு மூலையில ஒக்காந்துகிட்டு எதாச்சும் அசை போட்டுகிட்டே இருக்காங்க. நாம என்ன அதெல்லாம் கண்டுகிட்டா இருக்கோம்?

ஒருவேளை பாட்டி சொல்றது போல, இது தாத்தாகிட்டருந்து வந்த பழக்கமானு தெரியல. ஆனா என் வீட்ல நான் மட்டும்தான் இப்படி. அது என்னமோ தெரியலைங்க காதுல பஞ்சு வெச்சு கொடைய ஆரம்பிச்சுட்டால நான் மெய்மறந்துடுறேன்.

இப்படிதான் ஒரு தடவை…

பள்ளி நேரத்துக்கு அப்பால தமிழ் வகுப்பு. ஆறுமுகம்னு ஒரு வாத்தியாரு பாடம் நடத்தினாரு. அவரு பாடம் நடத்தர விதத்துல விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் குறையாது போங்க… அவரோட வகுப்புல பசங்க படுவேகம். பின்ன இல்லாமலையா? பசங்க பொண்ணுங்க பக்கத்துல உட்காந்தாதான் ஒழுங்கா படிப்பானுங்கனு வாத்தியாரு சொல்ல அவன் அவன் இஷ்டம் போல போய் பொண்ணுங்க பக்கத்துல உட்காந்துக்குவானுங்க. நானும் அப்படியாதான் அம்பிகா பக்கத்துல போய் உட்காந்தேன். பாவி பொண்ணு, விளையாட்டா என் காதுல பென்சில வெச்சு சொழட்டுனா. அதுல மெய்மறந்து போனவன் அந்த ராத்திரியில வீட்டுல அம்மாகிட்ட காது வலிக்குதுனு அழுதுகிட்டே கிடந்தேன். காதுல எதையோ ஊத்திவிட்டு படுக்க வச்சிச்சு. நாளாவ நாளாவ காதுவலி அடங்கனபாடு இல்ல. எவன் எவனோ வைத்தியம் சொன்னானு சொல்லி, அம்மா அதுபாட்டுக்கும் என் காதுலே கண்டத பிழிஞ்சி விட்டுச்சு. பின்ன என்ன? இருந்ததும் போச்சு நொல்லக்கண்ணானு வலி கண்ட காதுல சலம் வழிய ஆரம்பிச்சுடுச்சு. வலி ஒரு பக்கம் என் உயிர வாங்க, சலத்தோட வாட மத்தவங்க உயிர வாங்க ஆரம்பிச்சுடுச்சு. அந்த வாடையில எவனும் என் பக்கத்தில நிக்கவே மாட்டான்.

இதுனாலேயே பள்ளியில என்னைய “சீலகாது”ன்னு கூப்புட ஆரம்பிச்சானுங்க. ஆரம்பத்துல கோவம் வந்துச்சு; பள்ளிக்குப் போகமாட்டேனு வீட்ல சொன்னேன். சொன்னதுக்கு அப்பாகிட்ட பெல்ட் அடி விழுந்துதான் மிச்சம்.

பாட்டிதான் சொன்னுச்சு.

“டேய் போக்கத்தவன, ஒலகத்துல ஒருத்தன் எப்படி இருந்தாலும் ஊரு எதாச்சும் சொல்லிக்கிட்டேதான் இருக்கும். நாமதான் மத்தவங்க சொல்றத காதுல போட்டுக்காம நம்ம வேலைய பாத்துகிட்டு போகணும்”.

பாட்டி சொன்னதும் ஒருவகையில சரிதான். மத்தவங்க நம்ம பத்தி சொன்னா நமக்கென்ன? நம்ம பிரச்சனை நமக்கு. இருந்தாலும் “சீலகாது” கேட்கவே என்னவோபோல இருக்கும். அதுனால யாரு என்னைய சீலகாதுனு கூப்பிட்டாலும் எனக்கு ஸ்ரீகாந்த்னுதான் கேட்கும். இப்படியே கொஞ்ச நாளு ஸ்ரீகாந்த்தாகவே அலஞ்சிக்கிட்டு இருந்தேன். அம்மாவோட வைத்தியம் எந்த பலனையும் கொடுக்காதனால, என்னைய மருத்துவர்கிட்ட அழைச்சிட்டு போனாரு அப்பா. போகும்போது அப்பாக்கிட்ட நல்லா வாங்கி கட்டிக்கிட்டேன். அப்பாவோ மருத்துவருகிட்ட வாங்கி கட்டிக்கிட்டாரு.

“நீங்களாவே வைத்தியம் பார்க்க ஆரம்பிச்சுட்டா நாங்களாம் எதுக்கு படிச்சி, கோர்ட்டு போட்டுகிட்டு கையில ஸ்டெட்டஸ்கோப்போட வைத்தியம் பார்க்கனும்?” (அப்பாவுக்கு விழுந்த டோசு)

என்னையும் காதையும் படாதபாடு படுத்தியெடுத்த மருத்துவரு கடைசியில ஒரு முடிவுக்கு வந்தவரு போல அப்பாவ பார்த்துட்டு என்னையும் பார்த்தாரு.

“பையன் காது புண்ணாயிக் கெடக்கு; அவ்வளோதான். பயப்படும்படியா எதுவுமில்ல. சொட்டு மருந்து கொடுக்குறேன்; மூனு வேள விட்டு பத்து நிமிஷம் கழிச்சு காது பஞ்சால துடைச்சு சுத்தம் பண்ணுங்க. அப்பதான் உள்ள அடைச்சிக்கிட்டு இருக்குற சலம் வெளிய வரும். ரெண்டு வாரம் கழிச்சு திரும்பவும் வந்து என்னைய பாருங்க” ஐம்பது வெள்ளி பில்லோட மருத்துவரு.

ஐம்பது வெள்ளி தண்டமா போச்சேனு வீடு வர வரைக்கும் அப்பாகிட்ட பாட்டு வாங்கி கட்டிக்கிட்டே வந்தேன்.

மூனு வேளையும் அம்மா என்னைய மடியில போட்டுக்கிட்டு காதுல சொட்டுமருந்து விட்டு சுத்தம் பண்ணும். காது பஞ்சு சலத்துல அப்படியே நொதநொதத்து வரும். அந்த சமயம் என் பக்கத்துல அம்மாவ தவிர யாரும் இருக்கமாட்டாங்க.

ரெண்டு வாரத்துக்கு அப்புறம், “காதுல புண்ணு நல்லா ஆறிடுச்சு… இனிமேல காதுல கண்டது விடுற வேலை வேணாம். முடிஞ்சளவுக்கு காது பஞ்சு அதிகமா பாயிக்கக்கூடாது” மருந்தே இல்லாமல் இன்னொரு முப்பத்தஞ்சி வெள்ளி பில்லோட மருத்துவரு.

இன்னொரு முப்பத்தஞ்சி வெள்ளி தண்டமா போச்சேனு வீடு வர வரைக்கும் மறுபடியும் அப்பாக்கிட்ட பாட்டு வாங்கிக் கட்டிக்கிட்டே வந்தேன்.

“இனிமே காதுபஞ்சி தொட்ட உன் கைய உடைச்சிடுவேனு” சொன்ன அப்பா. “காது கொடைஞ்சா காது மொத்தமா போயிடும்னு” பயமுறுத்துன அம்மா. “காது கொடைஞ்ச அப்பாக்கிட்ட சொல்லிடுவேனு” மிரட்டுன கோள்மூட்டி மூக்கன். என்னோட அறையில இருந்த காதுபஞ்சியெல்லாம் அப்பாக்கிட்ட கொடுத்த தம்பி. “என்னாடா போக்கத்தவனே இன்னிக்கு காது கொடையிலையானு” எரிச்சல் மூட்டுன பாட்டி.

இவங்களோட நான் பட்டப்பாடு இருக்கே அப்பப்பா அதெல்லாம் வார்த்தையால சொல்ல முடியாது போங்க. இவ்வளவும் காது கொடையுற சுகத்துல என்னைய மெய்மறந்து போனதுனால வந்தது.

இருந்தாலும் நீங்களே சொல்லுங்க… ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்குமா? காது கொடையுற சுகம் தெரிஞ்சு நான் சும்மா இருக்க முடியுமா?

காது கொடைய என்னதான் வழினு யோசிச எனக்கு, பாட்டி சொன்னது ஞாபகத்துக்கு வந்துச்சு. அதாங்க அந்த கோழி வாலு. அத புடுங்கி தாத்தாவ போல நாமும் காத கொடைஞ்சிட வேண்டியதுதானு முடிவு பண்ணேன். கோழிப்பட்டியில சேவல பிடிச்சு வாலயும் புடுங்கிட்டேன். எதையோ சாதிச்சிட்டதுபோல ஒரு உணர்வு எனக்குள்ள.

கோழிவால காதுல விட்டு கொடைய ஆரம்பிச்சேன். அப்படியே ரெண்டு காதுலேயும் மாறி மாறி சொழட்டுனேன். அதே நீலாம்பரி இராகத்த தேடுற மாதிரி கண்ணு ரெண்டும் சொக்கிப் போய் காலு ரெண்டும் அப்படியே இறெக்க அடிச்சிக்கிட்டு மேல போகுற மாதிரி கிறங்கி போய் நின்னேன்.

எங்கிருந்தோ பேயறை ஒண்ணு கண்ணத்துல விழுந்துச்சு. என் முன்னாடி அப்பா, பக்கத்துல என் அண்ணன் மூக்கன். விழுந்த அறைல காதுல குறுமி ரீங்ங்… னு சுத்துச்சு. கொஞ்ச நேரத்துல என்னால எதையுமே சுதாகரிக்க முடியல. விட்ட அறைல அப்பா என்ன முறைச்சிட்டு அங்கியிருந்து போயிட்டாரு. அவரு போயி பத்து வருஷம் ஆச்சு. ஆனா இப்பவரைக்கும் என் காதுல குறுமி ரீங்ங்… னு சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கு. அந்த சத்தத்த போக்கனும். அதுக்காகதான் காது பஞ்சி கேட்குறேன். உங்ககிட்ட காதுபஞ்சி இருக்கா இல்லையா?

நீங்க என்னமோ சொல்றீங்கனு எனக்கு விளங்குது… ஆனா அத அங்குட்டு சொல்லாம இந்த பக்கமா வந்து சத்தமா சொன்னா விளங்கும்.

என்னாது உங்ககிட்ட சில்லரைக்காசு இல்லையா? அத முதல்லையே சொல்ல வேண்டியதுதானே? நான் வேற ஆளுக்கிட்ட கேட்டிருப்பேனே…

எஸ்கூஸ்மீ… உங்ககிட்ட கோட்டன்பாட் இருக்கா? மன்னிக்கனும், காதுபஞ்சு இருக்கா?

காது கொடையுனும்!

– 26 ஜனவரி 2014 – தினக்குரல் நாளேடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *