அடிபம்பும், கார்சியா மார்க்வெஸ்ஸும், புல்புல்தாராவும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: June 3, 2014
பார்வையிட்டோர்: 18,215 
 
 

ஒரு மணிக்கு அலாரம் அடித்தபோது சமையலறையில் கரகரவென்று ஸ்டவ் நகர்கிற சத்தம். சபேசன் எழுந்து விளக்குப் போடாமல் அங்கே போனான். மண்ணெண்ணெய் வாடை தூக்கலாக வ்ர, படைப்பைக் கல் மேடையில் ஸ்டவ் மூன்று தடவை ஒரு காலை உயர்த்தித் தட்டிவிட்டு ஓரமாக திரும்பிக் கொண்டது. அம்மா வந்திருக்கிறாள்.

‘சீக்கிரம் வாளியை எடுத்துட்டுக் கீழே போ..வாிசை பொிசாயிடும்.. ‘ ஸ்டவ் காலில் அவள் பொறுமையில்லாமல் பேசினாள்.

‘போய்ட்டுத்தானே இருக்கேன்.. ‘ சபேசன் சலித்துக் கொண்டபடி சமையல் மேடைக்குக் கீழே இரும்பு வாளிகளைத் தேடினான்.

மூன்று வாளிகளிலும் தண்ணீர் பாக்கி இருந்தது. வாளிகளை வெளியே இழுத்துத் தூக்கினான். குளோாின் வாடை இருட்டில் பாதுகாப்பு இல்லாத உணர்வை ஏற்படுத்தியது. தண்ணீரை வீணாக்கக் கூடாது. அம்மா இறந்து போனது முதலே சமைக்க உபயோகிக்காத சிறிதும் பொிதுமான வெங்கலப் பானைகளை இருட்டில் மேடையில் தடவி அடையாளம் கண்டு அவற்றில் வாளித் தண்ணீரை ஊற்றும்போது மேடையெல்லாம் வழிந்து காலை நனைத்தது.

‘விளக்கைப் போட்டுக்கோயேன்.. எல்லாம் சொல்லணும்.. அப்புறம் தொடச்சுக்கலாம்.. விரசாக் கீழே போ ‘ ஸ்டவ் பொறுமையில்லாமல் சுவர்ப் பக்கம் திரும்பி அறைந்து கொண்டது.

விளக்கைப் போட்டபோது இரண்டு கையிலும் பிடித்திருந்த இரும்பு வாளிகளின் கொள்ளளவு ஆயாசத்தைத் தந்தது. இவற்றில் தண்ணீர் பிடித்துக் கீழே இருந்து தூக்கிக் கொண்டு வரும்போது இடுப்பிலோ அதற்குக் கீழோ பிடித்துக் கொள்ளலாம் என்ற பயம் இன்னொரு தடவை தலைகாட்டியது. அரையில் வேதனையோடு ஏழுபெண் வீட்டுக்குப் போகமுடியாது.

‘அந்த ஏழு சிறுக்கிகளை அப்புறமா நினைச்சுக்கலாம்..இப்ப தண்ணி வர நேரம் ‘ ஸ்டவ் விரட்டியது.

அம்மாவையும் அவனையும் ஊரையும் எப்போதும் தண்ணீர்த் தட்டுப்பாடு தொடர்ந்து கொண்டுதான் வந்தது. அவள் உயிரோடு இருக்கும்போது விழித்திருக்கும் நேரம் எல்லாம் தண்ணீர் பிடிப்பதையும், அதைச் சிக்கனமாகச் செலவழித்துச் சேர்த்து வைப்பதைப் பற்றியும் தான் நினைத்தபடியும் பேசியபடியும் இருந்தாள். தண்ணீர் கஷ்டம் தீர்ந்ததும் சபேசனின் கல்யாணத்தைப் பற்றி யோசிக்கலாம் என்று அவள் சொன்னதை முகம் தொியாத அந்த மணப்பெண் மற்றும் வரக்கூடிய குழந்தைகள் நலம் கருதி சபேசன் ஏற்றுக் கொண்டான். அம்மா ராத்திாிகளில் உறங்காமல் அடிபம்பில் தண்ணீர் வரும் நேரத்தை எதிர்பார்த்து அவனை எழுப்பிவிடத் தயாராக இருப்பது அவள் இறந்தாலும் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

சபேசன் வாளிகளோடு வெளியே வந்து முன்னறையிலும் விளக்கைப் போட்டான். உலர்ந்து வெடிப்பு விட்டிருந்த தரையில் காலையில் புரோகிதாின் தலையைச் சுற்றி எறிந்த எள் காலில் நெருடியது. சுவாில் இரண்டு வருடத்துக்கு முந்திய காலண்டாின்மேல் பழுப்பு நிறத்தில் ஒரு நத்தை ஊர்ந்து கொண்டிருந்தது. ரேடியோ பெட்டி மேல் எப்போதோ வாங்கிய காகிதக் கூம்பில் மிச்சமிருந்த உலர்ந்த பட்டாணியைக் கொறிக்க எடுக்கலாமா என்று யோசித்தபோது சமையலறையில் திரும்ப ஸ்டவ் சத்தம். ‘சீக்கிரமா கீழே போயேண்டா.. சொன்னாக் கேட்க மாட்டியா ? ‘

குறுகலான படிகளின் இறக்கத்தில் வலப்புறம் திரும்பியபோது கீழே வாளிகளின் வாிசை தொிந்தது. இன்னும் சீக்கிரமே வந்திருக்கலாம்..

விளக்குத் தூண் பக்கத்தில் பைஜாமாவும் மேலே நேற்றைக்கு அலுவலகத்துக்கு அணிந்து போய் இடுப்புக்குக் கீழே கசங்கி இருந்த நீலச் சட்டையுமாக கீழ்ப் போர்ஷன் தாடிக்காரன் உட்கார்ந்திருந்தான். கையில் வழக்கம்போல தடிப் புத்தகம். தாடிக்காரனுக்குக் கொஞ்சம் தள்ளி சைக்கிள்களும், ஸ்கூட்டர்களும், ாசண்முக விலாஸ் மளிகை ‘ என்று வெள்ளைப் பெயிண்டில் எழுதிய மூன்று சக்கர சரக்கு சைக்கிள் ஒன்றும் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தன. அந்த வண்டியின் பலகை அடைப்புக்குள் உட்கார்ந்து ஒரு நடுவயது அம்மணி புல்புல்தாரா வாசிக்கப் பழகிக் கொண்டிருந்தாள். தாடிக்காரன் குடித்தனத்துக்கு நேர் எதிர் போர்ஷன் அவளது. வாிசையில் முதலில் இருக்கும் மூன்று சிவப்பு நிற வாளிகளும் அவளுடையவையே.

கீழே தரையில் சாக்குக் கட்டியால் கட்டம் வரைந்து ஆடுபுலி விளையாடிக் கொண்டிருந்த வங்கி மேனேஜரையும், வெட்டினாி டாக்டரையும் சுற்றிக் கொண்டு வாிசைக் கடைசிக்குப் போகும்போது சபேசன் அவனை அறியாமல் முன்னால் இருக்கும் வாளிகளைக் கணக்கெடுத்தான். மொத்தம் பதினைந்து. ஆளுக்கு மூன்று என்ற கணக்கில், அதிகபட்சமான மூன்று வாளிகளுக்கு உாியவர்கள் யார் என்று தொியவில்லை.

சபேசன் வாளிகளை வைத்தபோது தாடிக்காரன் நிமிர்ந்து பார்த்துச் சிாித்தான். அவன் புத்தகத்தை மூடியபடி இரண்டொரு வார்த்தை சபேசனிடம் பேசிக் கொண்டிருந்துவிட்டு ஒரு சிகரெட் பற்ற வைத்துக் கொள்வது வழக்கம். புத்தகப் படிப்பை நிறுத்தியதும் உடனே சிகரெட் புகைப்பது அதை எழுதியவருக்குச் செலுத்தும் மாியாதையாகாது என்று அவன் நினைத்திருக்கலாம்.

‘லேட்டாயிடுச்சா ‘ தாடிக்காரன் கேட்டான்.

பதிலுக்குச் சிாித்தபடி, ‘இது வேறே புத்தகமா ? ‘ என்று சபேசன் எதிர்க்கேள்வி கேட்டான்.

‘அதேதான்.. நூறு வருஷத் தனிமை ‘

மலையாளப் புத்தகம். பின்னட்டையில் ஒரு நரைத்த மீசைக்காரன் படமும் கார்சியா மார்க்வெஸ் என்ற எழுத்தும்.

‘கதை தானே ? ‘ சபேசன் நிச்சயமாகத் தொிந்ததை இன்னும் உறுதிப் படுத்திக் கொள்ளும் தொனியில் கேட்டான்.

‘கதையும் தான்.. ஸ்பானிஷ்லேருந்து மொழிபெயர்ப்பு ‘

தாடிக்காரன் சொல்லிக் கொண்டே சிகரெட் பற்ற வைத்துக் கொண்டான். புத்தகத்தின் பின் அட்டையில் இருப்பவன் சுருட்டுப் பிடிக்கும் வழக்கம் உள்ளவன் என்று ஏனோ சபேசனுக்குத் தோன்றியது. ‘நெஞ்சம் உண்டு ..நேர்மை உண்டு..ஓடு ராஜா ‘ என்று பிழையின்றி வாசித்த புல்புல்தாரா பெண்மனி அந்த சந்தோஷத்தில் திரும்பத் திரும்ப அதையே வாசித்துக் கொண்டிருந்தாள்.

‘நேத்து ஒருத்தன் பேங்க் லாக்கர்லே கருவாட்டை வைச்சுப் பூட்டிட்டுப் போய்ட்டான்.. ‘

வங்கி மேனேஜர் கல்லை உயர எறிந்து பிடித்தபடியே சொன்னார்.

‘போன வாரம் பசுவெண்ணெய்..இந்த வாரம் இதுவா ? ‘

வெட்டினாி டாக்டர் லேசாகச் சிாித்தபடியே கல்லை நகர்த்தினார்.

‘இன்னொரு செட் வாளி யாருடையது ? ‘

சபேசன் பொதுவாகக் கேட்டான்.

மேலே எறிந்த கல்லைப் பிடித்தபடி வெட்டினாி டாக்டர் இடப்பக்கமாகக் கையைக் காட்டினார். அங்கே ஆடிட்டர் ஆபீஸ் குமாஸ்தா, சினிமா உதவி டைரக்டர் என்று இரண்டு பேருடைய குடித்தனங்கள் எதிரும் புதிருமாக உண்டு. இதில் யார் வாளி என்று தொிந்து கொள்ள சபேசனுக்கு சிரத்தை இல்லை.

‘ஒண்ணரை மணியாயிடுத்து.. ‘ தாடிக்காரன் விளக்குத் தூண் பக்கத்து ஸ்டூலில் திரும்ப உட்கார்ந்து கொண்டான். இன்னும் பதினைந்து நிமிடம், மிஞ்சிப் போனால் அரை மணியில் தண்ணீர் வந்து விடும். அதற்குள் முடிந்தவரை புத்தகத்தைப் படிக்க அவன் கைகள் பரபரத்தன. மூணு மாதமாக இந்தப் புத்தகத்தைப் படித்தபடிதான் தண்ணீர் பிடிக்கத் தினமும் காத்திருக்கிறான் அவன். இன்னும் நாலு மாதம் தண்ணீர்க் கஷ்டம் தொடர்ந்தாலும் அவனுக்குப் படிக்கப் புத்தகத்தில் பக்கங்கள் இருக்கும் என்று சபேசனுக்குத் தோன்றியது. ஒரு வேளை மழை பெய்து தண்ணீர்க்கஷ்டம் தீர்ந்தால் அவன் படிப்பதை நிறுத்திவிடலாம் என்று நினைக்க வருத்தமாக இருந்தது.

‘ஆடிட் கிளார்க் வாளியை வச்சுட்டு நெஞ்சு வலியோ என்னமே மாரைப் பிடிச்சுக்கிட்டுப் படுத்துக்கப் போயிட்டார் ‘ வங்கி மேனேஜர் இடுப்பில் சொாிந்தபடி சொன்னார்.

சபேசனின் அம்மா நாலு மாதம் முன்னால் அதீத நெஞ்சு வலியால் இறந்ததற்கு முந்தின நாளும் அதற்கு முந்திய தினமும் தண்ணீர் வரவேயில்லை. அந்த ஏமாற்றமே அவளைக் கொண்டுபோயிருக்க வேண்டும். அவள் செம்மண் பூமியிலிருந்து வந்தவள் என்பதால் தண்ணீாின் அருமை தொிந்தவளாக இருந்தாள். மூன்று வாளி தண்ணீாில் குளித்து, துணி துவைத்து, சமைத்து அலம்பி வைத்து விடுவாள். அவள் போன பிறகும் சபேசன் எப்போதும் போல ஆபீஸால் குளித்துக் கொள்கிறான். ஆனால் எப்போதாவது தான் சமையல். சாணை பிடிப்பவர்களே பெரும்பாலும் ராத்திாி சாப்பாட்டுக்கு வரும் ஒரு சின்ன ஓட்டலில் ராச்சாப்பாடு அவனுக்குப் பழகியிருக்கிறது. வாரம் ஒருதடவையாவது சாயந்திரம் குளித்துவிட்டு ஏழுபெண் வீட்டுக்குப் போவான். அங்கே வற்றல் குழம்பும் சுட்ட அப்பளமுமாகச் சாப்பிட்டுக் கைகழுவி உள்ளே போனால் ஏழில் ஒருத்தி பயோாியா பல்பொடியில் தந்தசுத்தி செய்த வாசனையோடு வருவாள். அவளோடு பழைய சினிமாப் பாட்டுக்களைச் சன்னமான குரலில் பாடியபடி ராத்திாி ரொம்ப நேரம் போகும். அடுத்துப் பாடப் பாடலோ, பாடும்போது இடையில் வாிகள் மறந்தோ சிரமப்படக்கூடாது என்பதற்காகவே அவர்கள் வீட்டில் பழைய சினிமா பாட்டுப் புத்தகங்களை அழகாக அடுக்கி பைண்ட் செய்து அட்டவணை எழுதி வைத்திருப்பார்கள்.

இடதுபுற போர்ஷன் கதவு திறந்து யாரோ வெளியே வந்தார்கள். ஆடிட் கிளார்க் மனைவி அது. நாலு ஆண்பிள்ளைகளையும் பார்த்து நின்று ஏதோ யோசித்துவிட்டு மளிகைக்கடை அம்மணி முன்னால் போய் நின்றாள் அவள். அரைக்கண்ணை மூடிக் கொண்டு புல்புல்தாராவில் ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ‘ வாசித்துக் கொண்டிருந்தவள் அசையாமல் போகவே, அவள் தண்ணீர்ப் பம்பை வெறுமனே ஒரு தடவை அடித்தாள்.

‘உங்க வீட்டுலே ஃபோன் இருக்கா ? ‘ கண் திறந்த புல்புல்தாரா அம்மணியிடம் மெல்லிய குரலில் கேட்டாள் அவள். புல்புல்தாரா சத்தம் நின்ற நிசப்தத்தில் பக்கத்தில் இருந்த சபேசன் காதிலும் அது விழுந்தது.

‘இருக்கு.. என்ன விஷயம் ? ‘

‘டாக்டரைக் கூப்பிடணும்.. குடும்ப டாக்டர்.. எங்க வீட்டுக் காரருக்குத் திரும்ப மார்லே பால் கட்டிக்கிட்டிருக்கு.. வலியோட கஷ்டப் படறார்.. ‘

‘அது ஆம்பிளைகளுக்கு ஏன் வரணும் ? ‘ மளிகைக்கடை அம்மாள் பேச்சின் பின்னணியில் புல்புல்தாராவை இசைத்தாள். இதை ஆணித்தரமாகக் கேட்டதும் பாட்டு முழுவதையும் தப்பில்லாமல் வாசித்த சந்தோஷம் அவள் முகத்தில் தொிந்தது.

‘அவங்க வீட்டுலே ஆம்பிளைங்களுக்கும் இப்படி வருமாம்.. ‘ ஆடிட் கிளார்க் மனைவி சிநேகமாக அவள் தோளைத் தொட்டபோது மளிகைக்கடைக்காாி நேசத்தோடு எழுந்து அவள் பின் தொடர போர்ஷனுக்குள் நுழைந்தாள்.

முன்னும் பின்னும் பருத்து, மஞ்சள் துணிப்பையில் பிதுங்கி வழியும் பேரேடுகளைச் சுமந்தபடி ஆடிட் குமாஸ்தா சாயந்திரங்களில் மெல்ல நடந்து வருவதை சபேசன் நினைத்துக் கொண்டான். யாராவது அசம்பாவிதமாகவோ, வேண்டுமென்றோ துன்புறுத்திவிடுவதால், பஸ்ஸால் வருவதைத் தவிர்ப்பதாகவும் அவன் எப்போதோ சொன்னதும் நினைவில் வந்து போனது.

‘ஜெயிச்சுட்டேன்.. ‘ வெட்டினாி டாக்டர் எழுந்தார். ‘ தண்ணி வர தாமதமானா, இன்னும் ஒரு ஆட்டம் ஆடலாம் ‘ என்றார் மேனேஜர். மளிகைக்கடை அம்மணி திரும்ப வந்து வாளிகளை நகர்த்திவிட்டு, பம்ப் உள்ளே ஒரு செப்புக் குவளைக்குள்ளிலிருந்து தண்ணீர் வார்த்தாள். அப்புறம் நாலைந்து தடவை வலுவாக அடிக்க ஆரம்பித்ததும், அடிபம்பும் ‘நெஞ்சம் உண்டு..நேர்மை உண்டு… ‘ என்று சுருதி தவறாமல் பாடியது.

தண்ணீர் வர ஆரம்பித்தபோது தட்டுச் சுற்று வேட்டியோடும், கையில் மருந்துப் பெட்டியோடும் டாக்டர் உள்ளே நுழைந்தார்.

‘இருட்டில் அசுத்தத்தை மிதிச்சுட்டேன்.. கால் கழுவக் கொஞ்சம் தண்ணி கிடைக்குமா ? அவர் கேட்டதை யாரும் லட்சியம் செய்யாமல் போகவே, செருப்புக்களை நடைபாதைக்கு அருகில் விட்டுவிட்டு ஆடிட் கிளார்க் போர்ஷனுக்குள் நுழைந்தார்.

மளிகைக்கடை அம்மணி நிரம்பிய வாளிகளை எடுத்துப் போய் வைத்துவிட்டு, புல்புல்தாராவை எடுத்துப் போக இன்னொரு தடவை வந்தபோது ஆடிட் கிளார்க் போர்ஷனைப் பார்த்து சிாித்துக் கொண்டாள்.

தாடிக்காரன் ‘மார்க்வஸ் போல இன்னொருத்தன் பிறந்து வரணும் ‘ என்று சொல்லியபடி அடிபம்பை இயக்க ஆரம்பித்தான். ஸ்டூலில் வைத்திருந்த புத்தகத்தின் பின்னட்டைப் புகைப்படத்தை அவன் பார்த்தபடி தண்ணீர் அடித்தபோது, அந்தப் படத்திலிருந்து அவனுக்குத் தேவையான உடம்பு வலிமை கிடைத்தது போல பின்னால் நின்ற சபேசனுக்குத் தோன்றியது. சபேசன் தன் போர்ஷனை நிமிர்ந்து பார்க்க, ஸ்டவ் சத்தம் திரும்பக் கேட்டது.

ஆடிட் கிளார்க் மனைவி ஓட்டமும் நடையுமாக வந்து வாளிகளை நிரப்பி விட்டுப் போனாள். வங்கி மேனேஜர் அடுத்து வாளிகளை நகர்த்தியபோது, புத்தகத்தைக் கையிடுக்கில் பிடித்தபடி தண்ணீர் வாளிகளோடு போன தாடிக்காரனிடம், ‘எனக்கு மலையாளம் சொல்லித் தர முடியுமா ? என்று சபேசன் விசாாித்தான். ஏழுபெண் வீட்டில் மலையாள சினிமா கானங்களும் புத்தகரூபத்தில் உண்டு என்றாலும், தாடிக்காரன் படிக்கும் புத்தகத்தைக் கொஞ்சம்போலவாவது படிக்க அவனுக்கு திடாரென்று ஆவல் ஏற்பட்டதே காரணம். தாடிக்காரன் வழக்கமான சிாிப்பை உதிர்த்துப் போனான்.

‘மிருகங்களின் மனோதத்துவம் வேண்டுமானால் நான் சொல்லித் தருகிறேன் ‘ என்றபடி வெட்டினாி டாக்டர் தண்ணீர்ப் பம்பை பலமாக அடிக்க ஆரம்பித்தபோது சபேசன் போர்ஷனில் ஸ்டவ் சத்தம் நிற்காமல் கேட்டது.

‘காப்பி சாப்பிட்டுப் போங்க.. ‘ என்று உள்ளே இருந்து ஆடிட் கிளார்க் மனைவி அழைத்ததை அன்போடு மறுத்து டாக்டர் இறங்கித் தெருவில் நடந்தார். ‘ ‘இவங்க வீட்டுலே எப்பவும் காப்பிக்குப் பால் இருக்கும் ‘ என்று வெட்டினாி டாக்டர் சபேசனிடம் சொல்லும்போது, வாளிகளை எடுத்துப் போக வந்த ஆடிட் கிளார்க் மனைவி ந்டைபாதை ஓரமாக டாக்டர் மறந்து விட்டுப் போயிருந்த செருப்புக்களில் பட காாி உமிழ்ந்து கொண்டு போனாள்.

சபேசன் தண்ணீர் அடிக்க ஆரம்பித்தபோது எல்லோரும் போயிருந்தார்கள். அவன் அடிக்க அடிக்க தண்ணீர வரவு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து அரை வாளி நிரம்புவதற்குள் நின்றே போனது. அவனுக்கு ஏனோ சந்தோஷமாக இருந்தது. இன்றைக்கு ஆபீஸ ‘க்கு லீவ் போட்டு விட்டுக் காலையிலேயே ஏழுபெண் வீட்டுக்குப் போய்…

மேலேயிருந்து வலுத்து வந்த ஸ்டவ் சத்தம் கேட்காமல் இருக்க அதிக ஓசையோடு வெறும் பம்பை அடித்தபோது, மார்க்வெஸ்ஸுக்கு புல்புல்தாரா வாசிக்க வருமா என்று நாளைக்குத் தாடிக்காரனிடம் கேட்கவேண்டும் என்று சபேசன் நினைத்துக் கொண்டான்,

– பெப்ரவரி 2000

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *