அது மிகவும் பழைமையான ஒரு கோயில். அங்கே அர்ச்சகர்கள் நிறையப் பேர் இருந்தார்கள். எல்லோருமே பிரம்மச் சாரிகள். ஆகவே, அவர்கள் உடலில் வலிவு இருந்தது. முகத்தில் பொலிவு இருந்தது.
ஒரு நாள் –
அந்த ஆலயத்தின் முன்னால் சில குதி ரைகள் வந்து நின்றன. அவற்றிலிருந்து சில வீரர்கள் கீழே இறங்கினார்கள். உள்ளே வந்தார்கள்.
“நாங்கள் அரண்மனையிலிருந்து வருகி றோம்” என்றார்கள் அந்த வீரர்கள்.
“வாருங்கள்” என்றனர் அர்ச்சகர்கள்.
“மன்னர் எங்களை அனுப்பி வைத்தார்!”
“என்ன வேண்டும் உங்களுக்கு?”
“நீங்கள்தான் வேண்டும்!”
“அப்படியென்றால்?”
“உங்களை அழைத்து வரச் சொன்னார் மன்னர்!”
அர்ச்சகர்கள் அலட்சியமாக அவர்களைப் பார்த்தார்கள். “அரசனை வேண்டுமானால் இங்கே வரச்சொல்லுங்கள்!”
அழைக்க வந்தவர்கள் திகைத்துப் போனார்கள். திரும்பிப் போனார்கள். அரசனிடம் விவரத்தைச் சொன்னார்கள். அரசர், அமைச்சர்களை வரச் சொன்னார். ஆலோசனை நடத்தினார்.
“அர்ச்சகர்களின் அகந்தை அடங்க வேண்டும். அதற்கு என்ன செய்யலாம்?”
ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதன்படி செய்தார்கள்.
அவ்வளவுதான். அதன் பிறகு அந்த அர்ச்சகர்களை அரண்மனைக்குக் கூப்பிட்டு அனுப்ப வேண்டிய அவசியமே வரவில்லை! அவர்களாகவே தேடி வர ஆரம்பித்தார்கள். “மன்னா! தங்களை ஆசீர்வாதம் பண்ண வந்திருக்கிறோம். இதோ அர்ச்சித்த மலர்களைக் கொண்டு வந்திருக்கிறோம். பெற்றுக் கொள்ளுங்கள்!” என்றார்கள்.
கூடவே சில கோரிக்கைகளையும் வைத்தார்கள். “மன்னா! நாங்கள் வீடு கட்ட வேண்டும். வீடுகளில் சில விழாக்களையும் சடங்குகளையும் நடத்த வேண்டும். அதற்கு நீங்கள்தான் அருள் புரிய வேண்டும்!”
அர்ச்சகர்களின் இந்த மாற்றத்துக்கு என்ன காரணம்?
அரசன் என்ன செய்தார்?
வேறொன்றுமில்லை… அர்ச்சகர்கள் அத்தனை பேருக்கும் கல்யாணம் பண்ணி வைத்துவிட்டார். அவ்வளவுதான். அதன் பின், சொன்னபடி கேட்க ஆரம்பித்து விட்டார்கள் அர்ச்சகர்கள். இது, குருதேவர் ராமகிருஷ்ணர் சொன்ன ஒரு கதை.
நண்பர்களே! ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்.
இந்த உலகில் மூன்று வகைத் துறவுகள் இருப்பதாகச் சான்றோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
அறிவையும் இன்பத்தையும் சமயத்துக்காக வெறுத்தல் – சமயத் துறவு. அதிகாரத்துக்காக வெறுத்தல் – போர்த் துறவு.
பணத்துக்காக வெறுத்தல் – பணத் துறவு.
இந்த மூன்றாவது வகைத் துறவே இன்றைக்கு அதிகமாகக் காணப்படுகிறது.