ஃபளாட்டை விற்கப் போனேன், பழமொழிகள் வாங்கி வந்தேன்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 11,299 
 
 

‘தாம்பரத்தில்.. பஸ் நிலையம், ரயில் நிலையம் அருகில்.. அட்டகாசமான ஃப்ளாட்..’ என்று கவர்ச்சிகரமாகத்தான் எங்கள் விளம்பரம் பேப்பரில் வந்தது. வாங்கி 12 வருடத்துக்கு மேல் பழசாகிவிட்ட அந்த ஃப்ளாட்டுக்கு அப்படித்தான் விளம்பரம் தரவேண்டும் என்று எல்லோரும் சொன்னார்கள். நானும் அந்த விளம்பரத்தைப் பார்த்து, வீட்டுக்காக அலைமோதப் போகும் கூட்டத்தை எப்படி கட்டுப்படுத்தலாம் என்ற சிந்தனையில் ஆழ்ந்திருந்தேன். ஆனால், ‘ஃப்ளாட்டை விற்கப் போய் பழமொழிகள் வாங்கி வருவேன்’ என்று நினைத்தும் பார்க்க வில்லை.

விளம்பரம் வெளியான நான்கு இனிய நாட்களுக்குப் பிறகு, ஒரு காலை பெட் காபி நேரத்தில் போன் மணி அடித்தது.

‘‘ஹலோ.. வணக்கங்க! உங்க வீட்டு விற்பனை விளம்பரம் பார்த்துட்டு பேசறேன்..’’ என்ற வாக்கியம் காதில் தேனாகப் பாய்ந்தது. அப்போதே அந்த ஃப்ளாட்டை அடிமாட்டு விலைக்கு கேட்டு தொணப்பிக் கொண்டிருந்த எதிர் ஃப்ளாட் மனிதர் சுப்புவின் முகத்தில் கரி பூசி விட்டதுபோல மனம் சிறகடித்துப் பறந்தது.

ஊதுபத்தி விற்க வந்தவர்கள் எத்தனை பேரைப் பார்த்துக் கற்றுக் கொண்டிருப்போம். அதையெல்லாம் வைத்து, நானும் ‘ஆஹா.. ஓஹோ..’ என்று எங்கள் ஃப்ளாட்டை சிலாகித்துத் தள்ளினேன். விபரங்களை எல்லாம் கேட்டு முடித்து விட்டு, அவர் கேட்ட முதல் கேள்வி ‘‘நீங்க ஏன் அந்த இடத்திலே போய் வீட்டை வாங்கி னீங்க…?’’

‘‘என் கணவர் ஆரம்பத்திலே இங்கே தான் வேலை பார்த் தார்! இந்த இடம் அவருக்கு ரொம்பவும் பிடிச்சிருந்தது. அத னால இங்கேயே வாங்கணும்னு ஒத்தைக் காலில நின்னு இதை வாங்கிட்டார்!’’

‘‘ஒத்தைக் காலிலே எல்லாம் நின்னா வீடு வாங்க முடியாதம்மா! வீடு பெற நில்னு ஸ்டெடியா வைராக்கியமா நிக்கணும்! சரி, வீடு என்ன அளவு?’’

‘‘ஏழு நூறு சதுர அடிதான்.. ஆனா ரெண்டு ரூம் இருக்கு..’’

‘‘எலி வளையானாலும் தனி வளை வேணுமில்ல! அது போதும் எங்களுக்கு! எந்த திசை பார்த்த வீடு?’’

‘‘தெற்குப் பார்த்த வாசல் படி..!’’

‘‘வடக்கு வாசல் மச்சு வீட்டை விட, தெற்கு வாசல் குச்சு வீடு மேல்னு சொல்லுவாங்க! சரி, இப்போ, எதுக்கு இதை விக்கறீங்க?’’

‘‘நாங்க எந்த கஷ்டத்துக்காகவும் விக்கலை! இதைக் கொடுத்துட்டு பெரிசா வாங்கியாகணும்! பொண்ணு அடை யாறிலே இருக்கா. அவகிட்டே இருக்கணும்னுதான்!’’

‘‘சரி, நான் புதன்கிழமை வரேன்! பொன் கிடைச்சாலும் புதன் கிடைக்காதுனு சொல்வாங்க. புதன் ரொம்ப நல்ல நாள். அன்னிக்கே வரேன்!”

‘‘சரி, எப்போ வேணுமானாலும் வாங்க! நான் வீட்டிலேதான் இருப்பேன்!’’ என்று போனை வைத்தேன். இப்படி பழமொழிகளாகப் பொழிந்து தள்ளுகிறாரே என்று ஆச்சர்யத்துடன் காத்திருந்தேன், அவருக்காக.

சொன்ன மாதிரியே புதன்கிழமை மத்தியானம் தனது பேரனுடன் ஆஜரானார், அந்த பழமொழி ஆசாமி!

‘‘உங்க வீட்டைத் தேடி ரொம்ப கஷ்டப்படுவேனோ என்று பயந்தபடிதான் பஸ்ஸிலிருந்து இறங்கினேன். நல்லவேளை, தேடிப் போன மூலிகை காலிலே இடறினாப் போல உங்க வீட்டுக்கு எதிரே இருக்கிறாராமே சுப்பு.. அவர்தான் என்னை வழி யிலேயே பார்த்துட்டு கொண்டுவந்து விட்டுட்டு போனார். நல்ல மனிதர்!’’

‘ஐயோ மூலிகையா அவர்? விஷ விருட்சமாச்சே! எங்க வீட்டை எப்படி குறைச்சல் விலைக்கு வாங்கலாம்னு பிளான் போட்டுக்கிட்டு இருக்கிற அவரா, இவரது காலில் இடறின மூலிகை?’ என்று மனதில் தோன்றியதை அவரிடம் காட்டிக் கொள்ளாமல், வரவேற்று உட்கார வைத்து, கூலாக ஐஸ் வாட்டர் கொடுத்து உபசரித்தேன். ஏற்கெனவே பல பேரின் வருகையை எதிர்பார்த்து வீடு வெள்ளை அடிக்கப்பட்டு திரைச்சீலையும் பூச்சாடியுமாக பளிச்சென்று இருந்ததால் அவரது பார்வையில் நல்ல திருப்தி தெரிந்தது.

‘‘பாத்ரூமை மட்டும் பள்ளமா கட்டிட்டாங்க! நீங்களே அதைக் கொஞ்சம் உயர்த்தியிருக்கலாமே…’’ என்று குறைப் பட்டார்.

‘‘நாங்களும் நினைச்சிண்டே இருக்கோம்.. செய்ய முடியவே இல்லை. ஒண்ணு ரிப்பேர் பண்ணினா இன் னொண்ணு காத்திண்டிருக்கு.. இப்படியே செலவு நீண்டுண்டே போறது..’’

‘‘பின்னே வீடுன்னா சும்மாவா? ஆனை அசைந்து தின்னும், வீடு அசையாமல் தின்னும்!’’ என்றார் அவர்.

என்ன விசித்திர மனிதர் இவர்? வாயைத் திறந்தால் வார்த்தைகளே வரவில்லை.. பழமொழிகளாகத்தானே கொட்டுகிறது?

‘‘பக்கத்திலே எல்லாரும் ரொம்ப ரொம்ப நல்ல மனுஷாள்! எல்லாரும் வெஜிடேரியன்தான்! நமக்கு ஏதாவது ஒண்ணுனா உயிரைக் கொடுத்து ஒத்தாசை பண்ணுவா..’’ \ வீட்டு சௌகரியங்களுடன் வாய் நிறைய பொய்களையும் சேர்த்துப் போட்டு வைத்தேன்.

‘‘முக்கியமாக இதுதான் வேணும்! ‘உங்க வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரன் நல்லவனா இருந்தா, உங்க வீடு நூறு பவுன் அதிகமாகவே விலை பெறும்’ என்கிறது சீன பழமொழி!’’

‘‘அப்படியானா நீங்களே வீட்டின் விலையை கூட்டிக் கொடுத்திடுங்க!’’

சங்கடமாக ஒரு சிரிப்பு சிரித்துவிட்டுக் கிளம்பினார் அந்த மனிதர்! பேரனையும் கையில் அணைத்துக் கொண் டார். ‘‘எனக்குப் பிடிச்சிருக்கு! பிள்ளைக்குத்தான் இந்த அளவு லோன் கிடைக்குமானு தெரியலே! கடனோ, கிடனோ பட்டு வாங்கிடலாம்னு நான் சொல்லிண்டு இருக்கேன்! பையன் என்ன சொல்றானோ தெரியாது! குழந்தையின் படிப்பு இது அதுனு பட்ஜெட் போடுவான்! செலவும் சாண் ஏறினா முழம் சறுக்கறது! முடிஞ்சா நாளைக்கே பையனை அழைச்சுட்டு வரேன்!’’

‘‘சரி போயிட்டு எப்போ வேணுமானாலும் வாங்க! செலவுன்னா வந்துண்டேதான் இருக்கும்! வீட்டுக்கு வீடு வாசல்படிதான்…’’

என்னை அறியாமலேயே எனக்கும் அந்த ‘பழமொழி ஃபோபியா’ தொற்றிக்கொண்டுவிட அவரை வழி அனுப்பி வைத்தேன். பிறகு அவர் வரவே இல்லை. பத்து தடவை விளம்பரம் கொடுத்தும் யாரும் வாங்க வரவும் இல்லை. பிறகு என்ன? அதே எதிர் வீட்டு மனிதரிடம் அவர் கேட்ட குறைவான விலைக்கு கொடுத்து விட்டு, அதைப் போல நாலு மடங்கு பணம் கொட்டி, அதைவிட சின்னதாக ஒரு ஃப்ளாட்டை வாங்கி, நாங்கள் குடிவந்த வயிற்றெரிச்சலை எங்கே போய்ச் சொல்ல முடியும்? எல்லாம் ‘குதிரையையே விற்று லாடம் வாங்கின கதைதான்’ போங்க!

– ஆகஸ்ட் 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *