மரகதம் கண்ட மர்மம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: May 17, 2024
பார்வையிட்டோர்: 2,676 
 
 

இரவு எட்டு மணி இருக்கலாம், எழுத்தாளர் மற்றும் குடும்பத்தலைவி மரகதம் கொஞ்சம் பதற்றமாய் இருக்கிறாள்.

எப்பொழுதும் கணவன், குழந்தைகளின் கூச்சலால் நிறைந்திருக்கும் வீடு இப்பொழுது அமைதியாய் இருக்கிறது. குழந்தைகள் கணவர் அனைவரும் ப்க்கத்து நகருக்கு உறவினர் கல்யாணத்துக்கு சென்றிருக்கிறார்கள். நாளைதான் வருவார்கள்

மரகதமும் அந்த கல்யாணத்துக்கு போயிருக்க வேண்டியவள்தான். பெண்களுக்கே வரும் சில உடல் கோளாறுகளால், அந்த கல்யாணத்துக்கு போக முடியாமல் போய் விட்டது. அதுவும் அவளுக்கு வசதியாகவும் போய் விட்டது.

இப்பொழுது அவள் பாட்டுக்கு அக்கடாவென உட்கார்ந்து எழுத்து வேலையை பார்த்து கொண்டிருக்கிறாள்.

மரகதத்தின் பதற்றத்துக்கு காரணம் இன்னும் சொல்லவில்லை உங்களுக்கு, ஓரளவுக்கு குடும்ப கதைகள் மட்டும் எழுதி கொண்டிருந்த மரகதத்திற்கு திடீரென மர்ம கதை எழுத பத்திரிக்கை ஒன்று கேட்டு கொண்டது.. இரண்டு நாளைக்குள் அனுப்பி வைத்தால் நல்லது என்று சொல்லி விட்டார்கள். இன்று இரவுக்குள் எழுதி முடித்து அனுப்பி விடவேண்டும்.

எல்லாம் சரி மர்மக்கதையை எப்படி எழுதுவது?

இந்த கேள்வியை நாம் கேட்டால் எழுத்தாளினி மரகதத்திற்கு கோபம் வரலாம் என்று நீங்கள் நினைக்கலாம், அதுதான் இல்லை. மரகதமே இப்பொழுது மர்மக்கதை எப்படி எழுதுவது என்ற திகைப்பில்தான் உட்கார்ந்திருக்கிறாள். என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா? கதைகள் எழுதி கலக்கிக் கொண்டிருக்கிருக்கும் மரகதத்திற்கு மர்மக் கதை எழுதுவது சாதாரண விஷயம்தான்.

ஆனால் இந்த நேரத்தில் கணவனும், குழந்தைகளும் இல்லாமல் தனியாக உட்கார்ந்து மர்மக்கதை எழுதுவது என்பது அவளால் முடியாத விசயம்தான். அவளுக்குள் எப்பொழுதும் ஒரு சந்தேகம் உண்டு. தான் எழுதுவது அப்படியே நடக்குமோ? அடிக்கடி இதை உணர்ந்தும் இருக்கிறாள். அப்படி பயத்தில் இருப்பவளிடம் யாருமே இல்லாத வீட்டில் உட்கார்ந்து தனியாக மர்மக்கதை எழுதுவது என்றால்? அப்பாடி உங்களுக்கு விஷயத்தை விளக்கி விட்டேன்.

நல்ல தூக்கத்தில் இருந்த மரகதத்திற்கு தட்..தட்..தட்..சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்தாள். அதற்குள் விடிந்து விட்டதா? எழுந்தவள் பளீரென்று விளக்கு எரிவதை பார்த்து அட உட்கார்ந்த நிலையிலேயே தூங்கியிருக்கிறோம், மனதுக்குள் சிரித்துக்கொண்டு எழுந்து நின்றாள். அகஸ்மார்த்தமாய் கடிகாரத்தை பார்க்க மணி பனிரெண்டை காட்டியது. ‘அப்பா இவ்வளவு நேரமா உட்கார்ந்த நிலையிலே’ தூங்கியிருக்கிறோம். விளக்கை அணைத்து படுக்கை அறைக்கு போகலாம் என்று திரும்பினாள்.

தட்..தட்..தட்.. யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது. இந்த நேரத்தில் யார் கதவை தட்டுவது? கொஞ்சம் குழம்பினாள். இப்பொழுது கதவை தட்டும் சத்தம் கேட்கவில்லை. சரி பொறுத்திருப்போம், மனசு சமாதானமானாலும் பட படப்பு நெஞ்சுக்குள் வரத்தான் செய்தது. யார் அது இந்த நேரத்தில்? மீண்டும் இப்பொழுது கதவை தட்டும் சத்தம் தெளிவாக கேட்டது. மிக தெளிவாய் தட்..தட்..தட்..சீராக இடைவெளி விட்டு கேட்டது. மனதில் பயம் நெஞ்சை அடைத்தது.

முன் அறையினுள் ஒரு ஜன்னல் இருப்பது ஞாபகம் வந்தது. அதை மெல்ல திறந்து பார்த்தால் என்ன? வாசல் தெரியாது என்றாலும் ஹாலை ஒட்டி அந்த அறை இருப்பதால் ஜன்னல் வழியாக ஏதாவது நடமாட்டம் தெரியலாம். மனதை தைரியப்படுத்தி ஹாலை ஒட்டிய அறைக்குள் நுழைந்தவள் மின் விளக்கை போட பயந்து அப்படியே பதுங்கி பதுங்கி ஜன்னல் அருகில் வந்தாள்.

ஜன்னல் மரக் கதவால் செய்யப்பட்டதென்றாலும் திறக்கும்பொழுது சத்தம் வந்து விட்டால் வாசலில் இருந்து ஜன்னலுக்கு பாய்ந்து வர எவ்வளவு நேரம் பிடிக்கும்? மனம் திறக்காதே என்று ஒரு பக்கம் சொன்னாலும், திறந்து பார், என்று இன்னொரு பக்கம் உசுப்பேற்ற ஜன்னலை மிக மெதுவாக திறந்தாள்.

வெளியே ஒரே இருட்டாக இருந்தது. கண்ணுக்கு ஒன்றும் புலப்படவில்லை, காற்றின் வேகம் ஜன்னல் கதவில் மோதியதில் அறிய முடிந்தது. அப்படியே தன் கண்களை முடிந்தவரை முன் கதவு பக்கம் செலுத்த முற்பட்டாள். பார்வையை வாசல் படி வரைக்கும் கொண்டு போக முடியவில்லை. என்றாலும் மீண்டும் கதவை தட்டும் அந்த சீரான சத்தம் மீண்டும் கேட்டது. தட்..தட்..தட்…

திடீரென்று ஏதோ ஒன்று அவள் முகத்துக்கு நேராய் வந்து அடிக்க “ஐயோ” என்று வாய் விட்டு கூவினாள். சட்டென ஜன்னலின் கதவை சாத்தியவள் தன் நெஞ்சை தடவி விட்டு கொண்டாள். என்ன அது? நல்ல வேளை ஜன்னல் இரும்பு வலையால் மூடப்பட்டிருப்பதால் தப்பி விட்டோம். இப்பொழுது என்ன செய்வது? பக்கத்து வீட்டுக்காரர்களை கூப்பிடலாமா? அவர்கள் அடுத்த காம்பவுண்ட்டில் தான் இருப்பார்கள். அங்கிருந்து ஜன்னலை திறந்தால் நம் படுக்கை அறை ஜன்னல மூலம் பேச முடியும்.

ஆனால் இப்பொழுது படுக்கை அறைக்கு எப்படி செல்வது? இங்கிருந்து ஹாலுக்கு வந்து அங்கிருந்து உள் புறமாக இருக்கும் படுக்கை அறைக்குள் நுழைய வேண்டும். சட்டென ‘செல்போனில்’ பக்கத்து வீட்டு நம்பர் இருப்பது ஞாபகம் வர அவர்களை கூப்பிடலாம், ‘செல்போனை’ எங்கு வைத்தோம்? முன் அறை டேபிளின் மீது கணவனிடம் பேசி விட்டு வைத்தது ஞாபகம் வந்தது.

‘போச்சு’ மீண்டும் ஹாலுக்கு போயே ஆக வேண்டும், செல்போன் அங்குதான் இருக்கிறது. நிமிர்ந்து நடக்க பயந்து அப்படியே தன்னை குறுக்கி கொண்டு வெளியே எட்டி பார்த்தாள். ஹால் இருட்டாய் இருந்தாலும் எந்த அசைவுகளும் இல்லாமல் இருந்தது மனதுக்கு மேலும் அச்சத்தை கொடுத்தது.

டேபிளின் மேல் செல்போன் இருந்தது கண்ணுக்கு புலப்பட்டது. ஆனால் அதை எப்படி எடுப்பது, மனதுக்குள் பட பட வென அடிக்க அடி மேல் அடி எடுத்து டேபிளின் அருகில் சென்றாள்.

தட்..தட்..தட்..மீண்டும் கதவை தட்டும் சத்தம் கேட்க அப்படியே பயந்து மிரண்டு நின்றவள், பாய்ந்து சென்று செல்போனை எடுத்து பார்க்க அது சார்ஜை இழந்து இருட்டாய் தெரிந்தது. ‘செல்போனின்’ நிலைமையை பார்த்தவள் இதைப்போல அடுத்து நாமா?

இப்பொழுது சமையலறையில் “தொம்” என்ற சத்தம் தெளிவாக கேட்டது. யார் யார் அது? அவள் வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை என்றாலும் இருதயம் பட படவென அடிக்க இப்பொழுது பதுங்கிய நடையுடன் சமையலறையை நோக்கி நடந்தாள்.

சமையலறை வாசலில் நின்றவள் சட்டென அதன் கதவை இரு பக்கமும் இழுத்து தாளிட்டு விட்டு பெருமூச்சு விட்டாள். அந்த நிம்மதி கொஞ்ச நேர கூட இல்லை, முன் அறையில் தட தட தட சத்தம், மீண்டும் அவள் மனதை கொதி நிலைக்கு கொண்டு போக பயந்து கொண்டே முன் ஹாலுக்கு வந்தாள் அங்கு எந்த சத்தமும் இல்லை. சத்தம் கேட்டதே? இரண்டு நிமிடம் ஆடாமல் அசையாமல் நின்று யோசித்தவளுக்கு மீண்டும் தட தட சத்தம் பக்கத்து அறைக்குள் கேட்க பயத்துடன் அதில் நுழைந்தாள்.

ஜன்னல் கதவு ஆடுவது இங்கிருந்து தெரிந்தது. நன்றாகத்தானே சாத்தினோம். ஜன்னலை நெருங்கியவள் ஜன்னல் கதவை அழுத்தி சாத்தினாள். காற்றின் வேகம் அவளின் அழுத்தத்திலும் எதிர்த்து நின்றதை உணர முடிந்தது

அரை மணி நேரம் அப்படியே ஜன்னலை ஒட்டி நின்றாள். டப்..டப்..டப்..இந்த சத்தம் ஜன்னல் கதவில் மோதி செல்வது நன்றாக கேட்டது. இதற்கு மேல் அவளால் அங்கு நிற்க முடியாமல், படுக்கை அறைக்கும் போக பயந்தவள் அப்படியே நகர்ந்து நகர்ந்து முன்புறம் வந்தாள். அங்கிருந்த டேபிள் எதிரில் இருந்த நாற்காலியில் ஓசைப்படாமல் உட்கார்ந்தாள்…

ப்ர்..ப்ர்..ப்ர்..ப்ர்..சத்தம் காதை கிழிக்க சத்தம் கேட்டு தடாலென விழித்து எழுந்தவள் தடுமாறி அப்படியே சரிந்து விழுந்தாள். அவளுடன் அந்த நாற்காலியும் விழ ஒரு நிமிடம் என்ன நடந்தது என்று புரியாமல் கீழே விழுந்த அதிர்ச்சியால் அசையாமல் கிடந்தாள்.. மீண்டும்..பர்…பர்..காலிங்க் பெல் சத்தம் காதை கிழிக்க, அப்பொழுதுதான் தான் கீழே கிடப்பதை உணர்ந்தாள்.

அவள் மேல் கிடந்த அந்த நாற்காலியை மெல்ல நகர்த்தி தடுமாறி எழுந்தவள், காலில் சுளுக்கோ, அடிபட்டதோ நொண்டி நொண்டி நடந்து சென்று பர்..பர்…என பொறுமை இல்லாமல் கத்திக்கொண்டிருந்த காலிங்க் பெல் சத்தத்தின் எரிச்சலில் கதவை திறந்தாள்.

எதிரில் கணவன், குழந்தைகள்.

இவள் முகத்தை பார்த்து ஏன் இவ்வளவு நேரம் தூங்கிட்டு இருந்தியா? முகம் எல்லாம் என்னமோ மாதிரி இருக்கு? கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தவர்கள், கீழே கிடந்த நாற்காலியை பார்த்து ஒன்றும் புரியாமல் அவளை பார்க்க ?

அவள் “ஞே” என்று விழித்து தான் நாற்காலியில் இருந்து விழுந்து விட்டதை சொல்வதா? இல்லை இரவு முழுக்க தூக்கமில்லாமல் அங்கும் இங்கும் அலைந்து கிடந்ததை சொல்லவா? தடுமாறினாள்.

அவள் கணவன் டேபிளின் மேலிருந்த காகிதங்களை பார்த்தவன், கீழே கிடந்த நாற்காலியை நிமிர்த்தி வைத்து அதில் உட்கார்ந்து வாசிக்க ஆரம்பித்தான்.

“எக்ஸ்லெண்ட்! சும்மா திரில்லிங்கா எழுதியிருக்கே, ஆனால் முடிவு எழுதாம அப்படியே விட்டிருக்கே? எழுத எழுத அப்படியே டேபிள்ளயே தூங்கியிருப்பேன்னு நினைக்கிறேன், அதனாலதான் நாங்க கூப்பிட்டப்போ தடுமாறி விழுந்திருக்கணும்”. அவள் முகத்தை பார்த்து கேட்டான்.

அப்படியானால் இரவு முழுக்க நடந்தது தான் எழுதியதா? இல்லையே நடந்த மாதிரிதானே தெரிந்தது, கதவை யாரோ தட்டியது, ஜன்னலில் தன் முகத்தை யாரோ அறைந்தது, அவளுக்கு ஒன்றும் புரியாமல் திகைத்தாள். அப்படியானால் முடிவை ஏன் எழுதாமல் விட்டிருக்கிறேன்.

முடிவை அறிவதற்காக கதவை நோக்கி நடந்தவள், படியை விட்டு இறங்கி பார்த்தாள்.

கதவை ஒட்டி கட்டியிருந்த கம்பியில் மாலை குளித்து விட்டு தொங்க போட்டிருந்த துண்டு காற்றில் ஆடிக்கொண்டு கதவில் மோதி மோதி செல்வதை பார்த்தாள். ஜன்னலில் அறைந்த சத்தம் ? சற்று நகர்ந்து சென்று பார்க்க ஜன்னலை ஒட்டி காம்பவுண்ட் சுவர் அளவுக்கு வளர்ந்திருந்த வாழை இலை காற்றில் அசைந்து ஜன்னலில் மீது மோதுவதை பார்த்தாள்.

அப்படியானால்..?

உள்ளே வந்தவள் கணவன் கையில் இருந்த காகிதங்களை வாங்கி வாசித்தாள்.

கதவை தட்டியது, ஜன்னலை சாத்தியது எல்லாமே எழுதியிருந்தாள். சமையலறையில் “டொம்” என்ற சத்தம் ? எல்லாம் நடந்த மாதிரி இருந்ததே? முடிவை எழுத நினைத்தவள்…ஆவ்..கொட்டாவி வர….

அப்படியே பேப்பர்களை டேபிளின் மேல் வைத்து விட்டு படுக்கை அறைக்குள் நுழைந்து படுக்கையில் விழுந்தவள் இரண்டு நிமிடத்திற்குள் அவளிடமிருந்து கொர்..கொர்..கொர்.. சத்தம் வந்தது.

பின்னால் வந்த கணவன் அவள் நிலைமையை பார்த்து குழந்தைகளை அழைத்து கொண்டு வெளியே வந்து படுக்கை அறைக் கதவை சாத்தி விட்டான். தூங்கி எழுந்தால் சரியாகி விடுவாள். நினைத்துக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தவன் சமையலறை கதவை திறந்து பார்த்தால் பூனை வந்து சென்ற அடையாளமாய் பால் தரை முழுவதும் சிந்தியிருந்தது.

பெயர்: ஸ்ரீ.தாமோதரன் பிறந்த வருடம் 1966, தனியார் மருத்துவமனையின் துணை மருத்துவ கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். “மனித நேயம்” சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது. தினமலர் வார பத்திரிக்கையில் இரண்டு மூன்று கதைகள் வெளி வந்துள்ளன. “நிலம் விற்பனைக்கு அல்ல” சிறுகதை இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” எனது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *