(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இது ஒரு மனநோயாகத்தான் இருக்கவேண்டும்.
அல்லது. பைத்தியத்தின் ஆரம்பகட்டமாக இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு அடிக்கடி எழுகிறது.
ஆனால் ஒன்று மட்டும் நான் நிச்சயமாகச் சொல்ல முடியும். நான் ஒரு கோழை. பயந்தாங்கொள்ளி. ஆமாம். இதைப்பற்றி எனக்கு “இத்னியூண்டு சந்தேகம் கூடக் கிடையாது.
நான் சூரப்புலி மாதிரி வாயடி அடிப்பதைச் சிலர் கேட்டிருக்கக் கூடும். அது எனது மனசின் அடிமட்டத்தில் பரவியிருக்கிற பயம் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக நான் கையாள்கிற தந்திரம்தான்.
இருட்டில் வெளியே செல்வது என்றாலே என்னை வெட்டக் கொண்டு போவது போல் தோன்றும். விளக்குகள் சற்றைக்கொருதரம் ஒளிப்பூக்கள் போல் தொங்கும் வீதிகள் நிறைந்த நகரத்திலேயே எனக்கு இந்த நிலை என்றால், இருட்டின் கொலு மண்டபமாக விளங்குகிற பட்டிக் காடுகளில் தங்கியிருக்கிறபோது நான் என்ன பாடுபடுவேன் என்பதை நீங்களே கற்பனை செய்துகொள்ளலாம்.
கற்பனை –
அதுதான் எனது கோளாறுக்கு மூலவித்து என்று எனக்கு இப்பொழுது தெரிகிறது. தெரிந்து என்ன செய்ய? அழிக்க முடியாத நச்சுமரமாக அது வளர்ந்து என் உள்ளத்திலே மண்டி உணர்வுகளை ஆட்டி வைக்கிறதே!
எனக்கு எப்போதுமே பூத, பிரேத, பிசாசு, பயங்கரக் கதைகள் மீது விசேஷமான மோகம். நானே அத்தகைய கதைகள் அநேகம் எழுதியிருக்கிறேன்.
அவற்றிலே ஒரு கதையை, இரவு நேரத்தில் படுக்கை அறையில் கணவன் பக்கத்தில் இருந்து வாசித்த ஒரு பெண்மணி அன்று இரவு பூராவும் தூங்க முடியாமல், விளக்கையும் அணைக்காமல் வைத்துக்கொண்டு, ஒவ்வொரு மூலையிலும் எதெதையோ கண்டும், ஒவ்வொரு ஓசையிலும் என்னென்னத்தையோ கற்பனை செய்துகொண்டும் அவதிப்பட்டாளாம். இந்தச் செய்தியை அறிய நேர்ந்ததும் நான் ரசித்துச் சிரித்தேன். அவளைக் கோழை என்றும் பயந்தாங்கொள்ளி என்றும் கூறி நகையாடினேன்.
அவ்விதமான பயங்கரக் கதைகளை எழுதும் நான் பெரிய துணிச்சல்காரன் என்றுதான் அந்தச் சகோதரியும் அவள் கணவனும் எண்ணினார்கள். இன்னும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மற்றவர்கள் உள்ளத்தில் பயம் எனும் உணர்வைத் தூண்ட வேண்டும் என்ற ஆசையோடு கதை எழுத உட்காருகிற நானே பாதியில் பயந்து நடுங்கிவிடுவேன். அதாவது, கதவைத் தாளிட்டுக் கொண்டு எழுத உட்காராதிருந்தால் ! கதவைத் திறந்து போட்டிருந்தால் எனது கதாபாத்திரத்தின் தாயாதிகள் புகுந்துவிடும் என்ற பயம் எனக்கு.
ஒருசமயம் அப்படித்தான். ரொம்ப ஜோரான பிசாசுக் கதையை மிகுந்த ஈடுபாட்டோடு எழுதிக் கொண்டிருந்தேன். பகல் நேரம்தான். இரவு வேளைகளில் நான் கதை எழுதுவது கிடையாது என்பதுதான் உமக்குத் தெரியுமே! வெகு கர்ம சிரத்தையோடு என் எழுத்தில் நான் ஆழ்ந்திருந்தபோது,
கிலுக் – கிலுக்… இரும்பை இரும்போடு உராய்ந்து எழுப்பிய சிற்றொலி. சர்ரட்-சரட்- காலடி ஓசை போன்ற சத்தம். ‘உகுங்’ – தானே ரசித்து மகிழும் கிளுகிளுப்பு.
என் உடம்பு புல்லரித்தது. அது என்ன? என் மனம் ரைஸ்மில்லாகித் தடதடத்தது. நான் கதவைத் தாளிடவில்லையே. அது, கடவுளே!… உச்சிப் பகல் நேரம். என்னை பயம் கவ்வ, எனக்கு வேர்த்துக் கொட்டியது. எந்தப் பிசாசு வந்து என்னைப் பலி கொள்ளப்போகிறதோ என்ற திகிலுடன் உட்கார்ந்திருந்தேன். ஆனால், நடந்தது என்ன? எனது நண்பன் நடராஜன் பல்லைக் காட்டிக்கொண்டு, தலையை நீட்டுகிறான். ”வே, பயந்துட்டீரா? இUU!” என்றான். எனக்கு வந்த கோபத்துக்கு அளவே கிடையாது. நான் ஒரு கோழை என்பதை அவன் கண்டு கொண்டானே! அந்த ஆத்திரம் வேறு. “நேரே வாறதுக்கு என்ன கொள்ளை? நாதாங்கியை ஏன் குலுக்கினாய்?” என்று கத்தினேன்.
“டிராகுலா” என்ற புத்தகத்தைப் படித்த இரவில் -ஆ. அதல்லவா பிசாசுக் கதை! நானும் எழுதுகிறேன் கதை என்று இப்போது அநேகர் பயங்கரக் கதை எழுத முன்வந்துவிடுகிறார்களே… ஹூம்!
“டிராகுலா” வை நீர் படித்திருக்கிறீரா? ப்ராம் ஸ்டோக்கர் எழுதியது. கேள்விப்பட்டது கூட இல்லை? அடாடா. அவசியம் படிக்க வேண்டிய புத்தகமய்யா அது. ஆனால், பிரதர், நான் இப்பவே சொல்லிவிடுகிறேன். அதைப் பகல் நேரத்தில் படிப்பது நல்லது. அப்புறம் உம் இஷ்டம்.
நானும் துணிந்த கட்டை மாதிரி அதை ஒரு நாள் ராத்திரியிலே படிக்க உட்கார்ந்தேன். அப்போது நான் ஒரு கிராமத்தில் ரூம் எடுத்திருந்தேன். தனி வீடு. வீட்டைச் சுற்றிலும் புளியமரங்களும் நாலைந்து மாமரங்களும் நின்ற தோப்பு. வீட்டு முன்னாலே மணல் படிந்த பாதை. எதிரே ஆள் உயரத்துக்குத் திருகு கள்ளி. கைகளை உயர்த்திக்கொண்டு நிற்பது போலிருக்குமே, அது தான். எலெக்ட்ரிக் லைட் இல்லாத பிரதேசம். என்னிடம் பாட்டரி லைட்டும் கிடையாது. அரிக்கன் லாந்தர் தான். அதுக்குச் சிலசமயம் “காக்கா வலிப்பு” வந்துவிடும். குதிச்சுக் குதிச்சு , “டபுக் கென்று அணைந்து போகும். அந்த விளக்கு வெளிச்சத்தில் டிராகுலா கதையைப் படிக்கலானேன். ஏண்டா படிச்சோம் என்று ஒரு வாரகாலம் வேதனைப்பட்டேன்.
பாதி படித்துக் கொண்டிருக்கும் பொழுது என் தேகம் சிலிர்த்தது. ஜன்னலுக்கு வெளியே சிவ்வென்று ஓசை கேட்டது. பழந்தின்னி வெளவால் தனது பெரிய இறக்கையை படபடக்க வைத்துக் கொண்டு… அதோ மினுமினுப்பது அதனுடைய ஆழ்ந்த குழிகளில் அடங்கிய மைத்துளிக் கண்கள் தான்… பழந்தின்னி வௌவால் வடிவத்தில் தானே ரத்தக் காட்டேறி வரும்? அது தான் பிரும்மராக்ஷஸ். டிராகுலா கதை கூட அதைப் பற்றியதே…
அந்தச் சமயம் பார்த்து விளக்குக்கு வலிப்பு கண்டது. “டபக், டபக்….. குளோஸ். அறையில் இருட்டு கவிந்தது. ஆண்டவனே, அல்லாவே, ஏசு கிறிஸ்துவே, “அர்ஜூனன் பேர் பத்து” – இடி இடித்தால் தான் இதைச் சொல்லவேண்டும் என்ற நினைப்பு கூட இல்லை. எல்லாப் பேர்களையும் உச்சரித்தால், ஏதாவது ஒரு பெயருக்கு எபெக்ட் இருக்கலாமல்லவா? அப்படியும் என் பயம் அடங்குவதாயில்லை. முகத்தைத் தலையணையில் புதைத்துக் கொண்டேன் இருந்தாலும், சவப்பெட்டியிலிருந்து எழுந்து நடமாடும் பிரேதமும், அது மனிதரை வேட்டையாடுவதும், அதை ஒருவன் துரத்துவதும்.. அது அடைக்கலம் தேடி என் ரூமுக்குள் வரத்துடிப்பது போலவும்….கனவா, நனவா, கற்பனையா? நான் தூங்கினேனா; விழித்திருந்தேனா? எனக்கு ஒரே பதைபதைப்பு தான்.
ஒரு வார காலம், இரவில் வெளியே தலைகாட்டவே அஞ்சினேன். கள்ளிச் செடி உயர்ந்த எலும்பு மனிதனாகப் பயமுறுத்தும். புளியங்கொம்புகளிடையே வெளவால்கள் பல்லிளிக்கும். சே, என்ன பயங்கர அனுபவமடா அப்பனே!
இந்த விதமான பயம் நான் பிசாசுக்கதைகளை அதிகமாகப் படித்ததனாலும், பயங்கரக் கதைகளை எழுதக் கற்பனை செய்து கொண்டு திரிந்ததாலும் வந்த வினைதான் என்று நீர் நினைக்கலாம். அது சரியல்ல. என் பிள்ளைப் பிராயத்திலிருந்தே முறைத்தெழுந்த கோளாறு இது என்று நான் நிச்சயம் செய்து விட்டேன்.
நான் சின்னப்பயலாக இருந்த போது, பெரியவர்கள் மனமிரங்கி என்னையும் நாடகம் பார்க்க அழைத்துப் போவது உண்டு. ஆனால் நான் நாடகத்தை எங்கே பார்த்தேன்! மற்றவர்களையாவது பார்க்க விட்டேனா? மேடையில் கோரமான உருவங்கள் வந்துவிட்டால் போதும்; அல்லது, அடிக்கிற -உதைக்கிற காட்சி வந்தாலும் சரி. என்னையும் அடிக்கப் போவது போல் – பூதம் என்னைப் பிடித்து விழுங்க வருவதாக எண்ணிக்கொண்டு நான் “ஓ” என்று ஊளையிட்டு அழுவேன். என்னை வெளியே இழுத்துக் கொண்டு வருவார்கள். சிலர் எரிச்சலோடு ஏசுவார்கள். எனினும் என் பயம் தீராது.
எவ்வளவோ பயங்கரக் கனவுகள்! எத்தனையோ பயங்கர நினைவுகள்! சொல்லிமாளாது. நண்பரே, சொல்லி மாளாது! அவற்றை உரமாக்கி, பயம் எனும் உணர்வு விசித்திர உருவமேற்று வளர்ந்து வந்திருக்கிறது. எனக்குத் தெரியாமலே, பச்சை மரத்தில் வேர்க் கறையான் புகுந்தது போல, அது வேலை செய்திருக்கிறது.
நான் இருள் நோக்குவாதி (பெஸிமிஸ்ட்) ஆக இருந்ததும் இதற்குத் துணைபுரிந்துள்ளது என்று யாராவது சொன்னால் மறுப்பதற்கில்லை . என் மனம் “நல்லது நிகழும்” என்று எண்ணுவதே கிடையாது. மோசமான கற்பனைகளைத் தத்ரூபமாகப் படம் பிடித்துக் காட்டும்.
அவ்வப்போது எங்கள் வட்டாரத்தில் வீடுகள் தீப்பற்றி எரியும். இது சகஜ நிகழ்ச்சி. தூரத்தில் நிற்பவர்களின் பார்வைப் புலன்களைத் தாக்கும் விதத்திலே தீ திமுதிமுவெனப் பொங்கிப் படர்ந்து, வான வளையத்துக்குச் செம்மை தடவும். அந்நேரங்களில் எங்காவது அலைகிற என் கண்களும் அதைக் காண நேரிடும். மனம் சித்திரிக்கும். நூற்றுக்கணக்கான வீடுகள் மீது நெருப்பு ஒளிநாட்டியம் பயில்கிறது. எனது வீடும் தீயின் கூத்துக்கு இரையாகியது. நான் ஆசையோடு வாங்கி அடுக்கியுள்ள விலை உயர்ந்த நூல்கள் எல்லாம் தீயில் எரிந்து, சாம்பலாகின்றன. அவற்றிலிருந்து பறந்தெழும் கரித்துணுக்குகள் ஆயிரமாயிரம் பூச்சிகள் போல ஆகாச வீதியிலே மிதக்கின்றன!- இப்படிப் பட்ட காட்சியைக் கண்டு களிக்க நான் வேகமாக வருகிறேன். வீடு முழு உருவத்தோடு நின்று எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது…..
நான் ரயிலில் பிரயாணம் செய்கிறேன. இரவு பயங்கரமாகக் கவிழ்ந்து கிடக்கிறது. ரயில் வண்டி தடதடவென்று பேரோசை செய்கிறது. ஆச்சு! விழுந்தாச்சு! காட்டாற்றுப் பாலத்திலே தடம் புரண்டு வண்டித் தொடர் விழுகிறது, விழுகிறது…. என் மனம் செய்கிற சித்து வேலை தான். வேறு விபத்து எதுவுமில்லை என்று உணர்கிற போது எனக்கு வருத்தம் ஏற்படுகிறது….
இப்படித் தான் ஒரு சமயம், ரயில் ஆர்யங்காவுக்குப் பக்கத்திலே ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த பிராந்தியத்தைப் பற்றி உமக்குத் தெரிந்திருக்கலாம். மலைப்பிரதேசம், காட்டு வழி. எங்கு பார்த்தாலும் ஒரே பச்சை மயம் – விதவிதமான மரங்களின் தலைகள். திடுமென்று இருட்டு வண்டியை விழுங்குவது போலிருக்கும். மலையைக் குடைந்து பாதை போட்டிருக்கிறானைய்யா மனுஷன்! “டன்னல்’ வழியே வண்டி போகிற போது எனக்கு பயம் தான். பாறைகளில் நீர் ஒடுகிறது என்கிறான் ஒருவன். “ஏய் பாம்புடா! பெரிய பாம்பு” என்று கத்துகிறான் ஒருத்தன். எல்லா ஜன்னல் கதவுகளும் டப் டப் என்று விழுந்து அடைத்தன. நான் பத்திரமாக ஊர் போய்ச் சேருவேன் என்ற நம்பிக்கை எனக்கு இல்லவே இல்லை.
ஆனால் நான் சொல்ல வந்தது இதையல்ல. அதுவேறு. எனக்கு எதிர் பெஞ்சியில் ஒருவன் இருந்தான். அவன் முகத்தில் மீசை தான் முக்கியமாய், பெரிசாக, மதுரைவீரன் மீசை மாதிரி விளங்கியது. மூக்கும் எடுப்பாக நின்றது. கண்கள் – அவை பார்த்த பார்வை! அந்தி மயங்கும் நேரம். அச்சம் தரும் சூழ்நிலை. எதிரே ஒரு முரடன் என்னையே வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டிருக்கிறான் என்றால்… என் மனம் பலப்பல எண்ணித் தவிக்கிறது. என் பார்வை எங்கெங்கு புரண்டாலும் மீண்டும், மீண்டும் ஏதோ வசிய சக்தியால் கவரப்படுவதுபோல், அந்த ஆளின் முகத்திலேயே மோதத்திரும்புகிறது.
இவன் திருடனாக இருப்பான்! கொலைகாரனாக இருக்கலாம். இவன் ஏன் என்னை இப்படி முழிச்சுப் பார்க்கவேண்டும்?- எனக்கு எதுவுமே புரியவில்லை . திடீரென்று அவன் பேச்செடுத்தான்:
“ஐயா, நீங்க விவசாய ஆபீசிலே குமாஸ்தாவாக இருந்தீங்க இல்லே ?”
ஆமாம் என்பதற்கு அடையாளமாக நான் தலையாட்டி வைத்தேன்.
“அதானே கேட்டேன்! நானும் அப்பவே புடிச்சி யோசிக்கிறேன், யோசிக்கிறேன்… எங்கேயோ – பார்த்த முகமா இருக்குதேன்னு தோணிச்சு. ஆனால் பிடிபடலே…. நிங்க ஸ்ரீவைகுண்டம் ஆபீஸ்லே இருந்தீக இல்லே?”
நான் அழகப்பன் காளைமாதிரித் தலையசைத்தேன், மறுபடியும்.
“அதானே பார்த்தேன்! அப்போ பூச்சி இன்ஸ்பெக்டர் சுப்பய்யர்கூட நானும் வந்தேன். பச்சை முந்திரிக் கொடிகளுக்கு பூச்சிமருந்து தெளிக்க. நான் மேஸ்திரியாக வந்தேனே, உங்களுக்கு ஞாபகமில்லே ?
என் ஞாபகத்திலே இடிவிழ! என் மறதி நாசமாய்ப் போக! இவையெல்லாம் ஒழுங்காக இருந்தால், நான் அனுபவித்த வேதனை எனக்கு ஏற்பட இடமிருந்திருக்குமா?
எஞ் சிவனே, என் மனப்பேய் இவ்விதம் என்னென்ன சித்து விளையாடல்கள் புரிந்து வந்திருக்கிறது என்பது உமக்கு எப்படித் தெரியும்?
சாயங்கால நேரம்தான். வாழ்ந்து அலுத்துப்போன பகல் பொழுது, நோய் முற்றி ரத்தம் கக்கிக்கொண்டு படுக்கையில் ஓய்ந்து கிடக்கிற காச நோய்க்காரன் போல், மேல்திசைச் செக்கர் வானத்தில் தொங்கிக் கிடக்கிறது. அப்பொழுதும் நான் ரயிலில் தான் போய்க் கொண்டிருக்கிறேன். ஆனால் இது வேறு திசையில். இது வேறு பிரயாணம்.
சூழ்நிலையும் வேறுதான். ஆனாலும் இங்கும் மலைகளும் மரங்களும் உண்டு. சுற்றிவர மலை. மரங்கள், காடுமாதிரி. ஆனால் நிஜமான காடு இல்லை. அவற்றிடையே ஒரு ஸ்டேஷன். ரயில் நின்று புறப்பட்டது. மலையிைன் உச்சியில் சூரிய ஒளி பூசியிருந்த விந்தைக் கோலத்தை வியந்து கொண்டிருந்த என் கண்கள் வண்டிக்குள் திரும்பின. அங்கே கதவோரத்தில் ஒரு இளம்பெண் என்னையே பார்த்தபடி நின்றாள். என் உடல் சிலிர்த்தது.
என்ன உருவம் ! நன்கு விளைந்த முள்ளங்கிக் கிழங்குமாதிரி. மேனி முழுவதும் ஒரு மினுமினுப்பு. நாட்டுப்புறம். அதனால் உடல் வளத்தைப் பகட்டுத் துணிகளுக்குள் மூடிவைத்திருக்கவில்லை. சாதாரணமான ஒரு சீலைதான். முகம் ! அந்த விழிகள். மதமதர்த்த கண்களில் தேங்கி நின்ற பார்வை! வெற்றிலைச் சிவப்போடு வெடித்து நின்ற உதடுகளின் கோணத்திலே சிறு சிரிப்பு தங்கி நிற்கிறதா என்ன?
என் மனம் நடுங்கியது. சந்தேகமேயில்லை. மோகினிப் பிசாசுதான்…. மோகினி வேலைக்காரப் பெண்மாதிரியும், பிச்சைக்காரி போலவும் வந்து, அனுதாபத்தைப் பெற்று, கூடவே வந்து வீட்டில் தங்கியிருந்து, தருணம் பார்த்து ஆளையே அடித்து ரத்தத்தைக் குடித்துவிட்டு மறைந்து போவது பற்றி கிராமங்களில் பலரும் சொல்லி யிருக்கிறார்களே. நான் கூட அப்படிச் சில கதைகள் எழுதியிருக்கிறேனே!
அந்தப் பெட்டியில் அதிகமாக ஆட்கள் இல்லை. நாலைந்து பேர்தான் இருந்தோம். மற்றவர்கள் பார்வையில் படாத ஒரு இடத்தில் – கதவருகில், நின்று அவள் என்னையே முழித்துக் கொண்டிருந்தாள்.எனக்குச் சந்தேகமேயில்லை. அவள் மோகினிதான்!
இரவு மூன்றேகால் மணிக்கு நான் இறங்க வேண்டிய ஸ்டேஷனில் போய் வண்டி நிற்கும். மீதிப் பொழுதை ஸ்டேஷனிலேயே கழித்துவிட்டு, அஞ்சு மணிக்குக் கிளம்புகிற பஸ்ஸில் இடம் பிடிக்கவேண்டும் என்று எண்ணியிருந்தேன். மோகினி என் பின்னாலேயே இறங்குகிறது. காத்திருக்கிறது. ஸ்டேஷனிலிருந்து பஸ் ஸ்டாண்டுக்கு ஒரு மைல் தூரம் நடந்து போக வேண்டும். தனி வழி. இருள் நிறைந்த பாதை. அந்த இடத்தில் மோகினி என்னை அடித்துவிடும் என்று நிச்சயமாக எனக்குப்பட்டது. என் செய்வது? நான் என்ன செய்யமுடியும்? என் தேகம் நடுங்கியது. இருள் கவிந்து வந்தது. ரயில் வண்டியின் அழுது வழியும் விளக்கு இருட்டைப் போக்கிவிடவில்லை. நான் ரத்தம் கக்கிக்கொண்டு நடுரோட்டில் விழுந்து கிடக்கிற காட்சியை என்மனம் அற்புதத் திறமையோடு படம் பிடித்துக் காட்டுகிறது. வண்டிக்கு வெளியே பார்வையை நிறுத்தவும் முடியாமல், கட்டுடல் பெற்ற, முற்றிய முள்ளங்கிக் கிழங்கு மாதிரி புஷ்டியாக இருந்த, மஞ்சள் மினுக்கும் வெற்றிலைச் சிவப்பும் கண் கறுப்பும் நிறைந்த முகத்தை உடைய பெண்ணையே பார்த்துக் கொண்டிருக்கவும் முடியாமல் நான் வேதனைப் பட்டேன். அவள் மோகினியேதான் என்ற எண்ணம் என்னைப் படாதபாடு படுத்தியது.
நல்லவேளை! அவள் ஏதோ ஒரு ஸ்டேஷனில் இறங்கி இருட்டோடு இருட்டாகிப் போன பிறகுதான் எனக்கு உயிர் வந்தது.
நான்தான் சொல்கிறேனே, உண்மையில் நான் ஒரு கோழை. பந்த சுபாவம் உடையவன்.
இந்த மனநிலை வாழ்வின் அமைதியையும் ஆனந்தத்தையும் கெடுத்துவிடும் என்றுதானே சொல்ல விரும்புகிறீர்? அது எனக்கும் நன்றாகத் தெரிகிறது.
ரோட்டில் நடக்கவே பயம் எனக்கு. நடு ரோட்டில் நடக்கிறேன். திடீரென்று ஒரு கார் வந்து மோதி என்னைக் கீழே தள்ளி… பெரும் கூட்டம் கூடுகிறது. ஆஸ்பத்திரி…. போலீஸ் எல்லாம் பிரமை! மனசின் கூத்து… நான் குதித்து ஓடி ரஸ்தாவின் ஓரத்துக்குப் போகிறேன். ஒழுங்காக நடந்து வந்த நான் இப்படித் திடுமெனக் குரங்குத்தனம் பண்ணுவதைக் காண்கிற மற்றவர்கள் “பைத்தியம் போலும்” என்று எண்ணுகிறார்கள், முழிக்கிறார்கள்.
வீடு இடிந்து என்மேல் விழுகிறது-பிரமை. வானம் கறுத்து. ஆகாச வெளியிலே நெளியும் ஒளிப் பாம்புகளென மின்னல் கிறுக்கிச் சிரிக்கையில், இடி இடிக்கிறபோது என் தேகம் நடுங்குகிறது. மின்னொளியால் என் கண் பார்வை போய்விடுகிறது; நான் என்ன செய்வேன் என்று உள்ளம் பதைக்கும். சட்டுச்சட சடக்கும் இடி என்மேலே விழுகிறது…. வீதியில் எனக்கு விபத்து. ஒரு கை போய்விட்டது… இன்னொரு சமயம் கால் போய்விடுகிறது. அட கடவுளே, உயிர் வாழ்வதில் இன்பமே இல்லை. இல்லவே இல்லை!
நான்தான் சொன்னேனே – இது ஒரு நோய்தான். அல்லது பைத்தியத்தின் விளிம்பிலே என் சித்தம் தத்தளித்துத் தடுமாறிக் கெண்டிருக்கிறதோ என்னவோ!
நான் பெரிய வீதிகளின் ஒரு ஓரத்தில், வீதியைத் தாண்டாமலும் ஓரமாக நடந்தே போகாமலும், மணிக்கணக்கில் நின்று கொண்டிருப்பதைப் பார்க்கிறவர்கள் “வேலையற்ற வீணன்” என்றுதான் எண்ணிச் செல்வர். என் மன அரங்கிலே எவ்வளவு குழப்பம் உருவாகி உருவாகி அழிகிறது என்பதை அவர்கள் எப்படி அறிய
முடியும்?
இப்பொழுதுகூட, விசாலமான தெற்குக் கடற்கரை ரஸ்தாவின் வலது பக்கத்திலே அரைமணி நேரமாக நான் ஏன் நின்றுகொண்டிருக்கிறேன் என்று விசாரிப்பதற்காகத் தானே நீர் என் அருகில் வந்தீர்? நல்லது நண்பரே. உம்மிடம் உண்மையைச் சொல்லி விடுகிறேனே.
பெரிய ரஸ்தாக்களைக் கடந்து போவதற்குள், எனக்கு உயிர் போய் உயிர் வந்துவிடுகிறது. ஆமாம். அப்படித்தான் சொல்ல வேண்டும். ரஸ்தாவைத் தாண்டுவதற்கு முந்தியே என் மனம் சஞ்சலப்படுகிறது. பெண்டாட்டி வீட்டில் நெருப்புப் பற்றிக்கொண்டது போலவும் அதை அணைக்க வாயு வேகம் மனோவேகமாக ஓடுவது போலவும் மோட்டார் பைக்கில் விரைகிறார்களே பலர், நீர் கவனித்த தில்லையா? நான் ரஸ்தாவைக் கடக்கிற சமயத்தில், அப்படி ஒரு மோட்டார் பைக் அல்லது ஸ்கூட்டர் வந்து என்னைத் தாக்கி விடுகிறது. அல்லது கார், பஸ், லாரி – எவ்வளவோ இல்லையா? இவற்றை எல்லாம் தப்பி நான் ஒழுங்காக மறுபுறம் போய்ச் சேர முடியுமா, சேருவேனா என்ற பயமும் சந்தேகமும் அலைக்கழிக்க நான் ஒரே இடத்தில் நின்றுவிடுகிறேன். காலம் ஓடுகிறது. என் கால்கள் நிற்கின்றன. இப்பவும் அப்படித்தான்.
இதோ பிசாசுப்பயல் மகன் ஒருத்தன் என்ன போக்குப் போறான் பாரும்! எதுக்கய்யா இத்தனை வேகம்? என்ன குடி முழுகிப் போகிற காரியம் கெட்டுவிட்டதாம்? நான் ரோட்டில் குறுக்கே போகிறேன்னு வையும். இது என்மேலே ஏறியிருக்குமா இராதா? நீரே சொல்லுமய்யா.
அதோ அந்தா வாறானே அவங்கப்பன் மகன்! சொந்தக் கார் இருந்தால்தான் என்ன? இவ்வளவு ஸ்பீடாகப் போனால்தான் காரிலே போனது போல இருக்குமோ? இல்லே, நான் கேட்கிறேன். நான் நடந்து போயிருந்தால் என் கதி என்ன ஆகியிருக்கும்,
இரும்பு நாகரிகம், இயந்திர நாகரிகம், பெட்ரோல் நாகரிகம் எல்லாம் கூடிக்கொண்டு அடிக்கிற கூத்திலே சாதாரண மனிதனுடைய அன்றாட வாழ்க்கையின் அழகும் அமைதியும் ஆனந்தமும் சிதையுண்டு சின்னா பின்னாப்பட்டுப் போச்சு. நான் இவ்வாறுதான் எண்ணுகிறேன்.
சரி. துணிந்தாச்சு. ரோடும் கிளீயர்னு தோணுது. நான் கடக்கப் போகிறேன்…. கடந்துவிடுவேன் நண்பரே.
என்னது? காரா?… எங்கே ?
ஸ்கூட்டர்? மோட்டார் பைக்?
தாறுமாறாக மோதும் ஒலிக்கடலின் தறிகெட்ட ஓசை அலைகளில் நான் சிக்கிவிட்டது போல் தோன்றுகிறதே! எங்கே இருக்கிறேன்? ஐ…ய்…யோ! கட…
க்றீச்!…கிர்ர்ரீச்
– வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2002, பாவை பப்ளிகேஷன்ஸ் வெளியீடு, சென்னை.