(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
கோடி வீட்டு மாணவன் குமாரகிருஷ்ணன் இறந்துபோன விதம் பெரிய புதிராக இருந்தது. இரவு படுக்கையில் படுத்தவன் காலை வெகு நேரமாகியும் மாடியிலிருந்து இறங்கிக் கீழே வரவில்லை. தாயார் மாடி அறைக் குப் போய்ப் பார்த்தாள். கதவு சாத்தியபடியே இருந்தது. லொட்லொட்டென்று இரண்டு மூன்று தடவை தட்டினாள். பதில் இல்லை. பெயர் சொல்லி இரண்டு மூன்று முறை கூப்பிட்டாள். அப்போதும் பதில் இல்லை. தாயாருக்குப் பயம் வந்துவிட்டது. கீழே போய்க் கணவரை அழைத்து வந்தாள். அவர் ஆண்பிள்ளை அல்லவா?
“சினிமாவுக்குப் போகாதே என்றால் போகிறது. பிறகு வந்து மூதேவி மாதிரி தூங்குகிறது” என்று இரைந்து கொண்டே கதவை ஓங்கிக் குத்தினார் அவர்.ஊஹூம்! அப் போதும் பதில் இல்லை.தகப்பனாருடைய அதிகார தோரணை இருந்த இடம் தெரியவில்லை. கால் கையெல்லாம் நடுக்கம் எடுத்தது.மெதுவாகக் கீழே போய்க் கடப்பாரை ஒன்றைக் கொணர்ந்து கதவை நெம்பி எடுத்தார்.
குமாரகிருஷ்ணன் குப்புற மெத்தையில் படுத்திருந்தான்! குனிந்து பார்த்தார். மூக்கில் ரத்தம்! தொட்டுப் பார்த்தார். வாழைத் தண்டுபோல் உடம்பு ஜில்லிட்டிருந்தது. வாய் பேசாது மனைவியின் முகத்தைப் பார்த்தார். தாயார் விஷயத்தை உணர்ந்துவிட்டாள்! கண்ணிலிருந்து நீரை ஆறாகப் பெருக்கினாள். அலற ஆரம்பித்தாள். தகப்பனாருக்கு இப்போது வேறுவிதமான திகில் பிறந்தது.
உரக்க அலறிவிட்டால் தெருவாசிகள் வந்து கூடி விடப் போகிறார்களே! துர்மரணம் – அது, இது – என்று பரதேசித் தபால் கிளம்பி, போலீஸ், கீலீஸ் வந்துவிடப் போகிறதே. மானம் போய்விடுமே என்ற நடுக்கம். கத்தாதே என்று மனைவிக்கு எச்சரிக்கை செய்தார். தாயார் முன்றானையால் வாயை மூடிக்கொண்டு மழைக் காலத்து மேகம்போல் முகம் கனத்துக் கண்ணீர் பொழிந்தாள்.
அதற்குப் பிறகு வெகு சொற்ப நேரத்துக்குள் சவத்தைச் சாதாரணமான சடங்குகளோடு அப்புறப் படுத்திவிட்டனர்…
இது நடந்து கொஞ்ச நாட்கள் ஆன போதிலும் தெருவில் உள்ளவர்களும் ஊரில் உள்ளவர்களும் இதையே பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
“அந்தப் பையனுக்குப் போன வருஷமே பிடிச்சு மாரடைப்பு வியாதி என்று கேள்வி. அதுதான் திடீரென்று அடிச்சூட்டுது” என்றார் ஒருவர்.
“அதெல்லாம் இல்லை. இவனுக்கும் இவன் தகப்பனா ருக்கும் பிடிக்காது. அவன் சின்னப் பையனாக இருக்கிற காலத்திலேயே அவனைப் படாத பாடு படுத்துவார். தகப் பனார் வெறும் பாஷண்டி. பையன் விபூதி, அது இது பூசிக்கொண்டு கர்நாடகமாக இருப்பான். தினம் நூறு ஸ்ரீராம ஜபமாவது எழுதாமல் இருக்க மாட்டான் என்றால் பார்த்துக் கொள்ளேன். என்ன மனஸ்தாபமோ என்னவோ? பையன் பாஷாணத்தைத் தின்றுதான் ‘சவாரி’யாகி விட்டான்! இல்லாவிட்டால் பிணத்தை இவர்கள் அவ்வளவு அவசர அவசரமாகக் கொண்டுபோக ஏற்பாடு செய்திருக்க வேண்டிய அவசியமே இல்லையே” என்று மறுத்துப் பேசினார் மற்றொருவர்.
அவனுடைய நண்பன் என்ற ஹோதாவில் சில விஷயங்கள் எனக்கு நேரில் தெரியும். அதை வேறு யாருக்கும் இதுவரைக்கும் நான் சொன்னதில்லை.
எத்தனை நாள் தெருவிலே ஜால வித்தைகளைப் பார்த்துக்கொண்டே அவன் காலேஜுக்கு நேரம் கழித்துச் சென்றிருக்கிறான் தெரியுமா? எத்தனை நாள் என்னையும் போகவொட்டாமல் தடுத்திருக்கிறான் தெரியுமா?
“கால் மந்திரம், அரை மந்திரம், முக்கால் மந்திரம், முழு மந்திரம் தெரிஞ்சா உடாதிங்கோ. வித்தை பலிக் காது. வவுத்திலே மண் விழுந்து போகும்…அடி ஜக்கம்மா, பொம்மக்கா, மலையாள பகவதி…வாடீ அரசமரத்து நுனிக் கிளை வழியா” என்று செப்பிடு வித்தைக்காரன் சொல்லிச் சிறிய டப்பாவிலிருந்து மையெடுத்துக் கண்ணுக்கு இட்டுக்கொள்ளும்போதெல்லாம் குமாரகிருஷ்ணனுக்கு மையைப் பெறும் தந்திரத்தை அறியவேண்டுமென்ற ஆசை எழும்.
சில மாதங்களுக்கு முந்தி ஒரு மாறுதல் அவனிடம் ஏற்பட்டது. தெருவில் நடப்பது எதைக் கண்டாலும் நின்று பாராமல் தன் வழியே போக ஆரம்பித்தான். எனக்கு இது பெரும் வியப்பாக இருந்தது. அவனை நெருக்கிக் கேட்டதும் விஷயம் விளங்கிற்று. ஒரு ஜால வித்தைக்காரனுக்கு நிறைய ரூபாய் கொடுத்து இந்த மை சம்பாதிக்கும் தந்திரத்தை அறிந்துகொண்டு விட்டானாம். அந்த முறையை என்னிடம் காதோடு காதாக அவன் சொன்னதும் நான் சிரித்தேன்.
“இதெல்லாம் பொய்போலத்தான் இப்போது தோணும்.மாட்டுப் பொங்கலுக்கு அடுத்த நாள் காலை ஏழு மணிக்கு உண்மை தெரியும்” என்று உண்மையை அறிந்தவன் போல வெகு அடக்கத்தோடு எனக்குப் பதிலுரைத்தான்.
மாட்டுப் பொங்கலன்று அந்திப் பொழுது. தெரு வெங்கும் கூட்டம். மூலைக்கு மூலை சாமந்திப் பூவை விற்றுக்கொண்டு சிறு குட்டிகள் நின்றுகொண் டிருந்தனர். பக்கத்தில் நெட்டி மாலைகளைச் சிறுவர்கள் விற்றுக்கொண்டிருந்தனர். தெருவெங்கும் மஞ்சள் இலையும் இஞ்சி இலையும் கருப்பங் கொழுத்தாடையும் இறைந்து கிடந்தன.
அன்று குமாரகிருஷ்ணன் ஆற்றங்கரைக்கு வெளியே உள்ள அரசமரத்து மேடையில் உட்கார்ந்திருந்தான். எனக்கு இந்த மாட்டுப்பொங்கல் ஞாபகமே இல்லை. ஆனால் இவனை அரசமரத்து மேடையில் கண்டவுடன் முன்னால் சொன்ன விஷயம் ஞாபகம் வந்தது.
“இதெல்லாம் பைத்தியக்காரத்தனம்டா. நீ போக வேண்டாம்” என்றேன்.
அவன் கேட்டால்தானே! சரி, என்னதான் ஆகிறது பார்க்கலாம் என்று நானும் உட்கார்ந்துவிட்டேன்.
“மாட்டுப்பொங்கலுக்கு ஆற்றுக்கு மாடுகள் வர இன்னும் நேரம் ஆகவில்லையா?” என்று நிமிஷத்துக்கு ஒருதரம் என்னைக் கேட்டான். இதோ வந்துவிடும் என்று பதில் சொன்னேன்.
கடைசியாக மணிச் சத்தம் கேட்டது. அதுதான் ஆற்றங்கரைக்கு வரும் முதல் மாடு. காளி அம்மன் கோயில் மாடு. நல்ல காராம்பசு.சிவப்பு வெல்வெட்டிலே சதுரமாகத் தைத்து முதுகின்மேல் போடப்பட்டிருந்தது. கழுத்திலே பெரிய வேப்பிலைக் கொத்தில் மறைந்து ஒளியப் பார்க்கும் மணி. கொம்பெல்லாம் சீவி அழகாகப் பொன் வர்ணம் பூசப்பட்டிருந்தது. எல்லாவற்றுக்கும் மகுடம் இட்டதுபோல் மாட்டின் நெற்றியில் திலகம் போல் குங்குமம் இடப்பட்டிருந்தது. மாட்டுக் கழுத்தின் கீழுள்ள சதை இங்கும் அங்கும் அலைய, காதுகள் தழையத் தழையக் காளியம்மன் கோயில் பசு அழகாக வந்துகொண்டிருந்தது.
அருகில் வந்ததும் குமாரகிருஷ்ணன் மாட்டின் பக்கம் பாய்ந்து ஓடினான். அப்போதுதான் அவன் கையில் பச்சை ஓந்தி ஒன்று இருப்பதை நான் பார்த்தேன். இவன் பாய்ந்தவுடன் ஓந்தி சிவப்பாக மாறிவிட்டது. மாட்டின் கொம்பில் ஒந்தியை அடித்ததும் அது நீலமாக மாறிய விந்தையில் நான் லயித்துப் போய்விட்டேன். அதற்குள் குமாரகிருஷ்ணன் ஆற்றின் பக்கமாக ஓடிப் போய்விட்டான். நானும் பின்தொடர்ந்தேன்.
குமாரகிருஷ்ணன் முழங்கால் மட்டு ஜலத்தில் நின்று வாதாடிக்கொண்டிருந்தான்.
“அது முடியாது. என்னை அழைத்துக்கொண்டு போகாவிட்டால் உன் குச்சியைத் தரமாட்டேன்” என்று பிடிவாதமாகச் சொல்லிக்கொண் டிருந்தான்.
விவரம் எனக்குத் தெரியுமல்லவா? “மாட்டுப் பொங்கலன்று பவனிவரும் முதல் மாட்டின் கொம்பின் மீது ஒரு பச்சை ஓந்தியை அடித்தால், ஒரு கிழவன் கையில் ஊன்றுகோலுடன் உடனே தோன்றுவான். அவன் ஆற்றங்கரைப் பக்கம் ஓடுவான். நீயும் கூடவே ஓடு. கிழவன் ஜலத்தில் இறங்கியதும் அவன் கையிலிருக் கும் குச்சியைப் பிடுங்கிக்கொண்டு, ‘மந்திர மை வேண்டும். சம்பாதித்துத் தா. இல்லாவிட்டால் குச்சியைத் தரமாட் டேன் என்று சொல்லு’ என்று ஜால வித்தைக்காரன் குமாரகிருஷ்ணனுக்குச் சொல்லியதாக எனக்குத் தெரியுமல்லவா?
ஒரு மணி வரையில் ஜலத்திலேயே குமாரகிருஷ்ணன் நின்று அந்தக் கிழவனோடு வாதாடிக் கொண்டிருந்திருக்க வேண்டும். ஏனென்றால் பிறகுதான் கரைக்கு வந்தான். நான் மணலிலே உட்கார்ந்துகொண்டு ஆகாயத்தையும் மனிதனை மயக்கி இழுக்கும் மந்திர மையையும் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன்.
அவன் மணலேறி வந்தான்.
“ஏய்! இதோ கிழவனாரோடு சுடுகாட்டுக்குப் போகிறேன். கிழப் பிசாசு என்னை அழைத்துக்கொண்டு போகிறது. இதோ பார் அதனுடைய கழி, நாளைக் காலம் பர வீட்டுக்கு வா. மந்திர மையைப் பார்க்கலாம்… பி சிரிக்கலாம். இல்லாவிட்டால் தப்பு தப்பு என்று கன்னத் றகு தில் போட்டுக்கொள்ளலாம்” என்றான்.
அப்போதுதான் நான் உண்மையாகவே அவனுடைய நிலைமையைப்பற்றிக் காபுரா அடைந்தேன். மாட்டுப் பொங்கலன்று கிழவனும் தோன்ற மாட்டான், மண்ணாங் கட்டியும் தோன்றாது! என்னவோ பிடிவாத வெறியில் பேசுகிறான். பிறகு எல்லாம் தெளிந்து போகுமென்று நான் முதலில் நினைத்திருந்தேன். நண்பன் வந்து, “கிழவனுடன் சுடுகாட்டுக்குப் போகப் போகிறேன் என்று சொல்லவும் என் மனம் திடுக்கிட்டது,
“இதெல்லாம் கண் மயக்கமடா. வீட்டுக்குப் போவோம்” என்றேன். அவன் இசையவில்லை.
“நீ வீட்டுக்குப் போ, வருகிறேன் மையுடன்” என்று சொல்லிவிட்டு ஆற்றின் வழியாக மேற்கே நடந்து செல்ல ஆரம்பித்தான்.
நான் வீட்டுக்குத் திரும்பிப் போய்விடலாமா என்று கூட எண்ணினேன். மனம் வரவில்லை. குமாரகிருஷ்ணனுக்குத் தெரியாமல் பின்னாலேயே சென்றேன்.
ஆற்றின் கரையோரத்திலேயே சுடுகாடு. ஜலம் அரித்து ஒடிக்கொண் டிருந்தது ஓர் ஓரத்தில். நான் நெளிவாக ஓடிப்போய் ஒரு குட்டுச்சுவரின் ஓரத்தில் ஒண்டிக் கொண்டேன்.
சிதையில் ஏதோ ஒரு பிணம் எரிந்துகொண்டிருந்தது. பக்கத்திலிருந்த ஆலமரத்தின் நிழலும் விழுது களும் பாம்புகள் போல் பின்னிக்கொண்டு கிடந்தன.
ஆந்தைகள் மரத்தின் மேலே காதற்கதை பேசிக்கொண் டிருந்தன. சந்திரன் விரிந்த வெண்குடைபோல் வானில் திறந்து கிடந்தது. பழந்தின்னி வௌவால்கள் குறுக்கே. பறந்தன. நிச்சப்தம்.
குமாரகிருஷ்ணன் சுடுகாட்டுக்குள்ளே வந்தான். கையில் விடாப்பிடியாகக் குச்சியை வைத்திருப்பதுபோல் வலக்கையைக் கெட்டியாக மூடிக்கொண் டிருந்தான். மெது வாகக் காற்றொன்று அடித்தது. நிச்சப்தம் கலைந்தது. ஆல மரத்து நிழல்கள் ஊர்ந்தன. விழுதுகள் ஊசலாடின. நிழல் களெல்லாம் சேர்ந்து பிணம் எரிந்த மேடையைச் சுற்றி காற்றில் வட்டமாக ஆடின. நிழல்களைப் பார்க்கப் பார்க்க எனக்குக்கூடப் பிரமை உண்டாய்விட்டது. எவ்வளவு பிசாசுகள்! எவ்வளவு பிசாசுகள் ! இதில் பெண் பிசாசுகள் வேறு! காற்றுப் பலத்தது. பனைமரங்களின் மட்டைகள் சட சடவென்றன. நிழல்கள் வேகமாக ஒன்றை ஒன்று துரத் தின. ஒரு நரி எங்கோ ஒரு புதரிலிருந்து சந்திரனைப் பார்த்து ஒப்பாரி வைத்தது. பின்னும் ஒரு நிமிஷம். பேய்க்காற்று மரங்களிடையில் பாடிற்று. சந்திரன் தப்புக் கொட்டினான். பிசாசுகள் நடனமாடின.
ஐந்தாறு நிமிஷத்துக்குள் குமாரகிருஷ்ணன் திரும்பிப் பாராமல் பக்கமாக ஒட்டமெடுத்தான். அப்போது அவனது வலதுகை முன்போல் இல்லை. கட்டைவிரலும் ஆள் காட்டி விரலும் ஏதோ ஒரு சிறு வஸ்துவைப் பிடித்துக் கொண்டிருப்பதுபோல் சேர்ந்திருந்தன.
ஜாலவித்தைக்காரன் அவனுக்கு உபதேசம் பண்ணியதில் இரண்டாவது பாகம் என் நினைவுக்கு வந்தது.
‘சுடுகாட்டுக்குப் போனதும் நடனம் செய்யும் பிசாசுகளுக்குள் பெண் பிசாசாகப் பார்த்து அதன் தலைமயிர் ஒன்றைப் பிடுங்கி எடுத்துக்கொண்டு ஆற்றை நோக்கி ஓட வேண்டியது. ஆற்று நீரில் அந்த மயிரை நனைத்து எடுக்கு மட்டும் பிசாசுகள் நாட்டியமாடும் பக்கம் திரும்பிப் பார்க்கவே கூடாது. பார்த்தால் போச்சு! திரும்பிப் பார்க்காமல் நனைத்து எடுத்துக்கொண்டு வந்து, அதைக் கருக்கிக் கண்ணுக்கு இட்டுக்கொள்ளும் மையுடன் சேர்த்து விட்டால் அதுதான் ஜால மை’. இப்படிச் சொல்லியிருந்தான் அல்லவா? அந்தக் கட்டம் இப்போது நடப்பதைக் கண்டேன்.
குமாரகிருஷ்ணன் திரும்பிப் பார்க்காமல் விழுந்தடித்து ஓடினான். திரும்பிப் பார்க்காமல் இருக்க வேண்டுமே என்று நான் பிரார்த்தனை கூடச் செய்தேன். இன்னும் ஒரு விநாடி! நீரில் நனைத்து எடுத்திருப்பான். ஆனால் அவனை அறிந்தோ அறியாமலோ தலை சுடுகாட்டுப் பக்கம் திரும்பிவிட்டது. அவ்வளவுதான்! திடீரென்று சாய்ந்தான். நான் ஓடினேன். ஜலத்தை வாரி முகத்தில் அடித்தேன். அவன் மூர்ச்சை தெளிந்து கண் திறந்தான். கையைப் பார்த்துக்கொண்டான்.
“மயிர் எங்கே?” என்றான்.
நான் பதில் சொல்லவில்லை. அவன் வெறிக்கப் பார்த்தான்.
“சரி, வா போவோம்” என்றேன்.
பதில் சொல்லாமல் வந்தான். அவனுக்கிருந்த சோர்வு, அது, இது ஒன்றுமே அப்போது காணவில்லை. மெதுவாக அவனுடைய வீட்டு வரையில் அழைத்துக்கொண்டு வந்தேன். அவன் பெற்றோர்களிடம் நடந்ததை யெல்லாம் சொல்லுவோமா என்றுகூட ஒரு கணம் யோசித்தேன். தைரியம் வரவில்லை. சிவனே என்று வீட்டுக்குப் போய் விட்டேன். மறுநாள் காலையில் இந்தச் சமாசாரம்!
– மோகினி (சிறு கதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1951, கலைமகள் காரியாலயம், சென்னை.