மணிமொழி, நீ என்னை மறந்துவிடு!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: October 20, 2024
பார்வையிட்டோர்: 2,764 
 
 

(2009ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24 | அத்தியாயம் 25-27

22. பெரிய ஐயா யார்?

கையில் ஒரு பெட்டியுடன் தன்னந்தனியாக வெளிச்சம் கலந்த இருளில் நடந்து கொண்டிருந்தாள் மணிமொழி. அவள் கையிலிருக்கும் தோல் பெட்டி, அவள் பம்பாயிலிருந்து தன் சேலை துணிமணிகளை வைத்துக்கொண்டு வந்த அவளுடைய சொந்தப் பெட்டி.

தெருவில் எவருமே இல்லை. மணிமொழி அங்குமிங்கும் பார்த்துக்கொண்டே விரைந்து நடந்துகொண்டிருந்தாள். நேரமாக ஆக, அவள் நடையில் வேகம் மிகுந்தது.

கார் ஒன்று வரும் ஓசை கேட்டது. மணிமொழி, சட்டென்று தன் சேலைத் தலைப்பை எடுத்துத் தலையில் போட்டுக் கொண்டாள். வந்த கார் அவளைத் தாண்டிச் சென்றுவிட்டது. கொஞ்சம் மன அமைதி கொண்ட மணிமொழி, இன்னும் விரைந்து நடந்தாள்.

திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்துகொண்டு இருந்த மணிமொழிக்கு, எதையோ வீட்டில் விட்டு விட்டு வந்த மன நிலையே இருந்தது.

மீண்டும் பின்னால் கார் வரும் ஓசை. மணிமொழி இயல்பாக நடப்பதுபோல் நடந்தாள். திரும்பிப் பார்க்க வில்லை.

கார் அவளுக்கருகில் வந்ததும் நின்றது. அது ஒரு வாடகைக் கார்!

காரோட்டி கார் கதவைத் திறந்துகொண்டு மணிமொழிக்கு அருகில் வந்து, “எங்கேயம்மா போக வேண்டும்? காரில் போகலாமே?” என்றான்.

மணிமொழி காரோட்டியை ஒருமுறை பார்த்துவிட்டுப் பின்பு காரில் ஏறிக்கொண்டு, “சென்ட்ரல் நிலையத்துக்குப் போ” என்றாள்.

மணிமொழி எங்கே போவது என்பது பற்றி முடிவு செய்து விட்டாள். அப்பாவைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை அவளுக்கு வந்துவிட்டது.

சென்னையில் தனக்கு இனி வேலை இல்லை என்றதும், பம்பாய் சென்று முடிந்தவரை முயன்று, அப்பாவை விடுதலை செய்வதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யலாம் என்ற முடிவுடன் புறப்பட்டுவிட்டாள்.

சென்ட்ரல் நிலையத்திற்கு முன் கார் நின்றது. வாடகைக் காசைக் கொடுத்துவிட்டுக் காரை விட்டுக் கீழே இறங்கிய மணிமொழி, கையிலிருந்த பெட்டியுடன் சென்ட்ரல் நிலையத்திற்குள் புகுந்தாள்.

பெண்கள் தங்கும் முதல் வகுப்பு அறைக்குள் நுழைந்து, பெட்டியை ஒரு மூலையில் வைத்துவிட்டு உட்கார்ந்தாள். அந்த அறையில் அவளைத் தவிர, வேறு எவருமே இல்லை!

எப்போது விடியப்போகிறது என்றிருந்தது மணிமொழிக்கு. அவள் எழுந்து சென்று, 7:25-க்குப் பம்பாய் விரைவு வண்டி சென்னையை விட்டுப் புறப்படுகிறது என்பதை அறிந்துகொண்டு, டிக்கெட் கொடுக்குமிடத்திற்குச் சென்று பம்பாய்க்கு மூன்றாம் வகுப்பு டிக்கெட் ஒன்றை வாங்கிக் கொண்டு வந்தாள்.

டிக்கெட்டுடன் தன் இடத்தில் வந்து உட்கார்ந்த பிறகும் மணிமொழியின் மனத்திலுள்ள அச்சம் மறையவில்லை. வண்டியில் உட்கார்ந்து, வண்டி புறப்பட்டால்தான் மனம் அமைதியுறும் என்று பட்டது.

விடிந்தது. நிலையத்தில் எங்கும் ஓசை, இரைச்சல்! நன்றாக விடிந்ததும் பம்பாய்க்குச் செல்லும் விரைவு வண்டியில், பெண்கள் பெட்டி ஒன்றில் மணிமொழி ஏறி உட்கார்ந்துகொண்டாள்.

கூட்டம் மிகுந்து, தான் இருக்கும் பெட்டி நிறைந்து வழிவதை மணிமொழி விரும்பினாள். காரணம், கூட்டத்தில் அவளை எவரும் எளிதில் கண்டுபிடித்து விட முடியாதல்லவா?

வண்டி புறப்பட்டது. ‘இந்த வண்டி நாள் கணக்கில் ஓடிக் கொண்டிருக்குமே, சாய்ந்து படுக்கக்கூட இடமில்லையே!’ என்ற கவலை மண்டியது மணிமொழி மனத்தில்.

சரியாக மாலை 6:15-க்குக் குண்டக்கல்லில் வந்து நின்றது விரைவுவண்டி. அதே நேரத்தில் பம்பாயிலிருந்து சென்னையை நோக்கிச் செல்லும் மெயில் மற்றொரு பக்கம் வந்து நின்றது.

சாப்பிடுவதற்காகப் பலர் இரண்டு வண்டிகளிலிருந்தும் இறங்கி உணவு விடுதிக்குப் போனார்கள். மணிமொழிக்கு ஏதாவது சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும் என்ற நிலை! இறங்கிச் செல்லக் கொஞ்சம் தயங்கினாள் மணிமொழி. அப்போது அவளுக்கு எதிரில் இருந்த ஒரு கல்லூரிப் பெண், “நீங்கள் ஒன்றும் சாப்பிடாமல் இருக்கிறீர்களே! போய்ச் சாப் பிட்டுவிட்டு வாருங்கள். பெட்டியை நான் பார்த்துக் கொள்கிறேன். சென்னையிலிருந்து பம்பாய்க்குப் புகை வண்டியில் போகிறவர்கள் இரண்டு பகல் பொழுதும், ஓர் இரவுப் பொழுதும் வண்டியிலேயே இருந்தாக வேண்டும். போங்கள், ஏதாவது சாப்பிட்டுவிட்டு வாருங்கள்!” என்றாள்.

மணிமொழி சிரித்துவிட்டு வண்டியை விட்டுக் கீழே இறங்கி, மெல்ல நடந்தாள். அப்போது, “சகோதரி!” என்று அழைத்துக்கொண்டே தோளில் யாரோ கை வைத்தார்கள். திடுக்கிட்ட மணிமொழி திரும்பிப் பார்த்தாள்.

பிரபாவதிதேவி!

பம்பாயில், அப்பாவின் வேலையைத் தான் செய்வதாகச் சொல்லிவிட்டு மணிமொழி ஐந்து பெட்டிகளை எடுத்துக் கொண்டு போய் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு பெட்டியாகக் கொடுத்துக்கொண்டு வரும் போது, 3-வது பெட்டியை மரீன்டிரைவில் 40 வயது கொண்ட ஒரு பெண்ணிடம் கொடுத்தாளே, அந்தப் பெண் தான் இந்தப் பிரபாவதிதேவி! அன்று இவள் தன் கையிலிருந்த வெண்சுருட்டைக் கீழே போட்டுக் காலால் மிதித்துக் கொண்டே, ‘என்ன உடனே புறப்பட்டுவிட்டீர்கள்! பெண்ணாகிய நான் புகை பிடிப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லையா? 28 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்தப் பம்பாய் நகரத்தில் எத்தனையோ விதமான நாகரிகங்கள் உண்டு!’ என்று சொன்னது மணிமொழிக்குப் பசுமையாக நினைவிற்கு வந்தது.

பிரபாவதிதேவி மணிமொழியின் தோளிலிருந்து கையை எடுக்காமலே, “மணிமொழி, நீ எங்கே போகிறாய்? சென்னையிலேயே இருப்பதுதானே உனக்கு நல்லது?” என்றாள்.

இதைக் கேட்டதும் மணிமொழிக்குத் தூக்கிவாரிப் போட்டது! மருததம்பி அவளிடம் சொல்லியவையெல்லாம் நினைவில் வந்து நின்றன.

மணிமொழி தன்னைக் கொஞ்சம் தேற்றிக்கொண்டு, “நான் பம்பாய்க்குப் போகிறேன். அப்பாவைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது எனக்கு!” என்றாள்.

பிரபாவதிதேவி சிரித்துக் கொண்டே, “உன் அப்பா பம்பாயில் எங்கே இருக்கிறார்..! சென்னையில் தானே இருக்கிறார்!” என்றாள்.

இதைக் கேட்டதும் மணிமொழிக்கு மயக்கம் வருவதைப் போன்று இருந்தது. இருந்தாலும் தன் குழப்பத்தைக் காட்டிக் கொள்ளாமல், “அப்படியா?! அப்பா சென்னையிலா இருக்கிறார்? எனக்குச் செய்தியே இல்லையே!” என்றாள்.

“உனக்குச் செய்தி தந்து கொண்டிருக்கும் நிலையில் உன் அப்பா இல்லை. எது எப்படி இருந்தாலும், இப்போது நீ என்னுடன் சென்னைக்கு வந்துவிடு. பம்பாய்க்குப் போகக் கூடாது. அங்கே உனக்கு ஆபத்துக் காத்திருக்கிறது!” என்றாள் பிரபாவதிதேவி.

மணிமொழி குழம்பினாள்.

பிரபாவதிதேவி அவளைத் தனியாக அழைத்துச் சென்று மெல்லிய குரலில், “போலீசார் உன்னையும் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். நெற்றியில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து செத்துக் கிடந்த கேசவதாஸ் வீட்டிற்குக் கடைசியாகச் சென்று வந்தவள் நீதான் என்பதைப் போலீசார் கண்டுபிடித்துவிட்டார்கள்! பேசாமல் என்னுடன் மெயிலில் சென்னைக்கு வந்து விடு. பெட்டி ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்டாள்,

“ஆமாம்” என்றாள் மணிமொழி.

“நேரம் இருக்கிறது. முதலில் சாப்பிட்டுவிட்டுப் பிறகு பெட்டியை எடுத்துக் கொள்ளலாம்” என்று சொல்லி, மணிமொழியை உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றாள் பிரபாவதிதேவி.

பத்து நிமிடங்களுக்குள் உணவு விடுதியில் சூழ்ந்திருந்த கூட்டம் கலைந்து விட்டது.

பிரபாவதிதேவி, கூலியாள் ஒருவனை அழைத்து, வண்டியிலிருந்து மணிமொழியின் பெட்டியைச் சென்னைக்குப் போகும் மெயிலில், தான் இருக்கும் முதல் வகுப்புப் பெட்டியில் வைக்கும்படி சொல்லிவிட்டு, மெயிலிலேயே வரும் டிக்கெட் பரிசோதகரிடம் மணிமொழி தன்னுடன் சென்னைக்கு வருகிறாள் என்றும், அவளுக்குரிய டிக்கெட் பணத்தைத் தன்னிடம் அடுத்த ஜங்ஷனில் பெற்றுக் கொள்ளும்படியும் சொன்னாள்.

புகைவண்டி புறப்பட்டது.

“என் அப்பா சென்னையில் இருக்கிறார் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டாள் மணிமொழி.

பிரபாவதிதேவி சிரித்தாள். “விவரம் தெரியாத பெண்ணே, எங்கள் கூட்டத்தில் இருந்து கொண்டு இந்தக் கேள்வி கேட்கிறாயே! பெரிய ஐயா எனக்குச் சொன்னார்!?” என்றாள்.

“உங்கள் கூட்டமா? அது என்ன? எனக்கு ஒன்றும் புரிய வில்லையே! பெரிய ஐயா யார்?” – குழம்பினாள் மணிமொழி.

‘பெரிய ஐயா யார்’ என்று குழம்பிய மணிமொழியிடம், “அது யார் என்பது தெரியாதவரையில் உனக்கும் கூட்டத்துக்கும் நன்மைதான்! ஆனால், எங்கள் கூட்டத்தில் நீயும் ஒருத்தி என்பது உனக்குத் தெரியாமல் இருக்கக்கூடாது!” என்றாள் பிரபாவதிதேவி.

“புரியும்படி சொல்லுங்கள்!”

“எங்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் பெரிய ஐயாவின் அனுமதியின்றி வெளியேற முடியாது. உன்னைப் பாதுகாக்கத்தான் பெரிய ஐயா என்னை அனுப்பினார். மருதநம்பி செய்த ஒரு தவறு, உன்னையும் எங்களுடன் ஒருத்தியாகச் சேர்த்துவிட்டது!”

மணிமொழிக்கு மயக்கமாக வந்தது. அவள் எப்படிப்பட்ட ஆபத்தில் சிக்கியிருக்கிறாள் என்பதை அவளால் எண்ணிக் கூடப் பார்க்கமுடியவில்லை!

“என் அப்பாவைப் பற்றிச் சொல்லுங்கள். போலீசார் ஏன் அவரைப் பிடித்துச் சென்றார் கள்?” என்று கேட்டாள்.

“உன்னைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன், கொலையுண்ட கேசவ தாஸின் வீட்டிற்கு விரைந்து சென்று, தன்னையே கொலையாளியாக ஆக்கிக் கொண்டார் மருதநம்பி. அங்கே கதவுகளின் மீதும், மேசை நாற்காலிகளின் மீதும் தன் கைரேகைகளை வேண்டுமென்றே விட்டு வந்திருக்கிறார்!”

மணிமொழிக்கு உண்மை விளங்கியது. மருதநம்பி, இதய நோயால் தொல்லைப்பட்டுக் கொண்டிருந்ததால், எந்த நிமிடமும் இறந்துவிடலாம்; ஆகையால், மணிமொழியை இந்தக் கொலையிலிருந்து காப்பாற்றவே அவர் இப்படிச் செய்திருக்கிறார்!

“கேசவதாஸை உண்மையாக யார் சுட்டிருப்பார்கள் என்று எண்ணுகிறீர்கள்?” என்று கேட்டாள் மணிமொழி.

“உண்மை எனக்குத் தெரியும்; பெரிய ஐயாவுக்கும் தெரியும். ஆனால், போலீசுக்குத் தெரியாது. கேசவதாஸ் கொலை செய்யப்படவில்லை. அவர், பெரிய ஐயாவின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளத் தற்கொலை செய்து கொண்டார். இதுதான் உண்மை!” என்றாள் பிரபாவதிதேவி.

தொடர்ந்து, “நடந்ததைப் பற்றி நாம் நினைத்துப் பார்த்து என்ன செய்யப் போகிறோம்? நடந்தது நடந்ததுதான்! இனி நடக்கவேண்டியவை பற்றித் தாம் நாம் சிந்திக்க வேண்டும். பேசாமல் படுத்துக்கொள். கதவுகளைத் தாழிட்டு விட்டேன். சென்னைக்குச் சென்றதும் மருதநம்பியைக் கண்டுபிடிக்க வேண்டியது என் வேலை! நீ பேசாமல் தூங்கு” என்றாள்.

23. மருதநம்பிக்கும் ஒரு பெட்டி!

புகைவண்டி, சென்னை சென்ட்ரல் நிலையத்தை அடைந்தபோது புலர்ந்து சிறிது நேரமாகிவிட்டிருந்தது.

பிரபாவதிதேவியும் மணிமொழியும் ஒரு வாடகைக் கார் பிடித்து, மவுன்ட் ரோடில் இருந்த நீலமலை ஓட்டலுக்குச் சென்றார்கள். சென்னையில் இருக்கும் மிகப் பெரிய ஓட்டல்களில் ஒன்று அது. உள்ளேயிருந்த எல்லா அறைகளுமே குளிர் அறைகள்!

பிரபாவதிதேவி மூன்று பெரிய தோல் பெட்டிகள் கொண்டு வந்திருந்தாள். அவற்றை ஓட்டல் பையன் கொண்டு வந்து வைத்துவிட்டுப் போனதும், பிரபாவதிதேவி கட்டிலில் உட்கார்ந்தாள்.

“மணிமொழி, நீ குளித்து விட்டு, வேறு உடை மாற்றிக் கொள். வெளியே போக வேண்டும். நீயும் என்னோடு வருகிறாயா?” என்று கேட்டாள்.

“எங்கே?”

“தங்கதுரையைப் பார்த்து ‘மருதநம்பி எங்கேயிருக்கிறார்?’ என்று கேட்கவேண்டும்.”

மணிமொழிக்கு லேசாக உடல் நடுங்கியது. ‘தங்கதுரைக்குத் தன் தந்தை இருக்குமிடம் தெரியுமா?”

மணிமொழி தயக்கத்துடன் நிற்பதைக் கண்ட பிரபாவதி தேவி, “உனக்குக் களைப்பாக இருந்தால், நீ இங்கேயே இரு. நான் மட்டும் போய் வந்து விடுகிறேன்” என்றாள்.

“தங்கதுரையை இதற்கு முன் நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டாள் மணிமொழி.

“எப்போதோ ஒருமுறை பார்த்திருக்கிறேன். பெரிய ஐயாவுக்கு மிகவும் வேண்டியவர்களில் தங்கதுரையும் ஒருவர்!”

“நீங்கள் தங்கதுரையிடம் என்னைப் பற்றி எதுவும் சொல்லாதீர்கள். நான் உங்களுடன் தங்கியிருப்பதும் அவருக்குத் தெரியக்கூடாது!”

“ஏன் மணிமொழி?”

“நான் எவர் கண்ணிலும் கண்ணிலும் படாமல் இருப்பதுதான் எனக்கு நல்லது. அப்பாவைக் காணத்தான் மீண்டும் சென்னைக்கு வந்திருக்கிறேன். என் அப்பா எங்கேயிருக்கிறார் என்பதை அறிந்து வாருங்கள். அதுவரை நான் இங்கேயே மறைந்திருக்கிறேன்!” என்றாள் மணிமொழி.

இருவரும் குளித்துவிட்டு, வேறு உடை மாற்றிக் கொண்டார்கள். சிற்றுண்டி வரவழைத்துச் சாப்பிட்டுவிட்டு, சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். பிரபாவதிதேவி தனது பெட்டிகளில் ஒன்றைத் திறந்து எடுத்தாள். அந்த அட்டைப் பெட்டியின் மேல் ‘மருதநம்பி” என்று எழுதப்பட்டிருந்தது.

அதைப் பார்த்த மணிமொழி வியப்புடன், “மீண்டுமா இந்த மாதிரி அட்டைப் பெட்டி? என் அப்பாவுக்கா இது?” என்று கேட்டாள்.

“ஆமாம் மணிமொழி, மருதநம்பிக்குத்தான் இந்தப் பெட்டி. பெரிய ஐயா அனுப்பியிருக்கிறார். இதைத் தங்கதுரையின் மூலமாக மருதநம்பியிடம் சேர்த்துவிட வேண்டும்” என்றாள் பிரபாவதிதேவி.

ஆவலுடன் அந்தப் பெட்டியை எடுத்தாள் மணிமொழி. லேசாகவே இருந்தது. அதிலும் குழந்தைச் சட்டைதான் இருக்குமா?

மணிமொழி அதைத் திறக்கப் போனாள். அதற்குள் பிரபாவதிதேவி பாய்ந்து வந்து பெட்டியைப் பிடுங்கிக் கொண்டாள்.

“நீ பெட்டியைத் திறந்து பார்க்கக் கூடாது மணிமொழி! ஒருவருக்கு அனுப்பப்படும் பெட்டியை மற்றொருவர் திறக்கக் கூடாது. பெரிய ஐயாவின் கட்டளை இது!” என்று சொல்லிப் பெட்டியைத் தன் கைப்பையில் போட்டுக்கொண்டாள்.

பிறகு, “நான் போய் வருகிறேன் மணிமொழி! நீ ஓய்வு எடுத்துக்கொள். எவராவது வந்து கதவைத் தட்டினாலும், மணியடித்தாலும் கதவைத் திறக்குமுன் விழிப்புடன் இருக்க வேண்டும்! தெரிந்ததா?” என்று சொல்லிவிட்டு வெளியேறினாள்.

வாடகைக் கார் ஒன்றைப் பிடித்து “சாந்தோமுக்குப் போ” என்றாள்.

சாந்தோமில், முன்பு மணிமொழி தங்கதுரையைத் தொடர்ந்து சென்று கண்டு பிடித்த அதே வீட்டில், தங்கதுரையிடம் பேசிக்கொண்டு இருந்தாள் பிரபாவதிதேவி.

“பெரிய ஐயா என் மூலம் மருதநம்பியிடம் இதைக் கொடுக்கச் சொன்னாரா? அப்படியானால், மருதநம்பி சென்னையிலா இருக்கிறார்?”

“ஆமாம். போலீஸ் பாதுகாப்பிலிருந்து தப்பியதும், நேராகச் சென்னைக்கு ஓடி வந்து விட்டார். இன்னும் நீங்கள் அவரைப் பார்க்கவேயில்லையா?”

“இல்லையே!”

“ஆனாலும் அவரை நீங்கள் எப்படியாவது கண்டுபிடித்து, இந்தப் பெட்டியை அவரிடம் சேர்த்துவிட வேண்டும்.”

“ஆகட்டும்.”

“இந்தப் பெட்டியை முதலில் நீங்கள் பிரித்துப் பார்த்துவிட்டுப் பிறகுதான் அவரிடம் சேர்க்க வேண்டும்!”

இதைக் கேட்டதும் தங்கதுரையின் முகத்தில் வியப்பு விரிந்தது. அந்தப் பெட்டியைத் திறந்தான். உள்ளே…

நைலான் குழந்தைச் சட்டை ஒன்று இருந்தது. அந்தச் சட்டையில் பின்னல் வேலை செய்யப்பட்டிருந்தது. சட்டையைத் தூக்கிப் பிடித்துச் சன்னல் வெளிச்சத்தில் பார்த்தான் தங்கதுரை.

அதில், எழுத்துக்கள் எதுவும் இல்லை. பூ வேலைகளுக்கு நடுவில் ஒரு கைத்துப்பாக்கி தெரிந்தது!

தங்கதுரையின் முகத்தில் அச்சம் தோன்றியது. அவன் அந்தச் சட்டையை மடித்துப் பெட்டியிலேயே வைத்தான். பிறகு, அதைத் தன் மேசை அறைக்குள் வைத்துவிட்டு, கோட்டுப் பையிலிருந்த கைத் துப்பாக்கியை எடுத்தான். அதில் ஆறு குண்டுகளைப் போட்டு நிரப்பிக்கொண்டு சரி பார்த்துவிட்டு, “மருதநம்பி எங்கிருந்தாலும் நான் கண்டுபிடித்து இந்தப் பெட்டியைப் பாதுகாப்புடன் அவரிடம் சேர்த்து விடுகிறேன். வேறு ஒன்றுமில்லையே?” என்றான்.

“இல்லை!”

“மீண்டும் உங்களை நான் எங்கே பார்க்கலாம்?”

“என்னை நீங்கள் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். தேவையானால் நானே வந்து உங்களைப் பார்க்கிறேன்!”

“எங்கே நீங்கள் தங்கியிருக்கிறீர்கள் என்பதாவது எனக்குத் தெரியலாமா?”

“தெரிந்தால் என்ன! மவுன்ட் ரோடிலுள்ள நீலமலை ஓட்டலில்தான் தங்கியிருக்கிறேன். போதுமா?”

“போதும்! மருதநம்பியின் மகள் மணிமொழி எங்கிருக்கிறாள் என்பது உங்களுக்குத் தெரியுமா?”

“தெரியாதே! எங்கிருக்கிறாள்?” என்றாள் பிரபாவதி.

“அவள் என் நண்பன் முத்தழகின் வீட்டில், அவனுடைய அண்ணியைப் போல் நடித்துக் கொண்டு தங்கியிருந்தாள். முத்தழகின் அண்ணன் கண்களை இழந்து உயிருடன் திரும்பிவரப் போகிறான் என்பதை அறிந்ததும் எவரிடமும் சொல்லாமல் ஓடிப் போய்விட்டாள்!?”

“அப்படியா!”

“மருதநம்பிதான் அவளை அழைத்துச் சென்றிருப்பாரோ என்ற ஐயம் எனக்கு ஏற்படுகிறது. எப்படியும் நான் கண்டு பிடித்துவிடுகிறேன்!” என்றான் தங்கதுரை.

பிரபாவதிதேவி எழுந்து, “சரி, நான் வந்த வேலை முடிந்துவிட்டது. நான் வருகிறேன்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.

தங்கதுரை சிந்தனையுடன் சன்னல் பக்கமாக நின்று கொண்டு, கடலையே பார்த்துக் கொண்டிருந்தான்.

‘மணிமொழியின் அப்பா மருதநம்பியைச் சுட்டுக் கொல்லச் சொல்லி, தலைமை அலுவலகத்திலிருந்து உனக்கு உத்தரவு வந்திருக்கிறது. நீயும் துப்பாக்கியைக் கையில் எடுத்துக்கொண்டு விட்டாய். பெண்ணொருத்திக்காக வாழும் அந்தப் பெரியவரை நீ சுட்டுக் கொல்லப் போகிறாயா தங்கதுரை?”

24. எதிர்பாராத பேட்டி!

மயிலாப்பூர் குளத்தருகில் இருந்த தெரு வழியே, பழைய கோட்டு ஒன்றைப் போட்டுக் கொண்டு, முகத்தை மறைத்தபடி நடந்து சென்று கொண்டிருந்தார் மருதநம்பி. அவர் தேடி வந்த தெரு அதுதான். இருட்டி விட்ட நேரம் அது. ஒவ்வொரு வீடாகப் பார்த்துக் கொண்டே சென்றவர், ஒரு வீட்டின் முன் நின்றார். அந்த வீடு முன்பு மணிமொழி வந்து, முதல் பெட்டியைக் கொடுத்து விட்டுச் சென்ற அதே வீடுதான். பொன்மலை என்னும் பெரியவர் முன்பு அங்கிருந்தார். இப்போதும் அங்கே அவர்தான் இருந்தார்.

மருதநம்பி வாயிற்படியில் ஏறிக் கதவைத் தட்டியதும், பொன்மலை கதவைத் திறந்தார். மருதநம்பியை உற்றுப் பார்த்துவிட்டு, “யாரது? மருதநம்பியா! உள்ளே வாருங்கள்” என்றார். மருதநம்பி உள்ளே போனார். அந்த வீட்டில் எவருமே இல்லை, அந்தப் பெரியவரைத் தவிர!

“நீங்கள் தனியாவா இருக்கிறீர்கள்?” என்று கேட்டார் மருதநம்பி.

“ஆமாம், உட்காருங்கள். சில நாட்களுக்கு முன் உங்கள் மகள் இங்கே வந்து போனாள். நீங்கள் கொடுத்ததாக ஓர் அட்டைப் பெட்டியை என்னிடம் கொடுத்துவிட்டுச் சென்றாள். உங்களுக்கு இவ்வளவு அழகான பெண் இருக்கிறாள் என்பது அன்று வரையில் எனக்குத் தெரியவே தெரியாது!”

“என்னுடைய குடும்பத்தின் அணையா விளக்கு அவள். என்னுடைய கெட்டகாலம் அவளையும் இழந்துவிட்டேன்! என் உயிரைக் கொடுத்தாவது மணிமொழியை இந்தக் கஷ்டத்திலிருந்து நான் விடுவிக்க வேண்டும்!”

“மணிமொழியா அவள் பெயர்? அவளை ஏன் நம்முடைய கூட்டத்தில் சேர்த்தீர்கள்? வயதான இந்தக் காலத்தில்தான் நான் தவறுகளை உணர்கிறேன். என் தள்ளாத வயதிலும்கூட என்னால் என் குடும்பத்துடன் சேர்ந்து வாழ இயலவில்லை. பெரிய ஐயாவின் பிடியிலிருந்து விடுபடாத வரையில் நான் தனியாகவே வாழ விரும்புகிறேன். போலீஸாரால் போலீஸாரால் எந்த நிமிடமும் நம் கூட்டத்தாரைப் பிடித்துவிட முடியும்! வயதாகிவிட்ட நீங்கள், இந்த நேரத்தில் எப்படித் தவறு செய்தீர்கள்?” என்று இரக்கத்துடன் கேட்டார் பொன்மலை.

“எனக்கு உடல் நலமில்லாத நேரத்தில், என்னுடைய கறை படிந்த தொழிலைப் புரிந்து கொள்ளாத மணிமொழி, பெட்டிகளை எனக்காக எடுத்துச் சென்றாள். கேசவதாசுக்கும் ஒரு பெட்டி இருந்தது. அவள் கேசவதாஸின் வீட்டை அடைந்தபோது, கேசவதாஸ் செத்துக் கிடந்தார். அதிலிருந்து தான் தொல்லைகள் பல தொடங்கின. சென்னைக்கு மணிமொழியை அனுப்பிவிட்டு, உண்மைகளைக் கண்டு பிடிக்கக் கேசவதாஸ் பங்களாவுக்குச் சென்றேன்.

அங்கிருந்து திரும்பி வந்ததும் தான் அங்கே பல இடங்களில் என் கைரேகைகளை விட்டு விட்டு வந்தது நினைவிற்கு வந்தது. நான் என் தவற்றை உணர்வதற்குள், போலீஸார் என்னைக் கைது செய்து காவலில் வைத்துவிட்டார்கள்! சிறையிலிருந்த நான், உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்ததால் மருத்துவ விடுதியில் இருந்து குணமாகிக்கொண்டே வந்தேன். பெரிய ஐயா, மருத்துவ விடுதியிலிருந்து தப்ப எனக்கு வழி செய்து கொடுத்தார். நான் சென்னைக்கு வந்துவிட்டேன்.’ என்றார் மருதநம்பி.

“இப்போது எங்கிருக்கிறாள் மணிமொழி?” என்று கேட்டார் பொன்மலை.

“அதுதான் தெரியவில்லை! அவளைக் கண்டுபிடிக்கவேண்டும் என்று எங்கெல்லாமோ அலைந்து கொண்டிருக்கிறேன். தங்கதுரையால்தான் என் மகள், தான் தங்கியிருந்த இடத்தைவிட்டு எங்கேயோ ஓடியிருக்கிறாள். தங்கதுரையே அவளைக் கடத்திச் சென்று மறைத்து வைத்திருப்பானோ என்றுகூட எனக்கு ஐயமாக இருக்கிறது.

முன்பொரு தடவை, மணிமொழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று சென்னைக்கு வந்த நான், அவளை எங்கே தேடுவது என்று தெரியாமல் விழித்தேன். பிறகு, எப்படியும் பெட்டிகளைக் கொடுக்கும்போது, தங்கதுரையை அவள் சந்திப்பாள் என்று அவனைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன்.

நான் எதிர்பார்த்தபடி மணிமொழி தங்கதுரையின் வீட்டிற்கு வந்தாள். அப்போது அவன் அவளை அறைக்குள் போட்டுப் பூட்டிவிட்டான். அப்போது மணிமொழியை நான்தான் விடுவித்தேன். ஆனால், நான் மறைந்திருந்து மணிமொழிக்குச் செய்த உதவிகளெல்லாம் அவளுக்குத் தெரியாது. நான் அவளைப் பார்த்து, சில உண்மைகளை அறியவேண்டும். என்னுடைய முயற்சியில் என் உயிரே போனாலும் குற்றமில்லை!

இப்போது உங்களிடம் வந்த காரணம் என்ன தெரியுமா? கேசவதாஸ் கொலை வழக்கில் அசைக்கமுடியாத ஓர் உண்மையைக் கண்டுபிடித்திருக்கிறேன். அதைப் பற்றி உங்களிடம் சொல்லி, உதவி கேட்கவே வந்தேன். கேசவதாஸ் தற்கொலை செய்துகொண்டதாகப் பெரிய ஐயா நினைத் திருக்கிறார். அது தவறு! கேசவதாஸ் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவர் கொலை செய்யப்பட்டார் என்பதுதான் உண்மை!” என்றார் உறுதியான குரலில் மருதநம்பி.

இதைக் கேட்டதும் பொன்மலை நிமிர்ந்து உட்கார்ந்தார். வியப்புடன் மருதநம்பியைப் பார்த்தார். “அப்படியானால் கொலையாளி யார்?”

மருதநம்பி தனது கோட்டுப் பையில் கையைவிட்டுச் சிறிய கைக்கடிகாரம் ஒன்றை எடுத்தார். மிகச் சிறிய, நுணுக்கமான ஸ்விஸ் கடிகாரம் அது. அந்தக் கடிகாரத்தின் தங்கச் சங்கிலியில் பல வைரக்கற்கள் பதிக்கப்பட்டிருந்தன.

கடிகாரத்தைப் பொன்மலையிடம் கொடுத்தார் மருதநம்பி. அந்தக் கடிகாரத்தின் கண்ணாடி உடைந்து நொறுங்கியிருந்தபோதிலும், ஓட்டைகளுடன் அந்தக் கண்ணாடி அப்படியே ஒட்டிக்கிடந்தது. கடிகாரம் ஓடிக்கொண்டு இருந்தது. தன்னால் இயங்கும் கடிகாரம் அது.

“என்ன இது?” என்றார் பொன்மலை.

“பின்னால், கடிகாரத்தின் மூடியைத் திறந்து பாருங்கள்!”

பொன்மலை நடுங்கும் கைகளுடன் கடிகாரத்தின் பின்பக்க மூடியைத் திறந்தார். மூடியின் உள்பக்கம் ஒரு பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. அந்தப் பெயரைக் கண்டதும் திடுக்கிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தார் பொன்மலை. அவர் உடல் லேசாக நடுங்கியது.

“இந்தக் கடிகாரம் உங்களிடம் எப்படி வந்தது?”

“சொல்கிறேன்! மணிமொழி என்னிடம் வந்து கேசவதாஸ் கொலையுண்டதைப் பற்றிச் சொன்னதும், மணிமொழியைச் சென்னைக்கு விமானத்தில் ஏற்றிவிட்டுக் கேசவதாஸின் வீட்டிற்குச் சென்றேன். நம்முடைய கூட்டத்திலே, பெரிய ஐயாவுக்கு மிகவும் வேண்டியவர் கேசவதாஸ். வேண்டியவ ரென்ன, பெரிய ஐயாவுக்கு அடுத்தபடியாக அவர்தான்!

பெரிய ஐயாவை நாம் பார்த்ததில்லை. பார்க்கவும் முடியாது!

கேசவதாஸ்தான் நம்மைக் கூட்டத்தில் சேர்த்தவர். பெரிய ஐயாவிடமிருந்து ஒவ்வொருவருக்கும், குழந்தைகளுக்கான சட்டைகளின் மூலம் மர்மமான முறைகளில் எழுதப்பட்ட செய்திகள் வரும். அவற்றின்படி ஒவ்வொருவரும் நடப்பார்கள். இந்த நிலையில் கேசவதாஸ் கொலை வழக்கை எப்படிச் சரிக்கட்டுவது, பெரிய ஐயாவிடம் எப்படித் தொடர்பு கொள்வது என்று புரியாமல், எப்படியாவது மணிமொழியை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் சென்றேன்.

அவர் தற்கொலை செய்துகொண்டிருந்தால் துப்பாக்கி அவர் கையில் இருக்கவேண்டாமா? இல்லை. துப்பாக்கி எங்கே மறைந்து போயிருக்கும்? நான் அவர் உடலைப் புரட்டிப் பார்த்த போது, இந்தக் கைக்கடிகாரத் தின்மீது அவர் விழுந்து கிடந்தது தெரிந்தது. அவரைச் சுட்டுக் கொன்றவள் ஒரு பெண்! அவரைச் சுட்டவள் கைக்கடிகாரத்தை விட்டு விட்டுப் போகமாட்டாள். கேசவதாஸ், தன்னைச் சுடவந்த பெண்ணின் இடது கையைப் பற்றியிருக்க வேண்டும். அப்போது அவள் கட்டியிருந்த இந்தக் கடிகாரம் அறுந்து விழுந்துவிட்டது. வலது கையில் நீட்டியிருந்த துப்பாக்கியால் கேசவதாஸைச் சுட்டுவிட்டு, கடிகாரத்தைப் பற்றிய நினைவில்லாமல் ஓடிவிட்டிருக்கிறாள்” என்றார் மருதநம்பி.

பொன்மலை, கடிகாரத்தின் பின்பக்க மூடியை மூடினார். அவர் உதடுகள், கடிகாரத்தின் உள்ளே பொறிக்கப்பட்டிருந்த பெயரை இரண்டு மூன்று முறை சொல்லிப் பார்த்துக் கொண்டன.

மருதநம்பி எழுந்துகொண்டார். “நான் வருகிறேன். மீண்டும் நான் திரும்பி வராவிட்டால் மணிமொழியை மறந்துவிடாதீர்கள். தங்கதுரையின் மீது எப்போதும் ஒரு கண் இருக்கட்டும்!” என்றபடி வெளியேறினார். மருதநம்பி போனதும் கதவைச் சாத்தித் தாழிட்டார் பொன்மலை.

– தொடரும்…

– மணிமொழி, நீ என்னை மறந்துவிடு! (தொடர்கதை), ஆனந்த விகடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *