இரவு மணி இரண்டு.
வேகமாய் நடந்துகொண்டிருந்த மகேசுக்கு வியர்த்துக்கொட்டியது .. .அந்த தெருவில் அவனைத் தவிர யாரும் இல்லை..
“சே எங்க அப்பனுக்கு அறிவே கிடையாது” மனசுக்குள் தன் தகப்பனை திட்டியவாறே நடையில் வேகம் கூட்டினான்.
அவனுக்கும் அவன் அப்பாவிற்கும் நடந்த உரையாடல் அவன் மனதில்
நிழலாடியது…
“அப்பா என்னை ஏன் தொந்தரவு பண்றே…நீ போய் கொடுத்துட்டு வரலாம்ல?”
“இல்லடா முன்னமாதிரி என்னால அலைய முடியல…கைகால் எல்லாம்
நடுங்க ஆரம்பிச்சுடுது வயசாகுதுல்ல?”
“அதுக்காக மும்பைல இருந்து நான் வந்து இந்த பூனாக்காரன பார்க்கணுமா?”
“இந்த ஒரு தடவை பொறுத்துக்கோ,இனி உன்னை நான் கூப்பிடல”
“சரி சரி உடனே கோவம் வந்துருமே?,நானே போறேன்”
இப்போது பூனே ரயில் நிலையத்திலிருந்து இரண்டுகிலோமீட்டர்தூரத்தில் இருக்கிறான் மகேசு.
மடியில் கனத்தை வைத்துக்கொண்டு யாருக்குத்தான் பயமிருக்காது?
இன்னும் அரைகிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது பிரணாவ் சேட்டின் வீடு.
அப்பா சொன்னது நினைவுக்கு வந்தது “போனமா வந்தமான்னு” இருக்கணும் டா..
உனக்காக காத்துகிட்டு கிடப்பேன் சீக்கிரம் கொடுத்துட்டு
வந்துடு…
நாய்களின் குரைப்புச் சத்தம் அதிகமாகிக்கொண்டே போனது..
மகேசுக்கு நாய்கள் என்றால் ரொம்ப பயம்.. சின்ன வயதில் ஒருமுறை
தெரு நாயொன்று விரட்டியதில் கிழே விழுந்து முட்டில் ஏற்பட்ட தழும்பு இன்னும் இருக்கிறது.
சே இந்த பிரணாவ் சேட்டுக்கு அறிவே கிடையாது என் உசிர எடுக்கிறானே என்று சலித்துக்கொண்டே நடந்தான் மகேசு.
அதோ அந்த முனையில்தான் வீடு.. வீட்டை நெருங்கி மெதுவாய் கதவை
தட்டினான் மகேசு.
இருநிமிடம் கழித்து “கோன்” என்று தூக்ககலக்கத்தில் கேட்டவாறே கதவை திறந்த
சேட்டின் நெஞ்சில்தான் கொண்டுவந்ததை கொடுத்துவிட்டு
விசிலடித்துக்கொண்டே திரும்பி நடந்தான் மகேசு.
சேட்டின் அலறல் சத்தம் கேட்டு மிரட்சியுடன் தலை உயர்த்தி பார்த்தது ஒரு தெருநாய்.