பிரான்சிஸ் பீட்டரின் கோபம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: May 3, 2024
பார்வையிட்டோர்: 1,408 
 
 

திடீரென கண் விழித்த பிரான்சிஸ் பீட்டர், அடடா நீண்ட நேரம் துங்கி விட்டேன் போலிருக்கிறது. எழுந்து உட்கார நினைத்தவன். சட்டென மேலே எதுவோ தடுப்பு போட்டால் போலிருந்ததை கண்டு. எரிச்சல்பட்டான்.. எவ்வளவு நேரம். தூங்கியிருக்கிறேன் என்று தெரியவில்லை, இதில் தடுப்பு வேறு, புல்ம்பியவன். மெல்ல அதை உயர்த்தினான். மிக சுலபமாய் நகர்த்தி வைக்க முடிந்தது.

எப்படி படுத்து தூங்கியிருக்கிறேன்? வழக்கமாய் உழவு காட்டில் வந்து படுத்து தூங்குபவன், இந்த சுவற்றை ஒட்டி எப்பொழுது வந்து படுத்தேன்? வேற இடத்துல வந்து படுத்துட்டதால என்னைய எழுப்ப மறந்து விட்டார்களா? நினைத்துக்கொண்டே மேலே பார்க்க. சுவர் ஒன்று தடுப்பாக இருந்தது. அதை நகர்த்த முயற்சித்தவன் சரி வேண்டாம் என்று கைகளை வைத்து தள்ளினான். மிக சுலபமாக வெளியே வர முடிந்தது. அப்பாடா அந்த திட்டிலேயே உட்கார்ந்து சோம்பல் முறித்துக்கொண்டான். எவ்வளவு நேரம் தூங்கியிருக்கிறேன்? மீண்டும் அந்த எண்ணம் மேலோங்க, சரி கொஞ்சம் நடக்கலாம்.

நீண்ட நேரம் படுத்திருந்ததால் கால்கள் தரையில் பதியவே மறுத்தன. இருந்தாலும் சமாளித்து நிற்க முடிந்தது. தன் கால்களால் மெல்ல அடி எடுத்து வைத்து நடக்க ஆரம்பித்தான். ஆனால் தரையில் கால் பதிய வைக்கவே முடியவில்லை, சமாளித்து நடந்தான். ஏன் என்னை எழுப்பவில்லை?. பிரமீளாவாவது என்னை எழுப்பி இருக்க வேண்டுமல்லவா? பணி ஓய்வு பெற்று வீட்டில் உட்கார்ந்து விட்டால் மதிப்பு என்பது யாருக்கும் கிடைப்பதில்லை, மனதுக்குள் ஏகப்பட்ட கோபம்.

வீட்டை நோக்கி நடந்தான். வீடே அடையாளம் தெரியாமல் மாறியிருந்தது. முன்னால் காம்பவுண்ட் கட்டி கேட் போட்டிருக்கவில்லை. மாடு, கன்னு குட்டி இவைகளை வீட்டு முன் கட்டி வைத்து ‘வர போக தொந்தரவு’ என்று கட்டாமல் விட்டிருந்தான். என்னை தூங்க வைத்து விட்டு அதற்குள் எப்படி இவ்வளவு பெரிய காம்பவுண்ட் சுவரை கட்டியிருக்க முடியும்? அப்படியானாள் எவ்வளவு நேரம்தான் தூங்கியிருப்பேன்? மீண்டும் அவனுக்குள் அந்த கேள்வி.

ஒரு வேளை “கோமா” என்பார்களே அது போல இருந்திருப்பேனா? அப்படியானாலும் என் அருகில் ஒருத்தருமே இல்லையே, அப்படியே விட்டு விட்டல்லவா போயிருக்கிறார்கள். அறிவு கெட்ட …என்று ஒரு வார்த்தை வர அடக்கிக்கொண்டான்.. பிரமீளா என்ன செய்வாள், வீனித் மிரட்டியிருப்பான். வர வர அம்மாவென்ற மரியாதை இல்லாமல் மிரட்டுகிறான். அவளும் பயந்து பயந்து போகிறாள், கேட்டால் நீங்கள் ரிட்டையர்டாகி விட்டீர்களே? அவன்தானே சம்பாதிக்கும் பிள்ளை..

சம்பாதிக்கும் பிள்ளையாம், சம்பாதிக்கும் பிள்ளை, அவனுக்கு வெறுப்பு வந்தது, “காம்பவுண்ட் கேட்டை ஒரே தள்ளு தள்ளினான். “கீரிச்” சத்த்துடன் கேட் முன்னே பின்னே ஆடியது.

வாசலில் ஏதோ ஒரு தலை எட்டி பார்த்தது, வெளியே வந்தவளை பார்த்ததும் இவளை நான் பார்த்ததில்லையே? அப்படியானால் வீடு மாறி வந்து விட்டோமா? சுற்று முற்றும் பார்த்தவன் .சத்தமில்லாமல் நழுவி விடலாம், எண்ணியபடி சட்டென வெளியே வந்தான்.

மீண்டும் வீட்டு வாசலை பார்க்க.. அது யார் வாசலில் நிற்பது? அட பிரமீளாதான் நிற்கிறாள். ஆனால் நிரம்ப வயதானவள் போல தோற்றமளிக்கிறாளே? இப்படி எண்ணியவன் அப்படியானால் இது என் வீடுதான், நான்தான் இந்த பெண்ணை பார்த்து ஏமாந்திருக்கிறேன். மீண்டும் “கேட்டை திறக்க முயற்சிக்க,

“கண்ட நாய் எல்லாம் உள்ளே வந்துடும், இழுத்து கேட்டை சாத்திட்டு வா…”

இதை சொன்னது பிரமீளாவா? ஆத்திரமாய் பார்த்தான். சே..எத்தனை வருடங்கள் குடும்பம் நடத்தி என்ன பிரயோசனம்? மனுசன் கொஞ்ச நேரம் தூங்கிட்டா அவன் நாயாயிடறான். வந்த கோபத்தில் அந்த கேட்டை எட்டி உதைத்து விட்டு திரும்பி நடந்தான்.

கேட் மீண்டும் கிறீசிட்டு ஆட, ‘அதெப்படி சாத்தி விட்டு வந்த கேட் திறந்து முன்னும் பின்னும் ஆடுகிறதே’ வியப்பில் நின்றாள் அந்த பெண்.

கோபமாய் சென்று கொண்டிருந்தவன் வழியில் நண்பன் பாபுலால் வந்து கொண்டிருந்ததை பார்த்து “டேய் பாபுலால்” ஹூஹூம் அவன் திரும்பி கூட பார்க்கவில்லை, ரொம்ப வயதாகி கூனி குறுகி நடந்து போய்க்கொண்டிருக்கிறான், அவனுக்கு காது கேட்குமா என்று கூட தெரியவில்லை. அப்படி இருந்தான்.

மீண்டும் தூக்கம் கண்களை சுழற்ற அந்த காட்டுல தூங்கி எந்திரிச்ச இடத்துலயே போய் படுக்கலாம் முடிவு செய்து விறு விறுவென அங்கு சென்று அந்த திட்டில் சாய்ந்து உட்கார்ந்தவன் கறுப்பாய் அதில் ஏதோ எழுதியிருந்த்தை கூர்ந்து படித்தான்

பிரான்சிஸ் பீட்டர். பிறப்பு 1930 இறப்பு.1992 என்று போட்டிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *