நிலம் படுத்தும் பாடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: June 10, 2024
பார்வையிட்டோர்: 1,151 
 
 

மணி காலை 11.30 இருக்கலாம்

திருச்சி சாலையும், கோயமுத்தூர் பை பாஸ் சாலையும் சந்திக்கும் அந்த நான்கு முனை சந்திப்பில் திடீரென்று ஏற்பட்ட சத்தம் அங்கிருந்த அனைவரையும் பயத்தில் ஆழ்த்தி கடைக்குள் இருப்போர் ஓடி வந்து எட்டி பார்க்கவும், வாகன்ங்களில் இருந்தோர் ஒரு நிமிடம் வண்டியை நிறுத்தி எட்டி பார்க்க, லாரி ஒன்று அந்த விலை உயர்ந்த காரின் மீது மோதி கார் அப்பளமாய் லாரியின் அடியில் சிக்கியிருந்தது. படபடப்புடன் அங்கிருந்தோர் ஓடி வர காருக்குள் இருந்தவரை உடல் நசுங்கி வெளியே எடுத்தார்கள். லாரி காரின் மீது மோதிய வேகத்தில் சற்று திரும்பி சாய்ந்த நிலையில் நின்றிருந்தது. ஓட்டுநரை காணவில்லை. இறங்கி ஓடியிருப்பான் இல்லை அந்த கூட்டத்தில் வேடிக்கை பார்ப்பவன் போல் நின்றிருக்கலாம்.

விபத்தில் இறந்தவரை கண்டு பிடித்து அவ்ர்கள் வீட்டாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இறந்தவரின் பெயர் பெருமாள்சாமி, பெரும் தொழிலதிபர், மனைவி குழந்தைகள் உண்டு. மகன் அங்கிருந்த கல்லூரியில் பொறியியல் படித்து கொண்டிருக்கிறான். மகள் திருமணம் ஆகி கணவனுடன் அமெரிக்காவில் வாசம். இன்னொரு பெண் இப்பொழுத்தான் பள்ளியில் படித்து கொண்டிருக்கிறாள். காலையில் டிரைவரை வேண்டாமென்று சொல்லிவிட்டு இவரே காரை எடுத்துக் கொண்டு ஈச்சனாரி கோயிலுக்கு சென்று விட்டு வந்த பொழுது இவ் விபத்து நடந்திருக்கிறது. மோதிய லாரி பக்கத்தில் இருக்கும் ஒரு கல் குவாரியின் உரிமையாளருக்கு சொந்தமானது. கல் ஏற்றுவதற்காக குவாரிக்கு சென்று கொண்டிருக்கும்போது ஏற்பட்ட விபத்து. ஓட்டுநரை கண்டு பிடித்து கைது செய்து விட்டார்கள்.

பெருமாள்சாமியின் இறுதி சடங்கு நடந்த எரியூட்டு மயானத்திற்கு வந்த கூட்டம், நகரில் அவருக்கிருந்த செல்வாக்கை காட்டியது. பொதுவாகவே பெருமாள்சாமிக்கு அந்த நகரில் நல்ல பெயரிருந்தது. ரியல் எஸ்டேட், மற்றும் புகழ்பெற்ற காரின் டீலராகவும் இருந்தார். ஒரு சில காவல்துறையின் உயரதிகாரிகளும் கூட வந்திருந்தனர். காவல் துறை நடத்தும் மக்கள் நலன் சார்ந்த பொது நிகழ்ச்சிகளுக்கு இவர் பொறுப்பேற்று நடத்தி கொடுத்திருப்பதால் அங்குள்ள அதிகாரிகளின் நட்பையும் பெற்றிருந்திருக்கிறார்.

பெருமாள்சாமி விபத்தில் மறைந்து ஒரு மாதம் ஓடியிருக்கும், திருச்சி செல்லும் பாதையில் இருக்கும் காவல் நிலையத்தில் அப்பொழுதுதான் வந்து உட்கார்ந்த இன்ஸ்பெக்டர் தனக்கு வந்த கடிதங்களை பிரித்து படித்து பார்க்க ஆரம்பித்தார். அதில் ஒரு கவர் அனுப்புநரின் எந்த முகவரியும் இல்லாமல் பெறுநரின் முகவ்ரியும் கிறுக்கியது போல இவரது பதவியையும், அந்த காவல் நிலையத்தின் முகவரியையும் எழுதி இருந்தது.

கேள்விக்குறியான சிந்தனையுடன் அந்த கவரை பிரித்து பார்த்தார். நான்கே வரிகளில் எழுதியிருந்தது “பெருமாள்சாமியின் மரணம் விபத்தல்ல, அது திட்டமிட்ட கொலை”. இதை படித்த்தும் நெற்றியை சுருக்கினார். பெருமாள்சாமி உடனடி ஞாபகம் வரவில்லை. பிறகு ஞாபகம் வர கடிதத்தை மேலும் கீழுமாய் பார்த்தார். கூரியர் சர்வீஸ் முத்திரை குத்தப்பட்டிருந்தது. அப்படியானால் நமக்கு வரும் தபால்கள் இந்த கூரியர் மூலம் வருவதை தெரிந்து கொண்டே அனுப்பியிருக்கிறார்கள்..

ஏட்டுவை கூப்பிட்டார். இந்த கவரை யார் கொண்டு வந்து வைத்தது.? ஏட்டு யோசித்தவர் தெரியலை சார் எப்பவும் வர்ற கூரியர் பையன்தான் வந்தான். இன்ஸ்பெக்டருக்கு வந்த கடிதாசி எல்லாம் அந்த டேபிள்ள வச்சுட்டு போப்பான்னு சொன்னேன். தனது செல்போனை எடுத்தவர் கூரியர் சர்வீசுக்கு போன் செய்தார்.

போன் எடுக்கப்பட தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு கவரின் கூரியர் எண்ணை சொல்லி அது எங்கிருந்து அனுப்ப பட்டிருக்கிறது என்று விசாரித்தார். அது காந்திபுரத்து ப்ராஞ்சில் இருந்து அனுப்பியதாக தெரிவித்தார்கள்.

அடுத்தடுத்த வேலைகள் தொடர்ந்து வர இதை பற்றிய நினைவுகள் மங்கி விட்டன. மதியம் சாப்பிடும்போது ஞாபகம் வந்தது. ஏட்டுவை கூப்பிட்டார். ஒரு மாத்த்திற்கு முன் ஏற்பட்ட விபத்தின் பைலை எடுத்து வர சொன்னார். அதில் பெருமாள்சாமியின் பெயரை கண்டுபிடித்து எடுத்தவர், அதை படிக்க ஆரம்பித்தார். அதில் கொலை என்பதற்கான எந்த சந்தேகமும் காணப்படவில்லை. இது மொட்டை கடிதாசியாக கூட இருக்கலாம், அல்லது இந்த கேசை எடுப்பது இவர்களுக்கு லாபமாக கூட இருக்கலாம். பைலை மூடி வைத்தவர் எல்லாவற்றையும் கொண்டு போய் வைக்க சொன்னார்.

ஒரு வாரம் ஓடியிருந்தது, மீண்டும் அது போல் ஒரு கடிதம் அவருக்கு வர நேராக காந்திபுரம் வந்தவர் குறிப்பிட்ட கூரியர் சர்வீஸ் அலுவலகத்துக்கு வந்து இந்த கவரை அனுப்பியவர் யார் என்று விசாரித்தார். அவர்களுக்கும் விவரம் தெரியவில்லை. ஏதோ ஒரு பையன் கொண்டு வந்து கொடுத்து அனுப்ப சொன்னார்கள் என்று சொல்லி பணம் கட்டினான்.என்று அங்கிருந்த பெண் சொன்னாள்.

சரி பார்ப்போம் நஞ்சப்பா ரோடு வந்து பார்க் கேட் வ்ழியாக ஜீப்பை திருப்பும் போது கவனித்தார். அன்று பெருமாள்சாமி விபத்தில் சம்பந்தபட்டிருந்த லாரி நின்று கொண்டிருந்தது. ஜீப்பை மெல்ல ஓரம் கட்ட சொன்னவர் அந்த லாரியை நோக்கி நடந்தார்.

லாரி ஓட்டுநர் இருக்கை கதவை கீழ் நின்று தட்டவும் எட்டி பார்த்த டிரைவர் போலீஸ் உடையை பார்த்த்தும், சார் இந்தா வண்டியை எடுத்துடறேன் சார், இங்க ஜல்லியை கொட்டறதுக்கு வந்தேன் சார் முடிஞ்சது, பதில் சொன்னவனை பரவாயில்லை இறங்கி வா, என்று சொன்னார். இறங்கி வா என்று சொன்னவுடன் மிரண்டு போன அவன் அழுவது போல முகத்தை வைத்து சார் தப்பு தான் சார் டிராபிக் இருக்கற இட்த்துல வண்டியை நிறுத்துனது, மன்னிச்சுக்குங்க சார், குழறினான். அது எல்லாம் ஒண்ணுமில்லை, சும்மா வா அவன் தோள் மீது கை போட்டு மெதுவாக ஒரு டீ கடை பக்கம் அழைத்து வந்தார்.

இது வரை எதிர்பார்க்காத வகையில் ஒரு போலீஸ் அதிகாரி அவனுக்கு டீ வாங்கி கொடுத்து குடிக்க சொன்னதை நம்பாதவன் போல் அவரையே பார்த்தான். சும்மா குடி, அவரும் ஒரு டம்ளரை வாங்கி கொண்டவர், ஆமா அன்னைக்கு ஆக்சிடெண்ட்டுல மாட்டின வண்டிதான இது? அவன் டீயை இரசித்து குடித்து கொண்டிருந்தவன், ஆமாங்க சார், எங்க முதலாளி வண்டியை கோர்ட்டுல இருந்து வக்கீல் மூலமா எடுத்துட்டாருங்க, கொஞ்சம் பெருமையாக சொன்னான்.

நீதான் அன்னைக்கு ஓட்டிட்டு போனயா? இல்லைங்க சார், நான்தான் எப்பவும் போவேன், அன்னைக்கு என்னமோ அந்த ராசன் நான் உன் வண்டியை எடுத்துட்டு போறேன்னு எடுத்துட்டு போயி பாவம் அநியாயமா இரண்டு உசிரை பறிச்சிட்டான். இது வரைக்கும் இந்த லாரி ஒரு ஆக்சிடெண்ட்டு கூட பண்ணுனதில்லை, இவனால இப்படி ஆகிப்போச்சு, கவலையுடன் சொன்னான்.

ராசன் என்ன பண்ணறான் இப்ப? அவனுக்கென்ன முதலாளி காரை ஓட்டிகிட்டு இருக்கான். எப்பவும் அவன்தான் அவர் காரை ஓட்டுறவன். இப்ப எங்கிருப்பான்?

டீ குடித்துக்கொண்டிருந்தவன் சற்று உஷாரானான். சார் அவனை எதுக்கு தேடறீங்க?

இல்லை இந்த ஆக்சிடெண்ட் கேசுல அவன் கிட்டே ஒரு கையெழுத்து வாங்கணும்.

அதுவெல்லாம் வக்கீல் பாத்துகிட்டாருன்னு சொன்னானே, உஷாராய் பதில் சொன்னான்.

நீ அவனை பத்தி சொல்லிட்டமேன்னு பயந்துக்கறயா? சிரித்து கொண்டே கேட்டார். மெல்ல தலையாட்டினான். கவலைப்படாதே, உன் பேச்சே வராது, அவன் கிட்டே ஒரு கையெழுத்து வாங்கணும் அவ்வளவுதான் சந்தேகம் வராதவாறு பதில் சொன்னார். அவனை சாயங்காலம் பைபாஸ் கார்னர்ல இருக்கற டாஸ்மார்க் கடையில பாக்கலாம், சொல்லி விட்டு நான் போகட்டுமா என்பது போல பார்த்தான். நீ போ அவனை தோளில் தட்டி கொடுத்து அனுப்பி வைத்தார்.

மாலை ‘ராசன்’ பாட்டிலை வாங்கி வாயில் ஊற்ற போகுமுன், அதை பறித்து கையில் வைத்து ஒருவன் நின்றான். ராசன் யார்றா அவன் என் கையில இருக்கற பாட்டிலை புடுங்கறது? முறைப்புடன் பார்த்தான். என்ன தோஸ்து என்ன அடையாளம் தெரியலையா நான்தாம்பா பஷீர், ஆனைமலையில ஒண்ணா லாரி ஓட்டிகிட்டு இருந்தோமே. ராசன் தலையை சிலுப்பினான். ஆனைமலையில் லாரி ஓட்டியது ஞாபகம் இருக்கிறது. ஆனால் பஷீர் என்று ஒருவனையும் சந்தித்த்தாக ஞாபகம் வரவில்லை.

என்னப்பா பத்து வருசம் ஆயிடுச்சுன்னா எல்லாம் மறந்துடுமா? சரி விடு, இந்த இந்த பாட்டில் என்ன கோட்டரா? இதெல்லாம் தூக்கி கடாசிடலாம், நான் ஆப்பே வச்சிருக்கேன், தன் இடுப்பின் மறைவில் இருந்து எடுத்து காட்டினான். வா அந்தல்ல போயிடலாம், சும்மா சிக்கன் வருவலும் செஞ்சு வச்சிருக்காங்க, எனக்கு தெரிஞ்ச ஒரு இடத்துல, காதும் காதும் வச்சமாதிரி அடிச்சுட்டு வந்திடலாம், அழைத்தான்.

ராசனுக்கு இவன் யாரென்று ஞாபகம் வராவிட்டாலும் அவன் காட்டிய ஆப் பாட்டில் கவர்ந்தது, அது போக சிக்கன் வருவல் ஒரு இடத்தில் தயாராக இருப்பதாக சொன்னதும் எச்சில் ஊறியது, ஆனால் காசு..அப்பா ஆளை விடு என் கிட்டே காசு இல்லை, உதட்டை பிதுக்கி சொன்னவனின் தோளை தட்டிய பஷீர் என்னப்பா ரொம்ப நாள் கழிச்சு உன்னைய பாக்கறேன், காசு கேப்பனா? நீ என் கூட வா, இந்தா இந்த கோட்டரையும் கையில வச்சுக்க, இந்த ஆப்பையும் அங்க வந்து தாறேன், அவ்னை கையை பிடிச்சு அழைக்க இதற்கும் மேல் எந்த மறுப்பும் சொல்லாமல் அவன் கூடவே நடந்தான்.

நல்ல போதை ஏற ஏற தடுமாறிக் கொண்டிருந்த ராசனை மெல்ல அணைத்து பிடித்த பஷீர் ராசு உனக்கு பெரிய ஆக்சிடெண்ட் நடந்துடுச்சாமே? யாரு சொன்னா?

அதுதான் பேப்பர்ல எல்லாம் வந்ததாமே, எனக்கு கூட முதல்ல ஆளு யாருன்னு தெரியலை, அப்புறம் பார்த்தா உன் பேரு போட்டிருக்காங்க, எனக்கு நம்பிக்கையில்லை, நம்ம டீமுலயே உன்னைய் மாதிரி யாரும் லாரி ஓட்ட முடியாது, அப்படி இருக்கற நீ போய் அந்த காரை மோதி சே..சே எனக்கு நம்பிக்கை இல்லையப்பா…

கெக்..கெக்..கெக்..சிரித்தான், ராசன். உனக்கு தெரியுது, இந்த முதலாளிக்கு தெரியலையே, ஏண்டா இப்படி பண்ணிட்டே அப்படீன்னு வைஞ்சாரு. நான் கம்முனு இருந்துட்டேன், ஏனா அன்னைக்கு அவருகிட்ட நான் லாரியை ஓட்டறேன்னு வாங்கிட்டு போயித்தான் அது நடந்துடுச்சு. மீண்டும் கெக்..கெக்..கெக்..கெகலிட்டு சிரித்தான்.

பஷீர் அது எப்படிப்பா நீ ஓட்டிகிட்டு போயி அப்படி நடந்துச்சு? ஐயா தெரியாம மோதினாத்தானே? மீண்டும் கெக்கலிட்டு சிரித்தான். நிசமாவா? அதானே பார்த்தேன் ராசனாவது ஆக்சிடெண்ட் பண்னறதாவது, எனக்கு தெரியும், இதுக்கு ஏதோ ஒரு காரணம் இருக்கும்..பஷீர் போதையில் தனக்குள் முன்ங்கினான்.

ஸ்..ஸ்..இதை யார்கிட்டேயும் மூச்சு விடக்கூடாது, எனக்கு முக்கியமான ஆளு சும்மா பள பளன்னு நோட்டா கொண்டு வந்து கொடுத்துச்சு, அப்படியே அமுக்கிட்டேனில்லை, மீண்டும் சிரித்தான்.ஸ்..இதை யார்கிட்டேயும் சொல்லாதே..சரியா. அவன் தலை கவிழ்ந்தது.

ராசன் பயந்து போயிருந்தான். இன்ஸ்பெக்டர் மெல்ல் அவன் தோளை தட்டி ஒண்ணும் பயப்படாதே, உன் கிட்டே யாரு வந்து இன்னைக்கு வண்டிய ஓட்டிட்டு போக சொன்னது. உங்க முதலாளியா?

அழுது விடுவான் போல உட்கார்ந்திருந்த ராசன் சார் தயவு செஞ்சு எங்க முதலாளி கிட்டே சொல்லிடாதீங்க சார், அவருக்கு எதுவும் தெரியாது, அவரோட பிரண்டு ராமதாஸ் சார்தான் என் கிட்டே கேட்டாரு. அந்த கார் மேலே மோதி நிறுத்த முடியுமான்னு, அதுக்கு நிறைய பணமும் கொடுத்தாரு. நான் கூட சொன்னேன், ஐயாவுக்கு கார் ஓட்டிகிட்டிருக்கறவன், எப்படி லாரிய ஓட்டறேன்னு கேட்கறது? அதுக்கு ஐயா நான் சொல்றேன், அப்படீன்னு சொன்னதுனால முதலாளி அன்னைக்கு என்னைய லாரிய எடுக்கச் சொன்னாரு.

சரி அவரு அந்த வழியாத்தான் வருவாரு அப்படீன்னு யார் உனக்கு சொன்னது?

அதுவும் அவருதாங்க சொன்னாரு. இந்த பக்கம் காத்திருந்து நீ வளையும்போது கரெக்டா அது மேல மோத சொன்னாருங்க.

அன்று ராமதாசுக்கு காலையில் எழும்போதே மனசு சரியில்லாமல் இருந்தது, எப்பொழுதும் இப்படி இருப்பதில்லை, அன்று பெருமாள்சாமி ஆக்சிடெண்டில் இறக்கும்போதும் இப்படித்தான் இருந்தது. நல்ல வேளை எல்லாம் நல்லபடியாக முடிந்தது. ராசனை கொஞ்சம் கவனிக்க வேண்டும், ஏதாவது உளறினாலும் உளறிவிடுவான். வாசலில் யாரோ நிற்பது போல தட்டுப்பட, நடுத்தர வயதுள்ள ஒருவர் உள்ளே வந்தார்.

என் பேரு பாரி நம்ம சொந்தக்காரனுக்கு கிணத்துக்கடவுல மெயின் ரோட்டுல பத்து ஏக்கரா இடம் இருக்கு. அதை கொஞ்சம் ஏன் பேருக்கு மாத்தி கொடுக்கணும். ராம்தாஸ் வந்தவரை மேலும் கீழும் பார்த்தார். ஐயா என்ன சொல்றீங்கன்னு தெரியலை. இடம் மாறி வந்துட்டீங்கன்னு நினைக்கிறேன். நான் ரியல் எஸ்டேட் பிசினஸ் எல்லாம் ப்ண்ணறதில்லை. அது போக இந்த பேர் மாத்தற வேலை எல்லாம் இங்க செய்யறதில்லிங்க.

இல்லே உங்களால முடியும்னு நம்பிக்கையான ஒரு பார்ட்டி சொல்லுச்சு, நீங்க ஆளை எல்லாம் முடிக்க வேண்டாம், கொஞ்சம் தட்டி கிட்டி வச்சு மிரட்டுனாலே போதும் பயந்து என் பேருக்கு மாத்தி கொடுத்துடுவான். எனக்கு சொந்தக்கார பையன் தான். பங்காளி முறை வேணும். விலை கொடுத்துடலாமுன்னுதான் ஞாயமா நினைச்சேன். அவன் யானை விலை குதிரை விலை சொல்றான். அதுதான் சரி இனி நமக்கு அன்பு உதவாது அப்படீன்னு முடிவு பண்ணி உங்க கிட்டே வந்திருக்கேன்.

ஐயா மறுபடி சொல்றேன் இந்த மாதிரி வேலை எல்லாம் இங்க நான் செய்யறது கிடையாது. எனக்கு பிசினசே வேறே. எனக்கு எல்லாம் தெரியுமுங்க, நீங்க என்ன பிசினஸ் பண்ணறீங்கன்னு, பெருமாள்சாமிய கூட அதுலதான முடிச்சீங்க.

ராம்தாஸ் கோபமானார், என்ன பினாத்தறீங்க, இப்ப நீங்க எந்திரிச்சி போறீங்களா, இல்லை போலீசை கூப்பிட்டு அனுப்பவா? சரி கிளம்பறேன், ஆனா அந்த டிரைவர் ராசன் இப்ப என் கிட்டே தான் இருக்கான், அவனை எப்படி கறக்க வச்சு உங்களை மாட்டி விடறதுன்னு எனக்கு நல்ல தெரியும். வரட்டுமா?

ஐயா கொஞ்சம் நில்லுங்க, என்ன சொன்னீங்க, ராசனா, அவனுக்கு எனக்கும் என்ன சம்பந்தம்? சும்மா சும்மா கதை விடாதீங்க, நான் சொல்ற் டீலுக்கு ஒத்து வர்றதா இருந்தா ராசனை சத்தமில்லாம அமுக்கி உங்க கிட்டே கொடுத்திடுவேன். இல்லையின்னா ..

சரி சரி ஒத்துக்கிறேன். முதல்ல இடம் எப்படி? உங்க பங்காளிகிட்டே பேசணும், அப்புறமாத்தான் மத்ததெல்லாம் செய்ய முடியும்.சரி கிளம்புங்க, வெளியே கார் நிக்குது.

இரண்டு நாட்கள் ஓடியிருந்தது, ராம்தாஸ் சுருண்டு போய் நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். நீங்க உண்மையை சொல்லிட்டா இந்த டீலிங்க்ல தப்பிச்சுக்கலாம், இல்லையின்னா என்னைய குறை சொல்லாதீங்க, மென்மையாய் சொன்னார். எனக்கு மேலிடத்துல இருந்து கிடைச்ச தகவல் உங்களை முடிக்க சொல்லி அவ்வளவுதான் என்ன சொல்றீங்க? ராம்தாசை அழைத்து வந்த அந்த நடுத்தர வயது மனிதர்..

ஐயா எனக்கு ஒண்ணும் தெரியாது , என் கிட்டே அந்த டிரைவரை ஏற்பாடு மட்டும்தான் பண்ண சொன்னாங்க, நான் அவங்க முதலாளி கிட்டே சொல்லி அந்த டிரைவரை லாரியில அன்னைக்கு ஏற சொன்னேன் அவ்வளவுதான் ஐயா. பணம் எல்லாம் எனக்கு ஒருத்தர் வந்து கொடுத்து டிரைவருக்கு செட்டில்மெண்ட் பண்ண சொன்னாங்க அவ்வளவுதானுங்க ஐயா…

சரி..உங்க கிட்டே சொன்னவரை அடையாளம் சொல்லுங்க.

அவர் பேர் கோமகன் ஐயா. நம்ம மினிஸ்டருக்கு சொந்தக்காரருங்க ஐயா.. ஒரு வாட்டி என்னைய சந்திச்சாருங்க. உங்கனால எனக்கு ஒரு காரியமாகனுமே அப்படீன்னாருங்க அவருதான் இந்த ஐடியாவெல்லம் கொடுத்தாரு. நான் கூட கேட்டேன், சார் பெருமாள்சாமி நல்ல மனுசனாச்சே அப்படீன்னேன். அவன் நல்ல மனுசந்தான் ஆனா அவன் கிட்டே இருக்கற நிலம் பல கோடி ஆச்சே, அதுதானே

இப்ப அவனுக்கு எமனா இருக்குது. நான் என்ன பண்ணட்டும்? எனக்கு கொடுக்கற அசைண்மென்ட் அப்படி இருக்கே. அப்படீன்னாருங்க ஐயா. .

சரி நீங்க கோமகன் கிட்டே பேசுங்க, இந்த கொலைய கண்டு பிடிச்சு ரேட் பேசுது ஒரு பார்ட்டி. அதுகிட்டே, எல்லா எவிடென்சும் வச்சிருக்காங்க, என்ன பண்ணலாம்? அப்படீன்னு சொல்லுங்க. முக்கியமான அவரோட மேலிடத்துக்கும் மேலிடம் என்னைய அனுப்பிச்சிருக்குன்னு சொல்லுங்க புரியுதா.

அன்று இரவு பத்திருபது அடியாட்களுடன் கோமகன் சடாரென்று ராம்தாசை அடைத்து வைத்திருந்த அறையை உடைத்து உள்ளே வந்தார்கள். அங்கு சுருண்டு விழுந்து கிடந்த ராம்தாசை தலையை பிடித்து தூக்கியவர் கத்தினார். யார் அவன்? யார் உன்னைய மிரட்டினது? மினிஸ்டருக்கு சொந்தக்காரன்னு தெரிஞ்சும் இப்படி பண்ண்றானா? யாரு அந்த பெரிய ஆளுன்னு பாத்துடலாம். பேசும்போதே செல் போன் ஒலித்தது போனை எடுத்தவர் சரிங்க சரிங்க..பவ்யமாய் போனை வைத்து வாங்க போலாம், சொல்லிவிட்டு மேலே பார்த்தார். அவர்களை சுற்றி கேமராவுடன் பத்திரிக்கையாளர்கள் நின்று கொண்டிருந்தனர்.

பெருமாள்சாமியின் வீட்டில் இன்ஸ்பெக்டர் சொல்லிக்கொண்டிருந்தார். என்னை மன்னிச்சிடுங்கம்மா, இது திட்டமிட்ட கொலைதான்னு தெரியுது. ஆனா எந்த எவிடென்சும் இல்லாம பண்ணிடுவாங்க. கோர்ட் கேசுன்னு போனா உங்க குடும்பத்தை முடிச்சிடுவாங்க. ஏன்னா அவங்க பெரிய ஆளுங்களை கைக்குள்ள போட்டுகிட்டிருக்காங்க.

அவரோட பல கோடி மதிப்புள்ள இடத்தை மட்டும் மீட்டு உங்க கிட்டே கொடுத்துட்டேன். அதுவும் இந்த கேசை எடுக்காம இருக்கணும்ங்கற டிமாண்டுலதான். நான் செய்யறது தப்புத்தான். என்ன செய்ய சொல்றீங்க. எனக்கு ஒரு புரோமோசனோ, இல்லை ஊதியமோ உயரலாம் அவ்வளவுதான், ஆனா உங்க குடும்பம் காணாமயே போயிடும். நான் சொல்ற கடைசி ‘அட்வைஸ்’ என்ன்ன்னா பேசாம அந்த இடத்தை அடமானம் வச்சு பேங்குல பணத்தை வாங்கி அதைய வேற பேங்குல டெபாசிட் பண்ணிட்டு சிவனேன்னு உட்கார்ந்துக்குங்க. இல்லையின்னா வித்து தொலைச்சு அந்த பணத்தை பேங்கில போட்டுட்டு உடகார்ந்துக்குங்க அவ்வளவுதான் பண்ண முடியும்.

லாரியை கழுவிக்கொண்டிருந்த பையன் யாரோ தோளில் தட்டுவதை உணர்ந்து திரும்பி பார்த்தான். நடுத்தர வயது மனிதர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். சார் முகத்தில் பதட்டம். பயப்படாதே..உன் மனசாட்சிப்படி எனக்கு விஷயத்தை சொல்லிட்டே மொட்டை கடுதாசி மூலமா. நானும் என் கடமைய செஞ்சுட்டேன். சார் அன்னைக்கு எங்க டிரைவர் கூட பேசிகிட்டிருக்கும்போது கேட்டுகிட்டிருந்தேன். அன்னைக்கு என்னைய வண்டியில வரவேணாமுன்னுட்டாங்க, மனசு கேக்கலை சார்..அதான் உங்களுக்கு..அவன் தோளை தட்டி விட்டு அவனை தாண்டி நடந்து சென்றார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *