நந்திங் டு ஒர்ரி

0
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 23,054 
 
 

“”எனக்கு நாளை நடக்கப் போவது இப்போதே தெரிகிறது. சில சமயம் அடுத்த நிமிஷங்களில், ஏன் நொடிகளில் நடப்பது கூடத் தெரிகின்றது” என்று மிக மிகப் பதற்றத்துடன் உட்காருவதற்கு முன்னமே படபடவெனப் பேசியபடியிருந்தவனைப் பார்த்து,

“”முதலில் நீங்கள் உட்காருங்கள்.. ரிலாக்ஸ்” என்று தண்ணீர் க்ளாஸை அவன் முன் நகர்த்தினேன். அவன் மிகுந்த ஆயாசத்துடன் தண்ணீரை எடுத்து “மடக்…மடக்’கெனக் குடித்தான். சுமார் முப்பது வயதிருக்கும். கண்களின் கீழ் கருவளையமாய் இருந்தது.

நந்திங் டு ஒர்ரிநான் ஒரு மனநல மருத்துவன். என் பெயர் ஆத்மநாம். என் அப்பா கவிஞர் ஆத்மாநாம் பைத்தியம். அதனால் அந்தப் பெயர். கடைசி பேஷண்டாக வந்திருக்கிறான். மெல்ல எதிர் சீட்டில் தண்ணீரைக் குடித்து விட்டு என்னையே பார்த்துக் கொண்டிருந்தவனை ஆழ்ந்து பார்த்தேன். அவன் கருவளையங்களை வைத்தே சொல்லிவிட முடியும் அவன் ஒழுங்காய்த் தூங்கிப் பல நாட்களாகியிருக்கும் என்று. இக்கால இளைஞர்களுக்கு ஸ்ட்ரெஸ் லெவல் அதிகம். அவனுடைய ஃபைலை ஒரு பார்வை ஓட்டினேன். பெயர் நரேன். வேலை சாஃப்ட்வேர். எதிர்பார்த்தது. ம்… சொல் என்பதுபோல அவனைப் பார்த்தேன்.

“”டாக்டர்… நான் ஏற்கனவே சொன்னதுதான் நடக்கப்போவது தெரிகிறது. அதுவும் விபத்துக்கள். முதலில் நான் இதைக் கண்டுகொள்ளவேயில்லை. அதாவது அப்போது இதுதான் பிரச்னை என்று புரியவில்லை. முதல் முறை என் அம்மா எனக்கு “பை…’ என்று சொல்லிவிட்டு அவளுடைய கைனடிக்கை கிளப்பும்போது தோன்றியது ஏதோ ஆயிடும் போல என்று என்னையறியாமல் “ஜாக்கிரதை’என்று சொன்னேன். அம்மா சந்தோஷமாகி, “என் செல்லக்குட்டிக்கு எவ்வளவு அக்கறை பாருன்னு’ வண்டியை நிறுத்தி என்னைத் தூக்கி முத்தமிட்டுப் போனாள். அடுத்த சில நிமிடங்களில் ரோடு முனையில் தண்ணி லாரி ஏறி கூழாய் கிடந்தாள். நான் சொல்லாமல் இருந்திருந்தால் அந்த சில நிமிடங்களில் தப்பித்திருக்கலாம். அதெல்லாம் எனக்கு அப்போது புரியாத வயது. ஆறு வயசிருக்கும்.

அதன் பிறகு என் திருமணத்துக்கு முன்பு ஒரு சப்வேயில் நுழையும் முன்பு பளிச்சென மின்னல் போலத் தோன்றியது, நான் விபத்துக்குள்ளாகப் போகிறேன் என்று. நினைத்து முடிப்பதற்குள் கருப்பாய் ஒரு உருவம் என் வண்டியின் முன் காற்றைவிட வேகமாய்க் குறுக்கே கடக்க, சட்டென ப்ரேக் பிடித்ததில் வண்டி ஸ்கிட் ஆகி அப்படியே தரையில் தேய்த்துக் கொண்டே சில அடிதூரம் இழுத்துக் கொண்டு சென்றது. பிராக்சர் இல்லாமல் பிழைத்தது பெரிய விஷயம். விழுந்து எழுந்த அடுத்த நொடி, என் பைக்கை ஒரு பஸ் தட்டிவிட்டுச்சென்றது.”

அவன் பேசும்போது முகத்தில் பல உணர்வுகள் தாண்டவமாடின. இம்மாதிரியான பிரச்னைகள் உள்ளவர்கள் எப்பவுமே அப்படித்தான். சாதாரண விஷயத்துக்குக் கூடப் பெரிதாய் ரியாக்ட் செய்வார்கள்.

“”அதற்குப் பிறகு ஒரு பெரிய விபத்து. பாண்டிச்சேரியிலிருந்து சென்னைக்கு ஈ.சி.ஆரில் ஒரு திருமணம் முடிந்து நண்பர்களுடன் வந்த போது வண்டியில் எல்லோரும் சந்தோஷமாய் இருக்க, டிரைவர் வண்டியை ஓவர்டேக் செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தபோது எனக்குள் மீண்டும் அதே மாதிரியான அழுத்தம் தோன்ற, டிரைவர் ஜாக்கரதை என்று கத்த நினைப்பதற்குள், வண்டியின் பின்னால் இடிக்கப்பட்டு நான்கைந்து முறை, 120 கிலோமீட்டர் ஸ்பீடில் குட்டிக்கரணம் அடித்தது. ஒரு பெரிய ஆச்சர்யம் என்னவென்றால் அவ்வளவு பெரிய விபத்து யாருக்கும் பெரிய அடி ஏதுமில்லை. ஆனால் எங்களை இடித்த வண்டியில் இருந்தவர்களுக்கு நல்ல அடி, ஒரு ஆள் போய்விட்டான். இதன் பிறகு பல விபத்துகள் சின்ன சின்ன விபத்திலிருந்து பெரிய விபத்துகள் வரை எனக்கு முன்னமே தெரிகிறது. என் வரையில் தெரிந்து கொண்டிருந்த விஷயங்கள் இப்போது மற்றவர்கள் போகும் வண்டியைப் பார்த்தாலும் தோன்றுகிறது. அது நடக்கவும் நடக்கிறது.

சமீபத்தில் நடந்த மங்களூரு விமான விபத்தன்று என் பாஸை ரிசீவ் செய்வதற்காக ஏர்போர்ட்டில் இருந்தேன். அரைவல் அறிவிப்பு வந்தவுடன் விபத்தாகிவிடுமோ என்ற எண்ணம் என்னை அழுத்தியது. அய்யோ… கடவுளே இருக்கக்கூடாது… என்று மனத்துள் அலறி முடிப்பதற்குள் விமானம் விபத்துக்குள்ளாகி அவர் இறந்து போனார்.”

கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தது. இம்மாதிரியான பல கேஸ்களை நான் பார்த்திருக்கிறேன். கனவில் நடப்பது நிஜத்திலும் நடக்கிறது என்பவர்களை, காதுக்குள், மண்டைக்குள் குரல் கேட்கிறது, பேசிக் கொண்டே வேறு யாரோடோ பேசிக் கொள்வது போலத் தனியே பேசும்… ஆனால், அதை ஒத்துக் கொள்ளாத ஆட்கள் என்று கேஸ்கள் பலவிதம். மனிதனின் மனத்தில் தான் எத்தனை குழப்பங்கள், படிமாணங்கள், கற்பனைகள். அவற்றின் பலமும் அதுதான், பலவீனமும் அதுதான்.

“”விபத்து நடக்கப்போகிறது என்று யாராவது உங்கள் காதுகளில் சொல்கிளார்களா?”

“”இல்லை.. அப்படியெல்லாம் ஒன்றும் கேட்பதில்லை. நிச்சயமா ஹலூசினேஷன் கிடையாது டாக்டர்.”

தீஸ் யங்ஸ்டர்ஸ்… எங்கிருந்தாவது நான்கைந்து வார்த்தைகளைத் தெரிந்து கொண்டு நம்மிடமே பந்தா காட்டுவது.

“”ஓகே.. பின் எப்படி தோன்றும்?”

“”அம்மாதிரியான நேரல்களில் உள்ளிருந்து ஒரு அலறல் எழும்பும்; ஆனால் குரல் வெளியே வராது. யாரோ வந்து என் குரல் வளையை அழுத்துவது போல இருக்கும். வியர்த்து வழியும். அதற்குள் விபத்து நடந்து விடுகிறது. அட்லீஸ்ட் என் குரல் வந்தாலாவது மற்றவர்களைக் கத்திக் காப்பாற்றியிருக்கலாமோ என்ற ஆதங்கம், துக்கம், ஒரு குற்ற உணர்ச்சி என்னைத் தூங்க விடாமல் படுத்துகிறது. நான் தூங்கிப் பல நாட்கள் ஆகிறது. ரோடில் நடக்கவே பயமாயிருக்கிறது. யார் வண்டியோட்டினாலும் பின்னால் உட்கார பயமாயிருக்கிறது. பலமுறை நான் இரவு நேரத்தில் பயணம் செய்யும்போது டிரைவர் தூங்கி விடுவானோ, வண்டி ஆக்சிடெண்ட் ஆகிவிடுமோ என்று தூங்காமல் வந்திருக்கிறேன். முடியலை டாக்டர்… எனக்கு எதாவது செய்யுங்கள். இல்லை என்றால் பயத்திலும், குற்ற உணர்ச்சியிலும் செத்துவிடுவேன்.”

அவனுக்குப் பெரிதாய் மூச்சிரைத்தது. வியர்த்துக் கொட்டியது. கண்டிப்பாய் பி.பி. ஷூட்டப் ஆகியிருக்கும். நிச்சயம் இவனுக்கு ட்ரீட்மெண்டும், கவுன்சிலிங்கும் தேவை. மணியைப் பார்த்தேன். பதினொன்று ஆகியிருந்தது. கிளம்ப வேண்டும். சென்னையின் உச்சபட்ச சத்தத்திலிருந்து விடுபடுவதற்காகவே ஊருக்கு வெளியே ஒரு தனி பங்களா… அரை மணி நேரப் பயணம்.
“”நரேன்… ஓகே. நீங்கள் நாளை மாலை ஆறு மணிக்கு மீண்டும் வாருங்கள்… சில டெஸ்ட்டுகள் எடுப்போம். உங்களுடன் பேச வேண்டும். நிறையப் பேச வேண்டும். நீங்கள் குற்ற உணர்ச்சியடைய வேண்டிய அவசியமேயில்லை. சில விஷயங்களை யாராலும் தடுக்க முடியாது. யூ ஆர் நாட் ரெஸ்பான்ஸிபிள் யு நோ… இட் ஹாப்பன்ஸ்… உங்களுக்கு சில ட்ராங்க் வலைசர் தருகிறேன் நிம்மதியாக தூங்குங்கள். ஒரு வாரம் ஆபீஸுக்கு லீவு போடுங்கள். ரெஸ்ட் எடுங்கள்.. உங்களது பயம் சில போபியா வகைகளுக்குள் வர கூடியதுதான். சரிசெய்து விடலாம். நத்தில் டூ ஒர்ரி.. சிம்பிள்.. ஓகே… ஸீ யூ டுமாரோ” என்று அனுப்பி வைத்துவிட்டு என் ப்ரீப்கேஸை எடுத்துக் கொண்டு அன்றைய மொத்த கணக்கையும் பார்த்துவிட்டு… கிளம்பி கார் எடுக்க வந்தபோது, நரேன் வாசலிலேயே நின்றிருந்தான்.

“”என்ன நரேன் போகலையா?”

“”இல்லை டாக்டர்… பயமாயிருக்கிறது… ஆட்டோவும் கிடைக்கவில்லை.”

அவன் கண்களில் பயம் தெரிந்தது. இப்படியே தனியே விட்டுப் போனால் காலை வரை இங்கிருந்து கிளம்ப மாட்டான் போலிருந்தது. இம்மாதிரியான ஆட்களுக்கு வெளிச்சம் தைரியத்தைக் கொடுக்கும். “”சரி, உங்க வீடு எங்கே…?” என்றதும் சொன்னான். நான் வீட்டுக்குப் போகும் வழிதான். “”என் மீது நம்பிக்கையிருக்கிறதல்லவா.. என்னுடன் வருகிறாயா?” பலமாய் தலையாட்டினான்.

நான் வண்டியை ரிவர்ஸ் எடுத்து இடதுபக்கக் கதவை திறந்துவிட்டு நிறுத்தினேன். வண்டியில் ஏறியவுடன் பரபரவென சீட்பெல்டை எடுத்து மாட்டிக்கொண்டு, “”ம்.. போலாம் சார்..” என்றான். வண்டியை சீரான வேகத்தில் ஓட்டினேன். வழக்கமாய் நான் நல்ல வேகத்தில் ஓட்டுவேன். சிட்டி பார்டரைத் தாண்டி ஹைவேயில் வண்டி ஏறியவுடன், வேகத்தை கூட்ட, நரேன் ஏதோ சொல்ல வாயெடுக்க, அவனின் கண்கள் விரிந்து,

“”டாக்டர்… ஜாக்கிரதை அந்தத் திருப்பத்தில ஒரு க்ராஸிங்ல ஒரு உருவம் வரும் பார்த்து” என்றான். அவன் சொன்னதைக் கேட்டுத் திரும்பி, ரோட்டுக்குப் பார்வையைத் திருப்பி கவனிப்பதற்குள் ஒரு கறுத்த உருவம் க்ராஸ் செய்தது.

– சங்கர் நாராயண் (ஜனவரி 2011)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *