கதை வகை: மொழிபெயர்ப்பு
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: த்ரில்லர்  
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 29,415 
 
 

ஒரு நிமிடம் ஜெயந்த்தை முழுமையாகக் கவனித்தேன். பின்னர் கேட்டேன்,””என்ன ஆயிற்று? இன்றைய தினம் மிகவும் சோர்வாகத் தெரிகிறாயே?”

ஜெயந்த் திடீரென விழித்தெழுந்தவன் போல் முகத்தில் சிரிப்பை வரவழைத்துக்கொண்டு சொன்னான். “”நோ. எதுவும் இல்லை. நான் நன்றாகத்தானிருக்கிறேன். இந்த இடம் உண்மையிலேயே அழகாக இருக்கிறது”

“”இதற்கு முன் நீ இங்கு வந்திருக்கிறாயா? இந்த இடம் அருமையான இடமென்பது உனக்குத் தெரியுமா?”

“”ஏறக்குறைய மறந்துவிட்டது.

ஜெயந்தின் பொம்மைசில சம்பவங்கள் மட்டுமே நினைவுக்கு வருகின்றன. இந்த பங்களாவின் தோற்றம் மாறவே இல்லை. இந்த பிரம்பு மேஜை, நாற்காலி எல்லாம் இப்போது நினைவுக்கு வருகிறது” வேலைக்காரன் ஒரு ட்ரேயில் டீயும் பிஸ்கெட்டும் கொண்டுவந்து வைத்தான்.

நான் டீயை கோப்பையில் ஊற்றினேன்.

“”கடைசியாக நீ இங்கு எப்போது வந்தாய்?”

“”முப்பத்தோரு ஆண்டுகள் இருக்கும். அப்போது எனக்கு ஆறு வயது”

பண்டியில் உள்ள சர்க்கியூட் அவுஸ் தோட்டத்தில் அமர்ந்திருந்தோம். நானும் ஜெயந்த்தும் அன்று காலைதான் வந்தோம். நாங்கள் இருவரும் சிறுவயது முதலே ஒன்றாக பழகியவர்கள். ஒரே பள்ளி ஒரே கல்லூரியில் படித்தவர்கள். இப்போது அவன் பத்திரிகையொன்றின் செய்திப் பிரிவில் வேலை செய்கிறான். நான் பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணியாற்றுகிறேன்.

நிறைய பேர் ஜெய்ப்பூர், உதய்பூர், ராஜஸ்தானில் உள்ள சித்தூர் போன்ற இடங்களுக்குப் போவார்கள். ஆனால் ஜெயந்த் பண்டிக்கு போகலாமென்றான். தாகூர் கவிதையொன்றில் பண்டி கோட்டையைப்பற்றி படித்திருந்தேன். ஏற்கெனவே அந்த பெயர் மனதில் பதிந்திருந்ததால் கோட்டையை பார்க்கலாமென்ற ஆவலில் நான் ஆட்சேபிக்கவில்லை.

இருந்தாலும் ஜெயந்த், பண்டிக்குச் செல்ல வேண்டுமென்று வற்புறுத்தியது எனக்குப் புதிராக இருந்தது. ரயிலில் செல்லும்போதுதான் அதன் காரணத்தைத் தெரிந்து கொண்டேன். சிறுவயதில் பண்டிக்குச் சென்ற அவன், வளர்ந்த பிறகு தன்னுடைய நினைவில் உள்ள பண்டியுடன் தற்போதைய பண்டி எப்படியிருக்குமென்பதைப் பார்க்க விரும்புவதாகக் கூறினான். ஜெயந்தின் தந்தை தொல்பொருள் இலாகாவில் பணியாற்றியவர். பணியின் காரணமாக அவருடன் பல சரித்திரப் புகழ்பெற்ற இடங்களுக்கு ஜெயந்த் சென்றிருக்கிறான். ஒருமுறை பண்டி செல்லும் வாய்ப்பும் கிடைத்தது.

மலைகளுக்கு இடையே பண்டி கோட்டை அமைந்திருந்தது.. தொலைவிலிருந்து பார்ப்பதைவிட அருகில் சென்று பார்க்க நினைத்தோம். நவீன யுகத்தில் அமைக்கப்பட்ட மின்கம்பங்கள்தான் பழமையை மாற்றியுள்ளதே தவிர மற்றபடி பழைய ரஜபுதனாவைத்தான் பார்த்தோம்.

பண்டிக்கு வந்தது முதல் ஜெயந்த் மிகவும் அமைதியாக மாறிவிட்டான். ஒருவேளை பழைய நினைவுகள் திரும்பியிருக்கலாம். சிறுவயதில் பழகிய இடங்களுக்குச் செல்லும்போது பழைய நினைவுகளின் தாக்கம் ஏற்படுவதுண்டு. மற்றவர்களைப் போலவே ஜெயந்த் மிகவும் உணர்ச்சி வயப்பட்டிருந்தான்.

டீ அருந்திய பின்னர் தோட்டத்தில் உலவத் தொடங்கினோம். திடீரென ஜெயந்த் நடப்பதை நிறுத்திவிட்டுச் சொன்னான், “”தேவதாரு மரம்”

நான் அவனைப் பார்த்தேன்.

“”தேவதாரு மரம் இங்கே இருந்ததாக நினைவு” என்று சொல்லியபடியே சுற்றுமுற்றும் பார்த்தபடியே தோட்டத்தின் காம்பவுண்டு சுவர் வரை சென்றான். திடீரென இவன் தேவதாரு மரத்தைப்பற்றி ஏன் கேட்கிறான்?

சில விநாடிகள் கழித்து மகிழ்ச்சி கலந்த அவனது குரல் ஒலித்தது.””இதோ இங்கே இருக்கிறது. முன்பிருந்த இடத்திலேயே இருக்கிறது”

“”முன்பிருந்த மரம் அதே இடத்தில்தான் இருக்கும். அது என்ன இடம்விட்டு இடம் நகர்ந்து கொண்டா இருக்கும்?” என்றேன்.

ஜெயந்த் பொறுமையின்றி தலையை அசைத்தான். “”நான் சொன்னதன் அர்த்தம் வேறு. இந்த மரம் எங்கிருக்குமென்று நினைத்தேனோ அதே இடத்தில்தான் இருக்கிறது என்று சொல்ல வந்தேன்”

“”திடீரென உனக்கு ஏன் இந்த மரத்தைப் பற்றிய நினைவு வந்தது?”

ஜெயந்த் அந்த மரத்தின் வேர்ப் பகுதியைப் பார்த்தான். பின்னர் தலையை மெல்ல அசைத்தபடியே சொன்னான், “”இப்போது என்னால் நினைவுபடுத்த முடியவில்லை. ஏதோ ஒரு சக்தி என்னை இந்த மரத்தின் அருகே அழைத்து வந்துள்ளது. ஏதோ ஒன்றை இங்கு செய்திருக்கிறேன். ஐரோப்பியன்”

“”ஐரோப்பியன்?”

“”நோ. எதையும் என்னால் இப்போது நினைவுபடுத்த முடியவில்லை. நினைவுகள் என்பது அபூர்வமானது”

சர்க்கியூட் அவுஸில் நல்ல சமையல்காரன் இருந்தான். அன்றிரவு டின்னருக்காக மேஜையைச் சுற்றி அமர்ந்திருந்தபோது ஜெயந்த் சொன்னான், “”அந்தக் காலத்தில் இங்கு திலாவர் என்ற சமையல்காரன் ஒருவன் இருந்தான். அவனது முகத்தின் கீழே இடது பக்கம் ஒரு வடு இருக்கும்.

அவனது கண்கள் எப்போதும் சிவப்பாக இருக்கும். ஆனால் நன்றாகச் சமைப்பான்”

இரவு சாப்பாடு முடிந்து மீண்டும் வரவேற்பறைக்கு செல்வதற்குள் ஜெயந்துக்கு ஏறக்குறைய பழைய நினைவுகள் ஒவ்வொன்றாகத் திரும்பத் தொடங்கின. அவனது அப்பா எங்கே உட்கார்ந்து சுருட்டு பிடிப்பார்? அம்மா எங்கே அமர்ந்து “நிட்டிங்’ செய்வாள்? என்னென்ன பத்திரிகைகள் டேபிள் மீது இருந்தன என்பது போன்றவை

களைச் சொல்லத் தொடங்கினான்.

ஒவ்வொரு சம்பவமாக சிறிது சிறிதாக நினைவுபடுத்தி வந்தான். அவனது பொம்மை பற்றிய நினைவை முழுமையாகச் சொன்னான். அந்த பொம்மை சாதாரணமாக குழந்தைகள் வைத்து விளையாடுவது போன்று அல்ல. ஜெயந்தின் மாமா ஒருவர் ஸ்விட்சர்லாந்திலிருந்து அவனுக்காக வாங்கி வந்தார்.

பன்னிரண்டு அங்குல உயரமுள்ள ஒரு வயதான மனிதன். ஸ்விஸ் நாட்டுப் பாணியில் உடையணிந்த அந்த பொம்மை உண்மை மனிதனை போலவே இருந்தது.

அந்த பொம்மை உடம்பை வளைக்க, கால்களை மடக்கி நீட்ட எவ்வித மெக்கானிசமும் அதில் இல்லை. தலையில் அணிந்திருந்த ஸ்விஸ் குல்லாயில் மஞ்சள் நிற இறகு செருகியிருந்தது. அணிந்திருந்த உடையில் பெல்ட், பட்டன்கள், பாக்கெட், காலர், சாக்ஸ், ஷூக்களில் உள்ள சிறு பக்கிள்கள் அனைத்தும் கச்சிதமாக இருந்தன. முகத்தில் எப்போதும் சிரிப்பு மலர்ந்திருந்தது.

ஜெயந்த் அவனுடைய பெற்றோருடன் கிளம்பி பண்டிக்கு வருவதற்கு முன்பு அவனது மாமா அந்த வயதான (பொம்மை) மனிதனை ஸ்விட்சர்லாந்து கிராமமொன்றில் வாங்கி வந்தாராம். அந்த பொம்மையை விற்பனை செய்தவன் ஜெயந்தின் மாமாவிடம் வேடிக்கையாக சொன்னானாம், “”இவனுடைய பெயர் பிரிட்ஜ். இதே பெயரில் இவனைக் கூப்பிடுங்கள். வேறு பெயரில் கூப்பிட்டால் திரும்பிப் பார்க்கமாட்டான்”

ஜெயந்த் சொன்னான்,””நான் சிறுவனாக இருந்தபோது என்னிடம் ஏராளமான பொம்மைகள் இருந்தன. ஒரே குழந்தை என்பதால் நான் எதுகேட்டாலும் என்னுடைய பெற்றோர் வாங்கிக் கொடுப்பதுண்டு. பிரிட்ஜ் வந்தவுடன் மற்ற பொம்மைகளை மறந்துவிட்டேன். அவனுடன் மட்டுமே விளையாடினேன். சில சமயங்களில் மணிக்கணக்கில் அவனுடன் பேசிக்கொண்டிருப்பேன்.

எங்களுடைய உரையாடல் ஒருதலைபட்சமாக இருக்கும். நான் பேசுவதையெல்லாம் பிரிட்ஜ் கேட்டுக் கொண்டிப்பான். புரிந்தது போல் உதடுகளில் புன்னகை தவழ என்னை பார்த்துக் கொண்டேயிருப்பான்”

“”அந்த பொம்மைக்கு என்ன ஆச்சு?” நான் கேட்டேன்.

ஜெயந்த் ஆழ்ந்த யோசனையில் இருந்தான். என் கேள்விக்கு அவனிடமிருந்து தாமதமாக பதில் வரவே ஒருவேளை நான் கேட்ட கேள்வி அவன் காதில் விழவில்லையோ என்று நினைத்தேன்.

“”பண்டிக்கு அதைக் கொண்டு வந்தேன். இங்குதான் அழிந்துவிட்டது”

“”அழிந்துவிட்டதா? எப்படி?”

ஜெயந்த் பெருமூச்சுவிட்டான்.

“”ஒருமுறை நாங்கள் டீ அருந்துவதற்காக தோட்டத்தில் அமர்ந்திருந்தோம். என் பக்கத்தில் புல்லின் மீது அந்த பொம்மையை வைத்திருந்தேன். எனக்கு டீ அருந்த வேண்டுமென்ற எண்ணம் இல்லை. இருந்தாலும் வேண்டுமென்று அடம்பிடித்தேன். டீ ஊற்றும் கோப்பையிலிருந்து சூடான டீ சிறிது என் டிராயர் மீது கொட்டிவிட்டது. டிராயரை மாற்றிக் கொண்டு வருவதற்காக உள்ளே சென்று திரும்புவதற்குள் பிரிட்ஜைக் காணவில்லை.

சுற்றுமுற்றும் பார்த்தபோது சிறிது தொலைவில் சில தெருநாய்கள் பிரிட்ஜை வாயில் கவ்வி இழுத்தபடி போராடிக் கொண்டிருப்பதைக் கண்டேன். அவனது முகம் சிதைந்து உடைகள் கிழிந்து அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவிட்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் பிரிட்ஜ் என்னிடம் பழைய நிலையில் திரும்பவில்லை; இறந்துவிட்டான்”

“”அப்புறம் என்ன ஆயிற்று?” ஜெயந்தின் கதை எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது.

“”அதற்கப்புறம் என்ன நடக்கும்? அவனது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தேன். அவ்வளவுதான்”

“”இதற்கு என்ன அர்த்தம்?”

“”அவனை அந்த தேவதாரு மரத்தின் கீழ் புதைத்தேன். பிரிட்ஜ் ஐரோப்பியன் என்பதால் சவப்பெட்டியில் வைத்து புதைக்க நினைத்தேன். ஒரு சிறிய பெட்டி கூட கிடைக்கவில்லை. அப்படியே புதைத்துவிட்டேன்”

ஒருவழியாக தேவதாரு மரத்தின் மர்மம் முடிந்தது.

இரவு பத்து மணியளவில் படுக்கச் சென்றோம். எங்களது அறை மிகவும் பெரியது. அதற்கேற்ப கட்டில்கள் அமைக்கப்பட்டிருந்தன. அன்றைய தினம் அதிகமாக நடந்து திரிந்ததால் படுத்தால் போதும் என்று நினைத்தேன். படுக்கையும் அதற்கேற்ப வசதியாக இருந்தது. படுத்த பத்தாவது நிமிடத்திலேயே ஆழ்ந்த ஊக்கம் என்னைத் தழுவியது.

சிறிது நேரத்திற்கெல்லாம் சிறு சத்தம் கேட்டு விழித்தேன். திரும்பிப் படுத்தபடியே பார்த்தபோது ஜெயந்த் அவனது படுக்கையில் அமர்ந்திருந்தான். அவன் படுக்கையருகே இருந்த மேஜை விளக்கு எரிந்து கொண்டிருந்ததால் அவனது முகத்தில் ஒருவித ஆர்வம் இருப்பது தெரிந்தது.

“”என்ன ஆயிற்று? உடம்பு சரியில்லையா?” என்று கேட்டேன்.

என்னுடைய கேள்விக்கு பதில் சொல்வதற்கு பதில், என்னிடமே ஒரு கேள்வியை கேட்டான். “”இந்த சர்க்கியூட் அவுஸில் ஏதாவது சிறு மிருகங்கள் இருக்குமா? அதாவது பூனைகள் அல்லது எலிகள்?”

“”அப்படி ஏதாவது இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏன்?”

“”ஏதோ ஒன்று என் மார்பின் மீது குறுக்காக ஓடியது. அதனால்தான் எழுந்தேன்”

“”சாக்கடை வழியாக எலிகளும் பெருச்சாளிகளும் வர வாய்ப்பிருக்கிறது. ஆனால் அவை படுக்கைமீது ஏறி வருமா என்பது எனக்குத் தெரியாது”

“”உண்மையிலேயே நான் விழித்தெழுவது இது இரண்டாவது முறை. முதல் தடவை ஜன்னல் அருகே ஏதோ பிராண்டுவதுபோல் சத்தம் கேட்டது”

“”ஓ! ஜன்னல் அருகே என்றால் நிச்சயம் பூனையாகத்தான் இருக்கும்”

“”ஆமாம். ஆனால்…?”

ஜெயந்துக்கு இன்னமும் சந்தேகம் தீரவில்லை. “”நீ விளக்கைப் போட்டவுடன் எதையாவது பார்த்தாயா?”

“”இல்லை. ஆனால் விழித்தவுடனே நான் விளக்கைப் போடவில்லை. உண்மையில் முதலில் பயமாக இருந்தது. விளக்கைப் போட்டவுடன் கண்களுக்கு எதுவும் தென்படவில்லை”

“”அப்படியானால் உள்ளே வந்த ஏதோ ஒன்று இந்த அறைக்குள்ளேயே இருக்கிறது என்கிறாயா?”

“”அப்படியில்லை. கதவுகள் எல்லாம் உட்புறம் தாழ்ப்பாள் போட்டிருக்கிறதே?”

நான் உடனே படுக்கையிலிருந்து இறங்கி கட்டிலுக்கு கீழே நாங்கள் வைத்திருந்த சூட்கேஸþகள் பின்னாலும் அறைக்குள்ளும் சுற்றுமுற்றும் சோதித்தேன். எதையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. குளியலறைக் கதவும் மூடப்பட்டிருந்தது. அதையும் திறந்து பார்த்துவிடலாமா என்று நினைத்தபோது ஜெயந்த் மெதுவான குரலில் என்னை அழைத்தான்.

நான் திரும்பவும் அறைக்குள் வந்தேன். ஜெயந்த் அவனது கம்பளிப் போர்வையை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். என்னை பார்த்தவுடன் அதன் ஒரு பகுதியை மட்டும் விளக்கு வெளிச்சத்தில் காட்டியபடியே சொன்னான் “”இதைப் பார்!”

நான் குனிந்து பார்த்தபோது பிரவுன் நிறத்தில் சிறிய வட்டமான அடையாளம் தெரிந்தது. “”இது பூனையின் காலடி போல் தெரிகிறது” என்றேன்.

ஜெயந்த் எதுவும் சொல்லவில்லை. ஏதோ ஒன்று அவனை ஆழமாக பாதித்திருப்பது தெரிந்தது. அப்போது இரவு மணி 2.30. பேசாமல் போய் படுப்பதுதான் நல்லதென்று நினைத்தேன். மேலும் மறுநாள் வேறு சில இடங்களைச் சுற்றிப் பார்க்க திட்டமிட்டிருந்ததால் படுக்கச் சென்றேன்.

பிறகு நான் நன்றாக உறங்கிவிட்டதால் என்ன நடந்ததென்று தெரியாது. ஜெயந்தும் எதுவும் சொல்லவில்லை. ஆனால் மறுநாள் காலை அவனை பார்த்தபோது இரவு முழுவதும் அவன் சரியாக உறங்கவில்லை என்பது தெரிந்தது. இன்றிரவு நான் கொண்டுவந்துள்ள தூக்க மாத்திரைகளில் ஒன்றை அவனுக்கு கொடுக்க வேண்டுமென்று தீர்மானித்தேன்.

காலை சிற்றுண்டி முடிந்தவுடன் ஒன்பது மணிக்கு திட்டமிட்டபடி கோட்டையைப் பார்க்கப் புறப்பட்டோம். ஏற்கெனவே கார் ஏற்பாடு செய்திருந்தோம். ஒன்பதரை மணியளவில் அங்கு போய் சேர்ந்தோம்.

ஜெயந்த் மறந்துபோன பழைய சம்பவங்கள் மீண்டும் அவனது நினைவுக்கு வந்தன. குறிப்பாக அந்த பொம்மை விஷயம். வாலிப வயதுக்கு வந்தவுடன் அது போன்ற பழைய நினைவுகளை அவன் மறந்திருப்பான் என்று நினைத்தேன்.

ஒருமணி நேரத்திற்குள் அவனது ஆர்வம் குறைந்தது. முதலில் நான் இதை உணரவில்லை. கோட்டை மண்டபத்திற்குள் உத்திரத்தில் தொங்கிக்கொண்டிருந்த அலங்கார விளக்குகளைப் பார்த்தபடியே சென்று கொண்டிருந்த நான், திரும்பி பார்த்தபோதுதான் ஜெயந்த் என்னுடன் வரவில்லை என்பது தெரிந்தது.

எங்கே போனான்? எங்களோடு வந்த கைடு சொன்னான்,””உங்கள் நண்பன் கோட்டையின் மேல் பகுதிக்கு ஏறிச் சென்றார்”

மண்டபத்தைவிட்டு வெளியே வந்து தேடியபோது

ஜெயந்த் மேற்கு பகுதியில் சுவரின் மற்றொரு பக்கம் தன்னை மறந்த நிலையில் நின்று கொண்டிருப்பதை பார்த்தேன். நான் அருகில் சென்றதைக்கூட அவன் உணரவில்லை. அவன் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டேன், “”என்ன ஆயிற்று உனக்கு? இந்த அழகான இடத்தைப் பார்த்து ரசிக்காமல் பித்துபிடித்தவன் போல் நிற்கிறாயே?”

ஜெயந்த் கேட்டான் “”எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டாய் அல்லவா? அப்படியானால் நாம்…”

நான் மட்டும் தனியாக சென்றிருந்தால் இன்னும் சற்று நேரம் அந்தக் கோட்டையைச் சுற்றிப் பார்த்திருப்பேன். ஆனால் ஜெயந்த் சர்க்கியூட் அவுசுக்குத் திரும்ப வேண்டுமென முடிவெடுத்ததால் நானும் திரும்ப வேண்டியதாயிற்று.

பத்து நிமிடங்கள் கழிந்தது. என்னால் அப்படியே விட்டுவிடமுடியவில்லை. “”உன்னுடைய பிரச்னை என்னவென்று சொல். உதவ தயாராக இருக்கிறேன்” என்றேன்.

ஜெயந்த் தலையை அசைத்தான் “”உன்னிடம் சொல்லி பிரயோஜனமில்லை. நீ நம்பமாட்டாய்”

“”ஓகே! நான் நம்பமாட்டேன் என்றே வைத்துக்கொள். குறைந்தபட்சம் அதைப்பற்றி என்னால் உன்னுடன் விவாதிக்க முடியுமல்லவா?”

“”பிரிட்ஜ் நேற்றிரவு நம்முடைய அறைக்குள் வந்தான். என்னுடைய போர்வையின் மீது பதிந்திருந்த அந்த சின்ன அடையாளங்கள் அவனது காலடித் தடங்கள்தான்”

அவன் தோள்களின் மீது கைகளை வைத்து அவனை அசைத்தேன். அதே நினைவுடன் தப்பான கருத்துடன் இருப்பவனுடன் புத்திசாலித்தனமாக எப்படி என்னால் பேச முடியும்?

“”நீயாக நேரடியாக எதையும் பார்க்கவில்லை. இல்லையா?”

நோ! என் மார்பின்மீது இரண்டு கால்களால் நடந்து சென்றதை நான் நன்றாகவே உணர்ந்தேன். நான்கு கால்களால் அல்ல.

என்னுடைய மனதில் ஒரு யோசனை உதித்தது. ஜெயந்தை பழைய நிலைமைக்குக் கொண்டு வர இதைவிட வேறு வழியில்லை. முப்பதாண்டுகளுக்கு முன்பு அந்த பொம்மை எந்த இடத்தில் புதைக்கப்பட்டதென்பது தெரியும். ஏறக்குறைய அந்த பொம்மை பகுதிகள் அழிந்து போயிருக்கலாம்!

உலோகத்தால் உருவாக்கப்பட்ட பொருள்கள் அழிய வாய்ப்பில்லை. பெல்ட்டில் இருந்த பக்கிள், சட்டைப் பொத்தான்கள் போன்றவை அப்படியே இருக்கலாம்.

அவனது அபூர்வமான பொம்மை புதைத்த இடத்திலிருந்து தோண்டி மிஞ்சிய பகுதிகளைப் பார்த்தால் அந்த மூட நம்பிக்கையிலிருந்து விடுபடலாம். இல்லையெனில் அந்த வித்தியாசமான கனவும், அவன் மார்பு மீது பிரிட்ஜ் நடப்பது போன்ற நினைவும் தினமும் தொடர்ந்தால் நிச்சயம் பைத்தியமாகிவிடுவான்.

ஜெயந்த் என்னுடைய யோசனையை ஏற்றுக்கொண்டான். சிறிது யோசனைக்குப் பிறகு சொன்னான், “”யார் தோண்டுவது? மண்வெட்டியை எங்கிருந்து கொண்டு வருவாய்?”

நான் சிரித்தேன். “”நாம் தங்கியிருக்கும் சர்க்கியூட் அவுûஸச் சுற்றி தோட்டம் இருக்கிறது. அப்போது தோட்டக்காரனும் இருப்பானல்லவா? அப்போது மண்வெட்டியும் இருக்குமல்லவா? அவனுக்குக் கொஞ்சம் பணம் கொடுத்தால் போதும். அந்த மரத்தடியில் பள்ளம் தோண்ட மறுப்பேதும் சொல்லமாட்டானென்றே நினைக்கிறேன்”

மதிய உணவை முடித்த பின்னர் மூங்கில் நாற்காலியில் அமர்ந்தபடி தோட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தோம். சர்க்கியூட் அவுஸில் வேறு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. அந்த மதிய நேரத்தில் அமானுஷ்யமான அமைதி நிலவியது. வெளிப்பாதையில் இருந்த குல்மெஹர் மரத்தில் இருந்த குரங்குகள் குரலெழுப்பிக்கொண்டிருந்தன. பகல் மூன்று மணியிருக்கும். தண்ணீர் கேனுடன் ஒருவன் தோட்டத்திற்குள் நுழைவதைப் பார்த்தோம்.

வயதான அந்த மனிதனின் தலை முடியும், மீசையும் காதருகில் இருந்த கிருதாவும் நரைத்திருந்தன.

“”நீயே அவனிடம் கேட்கிறாயா அல்லது நான் கேட்கட்டுமா?” ஜெயந்த் கேட்டான். நான் அவனைப் பார்த்து கையமர்த்திவிட்டு தோட்டக்காரனை நோக்கி நடந்தேன். நான் அவனிடம் பேசிய பின்னர் அவன் என்னை சந்தேகத்துடன் பார்த்தான். இதுவரை அவனிடம் யாரும் இப்படி கேட்டிருக்கமாட்டார்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது. “”எதற்கு ஐயா?” என்று கேட்டான். நான் அவன் தோளின் மீது சிநேக பாவத்துடன் கையை வைத்து அணைத்தபடி சொன்னேன், “”காரணத்தைப் பற்றிக் கவலைப்படாதே. ஐந்து ரூபாய் தருகிறேன். தயவு செய்து சொன்னதை செய்தால் போதும்”

இதைக் கேட்டவுடன் வாய் நிறைய சிரிப்புடன் ஒரு சல்யூட் அடித்தான்.

நான் ஜெயந்தைத் திரும்பிப் பார்த்தேன். அவன் இன்னமும் வராந்தாவில் அமர்ந்திருந்தான். நான் கையசைத்ததும் எழுந்து எங்களை நோக்கி வந்தான். நெருக்கத்தில் வந்தபோது அவன் முகம் சோர்வடைந்திருப்பதைப் பார்த்தேன். அந்த பொம்மையின் ஒரு சில பகுதிகளாவது கிடைக்குமென்ற நம்பிக்கை எனக்கிருந்தது. இதற்குள் தோட்டக்காரன் சென்று ஒரு மண்வெட்டியைத் தேடிப் பிடித்து எடுத்து வந்தான். மூவரும் தேவதாரு மரத்தை நோக்கி நடந்தோம்.

மரத்தின் அருகில் ஓர் அடி தொலைவில் தரையில் ஒரு குறிப்பிட்ட இடத்தை ஜெயந்த் சுட்டிக்காட்டி “”இங்கே” என்றான்.

“”இந்த இடம்தான் என்பது சரியாகத் தெரியுமா?” என்று தோட்டக்காரன் கேட்டான். ஜெயந்த் அமைதியாக தலையசைத்தான்.

“”நீ எவ்வளவு ஆழம் தோண்டினாய்?”

“”எட்டு அங்குலம் இருக்கலாம்”

தோட்டக்காரன் தோண்டத் தொடங்கினான். அவனுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் போலும். மண்வெட்டியை உயர்த்தியவன், “”இங்கு ஏதாவது புதையல் இருக்கிறதா? அப்படி ஏதாவது கிடைத்தால் எனக்கும் பங்கு உண்டல்லவா?” என்று கேட்டான். அதை கேட்டதும் நான் சிரித்துவிட்டேன். ஆனால் ஜெயந்த் முகத்தில் சிறிதுகூட மாற்றம் இல்லை.

அக்டோபர் மாதம் என்பதால் பண்டியில் அவ்வளவாக வெப்பம் இல்லை. இருந்தாலும் அவனது காலர் வியர்வையில் நனைந்திருந்தது. கண் இமைகளைச் சிமிட்டாமல் பள்ளம் தோண்டுவதை பார்த்துக் கொண்டிருந்தான். தோட்டக்காரன் தொடர்ந்து தோண்டிக் கொண்டிருந்தான். பொம்மையை புதைத்ததற்கான அறிகுறியே இல்லை.

தொலைவில் மயில் கூவிய சத்தத்தை கேட்டு நான் திரும்பிய நேரத்தில் ஜெயந்திடமிருந்து விநோதமான அலறல் கேட்டது. அவசரமாக திரும்பி அவனைப் பார்த்தேன். அவன் கண்கள் அகல விரிந்தன. வலது கை ஆள்காட்டி விரலில் பள்ளத்தை சுட்டிக்காட்டியபோது அது தெளிவாகத் தெரிந்தது.

பின்னர் பதற்றத்துடன் பயம் கலந்த குரலில் கேட்டான், “”என்ன…என்ன அது?”

தோட்டக்காரன் கையிலிருந்த மண்வெட்டி நழுவி விழுந்தது. நானும் நம்பமுடியாமல் திறந்த வாய் மூடாமல் ஆச்சரியத்துடன் பார்த்தேன்.

எங்கள் காலடியில் மண் படிந்த நிலையில் குப்புற படுத்தாற்போல் பன்னிரண்டு அங்குல நீளத்தில் வெண்மை நிறத்தில் முழுமையாக சிறிய மனித எலும்புக் கூடு இருந்தது.

– தமிழில்: அ.குமார் (ஏப்ரல் 2012)

Print Friendly, PDF & Email

2 thoughts on “ஜெயந்தின் பொம்மை

  1. மிகவும் நன்றாக உள்ளது.நல்ல த்ரில்லேர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *