கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: September 14, 2024
பார்வையிட்டோர்: 2,719 
 
 

(1999ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12

அத்தியாயம்-7

“சனி மேடானது புடைத்தும், அதன் மேல் பாம்பு போல் வளைவாய் ரேகைகளும் இருந்தால் அவன் புற்றுப் பாம்பு போல அடைந்து வாழ்வான். சுக்கிர மேட்டில் கரும்புள்ளி விழ, பெண்ணாலே இவனுக்கு பெரும்பகை வரும்.”

மொத்த போலீஸ் கூட்டமும் இப்பொழுது எக்ஸ்டென்ஷனை கடந்து ரயில்வே ஸ்டேஷன் எல்லைக்குள் நுழைய ராமலிங்கம் பெருமூச்சு விட்டபடி வீட்டுக்குள் நுழைகிறான். கனகம் வந்து கட்டிக்கொள்கிறாள். அப்படியே அழ ஆரம்பிக்கிறாள். 

“என்னங்க… எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க. இன்னும் என்னெல்லாம் நடக்கப்போகுதோ தெரியலையே…” புலம்புகிறாள். 

திரும்பவும் வாசல் பக்கம் யாரோ வரும் சத்தம். எட்டிப் பார்த்தால் பாஸ்கரதாஸ். 

“என்னக்கா… போலீசெல்லாம் வந்துச்சாமே… என்ன விஷயம்?” உள்ளே நுழையும்போதே படபடக்கிறான். 

“ஆமாம்டா பாஸ்கரு… நேத்து நீ எனக்கு ஜோசியம் சொன்ன மாதிரியே ஆயிடுச்சு. பயங்கர சோதனை யெல்லாம் வரும்னே – வந்திடுச்சிடா.” – கனகம் நெருங்கி வந்து கட்டிக் கொள்கிறாள். 

“என்ன சோதனை… விளக்கமா சொல்லு?”

“சொல்றேன்… முதல்ல அந்த கதவை சாத்து… சாத்துமுன்னே அப்படியே எட்டிப் பாரு, யாராச்சும் போலீசு நிக்குதான்னு…” 

பாஸ்கர் எட்டிப் பார்த்துவிட்டு உள்ளே நுழைகிறான். 

“வாக்கிங் போலாம்னு வர்ற வழியில ஒரே போலீஸ் கலாட்டா. அதான் எட்டிப் பார்த்தேன். என்னடான்னா கடைசில நம்ம ஊட்லதான் சிக்கலே..” 

அவன் ஆதங்கப்பட்டு முடிக்கவும், கோழி கொக்கரிப்பது போல ஒரு சப்தம் சற்று வித்தியாசமாக கேட்கிறது. 

”என்னது…நீ பொட்டக் கோழில்ல வெச்சிருந்தே பொடக்காலில் இருந்து சேவல் கத்தற சப்தம் கேக்குது” 

“ஐயோ… என்னங்க… சீக்கிரம் போங்க, அந்த கொலைகாரன்தான் வெளிய வரலாமான்னு கேக்கறான்.” 

“போறேன்… போறேன் வாசக் கதவை யார் தட்டினாலும் திறக்காதே. வழுக்குப்பாறை முனியப்பா, நீதாண்டா சாமி என்னை காப்பாத்தணும்” ராமலிங்கம் முணுமுணுப்புடன் வீட்டுப் பின்புறம் செல்கிறான். 

“என்னக்கா… நான் ஒண்ணு கேட்டா நீ ஒண்ணு சொல்றே. மாமா எங்க போறாரு.” 

“பொறுத்திருந்து பாரு. அர்த்த ராத்திரியில எங்கள் ஒரு ஏழரை நாட்டான் வந்து பிடிச்சிட்டான் பாஸ்கரு. இனி என்னாகுமோ…ஏதாகுமோ?” 

அவள் புலம்ப, சஸ்பென்ஸ் தாங்காமல் பின்புறமாய் அவனே சென்று பார்க்க, கச்சிதமாக கிணற்றுத் திட்டின் மேல் ஏறிக் கொண்டிருக்கிறான் முனிரத்னம். 

தாடி மீசை தலைமுடி அவ்வளவையும் மழுங்கச் சிரைத்துவிட்டு ஆளே அடையாளம் தெரியாதபடி மாறிவிட்டிருக்கிறான். ஈரம் சொட்ட கிணற்றுக்குள் இருந்து வருபவன் வெளியே வந்த வேகத்தில் நேராக திறந்துகிடக்கும் கதவு வழியாக வீட்டுக்குள் நுழைய… 

“யாருக்கா இது..?” 

“இது… இது…” 

“நானும் கேக்கணும்… யார் இவன்? இந்த ஊட்டுக்குள்ள உங்க இரண்டுபேரை தவிர யாரும் இருக்கக் கூடாதுன்னு சொன்னேன்ல…” இது முனிரத்னம். 

“இவன் என் தம்பி. வீட்டு முன்ன போலீஸ் இருந்தத பார்த்து என்னவோ ஏதோன்னு பதறிப் போய் வந்துருக்கான். எப்படி அவனை வாசல்லயே வெச்சு துரத்த முடியும்?” 

“என்ன பண்றே நீ?” முனிரத்னம் பாஸ்கரதாஸ் பக்கம் திரும்பினான். “நான்… நான் ஜோசியம் பாக்கறேன்” 

“ஆமாம்… என் தம்பி பிரமாதமா ஜோசியம் பாக்கும், அது சொன்னா சொன்னதுதான்.” 

அடுத்த நொடி முனிரத்னம் ஒரு கேலிச் சிரிப்புகிறான். சிரித்துவிட்டு, “எந்த மாதிரி ஜோசியம் பாக்கறவன் நீ?” 

“நான்…நான் கைரேகை ஜோசியம் பாக்கறவன்.” 

“அப்படியா… எங்க என் கையை பார்த்து நான் யார் எப்படிப்பட்டவன்னு சொல்லு பார்ப்போம்.” 

பாஸ்கரதாஸ் எதுவும் பேசாமல் நீண்ட கைகளை பார்க்கிறான். சில நொடிகள்தான். 

“… நீங்க ஒரு தூக்குதண்டனை கைதி. இருந்தாலும் உங்களுக்கு தொண்ணூறுக்கு மேல ஆயுசு.” 

“சபாஷ். அப்படிச் சொல்லு… மேல.”

“மேலன்னா, என்ன சொல்ல.?”

“கைல மேல போகச் சொன்னேன்.” 

“கோ… கோடிக்கணக்குலே உங்ககிட்ட தங்கம் இருக்கணும்.” 

“சபாஷ்…ம்…” 

“யாரையும் நம்பமாட்டீங்க. உங்க நிழலைக்க சந்தேகப்படுவீங்க.”

“ரொம்ப ரொம்ப சரி. திரும்ப நான் போலீஸ்ல மாட்டுவேனா, அதைச் சொல்லு பார்ப்போம் முதல்லே” 

“இப்போதைக்கு இல்ல..” தயங்கித் தயங்கி சொல்கிறான் பாஸ்கரதாஸ். 

“அப்ப நான் பின்னாலே மாட்டுவேனா?” 

“ஆ… ஆமாம். சனி மேட்டுல பாம்பு ரேகையும் இருக்கு. அப்படி இருந்தா ஒண்ணு ஜெயில்லையோ இல்லை எங்காவது காட்டுக்குள்ளேயோ கைதியாதான் வாழணும்.” 

“காட்டுக்குள்ளே வாழ்ந்துட்டுப் போறேன். ஆனா திரும்ப நான் ஜெயிலுக்கு மட்டும் போகவே கூடாது. போகவும் மாட்டேன்” 

ஒரு வகை உறுதியோடு சொல்பவன் அப்படியே திரும்பி அந்த சின்ன வீட்டின் மூலையில் இருக்கும் டி.வி.யை பார்த்து, “டி.வி. போடு… செய்தி என்ன சொல்றாங்கன்னு பார்க்கணும்” என்கிறான். பாஸ்கரதாஸ் வெளிறலோடு கேட்கிறான். 

“அப்ப நீங்கதான் ஜெயில்லே இருந்து தப்பி வந்த முனிரத்னமா?”

“ஆமாம். பயப்படாதீங்க. உங்களை ஒண்ணும் செய்யமாட்டேன். என் பாதைல குறுக்கே வர்றவங்களை தான் நான் தீர்த்துக் கட்டுவேன். அது கடவுளாகவே இருந்தாலும் சரி.” என்று பாஸ்கரதாஸின் தோளைத் தட்டுகிறான். 

தட்டா அது? தோள்பட்டை பாகம் மேல் ஒரு வெட்டு விழுந்த மாதிரி இருக்கிறது பாஸ்கரதாஸுக்கு. 

ராமலிங்கமும், கனகமும் ஒருவரை ஒருவர் கட்டிக் கொள்ளாத குறையாக நெருக்கிக் கொண்டு நிற்கின்றனர். 

“இன்னும் உங்க பயம் போகலையா? தைரியமா இருக்கணும். எனக்கு இப்ப என் வசதியைவிட உங்க சௌக்கியம்தான் பெரிசு. சரியா ஒன்பது மணிக்கு என்னைப் பார்க்க என் கூட்டாளிங்க வருவாங்க. அப்புறம் பாருங்க, நான் முனிரத்தனமா இருக்கமாட்டேன்.” 

புதிர் போல பேசினான். 

“அதுவரைக்கும் யாரும் வராமே இருக்கணுமே?” 

“வரமாட்டாங்க. என் கூட்டாளிகளும் வரவிட மாட்டாங்க. டேய் ஜோசியக்கார தம்பி, நீ நிஜமா பெரிய ஆள். இனிமே நீ என்னை விட்டு போகவே கூடாது. நான் சொல்றபடி கேள். லட்சலட்சமா தரேன்.” முனிரத்னம் சொன்னதைக் கேட்டு பாஸ்கரதாஸ் யோசனையுடன் தலையை அசைக்கிறான். 

”டி.விய போடுன்னு சொன்னேன்ல?”- திரும்பவும் அவனிடம் அதட்டல் ராமலிங்கம் நடுங்கும் கரங்களால் டி.வி. பட்டனை அமுக்க, அந்த சதுரத் திரையில் இப்பொழுது நாள் பலன் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். 

“மணி இன்னும் எட்டாகலையா?”

“இல்ல…” 

“இன்னிக்கு மட்டும் நியூஸ்ல என்ன பத்தி சொல்லாம இருக்கட்டும், அவங்களை வெச்சுக்கிறேன்..” 

நியூசில் செய்தி வருவதை அவன் பெரிய விஷயமாக கருதி பேசுவது மூவருக்கும் ஆச்சரியம் தருகிறது. 

“செய்தி வந்தா உங்களுக்குதானே ஆபத்து அதிகமாகும். பிடிச்சு கொடுத்தா ஆயிரம், லட்சம்னு சொல்வாங்க. ஜனங்களும் காட்டிக் கொடுத்திடுவாங்களே…” 

பாஸ்கரதாஸின் கருத்தைக் கேட்டு அவன் சிரிக்கிறான்.  

“இப்பல்லாம் ஜனங்க ரொம்ப தெளிஞ்சிட்டாங்க. யாரோ எக்கேடோ கெட்டு போகட்டும். நமக்கு என்னன்னு இருக்கறவங்கதான் ஜனங்க. அப்படியே அதுல ஒண்ணு ரெண்டு லொள்ளு பிடிச்சவன் இருந்தாலும். எவனாலயும் என்னை கண்டுபிடிக்க முடியாது. ஆனா நான் தப்பிட்ட செய்தி இரும்பாடிக்கு தெரியணும். அப்பதான் நான் வேகமாக செயல்பட முடியும்.” 

எந்த தைரியத்தில் அவன் இப்படி சொல்கிறான் என்று தெரியவில்லை. யார் இந்த இரும்பாடி என்றும் தெரியவில்லை. இருந்தும் அதை இராமலிங்கம் காதில் வாங்கிக் கொள்ளாமல் பொத்தென்று அவன் காலில் விழுகிறான். 

“ஐயா… உங்கள கெஞ்சி கேட்டுக்கிறேன். இனியும் நீங்க இங்க இருந்தா பெண்டாட்டி கர்ப்பமே கலைஞ்சிடும். தயவு செய்து இனியாச்சும்..” 

“தெரியுது… வேற எங்காவது போடா நாயேங்கறே. அவ்ளோதானே..” 

“ஐய்யோ. சத்தியமா நாயேன்னுல்லாம் நினைக்கல.”

“கவலைப்படாதே. நான் கொலைகாரனா இருக்கலாம். ஆனா நன்றி உணர்ச்சி உள்ளவன். உங்களுக்கு என்னால ஒரு சின்ன சங்கடம்கூட வராது. என்னையும் என் மங்கமாவையும் குறிவெச்சி பிடிச்சி அந்த அன்வரை தீர்த்து கட்டிட்டு கிளம்பிடுவேன். கவலைப்படாதீங்க…” 

“அய்யோ… திரும்ப கொலைன்னு ரொம்ப சாதாரணமா பேசறீங்களே! தப்பிச்சது போதாதா.. இன்னும் எதுக்கு அதெல்லாம்?” 

“டேய்… எனக்கே உபதேசம் பண்றியா நீ? வாய மூடப் போறியா இல்லையா?” முனிரத்னம் பலமாக கத்தும்போது பாஸ்கரதாஸ் மெல்ல நழுவப் பார்க்கிறான் எகிறிப் பிடிக்கிறது முனிரத்தினத்தின் கரங்கள்.

“எங்க தம்பி ஓடப் பாக்கறே. இனி நீ கொஞ்ச நாளைக்கு நான் சொல்றத கேட்டுத்தான் தீரணும். உன் கிட்டே விசேஷ சக்தி இருக்கு. அது எனக்கு ரொம்ப அவசியம். அதை வெச்சு நான் என்னென்ன பண்ண வேண்டியிருக்கு தெரியுமா?” பாஸ்கரதாஸ் அதைக் கேட்டு மர்மமாக சிரிக்கிறான். 

அத்தியாயம்-8

“தண்ணீர்க்குடம் போல் உள்ளங்கையின் மத்தியில் இருக்கின் அவன் தரித்திரனாகியும், யாவரும் நிந்திக்கும் படியான பெயருடையவனாகியும் வறுமை யடைகுவான்…” 

செயின்ட் பீட்டர் சர்ச்! 

அசோக மரக்கூட்டங்களுக்கு நடுவே நூறு அடி உயர சிலுவை முகப்போடு, ‘சத்தியமே தேவன்’ என்கிற ஸ்லோகன் எழுத்துக்களோடு, முன் வந்து நிற்கும் போலீஸ் ஜீப்களை பார்த்து நிற்கிறது அந்த புனித சர்ச். திபு திபு திபு திபு… 

சர்ச்சின் நாலாபுறமும் போலீஸ் சுற்றி வளைக்க, உள்ளே நுழைகிறார் இன்ஸ்பெக்டர். ஒருவர் ஒரு எல்லைக்கு மேல் போகாமல் நிற்பவர் ஷூவை கழட்டும்போது தள்ளாடியபடி பாதிரியார் ஒருவர் வருகிறார். 

அவரைப் பார்க்கவும்- 

“குட்மார்னிங்.. ஃபாதர்…” 

“வெரி குட்மார்னிங்… ஜெபக்கூட்டம் ஒன்பது மணிக்கு மேல்தானே… நீங்க என்ன ஏழரைக்கே வந்திருக்கீங்க?” ஃபாதர் கேட்கிறார். 

“ஃபாதர், நான் ஜெபக்கூட்டத்துக்காக வரலை. நான் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர்.  ஃபாதர் காபிரியேலை பார்க்கத்தான் வந்துருக்கேன்.” 

“ஃபாதர் காபிரியேல் நான்தான்.” அவர் சாவதானமாக சொல்வதை கேட்டு இன்ஸ்பெக்டரிடம் சற்று குழப்பம். 

“நீங்களா… ஃபாதர் காபிரியேல்?” 

“யெஸ்… நானேதான் – ஏன் என்னைப்போல வேற யாரையாவது பார்த்தீங்களா?”

இன்ஸ்பெக்டர் தாடையை வருடியபடி யோசிக்க ஆரம்பிக்கிறார். வரும்போதே ஒரு எண்ணம் இருந்தது. “நிச்சயம் இந்த விஷயத்திற்கு வந்திருப்பவர் அசல் பாதிரியாராக இருக்கமுடியாது.” 

அந்த எண்ணத்தை வலுப்படுத்திக்கொள்கிறார் இன்ஸ்பெக்டர். 

“சாரி ஃபாதர்… நேத்து ஜெயிலுக்கு ஒரு பாவ மன்னிப்புக்காக உங்களை கூட்டிக்கிட்டு போறதா இருந்தோம், ஆனா…” 

“ஆனா- என்ன ஆனா… எனக்குகூட போன் வந்தது. நான் இந்த நிமிஷம் வரை காத்துகிட்டுதான் இருக்கேன். நான் ரெடி போகலாமா?” 

இன்ஸ்பெக்டர் தடுமாறத் தொடங்குகிறார்.

“என்ன தடுமாற்றம்?” 

“ஸாரி ஃபாதர். வெரி ஸாரி ஃபாதர். உங்க பேரோடு ஒரு போலி பாதிரியார் நேத்து ஜெயிலுக்குள் வந்துட்டு போய்ட்டார். சும்மா போகலை, ஒரு தூக்கு தண்டனை கைதி தப்பிக்க அவனுக்கு துப்பாக்கியையும் தந்துட்டு போயிருக்கார்..” 

“என்ன பேசறீங்க நீங்க. உங்க டிபார்ட்மெண்ட்டுக்கு கூட வா உண்மையான நபருக்கும் பொய்யான நபருக்கும் வித்தியாசம் தெரியல…” 

“தெரியாமதான் போயிடிச்சு. எப்பவுமே பாதுகாக்க நினைக்கறவங்களுக்கு சில வழிகள்தான். ஆனா அதுல நுழைய நினைக்கறவங்களுக்கு பல வழிகளாச்சே.. என்ன பண்றது?”

“கர்த்தரே…இது என்ன சோதனை?” – ஃபாதர் ஈற்று மனம் கசிகிறார். 

“இந்த சர்ச்சுக்கு உங்களை கூட்டிகிட்டு வரச் சொல்லி ஜெயில்ல இருந்து ஒரு டாடா சுமோ வேனையும், ஒரு போலீஸ் சர்ச்சுக்குள்ள நுழைய அவசியமில்லாத படி வெளியிலேயே காத்திருந்திருக்கார். வேறு ஒரு ஃபாதர். அவர்தான் தன்னை காபிரியேல்ன்னு சொல்லி கிட்டவர், உருவம், பேச்சு, பைபிள், அப்புறம் இடம் எல்லாம் கொஞ்சம்கூட ஏமாத்தலை. இப்படி எல்லாம் ஆகப்போகுதுன்னு துளிகூட எதிர்பார்க்கலை. ஏன்னா, அந்த கைதி கொஞ்சம்கூட தப்பி ஓட முயற்சிக்கவே இல்லை. சாகணும்… சாகணும்…. சீக்கிரமா செத்துணும்னுதான் புலம்பிக்கிட்டேயிருந்தான். மொத்தத்துல எல்லாரையும் தூக்குக் கயிறை உறுதிபட பார்க்கக் செய்துட்டு அவன் மட்டும் தப்பிட்டான். 

நிச்சயம் இதுக்கு ஒரு விசாரணைக் கமிஷன் இருக்கு ஏன்னா, அவன் சாதாரண கைதி இல்ல, தூக்கு தண்டனை கைதி. ரொம்ப செல்வாக்கானவன்..”

“இன்ஸ்பெக்டர், எனக்கு அந்த கைதியைவிட என் பேர்ல வந்த அந்த ஏமாற்று அன்பர் யாருங்கறதுதான் முக்கியம். இது புனித அங்கி, வேஷம் போட உங்களுக்கு வேற உடையே கிடைக்கலையான்னு நான் அந்த அன்பர் கிட்ட கேட்கணும்.” 

“நிச்சயம் இருபத்திநாலு மணி நேரத்துல பிடிச்சுருவோம்.ஃபாதர், விசாரணைக்காக உங்க கிட்டேயும் வருவோம்.” 

“வாங்க என் ஒத்துழைப்பு எப்பவும் உண்டு.” 

நிஜ ஃபாதர் காபிரியேலின் கனிவான கருத்தோடு இன்ஸ்பெக்டர் கிளம்புகிறார். சிறிது தொலைவு செல்பவர் நின்று, “ஃபாதர், ஒரு சின்ன ரிக்வெஸ்ட்.” 

“தெரியும்..சர்ச்சுக்கு பாதுகாப்பா போலீஸ் இருப்பாங்க. என்மேலயும் சந்தேகப் பார்வை இருக்கும்.”

ஃபாதரின் பதிலில் பயங்கர எதார்த்தம். 

“குதிரை போன பின்னே லாயத்தை பூட்றீங்க… பரவால்ல… சட்டம் தன் கடமையை செய்யத்தானே வேணும்… கர்த்தரே.” 

ஃபாதர் அலுப்புடன் திருப்புகிறார். இன்ஸ்பெக்டரிடம் வழிசல். 

அத்தியாயம்-9

“கண்கள் தாமரை இதழ் போலிருந்தால் தனவானாவான். அல்லி போலிருந்தால் பண்டிதனாயிருப்பான். தேன் வர்ணம் போலிருந்தால் மிகுந்த தனவானாவான். பூனைக்கண்ணன் பாபியும். மைகளில் மயிரில்லாதவன் பரம தரித்திரனும் ஆவான்.” 

எட்டு மணிச் செய்தியில் முனிரத்னம் தப்பிய செய்தி விலாவாரியாக வாசிக்கப்பட, அதைக் கேட்டு கைதட்டி குதூகலிப்பவன் இரும்பாடி. 

பெயரைப் போலவே உருவிலும் வித்தியாசமானவன். போலீசின் தேடல் பட்டியலில் முனிரத்னம் வரிசையில் இருக்கும் அவனது கூட்டாளிக்கு ஒரு கண் தான். மறு கண்ணை போலீஸ் துப்பாக்கி ஒன்றின் தோட்டா திராட்சைப் பழத்தை கட்டை விரலில் நசுக்கினது போல சிதற அடித்துவிட்டது. 

அதுபோல் உடம்பெல்லாமும் அங்கங்கு வெட்டு, குத்து காயங்கள், குண்டுச் சிதைவுகள், குறிப்பாக, ஒரு தப்பி ஓடும் முயற்சியில், முழங்காலில் பந்துகிண்ண மூட்டில் குண்டு பட்டதில் அந்த பாகமே காலி. அதனால் இப்பொழுது கட்டைக் கால்தான். விழுப்புண்களின் மொத்த உருவம் இரும்பாடி. 

நூறு அடி தனியாக நடப்பதே எவரெஸ்ட் ஏறுவது போல ஒரு சிரமமான விஷயம். ஆகையால் கூடவே இடும்பன், மாது, உருளி என்று கொலைகார சகாக்கள். 

சேலம் கஞ்சமலை பக்கமாக சித்தர் கோயிலை ஒட்டிய சுற்றுப்புறத்தில் குடிசை வீட்டில்தான் தற்போது வாசம். ஆனாலும் டிஷ் ஆன்ட்டெனா மூலம் அங்கிருந்த படியே டிவி பார்க்க வதிகள் செய்து கொண்டு ஒரு சாய்வு நாற்காலியில் சதா சாய்ந்து கிடப்பவன். 

சுற்றிலும் சகாக்கள் நின்று கொண்டிருக்க, டிவி செய்தியை கேட்டு குதூகலித்துக் போகிறான். 

“சபாஷ்டா இடும்பா… நீ போட்ட பாதிரியார் வேஷத்துக்கு பலன் கிடைச்சிடுச்சிடோய்…” – என்று அவன் கரத்தை தேடிப் பற்றுகிறான். 

“அவசரப்படக்கூடாது இரும்பாடி… போலீஸ் ஒண்ணும் ஈனாவானா இல்லை. முனிரத்னம் இங்கே வர்ற வரை நமக்கு பிரச்சினைதான்.”

“எல்லாம் வந்துடுவான்… அந்த ஆயிரம்பேர் கோட்டையையே தாண்டிட்டான். இங்க வர்றதுதானா பெரிசு?”

“வந்துடுவான்னே வெச்சுக்குவோம். நம்மகிட்ட அவன் தங்கம் வெச்சுருக்கிற இடத்தை சொல்லணுமே.”

“இவ்வளவு கஷ்டப்பட்டு வெளியே கொண்டு வந்திருக்கோமே, சொல்லாமலா போவான்?”

“எங்க… முனிரத்னம் தன் நிழலையே நம்பாதவன்கறது உனக்கு தெரியாதா?”

“அவ்வளவுதானே உனக்கு தெரியும். அதுக்குமேல் அவன்கிட்ட விஷயத்தை வாங்கறது பத்தி எதுவும் தெரியாதுல்ல உனக்கு…?”

“அப்படின்னா.?” 

“இப்ப எதையும் கேக்காதே. போய் வேலையைப் பார். அவனை வெளியே கொண்டுகிட்டு வந்திருக்கறது பழையபடி அவனுக்கு கீழ நாம கைகட்டி வேலை பார்க்க இல்ல. அவன்கிட்ட இருக்கிற தங்கத்தையும், பணத்தை எடுத்துக்கதான்…” 

“முடியுங்கறே..?” 

”முடிச்சுக்காட்றேன், அப்ப தெரியும் இந்த இரும்பாடி யாருன்னு.” 

“புதிர் போடுறியே இரும்பாடி… உன் பேச்சுலயும் ஏதோ ரகசியம் இருக்கிற மாதிரி தெரியுது. முனிரத்னம் எப்பவும் எங்களை நம்புனதில்லை. நீயுமா?” – மாது தன் ஒரு மாத தாடியை தடவியபடியே கேட்கிறான். 

“டேய்! உங்கள நம்பாம போவேனா? களவாணித்தனம் பண்ணும் போதும், நம்பிக்கை இல்லாம, கூட இருந்தே குழிவெட்றதும், தான் தப்பிக்க கூட்டாளிங்களையே மாட்டி விட்றதெல்லாம் முனிரத்னம்தான். நானில்லை. 

எனக்கு இப்ப ஒரு காலில்லை. பதிலா உங்களதான் நான் காலா நினைக்கிறேன். இப்ப நான் வாயதிறந்தா ஆபத்தாயிடும். ஆனா ஒண்ணு.. காரியம் கச்சிதமா நடந்துகிட்டிருக்கு. 

முனியை வெளிய கொண்டுட்டு வந்தாச்சு. 

அந்த ஆப்ரேட்டர் ராமலிங்கம் ஊட்லயும் தங்க வெச்சாச்சு. அடுத்து நமக்கு சவால் விட்ட அந்த அன்வர் பயலை போட்டுத்தள்றதுதான். அதை கூட நாம செய்ய வேண்டாம். முனியே முடிச்சுடுவான் அவன் கதையை.” 

இரும்பாடி சொல்லச் சொல்ல அந்த கள்வர்கள் முகத்தில் ஆச்சரியமும், அதிர்வும்தான் உருவாகி பரவுகிறது. அதிலும் உருளியிடம் அதன் அளவுகள் மிக அதிகமாய். 

“என்னா உருளி… எதுவும் பேசமாட்டேங்கறே நொண்டிப்பய நமக்கே அல்வா தந்துகிட்டு இருக்கானேன்னுதானே நினைக்கறே…?” 

“சேச்சே…அப்படி எல்லாம் இல்லை. தப்பினா மூடிக்கிட்டு இங்க வராம, எதுக்கு அன்வர்ங்கற அந்த போலீஸ்காரனுக்கெல்லாம் வெட்டியான குறி வெச்சுகிட்டு…” 

உருளியின் கேள்விக்கு இரும்பாடி தன் பொட்டை கண்ணை போட்டுக்கொண்டு இடி இடி என்று சிரிக்கிறான். அந்த சிரிப்பு அப்படியே சுருங்கி ஆவேசமாக மாறுகிறது. 

“எதுக்குன்னா கேட்ட..? அவனுக்குத்தான் நம்ம ஒவ்வொரு செயலும் அத்துபடி. நம்ம ஒவ்வொருத்தர் ஜாதகமும் அவன் கிட்டே இருக்கு. முனியைபிடிச்சு கோர்ட்ல ஒப்படைச்சவன் அவன் காதலி மங்கம்மாவை என்ன செஞ்சான்னு தெரியுமா உனக்கு?” 

உருளி தெரியாது என்பது போல பலமாக தலையசைக்கிறான். 

“தெரியாதுல… அப்ப வாயை மூடு. ஆனா அந்த போலீஸ் அதிகாரி அன்வருக்கு நூறு சதம் முனிரத்னம் தங்கம் வச்சிருக்கான்கறது தெரியும். 

அதை எப்படியாவது கண்டுபிடிக்கணும்னுதான் அவன் கடைசி நிமிஷம் வரைல முயற்சி செய்தான், மங்கம்மாவை சட்டத்துக்கிட்டே ஒப்படைக்காமே முனிரத்னத்தை பாத்து இப்பகூட கெட்டு போயிடலை தங்கம் இருக்கற இடத்தை சொல்லு. உனக்கு விடுதலை வாங்கித் தர முயற்சி செய்யறேன். மங்கம்மாவையும் உன்கிட்ட ஒப்படைக்கிறேன். இல்லேன்னா அவ மூலமாகவே எப்படியாவது எல்லாத்தையும் தெரிஞ்சுக்குவோம்னு சொன்னான். 

முனிரத்னம் கடைசிவரை அசைஞ்சு கொடுக்கல. தூக்கு தண்டனை உத்தரவு உறுதியாயிட்ட பிறகும், தன் கடைசி ஆசை மங்கம்மாவை பாக்கறதுதான்னு முனிரத்னம் சொன்ன பிறகும், மங்கம்மா எங்க இருக்கான்னே தெரியாதுன்னுட்டான் – அந்த போலீஸ் நாய் எவ்வளவு நெஞ்சழுத்தம்?”

இரும்பாடியின் விளக்கம் அனைவரையும் கட்டிப் போடுகிறது. 

“அப்படின்னா, முனிரத்னம் காதலி மங்கம்மா இப்ப அந்த ஆபீசர் பிடியிலேதான் இருக்காளா?” 

“வேறே எங்கே போயிருக்க முடியும்?” 

“இதெல்லாம் உனக்கெப்படி தெரியும் இரும்பாடி?”

“இந்த இரும்பாடியே மனு போட்டு முனிரத்னத்தை பார்க்கப் போயிருந்தேன். அப்ப…” 

“என்னது, நீ போனியா… போலீசு உன்னை அடையாளம் கண்டுக்கலையா?” 

“இல்ல… அங்காளம்மன் கோவில் பூசாரி பூசை முத்துங்கறே பேர்ல அர்ச்சனை பிரசாதம் தரணும்னு சொல்லி போய் பார்த்தேன். அப்ப நம்ம சங்கேத பாஷையிலேயே இவ்வளவு விஷயத்தையும் சொல்லி விட்டான் முனிரத்னம்.” 

“எப்படி இரும்பாடி இது சாத்தியம். நீ என்னதான் மாறுவேஷம் போட்டுகிட்டு போயிருந்தாலும் உன் நொண்டிக் கால் காட்டி கொடுத்திருக்குமே..?”

“முட்டாளுங்களா… மனசு வச்சா ஆயிரம் வழி இருக்கு. இப்பகூட அந்த வழியதான் முனிரத்னத்துக்கு நான் காட்டப் போறேன்…”

”என்ன வழி அது?”- மாதுவும், உருளியும் கண்கள் காதுவரை விரிய கேட்கின்றனர். சற்று தடுமாறியபடி எழுந்திருக்கிறான் இரும்பாடி. 

கூரை வீடு அது கூரைச் சரிவில் வேல்கம்பு. அரிவாள்,நாட்டுத் துப்பாக்கி, உரிப்பானை, அதனுள் வெடிகுண்டுகள் என்று பல பொருட்கள். உரிப்பானை யில் வெடிகுண்டுகளுக்குள் ஒரு தீப்பெட்டி. அதை எடுக்கும் அவன் கரங்கள் அந்த தீப்பெட்டியை உருளியிடம் தந்து திறந்து பார்க்கச் சொல்கிறான். 

அவனும் உள்ளடங்கியிருக்கும் சதுரத்தை வெளித் தள்ள, தீக்குச்சிகள் படுத்துக் கிடக்கும் இடத்தில் மிளகு மிளகாய் வண்டுகள் கொசகொசவென்று ஒன்றின் மேலொன்று ஊறிக்கொண்டு. 

“என்ன இரும்பாடி, தீப்பெட்டில இத்தன வண்டுப் பூச்சிங்க…” 

“அது பேர் என்னன்னு தெரியுமா?” 

“வண்டுப் பூச்சிங்க..” 

“அது பொதுவான பேர். அந்த பூச்சிங்களுக்கு குரூரகதம்பின்னு பேர். காட்டுப் பகுதியில் கஞ்சாப்பயிர் அதிகம் வளரும் இடத்துல அந்த செடித் தண்டுகள்ல இது இருக்கும்.” 

“இது எதுக்கு?” 

“இதை எப்படியாவது முனிரத்னத்துகிட்ட சேர்த்துடு. அப்புறம் பார்…”

“இதுலகூட ரகசியமா? இது என்ன பண்ணும்?” 

“என்ன பண்ணுமா? வா இங்க கிட்ட..” 

தன்னை நெருங்குபவன் முகத்தை உற்றுப் பார்க்கும் இரும்பாடி, தன் தலையை வலது கையால் அழுத்தத் தேய்த்து, துளி எண்ணெய் பசையை உருவாக்கி, அதை உருளியின் இரு கன்னத்தின் மேலும் பரபரவென்று தடவுகிறான். 

மாதுவும், இடும்பனும் ஒரு அபார சர்க்கஸ் காட்சியை பார்ப்பதுபோல வியந்து நிற்கின்றனர். இரும்பாடியின் விரல்கள் மிக எச்சரிக்கையாக சில வண்டுகளைப் பிடித்து, அவன் கன்னத்தின் மேல் விடுகின்றன. 

“என்ன பண்றே- கடிச்சு வைக்கப்போகுது.”

“கடிக்கட்டும். அதானே வேணும்?” 

இரும்பாடி சொல்லும்போதே வண்டுகள் அவன் சதைப் பரப்பை கடிக்கத் தொடங்க, உருளி அவைகளை பிடிக்க கைகளை உயர்த்துகிறான். 

பட்டென்று அவன் கைகளை பற்றித் தடுக்கிறது இரும்பாடியின் கரங்கள். வண்டுகள் நறுக் நறுக்கென்று கண்ணுக்கு தெரியாத தங்களது கொடுக்குப் பற்களால் கடிக்க, உருளி ‘ஆ ஊ’ என்று அரற்ற ஆரம்பிக்கின்றான். 

முதலில் சில வினாடிகள்… பின் சில நிமிடங்கள். இப்பொழுது உருளியின் முகமே வீங்கிப் போய் மாறி விட்டிருக்கிறது. ஒட்டிப் போய் கிடக்கும் கன்னமும், உலர்ந்து கிடக்கும் இமையைச் சுற்றிய பரப்பும், குறுகலான நெற்றியும் தங்கள் மாநிறத் தோற்றத்தில் இருந்து மாறி சிகப்புக்கு தாவிவிட கழுத்துப் பாகமும் புடைக்கத் தொடங்குகிறது. 

“போய் கண்ணாடியைப் பார்…” என்று இரும்பாடி அவனை கண்ணாடி நோக்கி திருப்ப, கண்ணாடியில் தன் முகத்தை பார்க்கும் உருளி உறைந்து போகிறான். 

“இது நானில்ல…நானில்ல..” 

“சரியா சொன்னே… மூணு நாளைக்கு நீ இப்படித் தாண்டா திரியணும். அப்புறமா வீக்கம் வடிஞ்சாலும் சுருக்கம் போக பதினஞ்சு நாளாகும். இந்த பதினஞ்சு நாளைக்கு நீயா சொன்னாதான் உன்னை மத்தவங்களுக்குத் தெரியும்.” 

மற்றவர்களுக்கு புரிந்து போகிறது. 

“ஓஹோ- இப்படிக்கூட வேஷம் போட முடியுமா?”

“பார்த்துப் போடணும். ஓவரா கடிச்சு வெச்சா விஷம் கண்ணுல இறங்கி குருடாகிட வேண்டி வரும். காட்டுல பதுங்கி இருந்த சமயத்துல கன்னங்கரேல்னு ஒருத்தனை பார்த்து அவன் மூலமா தெரிஞ்சுகிட்ட ரகசியம் இது.” 

“அப்ப இது இன்னிக்கு முனிரத்னத்தை மாத்த போகுதா?” 

“மாத்தி ஆகணும். அப்பதான் அடுத்த கட்டம்.”

உருளி அந்த தீப்பெட்டியை கையில் எடுத்துக் கொள்கிறான். 

“பூசணிக்காய் வாழத்தாரு வாங்கிகிட்டு, அந்த வீட்டுக்காரன் ராமலிங்கத்தோட மாமன்னு உறவு கொண்டாடிகிட்டு போ. உள்ள போய் தொடர்ச்சியாக இருமிட்டு, முனியப்பா வந்து காப்பாத்துப்பான்னு பலமா கத்தி வேண்டிக்கோ. முனி கிணத்துக்குள்ள பதுங்கி இருந்தா வெளிய வந்து உன் முன்னே நிப்பான். போ” 

அடுத்த நொடியே உருளி தீப்பெட்டி வண்டுகளோடு கிளம்புகிறான். செய்திகள் முடிந்து தலைப்புச் செய்தியில் வந்து நின்றிருக்க, முனிரத்னத்தின் பல கோண புகைப்படங்களை காட்டி, அறிவிப்பாளர் தகவல்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார். 

பிடித்துக் கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் என்கிற முத்தாய்ப்பான முடிப்போடு. 

– தொடரும்…

– சொர்ணரேகை (நாவல்), முதற் பதிப்பு: 1999, திருமகள் நிலையம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *