சபிக்கப்பட்டவர்கள்

0
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 14,752 
 

விபூதிபூஷண் பந்தோபாத்யாய
தமிழில்: புவனா நடராஜன்

என் வாழ்க்கையில் அந்த அதிசயமான, அபூர்வமான நிகழ்ச்சி நடந்தது!

மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு வேலையாக நான் பாரிஷால் பகுதிக்குப் போக வேண்டியிருந்தது.

இந்தப் பகுதியின் படித்துறையிலிருந்து, பன்னிரண்டு மணியளவில் படகில் புறப்பட்டேன். பாரிஷால் பகுதியில் வசித்த ஒருவரும் என்னுடன் படகில் வந்தார். ஏதோ பேசிக்கொண்டே வந்ததில் நேரம் கழிந்தது!

அப்போது துர்க்கா பூஜை முடிந்திருந்தது. வானத்தில் மேகங்கள் கூட்டம் கூட்டமாகத் தவழ்ந்துகொண்டிருந்தன. இடையிடையே மழைத் தூறலும் விழுந்துகொண்டிருந்தது. சந்தியாக் காலத்திற்குச் சற்று முன்பு, வானம் சற்றே வெளிறிப் போயிருந்தது. உடைந்த மேகங்களுக்கிடையே சதுர்த்தசியின் நிலவு லேசாக மின்னிக்கொண்டிருந்தது.

சந்தியாக் காலம் நெருங்கியதுமே நாங்கள் நதியின் முக்கியமான அகலமான பகுதியை விட்டுவிட்டு ஒரு கால்வாய்க்குள் நகர்ந்து போய்க்கொண்டிருந்தோம். இந்தக் கால்வாய் இங்கிருந்து ஆரம்பித்து நோயாகாளியின் வடக்குப் பகுதி வழியாக ஓடி நேரயடியாக மேகனா நதியில் போய்க் கலக்கிறது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கிழக்கு வங்காளத்துக்கு இதுவரை நான் போனதில்லை. இப்போதுதான் முதல்முறையாகப் போகிறேன். எல்லாக் காட்சிகளுமே புதியனவாக இருந்தன. நீண்ட கால்வாயின் இரு மருங்கிலும் மழை நீரில் குளித்திருந்த கேயாவின் காடுகளில், மேகத்தால் பாதி மூடப்பட்டிருந்த சதுர்த்தசியின் ஒளி மின்னிக்கொண்டிருந்தது. இடையிடையே நதியின் ஓரத்தில் பெரிய பெரிய நிலப்பரப்புகள் தெரிந்தன. ஷட்டி, மூங்கில், ஃபெர்ன் செடிகள் மிக அடர்த்தியாக வளர்ந்து சிற்சில இடங்களில் நதிநீரை முத்தமிட்டுக்கொண்டிருந்தன. வெளியில் சற்றே குளிர் இருந்தாலும் நான் படகில் இருந்த குடிசைப் பகுதிக்கு வெளியில் திறந்த வானத்தின் கீழ் உட்கார்ந்துகொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். பாரிஷாலின் அந்தப் பகுதி சுந்தரவனக் காடுகளுக்கு அருகில் இருந்தது. சிறிய கால்வாய்களும் நதிகளும் எல்லாப் பக்கத்திலும் கண்ணில் பட்டன. கடலும் அருகில்தான் இருந்தது. பத்துப் பதினைந்து மைல்கள் தொலைவில், ஹாத்தியா, சந்த்வீப் பகுதிகள் இருந்தன. இரவு தொடங்கிவிட்டது. கால்வாயின் இருகரைகளிலும் இருந்த ஜனநடமாட்டமே இல்லாத காட்டுப் பகுதி, தெளிவில்லாத நிலவொளியில் அற்புதமாகக் காட்சியளித்தது. இந்தப் பகுதியில் மக்கள் யாருமே வசிக்கவில்லை. வெறும் காடு. கரையில் பெரிய பெரிய ஹோக்லா செடிகள்!

என்னுடன் பயணம் செய்துகொண்டிருந்தவர் “இரவாகிவிட்டது. வெளியில் இருக்காதீர்கள் . . . வாங்க கூரைக்குள்ள வாங்க . . . இது மாதிரி காட்டுப் பகுதியில . . . புரியுதா?” என்றார்.

அதற்குப் பிறகு அவர் சுந்தரவனக் காடுகளைப் பற்றிய கதைகளைச் சொல்லிக்கொண்டிருந்தார். அவருடைய சித்தப்பா ஒருவர் காட்டிலாகாவில் வேலைசெய்துகொண்டிருந்தாராம். அவருடைய லாஞ்சில் ஒருமுறை சுந்தரவனக் காடுகளின் பல பகுதிகளை நன்றாகச் சுற்றிப் பார்த்திருக்கிறாராம்.

இரவு மணி பன்னிரண்டு இருக்கலாம். எங்கள் படகில் ஒரேயொரு படகோட்டிதான் இருந்தான். அவன், “அய்யா கொஞ்சம் போனாக்கா, பெரிய நதி வருது. என்னால தனியா அதுல போக முடியாது. படகு இழுக்கும், தடுமாறும் . . . அதனால படகை இங்கேயே நிப்பாட்டிக்கப்போறேன்” என்றான்.

படகை அங்கேயே கட்டிப்போட்டான். பெரிய பெரிய மரங்களுக்கிடையே நிலவு காணாமல் போய்விட்டது. நீண்ட கால்வாயின் இரு கரைகளிலும் அடர்த்தியான, இருள் நிறைந்த காடு இருந்தது! நான்கு திசையிலும் நிசப்தம். பட்டாம்பூச்சிகள்கூட மௌனமாகிப் போயின . . . என்னுடன் இருந்தவரிடம், “ஸார் . . . இது ரொம்பக் குறுகிய கால்வாயாக இருக்கு . . . கரையிலிருந்து, காட்டுக் குள்ளிருந்து புலி படகுமேலே பாய்ஞ்சு வந்திடுமா ஸார்?” என்று கேட்டேன்.

“வந்து பாயாவிட்டால்தான் நான் ஆச்சர்யப்படுவேன் . . .” என்றார் அந்த மனிதர்!

இதைக் கேட்டதும் பயந்துபோய்க் குடிசைக்கு நடுவில் போய் உட் கார்ந்துகொண்டேன். சிறிது நேரம் உட்கார்ந்துகொண்டிருந்த பிறகு அந்த மனிதர், “வாங்க . . . கொஞ்ச நேரம் தூங்கலாம். தூக்கம் எப்படியும் வராது. தூங்குவதும் சரியல்ல. வாங்க . . . கொஞ்ச நேரம் கண்ணை மூடிக்கிட்டுப் படுத்திருக்கலாம்.” என்றார்.

சிறிது நேரம் மௌனமாக இருந்த பிறகு, அந்த மனிதரைக் கூப்பிடப் போனேன். அவர் அதற்குள் நன்றாகத் தூங்கிப்போயிருந்தார். பட கோட்டியும் கண் விழித்திருந்ததாகத் தெரியவில்லை. நான் மட்டும் ஏன் கண்ணைக் கொட்டக் கொட்ட விழித்துக்கொண்டிருக்க வேண்டும்? நானும் அவர்கள் வழியில் போக முடிவுசெய்தேன்.

அதற்குப் பிறகு நடந்ததுதான் என் வாழ்வில் நான் பெற்ற அற்புதமான அனுபவம்! தூங்கப் போனேன். திடீரென்று இருண்ட காட்டுப் புதர்களின் மறுபக்கத்தில் வெகுதொலைவிலிருந்து அடர்ந்த காட்டுக்குள்ளிருந்து யாரோ எங்கோ கிராமபோன் இசைத்தட்டை இசைத்தார்கள் . . . அவசர அவசரமாக எழுந்து உட்கார்ந்தேன். கிராம போனா? இந்த ராத்திரியில் இந்தக் காட்டுக்குள்ளிருந்தா? காதைத் தீட்டிக்கொண்டு கேட்டேன். அல்ல, அது கிராமபோன் அல்ல. இருட்டில் ஹிஜல், ஹிந்தால் புதர்கள் மிக மிக அடர்த்தியாக வளர்ந்து கிடக்கும் அவ்விடத்திலிருந்து யாரோ பரிதாபமான உச்சக்குரலில் எதோ சொல்கிறார்கள். இன்னும் சிறிது நேரம் கவனித்து உற்றுக் கேட்ட பிறகு, ஒன்றுக்குமேல் அதிகமான எண்ணிக்கை அளவில் பலர் ஒரே குரலில் ஏதோ சொல்கிறார்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் வீட்டில் கிராமபோன் இசைத்தால் சில சமயம் தெளிவாக இருக்கும். சில சமயம் தெளிவில்லாமல் இருக்கும். ஆனாலும் ஒரே நீண்ட ஒலியின் அலை வந்து காதுக்குள் மோதும். இந்த ஒலியும் அப்படித்தான் இருந்தது. தெளிவில்லாத வங்காள மொழி வார்த்தைகள் காதில் விழுந்ததாகத் தோன்றியது. ஆனால் அவை தெளிவில்லாமல் இருந்தன. என்ன வார்த்தைகள் என்பது புரியவில்லை. இந்த ஒலிகளைச் சில நிமிடங்கள்வரை கேட்க முடிந்தது. பிறகு சில நிமிடங்கள்வரை ஒரே அமைதி. மறுபடியும் தெளிவில்லாத வார்த்தைகளின் ஒலி. அவசரம் அவசரமாக எழுந்து குடிசைப் பகுதிக்கு வெளியில் வந்தேன். நான்கு திசையிலும் பீர்க்கங்காய் விதை போலக் கன்னங்கரேலென்று இருள். காட்டுப் பகுதியில் அமைதி. படகுக்குக் கீழே ஓடிக்கொண்டிருந்த நதிநீரின் சல சலப்பும் படகின் மீது மோதும் சப்தமும் மட்டும் கேட்டன. இரவின் கடைசிப் பகுதியில் வீசிய காற்றில் ஜலத்தின் ஓரத்தில் கேயா புதரில் ஒருவிதமான தெளிவில்லாத ஒலி கேட்டது. கரையிலிருந்து தொலைவில் ஹிஜல் செடியின் கறுப்பு வேர்கள் இருளில் ஓர் அதிசயமான உருவத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்தன.

மற்ற இருவரையும் எழுப்பிவிடலாமா என்று ஒரு கணம் யோசித்தேன். வேண்டாம். பாவம் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தார்கள். கூப்பிட்டு என்னாகப் போகிறது? அதைவிட நானே கண்விழித்து உட்கார்ந்திருக்க வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டேன். நின்றபடியே ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்தேன். பிறகு குடிசைப் பகுதிக்குள் போகலாம் என்று நினைத்தபோது, அந்த இருள் சூழ்ந்த, அடர்ந்த வனப் பகுதியின் ஒரு பகுதியிலிருந்து தீட்டிய அம்புபோலக் கூர்மையான உச்சக்குரலில் ரீங்காரமிடும் ‘ஜீ ஜீ’ வண்டின் ரீங்காரத்தைப் போல ஒலி ஆகாயத்தின் இதயத்தைக் கிழித்துக்கொண்டு எழுந்தது. ஓ படகில போறவங்களே . . . நீங்க யாரு . . ? நாங்க இங்க மூச்சு முட்டிச் செத்துக்கிட்டு இருக்கோம் . . . எங்களைத் தூக்கி விடுங்க . . . தூக்கிவிடுங்க . . . எங்களைக் காப்பாற்றுங்க . . .

படகோட்டி பதற்றத்துடன் எழுந்து ஓடிவந்தான். நான் அந்த இன்னொரு மனிதரை எழுப்பினேன், ஸார். . ! ஸார். . ! எழுந்திருங்க . . . எழுந்திருங்க . . .

படகோட்டி என்னருகில் வந்து நின்றான். பயத்தில் அவன் குரல் நடுங்கியது. அல்லா! அல்லா! காதுல விழுந்திச்சா பாபு . . .?

அந்த இன்னொரு மனிதர், “என்ன ஸார்! என்ன ஸார்! எதுக்குக் கூப் பிட்டீங்க? எதாவது காட்டு மிருகம் வந்திருக்குதா ஸார்?” என்றார்.

நான் விஷயத்தை விளக்கிச் சொன்னேன். அவரும் பதற்றத்துடன் படகின் நடுவில் இருந்த குடிசைப் பகுதியிலிருந்து வெளியில் வந்தார். மூவருமாகப் படகின் திறந்த வெளிப் பகுதியில் வந்து நின்றோம். நான்கு திசையிலும் மறுபடியும் அமைதி. நீர் மட்டம் ஏறுவதால் நதி நீரில் ஏற்படும் அழுத்தம், வேகம் காரணமாகப் படகின் அடிப்பகுதியிலிருந்து இன்னும் பலத்த ஓசை எழுந்தது.

அந்த மனிதர் படகோட்டியிடம் கேட்டார், “அப்ப இது என்ன . . . ?” “ஆமாம் அய்யா . . . இதுதான் கீர்த்திபாஷாவின் பெரும்பள்ளம்” என்றான் படகோட்டி.

“அப்ப ஏன் இந்த நடுராத்திரியில படகை இங்க கொண்டுவந்து நிறுத்தினே? முட்டாள் . . . அசடு . . .” என்றார்.

“நாம மூணுபேரு இருக்கோம் அப்படின்னுதான் நிறுத்தினேன் பாபு! தண்ணீர் மட்டம் உயர்ந்துகிட்டே போறதே படகைப் பின்னால திருப்பிக்கிட்டுப் போக முடியாது அய்யா!”

அவன் பேசியதைக் கேட்டுவிட்டு, அந்த மனிதரைப் பார்த்து “என்ன ஸார்! உங்களுக்கு எதாவது தெரியுமா? என்ன விஷயம்?” என்று அவரிடம் கேட்டேன்.

அவர் “ஏய்! உன் கெரோஸின் விளக்கை ஏத்திவை. விளக்கை ஏத்தி வச்சிட்டு ஒக்கார்ந்திருக்கலாம் . . . ராத்திரி கழிய இன்னும் நிறைய நேரம் இருக்கு” என்றார். பயம் தெரியவில்லை என்றாலும் ஆச்சர்யம் காரணமாக அப்படியே திகைத்துப் போய்விட்டோம் .

படகோட்டியிடம், “ ஒனக்குச் சத்தம் காதில விழுந்திச்சா?” என்று கேட்டார்.

“ஆமாம் பாபு! சத்தம் காதுல விழுந்துதானே நான் தூக்கம் கலைஞ்சு எழுந்து வந்தேன் . . . இதுக்கு முன்னாலேயும் ரெண்டுவாட்டி இதே அழுகுரலைக் கேட்டிருக்கேன் . . .”

“இது, இந்தப் பகுதியில அதிசயமான நிகழ்ச்சி. இந்த இடம் சுந்தர் வனக் காடுகளுக்குப் பக்கத்தில் இருக்கறதாலேயும் ஜனங்க யாருமே இங்கே வசிக்காததாலும் இது போன்ற நிகழ்ச்சிகள் படகோட்டிகளுக்கு மட்டும்தான் தெரியும். இதுக்குப் பின்னால ஒரு சரித்திரம் இருக்குது. ஆனா அந்தக் கதை இந்தப் பட கோட்டிகளுக்குத் தெரியாது. அந்தக் கதையை இப்ப நான் ஒங்களுக்குச் சொல்றேன், கேளுங்கள்” என்றார் அவர்.

புகையைக் கக்கிக்கொண்டிருந்த கெரோஸின் விளக்குக்கு முன்பாக உட்கார்ந்தபடி, காட்டுப் பகுதியின் இருளில் மூழ்கி, அந்த மூன்றாம் மனிதரின் கதையைக் கேட்க ஆரம்பித்தோம்.

முன்னூறு வருஷங்களுக்கு முன்னால நடந்த நிகழ்ச்சி, முனிம்கான் அப்போது ‘கௌட’ தேசத்தின் சுபேதாராக இருந்தார். இந்தப் பக்கத்தில் பன்னிரண்டு பூயியாக்களில் இரண்டு பிரதாபசாலி பூயியாக்கள், ராஜா ராமச்சந்திர ராயும் ஈஷா கான் இ அலியும். இவர்களின் பிரதாபம் மேலோங்கி இருந்தது. மேகனா நதி சமுத்திரத்தில் சந்திக்கும் இடத்தில் – அதைத்தான் இப்போது ‘சந்த்வீப்’ என்று சொல்கிறார்கள் – அங்கேதான் அப்போது மக் – பதுர்கீஜ் கடல் கொள்ளைக்காரர்கள் வேட்டையைத் தேடி ஷோன பறவை தவம் செய்வதுபோலக் காத்துக்கிடப்பார்கள்.

அந்தக் காலத்தில் அப்போது இது போன்ற அடர்ந்த காடு கிடையாது. இந்தப் பகுதி முழுவதும் கீர்த்தி ராயின் அதிகாரத்தின் கீழ் இருந்தது. இங்கே அவருடைய மிக உறுதியான பெரிய கோட்டை இருந்தது. மக் கடல் கொள்ளைக்காரர்களுடன் அவர் பலமுறை போரிட்டிருக்கிறார். அவருக்குக் கீழ் சேனை, தளபதிகள், ஆயுதங்கள், கவசங்கள் ஆகிய எல்லாமே இருந்தன. ‘சந்த்வீப்’ என்னும் தீவு அப்போது ‘பதுர்கீஜ்’ கடல் கொள்ளைக்காரர்கள் கூடும் முக்கிய இடமாக இருந்தது. இவர்கள் போன்ற கடல் கொள்ளைக்காரர்களிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ள இந்தப் பகுதியில் இருந்த ஜமீன்தார்கள் எல்லாருமே தங்கள் அதிகாரத்தின் கீழ் ராணுவ வீரர்களை நல்லபடியாக வைத்திருந்தார்கள். இந்த வனத்தின் மேற்குக் கரையில் இன்னொரு நதி – கால்வாய் என்றுகூடச் சொல்லலாம்- பெரிய நதியில் போய்க் கலந்தது. அது ஓடிய பாதையை இப்போதுகூடப் பார்க்க முடியும்.

கீர்த்தி ராய் மிகவும் கொடுமைக்கார ஜமீன்தாராக இருந்தான். அவனுடைய ராஜ்யத்தில் இருந்த அழகான பெண்களை அவன் விட்டு வைக்கமாட்டான். அதுவுமில்லாமல் அவனே ஒருவகையில் பெரிய கொள்ளைக்காரனாக இருந்தான். தன் ராஜ்யத்தில் மட்டுமல்லாமல் அக்கம்பக்கத்தில் இருந்த ஜமீன் தாரர்களின் ராஜ்யத்திலும் அவர்கள் நிலப்பகுதியிலும் சொத்து அதிகம் உள்ள குடும்பஸ்தர்களின் பணம், நகைகள், பெண்கள், மனைவிகள் ஆகிய எல்லாவற்றையுமே அவன் கொள்ளையடித்து அக்கிரமம் செய்துகொண்டிருந்தான்.

கீர்த்தி ராயின், நண்பனின் ஜமீன்தாரி நிலப் பகுதி பக்கத்திலேயே இருந்தது. இவர்கள் சந்திர த்வீபத்தின் ராஜா, ராமச்சந்திர ராய்களுக்குக் கப்பம் கட்டுபவர்களாக இருந்தார்கள். இந்தக் காலத்துச் சுதந்திர ராஜாக்களைவிட இந்தக் கப்பம் கட்டும் ஜமீன்தார்கள் மிகவும் செல் வாக்கு உடையவர்களாக இருந்தார்கள். கீர்த்தி ராயின் நண்பர் இறந்துபோனதும் இளம் வயதினனான அவருடைய புத்திரன் நரநாராயண் ராய் தந்தையின் நிலபுலன்களுக்குச் சொந்தக்காரனாகிவிட்டான். நரநாராயண் மிகவும் இளைஞனாக இருந்தான். சுந்தர புருஷனாகவும் சக்திசாலியாகவும் இருந்தான். கீர்த்தி நாராயணனின் பிள்ளை சஞ்சல் ராயின் பிள்ளையும் நரநாராயணனும் சமவயதினர், நண்பர்கள்.

அந்த முறை கீர்த்தி ராயின் அழைப்பை ஏற்று நரநாராயண் கீர்த்தி ராயின் ராஜ்யத்திற்குச் சில நாட்கள் தங்கிப்போக வந்தான். சஞ்சல் ராயின் இளம் வயதினளான மனைவி லக்ஷ்மி தேவி கணவனின் நண்பனை, நரநாராயணனைத் தெய்வத்தைப் போல அன்பு செலுத்திக் கவனித்துவந்தாள். இரண்டு மூன்று நாட்களுக்குள்ளாகவே அந்த அன்பின் பாதிப்பால் நரநாராயண் குழம்பிப்போனான். நரநாராயண் இளைஞனாக இருந்தாலும், சற்றே அமைதியாகவும் சிந்தனை வயப்பட்டவனாகவும் இறுக்கமான முகபாவம் கொண்டவனாகவும் இருந்தான். மின்னல் போன்ற சஞ்சலப் புத்தியுடைய இளம் பெண்ணான, நண்பனின் மனைவி லக்ஷ்மி தேவியின் கேலியும் பரிகாசமும் விளையாட்டுப் பேச்சும் அமைதியான குணம்கொண்ட நரநாராயணனை மிகவும் பாதித்தன. அவனால் அவளிடமிருந்து தப்பித்திருக்க முடியவில்லை. குளித்துவிட்டு வந்தால், தலையில் அணியும் அணிகலன் கிடைக்கவில்லை. தேடியும் கிடைக்காததால், நரநாராயண் ஆயாசத்துடன் படுக்கையில் உட்கார்ந்திருந்து விட்டுத் தன் தலையணையை ஏதோ காரணத்திற்காகத் தூக்கியபோது அதன்கீழ் அது வைக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்னாலும் தலையணையின் கீழ் தேடியபோது கிடைக்காத சாமான் இப்போது கிடைத்தது. அவனுக்குப் பிரியமான இன்னொரு பொருளும் காணவில்லை. தேடித் தேடி அலுத்தபோது, எதிர்பாராத இடத்தில் வைக்கப்பட்டுத் திரும்பவும் கிடைத்தது. வெற்றிலைபாக்கு அலங்கரித்துவைக்கப்பட்டிருந்ததில் இதுவரை உபயோகப்படுத்தியிராத விஷயங்கள் புதிது புதிதாக இன்று அலங்கரித்துவைக்கப்பட்டிருந்தன. நண்பனின் மனைவியின் விளையாட்டுகளை நரநாராயணனால் ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்தால், அந்தப் பெண்ணுக்கு மூளை சரியில்லை என்னும் தீர்மானத்திற்கு வந்துவிட்டிருந்தான் நரநாராயண். நண்பனின் தவிப்பையும் பதற்றத்தையும் குழப்பத்தையும் கண்ட சஞ்சல் ராய் மனத்திற்குள் மகிழ்ச்சியாக இருந்தாலும், வெளியில் மனைவியிடம் “பாவம் நான்கு நாட்கள் இங்கே தங்கிவிட்டுப் போகலாமின்னு வந்திருக்கிறான். நீ ஏன் அவனை இந்தப் பாடுபடுத்துகிறாய். . ? அவன் இனிமே இங்கே வரவே யோசிப்பான்” என்றான்.

சில தினங்கள் இப்படி விளையாட்டாகக் கழிந்த பிறகு கீர்த்தி ராயின் கட்டளையின் பேரில் சஞ்சல ராய் எதோ வேலையாகத் திடீரென்று கௌட நாட்டுக்குப் பயணப்பட வேண்டி வந்தது. நரநாராயணனும் நண்பனின் மனைவி என்ன வெல்லாம் பைத்தியக்காரத்தனம் செய்வாளோ என்று பயம், சந்தேகம், தவிப்பு இவற்றோடு சில தினங்கள் அங்கே தங்கியிருந்துவிட்டுப் பிறகு தன் பஜ்ரா எனப்படும் ஒரு வகை பெரிய படகில் ஏறிக்கொண்டு நிம்மதிப் பெருமூச்சுவிட்டான். அவன் கிளம்பும் நேரத்தில் லக்ஷ்மி தேவி, “மறுபடியும் இங்க வரும்போது, உங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஓர் ஆளை அழைத்துக்கொண்டு வாருங்கள், உங்கள் சாமான்கள் காணாமல்போய், நீங்களும் தவிக்க வேண்டாம்” என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள்.

நரநாராயணனின் பஜ்ரா படகு ராய்மங்களின் படித்துறையை விட்டுக் கிளம்பிய சிறிது நேரத்திற்குப் பிறகு கடல் கொள்ளைக்காரர்கள் மூலம் தாக்கப்பட்டது. அப்போது மதிய நேரம். கடுமையான வெயில் காரணமாகப் படகின் தெற்குத் திசையில் தொடுவானம்வரை நீண்டு பரந்துகிடந்த நீர்ப் பரப்புத் தீட்டிய வாள்போல மின்னியது. கடலின் அந்தப் பகுதியில் வேறு படகுகளே இல்லை. உதவிக்கு யாரும் வரமாட்டார்கள். அந்தப் பகுதி ராய்மங்கள், காலாபதர் நதியின் முகத்துவாரம் – எதிரிலேயே பெரிய கடல் பரப்பு – சந்த்வீப் கால்வாய், கடல் கொள்ளைக்காரர்களின் முக்கியமான படித்துறை. கடல் கொள்ளையர்கள் தாக்கியதில் நரநாராயணனின் பஜ்ரா படகில் இருந்த ஆட்களில் சிலர் கொல்லப்பட்டார்கள். சிலர் மோசமாகக் காயப்பட்டுப் போனார்கள். நரநாராயண் கோபத்துடன் கடல் கொள்ளைக்காரர்களுடன் யுத்தம் செய்யப் போய்த் தொடைப் பகுதியில் எதோ ஓர் ஆயுதத்தால் குத்தப்பட்டு, நினைவிழந்து கீழே விழுந்துவிட்டான்.

நினைவு திரும்பியபோது, தான் இருள் சூழ்ந்த இடத்தில் படுத்துக் கிடந்தது புரிந்தது. அவன் கண்முன்னால் நட்சத்திரம்போல ஏதோ ஒன்று ஜ்வலித்துக்கொண்டிருந்தது. சிறிது நேரம் கண்விழித்துக் கவனமாகப் பார்த்த பிறகுதான் புரிந்தது – எதை மின்னும் நட்சத்திரம் என்று நினைத்தானோ அது இருள் சூழ்ந்த குகையின் வாயில் பகுதியிலிருந்து வந்த ஒளிவெள்ளம். தான் குகையினுள் தரையில் படுத்துக்கொண்டிருந்ததையும் குகையின் சுவர் முழுவதும் பச்சைப்பசேல் என்று பாசி படர்ந்துகிடந்ததையும் கவனித்தான்.

இன்னும் சில தினங்களும் இரவுகளும் கழிந்தன. அவனுக்காக யாரும் எந்த உணவும் கொண்டுவந்து கொடுக்கவில்லை. யார் அவனை இங்கே கொண்டுவந்து போட்டார்களோ உணவே கொடுக்காமல் வைத்து அவனைக் கொன்று போடுவதுதான் அவர்களுடைய எண்ணமாக இருக்க வேண்டும். மரணம்! தவிர்க்க முடியாத மரணம்!

அன்றைய தினமும் கழிந்தது. காயம் காரணமாக வந்த வலி, தாகம், பசியால் தவித்த நரநாராயணன் களைத்துப்போன உடலோடு மரணத்தை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தான். இயற்கையில் இருக்கும் ஒரு சக்தி மயக்க மருந்து போல வேலைசெய்து மரணத் தருவாயில் இருக்கும் மனிதர்களை, அவர்களுடைய வலி, வேதனை இவற்றிலிருந்து விடுவித்துக் காப்பாற்றும். அந்த இரக்கம், கருணை கொண்ட மரண மயக்கம் மெல்ல வந்து நரநாராயணனைத் தழுவியது. வெகுநேரம் கழித்து – எவ்வளவு நேரம் என்பது தெரியாது – திடீரென்று கண்களில் ஒளி வெள்ளம் பாய்ந்து நித்திரை கலைந்தது. திகைத்துப்போன நரநாராயண் கண்களை விழித்துப் பார்த்தார். அவர் கண் எதிரில் கையில் விளக்குடன் நண்பனின் மனைவி லக்ஷ்மி தேவி நின்றுகொண்டிருந்தாள். எதோ பேச முயன்ற நரநாராயண், லக்ஷ்மி தேவி எதோ சைகைகாட்டியதைக் கண்டதும் சட்டென்று பேசுவதை நிறுத்திக்கொண்டான். லக்ஷ்மி தேவி விளக்கைப் புடவைத் தலைப்பால் மூடியபடி, நரநாராயணனைத் தன்னைத் தொடர்ந்து வரும்படி சைகைகாட்டினாள். நரநாராயணனுக்குச் சந்தேகம் வந்தது – இது கனவோ? ஆனால் இந்த விளக்கின் ஒளியில் பசுமையான பாசிக் கூட்டம் கூட்டமாகச் சுவரில் படர்ந்திருப்பது தெளிவாகக் கண்ணில் படுகிறதே!

நரநாராயண் திடகாத்திரமான இளைஞன். பசி காரணமாகப் பலஹீனமாகிப் போயிருந்தாலும் நிச்சயமான மரணத்திலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற உற்சாகத்தில் அவன் உறுதியான காலடிகளை வைத்து, முன்னால் சென்றுகொண்டிருந்த, நண்பனின் மனைவிக்குப் பின்னால் சென்றுகொண்டிருந்தான். வளைந்து செல்லும் படி வழியாக ஏறி மேலே இருந்த சுரங்கப்பாதை வழியாகச் சென்ற பிறகு கீர்த்தி ராயின் மாளிகையின் எதிரில் இருந்த கால்வாய்க்கருகில் வந்து சேர்ந்ததை நரநாராயண் கவனித்தான். லக்ஷ்மி தேவி மூங்கிலாலான சிறு பையை அவன் கையில் கொடுத்து “இதில் சாப்பாடு இருக்கிறது, இங்கே சாப்பிடாதே . உனக்கு நீச்சல் தெரியுமா, கால்வாயின் மறுகரைக்குப் போய் அங்கே உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு, சீக்கிரமே இந்த இடத்தை விட்டு ஓடிப் போ” என்றாள்.

விஷயம் என்ன என்பது நரநாராயணனுக்குக் கொஞ்சம் புரிந்தது. அவனுடைய பரந்த ஜமீன்தாரி நிலப்பகுதி, கீர்த்தி ராயின் ஜமீன்தாரி நிலப்பகுதிக்கு அருகில்தான் இருந்தது. அவன் இல்லாத நேரத்தில் கீர்த்தி ராய்தான், தனுஜ் மர்த்தனர்களின் வம்சத்தைச் சேர்ந்தவர்களுடைய எதிர்காலக் குத்தகையைப் பெறக்கூடியவர். அத்தனை பெரிய பரந்த பூமிச் சொத்து படைவீரர்களுடன் கீர்த்தி ராயின் கைக்குள் வந்துவிட்டால் அவருக்கு வேறு என்ன வேண்டும்? அவருக்கு ஒருபக்கத்தில் பாக்லா, சந்த்ரத்வீப், இன்னொரு பக்கத்தில் பூலூயாரின் சக்தி வாய்ந்த பூயியா ராஜா லக்ஷ்மி நாராயண் இருந்ததன் காரணமாகக் கீர்த்தி ராய் கொஞ்சம் அடங்கி இருந்தார்.

விளக்கொளியில் நரநாராயண் நண்பனின் மனைவியின் முகத்தை நிமிர்ந்து பார்த்தபோது அதில் விளையாட்டு, சிறு பிள்ளைத்தனம், கேலி, பரிகாசம் என்ற எந்த உணர்வும் இல்லை. அவள் முகம் கருணையும் அன்பும் பாசமும் நட்பும் நிறைந்த தாயின் முகம்போல மென்மையாக இருந்தது. அவர்கள் இருவரையும் சுற்றிக் கனத்த இருள் படர்ந்துகிடந்தது. தலைக்கு மேலே வானத்தின் இருதயத்தைப் பிளந்துகொண்டு தொடுவானம்வரை ஒளியுடன் கூடிய நிழல் பாதை. அருகில் இருந்த கால்வாயில் நீர்மட்டம் ஏறி இறங்கிக்கொண்டிருந்ததாலும் நதியில் வேகம் அதிகமாக இருந்ததாலும் கரையில் இருந்த, ஹோக்லா மரம் ஆடி ஆடி கலகல என்ற சப்தத்தை எழுப்பியபடி நதியை நோக்கி ஓடியது. நரநாராயண் ஆவேசம், வேகம் நிறைந்த குரலில், கேட்டான்: “நண்பனின் மனைவியே! உன் கணவன், என் நண்பன் சஞ்சல் ராயும் இந்தச் சதித்திட்டத்திற்குள் இருக்கிறானா?” லக்ஷ்மி தேவி “இல்லை தம்பி! அவருக்கு இங்கு நடப்பது எதுவும் தெரியாது. இத்தனை சதித்திட்டத்திற்கும் காரணம் மாமனார்தான். இப்படி ஒன்று அவர் நிகழ்த்தத் திட்டமிட்டிருந்ததால் உங்கள் நண்பரை வேறு இடத்திற்குத் திட்டமிட்டே ஏதோ காரணம் சொல்லி அனுப்பிவைத்திருக்கிறார். கௌட நாட்டுக்குப் போகச் சொன்னது வெறும் கண்துடைப்பு என்று எனக்கு இப்போது தோன்றுகிறது.”

அவமானம், வெட்கம், வேதனை காரணமாக லக்ஷ்மி தேவியின் முகம் வெளுத்துப்போயிருந்ததை நரநாராயணன் கவனித்தான். லக்ஷ்மி தேவி “எனக்கு இது இன்று தெரியவந்தது. கிடுக்கி கோட்டையின் காவலாளி சர்தார் என்னை அம்மா என்றுதான் அழைப்பான். அவன் உதவியுடன் இரவு, பகல் காவலாளிகளை எல்லாம் விலக்கிவைத்துவிட்டேன். அதனால்தான் . . .”

நரநாராயண் “அண்ணி! எனக்கு ஒரு இளைய சகோதரி இருந்தாள். சிறு வயதிலேயே செத்துப்போய் விட்டாள். இனி நீயே என் இளைய சகோதரி . . . இன்று அந்தச் சகோதரி உன் வடிவில் திரும்பி வந்து கண்முன்னால் நிற்கிறாள்” என்றான்.

லக்ஷ்மி தேவியின் அன்றலர்ந்த தாமரை போன்ற முகம் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரில் மூழ்கிக்கொண்டிருந்தது சற்றே தவிப்புடன் “ தம்பி! சொல்லத் தைரியம் வரவில்லை, ஆனாலும் சொல்கிறேன், சகோதரி என்று நீ நினைத்தால் . . .”

நரநாராயண் “என்ன விஷயம் அண்ணி?” என்று கேட்டான். லக்ஷ்மி தேவி “நீ எனக்கு வாக்குக் கொடுக்க வேண்டும். உன் நண்பரின் தந்தையை என் மாமனாரை நீ எந்த வகையிலும் பழிவாங்க நினைக்கக் கூடாது . . .” என்றாள்.

நரநாராயண் சிறிது நேரம் எதோ யோசித்தான். அதற்குப் பிறகு “நீ என் உயிரைக் காப்பாற்றி இருக்கிறாய். உனக்கு நான் வாக்குறுதி கொடுக்கிறேன். நீ உயிருடன் இருக்கும்வரை உன் மாமனாருக்கு எந்த விதமான கெடுதலையும் நான் செய்யமாட்டேன்” என்றான்.

விடைபெறும் முன் நரநாராயண். “அண்ணி நீ தனியாகத் திரும்பிப் போக முடியுமா?” என்று கேட்டான்.

“நான் போய்விடுவேன். ஆனால் உன்னால் எத்தனை தூரத்திற்குப் போக முடியுமோ அத்தனை தொலைவிற்குத் தண்ணீருக்குள்ளேயே மூழ்கியபடியே நீந்திச் சென்று உனக்குக் தெரிந்த பாதுகாப்பான இடத்தில் கரையேறு . . .” என்றாள்.

நரநாராயண் அடர்ந்த கிருஷ்ணனைப் போன்று கறுத்துக்கிடந்த இருளில், ஓசைப்படாமல் கால்வாய்த் தண்ணீருக்குள் மூழ்கிக் கலந்து, மறைந்துபோனான்!

லக்ஷ்மி தேவி கையில் பிடித்துக்கொண்டிருந்த விளக்கு அணைந்து போய் வெகுநேரமாகிவிட்டது. அவள் இருளில் மாமனாரின் கோட்டையை நோக்கி நடந்தாள். சிறிது தூரம் நடந்த பிறகு பக்கத்தில் இருந்த சிறிய கால்வாயில் இரண்டு தீவட்டிகளின் ஒளி தெரிந்ததை அவள் கவனித்தாள். பயத்தில் அவள் இதயத்தில் ரத்தம் சில்லென்று உறைந்துபோயிற்று – ஸர்வநாசம்தான்! இவர்களுக்கு என்னைத் தெரிந்துபோய்விட்டதா? மிக வேகமாக நடந்துபோய் மறைவிடத்தில் இருந்த சுரங்கப் பாதைக்கு அருகில் வந்ததும் அந்தப் பாதை திறந்திருந்ததைக் கவனித்தாள். அவள் பதற்றத்துடன் அவசரம் அவசரமாகச் சுரங்கப் பாதைக்குள் நுழைந்தாள்.

கையில் இருக்கும் ஐந்து விரல்களில் ஒன்று விஷமாகப் போய்விட்டால்கூட அதை வெட்டி எறிவதைத் தவிர வேறு வழியில்லை என்பது கீர்த்தி ராய்க்கு நன்றாகவே தெரியும். அதுதான் உடலுக்கு நல்லது. மறுநாள் பகல்பொழுது வந்தது. இரவு வந்தது. அதற்குப் பிறகு பல பகல் பொழுதுகளும் இரவுப் பொழுதுகளும் வந்துபோயின. ஆனால் லக்ஷ்மி தேவியை அதற்குப் பிறகு யாருமே இதுவரை பார்க்கவில்லை. இரவின் கொடூரமான இருள் அவளை அப்படியே கவ்வி விழுங்கிவிட்டிருந்தது.

நரநாராயண் ராய் தன் சொந்த ராஜ்யத்தில் தன் அரண்மனையில் உட்கார்ந்தபடியே எல்லா விஷயங்களையும் கேள்விப்பட்டான். சுரங்கப் பாதையின் இரு வாயில்களையும் மூடிக் கீர்த்தி ராய் தன் சொந்த மருமகளின் மூச்சை நிறுத்திவிட்டார், அவளைக் கொன்றுவிட்டார். இதைக் கேள்விப்பட்டதும் நரநாராயண் பேச்சிழந்து நின்றான். இதற்குச் சில தினங்களுக்குப் பிறகு அவன் காதில் விழுந்த செய்தி. ‘வாஷுந்தார் லக்ஷ்மண் ராயின்’ பெண்ணுடன் சீக்கிரமே சஞ்சல் ராயின் திருமணம் நடக்கப்போகிறது என்பது.

அன்றைய தினம் இரவு நிலவு எழுந்ததும் தன் மாளிகையின் உப்பரிகையில் உலாவிக்கொண்டே நான்கு திக்கிலும் பரவியிருந்த வெண்மையான அழகு நிறைந்த ஒளியில் கடல் பிரதேசத்தின் மீது தன் பார்வையைச் செலுத்திய நரநாராயணனின் உறுதியான மனமும் கலங்கிக் கண்ணிமைகள் நனைந்து கசகசத்தன. துரதிருஷ்டம் பிடித்த, இதயத்தில் நல்லது தவிர வேறு எதுவுமே நினைக்காத களங்கமில்லா நட்பின் சிகரமான, நண்பனின் மனைவியின் தூய்மையான அன்பில் உலகமே மூழ்கிக்கொண்டிருக்கிறதோ என்று அவனுக்குத் தோன்றியது. நிலவொளியினால் மூழ்கடிக்கப்பட்ட கரிய செடி, கொடிகள் நிறைந்த வனபூமியின் ஒவ்வொரு பகுதியிலும் கரிய அழகிய லக்ஷ்மீகரமான, மௌனமான, அமைதி நிறைந்த ஆகாயத்தின் கீழே, லக்ஷ்மி தேவியின் . . . அவன் இளைய சகோதரியின் குறும்புச் சிரிப்பு, ஒவ்வொரு விண் மீனிலும் புத்தம் புதிதாக மலர்ந்த மல்லிகை மலர்களைப் போல மலர்ந்து விகசித்துக்கொண்டிருந்ததாக அவனுக்குத் தோன்றியது. நரநாராயணனின் முன்னோர்கள் கொடுமையான, பயங்கரமான பூமிப் பிரதேசத்தை அதிகாரத்திற்குள் ஆட்படுத்திக்கொள்ளும் கொள்ளைக்காரர்களாக ஒரு காலத்தில் இருந்தார்கள். திடீரென்று முன்னோர்களின் அந்தக் கொதித்து ஆர்ப்பரிக்கும் குருதியானது நரநாராயண் ராயின் தமனிகளில் நாட்டியமாடத் தொடங்கியது. சகோதரி! எனக்கு ஏற்பட்ட அவமானத்தை நான் மறந்துவிட முடியும். ஆனால் அன்பே உருவான சகோதரி! உனக்கு ஏற்பட்ட அவமானத்தை இனியும் என்னால் சகித்துக்கொண்டிருக்க முடியாது. ஒரு நாளும் இல்லை.

நாட்கள் கழிந்தன. ஒரு நாள் குளிர்காலத்தில் விடியற்காலையில் ராத்திரியின் பனிப்படலம் நீங்கத் தொடங்கிய உடனேயே கீர்த்தி ராயின் கோட்டையைச் சுற்றி இருந்த கால்வாயில் சிறிய படகுகள், பெரிய படகுகள், கப்பல் போன்றவை நிறைந்து நின்றுகொண்டிருப்பதைக் காண முடிந்தது. துப்பாக்கிச் சூட்டின் அதிரடியான ஒலியால் கீர்த்தி ராயின் மாளிகை, கோட்டை இவற்றின் அஸ்திவாரமே நடுங்கிக்கொண்டிருந்தது. கீர்த்தி ராய்க்குச் செய்தி வந்தது – ‘தாக்குதல் நடத்திக்கொண்டிருப்பவன் நரநாராயண்ராய் என்று அவனுக்குத் துணையாகப் போராடிக்கொண்டிருப்பவன் போர்த்துக்கீசியக் கடல் கொள்ளைக்காரன், செபாஷ்டியோ கோஞ்ஜாலெஸ்!’

இந்தத் தாக்குதல் குறித்து முன்பே செய்தி வந்துவிட்டதால், கீர்த்தி ராய் தயாரான நிலையில் இருந்தார். வெறுமனே தயாராக இருக்கவில்லை. ஆனால் நரநாராயணனும் கோஞ்ஜா லெஸ்ஸும் ஒன்றுசேர்வார்கள் என்று அவர் கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை. ராஜா ராமச்சந்திர ராய் மற்றும் ராஜா லக்ஷ்மண் மாணிக்கர் இவர்களுடன் கோஞ்ஜா லெஸ்ஸுக்குச் சில வருடங்களாகப் பகைமை இருந்துவந்தது. இந்த நிலையில் கோஞ்ஜாலெஸ், அவர்களுடைய குத்தகைக்கார ஜமீன்தார் நரநாராயண் ராயுடன் சேர்ந்து . . . கீர்த்திராய் முற்றிலும் எதிர்பாராத நிகழ்ச்சி இது. கீர்த்தி ராயின் கோட்டையிலிருந்தும் குண்டுகள் எதிரியை நோக்கிச் சீறிப் பாய்ந்தன. கோஞ்ஜாலெஸ் படகுகளைச் செலுத்தி யுத்தம் செய்வதில் கைதேர்ந்த அபாரமான வீரன்! அவனுடைய அதிகாரத்தின் கீழ் இருந்த பெரிய படகுகள் சுற்றிச் சுற்றி வந்து கோட்டைக்குப் பக்கத்தில் இருந்த சிறிய கால்வாய்க்குள் நுழைந்ததுமே கீர்த்தி ராயின் படகுப் படையின் ஒரு பகுதி வழியைத் தடங்கல் செய்தன. கோட்டையின் பீரங்கிக் குண்டு அந்த இடத்தில் மிகவும் கடுமையாக இருந்தது. கால்வாயின் வாயில் பக்கம் வந்தால் வீரர்கள் செத்து விழுந்தார்கள். கோஞ்ஜாலெஸ் இரண்டு பீரங்கி சுமந்த பெரிய படகுகளைச் சிறிய கால்வாயின் வாயில் பக்கம் நிறுத்தி விட்டு மற்றவற்றை அங்கிருந்து சுற்றிவரச் செய்து பின்பக்கமாக நிறுத்தி வைத்தான். கோஞ்ஜாலெஸ்ஸின் அதிகாரத்தின் கீழ் இருந்த இன்னொரு கடல் கொள்ளைக்காரன் – மைக்கேல் ரோஜாரியே டி பேகா இந்தச் சிறிய படகைக் கால்வாயின் உள்ளே நுழைத்துக் கோட்டையின் மேற்குத் திசையில் தாக்குவதற்காகத் தயாராக இருந்தது.

இந்த எதிர்பாராத தாக்குதல் காரணமாகக் கீர்த்தி ராயின் படகு வீரர்கள், கால்வாயினுள் நன்றாக அகப்பட்டுக்கொண்டு – வெளியில் நதியில் போய்ப் போராட அவர்களுக்குத் திறமை சிறிதும் இருக்கவில்லை. ஆனாலும் கீர்த்தி ராயின் வீரர்களின் வீரம் காரணமாக ரோஜாரியோவால் வெகுநேரம் எதுவும் செய்ய முடியவில்லை. கீர்த்தி ராயின் படகுப் படை பலஹீனமாக இல்லை. கீர்த்தி ராயின் கோட்டையிலிருந்து போர்த்துகீஸ் கடல் கொள்ளைக்காரர்களின் கூடாரம் இருந்த தீவு வெகுதொலைவில் இல்லை. அதனால்தான் கீர்த்தி ராயின் படகு – வீரர்களின் சேனையை மிகவும் உறுதியாக, வலிமைமிக்கதாக ஆயத்தப்படுத்த வேண்டி இருந்தது.

மாலை நேரத்திற்குள் ரோஜாரியோவின் பீரங்கிக் குண்டுகளுக்கு முன்பாக, கோட்டையின் மேற்குப் பக்கம் ஒரேயடியாக நொறுங்கி விழுந்துவிட்டது. கீர்த்தி ராயின் கோட்டையின் பீரங்கிகள் மௌனமாகிப்போய்விட்டன. நதியின் இரு கரைகளிலும் சந்தியாக் காலம் இறங்கி வந்துவிட்டிருந்தது. அமைதி நிறைந்த வானில் கோட்டான்களும் பருந்துகளும் கீர்த்தி ராயின் கோட்டைக்கு மேலாகச் சுற்றிச் சுற்றி வட்டமடித்தபடி இருந்தன! திடீரென்று வெற்றியில் உன்மத்தமாகி நின்றுகொண்டிருந்த நரநாராயண் ராயின் கண்களுக்கு எதிரில் நண்பனின் மனைவி – விடைபெற்றுக்கொண்டு போனாளே அந்த இரவில் – தாமரை போன்ற முகம் வேதனை காரணமாக வாடிப்போயிருந்த முகம் பயத்தில் கோழையாகி வேண்டுகோள் நிறைந்த கெஞ்சல் நிறைந்த கண்கள் இரண்டும் அவனுக்கு நினைவுக்கு வந்தது. திடீரென்று சுயநினைவுக்கு வந்தவனாகி, மிகவும் கவலையும் வருத்தமும் கொண்டான். என்ன? இதென்ன? அவன் இப்படிச் செய்துவிட்டானே இப்படி ஒரு காரியம் செய்து . . . தன் பாசம் நிறைந்த தனக்கு உயிர்ப்பிச்சை கொடுத்த தெய்வத்தின் கடைசி வேண்டுகோளை அவன் நிராகரித்துவிடுவானா?

நரநாராயண் ராய் கட்டளை இட்டான்! கீர்த்தி ராயின் குடும்பத்தில் இருப்பவர்களில் யாருடைய உயிருக்கும் எந்தவிதமான கெடுதலும் வந்துவிடக் கூடாது!

சற்றைக்கெல்லாமே செய்தி வந்தது! கோட்டைக்குள் யாருமே இல்லை, நரநாராயண் ராய்க்கு ஆச்சர்யமாக இருந்தது. அவனே கோட்டைக்குள் நுழைந்தான். அவனும் கோஞ்ஜாலெஸும் சேர்ந்து கோட்டையின் ஒவ்வொரு பகுதியையும் அலசித் தேடிப் பார்த்தார்கள். உண்மையிலேயே யாருமே எங்குமே இல்லை. போர்த்துக்கீசியக் கடல் கொள்ளைக்காரர்கள் கோட்டையினுள் கொள்ளையடிக்க முனைந்தபோது விலைமதிப்புள்ள நகைகள், பணம் என எதுவுமே அதிகம் கிடைக்கவில்லை. மறுதினம் மதியம்வரை கொள்ளையர்கள் கோட்டையினுள் அமர்க்களம் செய்துகொண்டிருந்தார்கள். கீர்த்தி ராயின் குடும்பத்தினரில் யாருமே கிடைக்கவில்லை. மாலையில் நரநாராயண் இரண்டு பெரிய படகுகளைக் கால்வாய்முன் காவலாக நிறுத்தி விட்டுத் தன்னிருப்பிடத்திற்குத் திரும்பி வந்தார்.

இந்த நிகழ்ச்சிகளுக்குச் சில தினங்களுக்குப் பிறகு போர்த்துக்கீசியர்கள் கொள்ளையடித்துக் கொண்டுபோன பிறகு கீர்த்தி ராயின் வேலைக்காரன் ஒருவன் கோட்டையினுள் பிரவேசித்தான். தாக்குதல் நடந்த அன்றே, இந்த வேலைக்காரன் இன்னும் பலருடன் சேர்ந்து கோட்டையைவிட்டு ஓடிவிட்டான். சுற்றிப் பார்த்துக்கொண்டே வந்தபோது ஒரு தூண் மறைவில் அடிபட்ட ஒருவன் அவனைக் கூப்பிட்டு அவனிடம் ஏதோ சொல்ல விரும்பியதைப் என்பதைப் புரிந்துகொண்டு அருகில் போய்ப் பார்த்தபோது அவன், கீர்த்தி ராயின் குடும்பத்திற்கு மிக நம்பகமான பழைய வேலைக்காரன் என்பது தெரியவந்தது. அவன் மரணத் தருவாயில் தெளிவில்லாமல் சொன்ன விஷயங்களைக் கேட்ட, இந்தப் புதிய வேலைக்காரனுக்கு மண்டையோட்டுக்குள் வியர்த்துக் கொட்டியது. கீர்த்தி ராய், தன் குடும்பத்தினருடன் ஆபரணங்கள், தங்கக் காசுகள், விலைமதிப்பில்லா ரத்தினங்கள் ஆகியவற்றோடு பூமிக்கடியில் ஒரு ரகசியமான இடத்தில் அடைக்கலம் புகுந்திருக்கிறார் என்றும் தனக்கு மட்டும்தான் அந்த இடம் தெரியும் என்றும் சொன்னான். அந்தக் காலத்தில் பலவிதமான ரகசிய இடங்கள் எல்லார் வீடுகளிலும் இருக்கும். ஆனால் இந்த ரகசிய இடத்தை வெளியிலிருந்து யாராவது திறந்துவிட்டால்தான் ஒளிந்துகொண்டிருப்பவர்கள் அந்த ரகசிய இடத்தை விட்டு வெளியில் வர முடியும். திறக்காவிட்டால் அவர்களால் அந்த இடத்திலிருந்து வெளியில் வரவே முடியாது. வழியே கிடையாது. கீர்த்தி ராய் தன் குடும்பத்துடன் ஒளிந்துகொண்டிருக்கும் அந்த ரகசிய இடம் எங்கே இருக்கிறது என்பதைச் சொல்லும் முன்னரே அந்த அடிபட்ட ஆள் சட் டென்று இறந்து போய்விட்டான். எத்தனையோ வருஷங்கள், எத்தனையோமுறை பூமிக்கடியில் இருக்கும் அந்த ரகசிய இடத்தை யாராலும் எப்படித் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இப்படியாகக் கீர்த்தி ராயும் அவருடைய பரிவாரங்களும் குடும்பமும் உணவில்லாமல் மெல்ல மெல்ல மூச்சுத்திணறி மூச்சுத்திணறிக் கோட்டைக்குள் இருந்த ஒரு ரகசிய அறைக்குள் விழுந்துகிடந்தார்கள். அவர்களை யாராலும் தேடிக் கண்டு பிடிக்கவே முடியவில்லை. அந்த மிகப் பெரிய மாளிகை – கோட்டை, மலை போன்ற மண் – கல் இவற்றினால் அழுத்தப்பட்டு அந்தத் துரதிருஷ்டம் பிடித்தவர்களின் எலும்புக்கூடுகளைக் காற்றே இல்லாத இருண்ட ரகசிய அறைக்குள் மெல்ல மெல்லப் பொடிப்பொடியாக்கிவிட்டது என்கிற விஷயம்கூட வெளியில் யாருக்கும் தெரியாது.

அந்தச் சிறிய கால்வாய் சந்த்வீப் சானலின் ஒரு கிளை. அதன் ஓரத்திலிருந்து சிறிது தொலைவு சென்றால், அடர்ந்த காட்டினுள் கீர்த்தி ராயின் கோட்டையின் விசாலமான இடிபாடுகளை இன்று போய்ப் பார்த்தாலும் காண முடியும். கால்வாயிலிருந்து சற்றுத் தொலைவில் காட்டினுள் இரண்டு வரிசையிலும் மிகப் பழைய மகிழ மரங்களைக் காண முடியும். இப்போது இந்த மகிழ மரத்திற்கு அப்பால் துளைக்க முடியாத காடு, சூலம் போலக் குத்தும் முட்களை உடைய வனப் பிரதேசம்தான் இருக்கிறது. முன்பு இந்த இடத்தில் கீர்த்தி ராயின் கோட்டைக்குப் போகும் ராஜபாதை இருந்தது. இன்னும் சிறிது தொலைவு போனால் பெரிய ஏரி கண்ணில்படும். அதற்குத் தெற்குத் திசையில் பொடியான கற்களின் காட்டுச் செடிகளால் மூடப்பட்ட, ஸ்தூபம் உடைந்த தூணின் ஒரு பாகம் – பூமியாக்களின் பங்களாவிலிருந்து ராஜா ப்ரதாபாதித்யா ராயின் பங்களாவிலிருந்து நிகழ்கால யுகத்தின் ஒளியில் எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தது. ஏரியின் கரையோரத்தில் கடந்த காலத்துக் கடந்த யுகத்தின் ராஜகுடும்பத்தினரின் நாட்டுப் பெண்களின் செம்பஞ்சுக் குழம்பு பூசிய பாதங்களின் அடையாளங்கள் பதிந்திருந்தன. ஆனால் இன்றோ பெரிய பெரிய புலிகளின் காலடிச் சுவடுகள் பதிந்துகிடக்கின்றன. கோக்ரா – கேவுடே பாம்பு வகைகள், படத்தைத் தூக்கியபடி சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருந்தன.

வெகுதினங்களாகவே இங்கே ஓர் அதிசயம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. மதியம், இரவு காலத்தில் காட்டுப் பிரதேசம் மயான அமைதியில் ஆழ்ந்து கிடக்கும்போது, ‘ஹிந்தால் ஹிஜல்’ மரங்களின் கறுப்பு வேர்கள் இருளில் காட்டுப் பிரதேசத்தில் பிரேதத்தைப் போல நின்றுகொண்டிருக்கையில், சந்த்வீப் சானலில் நீர் மட்டம் உயர்ந்து, அலைகள் எழும்பு கையில், நிலவொளி பட்ட உப்பு ஜலம் கால்வாயின் மேல்பகுதியில் மின்மினிப் பூச்சியைப் போல மின்னிக்கொண்டிருக்கும். அப்போது, அந்தக் கால்வாய் வழியாகப் படகில் போகும் தேன், மெழுகு இவற்றைச் சேகரிப்பவர்கள் எத்தனையோமுறை இருள் நிறைந்த காட்டின் உள்பகுதியிலிருந்து யாரோ சிலர், அலறிக் கூக்குரலிடுவதைப் பயத்துடன் கேட்டிருக்கிறார்கள். “ஓ! பாதையில் போகிறவர்களே! . . படகில் போகிறவர்களே! . . நாங்க இங்க மூச்சு முட்டிச் செத்துப்போய்க்கொண்டிருக்கிறோம் . . . தயவுசெய்து எங்களைத் தூக்கிவிடுங்க . . . யாராவது எங்களைத் தூக்கிவிடுங்க . . .”

பயம் காரணமாக இப்போது யாரும் படகில் அந்த வழியாகப் போவதில்லை!

o

இக்கதை, காலச்சுவடு பதிப்பக வெளியீடாக 2012, ஜனவரி புத்தகக் காட்சியில் வெளிவரவிருக்கும் விபூதிபூஷண் பந்தோபாத்யாயயின் காட்டில் நடந்த கதை என்னும் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *