கருப்பசாமியின் தீர்ப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: November 6, 2016
பார்வையிட்டோர்: 33,145 
 

ஆனானப்பட்ட முனிவர்களேத் தடுமாறியிருக்கும் போது மருளாடியின் யோக்யதை என்ன? முத்தாச்சியின் இளமை முத்துக்கருப்பனைப் பித்தாக்கி வைத்திருந்தது. தனக்கு வயது அறுபதை நெருங்குகிறது என்பதோ முத்தாச்சி வெறும் இருவது வயதுப் பெண் என்பதோ மறந்து போகும் அளவுக்குப் பித்து.

முத்தாச்சிக்கு இந்த விஷயம் தெரியும். அவளுக்கு ஆண்களை மிக நன்றாகவே தெரியும். ஊர்க்கோவிலுக்குப் பூக்கட்டிவிடப்பட்ட பொன்னம்மாளின் மகளாச்சே! இது கூட தெரியவில்லை என்றால் அப்புறம் என்ன?

தன் வீட்டு வாசலில் பார்த்த செருப்புகள் பகலில் ஊருக்குள்ளே பெரிய மனுஷர்கள் காலில் பார்த்திருக்கிறாள். முதலில் பெருமையாக நினைத்தவள் நாளடைவில் தான் உண்மை உணர்ந்தாள். தாங்கள் சேறு என்று. சேற்றை மிதித்தவர்கள் ஆற்றில் கால் சுத்தம் செய்து கொண்டார்கள். இரவில் அவர்கள் முகத்தை மறைத்த துண்டு, பகலில் அவர்கள் தோளில் கம்பீரமாக இருக்கும்.

எத்தனையோ இரவுகள் பொன்னம்மாவின் அறையிலிருந்து வரும் கிசுகிசுப்பான குரல்களாலும் களுக்கென்ற சிரிப்புகளாலும் முனகல்களாலும் அவள் தூக்கம் தொலைத்திருக்கிறாள். அவளுக்கு அந்த மாதிரி வாழ்க்கையின் மீது பிடிப்பு என்றெல்லாம் இல்லை. ஆனால் வேறு என்ன செய்து பிழைப்பது என்று தெரியாததால் இந்த வாழ்க்கையை ஒத்துக் கொண்டிருக்கிறாள்.

அவளைப் பொருத்தவரை இந்த வாழ்க்கை ஒரு இக்கட்டு. அசௌகரியம். ஆண்களால் ஆளப்படும் உலகில் தன் போன்ற பெண்களின் நிலை என்ன என்பது அவளுக்குத் தெரியும். தீனருக்கு யாருண்டு? சாமி கூட வசதியானவங்க பக்கம் தான் இருந்தது.

இப்படி ஒரு கட்டாய வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்த நாட்களில் தான் மருளாடியின் இன்னொரு முகத்தைப் பார்க்க நேர்ந்தது. முத்துக்கருப்பன் மற்றவர்களைப் போல அடிக்கடி வராவிட்டாலும் மாதம் ஒரு முறையாவது பொன்னம்மாளைத் தேடி வருவான். மற்றவர்கள் மாதிரி உடனே ரூமுக்குச் செல்ல மாட்டான். முத்தாச்சியுடன் விளையாடுவான். அவளுக்கு டவுன் பக்கம் போயிருந்தபோது வாங்கிய சின்னச்சின்ன பொம்மைகள் பரிசாகத் தருவான். கதைகள் சொல்லுவான். அவளைச் சிரிக்க வைப்பான். மொத்தத்தில் முத்தாச்சி பார்த்திராத ஒரு தகப்பனாகத் தான் இருந்தான்.

இதனால் பொன்னம்மாளுக்கு அவனை ரொம்ப பிடிக்கும். எல்லாரையும் ‘ஏய்யா’ என்று கூப்பிடுபவள் அவனை மட்டும் ‘மாமா’ என்று தான் கூப்பிடுவாள். சோறு சமைத்துப் போடுவாள்.

இப்படிப்போய் கொண்டிருந்த ஒரு நாளில் முத்தாச்சி பூப்பெய்தினாள். பொன்னம்மாள் முகத்தில் இன்னதென்று சொல்ல முடியாத ஒரு கலவரம். ஊர் மருத்துவச்சி மட்டும் தான் வந்தாள். வேறு யாரும் வரவில்லை.

அணிந்து கொண்ட ஆடை மாறியது முத்தாச்சிக்கு. ஊருக்குள் ஆண்கள் பார்க்கும் பார்வை மாறியது. ஊரின் ஒரே பள்ளிக்கூடத்தின் வாத்தியார் கூடத் தொட்டு தொட்டுப் பேசினார். இதைப் பொன்னாம்மாளிடம் சொன்னபோது அவள் வெறுமனே சிரித்தது இன்றளவும் இவள் சுமக்கும் ஒரு இரகசிய சோகம்.

அப்போது ஒரு நாள் மருளாடி வந்தான். கையில் ஒரு பெரிய பை கொண்டு வந்தான். பூ, பழங்கள், இனிப்புகள், வளையல், கிளிப் போன்ற சமாச்சாரங்கள் மற்றும் இரண்டு செட் பாவாடை தாவணி ரவிக்கைத் துணி.

‘”மாமா கால்ல வுளுந்து வாங்கிக்க” என்ற தாயின் பேச்சைத் தட்டாமல் முத்தாச்சி மருளாடி காலில் விழுந்தாள். ‘”இதெல்லாம் என்னத்துக்குத் தாயி” என்று சொல்லிக்கொண்டே அவளை தோள் பிடித்து எழுப்பிய முத்துகருப்பனின் தொடுதலில் ஒரு மாற்றம் உணர்ந்தாள். பள்ளிக்கூட வாத்தியார் நினைப்பு வந்தது. ஒன்றும் சொல்லாமல் தன் அறைக்குச் சென்று விட்டாள்.

மருளாடி அன்று சீக்கிரமே திரும்பி விட்டான். அதற்கப்புறம் அவன் அடிக்கடி வர ஆரம்பித்தான். ஒவ்வொரு முறையும் இவளுக்கு ஏதாவது வாங்கி வந்தான். தொட்டுத் தொட்டுப் பேசினான். முத்தாச்சி பொறுத்துப் போனாள். பயம் காரணம் அல்ல. பொன்னம்மாள் நம்ப மாட்டாள் என்பது தான் காரணம்.

ஒரு நாள் மருளாடி வந்தபோது பொன்னம்மாள் காய்ச்சலில் படுத்திருந்தாள்.” ரொம்ப ஆசையாக வந்தேன்” என்று பொருமிய அவனைப் பாத்து ‘ ஒரு ரெண்டு நாள் பொறுத்துக்குங்க மாமா” என்றாள் பொன்னம்மாள்.

கொஞ்ச நேரம் அவளுடன் உட்கார்ந்து பேசிகொண்டிருந்தான். முத்தாச்சி தன் ரூமில் படித்துக் கொண்டிருந்தாள். திடீரென்று பொன்னம்மாளின் குரல் ஓங்கி ஒலித்தது. “ போடா வெளில நாயே! பொறுக்கி பொறுக்கி! ஒன் மலந்துன்னுற புத்திய ஏங்கிட்ட காட்டுறியா? சங்கறுத்துபுடுவேன் படவா”

பயந்து போன முத்தாச்சி என்னவென்று பார்க்க வெளியே வந்தாள். மருளாடி பொன்னம்மாள் ரூமிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தான். அவன் முகம் இறுகியிருந்தது. இவளைப் பார்த்தவன் “வச்சுகறேண்டி ஒங்கள” என்று கறுவியபடியே வெளியே சென்றான்.

அம்மா ரூமுக்குள் நுழைந்த முத்தாச்சி அதிர்ந்தாள். பொன்னம்மாள் கிட்டத் தட்ட ஒரு கோபம் கொப்பளிக்க நிற்கும் தேவதை போலிருந்தாள். “என்னம்மா ஆச்சு” என்றவளிடம் “ ஒனக்குப் பூக்கட்டிவிடச் சொல்லறாண்டி அந்த நாயி!” என்றாள்.

முத்தாச்சிக்கு தன் அம்மாவைத் திடீரென்று ரொம்ப பிடித்துப் போயிற்று. ஓடிச் சென்று அணைத்துக்கொண்டாள்.

அப்படியே ஒரு பத்து நிமிஷம் மெய்மறந்து நின்றிருந்தார்கள். பிறகு பொன்னம்மாள் “நாம வேற ஊருக்குப் போயிடலாண்டாச் செல்லம்” என்றாள்.

முத்தாச்சிக்கு ரொம்ப சந்தோஷம். ஆனால் அது நீடிக்கவில்லை. அடுத்த இரண்டு நாட்களில் என்ன என்னமோ நடந்து விட்டது. அப்போது தான் முத்தாச்சிக்குத் தெரிந்தது சாமி மட்டுமில்லை போலீசும் கூட வசதியானவங்க பக்கம்ன்னு.

ஊர்க்கோவில் நகைகள் திருடு போய்விட்டதாக மறுநாள் காலை செய்தி கிடைத்தப் போது எல்லாரையும் போல இவர்களும் அதிர்ந்தார்கள். யார் எடுத்திருப்பார்கள்? வெளியூர் திருடன் என்று சிலர் சொன்னார்கள். இல்லை உள்ளூர்தான் என்று சிலர் சொன்னார்கள். சரி அம்மனிடமே வாக்குக் கேட்கலாம் என்று ஒரு மனதாக முடிவாயிற்று.

வழக்கமான கோழி பலி, உடுக்கை, தப்பட்டை சத்தம் என்று நடந்த பூஜையில் எதிர்பார்த்தபடி முத்துக்கருப்பனுக்கு மருள் வந்தது.

ஊர் பிரமுகர், “ஆத்தா! இந்த அபவாதம் நடந்ததுக்கு மன்னிச்சுக்கடி. இதுக்கும் மேல நகை செஞ்சு போடறோம். ஆனா இத யாரு செஞ்சதுன்னு மட்டும் சொல்லிப்போடு ஆத்தா” என்று கை கூப்பி வேண்டினார்.

“என் கோவில சுத்தம் பண்ண வேண்டியவ என் நகைய சுத்தம் பண்ணிட்டா” என்றாள் முத்துக் கருப்பன் வாயில் வந்த ஆத்தா.

எல்லாரும் அதிர்ந்தார்கள். அப்பறம் போலீசுக்கு சொல்லி அனுப்பி அவர்களும் வந்து சேர்ந்தார்கள். பொன்னம்மாள் வீட்டைச் சோதனைப் போட்டபோது நகைகள் கிடைத்தன.

அந்த அதிர்ச்சியில் பொன்னம்மாள் மாரடைப்பில் இறந்து போனாள். மருத்துவச்சி உதவியுடன் முத்தாச்சி இறுதிச் சடங்குகள் செய்து முடித்தாள்.

பிறகு ஒரு நாள் ஊர்க் கூட்டம் கூடியது. செய்த தவறுக்குப் பிராயச் சித்தமாக முத்தாச்சிக்கு பூக்கட்டிவிட முடிவாயிற்று. மருத்துவச்சி கண்ணில் மட்டும் ஈரம். மற்ற ஊர்ப் பெரியவர்கள் கண்ணில் பிரகாசம்.

வரும் பௌர்ணமி அன்று நடக்கும் பூசையின் போது பூக்கட்டுச் சடங்கு நடத்த முடிவாயிற்று. அதற்கு முன்தினம் இரவு தனியாகச் சென்று கருப்பசாமிக்கு முத்தாச்சி கோழி பலி கொடுக்க வேண்டும் என்றும் முடிவாயிற்று.

முத்தாச்சி மரத்துப் போயிருந்தாள். எதற்கும் தயாராக இருந்தாள். மறுநாள் பௌர்ணமி. இன்று இரவு தான் கருப்பசாமிக்கு பலி. “ கருப்பா! இல்லாத ஒனக்கு எதுக்குய்யா பலி” என்று முத்தாச்சி தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

கதவு தட்டப்பட்டது. சரி முத்துக்கருப்பன் தான் வந்து விட்டான் என்று கதவைத் திறக்கப் போனாள்.

மறுநாள்.

காலையிலேயே ஊருக்குள் பரபரப்பு. கருப்பசாமி இருந்த மரத்துகிட்ட மருளாடி செத்துபோயிக் கிடந்தான். கழுத்து அறுக்கப்பட்டிருந்தது. கருப்பசாமி அருவால சரியாத் தொடைக்காமல் விட்டிருந்த ரத்தத் துளியை யாரும் கவனிக்கவில்லை.

முத்தாச்சி காணாமல் போயிருந்தாள். அவள் வீட்டு வாசலில் குதிரையின் காலடித் தடங்கள் கண்டதாக ஊருக்குள் பேசிகொண்டார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *