குணசீலன் லேசான பதற்றத்துடன் நாற்காலியில் அமர்ந்திருந்தான். அவனுக்கெதிரே இருந்த பெரிய மேஜை துப்புரவாக இருந்தது. நாலைந்து புத்தகங்களும் ஒரு நோட்புக்கும் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன. அருகிலிருந்த தங்க முலாம் பூசப்பட்ட பெயர்ப்பலகை Dr. ரத்தினவேல், மனநல மருத்துவர் என்று அறிவித்தது. மேஜைக்குப்பின்னே அமர்ந்திருந்த ரத்தினவேல் டாக்டர்களுக்கே உரித்தான கனிவான குரலில், “சொல்லுங்கள் மிஸ்டர் குணசீலன். உங்களுக்கு என்ன பிரச்சனை?” என்று கேட்டார்.
தலை குனிந்து தன் கால்களையே பார்த்துக் கொண்டிருந்த குணசீலன் திடுக்கிட்டு நிமிர்ந்தான். அவன் கண்கள் டாக்டரின் கண்களை சந்திக்க முடியாமல் அங்குமிங்காக அலை பாய்ந்தது. டாக்டர் முன்னோக்கி சாய்ந்து, “எதுவாக இருந்தாலும் நீங்கள் தைரியமாக பேசலாம். நீங்கள் சொல்வது எதுவும் இந்த அறையை விட்டுப் போகாது.” என்று சொல்லி விட்டு மேஜையிலிருந்த நோட்புக்கை கையிலெடுத்துக் கொண்டார்.
பதற்றம் கொஞ்சம் குறைந்தவுடன், மிக மிக மெதுவாக, டாக்டருக்கு மட்டும் கேட்கும் படியாக, “எனக்குள் இன்னொருவன் இருக்கிறான், டாக்டர்.” என்றான் குணசீலன்.
“அந்த இன்னொருவனைப் பற்றி விவரமாக சொல்ல முடியுமா?”
“அவன் பெயர் அர்ஜுன். என்னிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவன். நான் கொஞ்சம் பயந்த சுபாவம். அதிகம் பேச மாட்டேன். அர்ஜுன் அப்படியில்லை. எந்த பயமும் இன்றி யாரை வேண்டுமானாலும் எடுத்தெறிந்து பேசுவான். குரலில் தன்னம்பிக்கையும் ஒரு மிடுக்கும் இயல்பாகவே இருக்கும். தடாலடியாக காரியத்தில் இறங்குவான். எப்போது என்னை ஆட்கொள்ளுவன் என்றே சொல்ல முடியாது. திடீர் திடீரென்று என்னுள்ளிருந்து அவன் தலை தூக்கும்.”
டாக்டர் குறிப்பெடுத்துக் கொண்டே, “அவனால் உங்களுக்கு வரும் சங்கடங்களை பற்றி சொல்லுங்கள்.” என்றார்.
“என்னத்தை சொல்வது, டாக்டர்? அவன் சொன்ன சொல்லுக்கும் செய்த காரியத்திற்கும் மற்றவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஒரே உடலில் இப்படி இரு வேறு மனிதர்கள் வாழ்வது மிகவும் சித்தரைவதையாக இருக்கிறது.”
“உண்மை தான். உங்கள் கஷ்டம் எனக்கு நன்றாகப் புரிகிறது. இதற்கு முன் இந்த பிரச்சனைக்கு யாரிடமாவது உதவி கேட்டிருக்கிறீர்களா?”
“இல்லை டாக்டர். இதைப் பற்றி நான் யாரிடமும் மூச்சு விடவில்லை. இது தெரிந்தால் எனக்கு பைத்தியம் என்ற பட்டம் கொடுத்து மூலையில் உட்கார்த்தி விடுவார்கள்.”
“அப்படியெல்லாம் நீங்கள் பயப்படத் தேவையில்லை. இது ஒரு சாதாரண மனநல கோளாறு. மருத்துவத் துறையில் இதை நாங்கள் Dissociative Identity Disorder என்று சொல்வோம். பலருக்கு இந்தக் கோளாறு இருக்கிறது.”
“இந்தக் குணப்படுத்தி விட முடியுமா, டாக்டர்?”
“நிச்சயமாக. உங்கள் ஒத்துழைப்பு இருந்தால் இந்தப் பிரச்சனையை கண்டிப்பாக குணப்படுத்தி விடலாம்,” என்று சொல்லிய டாக்டர் எழுந்து நின்றார். “அடுத்த வாரம் இதே நேரத்திற்கு வந்து விடுங்கள். இதற்கான சிகிச்சையைப் பற்றி அப்போது பேசலாம்.”
“ரொம்ப தேங்க்ஸ், டாக்டர்.” என்று சொல்லி விட்டு அறையிலிருந்து வெளியே அந்த குணசீலன் மனம் அமைதியாக இருந்தது. டாக்டரின் வரவேற்பறையில் கூட்டம் அதிகம் இல்லை. மூன்று பேர்கள் டாக்டரைப் பார்ப்பதற்காக காத்துக் கொண்டிருந்தார்கள். மூலையில் காலியாக இருந்த ஒரு நாற்காலியில் சென்று அமர்ந்த குணசீலன் பக்கத்திலிருந்த ஒரு பத்திரிகையை எடுத்துப் புரட்ட ஆரம்பித்தான்.
இருபது நிமிடங்கள் கழித்து குணசீலன் நிமிர்ந்தான். எதிரிலிருந்த கடிகாரம் 11:25 என்று காட்டியது. தனது பாக்கட்டிலிருந்து ஒரு விலையுயர்ந்த கறுப்புக் கண்ணாடி எடுத்து மாட்டிக் கொண்டான். விறுவிறுப்பாக நடந்து ரிசெப்ஷனிஸ்ட்டின் மேஜைக்கு சென்றான்.
மொபைலில் விளையாடிக் கொண்டிருந்த ரிசெப்ஷனிஸ்ட் பெண் நிமிர்ந்தாள். “யெஸ்?”
“எனக்கு 11:30 மணி அப்பாயின்ட்மென்ட் இருக்கிறது.” என்றான் குணசீலன் உறுதியான குரலில்.
“உங்கள் பெயர்?”
“அர்ஜுன்.”