பாலுவின் கைபேசி – ஒரு ஐ ஃபோன் – ஒலித்தது.
ஸ்க்ரீனில் ‘யூ எஸ் டிபார்ட்மென்ட் ஆப் பாஸ்போர்ட்’ என்ற பெயரும் அதற்கான எண்ணும் தெரிந்தன. வாஷிங்டன் டி.சி. என்றும் இருந்து. முக்கியமான செய்தியோ என சில வினாடிகள் பாலு நினைத்தாலும், ‘பாஸ்போர்ட் டிபார்ட்மென்ட் தன்னை கூப்பிடவேண்டிய அவசியம் இருக்காதே, ஏதாவது போலி நம்பராக இருக்கும்; மோசடி ஆசாமியோ?’ என்று சலித்துக்கொண்டான். புறக்கணித்தானே தவிற, ஏதோ ஒரு சங்கடம் அவன் மனசை நெருட ஆரம்பித்தது.
உடனே தன்னுடைய யூ எஸ் பாஸ்போர்ட்டை எடுத்துப் பார்த்தான். ‘இன்னும் எட்டு மாதங்களில் புதுப்பிக்க வேண்டும். அவசரமில்லை. எதற்காக இப்போது யூ எஸ் டிபார்ட்மென்ட் ஆப் பாஸ்போர்ட் தனக்கு ஃபோன் செய்யவேண்டும்? ‘ சந்தேகம் துளிர்விட ஆரம்பித்தது; அதை வளர்க்க விரும்பாதவனுக்கு, ஒதுக்கித் தள்ளவும் முடியவில்லை. சின்ன தடுமாற்றம்; மனதில் இறுக்கம்.
மறுபடியும் அதே எண்ணிலிருந்து ஃபோன் வந்தது. இம்முறை பாலுவால் அதை புறக்கணிக்க முடியவில்லை.
“ஹலோ…” பாலுதான்.
“யூ எஸ் டிபார்ட்மென்ட் ஆப் பாஸ்போர்ட் ஆபீசிலிருந்து ஏஜென்ட் லீஸா பேசறேன். ஏஜென்ட் நம்பர் 8638075 L … நீங்க பலராமன் தானே? உங்க பாஸ்போர்ட் நம்பர்…. இதுதானே? ஒரு முக்கியமான விஷயம்…” தெளிவான அந்த பெண்ணின் குரலில் அதிகாரமும் தொனித்தது.
‘தன்னுடைய பாஸ்போர்ட் நம்பரை சரியாக சொல்கிறாளே…? நிச்சயமாக ஏதாவது தகராறு இருக்குமோ?’ என்று நினைத்து, “ஆமா, பலராமன்தான் பேசறேன். என்ன விஷயம்?” என்றான்.
“நீங்க சமீபத்தில் இந்தியா போய் வந்தீங்களா?”
“போய் வந்து நாலு மாசம் ஆச்சு”
“நீங்க ஆறு லட்சம் டாலர் யூ எஸ் கரன்சியை இந்தியாவுக்கு எடுத்துப் போனதாகவும் அதை ஹவாலா மார்க்கெட்டில் ரூபாவாக மாற்றியதாகவும் இந்தியன் ரிசர்வ் பேங்க் மூலமா எங்களுக்கு தகவல் வந்து இருக்கு. உங்க மேல ஒரு மோசடி கேஸ் பதிவாகியிருக்கு” ஏஜென்ட் லீஸா நிதானமாக ஆனால் அழுத்தமாக பேசினாள். அவள் குரலில் மிரட்டல் மறைந்திருந்ததோ?
“இல்லவே இல்லை. தவறான கேஸ்…”
“மிஸ்டர் பலராமன்…என்கிட்ட நீங்க விவாதம் பண்ண வேண்டாம். கேஸ் முடியறவரைக்கும் உங்க பேங்க் அக்கவுண்ட் எல்லாம் நாங்க ஃப்ரீஸ் பண்ணிடுவோம். விசாரணையை இந்தியன் ரிசர்வ் பேங்க் அங்கே செய்யும், நாங்க இங்க செய்வோம்.”
பலமிழந்த பலராமனுக்கு தலை சுற்றுவதுபோல இல்லை, நிச்சயமாகவே சுற்றியது. சோபாவில் சாய்ந்தான். கண்களை மூடிக்கொண்டான். ‘பேங்க் அக்கௌன்ட் எல்லாம் மூடிட்டா…? வீட்டு சிலவுக்கு பணம் வேணும்; மாசாமாசம் கிரெடிட் கார்டுக்கு பணம்…’
“ஹலோ, மிஸ்டர் பலராமன்…”. லீஸாவின் குரல் பாலுவை உலுக்கியது.
“எஸ்…ஹலோ”
“நீங்க என்ன செய்யப் போறீங்க?”
திடீரென்று பாலுவுக்கு பலத்த சந்தேகம் வந்தது. இந்த ஏஜென்ட் லீஸா மோசடியில் பணம் கறக்கும் கூட்டத்தில் ஒருத்தியாக இருப்பாளோ?
“நான் ஒரு கேள்வி கேக்கலாமா?”
“நீங்க என்ன கேப்பீங்கன்னு தெரியும், மிஸ்டர் பலராமன்…நான் உண்மையிலேயே யூ எஸ் பாஸ்போர்ட் ஆபீஸ்லேரிருந்துதான் பேசறனான்னு உங்களுக்கு சந்தேகம் வந்திருக்கு…பரவாயில்லை…ஒரு நிமிஷம் ஃபோன்ல இருங்க…உங்க ஏரியா போலீஸ் ஷெரிஃப் ஆபீசுக்கு ஃபோன் போடறேன். ஷெரீஃப் மார்டின் உங்ககிட்ட பேசுவார்…”
அடுத்த நிமிஷம் லைனில் ஷெரீஃப் குரல். “மிஸ்டர் பலராமன்…(பெயரை சுத்தமாக சுதப்பிவிட்டார்) நான் ஷெரீஃப் மார்டின் பேசறேன். உங்க பேரில் ஒரு சீரியஸ் கேஸ் இருக்கு. இன்னும் ரெண்டு நாளைக்குள்ளே உங்களுக்கு கோர்ட்டிலிருந்து சம்மன்ஸ் வரும்…” ஷெரீஃப் மார்டின் பேச்சில் பலத்த ஸ்பானிஷ் வாடை. அமெரிக்காவில் ஸ்பானிஷ் பேசும் போலீஸ் அதிகாரிகள் நிறைய இருப்பது மிகவும் சகஜம். இதைப் பற்றி பாலு சிறிதும் கவலைப் படவில்லை.
“நான் உங்க ஆபீசுக்கு இப்பவே நேரா வந்து உங்களை சந்திக்கலாமா?” பாலுவின் யோசனை.
“எதுக்கும் ஒரு இம்மிக்ரேஷன் லாயெரை உங்க கூட அழைச்சு கிட்டு வாங்க…”.
“ஷெரீஃப் மார்டின்… நான் ஒரு யூ எஸ் சிட்டிசன்…”
“அதனாலே என்ன…? தப்பு செய்யறவங்க சிட்டிசனா இருந்தாலும் பாஸ்போர்ட்டை சஸ்பெண்ட் பண்ணலாம், ஒரேடியா மறுக்கலாம்…டிபார்ட்மென்டுக்கு முழு உரிமை உண்டு…சிட்டிசன்னு சொல்ற உங்களுக்கு இது தெரிஞ்சிருக்குமே…நீங்க யூ எஸ் பாஸ்போர்ட் டிபார்ட்டோட ஒத்துழைக்கிறது பத்தி யோசனை செய்யறதுதான் நல்லது…”
பாலுவின் ஃபோன் ஷெரிஃப் மார்டினுடைய எண்ணை காட்டியது. அதை ஸேவ் செய்துகொண்டான். உடனே இன்டர்நெட் மூலமாக அது போலீஸ் ஷெரிஃப் ஆபீஸ் எண்தானா என்று உறுதியும் செய்துகொண்டான். ஏஜென்ட் லீஸாமீது நம்பிக்கை வந்தது.
“ஹலோ…மிஸ்டர்…”. ஷெரீஃப் மார்டின் மிரட்டினார்.
“நான் இப்போ என்ன செய்யணும்?”
“அதை ஏஜென்ட் லீஸாவே சொல்வாங்க…நீங்க என்னை எப்போவேணாலும் காண்டாக்ட் பண்ணலாம். குட் லக், மிஸ்டர் பலராமன்…” போனை வைப்பதற்குமுன் இன்னொரு முறை பாலுவின் பெயரை நன்றாக சுதப்பிவிட்டுதான் வைத்தார்.
உடனே லீஸாவின் குரல் கேட்டது. “இப்போ சந்தேகம் போச்சா? நான் யாருக்கும் அட்வைஸ் கொடுக்கறதில்லை; கொடுக்கவும் கூடாது…நீங்க சட்டப்படி நடக்கிறவர்னு நினைக்கிறேன். அதனாலே உங்க பிரச்னைய தீர்த்து வைக்க ஒரு நல்ல வழியை சொல்றேன். நான்தான் இப்படி சொன்னேன்னு யார்கிட்டையும் சொல்லக்கூடாது…சரியா?”
ஏஜென்ட் லீஸாவின் கரிசனம் பாலுவின் மனசுக்கு இதமாக இருந்தது; இன்னும் கொஞ்ச நேரம் அவளுடன் பேசினால் மனசைத் தொட்டுவிடும்.
“ரொம்ப நன்றி…என்ன வழி?” பாலுவின் குரலில் துடிதுடிப்பு.
“உங்க பேங்க் உங்க வீட்டுக்கு பக்கத்துலதானே இருக்கு?”
“ஏன்?”
“நான் சொல்ற அமௌண்டை யூ எஸ் பாஸ்போர்ட் ஆபீசுக்கு அனுப்பணும்…அவங்க கேஸ் டிஸ்மிஸ் பண்றதுக்கு உடனே ஆர்டர் போட்ருவாங்க…ஷெரீஃப் ஆபீசுக்கும் அந்த ஆர்டர் போயிடும்…ரெண்டு நாள்தான்…உங்களுக்கு புது பாஸ்போர்ட் குடுப்பாங்க… அப்பறம் நீங்க ஃப்ரீ…”
“பணமா…? பாஸ்போர்ட் பீஸ் 130 டாலர்தானே? பார்ம் டிஎஸ்-82, என் போட்டோ இரண்டு, பீஸ் எல்லாம் நான் இன்னிக்கே தபால்ல அனுப்பிடறேன்.”
“ஐ அம் ஸாரீ…நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்க….நார்மல் ப்ரோசஸ்ல உங்க பாஸ்போர்ட் புதுப்பிக்க முடியாது…உங்கமேல ஒரு சீரியஸ் கேஸ் இருக்கு…130 டாலர் கொடுத்து இந்த மேட்டரை முடிக்க முடியாது. நான் சொல்றது வேற அமௌண்ட்…”
“எவ்வளவு…?”
“அதிகமில்லை…9882 டாலர் மட்டும்தான்…எதுக்கும் உங்க பேங்க்லேருந்து 10000 டாலர் எடுங்க…அப்பதான் பாங்குல சந்தேகம் வராது…அதை நான் சொல்ற கடைக்கு போய் ஐஞ்சு எலெக்ட்ரானிக் கிப்ட் செர்டிபிகேட் – ஒவ்வொண்ணும் 2000 டாலர் மதிப்புக்கு…வாங்கி பாஸ்போர்ட் ஆபீஸ் நம்பருக்கே உங்க போனலேருந்து அனுப்பிடுங்க…அவங்க உடனே உங்களுக்கு ஐஞ்சு கன்ஃபர்மேஷன் நம்பர் அனுப்புவாங்க. அதை ரெண்டு நாள் கழிச்சு பாஸ்போர்ட் ஆபீசுல கொடுத்தா உங்க புது பாஸ்போர்ட் கைக்கு வந்துடும்… நீங்க பணம் அனுப்பிட்டவுடனே நான் பாஸ்போர்ட் ஆபீசுல உங்களுக்கு ஒரு அப்பாயிண்ட்மெண்ட் ஃபிக்ஸ் ப்ண்ணி, ஸ்பெஷல் நம்பர் டெக்ஸ்ட்ல அனுப்பறேன்…”ஏஜென்ட் லீஸா மிக நிதானமாக சொன்னாள்.
“பாஸ்போர்ட் ஆபீசுல எந்த தகராறும் இருக்காதே?”
“என்மேல நம்பிக்கை இல்லேன்னா நீங்க செய்ய வேண்டாம், மிஸ்டர் பலராமன்”
“அப்படி இல்லை…நீங்க செய்யற உதவிக்கு நன்றி…”
“நாம சட்டப்படி நடக்கிற மக்களாச்சே…இல்லையா? மனசாட்சி இருக்கிற மக்கள். ஒருத்தருக்கொருத்தர் இந்த உதவிகூட செய்ய வேணாமா? இருக்கட்டும்… நான் சொன்னது எல்லாம் தெளிவா இருந்ததா? மறுபடியும் சொல்லவா?”
“வேணாம்…எல்லாம் நல்லாவே புரிஞ்சுது… உங்க பேச்சு ஆரம்பத்திலேருந்தே ரொம்ப தெளிவா இருக்கு…”
“வெரி குட்…உங்க ஃபோன் மட்டும் இந்த காரியம் முடியறவரைக்கும் கட் பண்ணாம இருக்கணும். லொகேஷன் சர்வீசும் ‘ஆன்’ ல வைச்சுடுங்க. நாம பேசறது ரெக்கார்ட் ஆகணும்…நான் ரிக்கார்டிங்கை உங்களுக்கு அனுப்பறேன். இது நல்ல எவிடென்ஸா இருக்குமில்லையா?”
அடடா…அற்புதமான யோசனை. தனக்கு ஏன் தோன்றவில்லை?
“நிச்சியாமா…நல்ல காலம் ஃபோன்ல முழு சார்ஜ் இருக்கு”
“எக்ஸலென்ட்…நீங்க உடனே பேங்குக்கு கிளம்புங்க…குட் லக்”
“ரொம்ப நன்றி, ஏஜென்ட் லீஸா”
பலராமன் புறப்பட்டான். அடுத்த நாற்பது நிமிடம் வேகமாகவே ஓடியது. அவனுடைய ஃபோன் ஏஜென்ட் லீஸாவுடன் கனெக்ட் ஆகியிருந்தது…லீசாவுக்கு அவன் போகும் இடமெல்லாம் எது என்றும் தெரிந்தது. லொகேஷன் சர்வீஸ் டிராக்கிங்…
“பேங்கிலிருந்து 10000 டாலர் கேஷ் எடுத்துட்டேன்…”
“சூப்பர்சென்டருக்கு போங்க…நான் அனுப்புற டெக்ஸ்ட் மெசேஜில இருக்கிற நம்பருக்கு அந்த பணத்தை அனுப்புங்க…மொத்தமா கூடாது…ஐஞ்சு 2000 டாலர்” ஏஜென்ட் லீஸா மறுபடியும் விளக்கினாள்.
சில நிம்டங்களில் பாலு…”இந்த சூப்பர்சென்டர்ல இன்டர்நெட் கனெக்ஷன் போயிருக்கு…இன்னும் ரெண்டு மணி நேரம் ஆகுமாம்…” என்று முடித்தான்.
“அவங்க சொன்னத நானும்தான் கேட்டேன். உங்க ஏரியாவுல வேற சூப்பர்சென்டர் இருக்கா?”
“இருக்கு…அங்க நான் போறதுக்கு பத்து…பதினைஞ்சு நிமிஷம் ஆகும்…” பாலு.
“பரவாயில்லை…அங்கே போங்க…ஃபோன் கட் பண்ணிடாதீங்க…”
“சரி…சரி…நான் போறேன்…”. பாலுவின் குரலில் கொஞ்சம் எரிச்சல் ஒலித்தது.
அடுத்த சூப்பர்சென்டரில் பணம் அனுப்புவதை பற்றி அவன் கேட்டபோது, ஏஜென்ட் லீஸா கொடுத்த நம்பர் சரியானதில்லை என்று பதில் வந்தது. இதைக்கேட்ட ஏஜென்ட் லீஸாவுக்கு சந்தேகம் வந்தது.
“மிஸ்டர் பலராமன்…நீங்க ரொம்ப தாமதப் படுத்துறீங்க…”
“நான் என்னங்க செய்யறது…நீங்க சொன்னபடி ரெண்டு சூப்பர்சென்டர் போனேன்…பணம் அனுப்ப முடியலை.”
“கொஞ்சம் இருங்க…”. ஏஜென்ட் லீஸா சொல்லி முடித்த அடுத்த நிமிஷத்தில் மறுபடியும் ஷெரீப் மார்டின் லைன்ல வந்தார்.
“மிஸ்டர்…(இந்த தடவை பலராமனுடைய பெயரை சொதப்பவில்லை; ஏனென்றால் பலராமன் என்று சொல்லவேயில்லை.) நீங்க எங்களோட ஒத்துழைக்க மாட்டேன்னு சொல்றீங்களா? அப்படின்னா கோர்ட் சம்மன்ஸ் வந்துடட்டும்…ஒரு லாயரை இப்பவே ரிட்டைன் பண்ணுங்க…” ஷெரீஃப் மார்டினுடைய கடுமையான குரல்.
“ஷெரீஃப் மார்டின்…நான் முதலெருந்தே கோஆப்பரேட் பண்ணிக்கிட்டுதானே இருக்கேன்…” சிறிது நடுங்கிய குரலில் பாலுவின் பதில்.
“ஓ.கே. அப்படின்னா ஏஜென்ட் லீஸாவின் அடுத்த இன்ஸ்ட்ரக்ஷனைக் கேட்டு மேலே செய்யுங்க…நான் பிறகு உங்களோட பேசறேன்…”
“உங்க ஃபோன் கட் பண்ணாதீங்க…நான் சொல்ற இன்னொரு கடைக்கு போங்க…பணம் டிரான்ஸ்பர் செய்யறதுக்கு…” பழையபடி ஏஜென்ட் லீஸா நிதானமாக பேசினாள்.
பலத்த யோசனையில் வண்டியை ஓட்டினான் பாலு. ஆகா…ஷெரீஃப் மார்டின் என்ன சொன்னார்…?
‘நீங்க எங்களோட ஒத்துழைக்க மாட்டேன்னு சொல்றீங்களா?’ இதானே கேட்டார்…
ஏஜென்ட் லீஸாவும் ஷெரீஃப் மார்டினும் ஒரே இடத்துலேருந்து என்கிட்ட ஃபோன்ல பேசறாங்களா…? இது எப்படி…சாத்தியம்…? இண்டர்நெட்ல பார்த்தபோது ஷெரீஃப் மார்டின் ஒரு உண்மையான போலீஸ் அதிகாரிதான்னு தெரிஞ்சுதே…?
திடீரென்று பாலுவின் மூளையில் புது நியூரான்கள் கோடிக்கணக்கில் இயங்கின; 10000 வாட்டேஜ் எல்.இ.டி. பல்ப் பிரகாசமாக ஒளித்தது…லீஸா சொன்ன 10000 டாலர்…10000 வாட்ஸ் மின்னொளி…
ஞாநோதயம் பிறந்தது. ஒரு முடிவுக்கு வந்தான்.
“என்ன மிஸ்டர் பலராமன்…பதிலே இல்லையா? அடுத்த கடைக்கு போகப்பொறீங்களா இல்லையா?” ஏஜென்ட் லீஸா துரிதப்படுதத்தினாள்.
“பிளீஸ்…ஏஜென்ட் லீஸா…எனக்கு ரொம்பவே நெர்வஸ் ஆயிடுச்சு…அவசரமா பாத்ரூம் போகணும். ஐஞ்சு நிமிஷம் வேணும். வழியில இருக்க காஸ் ஸ்டேஷன்ல (பெட்ரோல் பங்க்) நிறுத்தபோறேன்…”
பாலு லொகேஷன் சர்வீஸ் பட்டனை ‘ஆஃப்’ செய்துவிட்டு, ஃபோனை கட் பண்ணினான். அப்பாடா…என்ன நிம்மதி! ‘இதை ஏன் முன்னாலேயே செய்யாம போனேன்?’ இந்த கேள்விக்கு பாலுவால் என்னிக்குமே பதில் கண்டு பிடிக்க முடியாது.
பாலு அவன் ஏரியா போலீஸ் ஸ்டேஷனுக்கு வண்டியை ஓட்டினான். ஷெரீஃப் மார்டின் யார், அவரிடமிருந்துதான் ஃபோன் வந்ததா…விசாரிக்கலாமே.
அவனுடைய ஃபோன் மீண்டும் மீண்டும் அலறியது. ஸ்க்ரீனில் ‘யூ எஸ் டிபார்ட்மென்ட் ஆப் பாஸ்போர்ட்’ என்ற பெயரும் அதற்கான எண்ணும் தெரிந்தன. ஏஜென்ட் லீஸாதான். உடும்புப்பிடி. பாலு தயங்காமல் புறக்கணித்தான். போலீஸ் ஸ்டேஷனுக்கு முன்னால் வண்டியை நிறுத்தினான். உள்ளே விரைந்தான்.
“மே ஐ ஹெல்ப் யூ?” ட்யூட்டியில் இருந்த போலீஸ் ஆபீசரின் குரல் தேனாக பாலுவின் காதில் ஒலித்தது.
பாலு ஏஜென்ட் லீஸாவின் முதல் ஃபோன் வந்ததிலிருந்து நடந்ததை விவரிக்க, அவன் சொன்னதை குறிப்பாக எழுதிய ஆபீசர், அவனிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டார். அதை ஒரு புகாராக பதிவு செய்து கொண்டார். அந்த போலீஸ் ஸ்டேஷனில் ஷெரிஃப் மார்டின் அதிகாரியாக இருப்பதும், பாலு வைத்திருந்த அவருடைய ஃபோன் நம்பர் சரியானதே என்றும் உறுதியாயிற்று.
மற்றும் இரண்டு முக்கிய தகவல்கள் தெரிந்தன: ஷெரீஃப் மார்டின் ஓர் வெள்ளையர். அவருக்கு ஸ்பானிஷ் பேசவே தெரியாது! இரண்டவதாக, அன்று ஷெரீஃப் மார்டின் வெளியூர் பயணம் போயிருக்கிறார். அவருடைய ஆபீஸ் போனிலிருந்து பாலுவிடம் பேசியிருக்கவே முடியாது.
ஆனால், பாலுவிடம் போனில் பேசிய ஷெரீஃப் மார்டின் பேச்சில் பலத்த ஸ்பானிஷ் வாடை இருந்ததே…! ஷெரீஃப் ஆபீஸ் போனிலிருந்து வந்ததாக பாலுவின் ஃபோன் டிஸ்ப்ளேயில் தெரிந்தாலும், நம்பரை மாற்றிக்காட்டும் டெக்னாலஜி ஒரு பழைய வித்தையாயிற்றே.
பாலுவுக்கு மீண்டும் ஏஜென்ட் லீஸாவிடமிருந்து ஃபோன் வந்தது. பாலு போலீஸ் ஆபீசரிடம் தன்னுடைய போனை கொடுத்தான்.
“திஸ் இஸ் ஆபீசர் ராபர்ட்ஸ்…ஹௌ மே ஐ ஹெல்ப் யூ?”
அடுத்த விநாடி ஏஜென்ட் லீஸாவின் ஃபோன் சட்டென்று நின்றது. பிறகு அவளிடமிருந்து ஃபோன் வரவேயில்லை.
“நமக்கு எத்தனையோ முறை ஃபோன் அடிக்குது. எடுத்து பேசவதற்கு முன் கவனமாக இருக்கணும். இது உங்களுக்கும் தெரியுமே…பொதுவாக நமக்குத் தெரியாத நம்பராக இருந்தால் மரியாதையாக அதை புறக்கணிப்பது உசிதம். மறுபடியும் உங்களுக்கு இதுமாதிரி சந்தேகமான ஃபோன் வந்தா உடனே போலீசுக்கு ஃபோன் போடுங்க….” ஆபீசர் ராபர்ட்ஸ் பாலுவின் கையை குலுக்கினார்.
“தாங் யூ வெரி மச் ஆபீசர் ராபர்ட்ஸ்…ஷெரீஃப் மார்டின் வந்ததும் அவர்கிட்ட நிச்சயமா இந்த விஷயத்தை சொல்லுங்க… அவர் பெயர் சொல்லி மோசடிக்காரங்க இப்படி மக்களை ஏமாத்தறாங்க…எனக்கு நேரமாச்சு…பேங்கல 10000 டாலரை உடனே டெபாசிட் பண்ணனும். இல்லேன்னா என் வீட்டுல…” பாலு முகத்தில் அசட்டு சிரிப்பு.
“புரியுது…வீட்டுக்கு வீடு வாசற்படி…குட் லக்” ஆபீசர் ராபர்ட்ஸ் சிரித்தார்.
பின் குறிப்பு: இது போன்ற மோசடிகள் உலகத்தில் பல நாடுகளில் நடக்கின்றன. ஃபோன், மின் அஞ்சல், இணையதளம் போன்ற டெக்னாலஜி மாறும் வேகத்தைவிட இவற்றைப் பயன்படுத்தும் மோசடி முறைகள் அதி வேகமாக மாறிவருகின்றன. மோசடிகளைத் தவிர்ப்பதற்கான டெக்னாலஜியும் வளர்ந்து வந்தாலும், மோசடிக்காரர்களை துரத்தும் வேகம் மிகக்குறைவு. பணம் மட்டுமில்லை, தங்கம், கிரிப்டோகரன்சி என்னும் மற்ற விதங்களிலும் கோடிக்கணக்கில் மோசடி தொடர்ந்து நடக்கிறது. அமெரிக்காவில் 2023ம் ஆண்டில் மட்டுமே நூறு கோடி டாலர் (எட்டாயிரத்து நானூறு கோடி ரூபாய்!) கணக்கில் சாதாரண மக்களின் பணம் மோசடிக்காரர்களின் கைக்கு வெகு சுலபமாக மாறியதாக பெட்ரல் ட்ரேட் கமிஷன் புள்ளிவிவரம் தருகிறது. மோசடி டெக்னாலஜியை வெற்றிகரமாக நடத்தும் மோசடி கும்பல் இந்தியாவில் அதிகமாக இருக்கிறதா என்பது சர்ச்சைக்குரிய Sent from my iPad