என்ன மன்னிச்சுக்குங்க சார்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: September 23, 2014
பார்வையிட்டோர்: 39,111 
 

அந்த சின்ன கிராமத்துல அஞ்சு வருஷம் முன்னால செத்துப் போன சேகரனப் பாப்பேன்னு சத்தியமாக் கனவுல கூட நெனக்கலை.

அதுவும் அவன் சாவுக்குப் போய் மாலையெல்லாம் வேற போட்டுட்டு வந்திருக்கற எனக்கு ரொம்ப பெரிய அதிர்ச்சி.

பாங்கில் இருந்து ரிடையர்மென்ட் ஆனதுக்கு அப்புறம் போர் அடிக்குதேன்னு நினைச்சுகிட்டு இருந்தேன். அப்போதான் என் பால்ய சிநேகிதன் ராஜா அவன் சொந்த ஊர் மயிலாடிக்கு வர்றியானு கேட்டான். அந்த ஊரு முருகனுக்கு ஆராட்டு விழா ரொம்ப சிறப்பா நடக்குமாம். ஒரு வாரம் கிராமமே ஜே ஜேன்னு இருக்குமாம். கலை நிகழ்சிகள், சொற்பொழிவுகள் என்று எனக்கு நல்லா பொழுது போகும் என்றான்.

‘தங்கறதுக்கு என் வீடு இருக்குடா! வந்திடு’ என்றான்.

சரின்னு சொல்லி எனக்கும் மனைவிக்கும் நாகர்கோவிலுக்கு டிக்கட் புக் செஞ்சேன். அங்கிருந்து கார் அனுப்புவதாகச் சொல்லி இருந்தான் ராஜா. ஆனா லாஸ்ட் மினிட்ல தன்னால வர முடியாதுன்னு சொல்லிட்டா மனைவி.
‘நீங்க போயிட்டு வாங்க! ராஜா இருக்கார். உங்களுக்கும் ஒரு நாலு நாள் பொழுது போகும்’ என்றும் சொன்னாள்.

சரியென்று நானும் கிளம்பிச் சென்றேன். ராஜா சொன்னது போலவே கார் அனுப்பி இருந்தான். ஒரு அரை மணி நேரப் பயணத்துக்குப் பிறகு மயிலாடி சென்றடைந்தோம். அங்கே கோவில் பக்கத்திலேயே ராஜாவின் பெரிய வீடு. ராஜா குடும்பத்துடன் வந்திருந்தான். என் மனைவி வராதது அவன் மனைவிக்குச் சற்று ஏமாற்றமே.

நல்ல அருமையான சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. மைதா பூரி, புளிசேரி உருளைக்கிழங்கு கூட்டுக் கறி எத்தங்காய் வறுவல், மட்டிப்பழம், முந்திரிக்கொத்து என்று நாகர்கோவில் ஸ்பெஷலில் திக்கு முக்காடிப் போனேன். சாப்பிட்டு முடித்ததும் நானும் ராஜாவும் கொஞ்சம் தள்ளி இருந்த அவனது வயல் வரப்புக்குச் சென்றோம். காலாற நடந்ததில் உண்டது செரித்தது. மாலை மணி நாளும் ஆகியிருந்தது.

“வாடா, அப்படியே மார்க்கட் போயி ஒரு ஜெல்லி மில்க் ஷேக் குடிச்சிட்டு வரலாம்’ என்று ராஜா கூப்பிட உடனே சரியென்றேன்.

மார்க்கெட் சென்று இரண்டு மில்க் ஷேக் ஆர்டர் செய்தோம். அதை ரசித்து சுவைத்து குடிக்கும் போதுதான் சேகரனைப் பார்த்தேன்.
என் கையில் இருந்த கண்ணாடி டம்ளர் கீழே விழுந்து நொறுங்காதது ஆச்சர்யம் தான்.

நாங்க நின்றிருந்த கடைக்கு எதிர்சாரியில் ஒரு இனிப்புப் பலகாரக் கடையில் ஜிலேபி சாப்பிட்டுக் கொண்டிருந்தான். நான் அவனைப் பார்த்த அதே நேரத்தில் அவனும் என்னைப் பார்த்துவிட்டான். அவன் முகத்தில் ஒரு அதிர்ச்சி, வியப்பு, பயம் என்று எல்லாம் கலந்து ஒரு குழப்பமான பாவம்.

சட்டென்று ஜிலேபியை தின்று முடித்து காகிதத்தை கீழே எறிந்தான். பணத்தைக் கொடுத்து விட்டு விடுவிடுவென்று எதிர்திசையில் நடக்க ஆரம்பித்தான். என்னைப் பார்த்து பயந்து தான் அவன் செல்கிறான் என்று எனக்குப் புரிய சில நிமிடங்கள் ஆனது. உள்ளே ஒரு ஆச்சர்யம் ஆத்திரம் எல்லாம் கலந்து ஒரு உணர்ச்சி.

‘சேகரா!’ என்று ஒரு உறுமலான சத்தம் என்னிடத்தில் இருந்து வந்தது. ராஜா உட்பட அந்த மார்க்கெட்டில் இருந்த பலர் என்னைத் திரும்பிப் பார்த்தனர். சேகரனும் பார்த்தான். என்ன யோசித்தானோ, என்னை நோக்கி வந்தான்.

“ என்ன சார்! எப்படி இருக்கீங்க? வீட்ல சௌக்கியமா? பாப்பா என்ன பண்ணுது?” என்று சரமாரியாக கேள்விகள் கேட்டான்.

“என்னப் பத்தி விசாரணை எல்லாம் இருக்கட்டும். நீ எங்க இங்க…?” என்று நான் இழுத்தேன்.

“சார்! அது பெரிய கத சார். என் வீடு பக்கத்துல தான் இருக்குது. வர்றீங்களா? அங்க போயி பேசலாம்” என்றான்.

நான் ஏதோ சொல்ல வாயெடுக்கும் முன்னால், “ டேய், நீ போய் வாடா! எனக்கும் கொஞ்சம் வேலை இருக்கு. ராத்திரி சரியா ஒன்பதுக்கு இங்கேயே வந்திடு. பட்டிமன்றம் இருக்கு” என்று ராஜா சொன்னான்.

“ நீங்க போங்க சார்! நான் கொணாந்து விட்டுர்றேன்” என்றான் சேகரன்.

பின்னர் நான் சேகரனுடன் அவன் வீட்டுக்குச் சென்றேன். காலிங் பெல்லை அழுத்தியதும் கதவைத் திறந்த கமலம் (அவன் மனைவி) என்னைப் பார்த்துத் திகைத்தாள்.

“உள்ள வர வழியவிடு கமலா! சார் வந்திருக்கார். காபி கொண்டா” என்று அவளைத் தள்ளியபடியே சேகரன் உள்ளே நுழைந்தான். நானும் மந்திரித்து விடப்பட்டக் கோழி மாதிரி அவனைப் பின்தொடர்ந்தேன்.

“இப்படி உட்காருங்க சார்” என்று அவன் காட்டிய சோபாவில் உட்கார்ந்தேன். திடுமென நான் எதிர்பாராத விதமாக, சேகரன் என் காலில் விழுந்தான்.

“ஏய், சேகரா! எழுந்திரி! என்ன பண்ணற? எனக்கு இதெல்லாம் புடிக்காது!”

“இல்ல சார், நீங்க மன்னிச்சேன்னு சொன்னாதான் நான் எழுந்திருப்பேன்”

“மன்னிக்கவா வேணாவான்னு நீ நடந்ததச் சொன்னாத் தானே தெரியும்? எல்லாத்தையும் ஒண்ணுவிடாம வெவரமாச் சொல்லு”

சேகரன் சொல்ல ஆரம்பித்தான்.

“சார்! என்ன இன்னிக்கிப் பாத்தது உங்களுக்கு அதிர்ச்சியாத் தான் இருக்கும். உங்களுக்கு மட்டும் என்ன? யாரு பார்த்திருந்தாலும் அதிர்ச்சி தான். எனக்கே கூட அதிர்ச்சி தான். இந்த அஞ்சு வருஷத்துல என்னைத் தெரிஞ்ச நம்ம சென்னைக்காரங்கள சந்திச்சதே இது தான் மொத தடவ.”

“விஷயத்துக்கு வா சேகரா” என்று நான் சொல்லவும் கமலம் காபி எடுத்துவரவும் சரியாக இருந்தது.

“என்னத்தச் சொல்றது சார்? உங்களுக்கேத் தெரியும், ப்யூன் சம்பளத்துல குடும்பம் நடத்துறதுக்கு நா எவ்ளோ கஷ்டப்பட்டேன்னு. இதுல பாங்கிலேயும் கடன். வெளிலேயும் கடன். கழுத்துவர. என்ன செய்யறதுன்னு தெரியாம முழிச்சிக்கிட்டு இருந்தபோதுதான் என் தம்பி சுந்தரம் வந்தான் கிராமத்திலேர்ந்து. வேலை தேடி வந்த தம்பியும் என் கூடவே இருந்தான். இருக்கற செலவுல அது வேற! ஆனாக் கூடப் பொறந்த தம்பியாச்சே! ஒண்ணும் சொல்ல முடியல.

அப்படி இருக்கும் போதுதான் ஒரு நாள் அந்த சம்பவம் நடந்திச்சு. நான் கமலத்துக்கு ஒடம்பு சரியில்லன்னு லீவு போட்டிருந்தேன். சுந்தரம் ஒரு வேலை விஷயமா தாம்பரம் வரை போயிருந்தான். என்னோட பான்ட் சர்ட் தான் போட்டிருந்தான். அங்க வேல முடிஞ்சு திரும்பி வரைல ட்ரெய்ன்ல வர நெனச்சு வந்திருக்கான். எப்படின்னு தெரியல. கவனிக்காம லைன் க்ராஸ் பண்ணிருப்பான் போல. வேகமா வந்த ஒரு ட்ரெய்ன்ல அடிபட்டு ஸ்பாட்ல அவுட். ஆனா மொகம் கொஞ்சம் டாமேஜ் ஆயிடிச்சி. கண்டுபுடிக்க முடியாத படிக்கு. ஆனா அவன் பாக்கெட்ல இருந்த என் போன் நம்பரப் புடிச்சு எனக்கு யாரோ ஒரு புண்ணியவான் தகவல் தந்தாரு.

எனக்குத் தகவல் வந்து நான் போயி பாடிய எங்க வீட்டுக்கு எடுத்து வரைல தான் திடீர்னு இந்த ஐடியா வந்திச்சு. உடனே என் மனைவி கிட்ட இதச் சொன்னேன். என் தம்பிக்குப் பதிலா நான் செத்துப் போயிட்டதா ந்யூஸ் பரவ விடலாம். யாராலேயும் கண்டு புடிக்க முடியாது. நான் கொஞ்ச நாளைக்கு எங்கயாவது தலமறவா இருந்துக்கறேன்.

பாங்க்லேயும் பணம் தருவாங்க. வெளி இன்ஷூரன்சும் கிடைக்கும். நல்ல துட்டு தேறும். இருக்கற கொஞ்ச நஞ்ச கடன அடச்சுட்டு எங்கயாவது கண் காணாத எடத்துக்குப் போயிடலாம்.

கமலம் புரிஞ்சிகிட்டா. இதவிட்டா எங்களுக்கு வேற வழியுமில்ல. நான் சொன்ன மாதிரியே எல்லாம் நடந்திச்சி. நானும் தல மறவாயிட்டேன். சொன்ன படியே எல்லாப் பணமும் கமலம் கைக்கு வந்திடுச்சு. கொஞ்ச நாள் கழிச்சி நான் அவளக் காண்டாக்ட் செஞ்சி இங்க வரச் சொன்னேன். இங்க எங்களுக்கு யாரையும் தெரியாது. புதுசா ஒரு நல்ல வாழ்க்கை வாழ்ந்துகிட்டு இருக்கோம்.

எனக்கு யாரையும் ஏமாத்தணுங்கற எண்ணமெல்லாம் இல்ல சார். கமலம் சொல்லிச்சு நீங்க கூட சாவுக்கு வந்தப்ப அஞ்சாயிரம் கொடுத்தீங்கன்னு. அதத் திருப்பி தந்திடறேன் சார். என்ன யாருகிட்டேயும் காட்டி கொடுத்துறாதீங்க சார்! “

பேசிக்கொண்டே இருந்த சேகரன் திடீரென்று கேவிக் கேவி அழ ஆரம்பித்தான். சப்தம் கேட்டு உள்ளேயிருந்து வந்த கமலம், அவன் அழுவதைப் பார்த்து தானும் அழுகையில் சேர்ந்து கொண்டாள்.

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒரு விதமான மயக்க நிலை. சேகரன் செய்தது தவறு. அவனுக்குத் தண்டனை வாங்கித்தர வேண்டும் என்று ஒரு மனம் சொல்லியது. பாவம் விட்டுவிடலாம் என்று இன்னொரு எண்ணம்.

எத்தனையோ பணக்காரர்கள் கடன் வாங்கிவிட்டு திருப்பித்தராமல் அதை நஷ்டக் கணக்கில் வங்கிகள் எழுதிக் கொள்வது ஒன்றும் எனக்கும் தெரியாததும் அல்ல உங்களுக்கும் தெரியாததும் அல்ல. இவன் என்ன மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு பத்து லட்சம் பார்த்திருப்பானா? கோடிகளுக்கு முன் லட்சம் என்ன? விட்டுவிடலாம் என்ற முடிவுக்கு வந்தேன்.

“சேகரா! நீ செஞ்சது அநியாயம்! ஆனா இத விட பெரிய அநியாயங்கள் எல்லாம் இந்த ஒலகத்துல நடந்துக்கிட்டுதான் இருக்கு. நான் ஒண்ணும் கடவுள் இல்லை ஒன்ன தண்டிக்கறதுக்கு. ஆனா இனிமேல் நியாயமாப் பொழச்சுக்கோ” என்று சொன்ன என்னை ஒரு கடவுளைப் பார்ப்பது போல சேகரனும் கமலமும் பார்த்தார்கள்.

“சரி நாம் கெளம்பறேன்”

“ சார்! இனிமே நாம பார்ப்போமோ மாட்டோமோ! இவ்ளோ தூரம் வந்திருக்கீங்க. ஒரு வாய் சாப்ட்டுட்டு போங்க ப்ளீஸ்” என்றான் சேகரன்.

மணியைப் பார்த்தேன். கிட்டத்தட்ட ஏழு ஆகியிருந்தது. ஆனால் அதற்குள் வெளியே இருட்டு. சரி எப்படியும் வெளி சாப்பாடு தான் இங்கேயே சாப்பிடலாம் என்று முடிவு செய்து சரி என்றேன்.

கமலம் தோசையும் காரச் சட்னியும் பரிமாறினாள். நல்ல டேஸ்ட். நாலு தோசை சாப்பிட்டேன். காபி வந்தது. குடித்து விட்டு கை கழுவ எழுந்த என்னை ‘ இப்படி பொழக்கடப் பக்கம் வாங்க சார். அங்க கை கழுவிக்கலாம்’ என்று சேகரன் கூட்டிச் சென்றான். கை கழுவி விட்டு, துண்டில் துடைத்தபடி சுற்றிலும் பார்த்தேன்.

“சார்!”

“என்ன சேகரா?”

“சார்! நீங்க நல்லவர்தான். ஆனா என் தலவிதி. யாரையும் நம்ப முடில. இந்த அஞ்சு வருசம்கூட நாங்க சந்தோசமா இல்ல சார். எப்ப யார் கண்ணுல படுவோமோன்னு பயந்து பயந்தே தான் லைப் ஓடுது. இனிமேலும் எனக்கு ரிஸ்க் எடுக்கற சக்தி இல்ல சார். அதுனால என்ன மன்னிச்சுக்குங்க.”

“என்ன சேகரா? எதுக்கு நான் உன்ன மன்னிக்கணும்?”

“இன்னைக்கு இல்லேனாலும் என்னிக்காவது ஒரு நாள் நீங்க யாருகிட்டேயாவது சொல்லிட்டீங்கன்னா? அதுனால இப்ப நீங்க சாப்பிட்டக் காரச்சட்னில விஷம் கலந்து கொடுத்திருக்கோம். எப்படியும் இன்னும் பத்து நிமிசத்துல மயங்கி செத்துருவீங்க. இங்க பார்த்தீங்களா எவ்வளவு வாழ மரங்கன்னு? எதுனாச்சி ஒண்ணத் தோண்டி உங்களைப் பொதச்சு அதும் மேல மரம் வச்சிட்டா போதும். எங்க லைப் செட்டாயிடும் சார். சாரி சார்!” என்று அவன் சொல்லி முடிக்கும் போதே எனக்கு மயக்கம் வந்தது. வாந்தி வந்தது. நான் மயங்கி விழும் முன்னர் கூட சேகரன் திரும்பத் திரும்ப “என்ன மன்னிச்சுக்குங்க சார் ” என்று சொல்லிகொண்டிருந்தது காதில் விழுந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *