எஜமான விசுவாசம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: January 5, 2012
பார்வையிட்டோர்: 11,895 
 

கதை ஆசிரியர்: அமரர் கல்கி.

1

     இந்தியாவையும், உலகத்தையுமே ஒரு கலக்குக் கலக்கி விடுகிறேன் என்று சொல்லிக் கொண்டு ஸர். ஸ்டாபோர்டு கிரிப்ஸ் துரை இந்தியாவுக்கு வந்தாரல்லவா? வந்து, அவர் சொன்னபடியே ஒரு கலக்குக் கலக்கிவிட்டுச் சேற்றை வாரிப் பூசிக் கொண்டு திரும்பிப் போனாரல்லவா? அந்தக் கிரிப்ஸ் துரையின் விஜயத்தினால் ஏதாவது உண்மையில் பிரயோஜனம் ஏற்பட்டதா, ஏற்படாவிட்டால் அது யாருடைய குற்றம்? – என்பதைப் பற்றியெல்லாம் அபிப்ராய பேதம் இருக்கலாம். ஆனால் ஒரு பலன் நிச்சயமாக ஏற்பட்டது என்பதை நான் அறிவேன். கிரிப்ஸ் விஜயத்தின் பலனாகத்தான் ‘வாச்மேன்’ வீராசாமிக்கு வேலை போயிற்று. வேலை போனதோடு இல்லை; கிட்டத்தட்ட அவன் தூக்கு மேடையில் ஏறும்படி கூட ஆகிவிட்டது.

     சென்னை அரண்மனைக்காரன் தெருவில் பிரசித்தியாக இருந்து (இப்போது ‘இருந்த’ என்று சொல்ல வேண்டியிருக்கிறது, பாவம்) மோகன் கம்பெனியில் இராக்காவல் வேலை பார்த்தான் வீராசாமி. இந்த வேலையை அவன் சென்ற ஒன்பது வருஷ காலமாகப் பார்த்து வந்தான். இது விஷயம், மேற்படி மோகன் கம்பெனியின் புரொப்ரைட்டர் மிஸ்டர் எம்.டி. மோகன் அவர்களைத் தெரிந்தவர்க்கெல்லாம் ரொம்பவும் ஆச்சரியத்தை அளித்தது. ஏனெனில், மிஸ்டர் மோகனுடைய சுபாவம் ஒரு மாதிரியானது. அதாவது ‘க்ஷணச்சித்தம் கணப்பித்தம்’ என்பார்களே, அந்த மாதிரி சுபாவம். காலையில் ஒரு சிப்பந்தியைக் கூப்பிட்டு, “சம்பளத்தைத் தூக்கிப் போட்டிருக்கிறேன்” , என்பார் சாயங்காலம் அதே சிப்பந்தியைக் கூப்பிட்டு “‘டிஸ்மிஸ்’ – கணக்குப் பார்த்துச் சம்பளத்தை வாங்கிக் கொண்டு போ! – பதில் பேசாதே!” என்பார். ஆகவே, அவருடைய ஆபீஸ் சிப்பந்திகள் எல்லாரும் அன்றாடம் ஆபீசுக்குக் கிளம்பும் போது “டிஸ்மிஸ்” உத்தரவு வாங்கிக் கொண்டு திரும்புவதற்குத் தயாராகவே கிளம்புவார்கள். அதோடு தினசரிப் பத்திரிகை ‘வாண்டட்’ பத்தியைப் பார்த்துக் கொண்டும் வேறு வேலைக்கு மனுப் போட்டுக் கொண்டுந்தான் இருப்பார்கள்.

     ஒன்றிரண்டு கிழப் பெருச்சாலிகள் மட்டும் – பிடித்துத் தள்ளினாலும் போகாமல் உட்கார்ந்திருந்தார்களே தவிர, மற்றபடி மோகன் கம்பெனியில் ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ மாகவே எப்போதும் இருக்கும்.

     ஆனால், இவ்விதம் சிப்பந்திகளை மாற்றிக் கொண்டு வந்தால், கம்பெனியின் காரியங்கள் எப்படி ஒழுங்காக நடைபெறுமென்று வாசகர்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படலாம். இயற்கையுங் கூடத்தான். ஆனால், மிஸ்டர் மோகனுடைய இயற்கையை வாசகர்கள் நன்றாய்த் தெரிந்து கொள்ளாத தோஷமே அதற்குக் காரணம். மிஸ்டர் மோகன் ஒரு சமயம் என்ன சொன்னாராம் தெரியுமா? கேளுங்கள் :

     “தெருக் கூட்டுகிற விளக்குமாறுகளை இந்த ஆபீஸ் நாற்காலி ஒவ்வொன்றிலும் கொண்டு வந்து உட்கார வைத்து, இந்த ஆபீஸை நான் நடத்தி விடுவேன். நீங்கள் ஒருவரும் இங்கே வேண்டாம்! தொலைந்து போங்கள்” என்றாராம்.

     மோகன் கம்பெனியின் பழைய பெருச்சாளி மானேஜர் என்ன செய்தாராம் தெரியுமா? மேற்படி அருமையான மணி வாக்கியங்களை பளபளப்பான காகிதத்தில் அழகாக அச்சிட்டுக் கண்ணாடி சட்டம் போட்டு ஒவ்வொரு சிப்பந்திக்கும் ஒவ்வொன்று கொடுத்தாராம். கொடுத்து, அவரவர்களுடைய வீட்டில் படுக்குமிடத்துக்கு நேரே மாட்டி வைக்கும்படியும், காலையில் எழுந்ததும் அதைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொள்ளும்படியும் சொன்னாராம். “என்னத்துக்காக?” என்று ஒரு சிப்பந்தி கேட்டதற்கு “அட பாவிகளா! அப்படிச் செய்தால் உங்கள் பிதிர்க்கள் கரையேறுவார்கள். கயா சிரார்த்தம் பண்ணின பலன் கிடைக்கும்!” என்றாராம்.

     சரி, நம்முடைய கதாநாயகன் ‘வாச்மேன்’ வீராசாமியிடம் வருவோம். அவன் இப்போது ஒரே சோகக் கடலில் முழுகிக் கிடக்கிறான். அவனுக்கு வேலை போய் ஒரு வாரத்திற்கு மேலாகி விட்டது. வேலை போன விதத்தை நினைக்க நினைக்க, அவனுக்கு அழுகையும் ஆத்திரமும் வந்தது.

ஒருநாள் பிற்பகலில், சம்பளம் வாங்குவதற்காக ஆபீஸுக்குப் போனான் வீராசாமி. காஷியர், “மானேஜரிடம் போ!” என்றார். மானேஜர், “வீராசாமி! நேற்று இராத்திரி 10 மணிக்கு எஜமான் இந்தப் பக்கம் வந்தாராம். உன்னைக் காணோமாம். கணக்குத் தீர்த்து அனுப்பி விடும் படி உத்தரவு!” என்றார். வீராசாமிக்குத் தலையில் ஜப்பான் குண்டு விழுந்தது போலிருந்தது. “ஐயோ! நான்…” என்று ஆரம்பித்தான். “பேசாதே! போ!” என்று அதட்டினார் மேனேஜர். எஜமான விசுவாசமுள்ள வீராசாமி, சம்பளமும் வாங்கிக் கொள்ளாமல் ஆபீஸ் வாசலில் போய் நின்று காத்திருந்தான். மிஸ்டர் மோகன் வெளியில் வந்து காரில் ஏறும் சமயத்தில் போய் நின்று, “எசமான்!” என்றான் “எசமானாவது? சனியனாவது! டிரைவர், விடு” என்றார் மோகன். கார் போய் விட்டது.

     பிறகு வீராசாமி, மறுபடியும் காஷியரிடம் போய்ப் பாக்கி இரண்டரை மாதத்துச் சம்பளத்தையும் வாங்கிக் கொண்டு வீடு போய்ச் சேர்ந்தான்.

2

     வீராசாமி அவனுடைய மகளின் வீட்டில் இருந்தான். அவளுக்கு இரண்டு குழந்தைகள். அவர்களிடம் கிழவனுக்கு உயிர். மகளின் புருஷன் குடிகாரன். சம்பாதிக்கிற காசைச் சரியாக வீட்டுக்குக் கொண்டு வருகிறதில்லை. ஆகவே கிழவனுடைய சம்பளம் குடும்பத்துக்கு ரொம்ப ஒத்தாசையாயிருந்தது. ஐயோ! திடீரென்று மாதம் 12 ரூபாய் நின்று போய் விட்டதே? காலட்சேபம் எப்படி நடக்கும்? மகள் எங்கேயாவது வீட்டு வேலை செய்யப் போக வேண்டும் போலிருக்கிறதே.

     “எப்படியாவது நடந்து விட்டுப் போவுது? நீ இரவிலே நல்லாப் படுத்துத் தூங்கு!” என்றாள் அருமை மகள். ஆனால் கிழவனுக்குத் தூக்கம் வந்தால் தானே? ஆறு வருஷமாகக் காவல் காத்த மோகன் கம்பெனி ஆபீஸ் கட்டிடம், அவனை ‘வா வா’ என்று வருந்தி அழைத்துக் கொண்டேயிருந்தது.

     ஒருநாள் இருட்டிய பிற்பாடு வீராசாமி குடிசையில் இருப்புக் கொள்ளாமல் வெளியே கிளம்பினான். வீதியோடு போய்க் கொண்டிருந்தவன், மோகன் கம்பெனி ஆபீஸ் பையன் ஒருவனைப் பார்த்தான். ஏதோ காணாது கண்டவனைப் போல் ஆர்வத்துடன் அவனைப் பிடித்துக் கொண்டு “ஏண்டா, முனுசாமி! என்னடா சேதி? ஆபீஸெல்லாம் எப்படிடா நடக்குது!” என்றான்.

     “ஆபீசு குட்டிச்சுவராப் போச்சு! விடு. நான் போகிறேன்” என்றான் முனுசாமி.

     “அட பாவி! எசமான் சம்பளத்தை வாங்கித் தின்னுட்டு, அவருக்கே துரோகம் நினைக்கிற பசங்களா…”

     “எப்படியோ தாத்தா! ஓடிப் போனவனுக்கு ஒன்பதாமிடத்திலே ராசா என்கிறாப்பலே, உன்பாடு தேவலை.”

     “என்னடா, என்பாடு தேவலை?”

     “இரண்டரை மாதச் சம்பளம் மொத்தமா வாங்கிக்கிட்டே இல்லையா? எங்களுக்கெல்லாம் காலணா இன்னும் கிடைக்கலை.”

     “அப்படியா?”

     “ஆமாம்; எசமான் பாடு ரொம்ப ‘அவுட்’ என்கிறாங்க! ஆபீசே குளோசு ஆகிவிடும் என்கிறாங்க!”

     கிழவன் ஏதோ நினைவு வந்தவனாய், “ஏண்டா முனுசாமி, எனக்கு பர்த்தியாய் யாராவது வாச்மேன் வந்திருக்கானா?” என்று கேட்டான்.

     “இல்லை, தாத்தா! நான் கூட ஒரு கிழவனைக் கொண்டு வந்து விட்டேன். ‘வாச்மேன்’ தேவையில்லை யென்று எசமான் சொல்லி விட்டாராம்!” – இவ்விதம் சொல்லிக் கொண்டே பையன் கம்பி நீட்டினான்.

     வீராசாமியின் மனம் சிந்தனையில் ஆழ்ந்தது. வீதியின் முடுக்கில் இருந்த பாலத்தின் மேல் உட்கார்ந்து யோசிக்கத் தொடங்கினான். “ஆகா! எசமானுக்குக் கஷ்டம் வந்தவுடனே, இந்த துரோகிப் பசங்கள் எல்லாரும் எப்படிப் பேசுகிறார்கள், பார்த்தாயா? அடாடா! கட்டிடத்தில் ராத்திரி காவலே இல்லையாமே? எந்தக் களவாணிப் பயலாவது வந்து சுருட்டைக் கொளுத்திப் போட்டுட்டுப் போனால் என்ன செய்கிறது? குடி முழுகிப் போய் விடுமே?”

     வீராசாமியின் கால்கள் மோகன் கம்பெனி ஆபீஸ் வாசலை நோக்கித் தள்ளாடிக் கொண்டே நடந்தன.

3

     இப்போதுநாம் மிஸ்டர் எம்.டி. மோகனை நேரில் சந்தித்தாக வேண்டும். இராத்திரி இரண்டு மணி ஆன போதிலும், அவரை இப்போதே பார்த்து விடுவதுதான் நல்லது. பொழுது விடிந்தால் வேறு அலங்கோலமான நிலைமையில் அவரைப் பார்க்கும்படி நேரிடும்.

     நல்ல வேளையாக மிஸ்டர் மோகனும் இன்னும் தூங்கவில்லை. அவருடைய பெரிய பங்களாவின் மேல் மச்சில் முகப்பு அறையில் மேஜையின் பின்னால் உட்கார்ந்திருக்கிறார். வயது சுமார் நாற்பது இருக்கும். பணத் தொந்தி லேசாக விழுந்திருக்கிறது. தட்டையான முகத்தில் ஹிட்லர் மீசை; கிராப்புத் தலை. சுவரில் ஹாட் முதலிய நாகரிக உடைச் சின்னங்கள் காணப்படுகின்றன.

     மேஜை மேல் உள்ள காகிதங்களில் ஏதேதோ கூட்டியும் கழித்தும் கணக்குப் பார்க்கிறார்; பக்கத்தில் டெலிபோன் இருக்கிறது. அதை ஆவலுடன் திரும்பிப் பார்க்கிறார்.

     இதையும் அதையும் இருக்கிற இருப்பையும் முகத்தில் பரபரப்பையும் பார்த்தால், மனுஷர் டெலிபோனில் ஏதோ முக்கியமான செய்தியை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.

     அவர் எதிர்பார்க்கும் செய்தி டெலிபோனில் வருவதற்குள்ளே, மிஸ்டர் மோகனுடைய வாழ்க்கை வரலாற்றைக் கொஞ்சம் சுருக்கமாகத் தெரிந்து கொள்ளலாம்.

     மிஸ்டர் மோகன், ஒரு வயதுக் குழந்தையாயிருக்கும் போதே பணம் சேர்க்க ஆரம்பித்து விட்டான் என்று அவனுடைய பெற்றோர்கள் அந்தக் காலத்தில் பெருமைப்படுவதுண்டு. ஒரு சமயம் வீட்டில் ஒரு இரண்டணா வெள்ளி நாணயம் (அப்போது இந்த நாட்டில் சில வெள்ளி நாணயங்களும் இருந்தன) காணாமற் போய் விட்டதாம். தேடு தேடு என்று தேடினார்களாம். கடைசியில் குழந்தையின் வாயைத் திறந்து பார்த்தால், கடைவாயில் இரண்டணாவை அடக்கிக் கொண்டிருந்ததாம்! அதை எடுப்பதற்குள் குழந்தை ரகளை செய்து விட்டதாம்!

     இப்பேர்ப்பட்ட மோகன், காலேஜ் படிப்பு முடிந்ததும் கேவலம் உத்தியோகத்தைத் தேடாமல் தொழில் ஆரம்பித்தான். அவன் ஆரம்பித்த தொழில், ஏஜென்ஸி வியாபாரம். எந்த ஊரில் எந்தச் சாமான் தயாராகிறதென்று தெரிந்து கொண்டு, அதற்கு ஏஜென்ஸி எடுத்து, விளம்பரம் பண்ணி, சில்லறைக் கடை வியாபாரிகளுக்கு விநியோகிப்பது. ஓடாத கடிகாரம் முதல், தலை வழுக்கைத் தைலம் வரையில் எத்தனையோ சாமானகளுக்கு மோகன் ஏஜென்ஸி எடுத்தான். இவற்றை விளம்பரம் செய்வதற்காக முதலில் கேட்லாக்குகள், அப்புறம் பஞ்சாங்கங்கள், டைரிகள், கேலண்டர்கள் இப்படியெல்லாம் பிரசுரம் செய்யத் தொடங்கினான். மோகன் பஞ்சாங்கம், வெகு சீக்கிரத்தில் பிரசித்தியாகி, “வேறு எந்த பஞ்சாங்கத்தையும் விட மோகன் பஞ்சாங்கத்தில்தான் அமாவாசையும், தியாஜ்யமும், அதிகம்” என்ற பெயரைப் பெற்று விட்டது! மோகன் கேலண்டர் என்றால், ஜனங்களிடையே அடிதடி உண்டாவது வழக்கமாயிற்று. அவ்வளவு கிராக்கி! “மோகன் டைரியில் மாதத்துக்கு 33 தேதி!” என்ற புகழும் உண்டாயிற்று.

     சாதாரணமாக, இம்மாதிரி வியாபாரத்தில் நாலு அணா சாமானுக்கு மூன்றரை ரூபாய்க்கு மேல் லாபம் வைப்பதில்லையாதலால், பணம் வந்து குவியத் தொடங்கியது.

     பணம் குவியவும் மிஸ்டர் மோகன் பணச் செலவுக்கும் வழி ஏற்படுத்திக் கொண்டு வந்தார். கிளப்புகளில் அங்கத்தினரானார். பார்ட்டிகள் கொடுத்தார். பெரிய இடத்துச் சிநேகிதங்கள் ஏற்பட்டன. குதிரைப் பந்தயத்துக்கும் போனார்.

     ஒரு தடவை கார்ப்பொரேஷன் தேர்தலுக்கு நின்று பிரமாதமான தோல்வியடைந்தார்! மகத்தான வெற்றிகரமாக ஓடிய ஒரு தமிழ் டாக்கியில் பங்காளியாகி, போட்ட பணத்தில் பாதியை இழந்தார்! ஜனங்களுக்கோ வரவர ஓடாத கடிகாரங்கள், வழுக்கைத் தைலங்கள், எலக்டிரிக் ஜீவசக்தி மாத்திரைகள் – இவற்றிலெல்லாம் மோகம் குறைந்து வந்தது.

     கடைசியில் மிஸ்டர் மோகன் தம்முடைய பொருளாதார நிலைமையைக் கவனித்துப் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. கவனித்துப் பார்த்ததில், ‘நிலைமை பேபர்ஸுதான்” என்று தெரிந்தது. நிலைமையைச் சீர்திருத்துவதற்கு, சம்பாத்தியத்தை அதிகப்படுத்துவதற்கு உடனே ஏதாவது பெருமுயற்சி செய்தாக வேண்டும்.

இவ்விதம் தீர்மானித்துக் கொண்டு மிஸ்டர் மோகன் சுற்றும் முற்றும் பார்த்தார். அவருக்கு ஒரே திகைப்பாய் போய்விட்டது. யுத்த ஆரம்பத்திலிருந்து பலர் பலவகைகளிலும் ஏராளமாய்ப் பணம் பண்ணிக் கொண்டிருப்பதைக் கண்டார். சிலர் மிலிட்டரி காண்ட்ராக்டில் பணம் பண்ணினார்கள். ஒருவர் ஊரிலுள்ள ஓட்டை தகரங்களையெல்லாம் சேர்த்து வைத்திருந்தார். அவருக்கு அரை லட்சம் ரூபாய் லாபம் கிடைத்தது. பழைய கோணிப் பைகளையெல்லாம் வாங்கினார் ஒருவர். அவர் முக்கால் லட்சம் தட்டினார். இரண்டாயிரம் ரூபாய்க்கு ஒருவர் க்ஷவர பிளேடுகளை வாங்கி வைத்திருந்தார். அவருக்கு இருபதினாயிரம் ரூபாய் லாபம். காகிதம் ஸ்டாக் செய்தவர்கள், எலக்ட்ரிக் சாமான்கள் ஸ்டாக் செய்தவர்கள் இவர்களுடைய லாபத்தையெல்லாம் சொல்ல முடியாது.

     இதையெல்லாம் பார்க்கப் பார்க்க மிஸ்டர் மோகனின் பரபரப்பு அதிகமாயிற்று. இந்தியா கவர்மெண்டார் கோடி கோடியாக நோட்டுகளை அச்சிட்டுத் தள்ளிக் கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில், தாம் பணம் சம்பாதிக்காவிட்டால், உயிர் வாழ்ந்து தான் என்ன பிரயோஜனம்? அதற்கு என்ன வழி? எத்தனையோ வழிகள் இருக்கின்றன…அவற்றில் எதைக் கையாளுவது?

     ஒரு வழியில் அவருடைய கவனம் சென்றது. அவருடைய கிளப் அங்கத்தினர்களில் ஒருவர் ‘ஷேர் மார்க்கெட்’ என்று சொல்லப்படும் பங்கு வியாபாரத்தில் மூன்றே மாதத்தில் இருபது லட்சம் ரூபாய் சேர்த்தது அவருக்குத் தெரிந்தது. இது தான் சரியான வழியென்று தீர்மானித்து, ஷேர் மார்க்கெட்டில் புகுவதற்கு வேண்டிய ஆயத்தங்கள் செய்யத் தொடங்கினார்.

     அதனுடைய, தந்திர மந்திரங்களையெல்லாம் படித்தார். ‘தோலைக் கடித்து – துருத்தியைக் கடித்து – தானே வேட்டை நாயாக வேண்டும்?’ என்னும் முதுமொழியைப் பின்பற்றி, முதலில் சொற்ப அளவில் பங்குகள் வாங்கி விற்க ஆரம்பித்தார். அதோடு பிரமாதமாக ஒரு அடி அடிப்பதற்கு நல்ல சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

     அந்தச் சந்தர்ப்பந்தான் ஸர்.ஸ்டாபோர்டு கிரிப்ஸின் விஜயத்தின் போது ஏற்பட்டது.

     ஷேர் மார்க்கெட்டில் பங்குகளின் விலை உயர்வதும் விழுவதும் பல அதிசய காரணங்களால் ஏற்படுகின்றன. மகாத்மா காந்திக்கும் ஷேர் மார்க்கெட்டுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லையல்லவா? ஆனாலும் மகாத்மா சிறைப்பட்டார் என்றால், பங்குகளின் விலை இறங்கும்; மகாத்மா விடுதலை அடைந்தாரென்றால், பங்கு விலை ஏறும்!

     கிரிப்ஸ் தூது வருகிற செய்தி கிடைத்ததுமே, “சரி பங்கு மார்க்கெட்டில் விலை ஏறப் போகிறது!” என்று மிஸ்டர் மோகன் தீர்மானித்துக் கொண்டார். அதில் உண்மையில்லாமற் போகவில்லை. “கிரிப்ஸ் வரவினால் இந்திய அரசியல் பிரச்சினை தீரலாம்” என்ற நம்பிக்கை தேசத்தில் உண்டானது போல், ஷேர் மார்க்கெட்டிலும் ஏற்பட்டது. பங்குகளின் விலை ஏறுமுகம் காட்டிற்று.

     ‘கிரிப்ஸ் பறந்து வரப் போகிறார்?’ – பங்கு விலை இன்னும் சிறிது ஏறிற்று. ‘கிரிப்ஸ் கிளம்பி விட்டார்’ – பங்கு விலை சுர வேகம் அடைந்தது. ‘கிரிப்ஸ் கராச்சியில் வந்து இறங்கினார்’ – நூறு ரூபாய் விலையிலிருந்த சில பங்குகள் நூற்றறுபதுக்கு வந்து விட்டன.

     மிஸ்டர் மோகனுக்கும் பண ஜுரம் அடித்துக் கொண்டிருந்தது. பங்கு வாங்குவது – அதைப் பாங்கியில் அடகு வைத்துக் கடன் வாங்குவது – அந்தப் பணத்தைக் கொண்டு பங்கு வாங்குவது – இப்படி ஜமாய்த்துக் கொண்டிருந்தார்.

     நாளுக்கு நாள் விஷம் ஏறுவது போல் ஏறிக் கொண்டிருந்தது பங்குகளின் விலை.

     “கிரிப்ஸுக்கும் காங்கிரஸுக்கும் ஒப்பந்தம் ஏற்பட்டு விட்டது” என்று பொய்ச் செய்தி வந்து, பத்திரிகைகளில் கூடத் தலையங்கம் எழுதி விட்டார்கள் அல்லவா? அன்றைய தினம் மிஸ்டர் மோகன் வாங்கின பங்குகளையெல்லாம் விற்றிருந்தால், ஏழரை லட்சம் லாபம் பண்ணியிருக்கலாம்.

     ஆனால், அந்தோ! “இன்னும் இருபத்து நாலு மணி நேரம் பார்க்கலாம்” என்று இருந்து விட்டார். அடுத்த இருபத்து நாலு மணி நேரத்திற்குள் “கிரிப்ஸின் படுதோல்வி”, “வேஷம் வெளியாயிற்று” என்ற தலைப்புகளுடன் செய்திகள் வெளி வந்து விட்டன.

     பங்கு மார்க்கெட் தலை கீழாக உருட்டியடித்துக் கொண்டு விழுந்தது. மிஸ்டர் மோகன், பாவம்!

4

     ‘கிணுகிணு’ வென்று டெலிபோன் மணி அடித்தது. மோகன் தூக்கிவாரிப் போட்டுக் கொண்டு எழுந்து நின்று டெலிபோன் ரிஸிவரைக் கையிலெடுத்தார்.

     “ஹலோ”

     “பூக்கடைப் போலீஸ் ஸ்டேஷனா? ஓகோ என்ன விசேஷம்?”

     “புகைஞ்சுதா? என் கம்பெனியிலேயா? அப்புறம்?”

     “பையர் இன்ஜின் வந்து நெருப்பை அணைச்சுட்டுதா? ரொம்ப…”

     “வாச்மேனே கிடையாதே…”

     “யார்? வீராசாமியா?”

     “கொஞ்சங்கூடச் சேதம் ஆகலேன்னா சொல்றீங்க? ரொம்ப…”

     “யாராவது எஜமானத் துரோகி செய்த வேலையாய்த்தான் இருக்கணும். அவ்வளவு ஏற்பாடாய்த் தீப்பிடிக்கச் செய்யறதுன்னா…?”

     “டிரைவர் இல்லை. காலையிலே வந்து பார்க்கிறேன் குட் நைட்…”

     டெலிபோன் ரிஸீவரைப் படீரென்று வைத்தார் மோகன். மேஜையை நாலு தடவை குத்தினார். அவர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. உதடுகளும், ஹிட்லர் மீசையும் துடித்தன. கண்களில் பொறி பறந்தது.

     பின் வருமாறு தமக்குள்ளே சொல்லிக் கொண்டார்.

     “கிழட்டுப் பிரம்மஹத்தி – சண்டாளன் – துரோகி – இவனை யார் அங்கே போகச் சொன்னது? – அவனைச் சுட்டுப் பொசுக்கிக் கொன்று குழியை வெட்டி மூடினாலும் தோஷமில்லை! – கடைசி பிளானும் இப்படிப் போச்சு! இனிமேல்?”

     அரைமணி நேரம் ஆவேசம் வந்தவர் போல் அங்குமிங்கும் நடந்து, பல்லைக் கடித்து, மேஜையைக் குத்தி, சுவரை உதைத்து – எல்லாம் ஆனபிறகு, மிஸ்டர் மோகன் மேஜை டிராயரைத் திறந்து, அதிலிருந்த கைத் துப்பாக்கியை எடுத்தார். சற்று நேரம் அதைத் தன் மார்புக்கு நேராகப் பிடித்துக் குறி பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர், அதை மேஜை மீது வைத்து விட்டுப் பேனாவும் காகிதமும் எடுத்து எழுதத் தொடங்கினார்.

     பாவம்! அநேகமாய் அவருடைய மனைவி மக்களுக்குக் கடிதமாயிருக்கலாம். அவர்களெல்லாம் ‘எவாக்வேஷன்’ சமயமாதலால் வெளியூரில் இருந்தார்கள். அவருடைய அந்தரங்கக் கடிதங்களை நாம் பார்ப்பது, நியாயமில்லை யல்லவா?

*****

     பலபலவென்று கிழக்கு வெளுக்கும் நேரம். மிஸ்டர் மோகன் கடிதங்களை எழுதி முடித்து இரும்புப் பெட்டியில் வைத்துப் பூட்டினார். திரும்ப மேஜையினருகில் வந்தார்.

     “எஜமான்!” என்ற சத்தம் திடீரென்று கேட்டதும் வாசற்படிப் பக்கம் திரும்பிப் பார்த்தார்.

     ‘வாச்மேன்’ வீராசாமி கூர்ச்சம் போல் நின்று கொண்டிருந்தான். பங்களாவின் வாசல் வராண்டாவில் மச்சுப்படி இருந்த படியால் அதன் வழியாக அவன் பாட்டுக்கு ஏறி வந்திருக்க வேண்டும்.

     சற்று நேரம் மிஸ்டர் மோகன் பிரமித்து நின்ற போது, வீராசாமி சொல்லிக் கொண்டே போனான். “எஜமான், என்னமோ கால வித்தியாசத்தினால் எசமான் நம்மை மறந்தாலும், நாம் மறக்கக் கூடாதுன்னு இராத்திரி நம்ம கம்பெனிக்குப் போனேங்க. பர்த்தி வாச்மேன் இன்னும் வைக்கலேன்னு கேள்விப் பட்டேனுங்க. கொஞ்ச நேரத்துக்கெல்லாம் புகைச்சல் நாத்தம் தெரிஞ்சுதுங்க. ஜன்னல் வழியாப் புகை வந்துதுங்க. உடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடினேனுங்க. பையர் இன்சின் ஒரு நொடியில் வந்து அணைச்சிட்டுதுங்க. ஒரு சேதமும் இல்லாது போச்சுங்க.”

மிஸ்டர் மோகன் திடீரென்று பாய்ந்து வந்து, வீராசாமியின் கழுத்தை இறுக்கிப் பிடித்தார். “அடப்பாவி துரோகி! உன்னைத் தான் டிஸ்மிஸ் பண்ணியாச்சேடா உன்னை யாருடா வரச் சொன்னா?” என்று சொல்லிக் கொண்டே, அவன் முதுகிலும், தலையிலும் போடு போடு என்று போட்டார். அவனுடைய கழுத்தைப் பிடித்து நெட்டித் தள்ளிக் கொண்டே மச்சுப் படியண்டே வந்து ஒரு தள்ளுத் தள்ளினார். கிழவன் உருட்டியடித்துக் கொண்டு போய்க் கீழே விழுந்தான்.

     வீராசாமி அளவில்லாத திகைப்புடன் எழுந்து உட்கார்ந்து, தன்னைச் சமாளித்துக் கொள்ள முயன்ற போது மேலே ‘டுமீல்’ என்று துப்பாக்கி வேட்டுச் சத்தம் கேட்டது.

     சத்தத்தைக் கேட்டு, தோட்டக் குடிசையில் படுத்திருந்த தோட்டக்காரன், வாசலில் போன பால்காரன், வீட்டுச் சமையல்காரன் எல்லாரும் ஓடி வந்தார்கள். சிறிது நேரத்துக்கெல்லாம் போலீஸ்காரர்களும் வந்தார்கள்.

     மேலே மிஸ்டர் மோகனுடைய உடல் துணியெல்லாம் இரத்தம் தோய்ந்து, தரையில் விழுந்து கிடந்தது. அருகில் அவருடைய கைத்துப்பாக்கியும் கிடந்தது.

     மோகனுடைய உடலை வைத்தியப் பரிசோதனைக்காக ஜெனரல் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனார்கள்.

     வீராசாமியைப் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு போய் ‘லாக்-அப்’பில் அடைத்தார்கள்!

*****

     வடபழனி ஆண்டவனின் புண்ணியத்தில், கிழவன் வீராசாமி அதிக காலம் சிறையில் இருக்கும்படி நேரவில்லை.

     ஏனெனில், ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் மிஸ்டர் மோகனுடைய உடம்பில் உயிர் இருக்கிறதென்று கண்டுபிடித்து அவருக்குப் பிழைப்பூட்டி விட்டார்கள். எத்தனையோ பேரை வேலை தீர்ப்பவர்கள், சிலருக்குப் பிழைப்பூட்டவும் வேண்டியது தானே?

     பிழைத்தெழுந்த மோகன், அந்தப் பலஹீனமான உடல் நிலைமையிலும் போலீஸ்காரரிடம் உள்ளது உள்ளபடி எல்லாவற்றையும் சொல்லி விட்டார்.

     அவருக்கு வியாபாரத்தில் பெருநஷ்டம் வந்து விட்டதென்றும், நிலைமையைச் சமாளிப்பதற்காக ஆபீஸுக்கு அவரே நெருப்பு வைத்து விட்டு பையர் இன்ஷ்யூரன்ஸ் தொகை… லட்சம் ரூபாய் வாங்குவதற்கு எண்ணினார் என்றும், அதற்காகவே ‘வாச்மேன்’ வீராசாமியை டிஸ்மிஸ் பண்ணினாரென்றும், அவனுடைய எதிர்பாராத தலையீட்டினால் நோக்கம் நிறைவேறாமல் போகவே, தற்கொலை செய்து கொள்ள முயன்றாரென்றும் அவருடைய வாக்குமூலத்தின் மூலம் தெரிய வந்தன.

     எனவே, வீராசாமி விடுதலையடைந்து அவனுடைய பேரக் குழந்தைகளைப் பார்ப்பதற்கு வீடு வந்து சேர்ந்தான்.

     எப்படியும் அவனுடைய எஜமான விசுவாசம் வீண் போகவில்லையென்றே சொல்ல வேண்டும். அவனைத் தூக்கு மேடையிலிருந்து காப்பாற்றுவதற்காகவே மிஸ்டர் மோகன் குறிபிசகாய்ச் சுட்டுக் கொண்டிருக்கலாமல்லவா?

நன்றி: சென்னைநூலகம்.காம் (அமரர் கல்கியின் படைப்புகள்), அமரர் கல்கி, எழுத்தாளர், பத்திரிக்கையாளர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *